பைரவிக்கு மனதினில் ஒருவித படபடப்பு இருக்கத்தான் செய்தது. எத்தனை மேடைகள், எத்தனை கச்சேரிகள், எத்தனை பாடல்கள் வலைதளங்களில், தொலைகாட்சிகளில் என்று பாடியிருந்தாலும், முதல்முறையாய் இசையமைப்பாளரின் பின்னணி இசையில் பாடுவது என்பது முற்றிலும் வித்தியாசமான உணர்வாய் தான் இருந்தது.
‘ம்மா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க…’ என்று மானசீகமாய் சொல்லிக்கொண்டவள், அடுத்து சிவாவிற்குத்தான் அழைத்தாள். செல்வி ஏற்கனவே சொல்லியிருந்தார் நல்ல நேரம் பார்த்துத்தான் வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் என்று. அதுபோலவே நேரமும் பார்த்தவள், சிவாவிற்கு அழைக்க, அவனோ அழைப்பை ஏற்கவே இல்லை.
“என்னாச்சு? ஏற்கனவே இந்த டைம்னு சொல்லித்தானே இருந்தேன்…” என்று முனுமுனுத்தவள்
“யாராவது வந்திருப்பாங்க பாப்பா. நீ கிளம்பு நேரமாச்சு.. காரை எடுத்துட்டு நேரா ஷெட்டுக்கு போயிடு…” என்று செல்வி சொல்ல, சரி என்று கிளம்பியவள் நேராய் சிவாவின் ஷெட்டில் நிறுத்தியவள் வெளியில் இருந்தே அவனுக்கு அழைப்புவிடுக்க, அப்போதும் அவன் அழைப்பினை ஏற்கவில்லை.
பைரவியின் கார் வந்து நிற்கவும் உள்ளிருந்து சிண்டு வந்தவன் “யக்கோவ்…” என்று வர,
“என்ன சிண்டு, சிவா எங்க? கால் பண்ணியும் எடுக்கல…” என்று சொல்லியபடி இறங்கி, உள்ளே நடக்க சிந்துவோ “யக்கா யக்கா…” என்று அவள் பின்னேயே வர, சிவா மேலே புது கட்டிடத்தில் நின்றிருக்க, அவனோடு ரஞ்சிதமும் நின்று இருந்தார்.
ரஞ்சிதத்திற்கு மனதினில் சிவா பைரவி விசயத்தில் ஒரு யோசனை இருக்கத்தான் செய்தது. உறுதியாய் எந்தவொரு முடிவிற்கும் வரவும் முடியவில்ல. ஆனால் விஷயம் இன்னதுதான் என்று தெரிந்தும் அவரால் ஒன்றும் செய்யாமல் இருக்கவும் முடியவில்லை.
மனது ஒருநிலையில் இல்லை என்பதால், மகனிடம் நேரடியாகவே பேசிவிடலாம் என்று தான் இங்கேயே வந்திருந்தார். வீட்டினில் பேசலாம் தான். ஆனால் அவன் வந்தால் தானே. இப்போதெல்லாம் சிவா வீட்டிற்கு செல்வதையே குறைத்து இருந்தான். ஏதேனும் விஷயம் என்றால் மட்டும் தான் செல்வதே.
அதிலும், வீட்டினில் ஷாலினி வேறு இருக்க, அவள் முன்னாள் இதனை பேசுவது அத்தனை நன்றாய் இருக்காது என்று இந்நேரத்தில் ஷெட்டிற்கு வர, சிவா நன்றாய் உடை உடுத்தி, தன்னை கொஞ்சம் சீர்படுத்தி கிளம்பிக்கொண்டு இருந்தான்.
அவனும் அம்மாவின் வரவை எதிர்பார்க்கவில்லை.
கண்டதுமே “ம்மா…” என்று பார்க்க,
“வூட்டுக்கே வர்றது இல்லை நீ…” என்று கூறிக்கொண்டே வந்தவர், மகனின் பளீச் தோற்றத்தைக் கண்டு, கேள்வியாய் பார்த்தார்.
“எங்கயும் வெளி வேலையா?” என்று கேட்காமல் கேட்க, அவரின் மனதோ பைரவியோடு எங்கேனும் செல்கிறானோ என்று நினைத்தது.
“ம்ம் இருக்கட்டும்…” என்றவர் மேற்கொண்டு பேச தயங்கி நிற்க, அந்த நேரத்தில் தான் சிவாவிற்கு பைரவி அழைத்து அழைத்து பார்த்து, இங்கேயே வந்துவிட்டாள் “சிவா…” என்ற அழைப்போடு.
அவள் என்ன கண்டால், ரஞ்சிதம் அங்கே இருப்பார் என்று.
ரஞ்சிதத்தை கண்டதுமே, பைரவி சடன் ப்ரேக் போட்டது போல நிற்க, சிவாவோ “வா.. வா பைரவி…” என்றான் ஒருவித திணறலோடு.
ஏற்கனவே சொல்லிவிட்டான் தான், அவளை எனக்குப் பிடித்து இருக்கிறது என்று. ஆனால் இன்று அம்மாவும், பைரவியும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ள, அம்மா ஏதேனும் பேசிவிடுவாரோ என்று இருந்தது.
அதுவும் பைரவிக்கு இன்று முக்கியமான நாள் வேறு.
பைரவி ‘தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ…’ என்று பாவமாய் சிவாவை பார்க்க,
ரஞ்சிதாமோ “எல்லாம் என் மகன் தயாராகித்தான் நிக்கிறான்…” என்றார் ஒருவித கறார் குரலில்.
“ம்மா…” என்று சிவா எதையோ சொல்ல வர, அவன் பக்கம் ரஞ்சிதம் திரும்பவே இல்லை.
அவரின் பார்வை பைரவியை எடை போட்டது. அழகிதான். புத்திசாலி என்று பார்த்தாலே தெரிந்தது. அதிலும் அந்த பெரிய இடத்துத் தோற்றம் அவளை இன்னும் அழகாய் அவர் பார்வையில் காட்ட, அவளின் வசதி என்ன என்பது அவள் கையில், கழுத்தில் மின்னும் வைரங்களில் புரிய, கண்களை மெல்ல மூடித் திறந்தார்.
பணத்தின் பின்னே போபவர் அல்ல ரஞ்சிதம்.
ஆனாலும் மகனின் வளமான வாழ்வு இப்போது கண்முன்னே வந்து நின்றது.
ரஞ்சிதம் இப்படி மௌனமாய் நிற்க, சிவாவிற்கு ‘என்ன இந்த அம்மா?’ என்று யோசிக்க, பைரவியோ ஒன்றும் புரியாமல் சிவாவைப் பார்க்க, நேரம் வேறு ஓடிக்கொண்டு இருந்தது.
சிண்டுவிற்கு இந்த காட்சிகள் எல்லாம் நல்ல வேடிக்கையாய் இருக்க ‘என்னாகுமோ?’ என்றுதான் அவனும் பார்த்துக்கொண்டு இருந்தான்.
ஆழ்ந்த ஒரு பெருமூச்சினை விட்டு ரஞ்சிதம் மெதுவாய் கண்கள் திறந்து “சரி கிளம்பு சிவா…” என்று சொல்லிவிட்டு நடக்க, அவனுக்கோ தலையே வெடித்து விடும் போல் இருந்தது.
‘இந்தம்மா என்ன அர்த்ததுல பேசுது…’ என்று அப்போதும் அவன் பார்க்க, மனதில் திடீரென்று ஒரு யோசனை மின்னல் வந்து, பைரவியிடம் லேசாய் கண் ஜாடை காட்டினான், அம்மாவிடம் பேசு என்பதுபோல்.
முன்னர் எப்படியோ, இப்போது எப்படி இருந்தாலும் அவர் சிவாவின் அம்மா அல்லாவா, அதனால் அவளுக்குமே அவர் மீது ஒரு பயம் கலந்த மரியாதை தோன்றி இருக்க, இப்போது சிவாவும் ஊக்க “அ.. ஆன்ட்டி…” என்றாள் தயங்கி.
“ம்ம்…” என்று ரஞ்சிதம் பார்க்க,
“அ.. அது ஆன்ட்டி.. இன்னிக்கு முதல் தடவையா ரிக்கார்டிங் போறேன்…” என்றாள் மெதுவாய்.
“ஓ..!” என்றவர் “நல்ல படியா போயிட்டு வாம்மா…” என்றார் அவரும் தன்மையாகவே.
சிவாவிற்கு தான் காண்பதெல்லாம் கனவா நனவா என்று நம்பவே முடியவில்லை. அம்மாவின் இந்த திடீர் பொறுமையும், அமைதியும் நல்லதற்கா, இல்லை வேறு எதற்குமா என்பது விளங்காது பார்த்து நிற்க,
பைரவியோ “எங்க வீட்ல பெரியவங்க யாரும் இல்லை. நீங்க என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க…” என்று பட்டென்று ரஞ்சித்தின் கால் தொட, ரஞ்சிதம் நொடியில் பதறிவிட்டார்.
“அட.. என்னம்மா நீ.. நல்லா இரும்மா… நல்லா இருப்ப நீ.. நல்லா பாடு.. எந்திரி…” என்று வேகமாய் அவளை தூக்கி நிறுத்த, இதனை சிவாவும் எதிர்பார்க்கவில்லை.
‘பார்ரா…’ என்று பைரவியை இப்போது மெச்சுதலாய் பார்க்க, ரஞ்சிதம் என்ன நினைத்தாரோ அங்கே இருந்த சாமி படத்தின் முன்னே வைக்கப்பட்டு இருந்த, விபூதி குங்குமத்தை எடுத்து “நல்லா இரும்மா…” என்று மீண்டும் சொல்லி அவளுக்கு இட்டுவிட, நொடியில் பைரவிக்கு கண்கள் கலங்கிப்போனது.
‘அம்மா இருந்திருந்தால்…’ என்று அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
அவளது கலங்கிய கண்களைப் பார்த்து சிவா “பைரவி…” என்று அவளின் பக்கம் வர,
“ஒண்ணுமில்லை…” என்று கண்களை துடைத்துக்கொண்டவள் “ தேங்க்ஸ் ஆன்ட்டி…” என்று சொல்ல,
“ம்ம்… சிவா பார்த்து கூட்டின்னு போயிட்டு வா…” என்றவர் நிற்காமல் கிளம்பியும் விட்டார்.
இருவருக்குமே, ரஞ்சிதத்தின் செயலும், பேச்சும் மனதிற்கு சந்தோசமாய் இருந்தாலும், அது எதனை முன்னிட்டு என்று புரியாமல், ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொள்ள, பைரவிக்கு சரியாய் ஜான் அழைத்துவிட்டான்.
“கிளம்பிட்டியா பைரவி…” என்று கேட்க,
“இதோ.. கிளம்பிட்டோம்…” என்றவள் சிவாவிடம் கார் சாவியினை நீட்ட “நல்லா பாடு பைரவி…” என்று சொல்லிக்கொண்டே காரில் ஏற,
“ஆன்ட்டிக்கு என்னாச்சு?” என்றாள் அவளும்.
“தெரியலை. ஆனா இப்போதைக்கு நீ எதுவும் யோசிக்காத. உன்னோட நினைப்பு எல்லாம் இப்போ அந்த பாட்டுல மட்டும் தான் இருக்கணும்…” என்றவன், அவளைப்பார்த்து மென்னகை ஒன்றை புரிந்து
“என் பைரவி இதுபோல பல பல ரிக்கார்டிங்க்ஸ் போகணும். நானே கொண்டு போய் விடனும்…” என்று உற்சாகமாய் பேச, அந்த உற்சாகம் அவளையும் தொற்றிக்கொள்ள,
“ம்ம் என்னோட சிவாவும் இன்னும் நிறைய நிறைய முன்னேறனும்…” என்று பேச, இருவருக்கும் அடுத்து பேச்சு, சிரிப்புமாய் தான் அந்த பயணம் இருக்க, ஜான் பைரவிக்காக, ரிக்கார்டிங் தியேட்டர் வாசலிலேயே நின்று இருந்தான்.
காரில் இருந்து பைரவி இறங்கியதுமே ஜான் சிவாவை கண்டுகொள்ளாமல் “எத்தனை நேரம் பைரவி…” என்று கடிய,
“வந்துட்டோமே ஜான்…” என்றவள், திரும்பி சிவாவிடம் “வெய்ட் பண்றீங்களா?” என்று கேட்க,
“இல்ல நீ போ.. நான் திரும்ப வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்…” என்று சொல்ல,
“அங்கயா? என்ன திடீர்னு? யாரும் சொல்லவே இல்லையே?” என்று பைரவி சொல்ல,
“இப்போ திடீர் ப்ளான்…” என்றவன், சிவாவை ‘நீ இன்னும் போகவில்லையா?’ என்பதுபோல் பார்க்க,
சிவாவிற்கு அப்படியே ஜான் மீது கோபம் வந்தாலும், பைரவிக்காக, தாமஸிற்காக பொறுமை காத்து “ஓகே பைரவி… ஆல் தி பெஸ்ட்…” என்றவன் அவள் தோள் தட்டி “வீட்டுக்கு வந்துட்டு கால் பண்ணு…” என்றுவிட்டு கிளம்பிவிட, ஜான் பல்லைக் கடித்துக்கொண்டு நின்றிருந்தான்.
ஆனாலும் இப்போது பைரவியிடம் எதுவும் பேசக் கூடாது என்று எண்ணியவன், அவளை உள்ளே அழைத்துச் செல்ல, அவளுக்கு அடுத்து நேரம் போனதே தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரத்திற்கு மேலாகிவிட,
“வெல்டன் கேர்ல்.. எதிர்பார்த்ததுக்கு விட, ரொம்ப அருமையா பாடி இருக்க. கண்டிப்பா இந்த பாட்டு சூப்பர் டூப்பர் கிட் கொடுக்கும் பாரு..” என்று பைரவியை பாராட்ட, அவளுக்கோ மனது அத்தனை உற்சாகமாய் இருந்தது.
வெளியே வந்து கிளம்புகையில், சிவாவிற்கு அழைத்தவள், நடந்த அனைத்தையும் உற்சாகமாய் பகிர “சந்தோசம் பைரவி…” என்றான் அவனின் பாணியில்.
ஆனால் பைரவியோ அதீத மகிழ்வில் இருக்க “அவ்வளோதானா?” என்றாள்.
சிவா வேலையாய் இருந்தான் போலும், அதனால் “நீ சந்தோசமா இருக்கிறது எனக்கும் ரொம்பவே சந்தோசம் தான் பைரவி. இதுக்கு மேல எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியலை…” என்றவன்
“உன் பிரண்ட்ஸ் பார்க்க போகலையா?”என்று கேட்க,
“போகணும்.. நானே வந்துப்பேன்.. பை…” என்று வைத்துவிட்டாள்.
அவளுக்கு மனது அங்கலாய்ப்பாய் இருந்தது. நான் இத்தனை உற்சாகமாய், சந்தோசமாய் அழைத்துப் பேசுகிறேன், இவன் என்னடாவென்றால் அமைதியாய் சந்தோசம் என்றுமட்டும் சொல்கிறான் என்று அவளுக்கு ஒருமாதிரி சப்பென்று ஆகிவிட்டது.
அலைபேசியை பார்த்து நின்றிருந்தவளை ஜான் வந்து அழைக்க “நான் வரலை ஜான்…” என்றாள்.
“ஏன்?!” என்று புருவம் தூக்கி அவன் கேட்க,
“ம்ம்ச் போ…” என்று எரிச்சலாய் பைரவி பதில் சொல்ல,
“ஹேய் லூசு நீ முதன்முதலா பாடிருக்க. அதை செலிபரேட் பண்ண எல்லாரும் ப்ளான் பண்ணா, நீ என்ன இப்படி டல்லடிக்கிற?” என்று ஜான் கேட்க, பைரைவியின் எதிர்பார்ப்பும் சிவாவின் இடத்தில் இதுதான்.
அவளது நட்பு வட்டத்தில், ஒரு சிறு விஷயமென்றாலும் அவர்கள் இப்படித்தான் ஏதேனும் ஒரு இடத்தில் ஒன்றுகூடி அதை கொண்டாடி மகிழ்வதுண்டு. இல்லையா எங்கேனும் சிறிய அளவில் சுற்றலா போல சென்றுவருவார்.
அவளது சந்தோசத்தை சிவா இதுபோல ஏதேனும் செய்து கொண்டாடவேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆனால் இதெல்லாம் சிவாவிற்கு பழக்கமில்லாத ஒன்று என்றும், அவனுக்கு இப்படியெல்லாம் யோசனை கூட போகாது என்றும் அவளுக்கு யார் சொல்லி புரியவைப்பது.
மனது வாடிவிட, ஒருவித சோர்வு ஆட்கொள்ள, ஜான் இதனை சொல்லவும் ஒரு சின்ன உற்சாகம் மீண்டும் தோற்ற அவனோடு தன் தோழமைகளை காணச் சென்றாள்.
சிவாவிற்கோ அங்கே ஷெட்டில் வேலை நெட்டி முறித்தது. அதுபோக, மேலே கட்டிட வேலைகள் வேறு, என்னதான் தாமஸ் பொறுப்பெடுத்துப் பார்த்தாலும், பணம் காசு விஷயம் இவன் பொறுப்பு தானே.
பணம் ஏற்பாடு செய்திருந்த ஒரு இடத்தினில் இருந்து இன்னும் பணம் வரவில்லை. வங்கியில் லோன் கேட்டு வேறு வைத்திருக்க, அதற்கும் அன்றைய தினம் அலைச்சல்.
எல்லாம் சேர்ந்து அவனை அன்று கொஞ்சம் சோர்வடைய வைத்திருக்க, அடுத்து பைரவிக்கு அழைத்தும் அவன் பேசவில்லை, அவன் பேசியதை பற்றியும் அவன் பெரிதாய் எண்ணவில்லை. அவள் நானே வந்துகொள்வேன் என்றதுமே, பைரவியின் காரை அவள் வீட்டினில் கொண்டு சென்று நிறுத்திவிட்டு வந்தவனுக்கு அடுத்து நேரம் போனதே தெரியவில்லை.
ஆனால் பைரவிக்கோ மனது நண்பர்களுடன் இருந்தாலும் ஆறவில்லை. அடிமனது சிவாவை எண்ணிக்கொண்டு இருந்தது.
‘எத்தனை சந்தோசமா சொன்னேன்… சிம்பிளா முடிச்சிட்டான் சந்தோசம் பைரவின்னு…’ என்று கடிந்துகொண்டே இருந்தாள்.
“ஹேய் பையு… என்ன டி நீ எதோ யோசனைல இருக்க?” என்று மாலதி கேட்க,
“அவ எப்பவுமே இப்படித்தான் இருக்கா…” என்றான் ஜான் பூடகமாய்.
“என்னாச்சு பையு…” என்று சந்தோஷி கேட்க,
“நத்திங்…” என்று ஒற்றை சொல்லில் முடித்தவள், அங்கிருந்த ஸ்விமிங் பூல் பக்கம் திரும்பி அமர்ந்துகொண்டு, கையில் இருக்கும் பழச்சாறினை பருக, ஜான் மெதுவாய் சந்தோஷி, மாலதியிடம் கண் காட்ட, அந்த நொடி சரியாய் தினேஷும் மப்டியில் வந்து சேர்ந்தான்.