அவள் கண்களை தேய்த்து எழ, “இப்படி கண் தேய்க்க கூடாது” என்றான் கணவன்.
“இதை சொல்லவா என்னை எழுப்புனீங்க?” என்று அவள் படுக்க போக,
“ஓய் எங்க திரும்ப படுக்க போற?” என்று அவள் கை பற்றி கொண்டவன், “குளிச்சுட்டு வா. நேரம் ஆச்சு பாரு” என்றான்.
மீனலோக்ஷ்னி நன்றாக கண் விட்டு அவனை பார்க்க, குளித்து வேஷ்டி சட்டையில் தயாராக இருந்தான் அவன்.
பாண்டி நாட்டு பெண்ணுக்கு அப்போது தான் நினைவு வர, “நாம நிஜமாவே அங்க போக போறோமா?” என்று கண்களை விரித்தாள்.
அவனின் அழகியை ரசித்தபடி, “பூஜைக்கு நேரம் ஆச்சு. கெட் அப். சீக்கிரம்” என்று கட்டளையிட்டான் நல்லவன்.
மீனலோக்ஷ்னியை நொடி கூட நிற்க விடாமல் அவளை கிளப்பி கொண்டு பக்கத்து வீட்டுக்கு வர, அங்கு பெரியவர்கள் தயாராக இருந்தனர்.
“எத்தனை முறை தான் பால் காய்ச்சுறது ராஜா? இப்போ இதெல்லாம் தேவையா?” என்று கஜலக்ஷ்மி கேட்க,
“சரி வேண்டாம். பால் காய்ச்ச வேண்டாம் பாட்டி. நாங்க அப்படியே குடி வந்துகிறோம்” என்றான் பேரன்.
“ராஜா நான் அதை சொல்லலை. சரி விடு. வாங்க” என்று அவர்களை வைத்து எல்லாம் செய்து முடித்தார்.
மீனலோக்ஷ்னிக்கு பெரியவர்களிடம் பேசவே ஒருமாதிரி இருந்தது. சகஜமாக இல்லாமல் சுற்ற, “மீனலோக்ஷ்னி” என்றழைத்தார் பானுமதி.
அதில் எல்லாம் அவர்களை கவனிக்க, வில்வநாதன் மனைவி வருவதற்கு முன் அம்மாவிடம் நின்றான்.
“நீ ரொம்ப நல்ல ஹஸ்பண்ட் தான். நம்பிட்டேன்” என்று கிண்டலாக சொன்ன பானுமதி, மகனின் கோவத்தை கண்டுகொள்ளாமல், “இவன் பண்றதுக்கு எல்லாம் நீ ஏன் வாடி போய் நிக்கிற? ப்ரீயா விடு” என்றார் மருமகளிடம்.
“சரி அத்தை” என்று மருமகள் கேட்டுக்கொள்ள,
“உன் வீட்டுக்காரருக்கு எங்க மேல கோவம். நாங்க அவனுக்கு பண்ணதை, அவன் இப்போ எங்களுக்கு பண்றான். இதுக்கேன்மா நீ சங்கட படுற” என்று தயாளனும் மருமகளுக்கு சொல்ல,
நேற்றிரவின் எஞ்சிய கோவத்தை காட்டாமல் விட்டால் அவன் என்ன வில்வநாதன்?
“என்னங்க” என்று மீனலோக்ஷ்னி கணவனின் கை பிடித்து நிறுத்த,
“ராஜா. நீ வா. இந்த பாலை குடி” என்று கஜலக்ஷ்மி அவனை திசை திருப்ப பார்த்தார்.
வில்வநாதன் நகராமல் அங்கேயே நங்கூரம் இட்டு நின்றவன், “லக்ஷ்மி மேடம். பார்த்தீங்களா உங்க மகள், மருமகனை. எதையும் ரொம்ப சீக்கிரமா ஏத்துக்கிறாங்க. ஆனா நான் அவங்க பிள்ளை தான். ஆனா என்னால அப்படி முடியலையே! ஏன்? ஒருவேளை நான் இவங்க மகனே இல்லையோ? என்னை மாத்தி ஏதும் எடுத்து வந்துட்டீங்களா?” என்று கோவமாக கேட்டான்.
“இவனுக்கு இதெல்லாம் புரியாது. எப்போவும் அவனை பத்தி மட்டும் தான் யோசிப்பான்” என்று பானுமதி மகன் தனியே வந்ததில் பொரிந்தார்.
“என்னை சுயநலம்ன்னு சொல்றீங்களா?” என்று அவன் குரல் உயர,
“பானு. நீ முதல்ல அமைதியா இரு” என்று மனைவியை கண்டித்தார் தயாளன்.
“என் மாம்கிட்ட ஏன் குரல் உசத்துறீங்க?” என்று அதற்கும் மகன் பேச,
தயாளன் மிகவும் தளர்ந்து போனார். மகனை எப்படி சமாதானம் செய்வது என்றே புரியவில்லை. இரவெல்லாம் அவருக்கு தூக்கம் இல்லை. அந்த ஆதங்கத்தில் தான் பானுமதி பேசினார்.
மீனலோக்ஷ்னி யாருக்கு பார்க்க என்று திகைத்து நின்றாள்.
தனபாலன் தான் எப்போதும் போல, “ராஜா. முதல்ல காய்ச்சின பாலை குடிக்கணும். பானு. வா எல்லோருக்கும் பால் கொடு” என்று மகள் மூலம் எல்லோருக்கும் கொடுத்தார்.
வில்வநாதன் பாலை எடுக்காமல் தோட்டத்திற்கு சென்றுவிட, மீனலோக்ஷ்னிக்கு அவன் கோவமாக சென்றது வருத்தத்தையும், அச்சத்தையும் கொடுத்தது.
கணவன் குடிக்காமல் அவளுக்கும் குடிக்க முடியவில்லை. பாலுடன் தானும் கணவனை பின் தொடர்ந்தாள்.
“இது சம்பிரதாயம். கொஞ்சமாவது பால் எடுத்துக்கோங்க” என்று கணவனிடம் தயங்கியே கேட்டாள் பெண்.
மனைவி தன் பின் வந்தது வில்வநாதனின் நெஞ்சை தொட்டது. கணவனின் விடாத பார்வையில், “இங்க பாருங்க நானே பயந்து போய் தான் இருக்கேன். திடீர்ன்னு எல்லாம் கத்திடாதீங்க” என்று சரண்டர் ஆகிவிட்டாள் வில்வநாதனின் அழகி.
“அவ்வளவு பயம் இருக்கிறவ ஏன் என் பின்னாடி வந்த? போனா போறான்னு விட வேண்டியது தானே?”
“ஆஹ்ன். அது” என்று மனைவி திணற,
வில்வநாதன், “நீ குடிச்சியா?” என்று கேட்டான்.
“இனி தான்”
“அப்போ நீ முதல்ல குடி” என்க,
“நானா?” என்றவள் அவன் பார்வையிலே குடிக்க,
“எனக்கு கொஞ்சம் மிச்சம் வை” என்றான் வில்வநாதன்.
“உங்களுக்கு வேற எடுத்துட்டு வரேன்” என்று சொல்ல,
வில்வநாதன் உரிமையாக அவளின் கையில் இருந்த பாலை வாங்கி குடித்தான். பெண் முழித்து நிற்க, “பர்ஸ்ட் நைட் சடங்கை, வெற்றிக்கரமா முடிச்சுட்டோம். வாழ்த்துக்கள் மேடம்” என்றான் கணவன்.
அவன் முகம் தெளிந்ததில் மனைவிக்கு தான் மகிழ்ச்சி. “இதுக்கெல்லாமா?” என்று மலர்ந்த முகத்துடன் மூக்கை சுருக்க, அவளின் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டவன்,
“எல்லாம் முக்கியம் தான். ஒவ்வொண்ணா நாம எல்லா டாஸ்க்கையும் முடிக்கிறோம்” என்றான்.
“இல்லை பரவாயில்லை. அப்படி ஒன்னும் முடிச்சு, நாம யாருக்கும் ரிப்போர்ட் கொடுக்க வேண்டியதில்லை” என்று நழுவ,
“ஊர் உலகமே நம்ம ரிப்போர்டுக்கு தான் காத்திருக்கும், என்ன இவ்வளவு அசால்ட்டா பேசுற. இதுக்கு தான் வளரணும் சொல்றது” என, மனைவிக்கு புரியவில்லை.
“ரைட். உன்னை வைச்சுக்கிட்டு நான் எப்படி எங்க பாரம்பரிய சடங்கை உடைக்க போறேன்னு எனக்கு தெரியலை” என்று உதடு பிதுக்கினான் நல்லவன்.
மெல்ல மீனலோக்ஷ்னிக்கு விளக்கெரிய, கோவமோ, அதிர்ச்சியோ கொள்ளாமல், “உண்மையாவா சொல்றீங்க?” என்று ஆச்சரியத்தோடு, கணவனின் கையை மகிழ்ச்சியுடன் பிடித்து கொண்டாள்.
“கோவப்பட்டு எகிறுவன்னு பார்த்தேன்” என்று வில்வநாதன் சிரிக்க,
“இல்லை, இல்லை நான் ஏன் கோவப்படணும்? அத்தை, மாமா பத்தி நீங்க சொன்னதுல இருந்து எனக்குள்ள அது ரொம்ப டிஸ்டர்ப்பாவே இருந்தது. எங்க நம்மளை மாதிரி நம்ம பிள்ளையும் ஒத்தையா இருந்திடமோன்னு அவ்வளவு கவலை” என்று முகம் விகசிக்க,
“அது எல்லாம் டாட், மாம் விஷயத்துலையே உடைஞ்சு போச்சு. அதனால தான் இதை உன்கிட்டேயும் பேசலை” என்றவன், “என்ன அடுத்த டாஸ்க்குக்கு போவோமா?” என்று கண்ணடித்தான்.
“க்கும். உங்களுக்கு நான் வேணாம்ன்னு தான் நினைச்சீங்க?” என்று கையை விலக்கி கொள்ள பார்க்க,
“மேடம் மட்டும் என்னவாம், உங்களுக்கு நான் வேணாம் கோபால், நீங்க எதிர்பார்க்கிற பொண்ணு நான் இல்லை கோபால்ன்னு தானே இழுத்துகிட்டு இருந்தீங்க” என்று அவன் கிண்டலாக கேட்க,