ஆளுக்கொரு பக்கம் சென்றவர்களை பார்த்து பெரு மூச்செறிந்த ருக்மணி இலக்கியாவின் அறைக்கு சென்றார்.
மித்ராவின் மனதை நோகடிக்கும் படி என்ன பேசினாய் என அவர் கேட்டதற்கு ஒன்றுமே பேசவில்லை என சாதித்தாள் இலக்கியா.
“கொஞ்ச நேரம் கழிச்சு மித்ரா வாயிலேருந்தே உண்மை வரப்போகுது. அப்ப சும்மா விட்ருவேன்னு நினைக்காத, ஒழுங்கா நீயே சொல்லு” என ருக்மணி எச்சரிக்கையாக சொல்லவும் அவள் பேசியதையே நல்ல எண்ணத்தில் பேசியதாக திரித்து கூறினாள்.
“அப்பா வீட்லேருந்து செய்றதுதானே முறை அத்தை? வைரம் வைடூரியம்னு கோடிக் கணக்குல சர்வா வாங்கி கொடுத்திருக்கார், இதெல்லாம் வாங்கினேன்னு உங்ககிட்ட கூட சொல்லிக்காம ரூம்க்கு போக போனா, அதான் வசதியான நாங்களே அத்தைகிட்ட எல்லாத்தையும் சொல்வோம், நீயும் சொல்லணும்னு சொல்லி கொடுத்தேன். அவ கோச்சுக்கிட்டு சண்டை போடுறா” என்றாள்.
“ஆமாமாம், நீ என்ன வாங்கினாலும் என்கிட்ட சொல்லிட்டுத்தான் மறுவேலை பார்க்கிற. ஆறு மாசம் முன்னாடி விசாகப்பட்டினத்துல பங்களா வாங்கி போட்டதையும் வெளிநாட்டு கம்பெனில உம்பேர்ல ஷேர்ஸ் வாங்கி வச்சிருக்கிறதையும் கூட என்கிட்ட சொல்லிட்டுதானே செஞ்ச நீ?” என ருக்மணி கேட்கவும் தீ சுட்டது போல அதிர்ந்து பார்த்தாள் இலக்கியா.
“எங்களுக்கு தெரியாம புருஷனை கைக்குள்ள போட்டுக்கிட்டு இதையெல்லாம் செஞ்சதா நினைப்பா உனக்கு? துரும்ப கிள்ளி போட்டா கூடபெத்தவங்களுக்கு தெரியாம எதையும் செய்ய மாட்டான் என் மகன். பசங்க அவங்கங்களுக்கு வர்றத அவங்க பொண்டாட்டி புள்ளைங்களுக்கு செய்றத தடுக்கிறது இல்லை நாங்க. நேத்ரன் மாதிரிதான் சர்வாவுக்கும், அவனுக்கு அவன் பொண்டாட்டிக்கு என்னவும் செய்ய உரிமை இருக்கு. நீயென்ன நாட்டாமை நடுவுல?” ருக்மணி காட்டமாக பேச பேச்சிழந்து நின்றாள் இலக்கியா.
“இனிமே வசதி வாய்ப்பு வச்சு மித்ராவை மட்டம் தட்டி பேசினியோ…” என்றவர் சிறு இடைவெளி கொடுத்து, “உன் அப்பாக்கு இருக்க சொத்துக்கு ஈடா மித்ரா பேருலேயும் சொத்துக்கள் எழுதி வைக்க சொல்லிடுவேன் உன் மாமனார்கிட்ட. அப்புறம் உன் அளவுக்கு… உன்னை விடவே பணக்காரி ஆகிடுவா அவ” என ருக்மணி சொல்லவும் ஆடிப்போய் விட்டாள் இலக்கியா.
“செய்ய மாட்டேன்னு மட்டும் பார்க்காத, இந்த வீட்ல என்னை கேள்வி கேட்க யாரும் இல்லை. செய்யவா?” என அவர் அதட்டலாக கேட்க, வேண்டாம் என மறுப்பாக தலையாட்டினாள் இலக்கியா.
“சொத்து தர்றேன்னு சொன்னாலும் எதுவும் வேணாம்னு உடனே சொல்ற பொண்ணு அவ. ஏற்கனவே நிறைய மனக் குழப்பம் பயம்னு அல்லாடிட்டு இருக்கிறவகிட்ட அனுசரணையா இருக்கணும்னு இல்லாம கண்டதையும் பேசி நோகடிப்பியா? ஒழுங்கா இரு” என்றவர், “இன்னிக்குள்ள அவகிட்ட ஸாரி கேட்கிற இல்லைனா…” மிரட்டல் விடுத்து விட்டு வெளியேறினார்.
பெரியம்மா மனம் வருந்தக் கூடுமே என அறையிலிருந்த சர்வா சங்கட பட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு அழைத்த ருக்மணி, “ஒழுங்கு மரியாதையா உன் பொண்டாட்டிய சமாதானம் பண்ணி அழைச்சிட்டு போ“ என கட்டளையாக சொன்னார்.
“கடைசி வரைக்கும் அவ பேசினது தப்புன்னு அவளுக்கு புரியவே இல்லை பெரியம்மா, நான் ஒரு தப்பு பண்ணினாலும் என்னால முடிஞ்ச வரை அவகிட்ட பண்ணிஞ்சுதான் போறேன், என்னை என்ன பேசினாலும் சகிச்சுக்க ரெடியா இருக்கேன், ஆனா உங்கள பேசுறத எல்லாம் பொறுத்துக்க முடியாது” என்றான்.
“உன் கூட உறவு சுமூகம் ஆனா எல்லாரோடவும் அனுசரிச்சு நடந்துப்பா அவ. நீ சரியில்லை, அதான் உன்னை சேர்ந்த யாரையும் புரிஞ்சுக்க முடியலை அவளால, அவ என்ன எனக்கு மரியாதை தர்றது, இதோ இப்ப நீயும்தான் என் பேச்சை கேட்க மாட்டேங்குற”
“போறேன் பெரியம்மா” சலிப்பாக சொல்லி அறையை விட்டு வந்தான்.
சர்வா கீழ் தளம் வந்த போது அவன் வருகிறானா என்பதை தெரிந்து கொள்ள ருக்மணியும் அங்குதான் காத்திருந்தார்.
அவன் மித்ராவுக்கு வாங்கிக் கொடுத்த விலை உயர்ந்த ஆபரணங்கள் எல்லாம் வரவேற்பறை சோஃபாவில் கேட்பார் இன்றி கிடந்தது.
“பொறுப்பே இல்லாம எப்படி போட்டுட்டு போயிருக்கா பாரு உன் பொண்டாட்டி!” என சொல்லிக் கொண்டே கையில் எடுத்தார் ருக்மணி.
“எம்மேல உள்ள கோவத்துல இங்க வச்சிட்டு போயிருப்பா பெரியம்மா, வீட்டுக்குள்ளதானே இருக்கு எல்லாம், யார் என்ன பண்ண போறாங்க?” என மனைவிக்கு வக்காலத்து வாங்கினான் சர்வா.
“ஹ்ம்ம்… நீ என்ன வேணும்னாலும் அவளை பேசலாம், நான் சொன்னா முட்டுக் கொடுத்து பேசுவ. நிஜத்தை சொல்லு, இந்த பெரியம்மா மேல மரியாதைன்னு சொல்லிக்கிறது எல்லாம் சும்மாதானே, நான் ஏதாவது அவளை திட்டிடுவேன்னு பயந்துகிட்டு நீ முந்திகிட்ட, அப்படித்தானே?” எனக் கேட்டார்.
அவரின் கன்னத்தில் இடித்தவன், “பெரியப்பா அரசியல் கூட்டத்துல பேசுறதுக்கு உரை தயார் பண்ணி தர்றது நீங்கதானே? கொஞ்சம் அசந்தா ஆப்போசிட் ஆள டெபாசிட் இல்லாம செஞ்சிடுவீங்க” என சொல்லி சிரித்தான்.
“இதே தோரணையோட அவகிட்ட போ, இந்த நகைங்க என்கிட்ட இருக்கட்டும், அவளையே வந்து வாங்கிக்க சொல்லு” என்றார்.
“உங்க மருமகளுக்கு எதுக்கு சிரமம், நானே வந்து வாங்கிக்கிறேன்” என்றான்.
இலக்கியா பேசியதை சொன்னவர், “அப்புறம் மித்ராவும் கோவப்படத்தானே செய்வா, இன்னும் இந்த வீட்ட பத்தி முழுசா தெரியலை, தெரிஞ்சுக்கிட்டா யாரும் சொல்லித் தராமலேயே எனக்குள்ள மரியாதைய அவளே தருவா. நீ சிபாரிசு பண்ணி அவ கொடுக்கிற மரியாதைக்கு ஆயுசு குறைவு. அப்புறம் இதை அவ கைலதான் தருவேன், சும்மா இல்லை காத திருகி கண்டிச்சிட்டுதான் தருவேன்” என்றார்.
“என் ரெண்டு காதையும் தர்றேன், பத்தாதுன்னா மூக்கு முழியை கூட சேர்த்து கிள்ளிக்கோங்க, அவளை விட்ருங்க” என அவனும் விளையாட்டாக சொல்லிக் கொண்டே வெளியே சென்றான்.
சதானந்தம் பெரியவர் தியானத்தில் இருந்தார். குடிலிலேயே ஒரு ஓரமாக அமர்ந்திருந்த மித்ரா கையில் ஏதோ துதிப் பாடலின் புத்தகத்தை வைத்துக்கொண்டு மனதிற்குள்ளாக படித்துக் கொண்டிருந்தாள். அழுத தடம் அவளது கண்களில் தெரிந்தது.
பூனை நடை போட்டு அவளருகில் சென்றவன், “தாத்தாவை டிஸ்டர்ப் பண்ண வேணாம், வா வெளில” என்றான்.
பெரியவருக்கு தொந்தரவு ஆகிவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவளும் அடம் செய்யாமல் வெளியே வந்தாள்.
பெரியம்மாவின் அருமையை எடுத்து சொல்லி, “அண்ணி என்ன பேசினாலும் பதில் கொடுக்கிறது தப்பில்ல, பெரியம்மாவை எடுத்தெறிஞ்சு பேசினா எனக்கு கோவம் வராதா? ஸாரி கேட்க சொல்லியும் கேட்காம என்னையும் இன்சல்ட் பண்ணிட்ட” என்றான்.
அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. “சரி, நீ ஸாரிலாம் கேட்க வேணாம், போக போக நீயே அவங்கள பத்தி புரிஞ்சுப்ப. நாந்தான் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன், ஸாரி” என்றான்.
மூக்கை உறிந்து கொண்டே வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். அவள் கையை எடுத்து தன் கன்னத்தில் அடிக்க வைத்தான். முதல் இரண்டு முறை கையை பின்னோக்கி இழுக்க பார்த்தவள் மூன்றாவது முறை நன்றாக அடித்து விட்டாள்.
“ப்பா!” கன்னத்தை தாங்கிக் கொண்டு சொன்னவன், “சண்டை சரியா போச்சு, வா போலாம்” என சொல்லி அவளை அழைத்தான்.
இலக்கியா பேசியதை சொல்லி, “அவங்க சரி நாந்தான் தப்பு இல்ல?” எனக் கேட்டாள்.
அண்ணியின் நடத்தையில் கோவம் கொண்டவன், “அவங்கள பொறுத்து போன்னு எல்லாம் நான் சொல்லவே மாட்டேன். அண்ணங்கிட்ட சொல்லி கண்டிக்க சொல்றேன், உனக்கு தெரியாது… இந்நேரம் பெரியம்மாவும் அண்ணிக்கு நல்லா டோஸ் கொடுத்திருப்பாங்க” என்றான்.
தன் பெரியம்மா கொடுத்த அறிவுரையை மனதில் நிறுத்தி நிதானத்தை கடைப் பிடித்தவன், “யாரை பத்தியும் நான் எதுவும் சொல்லலை. மூஞ்செல்லாம் எப்படி இருக்கு பாரு! இப்ப ரூம் வா, ரெஃப்ரெஷ் ஆகு” என்றான்.
வர மாட்டேன் என இன்னுமே அவள் வீம்பு பாராட்ட, அவளை தூக்க முனைந்தான். அதில் பயந்து போனவள் அவனுடன் வர ஒப்புக் கொண்டாள்.
நகைகளை வாங்கி வா என மனைவியை பெரியம்மாவின் அறைக்கு அனுப்பி வைக்காமல் நேராக அவர்களின் அறைக்கே அவளை அழைத்து சென்று விட்டான்.
இரவு உணவின் போது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அமர்ந்திருந்தனர். இலக்கியாவுக்கு கண் காட்டினார் ருக்மணி. மனமே இல்லாமல் அனைவர் முன்னிலையிலும், “ஸாரி மித்ரா!” என்றாள் இலக்கியா.
‘என்ன, எதற்கு இந்த மன்னிப்பு?’ என நேத்ரனும் நம்பியும் ஒரே சமயத்தில் கேட்டனர்.
“பொம்பளைங்களுக்குள்ள ஆயிரத்தெட்டு விஷயம் இருக்கும். எல்லாம் உங்களுக்கு தெரியணும்னு இல்லை” என ருக்மணி சொல்ல, அடுத்து யாரும் அது பற்றி வாய் திறப்பார்களா என்ன?
சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், “ஸாரி அத்தை!” என பெரிய மாமியாரை பார்த்து சொன்னாள் மித்ரா. இலக்கியாவை போல கடமையாக அல்லாமல் மனமுவந்து மன்னிப்பு கேட்டாள்.
“இதையும் என்னன்னு கேட்டுக்க கூடாது நாங்க, அப்படித்தானே?” கிண்டலாக கேட்டார் நம்பி.
“தாராளமா தெரிஞ்சுக்கலாம்” என்ற ருக்மணி, “அவ புருஷன் பேச்சை கேட்டு நடக்க மாட்டேங்குறான்னு திட்டினேன். நீங்க மட்டும் மாமா பேச்சை கேட்டா நடக்குறீங்கன்னு பட்டுன்னு என்னைப் பார்த்தே கேட்டுட்டா. அதுக்குத்தான் இப்ப ஸாரி கேட்கிறா” என்றார்.
“சரியாத்தானேமா கேட்ருக்க நீ? கேட்ட ஸாரிய உடனே வாபஸ் வாங்கிக்க மா” என்றார் நம்பி.
“இங்க யாரும் ஹஸ்பண்ட் பேச்சை கேட்டு நடக்கிறதே இல்லை அண்ணி. குடும்ப பழக்க வழக்கத்தை வந்த உடனே ஃபாலோ பண்ற உங்களை பாராட்டாம, அதை கண்டிச்ச பெரியம்மா மேலதான் மிஸ்டேக்” என்றான் அனிருத்.
“ஆமாம் அதை நான் வழி மொழிகிறேன். உன்னை பாராட்டவும் செய்றேன் மித்ரா” என்றான் சுரேந்தர்.
“நானும் உங்களை மாதிரியேதான் இவ பேச்சை மீறி நடக்கிறது இல்லை, என்னையும் பாராட்டலாம் அண்ணா” என்றான் சர்வா.
அங்கே மெல்லிய சிரிப்பலை எழ, இலக்கியா மட்டும் மித்ராவை எரிச்சலோடு பார்த்தாள்.
அறைக்கு வந்த பின், மனைவியை கை வளைவுக்குள் பிடித்து வைத்துக் கொண்ட சர்வா, “என்னவாம் குறை எம்பொண்டாட்டிக்கு, என்ன அவ பேச்சை நான் கேட்க மாட்டேங்கிறேனாம்?” என குழைந்தான் சர்வா.
“அப்படி என்ன என் பேச்சை கேட்டீங்களாம்?” என எதிர்கேள்வி கேட்டாள் மித்ரா.
“இப்படி சொல்லாத, அப்புறம் நிஜமாவே உன் பேச்சை கேட்க மாட்டேன்” என்றான்.
“கேட்காதீங்க” என அலட்சியமாக சொன்னவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“விடுங்க” என அவள் சொல்ல, “நான்தான் உன் பேச்சை கேட்க மாட்டேனே?” என வம்பாக சொன்னான்.
அவள் பாவமாக பார்த்தாள். அவளது முகத்தை மட்டும் தன் மார்பிலிருந்து பிரித்து எடுத்தவன் இதழ்களை ஆசையாக பார்த்துக் கொண்டே நெருங்கினான்.
“வேணாம்…” என மெல்லிய குரலில் சொன்னவள், தான் சொல்வதற்கு எதிராகத்தான் செயல்படுவான் என நினைத்து “சரி சரி கிஸ்தானே கொடுத்துக்கோங்க” என்றாள்.
சிறு கிண்டல் சிரிப்போடு முத்தமிட்டு விலகியவன் மூச்சிரைக்க நின்றிருந்தவளை பார்த்து, “நானும் பொண்டாட்டி பேச்சை கேட்கிறவன்தான்னு ஒத்துக்கிறியா இப்போ?” எனக் கேட்டான்.
பொய்யாக அவனை முறைத்து விலக முற்பட்டாள். விடாதவன், “இன்னொன்னு?” எனக் கேட்டான்.
அவள் மறுப்பாக தலையசைக்க, “நாந்தான் உன் பேச்சை கேட்க மாட்டேனே?” என சொல்லி அவள் முகத்தை நெருங்கினான்.
புதுவித உணர்வை சமாளிக்க முடியாமல் திணறலும் வெட்கமுமாக அவள் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
“இந்த விஷயத்துல என் விருப்ப படி நீ சொன்னா பொண்டாட்டி பேச்சை கேட்கிறவன் நான், இல்லைனா பொண்டாட்டி பேச்சை கேட்காதவன் நான். நான் எப்படி இருக்கணும்னு நீதான் முடிவு பண்ணனும்” அடக்கிய சிரிப்போடு சொன்னவனின் மார்பில் குத்தி பின் அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள் மித்ரா.