மறுநாள் ஸ்ரீ வினு இருவரும் காலையிலிருந்து விசாகனை பார்த்துக் கொண்டனர்.
சுபி, சற்று நேரம் உறங்கிவிட்டு.. கிளினிக் சென்றுவிட்டு, மருத்துவமனை வந்து சேர்ந்தாள்.
கருணா, சுபிக்கு அழைத்தான் அந்த நேரத்தில்.. விசாகனை பற்றி விசாரித்தான். ஏதாவது தேவையா எனவும் விசாரித்து.. பேசி வைத்தான்.
மாலையில், விசாகனை வீடு கூட்டி வந்தனர். ஸ்ரீ எல்லாம் கவனித்துக் கொண்டான். இரவு எட்டு மணிக்கு மேல்.. தன் தந்தையை இங்கே இருக்க வைத்துவிட்டு தம்பதி திண்டிவனம் கிளம்பினர்.
வீடு வந்த முதல்நாள் என்னமோ விசாகன் கை காயத்தில் பயந்துவிட்டான் போல. அன்னையின் மடியிலேயே இருந்தான். அவன் உறங்கியதும், சுபி மதியமாகதான் கிளினிக் சென்றாள்.
மாலையில் சுபி வருவரை தாத்தாவோடு இருக்க தொடங்கினான் விசாகன். இரவில் தாத்தாவும் பேரனும் அமைதியாக டிவி பார்த்துக் கொண்டு, கேரம் விளையாடிக் கொண்டு ஹாலிலேயே உறங்கினர் இன்று.
சுபி, வேலையெல்லாம் முடித்து வந்தாள். கிளினிக் பற்றி விசாரித்துக் கொண்டால் போனில். கருணாவிற்கு தேங்க்ஸ் சொல்லவில்லை என தோன்ற.. நீண்ட செய்தியாக டைப் செய்து தனது நன்றியை மெசேஜ்’ல் அனுப்பினாள் பெண்.
கருணாவிற்கு அவளின் அந்த நாலுவரி செய்தி கதைபடிப்பது போலிருந்தது.. அவனும் பெரிய கும்பிடாக ஒரு இமொஜி அனுப்பி வைத்தான்.
விசாகனுக்கு கையில் கொஞ்சம் காயம் இருந்ததால் அது சரியாக நான்கு நாட்கள் ஆனது. அதுவரை பள்ளி செல்லவில்லை. தாத்தாவோடு விளையாடிக் கொண்டிருந்தான். சுபி கிளினிக் சென்றுவிட்டாள்.
தாத்தா, பேரனிடம் நிறைய தன் மகன் லக்ஷ்மி பற்றி பேசினார்.. ‘அவனுக்கு புட்பால் பிடிக்கும்.. எப்போதும் விளையாடிட்டே இருப்பான். உனைபோலதான் அம்மாமேல பாசமா இருப்பான்.. அம்மா பார்த்த பெண்ணைத்தான் கட்டிகிட்டான், அதான் அம்மாவையும் கூட்டிட்டே போய்ட்டான்..’ என எல்லாம் கலந்த உணர்வுகளை பேசிக் கொண்டிருந்தார். பேரனுக்கு சிலது புரியும் சிலது புரியாது. விசாகன் அப்பாக்கு ‘மசால்தோச பிடிக்குமா தாத்தா.. அப்புறம் அவெஞ்சர்ஸ் பிடிக்கும் தாத்தா..’ என கேட்டு, அவரை நிகழ்காலத்திற்கு கொண்டு வருவான்.
இந்த ஒருவாரம் தாத்தா பேரன் இருவருக்கும் நல்ல அன்டர்ஸ்டண்டிங் வந்திருந்தது. இருவரும் ஒன்றாகவே உண்பது.. இரவில் ஒன்றாகவே உறங்குவது.. என விசாகன் கதை கேட்டு பழகிக் கொண்டான்.
சுபியின் மாமனார் ஊருக்கு கிளம்பும் போது சுபியிடம் “விசாகன் வளறுகிற வயசு.. கண்டிப்பா இனிதான் அவன் கேள்வி கேட்ப்பான். எப்படியோ வளர்த்திடலாம்தான், தனியாக பிள்ளைகளை வளர்க்கலையா என்ன.. ஆனால் ம்மா.. துணையோடு குழந்தை இருந்தால்.. ஒரு குடும்பமாக இருந்தால் நல்லது. நாங்கள் எல்லோரும் இருக்கோம்.. சரிதான். ஆனால்..” என சொல்லி அமைதியானார்.
பின் அவரே “நாங்களே சொல்றேம்.. நீயேன் இன்னொரு துணையை பற்றி யோசிக்கலை. ஏன் தனியா ஓடனும்.. காலம் ரொம்ப கொடுமையானதும்மா.. பாரு! அவ போயிட்டா சாவு வராதான்னு எண்ணிகிட்டு இருக்கேன்.. ம்..” என சொல்லி கிளம்பினார்.
சுபிக்கு, கண்ணில் நீர் வந்தது “மாமா.. என்ன பேசுறீங்க” என்றாள்.
மாமனார், மேலே கைகாட்டி மனையாளை பற்றி நினைத்துக் கொண்டார்.
சுபிக்கு, மாமனாரின் இந்த வார்த்தைகள் ஒரு ஒரமாக வலிக்கத்தான் செய்தது. தனியாக மருத்தவமனைக்கு ஓடியது.. என்னவென புரிந்தாலும்.. ஒரு பயத்தில் நிர்கதியில்.. வாழ்வின் ஒரே நம்பிக்கையே விசாதானே.. அவனிற்கு, இப்படி நலமில்லை எனும் போது.. மகனை அனைத்துக் கொண்டு கதறியது.. எல்லாம் நினைவில் வருகிறது. ஆனால், மீண்டும் தொடக்கம்.. அதிலும் வீரா போலுள்ள ஒருவர் எனும் போது.. சுபிக்கு வலிகளே போதுமானதாக இருந்தது.
வீராதான் வந்திருந்தான் காரெடுத்துக் கொண்டு, பெரியப்பாவை அழைத்து செல்ல. உள்ளே வந்து, விசாகனை தூக்கி “எப்படி இருக்க விசா” என விசாரித்து.. அவனுக்கென வாங்கி வந்திருந்த தின்பண்டங்களை கொடுத்து நெற்றியில் முத்தமிட்டு.. பள்ளிக்கு அனுப்பி வைத்தான் சுபியோடு.
காலை உணவருந்தினான். ஸ்ரீ சொல்லியிருப்பதால் ஏதும் பேசவில்லை. வீராவும் ஒன்றும் பிரச்சனை செய்பவனில்லை. அமைதியாகவே பெரியப்பாவை கூட்டி சென்றான்.
விசாகன் பள்ளி சென்றிருந்தான். காலையில் தாத்தா ஊருக்கு செல்லுகிறார் என்றதும் முகம் வாடித்தான் போகிற்று. சுபி எண்ணிக் கொண்டாள்.. ‘இப்படிதானே இருக்கும் எங்கள் வாழ்க்கை.. அதை எல்லாம் யோசிக்க கூடாது..’ என மகனை கட்டி அணைத்து.. ‘நாம அடுத்தவாரம் ஊருக்கு போகலாம்’ என சமாதானம் சொல்லிதான் பள்ளி கூட்டி சென்றாள்.
சிலநேரம் சுபி இறுகி கொள்வாள்.. அது பயமா! வைராக்யமா? இல்லை லக்ஷ்மியின் மீதான பந்தமா என தெரியவில்லை.
சாரதா, அந்த வார இறுதியில் பிள்ளைகளோடு வீடு வந்தாள் விசாகனை பார்க்க. குரு விசாகன் தீபு அஸ்வின் என எல்லோரும் விளையாட்டுதான். அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் ஓடி ஓடி மூவரும் விளையாட, தீபு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மாலையில் எதோ சிற்றுண்டி இருவருமாக சேர்ந்து செய்தனர்.. எல்லோருடனும் அமர்ந்து உண்டுக் கொண்டிருந்தனர்.
மழை தொடங்கியது. பிள்ளைகள் எல்லாம் மேலே சென்று விளையாட தொடங்கினர்.
வீட்டிலேயே பிக்னிங் வந்த ஆர்பாட்டம் எல்லோருக்கும். இரவு வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.. ‘உணவு ஆர்டர் செய்கிறேன் சாப்பிட்டு போ’ என சுபி சொல்லிக் கொண்டிருந்தாள்.
அப்போது அருணகிரி போன் செய்தார்.. மகளுக்கு “சாரதா, மழை வருதும்மா.. இரண்டு மூணுநாள் மழை இருக்குமாம்.. புயல் இருக்குமாம்.. நியூஸ் பாருடா.. மாப்பிள்ளையை வர சொல்றீயா.. சுபியையும், கரன்ட் போக்கிடும்.. இங்க வந்தட சொல்றா அம்மா.. சொல்லிடு டா” என்றார்.
சாரதா சுபியிடம் சொல்ல.. இருவரும் நியூஸ் பார்த்தனர். சாரதா சுபியிடம் “அம்மா சொல்றாங்க நீ வா வீட்டுக்கு.. என்ன செய்ய போற” என்றாள்.
சுபி “நீ முதலில் போ.. அண்ணன்கிட்ட பேசு.. வீட்டுக்கு வர சொல்லு.. பிள்ளைகளை பத்திரமா கூட்டி போ.. என்கிட்டே UPS இருக்கு. நீ போ.. நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.
மூன்று பிள்ளைகளோடு.. சாரதா கிளம்பினாள்.. வீட்டிற்கு.
சுபி ஆர்டர் போட்டுக் கொள்கிறேன் என சொல்ல சொல்ல.. சூடாக இட்லி சாம்பார் கொண்டு வந்து கொடுத்து சென்றாள் தோழி. ஏதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள்.. சாரதா “நைட் அவ்வளவாக மழை இருக்காதாம் நாளை மதியம் முதல் காற்று மழை இருக்குமாம்.. இன்னிக்கு ஓகே, நாளை கண்டிப்பா நீ வந்திடனும் சொல்லிட்டேன்.. தண்ணி வந்திடும் சுபி” என்றாள்.
சுபி அதெல்லாம் பார்த்துக்கலாம்” என்றாள்.
கருணா இரவு வந்து.. சுபிக்கு அழைத்தான் “கார் சாவி எடுத்துட்டு வா” என்றான். சுபிக்கு தெரியும் மேடான இடத்தில் பார்க் செய்ய கேட்க்கிறான் என.. இதுபோல உதவி அக்கம் பக்கத்தினர் செய்வதுண்டு. இந்த மழை.. தண்ணீர் வரும் போது அச்சோசியேஷன் போல உதவிகள் செய்வார்கள் அவர்கள் ஏரியா மக்கள். அப்படி அப்பாவிடம் கார் சாவி வாங்கி காரினை மேலே நிறுத்துவதுண்டு. இப்போதும் அதற்குதான் கருணா கேட்க்கிறான் என தெரியும்.