காவியத் தலைவன் – 27

எப்பொழுதுமே உறக்கத்தில் கூட கொஞ்சம் விழிப்புடன் இருப்பது ஆதீஸ்வரனின் வழக்கம். ஆழ்ந்த உறக்கம் என்பதை அவன் தொலைத்துப் பல வருடங்கள் ஆகியிருந்தது.

இன்றோ ஓய்வில்லாத அலைச்சல் காரணமாக மனையாளின் வலது கரத்தை தன் கரங்களுக்குள் பொத்தி வைத்தபடி விரைவிலேயே ஆழ்ந்த உறக்கத்திற்குப் போயிருந்தான். பிடியில் மெல்லியதாக அழுத்தம், எளிதாக விடுவதில்லை என்கிற முனைப்பு அதில் தெரிந்தது.

அவன் மனையாளுக்கு காரணம் புரியவில்லை என்றாலும் அவன் ஆழ்ந்து உறங்கியபிறகு கூட கரத்தை வெளியில் எடுக்க மனமில்லாமல், தன் கரத்தை பொத்தி வைத்திருந்த அவனது கரங்களையே பார்த்தபடி அசையாமல் படுத்திருந்தாள். அதிலும் அவளை வெகுவாக ஈர்க்கும் அவனது கைவிரல் மோதிரத்தை! கோபம் வந்தால் போதும் அதை ஒரு ரிதத்துடன் உருட்ட தொடங்கி விடுவான். தீவிர சிந்தனை என்றாலும் அதே கதை தான்!

என்னவோ அந்த நேரங்களில் எல்லாம் அவன் செய்கையை பார்ப்பவளுக்கு அவனிலிருந்து பார்வையை விலக்கவே முடிந்ததில்லை. அவனின் தீவிர தொனி அவளை வசீகரிக்கும் தோற்றங்களில் ஒன்று!

கணினியின் முன்பு சற்று இலகுவாக அமர்ந்தபடி புருவங்கள் சுருங்க கைவிரல் மோதிரத்தை உருட்டியபடி அவன் எதையாவது யோசிக்கும் சமயங்களிலெல்லாம் அவனறியாமல் கள்ளத்தனமாக ரசித்திருக்கிறாள்.

‘அந்த மோதிரத்தை உருட்டினா என்ன நடக்கும்? ஒருவேளை இதை உருட்டினா மண்டையும் சேர்ந்து உருண்டுக்கும் போல…’ என கேலியாக எண்ணிய நாட்களும் உண்டு. ‘இப்ப என்ன கோபமோ?’ என இவளும் சேர்ந்து டென்சன் ஆன நாட்களும் அதிகம்.

அவனது மனநிலையை சரியாக இனம் காண இந்த மோதிரம் பல நேரங்களில் அவளுக்கு உதவியிருக்கிறது.  அவனிடம் சிறைப் படாத இன்னொரு கையை எடுத்து அவன் கைவிரல் மோதிரத்தை மெல்ல வருடிக் கொடுத்தாள். மிக லேசான புன்னகை அவளின் இதழ்களில் தவழ்ந்தது. எத்தனை நேரம் வருடினாளோ தெரியவில்லை அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.

தாரா பேரழகான கவிதை! ஆதி திருமணம் என்கிற முடிவைக் கூட தன்னிச்சையாகத் தான் எடுத்திருந்தான். அவளுக்கான நேரத்தைக் கொடுக்கத் தவறியிருக்கிறான். ஆனால், பெண்ணவளுக்கு அந்த குறைகள் எல்லாம் மனதில் இருந்தாலும் அவனின் சிறுசிறு செய்கைகளால் விளைந்த நம்பிக்கையிலும் ஆறுதலிலும் அவளால் அந்த குறைகளை எல்லாம் ஒதுக்க முடிந்திருந்தது. இப்பொழுதும் நேசம் துளிர் விட்டிருக்கும் இளம் மனையாள் தான் அவள்!

அவள் கடினமான வாழ்க்கையைக் கடந்து வந்தவள். அன்னையும் அவளுமாக வாழ்ந்த வாழ்க்கையில் அவர்கள் ஓரளவு நிலை பெறவே அடுத்தவர்களின் உதவி தேவையாக இருந்தது. அவள் நன்கு படித்தாள் என்றால், பூவரசி தனது நகைகளை எல்லாம் விற்றுக் கிடைத்த பணத்தில் கேரளாவில் கிராமப்புறம் ஒன்றில் தோட்டம் வாங்கிப்போட்டு அதில் நன்கு உழைத்தாள்.

பூவரசியின் உழைப்பு இவர்களைக் கெளரவமாக வாழ வைத்தது. சூழ இருந்தவர்கள் நல்லவர்களாக இருந்ததால் பெண்கள் இருவரும் மிகவும் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். தந்தையின் ஏக்கம் தவிர ஒரு குறையும் இல்லை சின்னவளுக்கு.

எளிய வாழ்க்கையை மகிழ்வோடு வாழ்ந்து வந்தவளுக்கு, ‘வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் எல்லாமே கடவுளின் கொடை. அதை குறை கூறுவதோ, சரியில்லை என்று மனசங்கடம் படுவதோ தவறு!’ என்ற அன்னை சொல்லி வளர்த்த சொற்கள் தான் தாரக மந்திரம்.

என்ன பூவரசி இந்த வாழ்க்கைப் பாடத்தை உணர நிறைய கூலி கொடுக்க வேண்டியதாகப் போய் விட்டது. அவள் மட்டும் கணவனே எதிர்பார்க்காத, விருப்பப்படாத அவனின் பூர்விக சொத்திற்கு ஆசைப்படாமல் இருந்திருந்தால், அப்படியொரு வீண்பழி ஏழுமலை மீது நிச்சயம் விழுந்திருக்காது. இவர்களும் இப்படி கஷ்டப்பட்டு தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டிய அவசியம் வந்திருக்காது. காலம் வலிக்க வலிக்கத்தானே சில பாடங்களை கற்றுத் தருகிறது.

நல்லவேளையாக இறக்கும் வரை அவளுக்குத் தெரியாது, தன் மாமியாருக்கு உரிய சொத்துக்களை எல்லாம் அவரின் அண்ணன் கண்ணபிரான் தங்கையின் குடும்பம் தொழிலில் நஷ்டப்பட்ட போதே கொஞ்சம் கொஞ்சமாக தந்து விட்டிருந்தார் என்று. ஒருவேளை அதுவும் தெரிய வந்திருந்தால் நிச்சயம் பூவரசி இன்னும் மனமுடைந்து போயிருப்பாள்.

பூவரசி அனுபவ பாடமாய் கற்றுத்தேர்ந்த பாடத்தை மகளுக்கு சொல்லி வளர்த்தாள்.

மகளும் அந்த பாடத்தினை மனதில் வைத்து தான், விதி நமக்கு அமைத்துத் தரும் வாழ்க்கை இது என ஆதியின் விஷயத்தில் மிகவும் பொறுமையை கடைபிடித்தாள். அதோடு கனிகாவின் தோழி பிரவீணா செய்துவைத்த குளறுபடியால் சூழலும் அவள் மறுப்பதற்கு ஏதுவாக இல்லை. ஆதீஸ்வரனும் குறை சொல்ல முடியாத மனிதன் எனும்போது பெண்ணவளுக்கு அனைத்தும் சுமூகமான உணர்வு தான்!

ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் அழகான ஓட்டத்தில் கணவனை ரசிக்கத் தொடங்கி விட்டாள். சமீபமாக அவன்மீது நேசமும் கொள்ளத் தொடங்கி விட்டாள்.

என்ன உண்மைகள் எல்லாம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்போது இது நீடிக்கும் கொடுப்பினை இருக்குமா என்று தான் தெரியவில்லை!

ஆம் வீரராகவனுக்கு எப்படி ஆதீஸ்வரன் முடிவு கட்டியிருந்தானோ அதேபோல தான் ஏழுமலை மீது தவறில்லை என்று தெரிந்ததும் அவரை வெளியில் எடுக்கத் தேவையான ஏற்பாடுகளையும் செய்திருந்தான்.

அவர் வெளியே வந்த பிறகு, பெற்ற மகளைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளையும் சேர்த்துத் தான்! உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கிற அச்சம் தான் பெண்ணவளின் கரத்தை இறுகப்பற்றிக் கொண்டு அவனை உறங்க வைத்தது.

அலைச்சலில் உறங்கினானா இல்லை என்ன நடக்குமோ என்ற அச்சத்திலும் நடுக்கத்திலும் தன்னை மீறி உறங்கினானா என்று தான் தெரியவில்லை.

ஆதீஸ்வரனின் ஏற்பாட்டின் படி, அவனுடைய வக்கீல் ஏழுமலையை வெளியில் எடுக்கும் வேலைகளை தொடங்கியிருக்க, உண்மைகள் அனைத்தையும் பேரன் மூலம் அறியப்பட்டிருந்த அழகாண்டாள் பாட்டி ஏழுமலையை வெளியில் எடுக்கும் போது உடன் இருப்பதற்காக சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

அளவுக்குமீறிய பொறுப்புகளும், எதிர்பாராத அதிர்ச்சிகளும் வயோதிகத்தில் கூட நிம்மதியாக இருக்க கொடுப்பினையைக் கொடுக்கவில்லை அந்த முதிய பெண்மணிக்கு. மகன், மருமகளின் அகால மரணம், பேரன்களை வளர்க்கும் பொறுப்பு என இத்தனை நாட்களாக அல்லாடியவரிடம், இப்பொழுது போய் உங்கள் மகனை கொலை செய்தது இவர் இல்லை இவர் தான் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

அந்த காலத்து மனுஷி அவர், எப்பொழுதும் பாவம், புண்ணியம் என அதிகம் யோசிக்கத் தொடங்கி விடுவார். மகனும் மருமகளும் இறந்த ஆரம்பத்தில் கவலையில் மூழ்கி இருந்திருந்தார் என்றிருந்தாலும், போகப்போக ஒருவேளை ஆரம்பத்திலேயே ஏழுமலைக்கு சொத்துபத்தை கொடுத்து விட்டிருந்தால் அவனுக்கு இந்தளவிற்கு பொறாமை வந்து கொலை செய்யும் அளவிற்குப் போயிருக்க மாட்டானோ என்றெல்லாம் யோசித்திருக்கிறார்.

பூவரசி வேறு மகளோடு ஊரை விட்டுப் போனவள், அவளின் நிலை என்ன என்றும் தெரியவில்லை என்றதும், ஐயோ அவள் கணவன் செய்த குற்றத்திற்கு அவளை நிராதரவாக நிறுத்தி வைத்திருக்கக் கூடாதோ, எங்கே போய் தனியாகக் கஷ்டப்படுகிறாளோ என்றெல்லாம் கவலை அவரை அரிக்கத் தொடங்கியது. தனக்கு தெரிந்தளவில் அவர்களை தேடியும் பார்த்தார் பலன் தான் கிடைக்கவில்லை.

ஏழுமலை தான் கொலையாளி என்று நம்பியபோதும் இதுபோல எண்ணங்களோடு இத்தனை ஆண்டுகளாக இருந்தவரிடம், இதன் அடிப்படையே பெரும் பிழை என்று சொன்னால் அவரும் தான் என்ன செய்வார்?

அப்படியென்றால் ஒரு நிரபராதி தண்டனை அனுபவிக்க இவரின் சந்தேகமும் ஊகமும் மட்டுமே காரணமா? இதனை எப்படி தாங்கிக்கொள்ள முடியும் அவரால்! மனதளவில் மிகவும் நொறுங்கிப் போனார். கேள்விப்பட்ட விஷயத்தில் உடலோடு சேர்ந்து உள்ளமும் நடுங்கிப் போனது.

ஐயோ! என் கண் முன்னால், என் மகனோடு வளர்ந்தவன் தானே ஏழுமலை. சொந்தத்தைச் சேர்க்க வேண்டாம் சொத்தை பிடுங்குகிறார்கள் என்றெல்லாம் தவறாக யோசித்து வெறுப்பை அவன்மீது கொட்டி விலகியிருந்ததால், அவனிடம் இருந்த நல்ல குணங்கள் என் கண்ணில் படாமல் மறைந்து விட்டதா? அதனால் தான் இலகுவாக அவன் மீது பழியைத் தூக்கிப் போட்டு விட்டேனா?

ஆயிரம் இருந்தாலும் அவனும் அந்த வீட்டுப் பிள்ளை தானே, என் மகன் பிரமானந்தமும் ஒற்றை பிள்ளை, அப்படியிருக்க அவனோடு சேர்ந்து வளர்ந்த பிள்ளையும் நல்ல இடத்தில் இருப்பதால் என்ன ஆகப்போகிறது? எனக்கே இன்னொரு குழந்தை இருந்திருந்தால், சொத்து பிரிகிறது, போகிறது என்றா கவலைப் பட்டிருப்பேன்?

அதுவும் பெற்றவர்களை இழந்து தனியாக நின்ற போதும் வீட்டில் சேர்க்கக்கூட எனக்கு மனம் வரவில்லையே? என் கணவர் இருந்திருந்தால் அப்படியா அவனை தனித்து விட்டிருப்பார்? எதற்கு எனக்கு இந்த வீண் வெறுப்பு, என் வெறுப்பில் அழிந்து நின்றது என் குடும்பம் தானே?

ஒருவேளை நான் ஆரம்பத்திலிருந்தே ஏழுமலையைச் சேர்த்திருந்தால், அவனிடம் இணக்கமாக நடந்திருந்தால் பிரமானந்தமும் அவன் சொத்து கேட்டதைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டேனே! நான் தானே மகனிடம் ஏழுமலை சொத்துக்காகத் தான் உன்னிடம் சுத்துகிறான் என்று அவ்வப்பொழுது கூறி மகனின் மனதில் நஞ்சை விதைத்தது.

அந்த நஞ்சின் வலிமையால் தானே பூவரசி சொத்து கேட்டு நின்றதும் மகனுக்கு ஏழுமலை மீது வெறுப்பு வந்து விலகி நின்றது. ஒருவேளை அது நிகழாதிருக்க, அந்த வீரராகவன் இத்தனை தூரம் செய்ய முடியாமல் போயிருக்கலாம். இருவரும் ஒன்றாக இணைந்தே இருந்திருந்தால், வீராவின் சதியை முறியடித்திருப்பார்கள். எல்லாமே பாழாய்ப் போனதே என்று மனதளவில் சுக்கு நூறாக உடைந்து போனார்.

சேர்த்து வைத்த பாவக்கணக்கு கழுத்தை நெறிப்பது போல இருந்தது. முன்பு சரியென்று தெரிந்த எல்லாமே இப்பொழுது தவறாகப் பட்டது. காலம் மாற மாற காட்சிகள் மாறுவது போல, எண்ணங்களும் முற்றிலும் மாறியது.

கிடைத்த தகவல்களில் ஒரே ஒரு ஆறுதல், தாரா ஏழுமலையின் மகள் என்பதில் தான்! அவன் தந்தைக்கு நம் வீட்டில் கிடைக்காத அங்கீகாரம் மகளுக்குத் தந்துவிட வேண்டும் என்று உணர்வுப்பூர்வமாக உள்ளத்திலிருந்து எண்ணினார்! ஆனால், உண்மைகளை தெரிந்துகொண்ட பிறகு தாரா ஏற்றுக் கொள்வாளா என்று ஆதீஸ்வரனை போலவே அழகாண்டாளுக்கும் கவலை இருந்தது.

இத்தனை பிரச்சினைகள் போதாதென்று, சத்யா தன் சொந்த பேரன் இல்லை என்றொரு தகவல்! ஆதியை விட சத்யா மீது பாட்டிக்கு எப்போதும் கூடுதல் கரிசனம் தான்! ஏழு வயதில் பெற்றவர்களை பறிகொடுத்த பிள்ளை என்கிற அனுதாபம் அவன் மீது பாசத்தை அதிகமாகக் கொட்ட வைத்திருந்தது. இப்பொழுது கூட அவன் சொந்த பேரன் இல்லை என்கிற வருத்தம் அவரிடம் துளியும் இல்லை. இந்த செய்தியை பேரன் எப்படித் தாங்கிக் கொள்வான் என்கிற மனவருத்தம் தான் அதிகமாக இருந்தது.

இங்கே அழகாண்டாள் பாட்டி ஒரு சூழ்நிலை கைதி மட்டுமே! அவர் பக்கமிருந்து அந்த நேரத்தில் எது சரி என்று தோன்றியதோ அதைத் தான் செயல்படுத்தினார். இந்த வயதில் அன்றே ஏழுமலை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும், அவனையும் கொஞ்சம் வளர்த்து விட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, இதே அன்றைய நிலையில் சொத்தை பறிக்கிறார்களே என்கிற கோபமும் ஆதங்கமும் மட்டும் தான் இருந்தது!

இப்பொழுது சத்யாவின் விஷயத்திலும் அவருடைய வயதும் பக்குவமும் பேரனது இடத்திலிருந்து அவரை யோசிக்க வைக்கிறது.

ஆதீஸ்வரன் அழுத்தம் தந்திருந்த காரணத்தினால் மட்டுமின்றி, ஏழுமலையும் தண்டனையை பெருமளவு அனுபவித்து விட்டதால், அவரை எளிதாக விடுவிக்க முடிந்தது.

குற்றம் சுமத்திய அழகாண்டாள் பாட்டியே மருமகனை வெளியில் எடுக்க நேரில் சென்றிருந்தார்.

சிறையிலிருந்து வெளியில் வந்த ஏழுமலையைப் பார்த்ததும் பெரியவளுக்கு கண்களில் கண்ணீர் பொழிந்தது. ஓய்ந்து ஒடுங்கிய தோற்றம்! அவன் வாழ வேண்டிய வயதினை சிறைக்குள்ளேயே கழித்து விட்டான் என்று தெளிவாக எடுத்துரைத்தது வயோதிகம் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்த அவனின் தோற்றம். தோற்றத்தில் முன்போன்ற திடம் இல்லை. உயிர்ப்பு இல்லை. அவனை அந்த கோலத்தில் பார்க்க பார்க்க நெஞ்சை என்னவோ அழுத்தி பிசைந்தது பெரியவளுக்கு.

மகன் ஸ்தானத்தில் பார்க்க வேண்டியவனை இத்தனை நாட்களாக வீண் பழியைச் சுமக்க வைத்து தண்டனை வாங்கி கொடுத்து விட்டோமே என்கிற குற்றவுணர்வு அவரை அரித்துக் கொண்டிருந்தது.

வெளியில் வந்தவரிடம், “என்னை மன்னிச்சிடுய்யா…” என்று அவரின் கையைப் பற்றி கண்ணில் வைத்துக் கொண்டார். கண்ணீர் வழிந்து கையை நனைத்தது.

கசந்த புன்னகையுடன், “எப்படி அத்தை பிரமா மாமாவை நான் கொல்லுவேன்? நீங்க அப்படியொரு வார்த்தை என்னைப் பார்த்துச் சொன்னதுமே நான் செத்துட்டேன், அப்பறம் இதெல்லாம் என்னை என்ன செய்ய போகுது?” என்று சொன்ன ஏழுமலையில் குரலில் விரக்தி விரவிக்கிடந்தது.

“அப்படி சொல்லாதய்யா. கண்ணால பார்த்ததை வெச்சு தப்பா நினைச்சுட்டேன். இந்த பாவத்தை எங்கே போயி கழிப்பேன்னு தெரியலையே” என்று கதற,

“நீங்க ஒரு நாளில் அழுது என்னோட பதினேழு வருஷ வாழ்க்கை திரும்ப வந்துட போகுதா? விடுங்க அத்தை, என்னை இத்தோட விட்டுடுங்க. இனியாச்சும் என் பொண்டாட்டி, பிள்ளைன்னு என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்” என வேதனையோடு சொல்ல, பூவரசி இறந்த தகவல் கூட இன்னும் தெரியாது போல என்று புரிந்ததும் இன்னும் தான் அழுகை வந்தது பெரியவளுக்கு.

‘எந்த நிலையில் இந்த பையனை நிறுத்தி வைத்திருக்கிறேன்?’ என்கிற எண்ணமே அவரது மனதைப் பிழிந்தது.

“அச்சோ! இந்த பாவிக்கு மன்னிப்பே கிடைக்காது போலவே” என அழகாண்டாள் தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கி விட்டார்.

“எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினேனோ இந்த பிறவியில பார்க்கக்கூடாத கஷ்டத்தை எல்லாம் பார்த்துட்டேன், போதாததுக்கு இந்த பிறவியிலும் இப்படி பாவத்தை சேர்த்து வெச்சிருக்கேனே” என சொல்லிச் சொல்லி தலையில் அடிக்க,

“அத்தை முதல்ல நிறுத்துங்க, இன்னும் எனக்கு தண்டனை காலம் முடியலை, இப்ப எதுக்கு என்னை வெளியே எடுத்து மன்னிப்பு எல்லாம் கேட்டு, அழுது புலம்பி… நீங்க என்னதான் நினைக்கறீங்க அத்தை?” என ஆயாசத்துடன் கேட்க,

“ஐயா… என்னை மன்னிச்சிடுய்யா. நீ என் புள்ளையை கொன்னிருப்பேன்னு நான் எப்படி நினைச்சேன்னு எனக்கு இன்னுமே புரியலை. உன்னை ஜெயிலுக்கு அனுப்பி, பூவரசி, தாராவை தனியா தவிக்க விட்டு, இத்தனை பாவத்தை பண்ணிட்டேனே… உன்கிட்ட மன்னிப்பு கேட்கும் தகுதி கூட எனக்கில்லை”

“நீங்க புலம்பி முடிச்சிட்டா வழியை விடுங்க அத்தை, நான் கிளம்பறேன்” என்றான் ஒட்டாத்தன்மையுடன்.

“என்னை மன்னிச்சு என்கூட வாய்யா. நம்ம குடும்பமே அடி மேல அடி வாங்கி மனசளவுல சிதைஞ்சு போயிருக்காங்க” என்று கையைப் பற்றிக்கொண்டு மன்றாடி கேட்டார்.

“எப்படி மனசாட்சியே இல்லாம என்னை உங்களால கூப்பிட முடியுது? என் மேல அப்படியொரு பழியைப் போட்ட உங்களுக்கு என்னை கூப்பிட உரிமை இருக்கா?” ஆதங்கத்துடன் ஏழுமலை கேட்க, அந்த கம்பீரமான பெண்மணி கலங்கி நின்றார்.

“மனசறிஞ்சு எதையும் செய்யலைய்யா. நீங்க சொத்து கேட்டு, அதை பிரிச்சு தந்த அப்பறம் இப்படியொரு விஷயம் நடந்தா, உங்களுக்கு சொத்து பத்தாம இப்படி கோபத்துல பண்ணிட்டீங்க போலன்னு நினைச்சுட்டேன்”

“உளறாதீங்க அத்தை, யார் சொத்தை யார் கேட்டாங்க? மாமாவே சொத்தை கொண்டு வந்து கொடுத்துட்டு என்னோட உறவை துண்டிச்சிட்டு போயிட்டாங்க. இதுல சொத்தை கேட்டேன்னு என் மேல பழி வேற” என்ற ஏழுமலையின் ஆதங்கத்தில் துளியும் பொய் இருப்பது போல தெரியவில்லை.

அழகாண்டாள் அவனது வார்த்தைகளில் திகைத்துப் போனார். “அப்ப பூவரசி பிரமா கிட்ட வந்து அப்பப்ப பணம் வாங்கிட்டு போனதும், சொத்து வேணும்ன்னு அடமா நின்னதும் உனக்கு தெரியாதாய்யா?” என்று அழகாண்டாள் அதிர்ச்சியோடு கேட்டதும், கேட்ட ஏழுமலைக்கு சுருக்கென ஒரு வலி.

என்ன நடந்தது என்னை சுற்றி என்று எண்ணுகையிலேயே தலை சுற்றியது. கைதாகி வந்த தன்னை தேடி வந்த பூவரசி, “உங்களோட இந்த நிலைக்கு நானும் ஒரு காரணம், என்னை மன்னிச்சிடுங்க” என அழுதது இப்பொழுது அசர்ப்பந்தமாக நினைவில் வந்தது.

“அத்தை பூவரசி… அப்படி கேட்டதே எனக்கு தெரியாது” என்று சொன்னபோது ஏழுமலையின் குரல் உடைந்து போயிருந்தது. அவனுக்கும் தெரியுமே அவர்களின் குடும்பம் நொடிந்தபோது அவனுடைய தாய்மாமா கண்ணபிரான் செய்த உதவிகளும், அதன்மூலம் அவர்கள் கௌரவமாக வாழ முடிந்ததும்!

“உனக்கு தெரியாதுன்னு எனக்கும் பிரமாவுக்கும் தெரியாதுய்யா, அதுதான் அவன் உன்னைவிட்டு விலகியிருந்தான்” என்றவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஏன் இப்படி குடும்பத்திற்குள் குழப்பம் வர வேண்டும், அதில் அவர்கள் இழந்தது கொஞ்சமா?

சில நொடிகள் மௌனம் அவர்களிடம்! “பிரமா மாமா கூட என்னை சொத்துக்கு ஆசைப்பட்டவன்னு நினைச்சிருப்பாங்க தானே? அதுதான் என்னைவிட்டு விலகியிருந்தாங்க” என ஏழுமலை ஆதங்கமும் வலியுமாகச் சொல்ல,

“பழசை பேச வேண்டாம்ய்யா. முடிஞ்சா என்னை மன்னிச்சுடு, வயசான காலத்துல இத்தனை பாவத்தையும் சுமந்துட்டு சாமிகிட்ட போக போற எனக்கு உன் மன்னிப்பாச்சும் கொஞ்சம் நிம்மதியைக் கொடுக்கும்” என்று மனம் உடைந்து பேசும் அத்தையை அதற்கு மேலும் நிராகரிக்கும் மனம் ஏழுமலையிடம் இல்லை.

தந்தையைப் பல ஆண்டுகள் கழித்துச் சந்திக்கும் தாராவின் நிலை என்னவாக இருக்கும்? உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகு அவள் என்ன முடிவெடுப்பாளாக இருக்கும்?