அவள் மனமிறங்காமல் போக எழுந்து போய் பால்கனியில் நின்று கொண்டான். அரை மணி நேரமாகியும் அவன் வராமல் போகவும்தான் லேசாக கோவத்தை தணித்தவள் அவனிடம் சென்றாள்.
“வந்து படுங்க” என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினான்.
“தூங்காம இங்க வந்து நின்னா ஆச்சா? வாங்க, தூங்குங்க” என்றாள்.
“இவ்ளோ மோசமாவா சொதப்புறதுன்னு என்னை நானே அனலைஸ் பண்ணிட்டு இருந்தேன் மித்ரா. எம்மேல என்ன தப்புன்னாலும் உடனே சொல்லிடு, சரி பண்ணிக்கிறேன்” என்றான்.
அவன் சொன்னதை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் உறங்க வர சொன்னாள்.
“உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்னு திரும்பவும் கில்ட் ஃபீல் மித்ரா”
“ம்ம்… இந்த ஃபீல் இருக்க வேண்டியதுதான்” என்றாள்.
அவன் பாவமாக பார்த்தான். “வர்றீங்களா இல்லயா இப்போ?” என அதட்டினாள். அதன் பின்னர்தான் படுக்க சென்றான்.
அடுத்த நாள் பழைய விஷயத்தை கிளறாமல் புன்னகை முகமாக காலை வணக்கம் சொல்லி இனிமையாகவே ஆரம்பித்தான் சர்வா.
ஒரு அறைக்குள் இருக்கையில் மித்ராவாலும் பாராமுகம் காட்ட முடியவில்லை. அவளும் இயல்பாக இருக்க முற்பட்டாள்.
மாலையில் விரைவாகவே வீடு வந்து மனைவியுடன் நேரத்தை செலவிட்டான் சர்வா. இரண்டு நாட்களில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிணக்கு வேறு எந்த பேச்சுவார்த்தையும் விளக்கமும் இன்றி தானாகவே சரியாகி விட்டது.
ருக்மணிதான் வரவேற்புக்கு அணிந்து கொள்ள ஆடை, அணிகலன்கள் எல்லாம் உங்கள் விருப்பப் படி வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியிருந்தார். சர்வாவும் மித்ராவின் விருப்பத்தை கேட்க, அவள் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை.
திருமணத்தின் போது ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துதான் தேர்வு செய்தாள், அதன் பின்னர் அவளுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவாக இந்த வரவேற்பை அவளால் ரசிக்க முடியவில்லை. ஊருக்கு பறைசாற்ற ஏதோ விழா, என்ன தேர்வு செய்வது, கொடுப்பதை போட்டுக் கொண்டு பொம்மை போல நின்றால் ஆகிற்று என்பதாக இருந்தது அவளின் எண்ணம்.
அதையே தன் கணவனிடமும் சொன்னாள்.
“உனக்கு எப்படியோ, கல்யாணத்தப்பா உங்கிட்ட நான் யாருன்னு சொல்லாத விஷயம் ரொம்ப உறுத்தலா இருந்தது, இப்ப அந்த உறுத்தல் இல்லாம நமக்குன்னு ஒரு ஃபங்ஷன் நடக்க போகுது. கிராண்ட்டா ஏற்பாடு செய்றார் பெரியப்பா. இப்படி பட்டும் படாமலும் பேசாத” என்றான்.
“நீங்களே வாங்குங்க, என்ன கொடுக்குறீங்களோ மறுக்காம போட்டுக்கிறேன். ஷாப்பிங் செய்ய சுத்தமா இன்ட்ரெஸ்ட் இல்ல” என தீர்மானமாக சொன்னாள்.
“இனியொரு முறை நமக்கு ரிஸப்ஷன் நடக்க போறதில்லை மித்ரா. ஆடம்பரமா கூட வேணாம், சிம்பிலாவாவது எல்லாமே வாங்கிக்கலாம், ஆனா எல்லாமே உன் சாய்ஸாதான் இருக்கணும், ப்ளீஸ்…” என கெஞ்சலாக கேட்டான் சர்வா.
மித்ராவும் அரை மனதோடுதான் அவனோடு புறப்பட்டு சென்றாள்.
ஆடை வடிவமைப்பாளரிடம்தான் முதலில் அழைத்து சென்றான். அசுவாரஷ்யமாக சென்றவளுக்கு போக போக சுவாரஷ்யம் பிறந்தது. ஆனால் ஏதோ ஒப்புக்கு வந்தது போல வந்து விட்டு இப்போது அபிப்ராயங்களை வெளிப்படையாக எப்படி சொல்வது என அவளுக்கு ஒரே வெட்கமாக இருந்தது.
மித்ரா வாய் திறக்க வேண்டிய அவசியத்தையே தரவில்லை சர்வா. அவளது கண் பார்வை முக பாவனைகள் வைத்து அவனே எந்த மாதிரி வேண்டும் என்பதை அவளின் மனதை படித்தது போல வடிவமைப்பாளரிடம் சொன்னான். உள்ளுக்குள் அவளுக்கு மிகுந்த திருப்தி.
இருப்பினும் அவனிடம் வம்பு செய்ய சொல்லி தூண்டியது அவளின் உள்மனம்.
“எல்லாமே நீங்களே சொல்ல நான் எதுக்கு? அதுக்குத்தான் நான் வரமாட்டேன்னு சொன்னேன்” என்றாள்.
இடுப்பில் கை வைத்து அவன் முறைக்க, பொய்யான கோவத்தை தூக்கிப் பிடிக்க இயலாமல் சிரித்து விட்டாள்.
“புருஷன் எது செஞ்சாலும் அத தப்புன்னு சொல்லாத போனா பொண்டாட்டிங்களுக்கு அந்த நாள் நல்லபடியா முடிஞ்ச மாதிரியே இருக்காதோ?” என கிண்டலாக கேட்டுக் கொண்டே நடந்தான்.
“என் ஒரு புருஷனுக்கு எத்தனை பொண்டாட்டிங்களாம்?” மீண்டும் பொய்க் கோவத்தோடு கேட்டாள்.
அவளை பார்க்க திரும்பியவன் பொது இடம் என்றும் பாராது இரு கைகளையும் குவித்து பெரிய கும்பிடாக போட்டு, “நான் என்ன பேசணும் எந்த திசை பார்க்கணும் எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு கைல கொடுத்திடு, ஃபாலோ பண்ணிக்கிறேன். நிஜமா முடியலை!” என்றான்.
அவசரமாக அவனது கையை இறக்கி விட்டவள், “ச்சீ… எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க, என்னவோ நான் கொடுமைக்காரி மாதிரி ப்ரஜெக்ட் பண்ணாதீங்க” என்றாள்.
“வேணும்னா என் பொண்டாட்டி கடைஞ்செடுத்த பதிவுசுன்னு சத்தமா சொல்லிடவா?”
“ஒண்ணும் வேணாம்” என முகத்தை சின்னதாக்கிக் கொண்டு சொன்னாள்.
“நீ வீட்லேயே இருந்திருந்தா உன் கண்ணை பார்த்து என்னால படிச்சிருக்க முடியாதே, இனியும் போற இடத்துல வாயே தொறக்காத நீ, ஆனா கூட இரு” என மலர்ந்த முகத்தோடு அவன் சொல்ல, சட்டென பரவிய இனிமையை அனுபவித்துக் கொண்டே அவனுடன் சேர்ந்து நடந்தாள்.
அதற்கடுத்து கணவனோடு கலந்து பேசி அவளுக்கு பிடித்தவைகளாக வாங்கிக் கொண்டாள். கணக்கே பார்க்காமல் செலவு செய்தான் சர்வா.
அவர்கள் வீடு வந்து சேர்ந்த போது இலக்கியா அவளது கணவனோடு வந்திருந்தாள். வரவேற்பு முடியும் வரை இங்குதான் இருக்க போகிறார்களாம்.
அண்ணன் அண்ணியிடம் பேசிவிட்டு அம்மாவின் அறைக்கு சென்று விட்டான் சர்வா.
அவர்களை “வாங்க” என கடமையாக அழைத்து விட்டு அறைக்கு செல்ல நடந்தாள் மித்ரா.
‘அதென்ன வெறும் வாங்க? அக்கான்னு மரியாதையா சொல்ல மாட்டாளாமா?’ உள்ளுக்குள் கொந்தளித்த இலக்கியா, வம்படியாக மித்ராவை பிடித்து வைத்துக்கொண்டு எங்கு போனாய் என்ன வாங்கினாய் என விஷயத்தை கறக்க ஆரம்பித்தாள்.
பெண்கள் பேசிக் கொள்ளட்டும் என நேத்ரனும் அகன்று விட்டான்.
மித்ராவும் ஒளிவு மறைவில்லாமல் எல்லாவற்றையும் இலக்கியாவிடம் சொன்னாள். தனது திருமணம் எந்தளவு ஆடம்பரமாக நடந்தது, எப்படி தன் தந்தை பணத்தை வாரி இறைத்து அனைத்தையும் செய்தார் என தன் பிறந்த வீட்டு பெருமையை பறைசாற்றினாள் இலக்கியா.
அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, “என்னோட மேரேஜ், அப்புறம் பிரகல்யாக்கா மேரேஜ் வீடியோஸ் இங்கதான் இருக்கும், அதைப் பாரு. கிராண்ட் வெடிங்னா என்ன அர்த்தம்னு புரியும் உனக்கு. பாவம் உன்னையும் எங்க கூட மேட்ச் பண்ணனும்னு ரொம்ப போராடுறார் போல சர்வா” என நக்கலாக சொன்னாள்.
“எனக்கு எம்புருஷன் செலவு பண்றார், உங்களுக்கென்ன வந்தது? உங்களுக்கு உங்க ஹஸ்பண்ட் செய்யலைன்னு என்னை பார்த்து பொறாமையோ? அப்புறம் உங்க கூட என்னை மேட்ச் பண்ண அவர் ட்ரை பண்றதா சொல்றதுதான் ஹைலைட் காமெடி!” என பதில் கொடுத்தாள் மித்ரா.
“இல்லயா பின்ன? எனக்கு எங்கப்பா செஞ்சதுல நூத்துல ஒரு பங்கு உன் அப்பாவால செய்ய முடியுமா? அதான் உன் புருஷனுக்கு செய்யணும்னு தலையெழுத்து! என் புருஷன் தலைல நல்ல எழுத்து எழுதியிருக்கு” என்றாள் இலக்கியா.
“ரொம்ப சந்தோஷம்! உங்க ஃபேமிலில உள்ளவங்க தலையெழுத்து எல்லாத்தையும் பூதக் கண்ணாடி வச்சு படிச்சிட்டு இருங்க, எனக்கு வேற முக்கியமான வேலை இருக்கு” என மித்ரா சொல்லிக் கொண்டிருக்கையில் ருக்மணி வந்து விட்டார்.
“எதையும் விசாரிக்காம என்னை தப்பு சொல்லாதீங்க அத்தை” என்றாள் மித்ரா.
“அதை விசாரிக்கத்தான் போறேன், அவ பேசினா வாயை மூடிகிட்டு கேளுன்னும் நான் சொல்லலை. ஆனா பிரிவினை வர்ற மாதிரி பேசாத” என கண்டிப்போடு சொன்னார் ருக்மணி.
ஏற்கனவே இலக்கியா பேசியதில் எரிச்சலில் இருந்தவளுக்கு ருக்மணி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருடைய மருமகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை உதாசீனப் படுத்துகிறாரோ எனதான் நினைக்க தோன்றியது.
“உங்களுக்குள்ள ஒத்துமை இல்லைனா குடும்பம் உடைஞ்சுதான் போகும். இனிமே இப்படி சொல்லாத” என்ற ருக்மணி அடுத்து இலக்கியாவை வைத்து வாங்க வாய் திறப்பதற்குள், “என் மாமியாரே என்னை எதுவும் சொல்றது இல்லை. நீங்களும் உங்க மருமகளை மட்டும் பாருங்க” வெடுக் என சொல்லி விட்டாள் மித்ரா.
தவறான சமயத்தில் அங்கு வந்த சர்வா, “மித்ரா!” என அதட்டல் போட்டான்.
கணவன் தன் பக்கம் பேசுவான் என்ற நினைவோடு அவனை நெருங்கிய மித்ரா, “உங்க பெரியம்மா என்ன நடந்துச்சுன்னு ஒரு வார்த்தை கேட்டுக்காம என்னை குத்தம் சொல்றாங்க. உங்கம்மா சொன்னா மட்டும்தான் நான் கேட்பேன், இவங்க சொல்றத கேட்கணும்னு எனக்கு அவசியம் இல்லைனு சொல்லுங்க” என்றாள்.
“பார்த்தீங்களா அத்தை, உங்களுக்கு இவ தர்ற மரியாதையை?” எடுத்துக் கொடுத்தாள் இலக்கியா, “புதுசா பணத்தை கண்டவளுக்கு வர்ற திமிரை பாரு” என்றாள். இரண்டாவதாக அவள் சொன்னது அவள் பக்கத்தில் நின்றிருந்த மித்ராவுக்கு மட்டுமே கேட்டது. ஏதோ சீண்டலாக சொல்கிறாள் என ருக்மணி புரிந்து கொண்டார், ஆனால் சர்வாவின் கவனத்தில் இது பதியவே இல்லை.
“அவங்கள வாய மூட சொல்லுங்க, இவ அவன்னு பேசினா அப்படியே திரும்ப பேச எனக்கும் டைம் ஆகாது” கண்களில் துளிர்த்து விட்ட கண்ணீரோடு சொன்னாள் மித்ரா.
மித்ராவின் உணர்ச்சி பெருக்கான நிலையை புரிந்து கொண்ட ருக்மணி நிலைமை இன்னும் மோசமாகி விடக்கூடாது என கருதி, “அவளை ரூம்க்கு அழைச்சிட்டு போ சர்வா” என்றார்.
“ஏன் நான் போகணும்? உங்க மருமகளை காப்பாத்த பாக்குறீங்களா? அவங்க என்ன பேசினாங்கன்னு என் ஹஸ்பண்ட் தெரிஞ்சுக்க கூடாதுன்னு எங்களை போக சொல்றீங்களா?” எனக் கேட்டாள் மித்ரா.
சர்வா மனைவியை கண்டனமாக பார்த்தான்.
“இவ என்ன பேசினான்னு நான் கேட்டுக்கிறேன் மித்ரா, நீ ரிலாக்ஸ் ஆகிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வா, உன் வாயலேயே என்ன சொன்னான்னு சொல்லு, நான் பேசிக்கிறேன் இவகிட்ட” என அப்போதும் நிதானத்தை கை விடாமல் சொன்னார் ருக்மணி.
கடந்தமுறை இலக்கியா பேசியதற்கு ருக்மணி திருப்பி தந்ததோ அவர்தான் மித்ராவிடம் சொல்லிக் கொண்டு போ என இலக்கியாவை மித்ராவிடம் அனுப்பி வைத்தார் என்பதோ மித்ராவுக்கு தெரியாதே. ஆகவே அவளின் பார்வையில் அவர் ஓரவஞ்சனையாக நடப்பதாகவே பட்டது.
“ஆமாம் நீங்க நல்லா கேட்டுப்பீங்க அவங்களும் உள்ளதை உள்ளபடி சொல்லிடுவாங்க. இதை நம்புறதுக்கு என்னை பார்த்தா முட்டாள் மாதிரி தெரியுதா? நீங்க உங்க வேலைய பாருங்க, இவங்ககிட்ட நானே பேசிக்கிறேன்” எனக் கோவப்பட்டாள் மித்ரா.
“ஏய்! வீட்டு பெரியவங்ககிட்ட எப்படி பேசுறதுன்னு தெரியாது உனக்கு? ஒழுங்கா பெரியம்மாகிட்ட ஸாரி கேளு!” என சத்தம் போட்டான் சர்வா.
“இவளுக்காக நான் ஸாரி கேட்டுக்கிறேன் பெரியம்மா” என்றவன் மனைவியை கோவமும் அதிருப்தியும் கலந்த பார்வை பார்த்து விட்டு சென்றான். மித்ராவுக்கும் அங்கிருக்க பிடிக்கவில்லை, அதே சமயம் அறைக்கு கணவன் செல்வதால் அங்கு செல்லவும் பிடிக்கவில்லை.
சதானந்தம் பெரியவரின் குடிலுக்கு செல்லலாம் என நினைத்து வெளியில் சென்று விட்டாள்.