அத்தியாயம் 17
தன் அறைக்கு வந்திருந்தவனைக் கதிரவன் அலைபேசியில் அழைக்க எடுத்துக் காதில் வைத்தவன்,
“சொல்லு கதிர்! என்ன இந்நேரம் கூப்பிட்டுருக்கே?”
“அண்ணாச்சி! உங்க வாட்ஸப்புக்கு ரெண்டு மூணு ஃபோட்டோ அனப்பி இருக்கேன். பாருங்க மொதல்ல”
பதறிப் போனான் அமுதன்.
குமுதா அவனிடம் என்ன முயன்றும் சிவஞானத்தால் தன்னைப் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்பது போலத்தான் சொல்லி இருந்தாள். ஒருவேளை இடைப்பட்ட ஏதாவது நேரத்தில் அவன் எடுத்திருப்பானோ எனப் பதற்றம் கொண்டவன் வேகமாக வாட்ஸ்ஆப் செயலியைத் திறந்து பார்க்க அதில் இருந்ததோ அவனும் குமுதாவும்.
முதல் படத்தில் ஆலமரத்தின் அடியில் குமுதா அவனை அட்டை போல் ஒட்டிக் கொண்டு நின்றிருந்தாள். முன்பக்க உடையைத்தான் சிவா கிழித்திருந்தான் என்பதால் பின்பக்க உடை பெரிதும் கசங்கி இருந்ததே தவிர கிழியவில்லை. எனவே விருப்பம் கொண்ட இருவர் சாதாரணமாக அணைத்துக் கொண்டு நிற்பதைப் போலவே இருந்தது அந்தப் படம்.
அடுத்த படத்தில் குமுதா குடிசைக்குள் சென்று கொண்டிருப்பது நிழலாகத் தெரிய அவன் உள்ளாடைகள் மட்டும் அணிந்த நிலையில் அவளைத் தொடர்ந்து உள்ளே செல்வது போல் இருந்தது.
அடுத்த படத்தில் அவன் உள்ளாடைகளுடன் வெளியே நின்றிருக்க குமுதா அவனிடம் அவன் உடைகளை நீட்டிக் கொண்டிருந்தாள்.
மூன்று படங்களையும் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு அணைத்துக் கொள்ளும் காதலனும் காதலியும் அவசரம் தாளாமல் தனிமையைத் தேடிக் குடிசைக்குள் சென்று தங்கள் தேவைகளைத் தீர்த்துக் கொண்டு பிறகு வெளியே வந்து நிற்பதாகவும் அதன் பின்னர் காதலனுக்கு அவன் காதலி உடைகளைக் கொண்டு வந்து தருவதாகவுமே தோன்றும்.
இடைப்பட்ட நேரங்களில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் தவிர்த்து விட்டு சரியாக, தவறாகத் தோன்றுவது போல் இருக்கக் கூடிய மூன்று புகைப்படங்களை மட்டுமே வரிசைப்படுத்தி அனுப்பி இருக்கக் கண்டவனுக்கு இதுவும் அந்த சிவஞானத்தின் வேலை என்பது புரிந்து போக அவசரமாகக் கதிரவனை அழைத்தான்.
“கதிர்! இந்த ஃபோட்டோவை எல்லாம் அனுப்பினது யாரு?”
“தெரியலைங்கையா. ஏதோ நம்பர் வருது.ஆனா அந்த நம்பர்க்கு முயற்சி பண்ணினா ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது”
“அந்த நம்பரை எனக்கு அனுப்பி வை.”
“ஆட்டுங்கையா!”
“இந்த ஃபோட்டோ ஒனக்கு மட்டும்தான் வந்துருக்கா? இல்ல…”
அவன் அமைதியாக இருக்கவும்,
“என்னப்பா, தயங்காமச் சொல்லு”
“எங்கய்யா ஃபோனு, என் பொண்டாட்டி ஃபோனு, இன்னும் என் தங்கச்சி ஃபோனுக்கெல்லாம் கூட வந்துருக்குங்கையா”
அப்படியே சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து விட்டான் அமுதன். அவன் நிலை புரிந்தவனாகக் கதிரவனும் அமைதியாக இருந்தான்.
பிறகு ‘என்ன செய்வது சமாளித்துத்தான் ஆக வேண்டும்’ என நினைத்தவன் முதலில் கதிரிடம் விஷயத்தை விளக்கினால் அது அப்படியே ஒவ்வொரு காதையும் சென்றடையட்டும் என நினைத்து,
“தப்பா ஒன்னுமில்ல கதிரு.அந்தப் புள்ள ஆரோ புத்தகம் கேட்டாகன்னு குடுக்கதுக்காக அந்த ஒத்த ஆலமரத்துப் பக்கம் போயிருக்கு.திடீர்னு வெறி நாயொன்னு வெரட்டி, இது ஓடின்னு உடுப்பெல்லாம் அங்கங்க கிழிஞ்சு போயிட்டு.நான் உச்சிப் பொழுது பசியாறிட்டுப் போறப்போ இந்தப் புள்ளையப் பார்த்தேன். பயந்து போய் மேல வந்து விழுந்துட்டு.”
“என் உடுப்பை அவுத்துக் குடுத்து, ஃபேக்டரிக்குக் கூட்டிட்டுப் போயி, கண்ணாயிரத்த மாத்து உடுப்புக் கொண்டாரச் சொல்லிட்டு, மறுக்கா என் உடுப்ப மாத்திகிட்டேன்.இத ஒளிஞ்சு நின்னு படமெடுத்த ஆரோ தப்பாத் தெரியணும்னு சில படங்களை மட்டும் அனுப்பி விட்டுருக்காவ. பார்த்துக்கலாம் விடு”
“சரிங்கையா! நானும் விஷயத்தை ஐயா காதுல போட்டுப்பிடுதேன்”
“ம்ம்ம்” என்றவன் அலைபேசியை வைத்து விட்டு என்ன செய்வது என யோசித்தான்.
எல்லார் அலைபேசிக்கும் பாரபட்சமில்லாமல் அனுப்பப்பட்டிருக்கிறது என்றால் குமுதாவின் அலைபேசிக்கும் போய் இருக்குமே என நினைத்தவன் அவளுக்கு அழைத்தான். நல்லவேளையாக ஆலமரத்தடியில் கிடந்த அவள் அலைபேசியை வரும் வழியில் கண்ணாயிரம் பார்த்து எடுத்து வந்து கொடுத்திருந்தான்.
இரண்டு மூன்று முறை அலைபேசி ஒலித்த பிறகே நேரத்தைக் கவனித்தவன் நேரம் பத்தைக் கடந்திருக்க இந்நேரம் உறங்கியிருப்பாளே என நினைத்து விட்டு அந்த அழைப்பைத் துண்டித்து விட்டு அன்னைக்கு அழைத்தான்.
அவரும் உறங்கித்தான் போயிருந்தார் போல.சில அழைப்புக்கள் போன பிறகே எடுத்தவர்,
“யய்யா மாறா! இந்நேரம் கூப்பிடுதே”
“ஒறங்கிட்டியாம்மா?”
“ஆமாய்யா.இந்த மலருப் புள்ள ஒம்பது மணிக்கு வழக்கம் போல ஒறங்கிட்டு.ஆனா ஒடம்பு வலியோ இல்ல பயமோ உருண்டுகிட்டே கெடந்தா. அதாம் நானும் இங்கனயே அவ ரூம்லயே படுக்கையப் போட்டு இப்பச் செத்த மின்னதான் ஒறங்குனேன்.”
“சரி! வெடிஞ்சதும் அவளை மொதல்ல எனக்கு கூப்பிடச் சொல்லு”
“ஏன்யா? எதும் பிரச்சனையா?”
“அதெல்லாம் எதும் இல்லம்மா.அவகிட்டக் கொஞ்சம் பேசணும்”
“சரிய்யா! கூப்பிடச் சொல்லுதேன்”
இங்கோ அமுதன் உறக்கம் வராமல் தவித்தான். காலை எழுந்து அவனை அழைக்கும் முன் அவள் அந்தப் புகைப்படங்களைப் பார்த்து விட்டால் மனம் வருந்துவாளே என நினைத்தவனுக்கு உறக்கம் சிறிதும் அண்டவில்லை.
ஆடும் நாற்காலியில் அமர்ந்து ஆடிக் கொண்டே இருந்தவன் விடியும் முன்தான் உறக்கத்துக்குப் போனான்.
………………………………………………………………………………………………………….
உடலில் வலி, நடந்து போனதை நினைத்து நடுக்கம், மீண்டும் பெரிதாக ஏதோ ஆபத்து நெருங்குகிறதோ என்று நினைத்து பயம் என ஒருவாறாக அரைகுறையாக உறங்கிய குமுதாவுக்கு வழக்கம் போல் மூன்று மணிக்கு விழிப்பு வந்து விட்டது.
அருகில் தரையில் மெத்தையிட்டு மரகதம் உறங்கிக் கொண்டிருக்க அவரைத் தொல்லை செய்யாது சென்று முகம் கழுவி வந்தவள் படிக்க உட்கார்ந்தாள்.
அலைபேசியை எடுத்துப் பார்க்க அமுதன் இரவு பத்து மணிக்கு அழைத்திருப்பது தெரியவும் புருவம் சுருக்கினாள். பத்து மணிக்கு அவள் உறங்கியிருப்பாள் என்று தெரிந்தும் ஏன் அழைத்தான் எதுவும் முக்கியமான விஷயமோ என எண்ணம் தோன்ற அவனை அழைக்கலாமா என நினைத்தவள் அலாரம் வைத்து மூன்று மணிக்கு எழுந்து அவளை எழுப்பி விடுபவன் மீண்டும் உறங்கி வழக்கம் போல் நான்கு மணிக்குத்தான் எழுவான் என்பதால் ஒருவேளை வாட்ஸாப்பில் செய்தி எதுவும் அனுப்பி இருக்கிறானா பார்க்கலாம் என நினைத்து வாட்ஸாப்பை திறந்தாள்.
செல்லக்கிளியிடம் இருந்து செய்திகள் இருக்கவும் அதைத் திறந்து பார்த்தவள் அந்தப் புகைப்படங்களைக் கண்டு அதிர்ந்து போனாள்.
பார்த்ததுமே இது வேண்டாதவர்கள் வேலை என்பது புரிந்து போனது அவளுக்கு.அவள் மணந்து கொள்ளப் போகும் மாமனுடன்தான் இணைத்துப் பேசி இருக்கிறார்கள் என்ற போதும் அது எப்படி திருமணத்துக்கு முன்னரே அவர்கள் ஒன்றாக தனியாக இருந்தது போல் சித்தரிக்கலாம் எனக் கோபமும் வந்தது அவளுக்கு.
இதைப் பார்த்து விட்டுத்தான் அமுதன் அழைத்திருப்பானோ என எண்ணமிட்டவாறே அலைபேசியை எடுத்து அவனை அழைக்கப் போனவள் பின் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.
………………………………………………………………………………………………………….
ஆடும் நாற்காலியில் தலை சாய்த்து ஒரு மாதிரியான நிலையில் உறங்கியிருந்தவன் நான்கு மணியானதும் வழக்கம் போல் விழிப்புத் தட்ட எழுந்து நேராக அமர்ந்தான். வலிக்கும் கழுத்தைக் கையால் நீவி விட்டுக் கொண்டே கடிகாரத்தைப் பார்த்தவன் பட்டென எழுந்து தாவி ஓடிப் போய் அலைபேசியை எடுத்துக் குமுதாவை அழைக்க அலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது. ஒரு வேளை அலுப்பில் உறங்கிக் கொண்டு இருக்கிறாளோ என நினைத்தவன் மேலும் இரு முறை முயன்று பார்த்து விட்டுப் பின் அன்னைக்கு அழைத்தான்.
அவரது அலைபேசியும் அப்படியே அடித்துக் கொண்டே இருந்தது.
மீண்டும் குமுதாவுக்கு ஒரு முறையும் மரகதத்துக்கு ஒரு முறையும் அழைத்துப் பார்த்தவன் அவர்கள் எடுக்காது போக “சே! எதுக்குத்தான் ஃபோனு வச்சுருக்காகளோ!” எனச் சலித்துக் கொண்டவன் சட்டென நினைவு வந்தவனாக அவன் வாசலில் நிற்கச் சொன்ன அவன் ஆளுக்கு அழைத்தான்.
இரண்டாவது அழைப்பில் அலைபேசி எடுக்கப்பட
“அங்கன ப்ரச்சனை எதும் இல்லைல்லா?”
“அப்பிடி எதும் இல்லைங்களே”
“வீட்ல ஆளுக எழுந்து நடமாட ஆரம்பிச்சுட்டாவளா?”
“பால்காரன் பால் கறந்துகிட்டு இருக்கான்.வேற வீட்டுக்குள்ள நடமாட்டம் இருக்குத மாரித் தெரியலைங்கைய்யா”
ஒருவேளை அன்னை, குமுதா இருவருமே உறக்கத்தில் இருந்து விழித்திருக்கவில்லை போல என நினைத்துக் கொண்டவன் “சரி அம்மையோ மலரோ எழுந்து நடமாடுதது பார்த்தா எனக்கு ஃபோனைப் போடு” என்று விட்டு வைத்தான்.
யோசனையுடனே மேலே தன் உடற்பயிற்சிக்காகச் சென்றவன் மனது முழுக்க மரகதத்தின் வீட்டில்தான்.
தேர்வு சமயத்திலா இப்படி எல்லாம் நடக்க வேண்டும்? இல்லையென்றால் அவன் மூன்று மணிக்கே எழுப்பி விட இந்நேரம் உட்கார்ந்து படித்துக் கொண்டல்லவா இருப்பாள் என நினைத்துக் கொண்டவனுக்கு அவளை நினைத்துப் பரிதாபம் எழுந்தது.
ஒரு பெண் படிப்பதற்குத்தான் எத்தனை தடைகள் இங்கே! அவள் பிறந்ததுமே அவள் திருமணம் பற்றி யோசிப்பவர்கள் அவளை நன்றாகப் படிக்க வைத்து யார் தயவையும் எதிர்பாராமல் சொந்தக் காலில் நிற்க வைக்க வேண்டும் என யோசிப்பதில்லை. தந்தையை, தமையனை, தம்பியை, கணவனை, தனயனை என யாரையாவது சார்ந்தே அவள் வாழ்க்கை இருக்க வேண்டும் என்றுதான் இந்த சமூகம் எதிர்பார்க்கிறது.
ஏதேதோ யோசித்துக் கொண்டே தன் உடற்பயிற்சிகளை முடித்தவன் கீழே வந்து மணியைப் பார்க்க, நேரம் ஆறை நெருங்கிக் கொண்டிருக்க, அவனுக்கு என்னவோ தவறாகத் தோன்றியது. இன்னும் அலைபேசியில் அழைத்துக் கொண்டிருப்பது சரியெனத் தோன்றவில்லை அவனுக்கு. கண்ணாயிரத்தை அழைத்தான்.
“ஐயா!”
“அம்மைக்கும் மலருக்கும் நாலு மணியில இருந்து ஃபோன் அடிச்சுகிட்டே இருக்கேன். எடுக்கல…நீ வண்டி எடுத்துகிட்டு அங்கன போய் என்ன நெலவரம், ஏன் ஃபோனு எடுக்க மாட்டுக்காகன்னு பார்த்துட்டு எனக்கு ஃபோன் பண்ணிச் சொல்லு” என்றவன் அவன் கிளம்பவும் தானும் நேரே சென்று பார்த்து விடுவது என முடிவு செய்து கொண்டு விரைந்து குளியலை முடித்துக் கீழே வந்தான்.
நீராகாரத்தைப் பருகி விட்டு அவன் வெளியே வரவும் வாசலில் வந்து நின்ற பஞ்சாயத்து ஆளைக் கண்டு புருவம் சுருக்கினான்.
ஊரில் பஞ்சாயத்து வைத்தால் யார் மீது ப்ராது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் வீட்டுக்கு மட்டும் பஞ்சாயத்து ஆள் போய்த் தகவல் சொல்ல வேண்டும். மற்ற பஞ்சாயத்துப் பெரியவர்களுக்கு அலைபேசியில் தகவல் போய் விடும். ஊரில் தண்டோரா போட்டுப் பஞ்சாயத்து விவரம் சொல்லி விடுவார்கள் என்பதாலேயே தன் வீட்டு வாசலில் நின்றிருந்தவனை யோசனையோடு பார்த்தவன் “என்னல விஷயம்? வீடு எதும் மாறி வந்திட்டியா?” என்றான்.
“இல்லீங்க ஐயா இந்த வீடுதான்.” என்றவன் ஒரு கணம் தயங்கி விட்டு “ஐயா! உங்க மேலதான் ப்ராது குடுத்துருக்காவ”
தாடையைச் சொறிந்து கொண்டே யோசித்தவன்,
“ஆரு குடுத்திருக்கிறது?”
“குமுதமலர்விழின்னு சொன்னாகய்யா”
ஒரு கணம் அவன் மனம் அதிர்ந்தது.
“என்னலே ஒளருதே?”
“இல்லீங்கையா.அப்பிடித்தாங்கையா சொன்னாவ”
“என்னான்னு ப்ராது குடுத்துருக்காவ?”
“அது சொல்லலீங்கையா.எட்டு மணிக்குப் பஞ்சாயத்துக்கு வரணும்னு சொல்லிறச் சொன்னாகய்யா”
சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு அவன் சென்று விட,
‘இல்லை. இதில் ஏதோ தவறு இருக்கிறது. அவன் குமுதா அவனுக்கு எதிராகப் ப்ராது கொடுப்பதாவது’
தலையை இருபக்கமும் ஆட்டித் தனக்குத்தானே இருக்காது என்பது போல் உணர்த்திக் கொண்டவன் வண்டியை எடுக்கப் போக கந்தவேள் அவன் முன் வந்து நின்றான்.
“ஐயா ஃபேக்டரிக்குங்களா?”
புதிதாகக் குறுக்கே வந்ததுமல்லாமல் எதற்குக் கேட்கிறான் என்பது போல் பார்த்தாலும் இருந்த குழப்பத்தில் “இல்ல, அம்மை வீட்டுக்குப் போறேன்” என பதில் அளித்திருந்தான்.
“அதுக்குத்தாங்கையா கேட்டேன்.ப்ராது குடுத்தவக வீட்டுக்குப் போகக் கூடாதுங்களே!”
ஆம்.அந்த ஊரின் சட்டதிட்டங்கள் அப்படி. ப்ராது கொடுத்தவர்கள் வீட்டுக்குப் ப்ராது கொடுக்கப்பட்டவர்கள் பஞ்சாயத்து முடியும் வரை போகக் கூடாது. அலைபேசியிலோ தொலைபேசியிலோ அழைத்துப் பேசக் கூடாது என்பது சட்டம்.
அங்கே சென்று ‘நீ எப்படி என் மீது ப்ராது கொடுக்கலாம்’ எனப் பேச ஆரம்பித்து சில நேரம் கைகலப்புக்கள் வரை போகுமளவிற்குக் கூடப் ப்ரச்சனைகள் பெரிதாகியிருக்க அவன் தாத்தா பஞ்சாயத்துத் தலைவராக இருந்த போது போட்ட சட்டம்தான் அது.க்ஷண நேரத்தில் தானே ஊரின் சட்ட திட்டங்களை மீற நினைத்ததை உணர்ந்து கொண்டவன் எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளே சென்றிருந்தான்.
‘இந்தக் கண்ணாயிரம் சென்று நேரமாகி விட்டதே, அவனும் அலைபேசியில் அழைக்கவில்லையே’ என நினைத்தவன் அவனை அலைபேசியில் அழைக்க அவன் அலைபேசியை அணைத்து வைத்திருப்பதாகச் செய்தி வர அமுதன் உச்சகட்ட எரிச்சலுக்கு உள்ளானான்.
‘என்ன நடக்குதுன்னே வெளங்கலையே. இந்த மலருதான் ஃபோன் எடுக்க மாட்டேங்கா. இந்த அம்மையும் என்ன பண்ணுதான்னு தெரியலைன்னு பார்த்தா இந்த பேதில போவான் எதுக்கு ஃபோனை அமர்த்தி வச்சுருக்கான்னு தெரியலையே’ என மனதிற்குள்ளாக அனைவரையும் வசைபாடித் தீர்த்தவன் மெத்திருக்கையில் சென்று தலையைப் பின்னுக்குச் சாய்த்து அமர்ந்து கொண்டான்.
அவன் மனத்தில் குமுதாவைப் பற்றிய எண்ணங்கள். ‘ஒருவேளை அந்தப் படங்களைப் பார்த்ததும் பயந்து விட்டாளோ? இல்லை சிவஞானம் அலைபேசியில் அழைத்து எதுவும் மிரட்டி இருப்பானோ?’ அவனுக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.
அலைபேசியை எடுத்து மரகதத்தின் வீட்டின் முன் தான் நிறுத்தியிருந்த ஆளுக்கு அழைக்க
“சொல்லுங்கையா!”
“என்னலே நடக்கு அங்கன?”
“ப்ரச்சனையா ஒண்ணும் இல்லைங்களே! இப்பத்தான் வீட்டுக்குள்ள நடமாட்டம் தெரியுது. நானே கூப்பிடணும்னு இருந்தேன்.”
இனி நடமாட்டம் தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் என்ன என நினைத்தவன்
“சரி! கண்ணாயிரம் அங்கன வந்தானா?”
“ஆமாங்கையா! வந்துட்டுப் பொறவு போய்ட்டான்”
“எங்க போனான்?”
“அது தெரியலைங்களே”
கடும் கோபத்துடன் இணைப்பைத் துண்டித்தவன் “நமக்கு வந்தது, வாச்சது ஒண்ணும் வெளங்கல” என முணுமுணுத்தான்.
காலை உணவருந்த அழைத்த கந்தவேளை முறைத்தவன் “நான் இப்போ சாப்பிடுத மாதிரியால இருக்கேன்! போலே அந்தாக்குல!” என்றுவிட அவனும் அமைதியாகச் சென்று விட்டான்.
தொழிற்சாலையிலிருந்து அழைப்பு வர “நான் வர நேரமாவும். கொஞ்சம் நீங்களே பார்த்துக்கிடுங்க இன்னிக்கு” என்று வைத்து விட்டான்.
நேரத்தை நெட்டித் தள்ளியவன் எட்டடிக்க ஐந்து நிமிடங்கள் இருக்கையில் வீட்டை விட்டுக் கிளம்பினான்.
இதற்குள் ஊர் முழுவதும் தண்டோரா போடப்பட்டிருக்க ஊரில் பெரும்பாலானவர்கள் மாரியம்மன் கோவிலுக்குச் சற்றுத் தள்ளியிருந்த ஆலமரத்தின் அடியில் வந்து குழுமி இருந்தனர்.
அவன் சென்றதும் அவனுக்கு ஒரு நாற்காலி கொண்டு வந்து போடப்பட்டது.
“ப்ராது சொல்லப்பட்டவுக நிக்கவுல்லா செய்யணும்.இவுக சேரெல்லாம் போட்டுப் பகுமானமா ஒக்காருதாக” என்று ஓரத்தில் ஓர் இளவட்டம் முணுமுணுத்தது தெளிவாகக் கேட்டாலும் கண்டுகொள்ளாமல் நாற்காலியில் சென்று கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான் அமுதன்.
அந்தப் பஞ்சாயத்தில் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு பெருசுகளும் முடிவைத் தெரிந்து கொள்ளும் முனைப்புடன் இளவட்டங்களும் இன்னும் பொட்டு பொடிசுகளும் கூட அவனைக் கூர்ந்த வண்ணமிருக்க, முயன்று பொறுமையைக் கைக்கொண்டு ஒரு பெருமூச்சை இழுத்து வெளியேற்றிய அமுதன் ஒருமுறை சுற்றிலும் பார்த்தான்.
“ஆங்! எல்லாரும் வந்தாச்சாப்பா? ப்ராது குடுத்தவுக வந்தாச்சா? அவுகளை இப்பிடி முன்னால வந்து நிக்கச் சொல்லு”
சுழன்ற அமுதனின் பார்வை அப்போதுதான் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் வந்து நின்ற வஞ்சியவளின் மேல் நிலைத்தது.
பாவாடை தாவணியில் புராதன ஓவியம் போல் இருந்தாள். முதல் நாள் காயங்கள் இன்னும் முகத்திலும் கைகளிலும் பளிச்சென்று தெரிய அவள் மீது இரக்கம் சுரந்தது அவனுக்கு.இப்போது வரை கூட அவன் மீது ப்ராது கொடுத்திருக்கிறாளே என அவள் மீது கோபம் தோன்றவில்லை அவனுக்கு.அவளுக்கு ஏதோ நிர்ப்பந்தம் என்றே எண்ணிக் கொண்டிருந்தான்.
ஆனால் அவள் பேசிய விஷயங்களையும் வைத்த கோரிக்கையையும் கேட்டு அமுதன் அதிர்ந்துதான் போனான்.
சொல்லால் அடிச்ச சுந்தரி
மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி
பட்ட காயத்துக்கு மருந்து என்னடி
என் தாயத் தந்த தாயும் நீயடி
என்ன தான் சொல்ல
ஒன்னும் கூட இல்ல
மன்னவன் நெஞ்சிலே
மூச்சடைச்சதென்ன