காவியத் தலைவன் – 24
ஆதீஸ்வரனுக்கு தாரா அப்படி தளர்ந்து சோர்ந்து நடப்பதைப் பார்த்ததும் மனதைப் பிசைந்தது. இரு வீட்டுக்கும் செல்லப்பிள்ளையான அவளைக் கோபத்தில் அடித்தது பெரும் தவறாகவே பட்டது.
ஆனாலும் அவள் செய்கையில் இன்னமும் கட்டுக்கடங்காத ஆத்திரம் தான்! அடித்துவிட்ட பிறகும் கூட அவள் மீதிருந்த கோபம் துளியும் குறைய மறுத்தது.
‘முளைச்சு மூணு இழை விடலை. அதுக்குள்ள பேச்சைப் பாரு!’ என ஆத்திரத்துடன் எண்ணிக் கொண்டவனுக்கு இன்னமும் அவள் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “கல்யாணத்தைப் பத்தி பேசற வயசா அவளுக்கு! எல்லாரும் சேர்ந்து செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்காங்க” என எரிச்சலாக முணுமுணுத்தபடி, விறுவிறுவென வீட்டிற்குள் சென்றான்.
அவன் அறைக்குள் நுழைந்ததுமே அவன் பின்னாலேயே வேகமாக உள்ளே நுழைந்திருந்தான் சத்யேந்திரன். அவன் முகமும் அழுது சோர்ந்திருந்தது. சற்று முன்பு பார்த்த தாராவின் முகமும் இப்படித்தானே வெகுவாக சோர்ந்து இருந்தது என்று ஆதியின் யோசனை போனது.
அதற்குள் சின்னவன் அவனது அருகில் வந்து, “உங்களை விட தாரா தான் அழகு, அவளுக்குத் தான் அறிவு நிறைய இருக்கு. அவளுக்கு தான் நிறைய விளையாட்டெல்லாம் தெரியும்…” என்று என்னென்னவோ பேசியவனின் சொற்களிலிருந்த சாரம்சம் உங்களை விட தாரா சிறந்தவள் என்பது தான்!
அவன் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாதவனும், “என்ன சத்யா என்ன சொல்லற?” என புரியாமல் கேட்க,
“பாருங்க நீங்க ஒன்னும் சூப்பர் மேன் எல்லாம் இல்லை” என்றான் தேம்பியபடி.
“என்னடா உளறிட்டு இருக்கு? நான் சூப்பர் மேன் அப்படின்னு எப்ப சொன்னேன்?”
“பாட்டி தான் எப்பவும் நீ தான் சூப்பர்ன்னு சொல்லிட்டே இருக்காங்க, அதுக்கு எதுக்கு எங்களை திட்டணும்?” கோபமும் வீம்புமாகக் கேட்டான்.
“பாட்டி புதுசா திட்டற மாதிரி சொல்லற. அவங்க சொல்லறதையெல்லாம் விடுடா. நீயும் நல்லா தான் படிக்கிற” என ஆதி சமாதானம் செய்ய,
“என்னை மட்டும் திட்டினா பரவாயில்லை. இன்னைக்கு தாராவை திட்டி அழ வெச்சுட்டாங்க. அவங்க என்ன சொல்லறது? தாரா உன்னை கட்டிக்கக் கூடாதுன்னு… நீ கட்டிக்காட்டி தாராவை நான் கட்டிப்பேன். மாலை எல்லாம் போட்டு கல்யாணம் நடக்கும், இல்லாட்டி கூட இன்னும் சூப்பர் மாப்பிள்ளை கிடைக்கும். இல்லாட்டி உன்னையே கூட கட்டி வைப்பேன்” என மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று சொல்வார்களே அது போல சம்பந்தமே இல்லாமல் என்னென்னவோ இணைத்து பேசினான்.
இப்பொழுது தான் தாரா ஏன் அப்படி பேசியிருக்கக் கூடும் என்று சிறு சந்தேகம் ஆதிக்கு பொறியாகத் தட்டியது. “ஸ்ஸ்ஸ்… என் செல்ல தம்பி தானே, அழாதடா. அழாம சொல்லு, அப்பத்தானே என்னன்னு எனக்கும் புரியும்” என நைச்சியமாகப் பேசிப்பேசி தம்பியிடம் முழுவதுமாக விவரத்தைக் கறந்து விட்டான்.
‘சின்ன பசங்க ஏதோ விளையாடிட்டு போறாங்க, இந்த பாட்டி ஏன் இப்படி பேசி வெச்சாங்க’ என அவனுக்கு ஆத்திரமாக வந்தது. ‘ம்ப்ச், நிலைமை புரியாம அவளை வேற அடிச்சுட்டேனே’ என அவனுக்கு குற்றவுணர்வாக இருந்தது. மனக்கண்ணில் விழிகளில் வலியுடன் அவனையே வெறித்துப் பார்த்த சின்னவளின் உருவம் வந்து அவனை இம்சித்தது. ‘சாரி பாப்பா’ என்று முணுமுணுத்துக் கொண்டான்.
பாட்டியின் எண்ணப்போக்கு, பூவரசி அத்தையின் எண்ணப்போக்கு, குடும்ப அரசியல் இதெல்லாம் புரியும் வயது அவனுக்கில்லையே! பெரியவர்கள் மீதிருக்கும் கோபத்தை வரைமுறையின்றி சின்னவர்கள் மீது இறைப்பது பெரும்பாலான வீடுகளில் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இங்கும் அப்படி தாரா பலியானாள்.
இதற்கும் அத்தையின் குணம் புரிந்து பண உதவி என்று வந்து ஏழுமலை ஒருநாளும் நின்றதே இல்லை. ஆனால், அவன் மனைவி பூவரசி அப்படி இருக்கவில்லையே! பாவம், ஏழுமலைக்கு அது தெரிந்திருக்கவில்லை.
பூவரசி, “எங்க அத்தையும் இந்த வீட்டு பொண்ணு தானே, அவங்களுக்கும் இந்த சொத்துல உரிமை இருக்கு. எங்களுக்கு என்ன நாங்க பங்கா கேட்கிறோம். எங்களுக்கும் கொஞ்சம் தரலாம் இல்லை அண்ணா” என பணம் வாங்கியதெல்லாம் போதாமல் பிரமாவிடம் சொத்து கேட்டு நின்றாள்.
பிரமாவிற்கு இப்படி உரிமை அது இது என்று பேசி வந்து நிற்கும் பெண்ணைப் பார்த்து பயங்கர அதிர்ச்சி!
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நேக்கு போக்காக அவள் கேட்டாலும் அவள் கேட்பது சொத்தில் பங்கு தானே! ஏழுமலைக்குத் தெரியாமல் இவள் இப்படி வந்து கேட்கிறாள் என பிரமாவிற்கு தெரியவில்லை.
மனைவி வந்து கேட்கிறால் என்றால் கணவனுக்குத் தெரியாமலா இருக்கும் என்ற எண்ணம் தானே வரும். இதென்ன இப்படி மனைவியை விட்டு சொத்து வேண்டும் என்று கேட்கிறான் என கொஞ்சம் ஏழுமலை மீது மன சங்கடம் அப்பொழுது தான் பிரமாவிற்கு தொடங்கியது.
அதுநாள் வரையிலும் ஏழுமலை, பிரமா இருவரின் நட்பும் மிகவும் இறுகியது. அவ்வளவு எளிதில் அவர்களை அழகாண்டாளின் அதிருப்தியால் கூட பிரிக்க முடியவில்லை. ஏழுமலை பிரமா மீது மிகுந்த விசுவாசமாய் இருப்பான். ஏழுமலைக்கு ஒன்று என்றாலும் பிரமா வந்து முதல் ஆளாய் நிற்பார்.
இவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாய் இருந்ததாலேயே பிரமாவிடம் வீரராகவனால் அதிக அளவில் வாலாட்ட முடிந்ததில்லை!
ஆனால், பூவரசி பணத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து சொத்தில் பங்கு கேட்கும் அளவிற்கு வந்ததும், மிகுந்த அதிருப்தியும் மனக்கசப்பும் கொண்ட பிரமா மெல்ல மெல்ல ஏழுமலையிடமிருந்து ஒதுங்கினார். நண்பன் வீரராகவனை அதிகம் சேர்த்து கொண்டு இவனை ஓரம் கட்ட ஆரம்பித்தார்.
ஏழுமலைக்கு காரணம் புரியாமல் திணறினார். நேரடியாக ஒதுக்கவில்லை என்றாலும் கொஞ்சம் இடைவெளி வந்துவிட்டது அவருக்கும் புரிந்தது. என்ன அதற்கான காரணம் தான் புரியவில்லை. ஆனாலும் மாமனை விட்டு விலகவே மாட்டார். தினமும் சென்று பார்த்து வருவார். ஏதாவது வேலை இருக்கா என கேட்டு நிற்பார்.
பிரமாவுக்கு ஏழுமலையின் உண்மையான அன்பு புரியவில்லை. அவரை தொடர்ந்து புறக்கணித்தார்.
இவர்களுக்குள் தன்னால் எழுந்துவிட்ட பிரிவினை புரியாமல் பூவரசி வேறு அவ்வப்பொழுது பிரமாவை நச்சரிக்க, சில சொத்துக்களை ஏழுமலை பெயருக்கு மாற்றி விட்டார்.
ஏழுமலைக்கு ஒன்றும் புரியவில்லை. இதெல்லாம் எதுக்கு மாமா என ஆட்சேபனை காட்டினார். ஆனாலும் பிரமா முடிவெடுத்தால் தடுப்பவர் யார்?
அழகாண்டாளுக்கு சொத்து போகிறதே என வயிற்றெரிச்சல். உயிரோடு இல்லாத ஜோதிமணியை சபித்தார். அவர்கள் வம்சத்தையே சபித்தார். அவர்களை அதன்பிறகு வீட்டிற்கே சேர்க்கவில்லை.
ஏற்கனவே அவராலும் அவரின் மூத்த பேரன் ஆதியாலும் மனதளவில் அதிகமாகக் காயம் பெற்றிருந்த தாரா அந்த வீட்டுப்பக்கமே வருவதில்லை. இப்பொழுது அழகாண்டாள், பிரமானந்தத்தின் ஒதுக்கம் ஏழுமலையையும் வரவிடாமல் செய்து விட்டது.
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற கூற்றுக்கு ஏற்ப, வீரராகவனின் களவை பிரமா கண்டுபிடிக்கும் நாளும் வந்தது.
அன்று ஒரு விசேசத்திற்கு மனைவி மற்றும் இளைய மகனுடன் பிரமானந்தம் சென்றுவிட்டு திரும்பும் போது, அவர்களின் துணிக்கடைக்குத் தேவையான உடைகள் எல்லாம் குடோனில் வந்து இறங்கியிருக்கவே மனைவிக்கு அதைக் காட்டலாம் என்று சட்டென்று தோன்றிய யோசனையின் பயனாக அங்கே வண்டியை விட்டிருந்தார்.
உடைகளில் எல்லா பண்டல்களிலும் ஒன்று வீதமாகத் திருடுவது வீரராகவனின் வாடிக்கை. காவலுக்கு இருக்கும் இரண்டு ஆட்களில் ஒருவன் வீராவின் ஆள். அவன் மூலம் இன்னொருவனை மயக்கமடைய வைத்து விட்டு திருட்டை இத்தனை நாட்கள் சாதுரியமாக நடத்திக் கொண்டிருக்க, இன்று பிரமானந்தத்தின் திடீர் வரவால் மாட்டிக்கொள்ள நேரிட்டது.
அந்த காவலாளி மாட்டிக்கொண்ட போதும், வீரராகவனை காட்டிக்கொடுக்காமல் சமாளித்துக் கொண்டு தான் இருந்தார். ஆனால், வீரா தான் இன்னும் பொருள் வந்து சேரவில்லை என்று விசாரிக்க வந்து பார்க்க, பிரமாவிடம் மாட்டிக்கொண்டான். அந்த காவலாளியைச் சிபாரிசு செய்தது வீராவாயிற்றே! அதோடு இந்த நேரத்தில் வீரா அங்கு வர வேண்டிய அவசியமும் இல்லை என்பதில் பிரமாவிற்கு அவனைப் பார்த்ததுமே நிலைமை விளங்கிவிட்டது.
ஏற்கனவே மனைவி, மகனை அலுவலக அறையில் விட்டுவிட்டு தான் காவலாளியிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். நேரமானதால் சத்யேந்திரன் உறங்கியிருக்க, அவனை மடியில் வைத்தபடி தெய்வானை அமர்ந்திருந்தார். இதுபோல தவறுகள் நடப்பதும், அதற்கு கணவர் உரிய தண்டனை வழங்குவதும் அவ்வப்பொழுது நடப்பது தான்! பிரச்சினை பெரிதானதில்லை. மீறி போனால், கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்பை வேண்டி, தவறு செய்தவர்கள் வேறு வேலை மாற்றல் வாங்கிக் கொள்வார்கள். அதனால் அந்த சம்பாஷனைகளைப் பெரிதாகக் கவனிக்காமல் தான் தெய்வானை எப்பொழுது முடியும் என்று எதிர்பார்த்தபடி அமர்ந்திருந்தார்.