தினேஷ் வந்ததுமே ஜானிற்கு அத்தனை மகிழ்ச்சி “வாடா மச்சான்… வரமாட்டன்னு சொன்ன…” என்று சொன்னதுபடி, அவனை லேசாய் கட்டி விடுவிக்க,
“அட போடா.. நானும் இப்படி ஏதாவது ஒரு சிச்சுவேசன்ல வந்தா தான் உங்களை எல்லாம் ஒரே இடத்துல பார்க்க முடியுது..” என்றவன் “ஹேய் பைரவி, எப்படி பாடின? என்ன டல்லா இருக்க?” என்று விசாரிக்க,
“அதுவா.. அது என்னவோ அவளுக்கு அப்பப்போ இப்படித்தான் ஆகிடுது…” என்றான் ஜான்.
“அப்பப்போ ஆகுதா? என்னாச்சு? நீதான் முக்கால்வாசி நேரம் அவளோட இருக்க. உனக்கு தெரியாம என்ன?” என்று மாலதி கேட்க, பைரவி ஜானை அப்பட்டமாய் முறைக்க,
“அவனை ஏன் முறைக்கிற?” என்றான் தினேஷ்.
“முறைக்காம? சின்ன சின்ன விசயங்களை எல்லாம் பெரிசு பண்றான்…” என்றாள் அவளும் புகார் சொல்லும் விதமாய்.
“அப்படி என்ன நான் பெரிசு பண்ணிட்டேன்.. எனக்குன்னு இல்லை, எங்க எல்லாருக்குமே உன்னோட விஷயங்கள் ரொம்பவே முக்கியம் தான் பையு…” என்று மிக தீவிரமான முக பாவனையுடன் ஜான் பேச,
சந்தோஷியோ “ஜான்… எதுவா இருந்தாலும் தெளிவா பேசு…” என்றாள்.
“தெளிவா தானே, நீயே கேளு சந்து.. பைரவி லவ் பண்றாளா அப்படின்னு நீயே கேளு…” என்று ஜான் போட்டு உடைத்துவிட, பைரவிக்கு இதயம் தாறுமாறாய் துடித்தது.
சின்னதாய் ஒரு பார்ட்டி என்கிற மனநிலையில் தான் அவள் வந்தாள். ஆனா ஜான் அனைவரையும் வர வைத்திருப்பதே, அவளது விசயத்தைப் பேச என்று இப்போது தான் புரிய, திகைத்துப் போய் அனைவரையும் இப்போது பார்க்க “டேய்.. என்ன சொல்ற?” என்றான் தினேஷ் அதிர்ந்து.
“ஆமா மச்சா.. கொஞ்ச நாளாவே சரியில்லை பைரவி. நான் கேட்டா அது இதுன்னு ஏதாவது ரீசன் சொல்றா. அதான் உங்க எல்லாரையும் வர சொல்லி பேசலாம்னு கூப்பிட்டேன்…” என்றிட, பைரவிக்கு எழுந்து சென்றுவிடுவோமா என்றுதான் தோன்றியது.
சந்தோஷி அவளின் அருகே அமர்ந்திருந்ததால், பேச்சுவாக்கில் பைரவியின் கையைப் பற்றி “என்ன பையு…?” என்று அதிர்வுடன் கேட்க,
மாலதியும் அவள் பக்கம் வந்து அமர்ந்தவள் “என்ன டி இதெல்லாம்?” என்றாள்.
தினேஷ் ஒருபடி மேலே போய் “பைரவி என்ன இதெல்லாம்? எதுன்னாலும் எங்கக்கிட்ட சொல்லக் கூடாதா? இப்படி நீயா ஏதாவது முடிவு பண்ணி, நீ தனியா இருக்கன்னு தெரிஞ்சே யாரும் ப்ளான் பண்ணி ஏதாவது ட்ராப்ல உன்னை சிக்க வச்சிடப் போறாங்க…” என்று பேச,
“ப்பா… ப்ளீஸ் போதும்…” என்றாள் பைரவி அயர்வாய்.
“பார்த்தீங்களா.. நான் ஏதாவது பேசினா என்கிட்டயும் இதே போலத்தான் ஒரு ரியாக்சன் கொடுப்பா…” என்று ஜான் எடுத்துக் கொடுக்க
“ஸ்டாப் இட் ஜான்…” என்றாள் பைரவி அடிக்குரலில்.
அவளது இந்த திடீர் கோபம் கண்டு அனைவரும் லேசாய் விழிகளை விரிக்க “நானும் பார்த்துட்டே தான் இருக்கேன், என்னை ரொம்ப சின்ன பொண்ணாட்டம் எல்லாம் ட்ரீட் பண்றீங்க? ஏன் எனக்கு எதுவுமே யோசிக்கத் தெரியாதா?” என்றாள் சற்றே குரலை தாழ்த்தி.
“ஏய்.. என்னடி பேசுற நீ?” என்று மாலதி அவளது முகத்தை திருப்ப,
“பின்ன என்ன மாலு.. எனக்குன்னு தனிப்பட்ட எந்த ஒரு விசயங்களும் இருக்கக் கூடாதா?” என்றாள் பாவமாய்.
அவள் சொல்வதும் சரிதானே. இவர்கள் எல்லாருமே அவரவர் விருப்பத்திற்கு இன்று வரையிலும் ஏதேனும் செய்கின்றனர். எங்கேனும் செல்வது என்றாலும் கூட சென்று வருகின்றனர். அதெல்லாம் பைரவிக்கு ஒரு செய்தியாகத்தான் வரும். ஆனால் பைரவி என்றால் மட்டும் அவள் செய்யும் ஒவ்வொரு சிறு சங்கத்திலும் கூட, நண்பர்களிடம் அனைத்தும் பகிரப்பட வேண்டும்.
அவர்களின் அக்கறைதான் இதற்கு காரணம் என்பது பைரவிக்கு புரிந்தது. இருந்தாலும் அவளது காதல் கொண்ட மனது அதனை ஏற்றுக்கொள்ள மறுக்க, வார்த்தைகள் இப்படி வந்து விழ, ஜானோ “நீ எதுன்னாலும் சொல்லிக்கோ பையு.. ஆனா நீ லவ் பண்ற தானே?” என்று கேட்க,
“ஆமாம்…” என்றாள் அனைவரையும் திடமாய் பார்த்து.
“நல்லது.. சந்தோசம்.. ஆனா அதை ஏன் எங்கக்கிட்ட சொல்லலாம மறைச்ச?” என்று தினேஷ் கேட்க,
“அது…” என்று இழுத்தாளே தவிர அவளிடம் பதில் இல்லை.
“சொல்லு பைரவி.. உனக்கு ஒருத்தரை பிடிச்சிருக்கு அப்படின்னா எங்களுக்கு ரொம்பவே சந்தோசம் தான். ஆனா எங்கக்கிட்ட ஏன் சொல்லல? சந்தோசமா எங்கக்கிட்ட அவரை இன்ட்ரோ குடுத்து இருக்கலாமே..” என்று சந்தோஷி கேட்க,
“அவ எப்படி சொல்லுவா?” என்றான் ஜான்.
“ஷ்..! ஜான் எதுவா இருந்தாலும் தெளிவா வெளிப்படையா பேசு. அப்போ பைரவி யாரை லவ் பண்றான்னு உனக்கு தெரியும் அப்படித்தானே…” என்று தினேஷ் கேட்க,
“கன்பார்மா தெரியாதுடா. அது அவளே சொல்லணும் தானே…” என்றவன் “சொல்லு பைரவி, உனக்கும் அந்த சிவாக்கும் நடுவுல என்ன ஓடுது?” என்று கேட்க, பைரவி மீண்டும் திடுக்கிட,
“சிவாவா?!” என்று மற்ற மூவரும் ஒருசேர திடுக்கிட்டு கேட்க,
“ம்ம் ஆமா சிவா தான்…” என்றான் ஜான்.
“சிவா?! யாரு அந்த மெக்கானிக்கா?” என்று சந்தோஷி பேச,
மாலதியோ “மெக்கானிக்கா?!” என்றாள் முகத்தைக் கோணி.
அவர்களுக்கு எல்லாம் சிவாவின் அடையாளம், அவனது மெக்கானிக் ஷெட் மட்டுமே. அவனது தனிப்பட்ட குணமோ, இயல்போ எதுவும் தெரியாது. ஆனால் பைரவிக்கு அப்படியில்லையே. அவனை அவனுக்காகவே பிடிக்க ஆரம்பித்தது.
தினேஷ் கண்களை சுறுக்கிப் பார்த்தவனுக்கு மனதின் ஒரு ஓரத்தில் ஒரு சிறு வலி கூட உண்டாகியது. உன்னை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று பைரவி சொல்லும்போது தோன்றாத வலி, இப்போது தோன்றியது.
தன்னை நண்பனாய் மட்டுமே பார்ப்பதால், நிராகரித்தாள் சரி. ஆனால் இப்போது எவனோ ஒரு மெக்கானிக்கை விரும்புகிறாள் என்றால் என்று அவனால் மேற்கொண்டு யோசிக்கவே முடியவில்லை.
பைரவிக்கு தெரியும், சிவாவின் பெயரைச் சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று. அதனால் தானே சொல்லாமல் விட்டது. சிறிது நாட்கள் போகட்டும் என்று அவள் எண்ணியிருக்க, இப்படி ஜான் போட்டு விசயத்தை உடைக்க, சந்தோஷிக்கு அப்படியொரு கோபம் வர
“ஏன் டி? எதுக்கு உனக்கு புத்தி இப்படி போச்சு? ஆர் யூ மேட் பைரவி? ஆன்ட்டியோட விருப்பம்னு தான் உன்னை அந்த ஏரியால ஸ்டே பண்ணவிட்டோம். ஆனா நீ.. ச்சே.. போயும் போயும் அவனை…” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,
“சந்தோஷி…” என்றாள் பைரவி கோபமாய்.
“என்ன? என்ன டி.. அவ சொல்றதுல என்ன தப்பிருக்கு. உனக்கு யாருமே கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சிட்டியா? எங்களை எல்லாம் பார்த்தா எப்படி தெரியுது? ஹா…” என்று மாலதியும் பேச, ஜான் கை கட்டி நின்று வேடிக்கைப் பார்த்தான்.
சட்டென்று அங்கே சூழ்நிலை மாறிவிட, பைரவிக்கு என்னவோ மன அழுத்தம் கூடுவதாய் இருந்தது. எங்கே ஏதேனும் பேசி நண்பர்களை எல்லாம் நோகடித்து விடுவோமோ என்று இருக்க, வார்த்தைகளை பேசுவதற்கு தேட, சிவாவை அவர்கள் மட்டமாய் பேசுவதையும் அவளால் பொறுக்கமுடியவில்லை.
பணம் காசினை கொண்டு ஒருவனை எடை போடுவதா?!
அவனிடம் இவர்களிடம் இருக்கும் வசதி இல்லாது இருக்கலாம். படிப்பு கம்மியாய் இருக்கலாம். ஆனால் அவனும் சக மனிதன் தானே. அவனது குணத்திலோ, பழக்க வழக்கத்திலோ இவர்கள் யாருக்கும் அவன் குறைவில் இல்லை தானே.
அது ஏன் இவர்களுக்கு புரியவில்லை என்று ஆற்றாமையாக இருந்தது.
ஜான் இதற்குமேல் எதுவும் பேசவில்லை. தினேஷ் கூட அமைதியாகிவிட, பெண்கள் இருவரும் ஒருவழி செய்துகொண்டு இருந்தனர். மாலதிக்கும் சரி சந்தோஷிக்கும் சரி பைரவி காதலிப்பது பெரிய தவறாய் இல்லை. சிவாவினை காதலிப்பது தான் பெரும் தவறாய் இருந்தது.
“உனக்கு ஏன் டி புத்தி இப்படி போகுது? அவங்க வீட்ல போய் நீ கால் வைக்க முடியுமா? ச்சே நினைச்சு பார்க்கவே அருவெறுப்பா இருக்கு. உன்னோட ரேஞ் என்ன? ஸ்டேடஸ் என்ன?” என்று மாலதி பேச,
“அதானே நல்லா சொல்லு டி. அந்த ஏரியாக்கு இவளை போகவிட்டதே பெரிய தப்பு. முதல்ல எங்கம்மாக்கிட்ட பேசி, இவளுக்கு…” என்று சந்தோஷி பேசும்போதே,
“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்…” என்று கத்தி விட்டாள் பைரவி.
மாலதியும், சந்தோஷியும் அதிர்ந்து பார்க்க “என்ன விட்டா பேசிட்டே போறீங்க? என்ன ரேஞ்? என்ன ஸ்டேடஸ்? எல்லாமே எங்கம்மா சம்பாரிச்சது தானே.. எனக்குன்னு இப்போ நான் என்ன பண்ணிட்டேன்.. அப்படி பார்த்தா சிவா எல்லாமே அவரா பண்ணிக்கிட்டது தான். ஹி இஸ் லைக் சுயம்பு…” என்று பேச,
“லுக் பைரவி.. அவன் என்னவா வேணும்னாலும் இருந்துட்டு போறான். பட் இந்த லவ், அதோட வர்ற லைப் எதுன்னாலும் உனக்கு செட்டாகாது…” என்றான் தினேஷ் பொறுமை இழந்து.
“ஏன்? ஏன் செட்டாகாது…?” என்றாள் பைரவியும் அதே வேகத்தில்.
“செட்டாகாது பைரவி.. உனக்கு இப்போ தனிமை அங்க.. அதுனால அங்க கொஞ்சம் பார்க்க ஹீரோ லுக்ல இருக்கிறவன் மேல ஒரு இன்ட்ரெஸ்ட்…” என்று சந்தோஷி பேச,
“வாட்? என்ன சொன்ன சந்து? கொஞ்சம் ஹீரோ லுக்ல இருக்கிறவன் மேல இன்ட்ரெஸ்ட்டா? என்னை நீ இவ்வளோ வீக்குன்னு நினைச்சிட்டியா? ஏன் நான் செலிப்ரடீஸ் யாரையும் பார்த்ததே இல்லையா? என்ன பேசிட்டு இருக்க நீ?“ என்று பைரவி திரும்பக் கேட்க,
“ம்ம்ச் வாட் எவர் பையு.. இது நல்லதுக்கு இல்லை.. நீ முதல்ல அந்த வீட்டை காலி பண்ணு. அந்த ஏரியா உனக்கு வேணாம். என்னோட ப்ளாட் ஒன்னு காலியாதான் இருக்கு. அங்க ஸ்டே பண்ணிக்கோ…” என்று மாலதி பேச, பைரவிக்கு ஐயோ என்று இருந்தது.
என்ன இது இவர்கள் பாட்டிற்கு முடிவு எடுக்கிறார்கள் என்று தோன்ற, என்ன பேசி எப்படி சமாளிப்பது என்றும் தெரியவில்லை. ஜான் மீதுதான் கோபம் கோபமாய் வந்தது. இவர்களுக்குத்தான் சிவா பற்றி தெரியாது. ஜானுக்குமா தெரியாது.
அவனுக்கு நன்றாய் தெரியும். இருந்தும் ஏன்தான் இவன் இப்படி செய்கிறானோ என்று இருக்க, கண்ணில் இருந்து நீர் வேறு வழியத் தொடங்க, அந்த நாளின் இனிமை மொத்தமாய் கெட்டது அவளுக்கு.
அவளுக்கு நல்லது செய்கிறோம் என்று நினைத்து, மற்ற நால்வருமே அவளது இடத்தினில் இருந்து யோசிக்கத் தவற சூழல் அங்கே கனத்துக்கொண்டே போக, பைரவி கண்களில் நீரினைக் காணவும், அனைவருக்குமே சற்று கோபம் மட்டுப்பட,
மாலதியும், சந்தோஷியும் அவளை ஆறுதலாய் பற்றியவர்கள் “ஹேய் பையு என்ன டி நீ? இதுக்கேன் அழற நீ? இன்னிக்கு உனக்கு எத்தனை ஸ்பெசலான நாள். இன்னிக்கு போய் நீ அழலாமா?” என்று கேட்க,
“நீ என்னை என்னவேனா திட்டிக்கோ பைரவி.. நான் செஞ்சதுல தப்பேதும் இல்லை..” என்று ஜான் அப்போதும் அவன் எண்ணத்தில் உறுதியாக நின்றுவிட,
“சரி விடுங்க…” என்றான் தினேஷ் சத்தமாய்.
சந்தோஷி “லீவ் இட் பைரவி. ரிலாக்ஸ் பண்ணு.. இப்போ இதுபத்தி ஒன்னும் நீ நினைக்க வேணாம். இங்க பாரு இப்போவும் சொல்றேன். சிவா நல்லவன் தான் இல்லைன்னு சொல்லலை.. அவனைப் பார்க்கும் போது எனக்குமே நல்ல எண்ணம் தான் வந்தது. ஆனா அவனோட லைப் ஸ்டைல் வேற.. உன்னோடது வேற… காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு.. அதுக்கு அப்புறம் ஒத்து வரலைன்னு உங்களுக்குள்ள பிரச்சனை ஆச்சுன்னா என்ன செய்வ?” என்று பொறுமையாகவே கேட்க,
“அப்படி பார்த்த யார்தான் டி லவ் பண்ணி கல்யாணம் பண்ண முடியும் சொல்லு…” என்றாள் பைரவியும் அவர்களுக்கு புரிய வைத்துவிடும் நோக்கில்.
தினேஷோ “மேற்கொண்டு எதுவும் பேசாதே…” என்பதுபோல் கண் ஜாடை காட்டியவன் “ஹேய் கைஸ் போதும்.. இந்த பேச்சு இப்போ வேணாம்.. கொஞ்ச நாள் போகட்டும்.. நானும் அவனை க்ளோசா வாட்ச் பண்றேன்… இப்போதைக்கு நம்ம இந்த நாளை கொண்டாடலாம்…” என்று சொல்ல,
பைரவியோ “இங்கபாரு தினு நீ சும்மா ஸ்பை வேலையெல்லாம் பார்க்காத..” என்று சொல்ல,
“ஓகே ஓகே.. நாங்க யாரும் எதுவும் சொல்லலை.. நீ ரிலாக்ஸா இரு…” என்றுவிட, அதன்பின் சிறிது நேரத்திற்கு எல்லாம் அவரவர் வீட்டிற்கு வந்துவிட, பைரவியை தவிர மற்ற நால்வரும் சேர்ந்து முடிவு செய்தது ஒன்றுதான்.
சிவாவிடம் பேசி, அவனை ஒதுங்கச் செய்யவேண்டும். அவ்வளவே.
எப்படி பேசினால் இந்த காரியம் நடக்கும் என்பதனை யோசித்து செயல்படுத்த இவர்கள் எல்லாம் திட்டம் போட, வீட்டிற்கு வந்த பைரவியோ சிவாவிற்கு அழைக்க, அவனோ உடனே எடுக்காமல் அடுத்து எடுக்க “என்ன சிவா?” என்றாள் வேகமாய்.
“என்ன பைரவி?” என்று அவனும் திரும்பக் கேட்க, அவனது குரலே சோர்வாய் இருந்தது.
“என்னாச்சு டல்லா பேசுறதுபோல இருக்கு?”
“இன்னிக்கு சரியான வேலை.. ரொம்ப அலைச்சலும் கூட…” என்றவன் “நீ சொல்லு எப்போ வந்த? இன்னிக்கு நாள் எப்படி போச்சு…?” என்று கேட்க, அவனிடம் நடந்தவைகளை சொல்லலாமா வேண்டாமா என்று ஒரே குழப்பமாய் போனது பைரவிக்கு.
“என்ன பைரவி?” என்று அவன் திரும்பக் கேட்க,
“அது சிவா…” என்று ஆரம்பித்தவள், பின் வேண்டாம் என்று யோசித்து “நா.. நான் என் பிரண்ட்ஸ் கிட்ட மட்டும் நம்ம விஷயம் சொல்லிட்டேன்…” என்றாள்.
“என்னது?!” என்று லேசாய் அதிர்ந்தவன் “ம்ம் நல்லது தான் சொன்னதும்.. ஆனா கண்டிப்பா இது செட்டாகாதுன்னு சொல்லிருப்பானுங்களே…” என்று சிவா கேட்க,
“பின்ன?!” என்று கேட்டு சிரித்தவன் “பைரவி எனக்கு படிப்பு கம்மின்னாலும், மனுஷங்களை படிக்கத் தெரியும். நிச்சயம் அவங்க எல்லாம் என்ன சொல்லிருப்பாங்கன்னும் தெரியும்…“ என்றவன்,
“உனக்கு எதுவும் மனசு குழப்பமா இருக்கா?” என்றான் நிதானமாய்.
“எ.. என்ன குழப்பம்?!” என்று பைரவி புரியாமல் கேட்க,
“இல்ல ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு. அதை தாண்டி நமக்குள்ள நிறைய வித்தியாசங்கள் இருக்கு. அடிப்படையே வேற.. ம்ம் நானும் இதெல்லாம் யோசிச்சேன் தான். ஆனா ஒன்னே ஒன்னு உன்னை நல்லா பார்த்துப்பேன்.. அது என்னால உறுதியா சொல்ல முடியும். இல்லை, உனக்கு மாற்று கருத்தோ, இல்லை குழப்பமோ எதுவும் இருந்தா சொல்லிடு.. பேசிக்கலாம்…” என,
‘என்ன பேசுகிறான் இவன்?!’ என்று அவளது மனது பக்கென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
“பைரவி…” என்று ஆழ்ந்த குரலில் சிவா அழைக்க, அவளிடம் பதிலே இல்லை.
அவளிடம் பதில் இல்லை என்றதுமே, அவள் நிஜமாய் குழப்பத்தில் இருக்கிறாள் என்று எண்ணியவன் “இங்க பாரு பைரவி.. மனசுல என்ன இருந்தாலும் சரி, வெளிப்படையா பேசு.. எதுவா இருந்தாலும்…” என்று சொல்ல, அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை.
“பேசு பைரவி.. எதுக்கு அமைதியா இருக்க நீ இப்போ? என்ன ஓடுது உன் மண்டைக்குள்ள.. என்ன தோணுது உனக்கு?” என்று கேட்க,
“எ.. எனக்கு.. எனக்கு இப்.. இப்போ உங்களை பார்க்கணும் போல தோணுது…” என்று அவள் நடுங்கும் குரலில், திணறிப் பேச அவளது இந்த ஒவ்வொரு வார்த்தைகளும், மாயம் செய்தது போல அவனது அத்தனை சோர்வையும் ஓடச் செய்து, அவளது இல்லம் நோக்கி வண்டியைக் கிளப்பச் செய்திருந்தது.