விசாரணையின் போது எதிர்பாராதவிதமாக, பெரிய தலையாக வீராவும் சிக்கிக்கொள்ள, “என்ன பிரமா இந்த நேரத்துல குடோனுக்கு வந்திருக்க?” என அப்பொழுதும் வீரா சமாளிக்கத் தான் பார்த்தான்.
“அதை நான் தானே கேட்கணும் வீரா” என பிரமா வெகு அழுத்தமாகக் கேட்க, “ஆமா… ஆமா… நீ தான் கேட்கணும். உன்னோட குடோன் இது… நான் ஏன் இங்கே வந்தேனா…” என வீரா ஓரிரு நொடிகள் சமாளிக்க எந்த யோசனையும் வராமல் திணற,
“திருட சொன்னோமே, இன்னும் பொருள் வரலையேன்னு பார்க்க வந்திருப்ப” கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு வெகு நிதானமாக பிரமா கேட்டான். அவனால், வீரா செய்த நம்பிக்கை துரோகத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இப்படித் திருடிப் பிழைக்கிறானே என்ன புத்தி இவனுக்கு, இவனிடம் என்ன பணம், காசா இல்லை என்று கோபமாக வந்தது.
மாட்டிக் கொண்டோம் என்று புரிந்ததும் வீராவின் தோரணை மாறியது. “பரவாயில்லை, கண்டுபிடிச்சுட்ட, காலத்துக்கும் கண்டுபிடிக்காம முட்டாளாவே இருப்பியோன்னு நினைச்சேன்” என்றான் நக்கலாக.
“ஆமாம்டா உன்னை மாதிரி களவாணி கூட எல்லாம் நட்பு பாராட்டிட்டு இருக்கிற நான் கண்டிப்பா முட்டாள் தான்” என பிரமா சீற, வெளியில் என்ன சத்தம் அதிகமாக இருக்கிறது என தெய்வானை சத்யாவை கீழே படுக்க வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்து பார்க்க, அங்கே வீராவும் பிரமாவும் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்.
“இப்பவே இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்” என பிரமா காவல்நிலையத்திற்கு அழைப்பதற்காகக் கைப்பேசி எடுத்தது தான் தெரியும். அந்த போன் தெறித்து விழுந்தது. வீரா அவரை விட வேகமாக அதனைத் தட்டி விட்டிருந்தான்.
பிரமா கோபமாகத் திரும்பிப் பார்க்க, “இங்கே பாரு, நீ இந்த மாதிரி எல்லாம் செய்வேன்னு தெரிஞ்சு தான், உனக்கு ரெண்டாவது குழந்தை பிறந்ததும் அதை சாமர்த்தியமா மாத்தி வெச்சுட்டேன், இப்ப உன்னோட உண்மையான குழந்தை எங்க இருக்குன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்” என்று சொல்ல, பிரமா, தெய்வானை இருவரும் அதிர்ந்து போயினர்.
பத்து மாதம் சுமந்து பெற்ற தங்கள் உயிர் நீரில் பிறந்த குழந்தையை இழந்தது தவிப்பு என்றால், ஏழு ஆண்டுகள் நெஞ்சில் சுமந்து பாராட்டி, சீராட்டி வளர்த்த குழந்தை தங்கள் உரிமை இல்லை என்று எப்படி ஏற்றுக் கொள்வது என்கிற நெஞ்சை அறுக்கும் வேதனை மறுபுறம்.
“என்னடா சொல்லற?” பிரமா ஆவேசப்பட, “உண்மையை தான் சொல்லறேன். சத்யேந்திரன் உங்க குழந்தை இல்லை” என்று வெறி பிடித்தவன் போல சிரித்தான்.
“ச்சீ ரெண்டு குடும்பத்து உணர்வுகளோடு விளையாடியிருக்கியே நீ எல்லாம் மனுஷனா?” பிரமாவிற்கு பொறுக்கவே முடியவில்லை.
“இங்கே பாரு, எனக்கும் உன்னோட குப்பை கொட்டறது, திருடி சேர்க்கிறது இதெல்லாம் போர் அடிச்சிடுச்சு. அரசியல் பக்கம் கொஞ்சம் கொஞ்சமா போக ஆரம்பிச்சிட்டேன். நான் செஞ்ச திருட்டை எல்லாம் கண்டுக்காம விட்டுட்டா உன் மகன் எங்கிருந்தாலும் நல்லா இருப்பான், அவன் எங்க இருக்கான்னு கூட உனக்கு சொல்லுவேன், இல்லையா அப்பறம் நடக்கிற எந்த விபரீதத்துக்கும் நான் பொறுப்பாக மாட்டேன்” என்று அனாயசயமாக சொல்ல, பிரமாவிற்கு இவன் எல்லாம் மனிதனா என்றுதான் தோன்றியது.
அவனையே வெறித்துப் பார்க்க, “என்ன உன் உண்மையான பையன் உனக்கு வேண்டாமா? அவன் எங்க இருக்கான்னு உனக்கு தெரிஞ்சுக்க வேண்டாமா?”
“ச்சீ அற்ப பிறவிடா நீ எல்லாம்… அவன் உண்மையான பையன்னா இத்தனை வருஷம் பாசத்தைக் கொட்டி வளர்த்த இந்த பையனை நான் திருப்பி தரணுமா? அப்படி நாங்க குழந்தைகளை மாத்திக்கிட்டாலும் அவங்க பிஞ்சு குழந்தைங்கடா அவங்களால புது இடத்துல ஒட்டிக்க முடியுமா? என்ன மாதிரி புத்தி உனக்கு? உன் சுயநலத்துக்கு எவ்வளவு கேவலமா நடந்திருக்க, உன்னை எல்லாம் சும்மாவே விடக்கூடாது” என்று ஆவேசமாகச் சொல்ல,
தான் இப்படி சொன்னால், தனது மிரட்டலுக்கு அடிபணிவான் என்று எண்ணியிருந்த வீராவின் திட்டம் பலமாக அடி வாங்கியது. இனி இவனை விடுவது தனக்கு ஆபத்து என்று புரிய, காவலாளிக்குக் கண் காட்டினான்.
பிரமா வீரா சொன்னதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறி நின்றிருந்த சமயம், அவர் சுதாரிக்கும் முன்பு காவலாளி அவரை அழுத்திப் பிடிக்க அங்கிருந்த பெரிய கத்திரியை எடுத்து வீரா பிரமாவின் வயிற்றில் சொருகியிருந்தான்.
“அம்மா…” என்று பிரமா கத்தியபடி சரிய, தெய்வானையும் வீரா சொன்ன செய்தியில் விக்கித்து போய் தான் நின்றிருந்தவர், திடீரென்று இப்படியொரு செய்கையை எதிர்பார்க்காமல், “என்னங்க…” என்று கத்தியபடி வேகமாகக் கணவரை நோக்கி ஓடி வந்தார்.
“என்னடா? சாகும்போது கூட உனக்கு துணைக்கு ஆள் வேணுமா?” என கீழே சரிந்திருந்த பிரமாவை ஓங்கி உதைத்து விட்டு தெய்வானையையும் குத்துவதற்காகத் திரும்ப, இதுவரை எங்கும் தலை வணங்கியிராத பிரமா வீராவின் காலை பிடித்திருந்தான்.
“இந்த பிரச்சினையை இப்பவே விட்டுடலாம். அவளை எதுவும் செஞ்சுடாத…” என்று கெஞ்ச,
“அட பிரமா என் காலுல விழுந்து கெஞ்சறாரா? பார்க்கவே இந்த காட்சி எவ்வளவு அழகா இருக்கு” என சிலாகித்துச் சொல்ல, தெய்வானையும் வீராவின் காலில் விழுந்திருந்தார். “ப்ளீஸ்ண்ணா எங்களை விட்டுடுங்க. எங்களை நம்பி குழந்தைங்க இருக்காங்க” என கதற,
“எதுவா இருந்தாலும் தொடங்கறதுக்கு முன்னாடி தான் நான் நிறுத்துவேன் மா… தொடங்கிட்டா நான் நிறுத்தவே மாட்டேன், என்கிட்ட இதுவொரு கெட்ட பழக்கம்” என உச்சுக்கொட்டியபடி சொன்னவன், அவள் தலையில் ஓங்கித் தட்டினான். கீழே அமர்ந்திருந்தவள் அப்படியே குப்புற சரிந்து விழுந்து முகமெல்லாம் காயம். அவள் முதுகிலும் அந்த பெரிய கத்தரிக்கோலை வைத்து ஒரு குத்து குத்தினான். ரத்தம் பீறிட்டது.
தெய்வானை கதற, “இவங்களை இப்படி துடிக்க வெச்சு கொன்னு அதை ரசிக்க நான் என்ன கொலைகாரனாடா? குடோனோட சேர்த்து கொழுத்தி விடு உன்னையும், வெளில மயங்கி இருக்கிற இன்னொரு வாட்ச்மேனையும் நான் அடிச்சு கட்டி போடறேன்” என சொல்லியபடி இருவரையும் உதைத்துத் தள்ளிவிட்டு வெளியில் சென்று கதவைச் சாற்ற, உறங்கி எழுந்து அம்மாவை தேடி அழுதபடி வந்த சத்யா செல்லும் வீராவை பாத்திருந்தான்.
அம்மாவும் அப்பாவும் ரத்தம் வழியக் கீழே விழுந்து கிடக்க, அழுதபடி அவர்களிடம் வந்து கட்டிக்கொண்டான். தன் பிஞ்சு கரத்தால் அப்பாவின் வயிற்றில் வழியும் குருதியை அழுத்திப் பிடிக்க, பெற்றவர்கள் கதறி அழுதார்கள்.
பிரமாவும் தெய்வானையும் பிள்ளையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று பதற ஒரு வழியும் தென்படவில்லை. அவன் வீராவின் கையில் சிக்கி விடக்கூடாது என்று எண்ணிய பிரமா அங்கு சமீபமாக சரி செய்ய மறந்திருந்த உடைந்த ஜன்னல் கம்பி வழியே மகனை வெளியே வீசி விடலாம் என்று யோசித்து, “சத்யா தம்பி அம்மா, அப்பாவுக்கு அடி பட்டிருக்கு நீ போயி இங்கே பக்கத்துல ஏழுமலை மாமா வீடு இருக்கில்ல அங்கே போயி மாமாவை கூட்டிட்டு வாடா” என்று சொல்ல,
“இருட்டா இருக்கு. உங்களை விட்டுட்டு போக மாட்டேன். எனக்கு அம்மா, அப்பா வேணும்” என்று ஏழு வயது சத்யா அழுதான்.
“ரத்தம் வருது. அம்மா, அப்பாவால நடக்க முடியாது. நீ பெரிய பையன் தானே, இதே ஆதி அண்ணன் இருந்தா இருட்டுலேயும் போயிடுவான். நீ தான் போக மாட்டேங்குற” என பேசியே சரிக்கட்டி, “நல்லா நியாபகம் வெச்சுக்க, ஏழுமலை மாமா கிட்ட தான் போகணும். அப்பா பிரண்ட் வீரா அங்கிள் ரொம்ப பேட் அவரை பார்த்தா ஒழிஞ்சுக்க” என எல்லாம் சொல்லித்தந்து தான் இருவருமாகச் சிரமப்பட்டு உடைந்த ஜன்னல் வழியே மகனை வெளியே போட்டார்கள்.
அழுதபடி கொஞ்ச தூரம் மாமா வீட்டைத்தேடி நடந்தவனுக்கு இருளில் நடக்க முடியவில்லை. மிகுந்த பயமாக இருந்தது. பயத்தில் அழுதபடியே முன்னோக்கிச் செல்லாமல் நின்றுவிட, அந்த நேரம் குடோன் பற்றி எறியவும், “அம்மா, அப்பா…” என கதறியபடி மீண்டும் அவ்விடமே வந்தான்.
அப்பாவால் பேட் என்று அடையாளம் காட்டப்பட்டிருந்த வீரா அங்கிள் தான் கட்டிடத்தை எரித்துக் கொண்டிருந்தார். உள்ளே அம்மா, அப்பா அலறும் சத்தம் கேட்டது. ஓடி வந்ததில் மூச்சிரைக்க, பெற்றோரின் மரண ஓலம் காதை அடைக்க, தலை எல்லாம் கிறுகிறுவென சுற்ற அங்கேயே சுருண்டு விழுந்திருந்தான்.
நெருப்பு எரிவது தெரிந்து ஆட்கள் கூடி விடுவார்கள் என புரிந்து, இரு காவலாளிகளையும் அடித்து நெருப்புக்குள் போட்டுவிட்டு வீரராகவன் துரிதமாகச் சென்றிருந்தான். அவனோடு கூட்டுச் சேர்ந்த காவலாளியும் சேர்ந்து நெருப்புக்கு இரையாகியிருந்தான்.
ஏழுமலை வீடு தான் அருகில் என்பதில் அவர் தான் முதலாக வந்திருந்தார். அழகாண்டாளும் வந்துவிட, சொத்து பிரச்சினையை மனதில் வைத்து ஏழுமலையைத் தான் குற்றவாளியாகப் பார்த்தார் அவர்.
“அத்தை, நான் எப்படி அத்தை?” என ஏழுமலை கதற, எந்த பேச்சும் எடுபடவில்லை. பூவரசி இடிந்து போனார். நாம் சொத்துக்கு ஆசைப்படாமல் இருந்திருந்தால், கணவருக்கு இந்த நிலை வந்திருக்காது தானே என காலங்கடந்து ஞானம் பெற்றவர், சொத்துக்களை எல்லாம் பிரமா குடும்பத்திற்கே எழுதிக் கொடுத்து விட்டு அந்த ஊரை விட்டே சென்றிருந்தார்.
சத்யாவிற்கு நடந்த அதிகப்படியான அதிர்ச்சியால் எதுவும் நினைவில் இல்லை. இருட்டென்றால் பயம், நெருப்பைப் பார்த்தால் அலறி துடித்தான். காய்ச்சலில் விழுந்து கொண்டே இருந்தான். பழைய விஷயங்களை அவனிடம் பேச வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்த இருந்த ஒரே சாட்சியும் அடங்கிப் போனது. பேரன் உயிரோடு இருந்ததே அழகாண்டாளுக்கு பெரிய விஷயமாக இருக்க, பேரன் அவர்களோடு தான் இருந்தான், என்று யாரிடமும் சொல்லியிருக்கவில்லை.
சத்யா அறிந்த விஷயங்கள் எல்லாம் மருத்துவரின் சிகிச்சை பலனால் வெளியே வந்திருக்க, அது ஆதிக்கும் போய் சேர்ந்திருந்தது.