காவியத் தலைவன் – 29

தாரகேஸ்வரி கணவனை வழியனுப்பி விட்டபிறகும் வாசலிலேயே கொஞ்ச நேரம் நின்றிருந்தாள். மனதில் இனம்புரியாத படபடப்பு. முகம் லேசாக செம்மையை பூசியிருந்தது.

வரங்களை அள்ளித்தர கடவுள் தான் பூமிக்கு வர வேண்டும் என்பதில்லை போல! நாம் எதிர்பார்க்கும் வரத்தை எதிர்பாரா நேரத்தில் யாரோ ஒருவர் போகிற போக்கில் தூரலென நம் மேலே சிதறி விட்டு போய்விடுகிறார்கள்!

தன்னிடம் பதிலை எதிர்பார்க்காமல் காதலை இலகுவாகப் பகிர்ந்து விட்டுப் போனவனின் முகம் தான் இன்னும் அவள் நினைவுகளில். அவன் அவ்வாறு சொல்லிச் சென்றதில் பொதிந்து கிடக்கும் சுகத்தை நினைத்து நினைத்துச் சிலிர்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னை உணர வைத்து, பதில் சொல்ல முடியாத நேரத்தில் அழகாய் காதலைச் சொல்லிவிட்டு போய்விட்டான். அதுவும் சின்ன சத்தம் கூட வெளிவராமல் கண்ணோடு கண் கலந்து வெறும் உதட்டசைவில்! நடந்ததை மீட்டிப் பார்த்து இப்பொழுதும் தனியாக சிரித்துக் கொண்டாள்.

அவளுக்கும் ஆதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். கணவனாக அவனின் கண்ணியம், அண்ணனாக அவனின் எல்லையற்ற பாசம், அரசியல்காரனாக அவனின் நேர்மை என எல்லாவற்றையும் வியந்து பார்த்திருக்கிறாள். தனக்குள் ரகசியமாக ரசித்தும் வந்திருக்கிறாள். அவன் மனையாள் என்பதில் சிறுதுளி கர்வமும் கூட!

கர்வம் இருந்ததால் தான், இந்துஜாவிற்கு வேண்டிய மட்டும் திருப்பித் தர முடிந்தது, கணவன் மீது பிடித்தம் இருந்ததால் தான் சத்யாவிற்கு விபத்து என்றபோது குடும்பத்தில் ஒருத்தி என்ற எண்ணம் ஊறியிருந்தபடியால் அப்படிப் பரிதவிக்கவும் துடிக்கவும் முடிந்தது. ஆதி சொல்லவில்லையே என்கிற தவிப்புக்கும் கோபத்துக்கும் அடிப்படை அவளின் பிடித்தம் அல்லவா? ஏன் இப்பொழுது குடும்பத்திற்குள் நடந்த மிகப்பெரும் களேபரத்தில் கணவனுக்கு இணையாக வீரராகவன் மீது கோபம் கொள்ள முடிந்தது கூட அதனால் தானே!

இது எல்லாமே நேசத்திற்குள் அடக்கமா என்று தான் அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை. கணவன் என்கிற பற்றுதலில் கூட இதையெல்லாம் அவள் செய்திருக்கலாம் தான்! இது நேசமா இல்லை தாலி தந்த பந்தமா என்கிற தடுமாற்றம் அவளிடம் எப்பொழுதுமே இருக்கும்.

அவர் என்னுடைய கணவர் என்பதால் மட்டும் தான் இந்த பிடித்தமா? அப்படியானால், அவருக்கும் நான் மனைவியாகி விட்டேன் என்கிற ஒரே காரணத்திற்காக என்மீது நேசம் அரும்பி விடுமா? என்றெல்லாம் எண்ணி அவள் குழம்பிய நாட்கள் ஏராளம்.

அவளிடம் தெளிவு இல்லாததால் தான், கணவனின் அருகாமையைச் சமீபத்தில் ரசிக்கத் தொடங்கியிருந்த போதும், அடுத்த அடியை அவளால் எடுத்து வைக்க முடிந்ததில்லை.

இன்றோ அவளின் கணவன் அவளது தடுமாற்றங்கள், தயக்கங்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விட்டுப் போய் விட்டான். அந்த பரவசம் இன்னும் அவளுள் வியாபித்து சுகமாக இம்சித்துக் கொண்டிருக்கிறது. முத்தமிட்டுத் திக்குமுக்காட செய்ததில் ஒருவகை மயக்கம் என்றால் நேசத்தைச் சொல்லி விட்டுப் போனதில் இன்னும் தட்டாமாலையாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

அவன் நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் தங்கள் அறைக்குச் செல்லவே ஏனோ பெண்ணவளுக்கு இப்பொழுது மனம் இல்லை.

அவன் வாசம் மட்டும் போதாதே!

அவனின் சுவாசக்காற்று வேண்டுமே!

அவன் நினைவுகள் மட்டும் போதாதே!

நிஜமென அவன் தன் கண் முன்னால் வேண்டுமே!

ஏக்கம் நிறைந்த பெருமூச்சினை வெளியேற்றினாள். கணவன் கண்ணிலிருந்து மறைந்து முழுதாக சில நிமிடங்கள் கூட முடியவில்லை அதற்குள் மீண்டும் எப்பொழுது பார்ப்போம் என்கிற ஏக்கம் அவளை ஆட்டிப்படைத்தது.

அறைக்கு செல்ல பிடிக்காமல் மெல்லத் தோட்டத்திற்குள் நடந்தாள். இந்த ஏகாந்தம் பிடித்தது. சூழல் ரசனையைத் தூண்டி விட்டது. ஏதேதோ நினைவுகளில் அவள் மூழ்கியிருக்க, அப்பொழுது தான் தோட்டத்தில் பூஜிதாவை கவனித்தாள்.

‘இந்த நேரத்துல பூஜிதா இங்கே என்ன செய்யறா?’ உள்ளே எழுந்த கேள்வியோடு அவளருகே சென்றாள்.

“பூஜிதா செடி கிட்ட என்ன ஆராய்ச்சி செஞ்சுட்டு இருக்க?” இலைகளை முன்னும் பின்னும் ஆராய்வதும் அதைப் பறிப்பதுமாக இருந்தவளைக் குழப்பமாகப் பார்த்தபடி கேட்டாள்.

திடீரென பின்னால் கேட்ட குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள், “அக்கா நீங்க தானா? திடீர்ன்னு பேசவும் நான் பயந்தே போயிட்டேன்” என லேசாகச் சிரித்தவளின் முகத்தில் துளியும் ஒளி இல்லை.

அவளின் மனதின் அலைப்புறுதல் தாராவிற்கும் புரியுமே! கருணையோடு அவளின் தலை முடியை வருடிக் கொடுத்தாள். “நானே தான். ஆமா இங்கே தனியா என்ன செய்யற?” என்று கேட்க,

“அது…” என்று தயங்கிய பூஜிதாவின் முகத்தில் சட்டென்று தொற்றிக்கொண்ட வெட்கம். தாரா சுவாரஸ்யமாகப் பார்த்திருக்க, “அது… கொய்யா இலை” என்றாள் மிக மெலிதான குரலில்.

“இது எதுக்கு? இதுல எதுவும் தோரணம் கட்ட முடியுமா என்ன?” வெறும் கொய்யா இலையைக் கொண்டு இளையவளின் வெட்கமும் தடுமாற்றமும் ஏனென்று இன்னும் தாராவிற்கு புரியவில்லை.

“அச்சோ அதுக்கு இல்லை அக்கா” என்ற பூஜிதாவின் முகத்தில் இன்னும் வெட்கம் கூடித் தான் தெரிந்தது.

புரியாத மொழியில் படம் பார்க்கும் உணர்வு மூத்தவளுக்கு. அவள் புரியா பாவனையோடு பார்த்திருக்க, “இல்லை… அவர் நான் சின்ன பொண்ணா இருக்கும்போது இந்த கொய்யா இலையைத் தான் வெத்தலை, புளி தான் பாக்கு, உப்பு தான் சுண்ணாம்புன்னு சொல்லி எல்லாத்தையும் சேர்த்து மடிச்சு சாப்பிட கொடுப்பாங்கக்கா. அவருக்கு ரொம்ப பிடிக்குமாம். எனக்கும் கூட ரொம்ப பிடிச்சிருந்தது. அதுதான் இப்ப அவருக்கு தரலாம்ன்னு கொண்டு போறேன்” என தடுமாறிச் சொல்லி முடிக்க,

அவளின் வெட்கம் அழகாக இருந்தது. அவளையே ரசித்துப் பார்த்தவள், “எல்லாம் சரி… இந்த அவரு அவருன்னு சொல்லறியே அது யாரு?” என சீண்டலாகக் கேட்டுச் சிரித்த தாராவின் நினைவில் மின்வெட்டாய் சில காட்சிகள். அதில் சட்டென்று அவள் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து போனது.

சிறு பிள்ளையில் இவளும் இப்படி உண்டதுண்டு. இதை அவள் தன் விளையாட்டு தோழன் சத்திக்கு அடிக்கடி கொடுத்த நினைவும் இருக்கிறது. அதை யோசித்துக் கொண்டே தாரா பிரமை பிடித்தவள் போல நின்றிருக்க, அவளை கவனிக்கும் மனநிலையில் இல்லாத பூஜிதா, “அக்கா…” என்று சிணுங்கலாகச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் ஓடியிருந்தாள்.

அதைக்கூட கவனிக்கும் நிலையில் இல்லை தாரகேஸ்வரி.

ஆதி, சத்தி இந்த பெயர்களின் ஒற்றுமையை எப்படி இத்தனை நாட்களாக கவனிக்கத் தவறியிருந்தாள். எப்படி இதுநாள் வரையிலும் அவள் இதை யோசிக்கவே இல்லை? தலை லேசாக சுழல்வது போல இருந்தது. அப்படி மட்டும் எதுவும் இருக்கக்கூடாது என பெண்ணவளின் மனம் பாடுபட்டது.

சற்றுநேரம் முன்பிருந்த பரவசம் முழுவதும் வடிந்து தொய்ந்து போய் வீட்டின் உள்ளே நுழைகையில், “தேங்க்ஸ் பூஜிதா” என்றபடி கொய்யா இலையைக் கண்களை மூடி ரசித்து உண்டு கொண்டிருந்தான் சத்யேந்திரன்.

பெண்ணவளின் கால்கள் அந்த காட்சியைப் பார்த்து வேரூன்றி நின்றது. சத்யாவிடம் சத்தியின் சாயலைத் தன்னை அறியாமல் கண்கள் தேட தொடங்கியிருந்தது.

‘வேண்டாம் அப்படி செய்யாதே! அதெல்லாம் ஒன்றும் இருக்காது. முதலில் நீ இங்கிருந்து போ’ என்று கூக்குரலிட்ட மனதின் ஓலத்திற்குச் செவி சாய்க்காமல், அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சத்யா உண்டு முடித்து, இளகிய குரலில், “தாரா ஞாபகம் வந்துடுச்சு பூஜிதா, அடிக்கடி இதை செஞ்சு தருவா. என்னை விட ஒரு வயசு தான் பெருசு. ஆனா விளையாட்டுல எப்பவும் அவ தான் எனக்கு அம்மாவாம். அப்ப நானும் அதை நம்பியிருக்கேன் பாரு. இப்ப நினைச்சா கூட சிரிப்பா இருக்கு” என்று சொல்லி லேசாகச் சிரித்தவன், உடனேயே முகம் வாட, “இப்ப எங்க இருக்கான்னே தெரியலை? என்னை எல்லாம் சுத்தமா மறந்து போயிருப்பா என்ன?” என்றான் ஏக்கமாகப் பெருமூச்சு விட்டபடி.

சட்டென்று மூச்சுக்கு காற்று வற்றிப் போனதை போல தாரா தவித்துப் போனாள். அந்த இடம் முழுவதும் சுழன்றது. அவளால் நிலையாக நிற்க முடியவில்லை. கண்கள் வேகமாக கலங்க, இயல்பாக மூச்சு விட முடியாமல் திணறியவள் அதற்கு மேலும் எதையும் யோசிக்க மறந்தவளாய் ஒரு கையால் தலையைத் தாங்கி மற்றொரு கையால் சுவற்றை பிடித்துக் கொண்டு நின்று கொண்டாள்.

பூஜிதாவிற்கு சத்யாவின் இலகுவான பேச்சில் பெரும் ஆறுதல். தனக்குள் அவன் தன் சொந்த அன்னையை எண்ணி எவ்வளவு ஏங்கிப் போயிருக்கிறான் என்று அவளும் அறிவாளே! அவனை கொஞ்சம் அதிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்றுதான் சிறு வயதில் அவன் சொல்லித் தந்ததை நினைவுபடுத்திச் செய்திருந்தாள். அதற்கான பலன் கிடைத்ததில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

அதோடு அவளுக்குள் பெற்ற தந்தையை எண்ணிக் கலங்கும் மனதிற்கும் கொஞ்சம் விடுதலை வேண்டுமே! அவளின் தந்தை செய்த அநியாயங்களை அவள் நன்கு அறிவாள். சொந்த நண்பனையும் அவன் மனைவியையும் ஈவு இரக்கமின்றி கொன்றது, சத்யாவின் உண்மையான தந்தையைக் கொன்றது, சத்யாவையும் விவேக்கையும் இடம் மாற்றி வைத்து இரு குடும்பங்களின் உணர்வுகளோடு விளையாடியது, சொந்த மகள் என்றும் பாராமல் அவளைக் கடத்தி வைத்து துன்புறுத்தியது, சத்யாவின் உயிரைக் கொல்ல பார்த்தது என்று அவளுக்குத் தெரிய வந்ததே இத்தனை பாவங்கள் என்றால் பிறர் அறியாமல் இன்னும் எத்தனை எத்தனை இருக்கக்கூடும்?

இத்தனை கீழ்த்தரமான மனிதர் உயிர்வாழத் தகுதியானவரா? அப்பேர்ப்பட்ட தந்தையை எண்ணி இவள் கலங்கலாமா?

அதனால் தான் அந்த நினைவை மறக்கடிக்க சத்யாவிற்கென ஒன்றைச் செய்தாள். அதில் கிடைத்த பலனில், அவளுக்கும் கொஞ்சம் ஆசுவாசம்.

சத்யாவும் பூஜிதாவும் தங்கள் உலகில் சஞ்சரித்திருக்க, அவர்கள் இருவருமே தாராவை கவனித்திருக்கவில்லை.

தாராவோ சற்று நேரம் இந்த உலகத்திலேயே இல்லை. அருகிலிருந்த சுவரைப் பிடிமானத்திற்காக பற்றிக்கொண்டு நின்றிருந்தவள், கொஞ்ச நேரத்தில் ஓரளவு தெளிந்ததும் தளர்ந்த நடையோடு தங்கள் அறைக்குச் சென்றாள்.

எத்தனை முட்டாளாக இருந்திருக்கிறாள்? திருமணம் என்றபோது கூட அவன் நல்லவனா என்று மட்டுமே அவனைப்பற்றி அவன் வேலையைப் பற்றி ஆராய்ந்தாளே தவிர, அவனது பூர்வீகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு நொடி கூட யோசித்திருக்கவில்லையே!

அழகாண்டாள் பாட்டி சொந்த ஊருக்கு வரும்படி அழைத்தபோது கணவன் அப்பொழுது வேலையைக் காரணம் காட்டி மறுத்தது இப்பொழுது வேறு உள்ளர்த்தம் இருக்குமோ என்று எண்ண வைத்தது. இவளும் அவர்கள் ஊரைப்பற்றி பாட்டியிடம் கூட கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லையே!

ஊருக்குச் செல்லவில்லை, அந்த ஊரைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை. கரம் பிடித்தவன் யாரென்று தெரிந்து கொள்ளவில்லை. இப்படியுமா ஒருத்தி ஏமாளியாக இருப்பாள்?

ஆதி மாமாவுக்கு நான் யாரென்று தெரிந்திருக்கும் தானே? எப்பொழுதிருந்து தெரிந்திருக்கும். ஒருவேளை என்னைப்போல சத்யாவைப் போல அவனுக்கும் எதுவும் தெரிந்திருக்காதோ?

இல்லையே… ‘எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் தாரா… இப்ப இல்லை ரொம்ப வருஷமா’ என்று முத்தமிடும் போது சொன்னானே அப்படியானால் அவனுக்கு என்னைத் தெரியும் என்று தானே பொருள்?

உண்மையில் ஆதி மாமாவுக்கு தான் யார் என்று தெரியுமா தெரியாதா? தெரியும் என்றால் திருமணத்திற்கு முன்பிருந்தா? இல்லை திருமணம் முடிந்த பிறகா?

மனம் எதை எதையோ யோசித்துக் கொண்டிருக்க, இருக்கையில் தளர்ந்து போய் சாய்ந்திருந்தவளுக்கு இன்று அவன் வினோதமாகப் பல விஷயங்கள் செய்ததாகவே தோன்றியது.

மீண்டும் மீண்டும் போகாதே என்று பொருள் படும்படி சொன்னது எதற்காக இருக்கும் என்று என்ன யோசித்தும் புரியவில்லை.

என்னை நீண்ட ஆண்டுகளாகப் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக என்னைக் கண்டுபிடித்திருப்பான் தானே?

தங்கள் குடும்பம் சிதைந்ததற்குக் காரணமே பாட்டி தன் தந்தை மீது சுமத்திய வீண் பழி தான்! நானானால் இங்கு அந்த வீட்டுக்கே மருமகளாய்! அன்னையின் ஆன்மா கூட இதை ஏற்காதே என்று நெஞ்சம் குமுறியது.

அன்னையை சில ஆண்டுகள் முன்பு இழந்த காட்சிகள் அவள் நினைவுகளில் ஆடியது. தந்தையைக் கைது செய்தபிறகு புதிய ஊருக்குச் சென்றதும், அங்கே தாராவின் படிப்பை தொடர்ந்து, பூவரசி தனக்கென ஒரு தொழிலை இருப்பிடத்தை உருவாக்கி என அவர்களின் வாழ்க்கையில் எத்தனை எத்தனை போராட்டம். அதுவும் சிறைக்குச் சென்ற தந்தை குறித்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

பூவரசி குற்றவுணர்வில் எந்த தகவலையும் பெற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும். ஆனால், அது தாராவுக்கு தெரியாதே!

நாளடைவில் தந்தை தங்களை விட்டுவிட்டுப் போய்விட்டார் என்றுதான் தாரா எல்லோரிடமும் சொல்லும்படி ஆனது. தாயின் போதனைகளால்! அது அவளை மிகவும் வேதனைப்படுத்தும், ஆனாலும் அன்னைக்காக அவள் சொன்னதையே தான் எல்லா இடங்களிலும் சொல்வாள்.

விதியின் வசத்தால் கல்லூரி படிக்கும் சமயம் அன்னையும் தவறிவிட, தனியொரு பெண்ணாய் என்ன செய்வாள் அவள்? அன்று அவள் பட்ட வேதனையும் துன்பமும் இன்று நினைத்தாலும் உயிர்வரை நடுங்கும். நண்பர்கள், அக்கம்பக்கத்தினர்கள் தான் பெண்ணவளுக்கு பெரும் ஆறுதலாக இருந்தார்கள்.

அப்போதிலிருந்தே அவளுக்கான குடும்பம் என்பதில் அவள் மட்டுமே தான்! தந்தையைத் தேடிப்போக ஏனோ மனமில்லை. சிறையில் இருக்கும் அவரிடம் போய் அம்மாவும் உயிருடன் இல்லை இனி நான் தனியாள் என்று உண்மையைச் சொல்லி அவரை நோகடிக்க மனம் இல்லை. அவர் விடுதலையாகும் நாளுக்காக அமைதியாகக் காத்திருக்கிறாள். அவள் விசாரித்து தெரிந்து கொண்டதன்படி இன்னும் மூன்று ஆண்டுகள் அவரது சிறைவாசம் மிச்சமிருக்கிறது.

இந்த சூழலில் அவளுக்கு இப்படியொரு நிலை. மனம் மிகவும் பாரமாக இருந்தது. எதையும் யோசிக்கப் பிடிக்கவில்லை. மௌனமாகக் கண்ணீரைப் பொழிந்தபடி கண்ணை மூடி கிடந்தாள்.

அவளின் கோபத்திரை விலகுமா? இல்லை ஆதீஸ்வரன் எண்ணி பயந்தது போலவே அவனை விட்டு விலகும் முடிவை எடுக்கத் துணிவாளா என தெரியவில்லை.