மித்ராவின்பிறந்தகத்திலிருந்து ஐம்பதுக்கும் மேலான நபர்கள் திருமண வரவேற்புக்கு வரப் போகிறார்கள் என சொல்லியிருந்தார் சௌந்திரராஜன்.
மாலையில்தான் வரவேற்பு, விஷேஷம் நடக்கும் தினத்தின் காலையிலேயே வந்து விடும் அவர்களை தங்க வைக்க குடியிருப்பு பங்களாவின் பக்கத்திலிருந்த விருந்தினர் மாளிகை தயார் செய்யப் பட்டுக் கொண்டிருந்தது.
அப்பாவுடன் அப்போதுதான் கைப்பேசி உரையாடலை முடித்துக் கொண்ட மித்ரா அலுவலகம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்த கணவனை புன்னகை முகமாக பார்த்தாள்.
“என்ன சொல்லு இந்த பொண்ணுங்களுக்கு பொறந்த வீட்ல பேசினாதான் முகம் பிரகாசம் ஆகும்” என்றான் சர்வா.
“ம்ம்… உங்களுக்கென்ன எப்படியும் பெத்தவங்களோட இருந்துப்பீங்க, பொண்ணுங்கதான் பெத்தவங்கள, வளர்ந்த இடத்தை எல்லாத்தையும் விட்டுட்டு வர்றோம். இங்கேயும் புகுந்த வீட்டு பாலிடிக்ஸ், எங்களுக்கு நிம்மதியா இருக்க எந்த இடம் இருக்கு? சொல்லப் போனா எங்களுக்கு இடமே இல்லை” என்றாள்.
“ம்ம்… மத்தவங்கள பத்தி எனக்கு தெரியாது, நீ இப்படிலாம் திங்க் பண்ண வேண்டிய அவசியம் இல்லை” என்றவன் முன்னரே தயார் செய்து வைத்திருந்த தஸ்தாவேஜ்களை அவளிடம் காண்பித்தான்.
சர்வாவின் பெயரில் இருக்கும் பங்குகளில் பாதிக்கும் மேல் மித்ராவின் பெயருக்கு மாற்றம் செய்வதற்கான காகிதங்கள் அவை.
பார்த்து என்ன ஏதென கேட்டறிந்தவுடன் வேண்டாம் என அலறியே விட்டாள்.
“நீ இந்த வீட்டுக்கு வந்த அடுத்த நாளே இதையெல்லாம் செய்ய ஏற்பாடு செஞ்சிட்டேன் மித்ரா. மொத்தத்தையும் உன் பேருக்கு மாத்த கூட எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லை, ஆனா நிறைய பிராக்டிகல் டிஃபிகல்டீஸ் இருக்கு, அதனாலதான் இப்படி ஏற்பாடு செஞ்சிருக்கேன்” என்றான் சர்வா.
“என்னை கேட்காம யார் உங்களை செய்ய சொன்னது? எனக்கு வேணாம்” தீர்மானமாக சொன்னாள் அவள்.
“சொத்துக்கள் வச்சு எம்மேல உனக்கு நம்பிக்கை வர வைக்க நினைக்கிறேன்னு தப்பா நினைக்காத. இலக்கியா அண்ணி அடிக்கடி உன்னை ஏதாவது பேசி ஹர்ட் பண்றாங்கல்ல? அவங்களுக்கு மட்டுமில்லை என்னை சுத்தி இருக்கிறவங்க உன் ரிலேட்டிவ்ஸ் எல்லாருக்கும் நீதான் எனக்கு முக்கியம், உன்னை விட முக்கியம்னு எதுவும் இல்லை என்கிட்டன்னு அழுத்தமா புரிய வைக்க நினைக்கிறேன்” என்றான்.
“அதுக்கு அவசியமே இல்லை”
“அவசியம்தான். நாளைக்கு நீ ஆஃபிஸ் வர வேண்டியிருக்கும்” அவளது கன்னத்தை தட்டி சொன்னவன், “மறுக்காம ஓகே சொல்ல உன்னை பிரிப்பேர் பண்ணிக்கோ” என்றான்.
அவள் முடியாது எனும் பார்வையே பார்த்திருந்தாள்.
“யார் பேர்ல இருந்தா என்ன மித்ரா? நீ இங்கேயே வீட்லேயே இருக்க போறியா? சீக்கிரம் என்னோட வந்து நம்ம பிஸினஸ் பார்க்கணும், அப்போ இப்படி இருந்தாதான் நல்லது, நாளைக்கு நீ வர்ற” என அவனும் உறுதியாக சொல்லி கிளம்பி விட்டான்.
மித்ராவுக்கு மனதுக்குள் நெருடல்தான். துளியும் விருப்பமில்லை. சர்வாவும் விடாப்பிடியாக நிற்பான் என புரிந்து அவனை எப்படி சமாளிக்க என்ற குழப்ப மன நிலையிலேயே சதானந்தம் பெரியவரின் குடிலுக்கு சென்றாள்.
பூஜை முடிந்த பின் அவராகவே என்ன விஷயம் என விசாரித்தார். அவளும் மறைக்காமல் சொன்னாள். இதில் விருப்பமில்லை, சர்வாவிடம் நீங்கள்தான் பேச வேண்டும் எனவும் சொன்னாள்.
“சர்வா சொல்றதை நீ ஏத்துக்கிறதுல தப்பில்லம்மா. அதுதான் சரியும் கூட” என சாந்தமான குரலில் சொன்னார் பெரியவர்.
மித்ரா அமைதி காக்க, “இது எல்லாமுமே செண்பகவள்ளி தாயை சேர வேண்டியது. அவங்க வம்சம் ஆண்டு அனுபவிக்க வேண்டியது. அதுல ஒரு பகுதி உன்னை சேருதுன்னா சந்தோஷமா ஏத்துக்க” என்றார்.
“அப்படி பார்த்தா இதெல்லாம் பாவம் செஞ்சு பிடுங்கின சொத்து, அதை மூலதனமா வச்சு பெருகின சொத்து. பாவத்துல பங்கு போட்டுக்க சொல்றீங்களா?” எனக் கேட்டாள்.
சிரித்த பெரியவர், “புருஷனோட புண்ணியத்துல சரிபாதி பங்கு மனைவிக்குண்டு, ஆனா அவன் பாவத்துல மனைவிக்கு பங்கு இல்லை, மனைவியோட பாவத்துல சரிபாதி பங்கு புருஷனுக்குண்டு, அவ புண்ணியத்துல அவனுக்கு பங்கு இல்லை” என்றார்.
“எனக்கு வேணாம்னுதான் தோணுது தாத்தா. ஏற்கனவே சொத்துக்காக இவரை விரும்பினதா எல்லாம் பேசுறாங்க” என்றாள்.
“யாரம்மா அப்படி சொன்னது? இந்தக் குடும்பத்துக்கு கிடைச்ச மிகப்பெரிய சொத்து நீதான். சர்வாவே உன் சொத்துங்கும் போது அவனோடது எல்லாமே உன்னோடதுதான். உன்னை விட நிலையில்லாத பொருள் செல்வம் என்ன உயர்ந்து போச்சுன்னு அதை வாங்க தயங்குற? வாங்கிக்க” என்றவர் கண்களை மூடி தியானிக்க ஆரம்பித்து விட்டார்.
தாத்தா சொன்னதை ஏற்றுக் கொள்வது என்ற முடிவோடு அங்கிருந்து வெளியேறினாள் மித்ரா.
பிடிவாதம் செய்யப் போகும் மனைவியை சமாளித்து எப்படி தன் முடிவை ஏற்றுக் கொள்ள செய்வது என்ற யோசனையோடு வந்த சர்வாவுக்கு தன் சம்மதத்தை சொல்லி அதிர்ச்சி கொடுத்தாள் மித்ரா.
“எல்லாத்தையும் விட்டுட்டு வர்ற எங்களுக்கு இந்த பெனிஃபிட் கூட கிடைக்க கூடாதா?” எனக் கேட்டவளின் கன்னத்தை கொஞ்சுவது போல கிள்ளினான்.
அவனது கையை அவள் தட்டி விட, “என் புண்ணியத்துல சரிபாதி என்ன… முழுசையும் கூட நீயே எடுத்துக்க, உன் பாவத்துல பாதி வேணாம் முழுசையும் எனக்கு கொடுத்திடு” என்றான்.
“நான் அப்படி என்ன பாவம் செஞ்சேனாம் உங்களுக்கு தர?”
“வயசுக்கு வந்த புருஷனை நல்லா கவனிக்காம காய போடுறியே, இது பாவம் இல்லாம என்னவாம்?”
“சீ பேச்சை பாரு!” என சொல்லி உறங்க சென்று விட்டாள்.
சில நாட்களாகவே சர்வாவின் உள்ளத்தில் தாபத் தீ கொழுந்து விட்டெறிகிறது, ஆனாலும் அவளை வற்புறுத்தாமல் அவளது சம்மதம் எப்போது கிடைக்கும் என ஆவலோடு காத்திருக்கிறான்.
இன்றும் அதே ஏக்கத்தை சுமந்து கொண்டே உறங்க சென்றான்.
வரவேற்புக்கு என மித்ராவுக்கு வாங்கிய நகைகள் இன்னும் ருக்மணியிடம்தான் இருந்தன. நீ கேட்டு வாங்கிக் கொள் என சர்வாவும் சொல்லியிருந்தான்.
“ஏன் நான் போய் கேட்டு வாங்கணும்னு ஸ்பெஸிஃபிக்கா சொல்றீங்க? முதல்ல அவங்க கைல கொடுக்கவே இல்லை நான். அவங்களையே தர சொல்லுங்க, நான் கேட்டுக்க மாட்டேன்” என பிடிவாதமாக சொல்லியிருந்தாள் மித்ரா.
இதை இப்படியே விடாமல் ஒரு நாள் மாலைப் பொழுதில் சர்வாவே அவளை தன் பெரியம்மாவிடம் அழைத்து சென்று நிறுத்தி விட்டான். கணவனை கண்டனமாக பார்த்தாலும் ஏதும் சொல்லாமல் அமைதி காத்தாள் மித்ரா.
“நகையை வாங்கிக்க வந்திருக்கா பெரியம்மா” என ஆரம்பித்தான் சர்வா.
“ஏன் கிலோ கணக்குலயா வாங்கி கொடுத்திருந்த? அவளால தூக்கி சுமக்க முடியாதுன்னு நீயும் கூட வந்திருக்கியா?” என நக்கலாக கேட்டார் ருக்மணி.
“நகையை அவ வச்சுப்பா, அவளை நான் தூக்கிப்பேன், உங்களுக்கு என்ன வந்துச்சு?” என்றான் சர்வா.
“ஏன் இவ கால்ல சுளுக்கா?” என்றார் பெரியம்மா.
“என் கால் நல்லாதான் இருக்கு” என்றாள் மித்ரா.
“பாரு அவளே சொல்லிட்டா, அவ அவளோட கால்லேயே நடந்து வந்துப்பா.. நான் ஒண்ணும் இவளை கடிச்சு தின்னிட மாட்டேன்” என சொல்லி சர்வாவை வெளியேற்றப் பார்த்தார் ருக்மணி.
மித்ராவிடம் சொல்லாமல் இங்கு அழைத்து வந்து விட்டு, இப்போது தனியே விட்டுச் சென்றால் சண்டை பிடிப்பாளோ என பயந்தவன் மனைவியின் சம்மதத்துக்காக அவள் முகத்தை பார்த்தான்.
“என்னமா மிரட்டி பயப்படுத்தி வச்சிருக்க இவனை? உன் வாயாலேயே உன் புருஷனை இங்கேருந்து போக சொல்லு” என ருக்மணி சொல்ல, மித்ராவும் கணவனை பார்த்து தலையசைத்தாள்.
பெரியம்மாவை கெஞ்சலாக ஒரு பார்வை பார்த்துவிட்டே வெளியேறினான் சர்வா.
“உன்னை எதுவும் சொல்லிடக் கூடாதாம், சிக்னல் கொடுத்திட்டு போறான் படவா!” என்றார் ருக்மணி.
மித்ரா பதில் பேசவே இல்லை.
நகைகளை எடுத்து மித்ராவின் கையில் கொடுத்த ருக்மணி, “உன் பொருளை நீதான் பத்திரமா வச்சுக்கணும், காணா போகாதுன்னாலும் வேலையாளுங்க இருக்காங்க, கவனமா இருக்கணும்” என்றார்.
மித்ரா தலையாட்டிக் கொண்டாள்.
“என்கிட்ட என்ன கோவம் உனக்கு?” என நேரடியாக கேட்டு விட்டார் ருக்மணி.
இதை எதிர்பாராதவள், “இல்லியே அதெல்லாம் எதுவுமில்லை” என்றாள்.
“நாம ஒரே குடும்பத்துல வாழுறோம் மா. இன்னிக்கு உனக்கு புதுசா இருக்க இந்த குடும்பம் நாப்பது வருஷம் முன்னாடி எனக்கும் புதுசாதான் இருந்துச்சு. நான் எதையும் மனசுல வச்சுக்க மாட்டேன், என்னனாலும் அப்பப்ப பேசி தீத்துப்பேன். உன் புருஷனோட அம்மாவை இந்த வீட்டுக்கு மருமக ஆக்கினவ நாந்தான். ஆனா காஞ்சனா கூட வந்த புதுசுல இப்போ நீ இருக்கியே அப்படித்தான் அவளும் இருந்தா. மாமியாரும் மருமகளும் ஒரே மாதிரி” என்றார்.
இப்போதும் மித்ராவால் அவரை புரிந்து கொள்ள முடியவில்லை. தன் அதிகாரத்தை நிலை நிறுத்தவே முயல்கிறார் எனதான் அவளுக்கு தோன்றியது.
அவளால் சௌகர்யமாக அவரோடு உரையாட முடியவில்லை. ஆனால் மரியாதை இல்லாமல் ஏதும் பேசி விடாமல் நல்ல முறையிலேயே நடந்து கொண்டாள். இதையே நல்ல முன்னேற்றமாக பார்த்தார் ருக்மணி.
“நான் போகவா?” என மித்ரா கேட்க, அவளை சரிசெய்ய எண்ணி பேச நினைத்ததையெல்லாம் தள்ளி வைத்த ருக்மணி அவளை அனுப்பி வைத்து விட்டார்.
முதலில் அவளுக்காய் மனதில் தன்னை பற்றிய அபிப்ராயம் மாறட்டும், பின் பேசிக் கொள்வோம் என விட்டு விட்டார்.
இயல்பான முகத்தோடே வந்த மனைவியை கண்டு ஆசுவாச மூச்சு விட்டான் சர்வா. நகைகளை அறையில் வைக்க சொன்னவன், “வச்சிட்டு வா, வெளில போலாம்” என்றான்.
“அப்பா சாம! நான் எங்கேயும் வரலை, இங்க எப்ப என்ன நடக்கும்னு தெரியாது, உங்க கில்ட் ஃபீல்லாம் என்னால தாங்க முடியாது” என்றாள்.
தன் காதை பிடித்துக் கொண்டு மன்னிப்பாக பார்த்தவன், “எனக்கு ஆசையா இருக்கு மித்ரா, வாயேன் ப்ளீஸ்” என்றான்.
“இதுக்கு தோப்புக்கரணமே போடலாம் டா நீ” சொல்லிக் கொண்டே வந்தார் அறிவானந்தம் தாத்தா.
வெட்கமாக சிரித்த சர்வா பேச்சை மாற்றும் பொருட்டு, தொழில் சம்பந்தமாக ஏதோ பேச ஆரம்பித்தான்.
“பார்த்தியாமா, ஏதோ ஏடாகூடமா செஞ்சுதான் உங்கிட்ட மல்லுகட்டிக்கிட்டு நிக்கிறான், இப்போவும் உன்னை கவனிக்காம இந்த கிழவன் கூட வெட்டிக் கதை பேச தொடங்கிட்டான்” என மித்ராவை பார்த்து சொன்னார் தாத்தா.
“மனைவியோட நேரத்துல வேற எது பேசினாலும் வெட்டிக் கதைத்தான். போ போ நான் பார்க்கல, நீ ஃப்ரீயா தோப்புக்கரணம் போடு, இல்லை குட்டிகரணம்தான் அடி!” கிண்டல் சிரிப்போடு சொல்லி அங்கிருந்து செல்வதற்காக திரும்பினார்.
“அங்கபிரதக்ஷணம் பண்ணினா கூட மசிய மாட்டா தாத்தா இவ” என சலிப்பாக சொன்னான் சர்வா.
நின்ற தாத்தா மித்ராவை அன்பாக பார்த்து, “போனா போறான் மா, பொண்டாட்டிய சமாளிக்கிற திறமையில்லாதவன்கிட்ட அவன் சக்திக்கு மீறி எதிர்பார்க்க கூடாது. மன்னிச்சு விட்ருமா” என சொல்லி சென்றார்.
“ஹப்பா… நீங்க பெரிய அப்பாவி நான்தான் கொடுமைக்காரி ரேஞ்சுக்கு ஒரு ஆள் விடாம எல்லார்கிட்டேயும் தம்பட்டம் அடிக்கிறீங்க, இருங்க வந்திடுறேன்” என சொல்லி அறைக்கு சென்றாள். நகைகளை பத்திரப் படுத்தி விட்டு வெளியில் செல்ல ஏதுவான ஆடை மாற்றிக் கொண்டு வந்தாள்.
காரில் பயணிக்கையில் எங்கு செல்கிறோம் எனக் கேட்டாள்.
“தெரியலை மித்ரா, சும்மா ஒரு லாங் டிரைவ்தான் இப்போ பிளான்” என்றான்.
இருவரும் நிறைய பேசிக் கொண்டார்கள். பழகிய காலத்தில் மித்ரா அவளைப் பற்றி நிறையவே பகிர்ந்திருக்கிறாள். அவனுக்குத்தான் தன்னை பற்றி பகிரும் வாய்ப்பு அமையவில்லை. ஆகவே இப்போது நிறைய சொன்னான். வழியில் ஏதோ உணவகத்தில் உணவை முடித்துக் கொண்டனர்.
இரவுக்கு வீடு திரும்பி விட எண்ணி ஆரம்பித்த பயணம்தான், ஆனால் பாண்டிச்சேரி வரை பயணம் நீண்டு விட்டது.
“டைம் போனதே தெரியலை மித்ரா” என அவன் சொல்ல, அவளோ கொட்டாவி விட்டாள்.
அவளது தலையை பிடித்து செல்லமாக ஆட்டி விட்டவன், “இங்கேயே ஸ்டே பண்ணிட்டு காலைல வீட்டுக்கு போலாம்” என்றான்.
அவளுக்கும் அதுதான் உசிதமாக பட்டது. ஏதாவது விடுதியில் தங்கப் போகிறோம் என அவள் நினைத்திருக்க அவர்களுக்கென சொந்தமாக இருந்த பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்றான்.
வேலையாட்கள் பராமரிப்பில் அத்தனை சுத்தமாக இருந்தது வீடு. அறைக்கு வந்ததுமே படுத்து விட்டாள். மூன்று மணி அளவில் அவள் கண் விழித்த போது அவனது அணைப்பில் கிடந்தாள்.
அவனது நெருக்கத்தை ரசித்துக் கொண்டே இன்னும் அவனோடு ஒன்றிக் கொண்டாள். அவளது அசைவில் விழித்துக் கொண்டவன், “என்ன மித்ரா?” என்றான்.
அவன் உறங்கியிருந்த போது அவனோடு ஒன்ற முடிந்தவளுக்கு இப்போது சங்கடமாக இருக்க விலகப் போனாள்.
விடாதவன், “இன்னும் எத்தனை நாளைக்கு மித்ரா? இதுக்கு கூட எனக்கு பாக்கியம் இல்லயா?” எனக் கேட்டான்.
அவனை ஏமாற்ற மனம் வராமல் மீண்டும் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.
கொஞ்சம் அவளை வர்ணித்தான், அதிகம் உளறினான், அவளது சிரிப்பை அவனது மார்பு உணர்ந்தது. கைகளால் அவளது கன்னங்களை வருடினான். கூந்தலை அளந்தான், தோளை அழுத்திக் கொடுத்தான். கணவன் என்ற உரிமையோடு அந்தரங்கமாக ஏதேதோ பேசினான், அவளை அவனிடம் மயங்க வைத்தான்.
மித்ராவுக்கு அவளது உறக்கம் எங்கு பறந்து போனது என்றே தெரியவில்லை. அவனது மனதை படித்தவளாக, “இதெல்லாம் நீங்க என்னை உண்மையா லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம்தானே நடக்கணும்னு பேசியிருக்கோம்?” எனக் கேட்டாள்.
“உன் கூடவே இருக்கணும்னு தோணுது, உனக்கு என்னை பிடிக்க வைக்க ஏதாவது செய்யணும்னு ரொம்ப பிளான் பண்றேன், இதெல்லாம் உன்னை பிடிக்காமலா மித்ரா?”
“எனக்கு உங்களை பிடிக்க வைக்க இப்ப எதுக்கு பிளான்? அதான் முன்னாடியே பிளான் பண்ணி கல்யாணமும் பண்ணிக்கிட்டீங்களே?” குற்றமாக அல்லாமல் கிண்டலாக மட்டுமே சொன்னாள்.
“இப்போ இதுக்கு எந்த பிளானும் இல்லை மித்ரா, இங்க வந்ததே தற்செயல்தான், நம்மள மீறி நடக்கும் போது நடக்கட்டுமே. கோ வித் த ஃப்ளோ மித்ரா” என அவன் சொன்னதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஆசையாகவே உடன்பட்டாள்.
எதிர்பாராதது என்றாலுமே கட்டாயம் இல்லாமல் விருப்பத்தோடே நிகழ்ந்தது.
மனதில் இனிமையை நிரப்பிக் கொண்டு ஒருவருக்கொருவர் நெருக்கமாக படுத்திருந்தனர்.
“நமக்குள்ள இன்னும் அண்டர்ஸ்டாண்டிங் வந்தப்புறம் வாழக்கைய தொடங்கியிருக்கணும்னு தோணுதா?” அவளின் மனநிலையை அறிய வேண்டி கேட்டான்.
இல்லை என்பதாக தலையசைத்தாள். அதில் திருப்தி கொண்டவனாக, “ஆசை இல்லாமல்லாம் உன் கூட இப்படி என்னால இருந்திருக்க முடியாது மித்ரா. நமக்குள்ள எல்லாம் சரியாத்தான் நடக்குது” என சொல்லி அவளின் கையை பற்றி முத்தமிட்டான்.
அவனது பேச்சை ஆமோதிப்பது போல பார்த்து பின் கண்களை மூடிக் கொண்டவள் விரைவாகவே உறங்கிப் போனாள்.
அவளது அருகாமையில், ஆசை பொங்க அவளை பார்த்துக் கொண்டே, இனிமையான முதல் அனுபவத்தை மனதில் அசை போட்டுக் கொண்டு அந்த காலைப் பொழுதை ரசனையாக மாற்றியிருந்தான் சர்வா.