சருகுகள் சலசலக்கும் ஓங்கார ஓசை, கண்கள் எட்டும் வரை காட்டு மரங்கள் நெடுநெடுவென வானை நோக்கி வளர்ந்திருக்க, சிறு வண்டுகள் ரீங்காரம் என காலை வேளையில் அந்த அடர் வனத்தை பார்த்தால் அதன் இயற்கை எழிலில் பார்ப்போர் மனது சிறகில்லாமல் வானில் பறந்தே விடும். ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்ப்பதமாக இருந்தது அந்த இடம்.

     அதற்கு காரணமும் உண்டு. ஏனெனில் காலையில் எழில் கொஞ்சும் அந்த அழகிய வனம் இப்போதும் அழகாய் தான் உள்ளது. ஆனால் சற்றே வித்தியாசமாய். ஏனெனில் அந்த வனம் இப்போது காண்பதோ இரவு நேரம்.

     வானை முட்டிய மரங்களின் நிழல் கூட பூமியை தொட அஞ்சியது. அவ்வளவு இருள் அந்த வனத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்க காலையில் கேட்ட வண்டுகளின் ரீங்காரம் இப்போது சற்று பயத்தை தருகிறது.

     அதன் கூட்டு இசையாக ஆங்காங்கே கேட்ட ஆந்தையின் அலறல்கள் மற்றும் நரியின் ஊளை சத்தமும் கேட்போர் மனதை பதறடித்து நிற்கும். இதில் மரத்தில் ஊஞ்சாலடிய பாம்புகள் பல புதற்களின் உள்ளே கேட்கும் சில பயங்கர விலங்குகளின் சிறு முனகல்கள் என அனைத்தும் அந்த அந்தகார வேளைக்கு இன்னும் சுவை கூட்டி சென்றதுவே.

     இப்படி ஒரு காட்டில் ஒருவர் அந்த இரவு வேளையை கழிக்க நேர்ந்தால் மிருகங்களிடம் சிக்கி உயிர் போகும் முன் அந்த இடத்தை கண்டே பயத்தில் உயிர் அதன் கூட்டை விட்டு விடியும் முன் பறந்து விடும் என்பது சற்று மறுக்க முடியாத உண்மையே.

     அப்படிப்பட்ட அந்த வனாந்தரத்தில் ஒற்றை தாவணியை தலையில் முக்காடிட்டு கொண்டு அந்த ஒற்றையடி பாதையில் யாரும் தன்னை பார்த்துவிடக் கூடாதென்ற எச்சரிக்கை உணர்வுடன் நடந்து சென்றாள் பெண்ணொருத்தி. அதிலும் அவள் கையில் மொத்த துணி ஒன்று இருக்க அதை ஊன்றி பார்த்தப் போது தான் தெரிந்தது

     அதன் ஒருபக்கம் சின்னஞ்சிறிய அழகிய சிசுவின் முகம் தெரிய அதுவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பது. அப்பெண்ணின் குழந்தை போலும். அந்த வனத்தை சூழ்ந்த அமானுஷ்யமோ அல்லது வானில் ஒளிர்ந்த அந்த வெளிர் நிலவின் குளுமையும் கூட அந்த பெண்ணை பாதிக்கவில்லை போலும்.

     அந்த பெண்ணின் கண்களில் தெரிந்த தீட்சண்யம் அவள் மனதின் உரத்தை அப்படியே எடுத்து காட்டுவதாய் இருந்தது. நடந்து கொண்டே சுற்றிலும் பார்த்தவள் விரக்தி சிரிப்பொண்றை இதழின் நுணியில் படரவிட்டு மேலே முன்னேறினாள்.

     என்னதான் அது முழுநிலவு நாளாக இருந்தும் அடர்ந்த மரங்களின் வழியே நிலவொளி சிறு சிறு கீட்றாய் தான் உள்ளே வந்தது. அந்த சிறு ஒளி அவளுக்கு சற்று ஆதரவு தருவதாய் இருக்க மேலும் சில்லென்ற காற்று அவளுக்கு களைப்பு வராது செய்ய சற்று தெம்பாகவே முன்னேறினாள் பேதை.

     “ஏய் குழலி! இந்த வனத்தை பாரடி. காலை நேரம் எவ்வளவு அழகாய் கம்பீரமாய் கண் முன் நிற்கிறது. ஆனால் மாலை மங்கி இரவு வந்தால் இந்த அழகே எங்கோ போய் பயங்கர அந்தகாரத்தின் அமானுஷ்யமாக மாறி பயம் கொள்ள செய்கிறது. என்ன விந்தை!”

     “அது என்னவோ உண்மைதான் கொடி. காலை நேரம் இங்கே இந்த அழகை ரசிக்க வரும் நமக்கு இரவில் இங்கு வர தைரியம் ஏதடி? இயற்கையின் மாயையை நாம் எப்படி மாற்ற முடியும். அதுதது அதன் இயல்பில் இருப்பதே அழகு இப்போது நீ வா நாம் செல்லலாம்”

     ஏதோ ஒருநாள் காட்டு அருவிக்கு குளிக்க வந்த குழலியும் அவள் தோழி வஞ்சிக்கொடியும் பேசிவை அதன்பின் நடந்த நிகழ்வுகளும்  ஒன்றன்பின் ஒன்றாக மனதிற்குள் வந்து போக

     தன் வாழ்வில் விதியாலா இல்லை பலரின் சதியாலா ஏதோ ஒன்றால் நடந்த கசந்த நிகழ்வுகளை எண்ணி பார்த்தாள் குழலி. ஆம் அவள் குழலி.. தடாகைக்குழலி.

     ‘இங்கே இருக்கும் விலங்குகள் அந்தகார அமானுஷ்யம் கூட பயம் கொள்ள செய்யும் அளவு நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் கொடி. அவர்களை கண்டுவிட்டு வந்த எனக்கு தற்போது இந்த காடு மிகமிக பெரிய அரனாய் தான் தெரிகிறதடி’

     இப்படி மனதிற்குள் இதுவரை எல்லாமுமாய் இருந்த தன் தோழி கொடியையும் தன் நிலை பற்றியும் எண்ணியபடி நடந்தாள் குழலி. அவளுக்கு அவள் நிலையை எண்ணி தற்போது ஒரு பெருமூச்சே வந்தது.

     நேரம் நடுஜாமம் ஆகிவிட்டதென நிலவு உச்சியில் வந்து நேரம் சொல்ல இங்கே குழலியின் வேகமோ எந்த தங்குதடையும் இன்றி சீராய் தான் இருந்தது.

     திடீரென பறவை கூட்டம் பறக்கும் சத்தம் கேட்க அங்கே வேறு யார் இருந்திருந்தாலும் பயத்தில் அலறி இருப்பர். ஆனால் தடாகைக்குழலியோ சற்றும் அஞ்சாது அரவம் வரும் திசையை கூர்ந்து கவனித்தாள்.

     அது உணர்த்திய செய்தியில் வரப்போகும் ஆபத்தை புரிந்துக் கொண்டாள் தடாகை. இப்போது அந்த ஒற்றை அடி பாதையை விடுத்து அப்படியே காட்டிற்குள் தன் நடையை திருப்பிய தடாகை முன்பை விட மிக வேகமாக நடந்து சென்றாள்.

     இதில் தனது கையில் இருந்த அந்த அழகுகுவியலை குனிந்து பார்க்க அந்த சின்ன மொட்டோ தன் தாய்க்கு தன்னால் எந்த ஆபத்தும் வராது வரவும் விடமாட்டேன் என்பது போல் சமர்த்தாய் உறங்கிய படி தான் இருந்தது.

     ‘பெற்ற அன்னைக்கு உன்னால் எந்த தீங்கும் நேரக்கூடாதென கிளம்பியதில் இருந்து உறக்கத்திலே இருக்கிறாயா என் செல்லமே. உன்னை காக்க என் உயிரையும் தருவேனடா என் அன்பு செல்வமே’

     மானசீகமாக தன் மகனிடம் உரையாடிய தடாகை விரைந்து சென்றாள். ஆனால் வரும் ஆபத்து அவளை நெருங்கியேவிட்டது. ஆம் குதிரைகள் காலடி தடம் மிக சத்தமாக கேட்க இதுவரை அந்த வனாந்திரத்தால் வராத பயம் இப்போது அவள் மனதில் எழுந்தது.

     இதற்கு மேல் நடந்தால் சருகுகள் மிதிபடும் சத்தத்தில் மாட்டிக் கொள்வோம் என புரிந்துக் கொண்ட தடாகை தன்னை சுற்றி பார்த்தாள். அருகில் சிறிது தூரத்தில் செடிகள் புதர் போல் மண்டி கிடக்க தன் பிள்ளையுடன் அதன் அடியில் சென்று அமர்ந்து விட்டாள்.

     இப்போது குதிரைகளின் காலடி சத்தம் மனிதர்களின் பேச்சு குரல்கள் மிக அருகில் கேட்க அச்சத்தில் இன்னும் உள்ளே தள்ளி அமர்ந்து கொண்டாள்.

     “எல்லோரும் இந்த இடத்தை சுற்றி தேடுங்கள். நாம் வரும்போது இங்கேதான் சருகுகள் மிதிபடும் சத்தம் கேட்டது. ம்ம் சென்று தேடி அந்த தடாகைக்குழலி எங்கிருந்தாலும் இழுத்து வாருங்கள்”

     “அப்படியே ஆகட்டும் இளவரசர் இளந்திரையரே! சேவகர்களே சென்று தேடுங்கள்!”

     “இளவரசே! இந்த தங்க காப்பை கீழே கண்டு எடுத்தோம்”

     இவ்வாறு வெளியே பேசும் குரல்கள் கேட்க கேட்க பாவம் இதயம் வேகமாக துடித்து நின்றது பெண்ணிற்கு. கடைசியாக கேட்ட செய்தியில் அதிர்ந்து தன் கையை உயர்த்தி பார்த்த தடாகை அது அவளுடைய காப்பு என்பதை புரிந்து மிகவும் பயந்து போனாள்.

     அங்கே அந்த காப்பை கையில் வைத்திருந்த அந்த இளவரசனோ வஞ்சக சிரிப்பை உதிர்த்து

     “தடாகை நீ இங்கே தான் எங்கேயோ பதுங்கி இருக்கிறாய் என எனக்கு நன்றாக தெரியும். உன் காப்பு தற்போது என் கையில். வீணாய் பிடிவாதம் பிடிக்காது நல்ல பிள்ளையாக வெளியே என்னிடம் வந்துவிடு தடாகை. இல்லையேல் நானே உன்னை வெளியே இழுக்க நேரிடும்”

     இளந்திரையன் நயமாக பேசியபடி தடாகையை சுற்றிலும் தேடினான். எவ்வளவு தேடியும் தடாகை கிடைக்காது போகவே

     “இளந்திரையா தடாகை இந்த இடத்தை கடந்து வெகு நேரம் ஆகியது போல் தெரிகிறது. நாம் ஏன் இன்னும் சற்று தூரம் சென்று தேடக்கூடாது”

     “அப்படியா கூறுகிறீர்கள் அமைச்சரே! நீங்கள் கூறுவதும் சரியான யோசனையாக தான் தெரிகிறது. இங்கே தடாகை இருந்திருந்தால் நம் கையில் இந்நேரம் மாட்டியிருப்பாள். சரி நாம் இன்னும் சற்று தொலைவு சென்று தேடலாம்”

     இளந்திரையன் அமைச்சரிடம் பேசியபின் குதிரைகள் கிளம்பும் சத்தம் நன்றாகவே கேட்டது தடாகைக்கு. அதன்பின் தான் அவள் மனம் சற்று சாந்தமானது.

     இப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்த தடாகை அந்த இலைகளை மெல்ல விலக்கி சுற்றி நன்கு பார்த்தாள். அங்கு யாரும் இல்லை என்பதை நன்கு உறுதி செய்தபின் தன் மகனை அந்த துணியோடு சேர்த்து அவள் மார்போடு வைத்து ஒரு துண்டால் கட்டிவிட்டு மெல்ல வெளியே வந்தாள்.

     ஆனால் அடுத்து அவள்‌ இரண்டடி எடுத்து வைக்கும் முன் அவள் முன்னே ராட்சதர்களாய் வந்து நின்றனர் அந்த இருவரும்.

     “என்ன அமைச்சரே நான் கூறியது எவ்வளவு உண்மை என தற்போது நம்புகிறீர்களா. நான் சொன்னேன் அல்லவா இந்த தடாகைபுரி தடாகைக்குழலி சற்று அதிக புத்தி கூர்மை கொண்டவள் என”

     “ஆம் இளந்திரையா நீ கூறியது முற்றிலும் உண்மை. பார் நம் ஆட்களை அந்த பக்கம் அனுப்பி விட்டு நாம் ஒளிந்து நிற்கவும் கூண்டில் இருந்து புறா வெளியேறிவிட்டது”

     இளந்திரையனும் அமைச்சரும் சிரிப்புடன் பேசியபடி முன்னேறி வர தடாகையின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. ஆனால் அது ஒருநிமிடம் தான் அடுத்த நிமிடம் சட்டென தன் முதுகில் கைவைத்த தடாகை ஒரு பெரிய வாளை உறுவி எடுத்தாள்.

     இவ்வளவு நேரம் நக்கலாக சிரிப்புடன் முன்னே வந்த இருவரும் சிரிப்பை விடுத்து தற்போது அப்படியே  நின்றுவிட்டனர் தடாகையின் வீரம் அறிந்தவர்கள். தடாகையுடன் வாள்வீச்சில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அதுவும் இவர்கள் இருவரும் பகிரங்கமாக தோற்று மண்ணை கவ்வியவர்கள்.

     அப்படி இருக்கும் போது பயம் கொள்ளாது இருந்தால் தானே அதிசயம்.

     “ஏய் இளந்திரையா! உன் உயிர் உன் உடலில் தங்க வேண்டும் என்றால் இப்படியே ஓடிவிடு. இல்லையேல் என் வாளுக்கு இறையாவாய்”

     பெண் சிங்கமாய் கர்ஜித்து நின்ற தடாகையை கண்டு இருவருக்கும் உண்மையில் பயம் வந்துவிட்டது. சாதரணமாகவே தடாகை வாளிற்கு வீரியம் அதிகம் எனில் இன்று தாயாய் தன் சிங்க குட்டியை காக்க அவள் வாள் எவ்வளவு வீரியம் பெற்று பாயும் என நன்கு புரிந்து போய் பயந்து பார்த்தனர்.

     “அம்மா தடாகைக்குழலி இந்த வாள் வேண்டாமே. எதுவாக இருந்தாலும் நாம் பேசி தீர்த்துக் கொள்வோமே. நீ என்னை நம்பி வா அம்மா உன் பாதுகாப்பிற்கு நான் உறுதி தருகிறேன்”

     நயவஞ்சகமாக பேச முயன்ற அமைச்சரை கண்டு இகழ்ச்சியாய் சிரித்த தடாகை

     “என்ன அமைச்சரே உங்கள் நரித் தந்திரத்தை எடுத்து விடுகிறீர்களா. அப்படி உங்களின் வாய் ஜாலத்திற்கு அந்த தடாகைபுரி வேண்டுமானால் தலை அசைக்கும் ஆனால் என்றும் இந்த தடாகை தலை அசைக்கமாட்டாள் புரிந்ததா!”

     “எனவே என் வாளிடம் வீழாது நீங்கள் இருவரும் வந்த வழி சென்று விடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது”

      தடாகை இவர்களிடம் பேசிக் கொண்டே நகரும்போது அவள் நின்றிருந்த மரத்தின் பின்னால் இருந்த ஒரு உருவம் அவள் அறியாது ஒரு கட்டையால் அவள் தலையில் பலமாய் தாக்கியது.

     “அம்மாஆஆஆஆ….” என கத்தியபடி தலையில் ஒரு கையும் தன் நெஞ்சோடு சேர்த்து கட்டியிருந்த மகனின் மீது ஒரு கையும் வைத்து அப்போதும் முன்னே விழுந்தால் குழந்தைக்கு அடிப்பட்டு விடும் என மல்லாக்க மண்ணில் சாய்ந்தால் அந்த வீரதாய்.

     தடாகை கண் மூடும் முன் மங்கலாய் ஒரு உருவம் பலத்த சிரிப்புடன் முன்னே வர இப்போது மற்ற இருவரும் அந்த சிரிப்பில் சேர்ந்து கொண்டனர்.

     “தடாகை இத்தோடு உன் ஆணவம் திமிர் அனைத்தும் மண்ணோடு மண்ணாக போகிறதடி. நாளை தெரியும் இந்த இளந்திரையன் யாரென”

     இளந்திரையனின் குரல் கொடூரமாய் ஒலிக்க தன் செல்வ புதல்வனை நன்கு அனைத்து பிடித்தபடி மயங்கினாள் தடாகை.