சில்லென புது மழைத்துளி!

15

கருணாவிற்கு, எப்போவாது.. முதுகு வலி வரும். அதிக அலைச்சல் டென்ஷன் அசதி.. என இருந்தால் வரும். அப்படிதான் இன்று.. வலி. இந்த பத்துநாளாக ஒரு திரையுலக இயக்குனர் பிரபலத்தின் குடும்பத்தில்.. திருமண விழா. இவர்கள் ரிசார்ட்டில், ஒருவாரம் புக் ஆகியிருந்தது. 

இன்றுதான் திருமணம். ஆனால், நேற்று பிரச்சனை. பணியாட்கள் கவனமின்மையால் சிறுவன் ஸ்விம்மிங் ஃபூலில் விழுந்துவிட்டான் என இரவு முழுவதும் பிரச்சனை. அத்தோடு இரண்டு மூன்று பிரச்சனைகள் சேர்ந்துக் கொண்டது. இயக்குனர் நல்லவிதமாக.. பேசினார்.. அவரின் மகன் ஏனோ பணியாளாரை சட்டென அடித்துவிட்டார். எனவே, கருணாவிற்கு டென்ஷன்.

சிலநேரங்களில்.. ஐந்து ஆறுநாட்கள் விழா நடக்கையில் பணியாளர்கள் சோர்வாகிவிடுவர். அதனாலேயே ஷிபிட் முறையில் ஆட்களை மாற்றிக் கொண்டே இருப்பான். எங்கோ எதோ.. அதிக சம்பளம் கிடைக்கும் என ஓவர் டைம் எடுத்ததில் எதோ பிசகாய் இருந்தது. 

பொதுவாக இதுபோன்ற விருந்து விழா எனும் போது.. மேன் பவர் அதிகமாகும். எல்லோரும் VIPகள்.  அதனால், பணி சுமை அதிகமாகத்தான் இருக்கும்.. அத்தோடு கவனமும் தேவை.. என கருணா எப்போதும் கவனமாகவே தன் குழுவினை வைத்திருப்பான். அந்த வகையில் இன்று பிரச்சனை. சரி செய்து பேசி வர.. மணி 11க்கு மேல். இருவருக்கும் இடையில் பேசி சமாதானம் செய்து அந்த பணியாளரை அனுப்பி வைத்தான்.

கருணா உடனே பணியாளர் மீட்டிங் என.. இரவிலேயே பேசி..  யார் எல்லாம் இரண்டு ஷிபிட் பார்த்தார்கள் என பார்த்து.. அவர்களை அனுப்பிவிட்டு வேறு ஆட்களை நியமித்தான்.

கருணா, தன்  அறைக்கு வந்து இடுப்பில் கைவைத்து குனிந்து நிமிர்ந்தான்.. வலி.. சுள்ளென இழுத்தது. 

கருணாவின் மேனேஜர் கண்டுக் கொண்டார் “சர் என்ன ஆச்சு, நீங்க போங்க.. டிரைவர் இருக்கார் வீட்டுக்கு போங்க சர், இல்லை, இங்கேயே ரெஸ்ட் எடுங்க. நான் பார்த்துக்கிறேன் ” என்றார்.

கருணா, தன் ஷிர்ட்டின் மேல் பட்டனை கழற்றிக் கொண்டே..  திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.

அவரும் அமைதியானார்.

கருணா “நாளை வரை எங்கும் நகர முடியாது. நான் மேலே ரூம்க்கு போறேன். நீங்களும் ஒரு சுற்று பார்த்துட்டு ரெஸ்ட் எடுங்க” என்றவன் மேலே சென்றான்.

கருணா இலகு உடைக்கு மாறி.. உண்டு, மாத்திரைகள் எடுத்துக் கொண்டான்.  கீழே வந்து நடந்தான் கொஞ்ச தூரம்.. ஆனாலும் இன்னமும்  என்னமோ சரியாக இல்லை.

தன்னுடைய மருத்துவரை தொலைபேசியில் அழைத்தான். தன்னுடைய நிலை சொன்னான். அவனுக்கு முன்பே சொல்லிக் கொடுத்த பயிற்சிகள் சிலவற்றை மீண்டும் செய்ய சொல்லி சொன்னார்.. நாளை கண்டிப்பாக மருத்துவமனை வந்துவிடுங்கள் என்றார்.

கருணா மேலே வந்தான்.. சுபிக்கு அழைத்தான் அந்தநேரத்தில். என்னமோ அவளிடம்தான் மருந்து இருப்பதாக அவனே எண்ணிக் கொண்டான். மனம், மருந்துதாக அவளை நினைத்துக் கொண்டது.

சுபி பதறியவளாக “ஹலோ கரண் என்னாச்சு” என்றாள்.

கருணா “சாரி டிஸ்டர்ப் செய்துட்டேனா” என்றான் அமர்த்தலான குரலில்.

சுபி “இல்ல.. என்னாச்சு சொல்லுக” என்றாள், பதட்டம் மாறாத குரலில்.

கருணாவிற்கு என்னமோ அவளின் பதட்டம் பிடித்தது.. சொல்ல போனால்.. இந்த குரல் அவனுக்கு தேவையாக இருந்தது.. தனக்கான பதறும் ஜீவனின் குரல் வேண்டுமாக இருந்தது.. ஆனாலும் காட்டிக்  கொள்ளவில்லை “எனக்கு.. என்னோட டிஸ்க்.. அதாவதுL5.. ஆப்ரேஷன் நடந்ததுல்ல.. அது இப்போ வலி.. அதோட எக்ஸ்சசைஸ்  எல்லாம் மறந்துட்டேன்.. பெயின் அதிகமாயிருக்கு.. நாளைக்கு வேலை இருக்க தூங்க முடியலை.. கொஞ்சம்.. என்ன எக்ஸ்சசைஸ்ன்னு சொன்னால்..” என்றான்.

சுபிக்கு முதலில் கோவம்தான் என்றாலும்.. உடல்நலமில்லை.. அத்தோடு அவனின் குரலும் சரியில்லை எனவும்.. “என்ன டிஸ்க் பிரச்சனை.. எத்தனை நாட்கள் ஆச்சு ஆபரேஷன் ஆகி” என விவரம் கேட்டுக் கொண்டு.. “ஐந்து நிமிடம் வீடியோகால் பண்றேன்” என்றாள்.

அதன்படியே ஐந்து நிமிடத்தில் வீடியோகால் செய்து.. அவனுக்கான எக்ஸ்சசைஸ் சொல்லி தந்தாள்.. அவனுக்கு உதவினாள்.

கருணா அரைமணி நேரம் அவள் சொன்னபடி செய்தான்.. முதுகு வலி சற்று மட்டுப்பட்டது.

கருணா புன்னகையோடு.. குரலில் ஒரு தெம்பு தெரிய “பாரேன், மாத்திரைகெல்லாம் இந்த வலி கேட்கவேயில்ல.. சுபி வந்து.. நாலுதரம் குனிந்து நிமிர்ந்தேன்.. சரியாகிடுச்சி” என்றான் தன்னைத்தானே கிண்டல் செய்துக் கொண்டு.

சுபிக்கு புன்னகை வந்தாலும் அதை மறைத்துக் கொண்டு.. “ம்.. ஒருத்தரோட தூக்கத்தை கெடுக்கனும்ன்னு முடிவு செய்திட்டார். அப்புறம் எப்படி சரியாகாமல் போகும். அஹ.. என்னாச்சு ரெகுலரா வொர்க்அவுட் செய்யணும் கரண்.. ஏன் விட்டீங்களா?” என்றாள்.

கருணா அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவள் முதலில் சொன்னதை பிடித்துக் கொண்டு “ம்.. எனக்கிருக்கும் ஒரே பிரெண்ட் அதுவும் பிசியோ பிரெண்ட்.. நீதான்னு கூப்பிட்டேன். உன்னை கேட்க்காமல் வேறு யாரின் தூக்கத்தை கெடுக்க.. அதுதான் தப்புன்னா.. சாரி ம்மா” என்றான்..

சுபி ஏதும் பேசாமல்.. “இல்ல.. அப்படி சொல்லல” என்றாள்.

கருணா “வேற எப்படி சொன்ன..” என்றான் கடுப்பான குரலில்.

சுபிக்கு தர்மசங்கடம் என்பார்களே அப்படியானது. அமைதியானாள்.

கருணா “சரி.. தேங்க்ஸ்.. பைய்” என்றவன், அவளின் பதிலை எதிர்பாராமல் அழைப்பினை துண்டித்தான்.

கருணா, நிம்மதியாகவே உறங்கினான்.

காலையில் திருமணம் முடிந்தது. மாலை வெகு நேரம் வரை வேலைகள் இருந்தது. 

கருணா “இல்ல, சுகுமார்.. இன்னும் டிரக்ட்டர் அவரின்  பையன் வரலை.. கணக்கெல்லாம் இன்னும் முடியலை.. அவரை பார்த்துட்டு நான் போய்டுவேன்” என சொல்லி.. தன் அறையில் அமர்ந்துக் கொண்டான்.

ஒருமணி நேரம் கடந்து அவர் வந்தார். கருணாவிடம் ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியாக இருந்ததாக சொன்னார். அத்தோடு, நேற்று நடந்ததை மனதில் வைக்க வேண்டாம் என்றார்.. அதுதான் கருணாவுக்கு முக்கியம். பில் அனைத்தையும் கொடுக்கும் படி ஒரு நபரினை அவர் அறிமுகம் செய்தார்.. அதன்பின் அவர் விடைபெற.. கருணா இப்போதுதான் நிம்மதி பெருமூச்சுவிட்டான்.

மனதில் சுபிக்கு நன்றி சொல்லிக் கொண்டான்.. அவளுக்கு அழைக்கவில்லை.

சங்கீதா இந்தியா வருவதாக ஏற்பாடு, அதனால் வீடு பார்க்க சொல்லியிருந்தாள், தன் தங்கையிடம். கார்த்திக் மட்டும் மீண்டும் ஆஸ்திரேலிய செல்வதாகவும், சங்கீதா.. பிள்ளை.. இருவரும் இங்கேயே இருப்பதாக ஏற்பாடு. அதனால், அனைத்து வசதிகளும் உள்ள அப்பார்ட்மென்ட் வீடு வேண்டும்.. என்றிருந்தாள்.

அதனால், சுபிக்ஷா.. புரோக்கர்கள் விசாரித்தும்.. ஆன்லைனில் ஆப் மூலமாகவும் வீடு தேட தொங்கினாள்.

நிறைய வேலைகள் சுபிக்கு. கொஞ்சம் சிரமப்பட்டாள் எனலாம். மகனுக்கு தேர்வு நாட்கள் நெருங்க நெருங்க.. அவனிற்கு நேரம் ஒதுக்கவே முடியாமல் போனது. வெளியே மருத்துவமனைக்கு செல்லும் நேரம் அதிகமானது. கிளினிக்கில் உள்ளவர்கள்தான் சொல்லிக் கொடுத்தனர்.

இந்த நிலையில்தான், குருவிற்கு எக்ஸாம் முடிந்துவிட அவன் விடுமுறையில் லாங் லீவ் என்பார்களே அந்த விடுமுறை. ஹாஸ்டல் எல்லாம் வெகேட் செய்துக் கொண்டு.. ஒன்றும் பெரிதாக பொருட்கள் இல்லை.. துணிகள் விளையாட்டு பொருட்கள் அவ்வளவுதான். மற்ற எல்லாம் அங்கேயே வழங்கிவிடுவார். அதனால் இறுதியாக அந்த பள்ளியில் விடைபெற்றுக் கொண்டு தந்தையோடு கிளம்பி வந்துக் கொண்டிருந்தான் குரு. 

கருணா, அமைதியாக இருக்கிறானே தவிர.. அவனுள் நிறைய குழப்பங்கள்.. தங்கை திருமணம் பற்றி ஏதாவது கேட்டுக் கொண்டே இருக்கிறாள். தாய் தந்தையோ.. இந்த மாதத்தில் திருமணம் முடியவேண்டும் அடுத்த மாதத்தில் முடியவேண்டும் என வேண்டுதல்களோடு இருக்கிறார்கள். மகன், இங்கேயே படிக்கலாம் என்கிறான்..  மகன் வளர்ந்துக் கொண்டே இருக்கிறான்.. நான் ஏன்.. சுபி.. என எண்ணிக் கொண்டே இருக்கிறேன்’ என தலையை கோதிக் கொண்டான். ‘எந்த முன்னேற்றமும் இல்லை.. ம்.. என்ன செய்ய முடியும் பூக்கள்.. சாக்லேட்.. என எடுத்துக் கொண்டு அவள் பின்னாலா சுற்ற முடியும்’ என கோவம் சங்கடம்தான்.

இப்போது மகன், தந்தைக்கு நேர்மாறாக இருந்தான்.. குஷியாக அமர்ந்து தந்தை டிரைவ் செய்யும் காரினை தானும் வாயால் டிரைவ் செய்துக் கொண்டிருந்தான்.

பொதுவாக பள்ளி தேர்வு முடிந்தாலே.. குஷியாகிடும் பிள்ளைகள்.. இப்போது இன்னமும் குஷி குருவிற்கு.. இங்கேயே படிக்க போகிறோம் என்பதில். குரு “டாட்.. வேற ஸ்கூல் தானே..” என்றான், மீண்டும் கையில் ஸ்டேரீங் இருப்பது போல பாவித்து டிரைவ் செய்ய தொடங்கினான் மகன்.

கருணாவும் புன்னகையோடு “ம்..” என்றான் கார் செலுத்திக் கொண்டே.

குரு  “நானும் விசா படிக்கிற ஸ்கூல்தான் போவேன்.” என்றான்.

தந்தை “ம்.. பார்க்கலாம் டா” என்றான்.

குரு “ப்பா, விசாவை கூட்டி போலாம்” என்றான்.

கருணாவிற்கு சுபி நினைவுதான் வந்தது.

தன் தந்தையோடு விசாகனை பார்க்க கிளினிக் வந்தான், குரு. ஆனால், கருணா சுபியை மட்டுமே பார்க்க வந்தான்.