அவர் சொன்ன விஷயம் கேட்டுக் குமுதா அதிர்ச்சியடைவாள் என்று அவர் பார்த்திருக்க அவளோ “எனக்குத் தெரியும்த்த!” என்றாள்.
“எல்லாந் தெரிஞ்சுமா எம் மகனைக் கட்டிகிட்ட?” என்றவருக்கு அந்த விஷயம் அவருக்குத் தெரிய வந்த நாள் நினைவு வந்தது.
மரகதம் அமுதன் வீட்டிலிருந்து வந்த மறுநாள் அமுதன் வீட்டு வேலையாள் ரத்தினம் அவரைப் பார்க்க வந்தார்.
“ஆத்தா! ஒங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணுமில்ல”
“சொல்லுளா!”
“அது…வந்து…வந்து…”
“சொல்லணும்னு வந்துட்ட. பொறவு சொல்லி முடி”
“அந்த வேதவல்லிப் பொண்ணு கன்னாலம் கட்டி வந்த ரெண்டு நாள்ல ஐயாவோட பேசிகிட்டு இருந்ததை நான் வெளிய நின்னு கேட்டேனாத்தா”
“என்ன பேசிகிட்டாவ?”
“அந்தப் பொண்ணு ஐயாகிட்ட ‘உங்க பீரோல இருந்த ரிபோர்ட் நான் பார்த்தேன். உங்களுக்கு உடம்பில கோளாறு இருக்குன்னு தெரிஞ்சும் என்னை ஏன் கல்யாணம் பண்ணிகிட்டீங்க’ன்னு கேட்டுச்சு. அதுக்கு மாறனையா ‘ஆமாடி நான் ஆம்பளையே இல்ல.என்னால ஒரு பொண்ணை சந்தோஷமா வச்சுக்கிட முடியாது. இதை அனுசரிச்சு இங்க இருக்க முடியும்னா இரு. இல்லைன்னாப் பொட்டியைக் கட்டிட்டு உன் பொறந்த வீட்டுக்குப் போய்ச் சேரு.அங்கன போயி இவன் அடிச்சான் மிதிச்சான்னு வேணாச் சொல்லிக்கிடு.வேற விஷயம் ஏதாவது வெளிய வந்துச்சு வகுந்துடுவேன் வகுந்து’ அப்பிடின்னு பேசினாரும்மா.வெளிய கூட்டிகிட்டு இருந்தவ இந்த விஷயம் கேட்டு என்னை ஏதாவது செய்துடுவாரோன்னு பயந்து போய் ஓடி வந்துட்டேன். ஒங்க காதுல இந்த விஷயத்தைப் போடணுமின்னு தோனுச்சு. அதான் வந்தேன்”
மரகதம் சோர்ந்து போனார். அவரும் எவ்வளவுதான் தாங்குவார்? கட்டின கணவனும் சரியில்லை. கண்ணாக வளர்த்த மகனும் சரியில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டவர் “ஏளா ரத்தினம்! இந்த விஷயத்தை வேற யார்க்கிட்டயும் சொல்லிக்கிட வேணாம்.” என்றார்.
“இல்லாத்தா! நான் சொலல்ல.”
ஆனால் ரத்தினம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லையா அல்லது ரத்தினத்தைப் போல் இந்த விஷயத்தைக் கேட்ட வேறு யாரோ அதை ஊருக்குள் பரப்பி விட்டார்களா எனத் தெரியவில்லை. விஷயம் ஊருக்குள் கசிந்து விட்டதைப் பிறகு வந்த நாட்களில் மரகதம் தெரிந்து கொண்டார். அப்படிக் கசிந்த விஷயம் எப்படியோ குமுதாவை எட்டி இருக்கிறது எனப் புரிந்து கொண்டவர் குமுதா அன்று காலை முதல் நடந்த விஷயங்களைச் சொல்ல அதைக் கேட்க ஆரம்பித்தார்.
காலை அந்தப் புகைப்படங்களைப் பார்த்ததும் அதைப் பற்றிப் பேசத்தான் அமுதன் அழைத்திருப்பான் எனக் கணித்து உடனே அவனை அழைப்பதற்காக அலைபேசியை எடுத்தவள் அப்போதுதான் மணியைப் பார்த்தாள்.
மூன்றே கால் ஆகியிருந்தது. அவள் இரவு ஒன்பது மணிக்கு உறங்கி விட்டாலும் அவன், வேலைகளை எல்லாம் முடித்து விட்டுப் படுக்கப் பதினொன்றாகி விடும். எனவே எப்போதும் அவளை மூன்று மணிக்கு எழுப்பி விட்டு விட்டு மீண்டும் உறங்குபவன் நான்கு மணிக்கே மறுபடி விழிப்பான் என்பது தெரியுமாதலால் அவன் உறக்கத்தைக் கலைக்க வேண்டாம் என முடிவு செய்து விட்டு, படிக்கத் தொடங்கும் முன் மீண்டும் ஒரு முறை அலைபேசியை எடுத்து அந்தப் படங்களைப் பார்க்க, செல்லக்கிளி ஆன்லைனில் இருப்பது தெரிந்தது.
‘முழிச்சிருக்கியா செல்லா?’ என செய்தி அனுப்ப செல்லக்கிளி உடனே குமுதாவை அழைத்து விட்டாள்.
மரகதம் சத்தம் கேட்டு எழுந்து விடாமல் அழைப்பை உடனே ஏற்று “ஒரு நிமிஷம் செல்லா!” எனக் கிசுகிசுத்து விட்டு அறையை விட்டு வெளியேறி அவர்கள் பேசுவது கேட்காத அளவில் சமையலறைக்கு வந்து பின்,
“இப்ப சொல்லு செல்லா” என்றாள்.
“ஏட்டி முழுச்சுகிட்டியா? ஒங்கிட்டப் பேசாம எனக்கு ஒறக்கமே வல்ல”
“ம்ம்ம். இப்பத்தான் எழுந்து மெஸேஜ் எல்லாம் பார்த்தேன்”
“அது வந்து…நேத்து என் வாட்ஸாப்புக்கு இந்தப் படமெல்லாம் வந்துச்சா, நான் பதறிப் போனேன்.ஒனக்கு ஃபோன் பண்ணாலாம்னு நெனச்சப்போதான் அம்மையும் அப்பனும் குசுகுசுன்னு ஏதோ பேசிகிட்டு இருந்ததைப் பார்த்தேன்.மெதுவாப் போய் ஒட்டுக் கேட்டப்போதான் தெரிஞ்சது…”
அவள் நிறுத்தவும் “என்ன தெரிஞ்சது?” குமுதா கேட்டாள்.
“அது வந்து…வந்து…”
“ஏய்! இப்பச் சொல்லப் போறியா? இல்ல ஃபோனை வைக்கவா?”
“அது…வந்து… உம் மாமனால சாதாரணமா எல்லாரையும் போலக் கன்னாலம் கட்டிக் குடுத்தனம் நடத்திக்கிட முடியாதாம்.அவக ஒடம்புல ஏதோ கோளாறாம்.அதுனால புள்ளையும் பொறக்காதாம்”
குமுதா விக்கித்துப் போய் நின்று விட்டாள்.இப்படி ஒரு அதிர்ச்சியை அவள் எதிர்பார்க்கவேயில்லை.
“ஏய்! என்னடி ஒளறுதே?”
“இல்ல மலரு!” என்றவள் தான் கேட்ட தன் பெற்றோரின் உரையாடலை விவரிக்கலானாள்.
“ஏன் மாமா! இந்தப் படத்துல்ல உள்ளதெல்லாம் நெசமா இருக்குமா?”
“அப்பிடித்தான் தெரியுது புள்ள. மாறனையா ஃபேக்டரி பின்னால உள்ள குடிசை வாசல்ல அரையும்குறையுமா நின்னுகிட்டு இருந்ததை நெறைய பேர் பார்த்துருக்காவ. ஆனா அவருக்கு ஒடம்புல ஏதோ கோளாறுன்னும் அவரால குடும்ப வாழ்க்கையில ஈடுபட முடியாதுன்னும் அந்த வேதவல்லிப் பொண்ணு ஓடிப் போனப்போ அரசல் பொரசலாப் பேசிகிட்டாவ.அப்பிடி ஒடம்புல ப்ரச்சனை இருக்கிறவரு இப்பம் மட்டும் எப்பிடித் தப்பு செய்ஞ்சிருக்க முடியும்னும் தோனுது.”
“ஒடம்புக்கு என்ன மாமா, ஏதாவது மருத்துவம் பார்த்து சரி பண்ணி இருப்பாரோ என்னவோ?”
“அப்படிச் சரியாகி இருந்தா மூணு வருஷமாகியும் வேற புள்ளையக் கட்டாம ஏன் இருக்காரு?”
“இதுவும் யோசிக்க வேண்டிய விசயம்தான்.இப்ப இந்தப் புள்ள பேரு வேற கெட்டுப் போச்சு. நல்லாப் படிக்குத புள்ள. இனி இது எங்கன படிச்சு டாக்டராகி…”
“சரி சரி! அவக பேச்சு நமக்கெதுக்கு? நீ போய் வேலையப் பாரு”
சொல்லி முடித்த செல்லக்கிளி “இந்த விஷயமும் கேள்விப்பட்டுத்தான் அந்த வேதா ஓடிப் போயிருச்சாம். மாறனையாவும் அந்த வேதாவும் பேசிக்கிட்டதக் கேட்ட வேலையாளு யாரோ அதை வெளிய சொல்லிருச்சுன்னும் பேசிகிட்டாவ”
செல்லக்கிளி சொல்லி முடிக்கக் குமுதாவால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
அவளுக்கு அழுகை வரும் போல் இருந்தது.
“நீ ஃபோனை வை செல்லா. நானே மறுக்காக் கூப்பிடுதேன்” என்றவள் அழைப்பைத் துண்டித்து விட்டு அப்படியே பின்னால் சுவரில் சாய்ந்து நின்றாள்.
சிறுபெண்தான்.கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் விஷயங்கள் குறித்த தெளிவு பெரிதாக இல்லாவிட்டாலும் ஏதோ நடக்கப் போய்த்தான் திருமணம் முடிந்ததும் குழந்தைகள் பிறக்கின்றன. திருமணமே முடியாவிட்டாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடக்கும் ஏதோ ஒன்றுதான் குழந்தைகளை உருவாக்குகிறது என்பது வரை அவள் படிக்கும் படிப்பைக் கொண்டு அவளால் யூகிக்க முடிந்திருந்தது.
அப்படியானால் அமுதனால் எல்லோரையும் போல் இயல்பான கணவனாக குடும்பம், குழந்தை என்று வாழ முடியாதா?
அவள் அந்த ஊருக்கு வந்த புதிதில் அவனுக்குக் கல்யாணம் ஆகி விட்டதெனத் தெரிந்ததும் மரகதத்திடம் அவள் பேசியது நினைவு வந்தது அவளுக்கு.இந்த விஷயம் தெரிந்ததனால்தான் அவர் அதற்கு மேல் மகனின் திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்பது புரிந்தது அவளுக்கு.
ஆரம்பத்தில் இருந்தே அமுதன் அவளைத் தள்ளி நிறுத்துவதன் காரணமும் இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது போல் இருந்தது. வேதவல்லியுடன் வாழ முடியாது போன அவனது ஏக்கமும் அவளுக்குப் புரிந்தது.
இப்போது அமுதனுக்கு அழைத்தால் கண்டிப்பாக இந்தப் புகைப்படமெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்றும் தான் பார்த்துக் கொள்வதாகவும் சொல்லி இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவான்.பிறகு வேதவல்லியை நினைத்து அவன் ஏங்கிக் கொண்டிருக்க அவனை நினைத்து இவள் ஏங்கிக் கொண்டிருக்க எனக் காலம் முழுவதையும் கழிக்க வேண்டுமா என யோசித்தவள் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன எனச் சிந்தித்தாள்.
‘குடும்பம் நடத்த முடியாதவன் என ஊரே பேசும் ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாளா?’
‘ஏன் என்ன தவறு?’
அவள் மனமே இரு கூறாகப் பிரிந்து வாதிட்டது.
குடும்ப வாழ்க்கையும் குழந்தை பெற்றுக் கொள்வதும்தான் முக்கியமா? இந்த விஷயம் உண்மையென்றால் யாருமே அமுதனைத் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்தானே? அப்படியானால் அவள் திருமணம் செய்து கொண்டால் என்ன?
அவன் அவளுக்கு எவ்வளவோ செய்திருக்கிறான். அதற்கெல்லாம் அவளால் திருப்பி என்ன செய்து விட முடியும்? அவன் சொன்னது போல் அவனுக்கோ மரகதத்துக்கோ உடல்நிலை சரியில்லாமல் போனால் அவள் வந்து மருத்துவம் பார்ப்பதனால் மட்டும் அவள் நன்றிக் கடன் தீர்ந்து விடுமா?
இல்லை! தூரத்து உறவென்றாலும் அவளைக் குடும்பத்தில் ஒருத்தி போல இன்றுவரை நடத்தி வரும் அவர்களுக்குத் தன் நன்றியைக் காட்ட ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ள போது அதைப் பயன்படுத்திக் கொள்வதே சரியானதாகப்பட்டது அவளுக்கு.
எல்லாவற்றுக்கும் மேலாக அவளால் அவனில்லாமல் இருந்து விட முடியுமா என நினைத்துப் பார்த்தவளுக்குக் கண்டிப்பாக அது முடியாது என்றே தோன்றியது. எந்த நிலைமையாயிருந்தாலும் அவளால் அமுதனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது.
இந்த மூன்று வருடங்களில் எந்தப் பிரச்சனை வந்த போதும் மனத்தில் அவன் துணையிருக்கிறான் என்ற எண்ணத்தில்தானே சமாளித்து வருகிறாள். அவனைப் பிரிவதென்றால் அது சாத்தியமா? இல்லை சாத்தியமேயில்லை.
குடும்பம், குழந்தை எதுவும் எப்படியும் போகட்டும். அவளுக்கு அவள் மாமன் வேண்டும். உரிமையாய்க் கணவனாய்க் கையருகில் வேண்டும். ஆனால் இதை அவனிடம் சொன்னால் கண்டிப்பாக மறுப்பான்.அவனை நகர விடாமல் நிறுத்தித்தான் அவள் இதைச் சாதிக்க வேண்டும். மனதிற்குள் முடிவு செய்து கொண்டவள் மீண்டும் செல்லக்கிளியை அழைத்தாள்.
“செல்லா! நாளைக்கே நான் எம் மாமனைக் கன்னாலம் கட்டிக்கிடப் போறேன்”
“செல்லா! நான் எம் மாமனைக் கட்டிக்கிட எடுத்த முடிவு இன்னிக்கு நேத்து எடுத்தது இல்ல.எனக்குக் கன்னாலம்னு ஒன்னு நடந்தா அது எம் மாமன் கூடத்தான்னு நான் முடிவு கட்டிப் பல மாசமாச்சு.இப்போ நீ சொன்ன விஷயத்துல அந்த நெனப்பு இன்னும் வலுவாகியிருக்கு.”
செல்லக்கிளியின் மறுப்புக்களை மறுதலித்து உறுதியாகத் தான் அமுதனை மணந்து கொள்ளப் போவதாகக் கூறியவள் அதற்கான வழிமுறைகளையும் அவளிடமே கலந்தாலோசித்தாள்.
முதலில் வாதம் செய்து அவளது முடிவை மாற்ற முயன்ற செல்லக்கிளியும் அவள் உறுதியாக இருப்பது கண்டு அவளுக்கு ஒத்துழைக்கச் சம்மதித்தாள்.
நகர முடியாத நிலையில் அமுதனை நிறுத்தும் வழிமுறையாகப் பஞ்சாயத்தில் ப்ராது கொடுப்பதாக முடிவு செய்தவள் பஞ்சாயத்துக் குறித்த விவரங்களையும் செல்லக்கிளியிடம் இருந்து பெற்றுக் கொண்டாள்.
திட்டத்தின் முதற்படியாக முதலில் தன் அலைபேசியையும் மரகதத்தின் அலைபேசியையும் எடுத்து ஒலியெழுப்பாமல் இசைக்கும்படி (சைலென்ட் மோட்) மாற்றி வைத்தாள். மரகதத்தின் அலைபேசியைப் பரணில் ஒளித்து வைத்தாள். அடுத்துப் பஞ்சாயத்தாருக்குத் தன் புகாரைச் சுருக்கமாக எழுதி வைத்தாள்.
மரகதம் எழுந்து அவரிடம் அமுதன் இரவு பேசியதாகவும் காலை எழுந்ததும் முதல் வேலையாகத் தொடர்பு கொள்ளும்படிக் கூறியதையும் தெரிவிக்க, தான் ஏற்கனவே பேசி விட்டதாகப் பொய் சொல்லிச் சமாளித்து விட்டாள்.
“இந்த ஃபோனை எங்கன வச்சேன்னு தெரியல” என அவர் தேடுவதையும் கண்டும் காணாமலிருந்தாள்.
அவர்கள் எங்கும் வெளியே செல்லக் கூடாது என அமுதன் வெளியே ஆட்களை நிறுத்தி வைத்திருக்க, பஞ்சாயத்துத் தலைவரின் வீட்டுக்கு எப்படிப் போவதென யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அமுதன் அனுப்பிக் கண்ணாயிரம் வந்து சேர்ந்தான்.
அவனிடம் நைச்சியமாகப் பேசித் தனக்கு உதவும்படி அவனைக் கேட்டுக் கொள்ள தன் எஜமானன் தனக்குப் பிடித்த பெண்ணை மணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைத்தவன் அவள் திட்டத்துக்கு ஒத்துழைத்தான். அதன்படி அவளது புகாரைப் பஞ்சாயத்துத் தலைவரின் வீட்டில் கொண்டு சென்று கொடுத்தவன் வாத்தியக் காரர்களுக்கும் ஏற்பாடு செய்தான்.
எல்லாவற்றையும் சொல்லி முடித்தவள் இடுப்பில் செருகி இருந்த மரகதத்தின் அலைபேசியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு “மன்னிச்சிக்கிடுங்கத்த! எல்லாம் செய்ஞ்சு முடிக்க உங்களையும் ஏமாத்த வேண்டியதாப் போச்சு. நகைப்பெட்டியில இருந்து வேதா கழட்டி வச்சுட்டுப் போயிருந்த தாலிக் கொடியையும் உங்களைக் கேக்காம எடுத்துக்கிட்டேன். வெறும் மஞ்சக் கயிறை மட்டும் கட்டினா மாமன் எங்க மனசு மாறிருமோன்னு இருந்துச்சு. அதான் இதையும் எடுத்துட்டு வந்தேன்”
தன் திருமாங்கல்யத்தைக் காட்டிச் சொன்னவளைக் கண்டு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை மரகதத்துக்கு.
பதினெட்டு வயது முடிந்து, பார்வைக்குக் குமரியாகக் காட்சியளித்தாலும் அவர் கண்களுக்குக் குழந்தையாகத்தான் தெரிந்தாள் குமுதா.நன்றி காட்டும் வகையில் செய்யும் காரியமா இது? இதில் எத்தனை சூட்சுமம் இருக்கிறது? ‘ஏட்டுப் படிப்பில் எத்தனை படித்திருந்தாலும் வாழ்க்கைப் படிப்பில் தோற்று விட்டாயே பெண்ணே!’ என்றுதான் அவருக்குச் சொல்லத் தோன்றியது. ஆனால் கொட்டிய பாலுக்காக வருந்துவதில் என்ன பயன் என நினைத்துக் கொண்டவர்,
“என்னவோ முடிவு பண்ணி நெனச்சதை முடிச்சுகிட்டே.இனி அந்த ஆண்டவந்தான் உனக்குத் துணையிருக்கணும்.இனி பொழப்பப் பாரு.உன் உடுப்பெல்லாம்…”
“அதையெல்லாம் ஒரு பையில போட்டு அங்கன தயாரா வச்சுருக்கேன். கண்ணாயிரம் அண்ணாச்சி எடுத்துகிட்டு வந்துருவாக”
“எல்லாம் திட்டம் போட்டுத்தான் பண்ணியிருக்கே!” என அவள் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளியவர் தன் வேலையைப் பார்க்கப் போனார்.
மாடியில் அமுதனும் வேதாவும் பயன்படுத்திய அறை அல்லாமல் மற்றொரு பெரிய அறையை இவர்களுக்காகத் தயார் செய்யச் சொன்னார். அந்த அறைக்குச் சென்று குளித்து விட்டுச் சுடிதாருக்கு மாறிய குமுதா மீண்டும் அமுதனுக்கு அழைத்துப் பார்க்க அவன் அப்போதும் எடுக்கவில்லை.
பெரியதொரு பெருமூச்சுடன் தன் புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்தாள். இன்னும் பத்து நாட்களில் தேர்வு இருக்கிறதே.முதலில் சில நிமிடங்கள் நடந்து போன நிகழ்வுகளை நினைத்து மனம் அலைபாய்ந்தாலும் சிறிது நேரத்திலேயே மனதை ஒன்றுபடுத்திப் படிக்க ஆரம்பித்து விட்டாள்.
மதியம் மரகதம் உணவுண்ண அழைக்க, காலை உணவு உண்ணவில்லையாயினும் ஏனோ அமுதனை நினைத்தவள் “வேணாம்த்த! மாமா வரட்டும். அப்புறம் பசியாறுதேன்” என்று சொல்லி விட மரகதம் மகனுக்கு அழைத்தார்.
காலை குமுதாவை முதல் வேலையாகத் தன்னை அழைக்கச் சொல்லி மரகதத்திடம் சொல்லி இருந்தும் அவள் அழைக்கவில்லை, அவரும் அவன் அழைத்த போது அலைபேசியை எடுக்கவில்லை என்பதால் மரகதமும் குமுதாவின் திட்டத்துக்கு உடந்தை என நினைத்திருந்தவன் முதலில் அவரது அழைப்புக்களை எடுக்கவில்லை.
ஆனால் அவர் விடாமல் அழைத்துக் கொண்டேயிருக்க அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவன்,
“இப்ப எதுக்கு என் உசுர வாங்குதிய? அதான் மாமியாரும் மருமகளுமாத் திட்டம் போட்டு அதுல ஜெயிச்சிட்டீகள்ல? இனியாவது என்னக் கொஞ்சம் ஒபத்தரவமில்லாம இருக்க விடக் கூடாதா?” எனவும் மரகதம் அதிர்ந்து போனார்.
“யய்யா மாறா! நான் ஒன்னுஞ் செய்யலையா.” என்றவர் சற்று தயங்கிப் பின் “ஒன் நெலம தெரிஞ்சும் இன்னொரு புள்ள வாழ்க்கைய வீணாக்குவேனாய்யா?” என்றார்.
வேதவல்லி அவனைப் பிரிந்து சென்று சில மாதங்கள் கழித்து அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவரைப் பார்க்க வந்தவனிடம் இது குறித்துப் பேசினார் மரகதம். ஒரு தாய் மகனிடம் பேசத் தயங்க வைக்கும் தலைப்புத்தான். என்ன செய்வது?
“யய்யா மாறா! என்னென்னவோ நடந்து போச்சுது. நீ டாக்டர்கிட்டப் போயி மருத்துவம் பார்த்தா என்னய்யா?”
அவரை நேருக்கு நேர் பார்க்காது எங்கோ பார்த்தபடி பிடரி முடியைக் கோதிக் கொண்டவன்,
“அதெல்லாம் நெறையப் பார்த்தாச்சுது.” என்றவன் அவரைப் பார்த்து “இதையெல்லாம் போட்டு நீங்க ஏன் மனச ஒழட்டிக்கிடுதீய? எல்லாம் நடக்கிறபடி நடக்கும்” என்று சொல்லி விட்டான்.
அதன் பின்னர் அவனது திருமணம் குறித்தோ அவனது இல்லற வாழ்க்கை குறித்தோ அவர் அவனிடம் பேசியதில்லை.
இப்போது அவர் கூறியதைக் கேட்டவனுக்கு அவர் கூற்றில் உள்ள உண்மை புரிபட,
“பொறவு காலைல நான் கூப்பிட்டப்போ ஏன் ஃபோனை எடுக்கல? நீங்க மட்டும் ஃபோன எடுத்துருந்தியன்னா, நான் அவகிட்டப் பேசியிருந்தேன்னா இம்புட்டுக்கு ஆகியிருக்காதுல்ல”
“அது…மாறா…”
மருமகள் மீது ஏற்கனவே கடும் கோபத்தில் இருக்கிறான். இதில் அவள் செய்த சிறுபிள்ளைத்தனங்களை வேறு எப்படிச் சொல்வதென அவர் தயங்க அந்தத் தயக்கமே அவனுக்கு நடந்ததை விளக்கி விட்டது.
“ஒம் மருமக வேலையா இதெல்லாம்?”
“அதுய்யா… ஏதோ சின்னஞ்சிறுசு… வெவரம் புரியாம… ஒன்னக் கட்டிக்கிடணும்னு ஆசையில…”
“சரிய்யா! நடந்தது நடந்து போச்சு. வீட்டுக்கு வரலாமில்ல”
“வாரேன் வாரேன். பொழுதாக வாரேன்”
“நீ வரலைன்னு அந்தப் புள்ள உங்காமக் காலைல இருந்து உக்காந்து படிச்சுகிட்டே இருக்குதுய்யா”
“சட். நா வாரதுக்கும் அவ உங்குறதுக்கும் என்ன சம்பந்தம்? அவளைப் பசியாறச் சொல்லுங்க”
“நானும் காலைல இருந்து சொல்லிக்கிட்டுத்தான கெடக்கேன். காலைல பால் பழமும் சாப்பிடல. காப்பி கூடக் குடிக்கல. இப்ப மத்தியானம் பசியாற வாத்தான்னு கூப்பிட்டாலும் மாமன் வரட்டும்ங்கா. நான் என்ன செய்யட்டும்?”
“சரி வைங்க. நான் வாரேன்”
அவள் படித்துக் கொண்டிருக்கிறாள் என்று சொன்னது அவன் கோபத்தை சற்றே தணித்திருக்க “ஆனாலும் இவளுக்கிருக்கிற கொழுப்புக்கு ஆட்டிப் படைக்குதா என்னைய” என வசைபாடிக் கொண்டவன் அங்கிருந்து கிளம்பினான்.
அவன் அலைபேசியை வைத்ததுமே மரகதம் வயதையும் பொருட்படுத்தாது மாடிக்கு ஓடினார்.
“ஏட்டி! மாறன் வாரேன்னு சொல்லிட்டான்.நீ கொஞ்சம் மொகத்த கிகத்தைக் கழுவிக்கிட்டு அங்கன வாசலுக்கப் போய் நில்லு”
“முடியாது போங்கத்த. அங்கன கோவில்ல அம்போன்னு என்ன விட்டுட்டுப் போய்ட்டாக. இங்கன வந்து எத்தனவாட்டி ஃபோனைப் போட்டேன் தெரியுமா நானு? ஒருவாட்டி கூட எடுத்துப் பேசல. நான் வர மாட்டேன் போங்க”
சுடிதாரில் இருந்தவளை மேலும் கீழும் பார்த்தவர், “தாவணிய என்னத்துக்கு மாத்தினே?” என்று விட்டு “சரி விடு! இப்ப மாத்தினா நேரமாவும். மொகத்த மட்டும் கழுவிட்டுக் கீழ வந்து சேரு” என்று விட்டுப் போனார்.
முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே முகம் கழுவி, நலுங்கிய ஆடையைச் சரி செய்து கொண்டவள் கீழே வர, மெத்திருக்கையில் அமர்ந்திருந்தவர், “அங்கன வாசல்ல போய் நில்லுத்தா” எனவும் அவரைக் கொஞ்சம் முறைத்துக் கொண்டே வாசலில் போய் நின்றாள்.
வேதவல்லி இப்படியெல்லாம் செய்யவில்லை என்றுதானே அன்று குறைப்பட்டான் என நினைத்து மருமகளை வழிநடத்தியவர் மகனின் வரவுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.
சற்று நேரத்தில் புல்லட் ஒலி கேட்க குமுதாவும் ஆவலாக வாசலைப் பார்த்தாள்.
அவனும் காலையிலிருந்து உணவருந்தவில்லை என்பது தெரிந்ததுமே தன்னால்தான் அவன் பட்டினியாக இருக்கிறான் என்பது உறுத்த, சிறுபிள்ளைக் கோபம் பறந்து போய், கணவனின் மீது கனிவும் கரிசனையும் வந்து ஒட்டிக் கொண்டு விட்டது.
புல்லட்டை நிறுத்தி விட்டு இறங்கியவனைக் கண்களில் நிரப்பிக் கொண்டவள் தனக்கான எதிரொலியை அவன் கண்களில் தேட அவனோ கடுகடுத்த முகத்துடன் எரிமலையாய் வெடித்தான்.