இப்போது விசாகன் “ம்மா.. தூக்கம் வருது” என்றான்.. பேச விடாமல்.
கருணா “சரி ஏதாவது வேணும்ன்னா கூப்பிடு.. கார் சாவி என்கிட்டே இருக்கட்டும் லாக் செய்துக்கோ” என சொல்லி காரெடுத்து சென்றான்.
ஊரிலிருந்து எல்லோரும் அழைத்து பேசி ஜாக்ரதையாக இருக்க சொல்லினர். சுபியின் மாமனார் “நீ வந்திருக்கலாம்” என்றார்.
சுபி “அதெல்லாம் ஒன்னும் பயமில்லை மாமா. பார்த்துக்கலாம், நீ எல்லோரும் பத்திரமா இருங்க..” என சொல்லி வைத்தாள்.
இரவெல்லாம் கரென்ட் இருந்தது. விசாகன் லேசாக பயந்திருந்தான்.. “ம்மா.. ஏன் ம்மா, இடி இடிக்குது..” என கேள்விகள்.. சுபி கதைகள் சொல்ல.. உறங்கிவிட்டான்.
கருணா பதினோரு மணிக்கு மேல் அழைத்தான் “சுபி காரினை மேல பார்க் செய்திருக்கேன்.. சேப்தான்..” என்றான்.
சுபி “தேங்க்ஸ் கரண், நம்ம மூன்றாவது தெரு.. நாராயணன் அங்கிள் கூப்பிட்டு கேட்டார்.. ஏதாவது ‘வேணும்மா ம்மா’ ன்னு. காலையில் மழை பார்த்துட்டு பால்.. பிரட்.. காய்கறி எல்லாம் கொண்டு வந்து கொடுக்க சொல்றேன்னு சொன்னார். எதாவதுன்னு கூப்பிட சொன்னார். கார் எங்கேன்னு கேட்டார்.. நான் கரண் நிருத்திட்டாருன்னு சொன்னேன்..” என்றாள்.
கரண் “புரியுதா.. இது கண்டிப்பா சைக்ளோன் தான். காலையில் நீ வந்துசேர் சொல்லிட்டேன்” என்றான்.
“சங்கீதா எனக்கு போன் செய்து கேட்டால்.. நான் பார்த்துக்கிறேன்னு சொல்லியிருக்கேன்” என்றான் கொசுறான மிரட்டலாக.
சுபி அப்போதும் வருகிறேன் என ஏதும் சொல்லவில்லை.
கரண் “பிடிவாதம்..” என்றான்.
சுபி “ம்.. கொஞ்சம் இருக்கும்.. எனக்கு” என்றாள்.
கரண் “பாரு நாளைக்கு நீ இங்கதான் வர.. அதுக்காகவே இந்த புயல் வரும்” என்றான்.
சுபி “என்ன சாபமா” என்றாள்.
கரண் “ஐயோ! என்ன இப்படி சொல்லிட்ட..” என நல்ல குரலில் சொன்னவன், பின் “கண்டிப்பா சாபம்தான்” என்றான் விளையாட்டாக.
கரண் “சொல்ல மாட்டேன், குட் நைட்” என சொல்லி வைத்துவிட்டான். இருவருக்கும் லேசான புன்னகைதான் இந்த பேச்சில்.
இரவில் எந்த பிரச்சனையும் இல்லை.. மிதமான மழை அவ்வளவுதான்.
காலையில் மழை விட்டிருந்தது.. சுபி, டூ வீலர் எடுத்துக் கொண்டு சென்று தேவையானவற்றை வாங்கி வந்தாள்.. மகன் எழுவதற்குள்.
சாரதா அழைத்து சுபியிடம் பேசினாள். சங்கீதா காலையில்தான் அழைத்து.. “என்ன டி புயலாம்” என்றாள். ஆக இப்போதுதான் அவளுக்கே தெரியும். அதற்குள் கரண் சங்கீதா பார்த்துக்க சொன்னால் என எவ்வளவு கதை..’ என எண்ணிக் கொண்டு அக்காவிடம் பேசினாள்.
அன்னை சிலபல அட்வைஸ் எல்லாம் சொன்னார். தந்தை கார் எங்கம்மா.. நீ மேலே இருந்துக்கோ.. என சொன்னார். பேசி அழைப்பினை துண்டித்தனர்.
அமைதியான வானிலைதான். அதுதானே அச்சம்.. மாலை நெருங்கும் நேரம் மழை வலுக்க தொடங்கியது. கரண் சாரதா இருவரும் வந்துவிட்டனர் “நீ வந்தே ஆக வேண்டும் வீட்டிற்கு” என.
விசாகனை அழைக்க குரு பின்னாலேயே வந்தான் குடையோடு.. “ஆன்ட்டி, வாங்க ஆன்ட்டி ப்ளீஸ்” என்றான் கண்களை விரித்து, கைகளை பிடித்துக் கொண்டு.
சுபிக்கு ஒருமாதியாக.. குருவின் சிகையை களைத்தவள் “சரி.. நீ விசாகனை கூட்டி போ.. நான் வரேன்” என்றாள்.
ஒன்றுமில்லை விசாகனுக்கு உடைகள்.. அவனின் மருந்துகள் என எடுத்துக் கொண்டு சாரதாவோடு வீடு வந்தாள்.
அருணகிரி விசாலாட்சி இருவரும் அமர்ந்திருந்தனர். விசாலாட்சி “என்ன ரகளை பண்ற நீ சுபி. மழை வருது.. எனக்கு தூக்கமே இல்லை நேற்று இரவு. நம்ம வீட்டில் இருக்க உனக்கென்ன பிரச்சனை” என்றார் அதட்டலாக.
அருணகிரி “சரி விடு.. நீ சாரதா ரூமுக்கு போம்மா..” என்றார்.
சுபி “இல்ல, அங்கிள்.. நான் பசங்க கூட இருந்துக்கிறேன்.” என்றாள்.
அருணகிரி “சரிம்மா.. உன் விருப்பம் போலிரு..” என்றார்.
விசாகன் அன்னையை வந்து பார்த்தான் “ம்மா..” என வந்து கட்டிக் கொண்டான். குருவும் அருகில் வந்து நிற்க.. சுபி, அவனின் பார்வையை உணர்ந்து.. குருவின் தாடையை வருடி “என்ன செய்றீங்க நாலுபேரும்..” என்றாள்.
குரு “வீடியோ பார்க்கிறோம்.. தீபு அதை போடலைன்னா அழறா.. நாங்க லூடோஸ் விளையாடுறோம்.. ஆனால், அவள் கலைச்சு விட்டுட்டே இருக்கா..” என பேசிக் கொண்டே இருந்தான்.
சாரதா முதல்முறை குருவின் பார்வையை கவனித்தாள்.. சுபியின் பொறுமையையும் கவனித்தாள். மூவரும் வேறு உலகத்தில் இருந்தனர், ப்ளே கார்ட்ஸ் வைச்சிருப்பீங்களே என அவளும்.. பதில் சொல்லிக் கொண்டு அவர்களும் என முழுதாக பதினைந்து நிமிடம் சென்றது.
சாரதா காபி கொண்டு வந்து கொடுத்துவிட்டு.. தள்ளி சென்றுவிட்டாள்.
சற்று நேரத்தில் பிள்ளைகள் விளையாட கிளம்பினர்.
பேச்சுகள் சென்றது,
சாரதா சப்பாத்திக்கு என எல்லாம் தயார் செய்துக் கொண்டிருக்க.. சுபி கிட்சேன் சென்று உதவி செய்ய தொடங்கினாள்.
இரவு, நேரமாக பிள்ளைகளுக்கு என உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் பிரகாஷ் வந்தார், வீட்டுக்கு. கருணா ரெசார்ட் சென்றிருக்கிறான்.. தேவையான ஏற்பாடுகளை செய்ய.. பிள்ளைகள் பேசிக் கொண்டே உண்டனர்.
பிரகாஷ் சுபியை பார்த்து புன்னகைத்து பேசிக் கொண்டிருந்தான்.
அருணகிரி “வாங்க மாப்பிள்ளை, சீக்கிரம் வந்திருக்கலாம்.” என்றார்.
பின் “மழை அதிகமாகுது.. கருணா, என்ன பண்றான் இன்னமும்” என்றார்.
பிரகாஷ் “வந்திடுவான் மாமா” என்றார்.
நேரம் கடந்தது பெற்றோர் உண்டுவிட்டு உறங்க சென்றனர். பிள்ளைகள் ஹாலில் டிவி போட்டு எதோ பார்த்துக் கொண்டே படுத்துக் கொண்டனர். தீபு பிரகாஷின் மடியில் உறங்கிவிட்டாள்.
சாரதா பெட் எடுத்து வந்து ஹாலில் போட்டுவிட்டாள். பிள்ளைகள் எல்லாம் அப்படியே உறங்க தொடங்கிவிட்டனர்.
எல்லோரும் ஏன்னென்றே சொல்லாமல் கருணாவிற்காக காத்திருக்க தொடங்கினர்.
சாரதா தங்களின் சின்னவயது கதைகள் சொல்லிக் கொண்டிருந்தாள்.
கரண் பதினோரு மணிக்கு மேல்தான் வந்தான்.. ‘காற்றுடன் மழை.. போலீஸ் விடவேயில்லை அப்பா.. சொல்லிட்டு வருவதற்குள்’ என பேசிக் கொண்டே அமர்ந்தான்.