போனை கட் பண்ணிய மித்ரா அப்படியே கால்களை கட்டி கொண்டு முட்டியில் முகம் புதைத்து அமர்ந்து கொண்டாள்.

‘ப்பா….. என்ன குரல் இது. இப்படி பேசறான். கேக்கும்போதே உடம்பு நடுங்குது. ம்கூம்…. இது சரிப்பட்டு வராது. இனி கல்யாணம் முடியற வரை அவன்கிட்ட பேசாம இருக்கறதுதான் சேப்’ என்று முடிவெடுத்தவள் தானும் சென்று படுத்துவிட்டாள்.

இரவு வெகுநேரம் ஊரை சுற்றிவிட்டு வந்த ஹர்ஷா ஒரு முடிவை தெளிவாக எடுத்திருந்தான். அது பாட்டி சொன்னது போல் அவன் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்க பட்டதாக இருந்தாலும், வாழும் வாழ்க்கை நிச்சயம் காதல் வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்பதுதான்.

ஹாசியை உடனே மனைவியாக அவனால் ஏற்று கொள்ள முடியாதுதான். ஆனால் அமையும் வாழ்க்கையை முழு மனதுடன் வாழ முயற்சி செய்யலாமே.

ஒருவேலை அவனது மனம் மாறவில்லை என்றால் ஹாசிக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுவது போல் ஆகிவிடும் அதனால் அவளிடம் நாம் சொன்ன விஷயங்கள் அப்படியே இருக்கட்டும். கண்டிப்பாக ஹாசியிடம் சொன்ன ஒரு வருடத்திற்குள் என்னை மாற்றி கொள்ள முயற்சி செய்வேன் என்று தனக்குள் சொல்லி கொண்டான்.

ஏனோ பாட்டியுடன் பேசியதில் இருந்தே தான் உண்மையாகதான் காதலித்தோமா என்ற சந்தேகம் அவனுள் எழுந்து கொண்டே இருந்தது.

ஆம், உண்மைதான். இதுவரை இருவருமே ஒருவருக்காக ஒருவர் எந்த விஷயத்திலும் ரிஸ்க் எடுத்தது இல்லை. மற்ற காதலர்களை போல் வெளியில் சுற்றியதும் இல்லை. பொதுவான விஷயங்களை தவிர பர்சனலாக பேசியதும் இல்லை.

இப்போது அதையெல்லாம் யோசித்து பார்த்தவனுக்கு பெருமூச்சே வெளிப்பட்டது. இந்த காதல் நம்மை கல்யாணம் அதன் பின்னான வாழ்க்கை என்று எதையுமே யோசிக்கவிடவில்லையே’ என்று நினைத்தவன் ‘ஒருவேலை அர்ச்சனா சாதாரணமாகதான் பேசினாளோ…அவளுள் காதலனாக கணவனாக நான் பதியவில்லையோ’ என்றவன் யோசித்து கொண்டிருக்கும்போது அவன் முன் வந்து குதித்தது அவன் மனசாட்சி.

‘ஏன்டா… இன்னும் உனக்கு அதுல என்ன சந்தேகம். அதான் அவளே சொன்னாளே அவங்க அப்பா அம்மாவவிட நீ முக்கியம் இல்லைன்னு அப்புறம் என்ன. கணவனா நீ அவ மனசுல பதிஞ்சு இருந்தா உன்னைவிட்டு போகணும்னு கனவுல கூட யோசிச்சி இருக்கமாட்டா.

ஏதோ உன் மேல இருக்க ஈர்ப்புல லவ்னு சொல்லவும் மண்டைய ஆட்டிட்டா. ஆனா…. கல்யாணம்னு வந்தவுடனே அவங்க குடும்பத்தை பார்த்து போயிட்டா.

இனி அர்ச்சனாபத்தி யோசிக்கறதுல என்ன மாற்றம் வர போகுது. அவளை மறந்து அடுத்து உன் வாழ்க்கை என்னன்னு யோசி. இனி உனக்கான வாழ்க்கை ஹாசிக்கூட மட்டும்தான். அவகூட எப்படி வாழ போறன்னு மட்டும் பாரு,’ என்றுவிட்டு செல்ல அவனும் பெரு மூச்சுடன் நாம நினைச்ச வாழ்க்கை அமையலன்னா, அமையற வாழ்க்கையை நல்லபடியா வாழ முயற்சிக்கலாம் என்று நினைத்து நிதர்சனத்தை ஏற்று கொள்ளும் மன பக்குவத்தை வளர்க்க துவங்கினான்.

பழைய நினைவுகள்….. ஆம், அர்ச்சனா இனி அவன் வாழ்க்கையில் பழைய நினைவுகள் மட்டும்தான் அதில் இருந்து வெளிவர எண்ணினாலும் அவன் காதல் உண்மையாக இருந்ததால் வலி அதிகமாகதான் இருந்தது. அவனையும் அறியாமல் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வடிய அதை அழுத்தமாக துடைத்தவனுக்கு தன்னை நினைத்தே கடுப்பாக இருந்தது.

ஓய்ந்து போய் பெட்டில் விழுந்தவன் தன் நினைவுகளில் மூழ்கி போனான். மன அலைச்சலால் புரண்டு புரண்டு படுத்தவன் பின் தன் போனில் பாட்டை ஆன் செய்து ஹெட் செட்டை காதில் மாட்டியவன் இசையின் மூலம் தன் வலியை தொலைக்க துவங்கினான்.

அடுத்த நாள் அழகாக புலற கிருஷ்ணன் பத்மா தம்பதியர் பாட்டி சொன்ன விஷயத்தை சொல்லி அடுத்த வாரமே நிச்சயத்தை வைத்து கொள்ளலாம் என்று சொல்ல,

ராஜோ நிரஞ்சன் லீவ் நாற்பது நாட்கள் மட்டுமே போட்டு வந்ததாக சொன்னார்., சற்று நேரம் யோசித்தவர்கள் இரு ஜோடிக்கும் ஒரு மாதத்திலேயே திருமணத்தை முடித்துவிட்டு பின் நிரஞ்சன், மித்ரா இருவரும் ஒன்றாக அமெரிக்கா செல்லட்டும் என்று முடிவெடுத்தனர்.

மற்றவர்களும் அதை ஒத்து கொண்டு நிச்சய வேலையை செய்ய ஆரம்பித்தனர்.

ஹாசி எப்போதும் யோசனையோடே சுற்றி வர, துவங்கினாள். ரஞ்சன் தங்கையிடம் என்னவென்று கேட்க,

அவளோ ஒன்றும் இல்லை என்று மழுப்ப, அண்ணனின் நம்பாத பார்வையில் தலை குனிந்தவள் “அண்ணா நான் வருஷ கணக்கா காத்திருந்த ஒன்னு நடக்க போகுது. ஆனா….. எனக்குள்ள சந்தோஷம் சுத்தமா இல்ல. ஏதோ ஒரு மாதிரி மனசு பாரமா….. குழப்பமா….. எனக்கு சரியா அந்த பீலை சொல்ல தெரியல.” என்று தலையில் கை வைத்தவாறு சொல்ல,

தங்கையின் மன குழப்பத்தை புரிந்து கொண்ட ரஞ்சன் “ஹாசிம்மா நான் ஒரு விஷயம் கேட்டா உண்மைய சொல்லுவியா”

“ம்ம்ம்……”

“ஹர்ஷாவ சுத்தமா வெறுத்து. அவன் உன் வாழ்க்கைக்கு தேவையில்லன்னு முடிவு பண்ணிட்டியா” என்ற கேள்வியில் அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள் “எப்படிண்ணா…. எப்படி என்னால முடியும்.

நானும் அவன் எனக்கு வேண்டாம். இன்னொரு பொண்ணு பின்னாடி போனவன் எனக்கு வேண்டான்னு பல தடவை எனக்குள்ளயே சொல்லி சொல்லி தோத்துதான் போறேன்.

என்னோட ஆழ் மனசுல பதிஞ்ச அவனை என்னால அவ்ளோ சீக்கிரம் தூக்கி போட முடியல. உன்னை வேண்டான்னு சொன்னவனையே நினைக்கிறியேன்னு என்னை நானே பல தடவை கேட்டுக்கறேன். ஆனா பதில்தான் இல்லை.

என்னை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு. நான் ரொம்ப கெட்ட பொண்ணாண்ணா. என்…. என்….. என்னால சுத்தமா முடியலண்ணா. அவனை வெறுத்து இங்க இருந்து போயிடலாம்னு நினைக்கும் போது.

நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு அவன் கேட்கும்போது என் மனசு என்னையும் அறியாம சந்தோசம்தான் பட்டுச்சு.

ஹர்ஷாகிட்ட என்னால முடியாதுன்னு சொல்ல முடியல. அவன்கூட இருக்க ஒரு வாய்ப்பு கிடைச்சுருச்சுன்னுதான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். ஆனா என்னால…. என்னால….. முடியல.

ரொம்ப மனசு பாரமா இருக்கு. நெடுநாள் கனவு பளிச்சுடுச்சு. ஆனா அந்த சந்தோஷத்தை என்னால பீல் பண்ண முடியல”. என்று முகத்தை மூடி அழுத தங்கையை கண்டு ரஞ்சன் கண்களும் கலங்கியது.

ரஞ்சன், “அன்னைக்கு அப்புறம் ஹர்ஷா உன்கிட்ட பேசுனானா”

“இல்ல என் புது நம்பர் அவனுக்கு நான் கொடுக்கலை” என்று சொன்ன தங்கையை அவன் கூர்மையாக பார்க்க,
தலைகுனிந்தவள் “அவன்கிட்ட பேசுனா. இருக்க குழப்பத்துல அவனை திட்டிருவேனோன்னு எனக்கு பயமா இருக்கு”

“ம்ம்ம்….. சரி. உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறதுல விருப்பமா”

“அண்ணா…. என்ன பேசற. எனக்கு எப்போவும் என்னோட ஹர்ஷா மட்டும்தான் வாழ்க்கை”

“இதுல தெளிவா இருக்கியா”

“ஆமா….. “ என்று கோபமாக முகத்தை திருப்பிய தங்கை தலையில் கை வைத்த ரஞ்சன் “கல்யாணங்கறது ஒரு தடவைதான் வாழ்க்கைல நடக்கறது. அதுல ஹீரோயின் நீதான். ஒவ்வொரு சடங்கும் உன்னை மையமா வச்சுதான் நடக்கும்.

இந்த நேரத்துல கண்டதை யோசிச்சு உனக்கான கோல்டன் மூமண்ட மிஸ் பண்ணிடாத. இது உன்னோட மேரேஜ். நீ ஆசை ஆசையா காதலிச்ச உன்னோட ஹர்ஷாகூட நடக்குது. அதை மட்டும் மனசுல வை. பியூச்சர்ல நம்ம கல்யாண நாட்களை மிஸ் பண்ணிட்டோமேன்னு நினைச்சு நீ வருத்தப்பட கூடாது. அப்படி நினைச்சாலும் இந்த நாட்கள் திரும்ப வராது.

அதனால தேவையில்லாத எண்ணம் எல்லாம் உன்னாலதான்டா வந்துச்சுன்னு கல்யாணத்துக்கு அப்புறம் அவன வச்சு செஞ்சுடு. அவ்வளவுதான் முடிஞ்சது” என்ற அண்ணனை ஹாசி விழி விரியபார்க்க,

அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன் “போ போய் குளிச்சு பிரஸ் ஆகிட்டு வா வெளில போகலாம். இது உன்னோட அழகான நாட்கள் மற்ற கசடு எல்லாம் மறந்து சந்தோஷமா இரு. போனா வராது…. பொழுது போனா கிடைக்காத மொமண்ட் அதனால என்ஜாய்” என்று சொல்லி சிரிக்க,

அண்ணனை அணைத்து கொண்டவள் “தேங்க்ஸ்ண்ணா…” என்று சொல்ல,

தங்கை தலையை ஆதுரமாக தடவி கொடுத்தவன். அவளை கிளம்ப சொல்லிவிட்டு வெளியே செல்ல. சற்று நேரத்தில் கிளம்பி வந்த தங்கை முகத்தில் இருந்த தெளிவை கண்டு மனம் நிம்மதி ஆனவன். தாயிடம் சொல்லிவிட்டு தங்கையை வெளியில் அழைத்து சென்றான்.

அண்ணனிடம் பேசிய பின் ஹாசி மனமும் தெளிவடைந்தது. உண்மைதான் இது எனக்கான நாட்கள் கண்டிப்பா நான் சந்தோஷமா இருக்கணும். கல்யாணத்துக்கு அப்புறம் அந்த நாய வச்சு செய்யறேன் என்று முடிவெடுத்து கொண்டு சென்றாள்.

ஒருவழியா ஹாசி தெளிவாகிட்டா, அண்ணன் உதவியால. அண்ணனும் தங்கச்சியும் இன்னொரு அண்ணன் தங்கச்சிய வச்சி செய்ய ரெடி ஆகிட்டாங்க. என்ன நடக்க போகுதோ.

ரஞ்சன்கிட்ட மாட்டிய மித்ரா நிலை என்ன?

ஹாசியிடம் மாட்டிய ஹர்ஷா நிலை என்ன ஆகும். அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.