சுபி, விடியற்காலையில் எழுந்து தன் வீடு சென்றுவிட்டாள்.. மழை நீடித்தது. ஆனால், காற்று இல்லை. விசாகன் குருவோடு உறங்கிக் கொண்டிருந்தான்.
கருணாவிற்கு, நீண்டநாட்கள் சென்று உறக்கம். அவனால் மதியம் வரை எழவே முடியவில்லை. இரவில் கண்விழிப்பது அவனுக்கு புதிததல்ல.. இந்த உறக்கம்தான் புதிது.
மதியத்திற்கு மேல்தான் எழுந்து கீழே வந்தான், மனதெல்லாம் அவளே. கண்கள், காலம்காலமாக தேடுவது போல.. அவளை தேடியது தன் வீட்டில். தன் மனதை நிலைபடுத்திக் கொண்டான்.. ‘இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன்’ என அவனின் மனமே அவனை அடக்கியது.
பிரகாஷ் “என்ன மச்சான்.. அவனவன் தூக்கம் வராம எப்போடா மழை ஓயும் தண்ணி.. வடியும்ன்னு காத்திருக்கான்.. அங்கே உன் ரெசார்ட் என்னா ஆச்சோன்னு கூட கவலையே இல்லாமல் எப்படி தூங்குற நீ” என்றார்.
கருணா “மழைதானே பிரகாஷ் பார்த்துக்கலாம் இதென்ன நமக்கு புதுசா..” என்றவன் “சாப்பிடலாமா..” என்றான்.
பிரகாஷ் “நான் இப்போதான் காலை உணவே சாப்பிட்டேன். நீ சாப்பிடு” என்றான்.
சாரதா “அண்ணா.. லஞ்ச் ரெடி சாப்பிடு வா” என்றாள்.
சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.. மழை விட்டது. பிரகாஷ் “கிளம்பலாம் சாரதா..” என்றான்.
பிரகாஷ் சாரதா இருவரும் பிள்ளைகளோடு கிளம்பினார்.
கருணா, மகனின் அருகில் அமர்ந்தான். குரு விளையாடிக் கொண்டிருந்தவன் தீபுவும் அஸ்வினும் கிளம்பியதில் உர் என அமர்ந்திருந்தான்.
கருணா “குரு வந்திருக்கான்.. அங்கேயே விளையாடுங்க” என பேச்சினை முடித்துக் கொண்டு போனினை வைத்தான்.
விசாகன் ஆசையாக கதவை திறந்தான்.. நண்பனோடு விளையாடும் எண்ணத்தோடு.
கருணாவிற்குதான் ஏமாற்றம்.. என்னமோ சுபி நெருங்கி நிற்பதாக எண்ணம்.. குழப்பமும்தான்.. அத்தோடு, ஒருமாதிரி அவனால் கணிக்க முடியாத ஒரு நிலை.. அவளை நோக்கி மனம் செல்லுகிறது.. தடுக்க வேண்டும் என்றாலும்.. முடியவில்லை. என் வயதுக்கும் என் நிலைக்கும்.. அவள் நிலைக்கும் இதென்ன.. உணர்வு என கொஞ்சம் வெட்கமாக கூட இருக்கிறது. ஆனால், இதுதான் தன்னிலை என உணர்ந்தான்.
மீண்டும் இரவில்தான் மழை.. அதிகமில்லை. சுபியை விசாலாட்சி போன் செய்து விசாரித்துக் கொண்டார் ஒன்றும் பயமில்லை.. என பொதுவாக சொன்னார்.
கருணாவிற்கு அவளின் நினைவுகள் தேவையாக இருந்தது.. ஆனால், கனவுகாணவும் சங்கடம்.. சும்மா உட்கார்ந்தால் ஏதாவது நினைவு வரும் என எண்ணிக் கொண்டே பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு ரெசார்ட் கிளம்பினான். அருணகிரி “நாளை பாரு டா” என்றாலும் கேட்கவில்லை. கிளம்பிவிட்டான்.
கருணா, மழை விடவும் கார் எடுத்து வந்து கொடுத்து சுபியின் முகம் பார்த்தான்.. அலட்டிக் கொண்டு புன்னகைத்து.. நன்றி என்கவில்லை. தேங்க்ஸ் என்றாள், இயல்பாக. குழப்பத்தில் இருந்தவனுக்கு அந்த முகம் எதோ ஆறுதலாக இருந்தது.. அத்தோடு ஈர்த்தது.
கருணா, தன்னை மிகவும் சுபியிடமிருந்து காத்துக் கொண்டான். அவளை பற்றி எண்ணுவதை நிறுத்திக் கொள்ள எண்ணினான். அதிகமாக ரெசார்ட்டில் தங்கிக் கொண்டான்.
ஆனால், அதெல்ல்லாம் பொய்யானது.. சிலபல நாட்களில். அடிக்கடி வீடு வரும் போது.. போகும் போது.. சுபியின் மேல் அவனின் பார்வை விழுந்தது. சிலபலநாட்கள் அவளை எதேட்சையாக சந்திப்பது போல.. பார்த்தும் இருக்கிறான், ஆங்காங்கே. அழைத்து பேச ஒரு தயக்கம்.. ஆனால், அவளை பார்ப்பது பிடிக்கிறது. எவ்வளவு தைரியம். எல்லா இடத்திற்கும் தனியே.. எல்லோரிடமும் ஒரு புன்னகை.. எந்த நிலையிலும், இப்படி நிற்காமல் ஒடுபவளை கொஞ்சம் அருகில் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என ஒரு காதல்.. அவனுள். இது அனுதாபமோ கருணையோ தானே என அவனுக்கே தோன்றும்.. அப்படியே இருந்தாலும்.. அவளை.. அவளை.. தோழியாக மட்டும் பார்க்க முடியவில்லையே என தனக்குள் சொல்லிக் கொள்வான். எப்போதும் போல.. அவனுக்கு.. இந்த வாழ்கையை திட்டமிட தெரியவில்லை.
ஒருநாள்.. அவள் ஒரு ஹோட்டலில் மதிய உணவு உண்டுக் கொண்டிருக்க.. அவளின் தோழியோடு பார்த்தான். குரு விசாகன், விடுமுறையில் மாலையில் விளையாடும் போது.. அவள் வரும் நேரம் அறிந்து, வெளியே வந்து நின்றுக் கொண்டு பார்த்தான்.. இப்படியே அவளை எங்கேனும் பார்த்தான்.
இன்று சுபி எங்கு செல்லுகிறாள் என எண்ணிக் கொண்டே, அவளை.. இன்று, அந்த மருத்துவமணைக்கு சென்று பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டே கிளம்பினான் காலையில்.
காலையில் இன்று நேரமாக கிளம்பிவிட்டான். கருணா, காபி குடித்துக் கொண்டிருக்க.. வேலை செய்யும் ரத்ன்னா க்கா.. தன் அன்னையிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.. “சுபிட்சா, இன்னிக்கு சீக்கிரமாகவே கிளம்புதும்மா. இன்னிக்கு வேலைக்கு என் கொளுந்தியாவை வேண்டாம்ன்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம். அவங்க கூட ஒருபையன் வருதில்ல.. அதுதான் சுபியை கட்டிக்க போறவராம்” என பேசுவது கேட்டது.
கருணாவிற்கு எல்லாம் ப்ளாங்க். ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் எழுந்து சென்றான்.
ரத்தனா அக்கா சொன்னது போல, சுபியின் கார் எதிரில் இல்லை. அதை கவனித்துக் கொண்டே ‘உண்மையோ..’ என எண்ணிக் கொண்டே கிளம்பினான் அவசரமாக.
இன்று லக்ஷ்மிகாந்தனின் பிறந்தநாள். மாமனார் வந்திருந்தார்.. வீராதான் கூட்டி வந்திருந்தான். நால்வரும் கோவிலுக்கு வந்திருந்தனர், அதிகாலையிலேயே. அதனால்தான் அவளின் கார் அங்கே இல்லை.
அன்று முழுவதும் சுபி வேலைக்கு செல்லவில்லை.. ஸ்ரீக்கு தெரியும், ஆனால், வீராவின் விஷயத்தில் தந்தை எச்சரித்திருந்தார் அதனால் ஏதும் பேசவில்லை. அவருக்கு என்னமோ மனது உறுத்திக் கொண்டே இருந்தது. அதனால், வீராவை எப்படியும் சுபியோடு சேர்த்து வைத்திடும் எண்ணத்தில் இப்போதெல்லாம் உறுதியாகினார்.
சுபிக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.. மாமனாரை எந்த வகையிலும் சமாதாப்படுத்தவோ.. வீராவின் விஷயத்தை யோசிக்கவோ அவளுக்கு முடியவில்லை. அதனால், நடப்பது நடக்கட்டும் என விட்டுவிட்டாள்.
விசாகன் பெயரில் அர்ச்சனை. சற்று நேரம் அமர்ந்திருந்தாள். ஆண்கள் மூவரும் பிரகாரம் சுற்றி வந்தனர். காலை நேரம், கோவிலில் கூட்டம் அதிகமில்லை. அமைதியாக இல்லை மனது.. அவளுக்கு மட்டும். கோவில் அவளுக்கு அமைதியை தந்ததில்லை.. என்னமோ, கடவுளை பிடிப்பதில்லை இப்போதெல்லாம்.
வீரா எந்தவிதத்திலும் தொல்லை செய்யவில்லை சுபியை. ஆனால், ஒரு இடத்தில் அமர்ந்து அவள் என்ன செய்கிறாள் என பார்த்துக் கொண்டே இருந்தான்.
சுபி இன்று எங்கும் செல்லவில்லை.. சமையல் சாப்பாடு.. கணவனின் எண்ணம் என இருந்தாள். விசாகன் வீடு வந்ததும் மாலையில்தான் கிளினிக் சென்றாள்.
சுபியின் மாமனார், நான்கு நாட்கள் இருந்துவிட்டுத்தான் கிளம்பினார். வீர விட்டு சென்றுவிட்டு.. மீண்டும் வந்து அழைத்து சென்றான்.
சங்கீதாவின் குழந்தைபேறு இனிதாக முடிந்தது. பெண் குழந்தை.. வீட்டில் ஆர்பாட்டம்தான், சுபிதான் தினமும் போன் செய்து பேசுவாள். விசாகனுக்கு பள்ளி விட்டு வந்ததும் அழைத்து குட்டி பாப்பாவை பார்ப்பதுதான் வேலை.
இன்னும் ஒரு மாதத்தில் சங்கீதா விடுமுறையில் இந்தியா வருவது உறுதியானது.
இயல்பாக கடந்தது நாட்கள்..
சுபிக்கு, என்னமோ கருணாவின் ஞாபகம் இந்த நாட்களில். எங்கே அவனை காணவில்லை.. என. எப்படியும் வாரம் ஒருமுறை இயல்பாக போனில் நேரில் பேசிடுவோம்.. என்ன காணோம் என எண்ணிக் கொண்டேயிருந்தாள். இன்னமும் சங்கீதாவின் குழந்தை பற்றி தான் சொல்லவேயில்லை என உணர்ந்து அன்று அழைத்தாள்.. கருணாவிற்கு.
கருணா அலுவலக அறையில் இருந்தான். சுபி என்ற அழைப்பினை பார்க்க.. சின்ன சந்தோஷம். தன்னோடு கட்டுகளை மீறி.. ஒரு ஆனந்தம் வந்துவிட்டிருந்தது.. அது குரலில் தெரிய “ஹலோ சுபி சாப்” என்றான், துள்ளலோடு.
சுபிக்கு சட்டென இதை கேட்கவும் சிரிப்பு.. சத்தமான புன்னகை.. கள்ளமில்லாமல் சிரித்தாள்.. அதன் ஓசை.. அவனை சென்றடைந்தது.. சில்லென. வானம் பார்த்த பூமிக்கு.. ஒரு துளியும் மழைதானோ என்னமோ.. கருணாவின் பூமி சிலிர்ந்துதான் போனது.
கருணா “அதென்ன வடக்கன்ஸ்.. நான் தெற்கத்திகாரன். எல்லாம் அவங்களுக்கு மட்டுமே எழுதி வைச்சிருக்கா.. நாங்களும் பேசுவோம். ம்.. சொல்லு, எதுக்கு கூப்பிட்ட” என்றான்.
கருணா “இல்ல.. ஆனால், தெரியும்” என்றான், குற்றம்சாட்டும் குரலில்.
சுபி “சாரி, உங்க பிரெண்ட்க்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. நான்தான் உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். அத்தோட, அவ மெசேஜ் செய்திருப்பான்னு.. பேசியிருப்பான்னு, சாரி, நான்தான் சொல்ல மறந்துட்டேன்..” என்றாள்.
கருணா “அப்படி வாங்க சாப். யார் சொல்லியிருந்தாலும்.. நீ சொல்லியிருக்கனுமில்ல. ஆனாலும், எனக்கு தெரியும். அவளுக்கு விஷ் பண்ணிட்டேன். ஆனால், உனக்கு கொஞ்சம் கூட உன் அக்காமேல அக்கறையே இல்ல..” என்றான்.
சுபி “ஹய்யோ கரண்.. ” என்றாள்.
கருணா அமைதியானாள்.
சுபி “கரண், சாரி வேலையில் கொஞ்சம் பிசியா இருந்தேன். அத்தோட, நீங்களும் என்னை கூப்பிடவே இல்லையே.. நா..ன், அதா…ன், தெரியும்ன்னு..” என்றாள், அவனுக்கு கோவமோ என எண்ணிக் கொண்டு சின்ன குரலில்.
கருணா “சரி, ட்ரீட் கொடுத்திடு சுபி” என்றான் இயல்பான குரலில்.
கருணா லேசான புன்னகையோடு “ஏன் கடிச்சி தின்னுடுவேன்னா.. பசங்களோட அப்புறம் போலாம்.. இது பனிஷ்மென்ட் ட்ரீட். நாளைக்கு லஞ்ச்க்கு பார்க்கலாம்” என்றான், அமர்த்தலாக. அவனுக்கு மனது உறுத்திக் கொண்டே இருக்க.. அவளை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என எண்ணம். அதனால், தனியாக பார்க்க அழைத்தான்.
சுபிக்கு மறுத்து பேச முடியவில்லை “சரி” என்றாள்.
ஆனால், சுபிக்கு மறுநாள் மதியம் வரமுடியவில்லை. மருத்துவமனையில் மீட்டிங். அங்கேதான் அவள் டையப் போட்டிருக்கிறாள். அதனால், நடைமுறைகள் பற்றி பேசியே மீட்டிங் நீண்டது மனேஜ்மெண்டோடு. கருணாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டாள் நல்லவேளைக்கு.
சுபி “இல்ல.. உங்களை போல நான் என்ன முதலாளியா.. தொழிலாளி கரண். மேனேஜ்மென்ட் சொல்லுவதை கேட்டே ஆகணும். அந்த மீட்டிங் அப்படியே டைம் எடுத்துடுச்சி” என்றாள்.
கரண் இலகிவிட்டான் சட்டென.. நெற்றியை தேய்த்துக் கொண்டே.. ஓய்ந்த குரலில் “ரொம்ப ஏன் ஸ்ட்ரெஸ் எடுத்துக்கிற.. வீட்டில் பெரியவங்களும் இல்லை.. பையனையும் பார்த்துகிட்டு.. ஏன் தனியா ஓடுற.. ரிலாக்ஸ்சா வேலை பாரு, போதும்..” என்றான்.
தாலாட்டியது பேச்சு. இருவருக்கும் பொதுவானது இப்போது மௌனம்.
நொடிகளில் கரண் சுதாரித்தான் “அப்புறம் டூ வீக் முன்னாடி பார்த்தேன்.. காலையில் ஏழு மணி கூட ஆகலை.. உன் காரினை காணோம். அப்படி என்ன வொர்க்” என்றான், எப்படியாவது ‘யாரது’ என தெரிந்துக் கொள்ள வேண்டி.
சுபி சலிப்பாக புன்னகைத்தாள் “கரண், வொர்க் வந்துட்டா.. அதெல்லாம் பார்க்க முடியாது. அதுவே நம்மை இழுத்துட்டு போகும்.. நாம முடியாதுன்னு சொன்னால்.. ஓரமாகதான் நிற்கணும். இல்லை ஓடிட்டே இருக்கனும். தெரிந்துதானே வந்தேன். என்னால் நிற்க முடியாது.” என்றாள், உறுதியோடு.
சுபி “எப்போ.. மோர்னிங்’ன்னா.. அது லக்ஷ்மி பர்த்டேன்னு நினைக்கிறேன்.” என்றாள்.
கரண் “உன் வீட்டுக்கு உன் மாமனார் யாரோ வந்திருந்தாங்களா” என்றான்.. விடாமல். தனக்கே இந்த கேள்வி அதிகம் என தெரியும், ஆனாலும் கேட்டான்.
சுபி “ம்.. என் மாமனார் வீரா விசாகன் நான்.. நாலுபேரும் கோவில் போனோம். அது வொர்க் இல்ல” என்றாள்.
“ஓ.. பெர்சனால்” என்றான் ஒருமாதிரி குரலில்.
சுபி “அஹ.. அப்படி ஏதும் இப்போ இல்ல கரண். ப்ளீஸ், எனக்கு சிலது பேச பிடிக்காது. ஒகே. நான் கூப்பிட்டது.. நாம, எப்போ போலாம்’ன்னு கேட்கத்தான்” என்றாள்.. நல்ல நேரத்தில் ஏன் என் கவலை என எண்ணம் அவளுக்கு.
சுபிக்கு இந்த வார்த்தையை கேட்டதும் முழுவதும் ஆப் அவள்.. கத்தினாள் “நீயும் ஏன் கரண் என்னை படுத்தற.. என்ன பிரச்சனை உனக்கு. நீ ஏன் என்கிட்டே கேள்வியாக கேட்டுகிட்டு இருக்க.. உனக்கு நான் எதுக்கு பதில் சொல்லணும். பிரென்ட்ன்னா.. எல்லாம் கேட்ப்பியா. நீ என் அக்காவின் பிரென்ட் மட்டும்தான்.. எதோ பேசின பேசினேன்.. என்கிட்டே அட்வான்டேஜ் எடுக்காத கரண்.” என்றவள் அழைப்பினை துண்டித்துவிட்டாள்.
சட்டென நடந்துவிட்டது அலைபேசியின் துண்டிப்பு. அலைபேசியின் இணைப்பிற்கு எத்தனை போராட்டம். ஆனால், துண்டிப்பு எளிதானதாக இருந்தது போல.
சுபிக்கு அழுகை.. தன் கையை சோபாவில் தானே குத்திக் கொண்டு அழுதாள். போனில் தன் கன்வணனின் புகைப்படத்தை எடுத்து நெஞ்சோடு கட்டிக் கொண்டு மீண்டும் அழுகை.
கரண்க்கு, முற்றிலும் வேறு நிலை.. எதையோ அவளுக்கு தான் சொல்லிவிட்டதாக எண்ணம்.. அவளும் எதையோ தனக்கு சொல்லிவிட்டதாக எண்ணம். ‘ம்.. உனக்கு நான் ஏன் சொல்ல வேண்டும் என்றாளே..’ சின்ன வலிதான். ஆனால், அது வேண்டுமாக இருந்தது அவனுக்கு. எதோ தூது விடுவது பற்றி படித்திருக்கிறோமே.. அப்படி ஒரு தூது போல இது. நேராக சொல்லவும் இல்லை.. அவள் மறுக்கவும் இல்லை. ஆனால், இருவருக்கும் வலி.
ம்.. தான் என்ன கேட்க்கிறோம் என்பதை அவள் புரிந்துக் கொண்டதால்தான் அவள் கத்தினாள். சொன்னதை ஏற்க முடியவில்லை, அவனால். அதனால்தான் வலி கருணாவிற்கு. ஆக, எதோ மாயம் நடக்கிறது அவர்களுக்குள்.. எதோ காயம்.. எதற்கோ அழுகை.. எதற்கோ புன்னகை.. எதற்கோ பயம்.. என இருவருக்கும் பல்வேறு உணர்வுகள்.
முன்பே, வீரா பற்றி பேச்சு வந்தது.. சுபி அன்றே மறைத்துவிட்டாள்.. என கருணா எண்ணிக் கொண்டான். காரணமாக சுபி அந்த பேச்சினை.. பேசவில்லை என எண்ணம் அவனுக்கு. எது சரியென தெரியவில்லை ஆனால், கரணின் எண்ணம் சுபிக்கு புரிந்துவிட்டது. புரிய வைத்துவிட்டேன்.. என புன்னகைத்துக் கொண்டான் இப்போது.
லேசான புன்னகையோடு வானத்தை பார்த்துக் கொண்டு.. என்ன செய்வது.. என எண்ணிக் கொண்டிருந்தான்.