அத்தியாயம் 15
அந்த வீட்டில் உச்சக்கட்டக் கோபத்தில் அமர்ந்திருந்தான் சிவஞானம்.
சிறு வயதிலிருந்தே அவனுக்குப் படிப்பு ஏறவில்லை.பள்ளிக் காலம் முடிந்ததும் தொழிலில் இறங்கினான்.அதிலும் ஒன்று மாற்றி ஒன்று தோல்வியைக் கொடுக்க அவனது இருபத்தி ஐந்தாவது வயதில் நண்பன் ஒருவனின் சிபாரிசின் பேரில் ஒரு ஜோசியரிடம் சென்றான்.
“ஒனக்க ராசியெல்லாம் நல்லாத்தாம்லே இருக்கு.ஆனா சுக்கிரன சனி பார்க்குதான்.அதாம் ப்ரச்சனையே! இதுக்கும் ஒரு நல்ல பரிகாரம் இருக்கு”
“சொல்லுங்க சாமி! செய்ஞ்சுபுடலாம்”
“பதினெட்டு வயசு பூர்த்தி ஆகாத கன்னிப் புள்ளையக் கன்னாலம் கட்டணும்.பதினைஞ்சு முடிஞ்சுருந்தா ரொம்ப உத்தமம். ஒருவேளை பதினைஞ்சு வயசுப் புள்ள கெடக்கலைன்னா பதினெட்டுக்குள்ளயாவது முடிக்கப் பாரு”
“கெடைக்காம என்னா சாமி? அதெல்லாம் பண்ணிறலாம்”
ஆனால் இப்போதெல்லாம் பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என நினைப்பதும் அதற்கு அரசாங்கம் பல சலுகைகள் தருவதுமாய் இருக்கவும் அவனுக்கு எவ்வளவு தேடியும் பதினைந்து வயது பூர்த்தியான பெண் கிடைக்கவில்லை.
அப்போது பள்ளி விட்டு வந்த குமுதா அவன் கண்களில் விழுந்தாள். அப்போது அவளுக்கு பதினோரு வயது நடந்து கொண்டிருந்தது. இவளுக்குப் பதினைந்து முடிந்ததும் இவளையே திருமணம் செய்து விட்டால் என்ன என்ற விபரீத ஆசை அப்போதுதான் அவன் மனத்தில் முளை விட்டது.
சிறு வயதிலிருந்தே குமுதாவை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.ஆனால் பதினைந்து வயது முடிந்திருக்க வேண்டும் என்று சொன்னதாலேயே வெளியே பெண் தேடினான்.ஆனால் இப்போது வேறு பெண் எதுவும் கிடைக்காத நிலையில் கையில் வெண்ணெயிருக்க நெய்க்கு அலைவானேன் என்று தோன்றி விட அதற்காக நாலு வருடங்கள் காத்திருந்தால் கூடப் பரவாயில்லை என முடிவு செய்தான்.
அதன் பின் அவளை நாய் போல் பின்தொடர்வான்.ஆண்கள் யாரிடமும் பேச விட மாட்டான்.பெற்றோருக்குக் கூட விஷயத்தைத் தெரிவிக்காமல் அவளைப் பொத்திப் பாதுகாத்தான்.
பதினான்கு வயதில் அவள் வயதுக்கு வந்ததும் தன் மனத்தைப் பெற்றோரிடம் திறந்து காட்டினான். அவர்கள் மறுக்கவே அவர்களை மிரட்ட மேலே நெருப்பைப் பற்ற வைத்துக் கொள்ள முயற்சிக்க, பித்தான பெற்ற மனம் பிள்ளையின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கச் சம்மதித்தது. ஆனால் திருமணத்திற்கு முன் குமுதா தப்பித்துப் போய் விட அவன் பைத்தியம் பிடித்தது போலானான். நான்கு வருடங்கள் காத்திருப்பு வீணாயிற்றே என வெறி கொண்டு அவளைத் தேடியும் அவள் அகப்படவில்லை.
இரண்டு வருடங்கள் கழித்து அவள் அருகில் உள்ள கிராமத்தில் இருப்பது தெரியவர அவளுக்கு இன்னும் பதினெட்டு வயது பூர்த்தியாயிருக்காது என்பது தெரியுமாகையால் அவளை இழுத்து வரப் போய் அமுதனிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டான். அதன் பின் குமுதாவின் பக்கம் திரும்புவதில்லை எனப் பெற்றோருக்கு வாக்களித்தவன் வேறு பெண்ணைத் தேட ஆரம்பித்தான்.
அப்போதுதான் வளர்மதியின் தந்தையுடன் பழக்கமாயிற்று. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசப்படுத்தினான்.
ஒரு நாள் வளர்மதியின் நீட் கனவுக்காக வயலை அடமானம் வைத்துப் பயிற்சி மையத்துக்கு நிறைய பணம் கட்டி விட்டதாக அவர் புலம்ப அடமானம் வைத்திருந்த பெரிய மனிதருடன் தனக்கு உள்ள நட்பைப் பயன்படுத்தி அவருக்குப் பின்னாளில் பணத்தை தானே திருப்பித் தருவதாக வாக்களித்து அந்த நிலத்தை மீட்டு வந்து தந்தான்.
இதற்கான கைமாறாக மகளை அதுவும் அவளுக்குப் பதினெட்டு வயது முடிவதற்குள் தனக்குத் திருமணம் செய்து தருமாறு கேட்க இத்தனை நாட்களாக அவன் மீது ஏற்பட்டிருந்த நல்லெண்ணத்தில் அவரும் ஒப்புக் கொண்டார்.
வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி உடைந்த கதையாக இந்தத் திருமணமும் நின்று போனதுமல்லாமல் அவனோடு இதற்கு உடந்தையாய் இருந்ததற்காக அவன் பெற்றோரும் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் அவனைப் பார்க்க வந்த நண்பன் ஒருவன் ஆட்சியர் அலுவலகத்தில் குமுதாவைப் பார்த்ததாகவும் அவள் புகார் கொடுத்துத்தான் இத்தனையும் நடந்தது என்றும் கூறவும் அவளைக் கொன்று கூறு போட்டு விடும் வெறி பிறக்க ஜாமீனுக்கு விண்ணப்பித்து அன்றுதான் சிறையில் இருந்து வெளிவந்திருந்தான்.
வந்ததும் அவன் முதல் குறி குமுதாதான்.ஆனால் கோடனூருக்கு எப்படிப் போவது என யோசித்தவன் கோடனூரில் இருக்கும் சிறுவயது நண்பனான மதிவாணனைத் தொடர்பு கொண்டான்.
முன்னர் குமுதாவை இழுத்துக் கொண்டு போக என வந்த போது இவன் மூலம்தான் அமுதனைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டிருந்தான். இப்போதும் அவன் உதவியையே நாடினான்.
………………………………………………………………………………………………………….
நீட் தேர்வுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன.
பயிற்சி மையத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தேர்வு வைத்துக் கொண்டிருந்தார்கள்.தேர்வு இருக்கும் நாட்கள் தவிர மற்ற நாட்கள் போகத் தேவையில்லை. எனவே வீட்டில் அமர்ந்து மும்முரமாகப் படிப்பில் ஈடுபட்டிருந்த குமுதாவுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.
அவளுடன் பயிற்சி மையத்தில் பயிலும் ஜெயக்கொடிதான் அழைத்திருந்தாள்.
‘இவ என்னத்துக்குக் கூப்பிடுதா?’
ஜெயக்கொடிக்குக் குமுதாவை அவ்வளவாகப் பிடிக்காது. குமுதா வந்து சேரும் முன்னர் கோடனூர்ப் பள்ளியில் எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றுக் கொண்டிருந்தவள்தான் இந்த ஜெயக்கொடி.
ஆனால் குமுதா வந்ததும் அவள் ஜெயக்கொடியை விட அதிக மதிப்பெண்கள் எடுக்க ஆரம்பித்ததும் அதற்காகத் தலைமை ஆசிரியர் முதல் அத்தனை ஆசிரியர்களும் அவளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியதும் ஜெயக்கொடியின் மனதில் பொறாமைத் தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்தது. அந்தத் தீயின் சுவாலைகள் அவ்வப்போது குமுதாவைத் தாக்கவும் செய்தது.
பள்ளியில் பயிலும் காலங்களில் பீடி (P.T) விளையாடும் போது பந்தை வேண்டுமென்றே அவள் தலையில் போடுவது, அறியாமல் செய்வது போல் அவளை ஏதாவது காயப்படுத்துவது, ஆய்வுக்கூடங்களில் சோதனைகள் செய்யும் போது எந்த விதத்திலாவது அவளுக்குக் காயத்தை உண்டாக்குவது என அவளும் பல வழிகளில் முயன்றாள். பல நேரங்களில் அவள் முயற்சிகளை முறியடிப்பதும் சில நேரங்களில் எதிர்பாராமல் காயப்படுவதும் என குமுதாவும் சமாளித்துக் கொண்டுதான் இருந்தாள்.
அவள் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தது ஜெயக்கொடியின் பொறாமைத்தீக்கு மேலும் நெய் வார்த்தாற் போலானது.
பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாக வந்திருந்தவள் இப்போது குமுதாவுக்கு அடுத்த இடத்தில் அவளை விட ஐந்து மதிப்பெண்களே குறைவாகப் பெற்றிருக்க பள்ளியின் முதல் மாணவி என்ற பட்டம் குமுதாவுக்குச் சென்று விட மிதமிஞ்சிய ஆத்திரம் அவளுக்கு…
அவள் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குப் பேட்டி கொடுக்கும் போதேல்லாம் பொருமிக் கொண்டேயிருந்தாள்.
வசதியுள்ள வீட்டுப் பெண்ணானதால் வீட்டில் பிடிவாதம் பிடித்து இலவசமாகக் குமுதா சேர்ந்த அதே பயிற்சிப் பள்ளியில் லட்சங்களைக் கொடுத்து அவளும் சேர்ந்தாள்.
‘நீட்டுப் பரீட்சையில ஒன்ன நான் முந்தி, பேருக்கேத்த மாதிரி ஜெயக்கொடிய நான் நாட்டல எம்பேரை மாத்தி வச்சுக்கிடுதேன்டி’ என மனத்துக்குள் சூளுரைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தாள். ஆனால் இங்கும் குமுதாவே முதல் மதிப்பெண்கள் பெற்றுக் கொண்டிருந்தது அவளுக்கு மிகுந்த அயர்வைத் தந்திருந்தது.
தான் ஜெயிக்க வேண்டும் என்பது போய் குமுதாவை என்ன செய்தாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் விதையாய்த் தோன்றி இன்று விருட்சமாய் வளர்ந்து நின்றது. சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தவளுக்கு அந்த சந்தர்ப்பமும் விரைவில் வாய்த்தது.
………………………………………………………………………………………………………………………………………..
ஜெயக்கொடி மதிவாணனின் தங்கையாக அமைந்து போனது சிவஞானத்தின் அதிர்ஷ்டம். மாறுவேடமிட்டுக் கோடனூருக்குள் புகுந்திருந்த சிவஞானம் மதிவாணனின் உறவினனாக அவர்கள் வீட்டில் தங்கினான்.
சிவஞானமும் மதிவாணனும் பேசிக் கொண்டிருந்ததை யதேற்சையாகக் கேட்டு விட்ட ஜெயக்கொடிக்குத் தான் காத்திருந்த சந்தர்ப்பம் கிடைத்து விட்டது புரிய அவர்களின் திட்டத்துக்குத் தானும் உதவுவதாகக் கூறினாள்.
அதன்படி குமுதாவை அலைபேசியில் அழைத்தாள்.
………………………………………………………………………………………………………….
அலைபேசியை எடுத்த குமுதா,
“சொல்லு ஜெயக்கொடி என்ன விஷயம்? கூப்பிடாதவ கூப்பிட்டுருக்கே”
“ஒன்னுமில்ல மலரு எங்க ஒறவுல ஒரு கேதம் (இறப்பு). கண்டிப்பாப் போவணும். நாளை வந்துருவேன். நாளைக் கழிச்சுப் பரீட்சை இருக்குல்லா. இப்பத்தான் பார்த்தேன்… பாட்டனி நோட்ஸைக் காணோம். சென்டர்லயே விட்டுட்டு வந்துட்டேன்னு நெனைக்கேன். நீதான் எல்லாத்தையும் தனியா எழுதி வைப்பியே. அதான் ஒன்னகிட்ட (உங்கிட்ட) நோட்ஸ் கேக்கலாமின்னு கூப்பிட்டேன்”
ஆம். குமுதாவுக்கு எழுதாமல் படிக்கவே முடியாது. படிக்க அமரும் போதே ஒரு நோட்டையும் பேனாவையும் எடுத்துக் கொண்டுதான் அமருவாள். படிக்கப் படிக்க அதைச் சுருக்கமாக எழுதிக் கொள்வாள். இதனாலேயே பாட நூல் போக தனியாக அவள் எடுத்து வைத்த குறிப்புதவி நூல் எல்லா பாடங்களுக்குமே அவளிடம் இருக்கும். இது அனைவருக்குமே தெரியும் என்பதால் ஜெயக்கொடி கேட்டது குறித்து அவளுக்கு எள்ளளவும் சந்தேகம் தோன்றவில்லை.
“சரி ஜெயக்கொடி. ஒரு நாளைக்குத்தான. வந்து வாங்கிட்டுப் போ”
“அதாம் மலரு! அதுலதான் ஒரு ப்ரச்சன.நாங்க கிட்டத்தட்டக் கெளம்பிட்டோம். இப்ப நான் அங்கன வந்து வாங்குறதுன்னா அம்மை திட்டும். ஒன்னால கொண்டு வந்து குடுக்க முடியுமா?”
“ஒன் வீட்டுக்கா?”
அவள் வீடு சற்று தொலைவில், இவள் வீட்டுக்கு மறு கோடியில் இருந்தது. அதனால் தயக்கமாகவே கேட்டாள்.
“இல்ல, என் வீட்டுக்கு வேணாம். நம்ம ஊர் எல்லைல ஆலமரமில்ல, அங்கன கொண்டு வந்துடு. வாங்கிட்டு அங்கன இருந்து அஞ்சு நிமிஷத்துல பஸ் ஸ்டாப்புக்குப் போயிருவேன்”
குமுதாவுக்கு இப்படிச் செய்வதற்குப் பெரிதாக இஷ்டமில்லை. ஆனால் அவள் எப்போதுமே மற்றவர்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவாள்.
அவள் கோடனூர் வந்ததில் இருந்தே ஜெயக்கொடியுடன் ப்ரச்சனைதான். இப்போது வலுவில் அவளே வந்து உதவி கேட்கும் போது செய்தால் அவர்கள் உறவில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என நினைத்தவள்,
“சரி ஜெயக்கொடி! நான் இப்பக் கெளம்பி வாரேன்” என்று விட்டு அலைபேசியை வைத்தாள்.
நேரம் மதியம் ஒன்று.
மரகதத்திடம் சினேகிதிக்குப் புத்தகம் கொடுக்கப் போவதாகச் சொல்லி விட்டுக் கிளம்பியவள் அடுத்த பத்தாவது நிமிடம் ஆலமரத்தை நெருங்கியிருந்தாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்தது போல் ஜெயக்கொடி அங்கே இல்லை.
“எங்க போனா இவ? என்ன வரச் சொல்லிட்டு…”
சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு ஆலமரத்தின் பின்னே ஏதோ துணியின் சலசலப்புத் தெரிய அவள் கண்டுகொண்டாள் என்பது தெரிந்ததும் வெளியே வந்தான் சிவஞானம்.
அவனைப் பார்த்து அதிர்ந்து போனவள் அப்போதும் இது ஜெயக்கொடி செய்த சூழ்ச்சி என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. தனியாக வந்த தன்னை சிவா பார்த்து விட்டான் என்பதாகத்தான் நினைத்துக் கொண்டாள்.
“மாமா நீங்களா?”
“ஆமாண்டி நானேதான்… எதிர்பார்க்கலையோ? ஜெயில்ல கம்பிக்குப் பின்னால உக்காந்து களி தின்னுகிட்டு இருப்பேன்னு நெனச்சேல்ல”
அவள் குழப்பமாகப் பார்க்கவும்,
“நடிக்காதடி! அனாதையான ஒனக்கு ஆதரவு குடுத்து வளர்த்துப் படிக்க வச்ச என் அப்பனாத்தாளை ஜெயில்ல தள்ளிட்டேல்ல? ஒன்னப் பழி வாங்குததுக்குத்தாண்டி மறுபொறப்பெடுத்து வந்த மாரி வந்துருக்கேன்”
“என்ன சொல்லுதீய மாமா? எனக்கொன்னும் வெளங்கலையே”
“ஆஹா பச்சப்புள்ள தோத்துடும் ஒம் பகுமான நடிப்புல.அந்த வளர்மதிக்கும் எனக்கும் நடக்க இருந்த கன்னாலத்தைத் திட்டம் போட்டுத் தடுக்கலை நீயி?கலெக்டருகிட்டப் புகார் கொடுத்து எங்க குடும்பத்தையே ஜெயில்ல ஒக்கார வைக்கல நீயி?”
அவள் அதிர்ச்சியில் இரு கைகளாலும் வாயை மூடிக் கொண்டாள்.
“சத்தியமா வளர்மதியக் கட்டிக்க இருந்தது நீங்கன்னு எனக்குத் தெரியாது மாமா”
“தெரிஞ்சுருந்தா, தெரிஞ்சுருந்தா என்னடி செய்ஞ்சுருப்பே? ஆஹா மாமன் நல்லா வாழட்டும்னு ஆசீர்வாதம் செய்ஞ்சுருப்பியோ?”
குமுதா பளிச்சென்று பதிலளித்தாள்.
“மாட்டேன்.யாரா இருந்தாலும் ப்ராது குடுத்துருப்பேன்”
“அடி சக்கன்னானா! என்னா ஏத்தமுடி ஒனக்கு? எங்கிட்டயே கொஞ்சமும் பயமத்து என்னையே ப்ராது குடுத்துப் புடுச்சுக் குடுத்துருப்பேன்னு சொல்லுதே!” என்றவன் அவளை நோக்கி நகர முற்பட அப்போதுதான் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டவள் திரும்பி ஓடப் போனாள்.
ஆனால் பாய்ந்து வந்த சிவஞானம் அவளைக் கைப்பிடியாகப் பிடித்து விட்டான். அதில் அவள் கையிலிருந்த நோட்டும் அலைபேசியும் தள்ளிப் போய் விழுந்தன.
திமிறத் திமிற அவளை அவன் இறுக்கிப் பிடிக்க அவளோ “யாராவது வாங்களேன்” எனக் கூச்சலிட முயற்சிக்க அவள் வாயை ஒரு கையால் மூடியவன் அப்படியே அவளை இழுத்துக் கொண்டு மரத்தின் பின்பக்கம் நகர்ந்தான்.
சற்றுத் தள்ளி வயல்வெளி இருக்க உச்சி வேளை என்பதால் அங்கு நடமாட்டமில்லை. காலையிலும் மாலையிலும் அங்கே ஆட்களிருப்பார்கள் என்பதால்தான் இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்திருந்தான் சிவா.
அவள் வாயிலிருந்த கையை எடுத்தவன் சட்டென அவள் துப்பட்டாவை இழுத்து அவள் வாயில் கொடுத்துப் பின்னுக்கு இழுத்து இரு காதுகளையும் சேர்த்து அடைப்பது போலக் கட்டி விட்டான்.
வெறி கொண்டவன் போல் செயல்பட்டவனிடமிருந்து துப்பட்டாவை முன்னுக்கு இழுக்கக் குமுதா எத்தனையோ முயன்றும் முடியவில்லை. அடுத்து அவளது இரு கைகளையும் பின்னுக்குக் கொண்டு வந்து தன் துண்டால் சேர்த்துக் கட்டியவன் அவள் கால்களைத் தட்டி விட, கையிரண்டும் பின்னுக்கு இருக்க மல்லார்ந்த அசௌகரியமான நிலையில் கீழே விழுந்து கிடந்தாள் குமுதா.
அவள் கிடந்த கோலத்தைச் சுற்றி வந்து பார்த்தவன்,
“ஜோசியக்காரன் சொன்னானேன்னு பதினெட்டு வயசு முடியாத பொண்ணைக் கன்னாலம் கட்டத்தான் இத்தனை பாடும்.ஒனக்குத்தான் இந்த மாச ஆரம்பத்துல பதினெட்டு முடிஞ்சுருச்சே.இனி ஒன்னால எனக்கு ஒபயோகமில்ல.ஆனா ஒன்னை இப்பிடியே விட்டுட முடியுமா?” என்றவன் தன் பேன்ட் பையிலிருந்து கத்தியை எடுத்தான்.
அவள் கண்களில் மிரட்சியைக் கண்டவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும்,
“பயப்படாத! ஒன்னைக் கொல்லப் போறதில்ல. உசுரு போனாக் கூடக் கலங்காத பொம்பளைங்க உடுப்பு போனாக் கலங்கி நிப்பீகள்ல. அதுதான்.” என்றவன் அந்தக் கத்தியால் அவள் சுடிதாரில் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் கிழிக்க அவள் செய்ய முனைவதை உணர்ந்து கொண்டவள் போல் பலம் கொண்ட மட்டும் துள்ளினாள் குமுதா.
“என்னடி தூண்டியில மீனாட்டம் துள்ளுத? ஒன்ன அரைகொறையாப் படமெடுத்து நெட்டுல போட்டு ஒம்மானத்த நான் வாங்கல எம்பேரு சிவஞானம் இல்லடி”
அவன் பேசிக் கொண்டேயிருக்க அவளோ இடைவிடாமல் துள்ளித் திமிறிக் கொண்டிருந்தாள்.
இதனால் அவனால் சரியாக அலைபேசியில் படமெடுக்க முடியாமல் போக அலைபேசியை உள்ளே வைத்தவன் “என்னடி நான் சொல்லிகிட்டே இருக்கேன்…” என்றவாறு அருகில் வந்து கத்தியால் அங்கங்கே கிழிந்திருந்த உடைகளைக் கைகளால் இன்னும் கிழிக்கலானான்.
அவள் தன் கால்களால் உதைக்க முற்பட, பின்னால் தள்ளிச் சென்று அவளிருந்த கோலத்தை அளவெடுத்தவன் தான் செய்த அளவில் திருப்தியுற்றவனாக மீண்டும் அலைபேசியை எடுக்க ஒரு திமிறு திமிறிக் குப்புற விழுந்தாள் குமுதா.
“ஏய்!” என்றவனுக்கு ஆத்திரம் மேலிட, சென்று வேகமாக அவளைத் திருப்பியவன் அவள் மீண்டும் திரும்பி விடாதவாறு அவள் மேல் அமர்ந்தாற் போல் இருந்து அலைபேசியை வைத்துப் படம் எடுக்க ஆரம்பித்தான்.
தூது செல்லவும் சேதி சொல்லவும் நாதி இன்றி நானே
பாடுகின்றதே காதில் கேட்குமோ பொறியில் வீழ்ந்த மானே
கோவில் இல்லையோ தெய்வம் இல்லையோ கொண்ட துன்பம் தீர்க்க
காவல் நின்றிடும் கடவுள் யாவுமே கண்கள் கொண்டு பார்க்க
தெய்வம் காக்க வேண்டியே கையை நானும் ஏந்தினேன்
திக்கு ஏதும் இன்றியே துன்ப ஆற்றில் நீந்தினேன்
இன்னும் ஏன் தாமதம் தீர்க்கவா சஞ்சலம்
காக்கும் கைகள் வந்தே இங்கு கண்ணீர் துடைக்காதோ
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்