சத்யேந்திரனும், பூஜிதாவும் அப்படியொரு எதிர்வினையை அவரிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. பூஜிதா மிக வேகமாக அவர்களின் இடையே புகுந்து தந்தையைத் தடுக்கப் பார்க்க, வீராவின் ஆக்ரோஷத்திற்கு முன்னால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
மகள் என்றும் பாராமல் அவளைப் பிடித்து வேகமாகத் தள்ளிவிட அவள் நிலை தடுமாறி தொப்பென கீழே விழுந்திருந்தாள்.
சத்யா அதற்குள் சுதாரித்திருந்தவன், துணிந்து அவர் கையை பிடிச்சு தடுத்திருந்தான். ஆனால், வீராவின் ஆட்கள் உடன் இருந்ததால் அவர்கள் சத்யாவை வேகமாக வீராவிடமிருந்து பிரித்து விட்டிருந்தார்கள்.
பூஜிதா, “அப்பா ஏன் இப்படியெல்லாம் செய்யறீங்க. முதல்ல அவரை விடுங்க…” என்று தந்தையிடம் எழுந்து வந்து கெஞ்சினாள். சிறிதும் மனமிறங்காதவரோ, “ச்சீ… முதல்ல தள்ளி நில்லு. தகுதி, தராதரம் தெரிய வேண்டாம். காலேஜ் தானேடி படிக்கிற. இந்த வயசுல உனக்கெல்லாம் ஜோடி கேட்குதா? என்ன ஜென்மம் நீயெல்லாம்?” என்று கத்த, இதுவரை பேசியிராத மோசமான தரக்குறைவான வார்த்தைகளை உதிர்ப்பது தன் தந்தை தானா என விக்கித்து பார்த்தபடி நின்றிருந்தாள் பூஜிதா.
அவர் அவளுக்கு நல்ல தந்தையாகவே இருந்திருப்பார். அவரின் எதிர்பார்ப்பின்படி அவள் இருந்திருந்தாள் என்றால்! அவரின் எதிர்பார்ப்பை மொத்தமாகத் தவிடு பொடியாக்கியிருந்த அவள் மீது அவருக்கு இப்பொழுது கோபமும் ஆத்திரமும் மட்டும் தான் எஞ்சியிருந்தது. இது பூஜிதா இதுவரை கண்டிராத தந்தையின் இன்னொரு முகம்!
சத்யாவோ தன்னை கட்டுப்படுத்த பிடித்திருந்தவர்களின் பிடிக்கு அடங்காமல் திமிறியபடி நின்றிருக்க, வீரராகவன் சத்யாவின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தபடி, “என்னடா துள்ளற?” என்று கத்தினார்.
அவமானத்தில் கன்றிய முகத்துடன், “முதல்ல நிறுத்துங்க அங்கிள்” என்று சத்யா ஆவேசத்துடன் கத்த, வேகமாக அவனது கழுத்தை நெரித்தவர், கட்டுக்கடங்க மறுத்த ஆத்திரத்துடன், “அப்படி சொல்லாதடா பரதேசி! ரோட்டுல திரிய வேண்டிய உன்னை எல்லாம் அங்கிள்ன்னு கூப்பிட விட்டேன் பாரு அதுக்கு தான் நீ என் வீட்டுலேயே கை வெச்சிருக்க…” என்று சொல்லி மறுபடியும் அவன் கன்னத்தில் பலமாக அறைந்தார்.
தொடர்ந்து அடித்ததில், அவன் கன்னங்கள் இரண்டும் சிவந்திருந்தது. அவமானத்திலும் எதுவும் செய்ய முடியாத இயலாமையிலும் சத்யா முகம் இறுக, கோபத்தில் வேக மூச்சுக்களை வெளியிட்டவாறு நின்றிருந்தான்.
பூஜிதா என்ன செய்தும் தந்தையைத் தடுக்க முடியாத பரிதவிப்பில் அழுது கரைந்து கொண்டிருந்தாள். தந்தையின் அவதாரம் அவளுக்கு புதியது. இங்கிருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்று கண்ணீர் வடித்தவளுக்கு எப்படி தப்பிக்க முடியும் என்றும் தெரியவில்லை.
தந்தை யாரிடமும் சொல்லாமல் சத்யாவை அழைத்து வா என்று காலையில் சொன்னபோது பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆனால், இங்கு வந்து இப்படி மாட்டிக்கொண்ட பிறகு, அதுவும் தந்தையைக் காணும் முன்பே இருவரின் கைப்பேசியைக் கேட்டபொழுது கூட இருவரும் துளி சந்தேகம் கூட இல்லாமல் தானே கைப்பேசியை ஒப்படைத்து விட்டு உள்ளே வந்தார்கள்! வந்தவர்கள் இப்படி மாட்டிக்கொள்ள நேரும் என இருவரும் நினைத்திருக்கவில்லையே! இனி இங்கிருந்து எப்படி தப்பிப்பது? யாருக்கும் தெரியாமல் இங்கு வந்தவர்களை மீட்க யார் வரக்கூடும்? யோசிக்க யோசிக்க அவளுக்குத் தலையைச் சுற்றியது!
ஆனால், வீரராகவன் அறிந்திருக்கவில்லை. சத்யாவின் காவலுக்கு இப்பொழுது நிறைய பேரை ஆதி நியமித்திருப்பதை! அதன்மூலம் ஆதிக்கு உரிய நேரத்தில் தகவல் பறந்திருந்தது. அது தெரியாமல் யாருக்கும் தெரியும் முன்பு தன் காரியத்தைச் சாதித்து விடலாம் என வீரா தப்புக் கணக்குப் போட்டிருந்தான்.
சத்யாவிற்கு வீரா அடிக்க அடிக்க ஆத்திரம் அடங்கவில்லை! “யாரு குப்பை? யாரு ரோட்டுல போறவன்? எங்க அப்பா யாரு தெரியுமா? எங்க அண்ணனோட பதவி, உயரம் என்னன்னு தெரியுமா? உங்களுக்கு ஏன் தெரியாம… எங்க குடும்ப மொத்தத்தையும் உங்களுக்கு தெரியும். அப்படி இருந்தும் இந்த மாதிரி பேசறீங்க. உங்களுக்கு என்ன தான் பிரச்சினை? நானும் பூஜிதாவும் காதலிக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை இப்போ?” என அடியை வாங்கியும் கத்தினான்.
கோபமாக சத்யாவை நெருங்கி நின்று, “நிறுத்துடா பரதேசி! யாருடா உனக்கு அண்ணன்? முதல்ல உங்க அப்பா யாருன்னு உனக்கு தெரியுமா? பெருசா என்கிட்ட பேச வந்துட்டான். நான் சொல்லறேன் உங்க அப்பன் யாருன்னு நல்லா கேட்டுக்க, உன்னை பெத்த அப்பன் ஒன்னுக்கும் லாயக்கில்லாத மாச சம்பளம் வாங்கி குடும்பம் நடத்தற சாதரண போலீஸ்காரன். உன் நல்ல நேரம் நீ பிரமானந்தம் அவன் பொண்டாட்டி தெய்வானையை பிரசவத்துக்காக சேர்த்த அதே ஹாஸ்பிட்டல்ல பிறந்த… எனக்கு பிரமா மேல இருந்த வன்மத்துல அவனுக்கு பிறந்த குழந்தையை உங்க வீட்டுக்கும், உங்க வீட்டுல பிறந்த உன்னை அவன் பிள்ளைக்கு பதிலாவும் என் பணபலம், செல்வாக்கை வெச்சு மாத்தி வெச்சுட்டேன்” என குரூர முகத்தோடு சொல்ல, சத்யாவுக்கும் பூஜிதாவுக்கும் அவர் சொன்ன செய்தியில் பயங்கரமான அதிர்ச்சி!
‘என்ன பேசறாரு இவரு!’ என்பது போல அதிர்ச்சியாக அவர்கள் பார்க்க, “என்னடா நம்ப முடியலையா? உங்க அப்பன்… ச்சு… ச்சு… இல்லை இல்லை உன்னோட வளர்ப்பு அப்பன், அதுதான் என்நோட் உயிர் நண்பன் பிரமானந்தம் இருக்கானே என்னை ஒரு தொழிலைக் கூட நல்லபடியா செய்ய விட்டதில்லை. நானே யாருக்கும் தெரியாம காதும் காதும் வெச்ச மாதிரி எதையாவது செஞ்சா, அதை வந்து கெடுத்து விடறதே அவன் வேலையா போச்சு… ஒரே நல்ல விஷயம் அது நான் தான்னு அவனுக்கு தெரியாது, தெரிய வராம நான் பாத்துக்கிட்டேன். எங்களுக்குள்ள ஒரே பனிப்போர் தான்… ஒருவழியா அவன் எல்லாத்தையும் கண்டு பிடிச்சிட்டான். இந்த மாதிரி நேரத்துல நம்மளை காப்பாத்த உதவுமேன்னு தான், அவனோட உண்மையான பையனை மறைச்சு வெச்சதே! பார்த்தா கடைசியில அதுவும் வேலைக்கு ஆகலை, அப்பறம் என்ன வேற வழியே இல்லாம அவனோட கதையையும் அவன் பொண்டாட்டி கதையையும் சேர்த்து முடிச்சு விட வேண்டியதா போச்சு…” என வெகு சாதாரணமாகச் சொல்ல, சத்யாவின் தலைக்குள் பிரளயம் நடப்பது போல இருந்தது.
ஏழு வயது வரை அம்மாவை கட்டிக்கொண்டே வளர்ந்த சாதாரண பிள்ளை தான் அவனும்! அவன் கண் முன் அல்லவா அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது! பெற்றவர்கள் தீயுக்கு இரையாகி இறந்தார்களே! இறக்கும் நிலையிலும் அவனைக் காக்கப் போராடினார்களே!
இதோ இந்த ஆள் சொல்வதை வைத்துப் பார்த்தால், நான் அவர்கள் சொந்த மகன் கூட இல்லை. அது அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. இருந்தும் அவனை காப்பாற்ற அத்தனை துடித்தார்கள். ஏழு வயதில் இருந்த அவனால், அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. அன்று கடைசியாகப் பார்த்த காட்சியில் மூர்ச்சையாகி விழுந்தவன், கோழையாகிப் போனான். தொட்டதுக்கும் நடுங்கினான். அவன் வாழ்வில் நடந்த பல விஷயங்களை மறந்து போயிருந்தான். ஆனால், இத்தனை பாதகங்களையும் செய்த இவனோ நல்லவன் போல வேஷமிட்டு எங்கள் குடும்பத்தோடே சேர்ந்து இருந்திருக்கிறான் சத்யாவிற்கு நெஞ்சம் ஆறவில்லை.
அதிலும் தன் உண்மையான பெற்றோரிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறோம் என்பது மிகுந்த வேதனையளித்தது. அவர்கள் எங்கே இருக்கக்கூடும்? அவர்களை நான் தேடி செல்ல வேண்டுமா? இனி தன் கதி என்ன? என் அண்ணனோடு நான் உறவு கொள்ள முடியாதா? என் பாட்டி எனக்கானவராக இருக்க மாட்டாரா? உயிர் போகும் நிலையிலும் தன் உயிர் காக்கப்பட வேண்டுமே என பரிதவித்த அவனின் அன்னையும், தந்தையும் அவனுடைய பெற்றவர்கள் இல்லையா? நெஞ்சத்தில் பாரம் அதிகமானது.
வீரராகவன் இன்னும் ஆத்திரம் குறையாத குரலில், “உன்னோட வளர்ப்பு அப்பன் செஞ்சதுக்கு கொஞ்சமும் சளைச்சதில்லை உங்க அண்ணன் செஞ்சது. ஏதோ பண்ணின தப்பெல்லாம் போதும், நாமளும் ஊரு உலகத்துக்கு கொஞ்சம் நல்லவனா இருப்போம்ன்னு நினைச்சு அதுக்கு மரியாதை இருக்கா? அவனை நல்லபடியா ஆளாக்கி, அரசியலுக்குக் கொண்டு வந்து அவனை வளர்த்துவிட்ட நன்றி கொஞ்சம் கூட இல்லாம, என் பொண்ணை வேணாம்ன்னு சொல்லிட்டு இன்னொருத்தியை கட்டிக்கிட்டான், போனா போகுதுன்னு அப்பவும் அமைதியா விட்டா அவளுக்கு ஒரு இக்கட்டு வந்தப்ப உதவி செய்யக்கூட மாட்டேங்குறான். இவன் எல்லாம் நான் இல்லைன்னா எம்.பி.,ன்னு சொல்லிட்டு சுத்திட்டு இருக்க முடியுமா?” என கடுமையான குரலில் கேட்க,
“ச்சீ நீ எல்லாம் மனுஷனா?” என்று பூஜிதா கத்தியிருந்தாள். “மனசாட்சியே இல்லாம கொலை செஞ்சதை பெருமையா சொல்லிட்டு இருக்க? இந்துஜா அத்தனை தப்பு செஞ்சிருந்தும் அவளுக்காக நிக்கலைன்னு ஆதி மாமாவை குறை சொல்லற” என அவள் மேலும் கத்த,
“வாடி என் குலக்கொழுந்தே! என் மூத்த பொண்ணுக்கு இருக்கிற அறிவும் திறமையும் கொஞ்சமாச்சும் உனக்கு இருக்கா… எப்ப பாரு குப்பையை பொறுக்கிறது, சேவகம் செய்யறதுன்னு திரிஞ்சுட்டு. உன்னால கால் காசுக்கு பிரயோஜனம் இருக்கா. சரி பெத்துட்டோமே, அந்த கடமைக்கு வளர்த்து விடுவோம்ன்னு நினைச்சா உனக்கெல்லாம் காதல் தான் ஒரு கேடு… இதுல அப்பாவையே மரியாதை இல்லாம பேசற…” என்று அவளையும் கீழே தள்ளிவிட்டு எட்டி மிதிக்க, அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு “அம்மா… ” என அலறியபடி சுருண்டு கிடந்தாள்.
“ஏய் அவளை விடு” என சத்யா கத்தினான். “உன்கூட ஊரு மேஞ்ச அவளை வெச்சுட்டு நான் என்ன செய்யறது? ஊறுகா போட்டு சாப்பிட கூட ஆக மாட்டா… ரெண்டு பேரையும் நாயுக்கு இரையா போடறேன். இன்னைக்கே…” என மனிதத்தன்மையை இல்லாமல் வீரா சொல்ல,
இருவருக்குமே பயம் வயிற்றைக் கவ்வியது. “இங்கே பாரு இதெல்லாம் வேண்டாம். எங்க அண்ணாவுக்கு தெரிஞ்சது அப்பறம் நீ உயிரோடவே இருக்க முடியாது” என சத்யா எச்சரிக்க,
“நாயே! அவன் உன் அண்ணனே இல்லைன்னு சொல்லறேன். அவன் பேரை சொல்லி மிரட்டுறியா?” என அதட்டியவன், “ஆனா நீ சொல்லறதுலேயும் ஒரு பாயிண்ட் இருக்கு. முதல்ல உன்னை கொன்னுடலாம். நான் பெத்த பொண்ணை மெல்ல கூட கொலை செய்யலாம். உன்னைத் தேடித் தான் உங்க நொண்ணன் வர வாய்ப்பிருக்கு…” என்று சொல்லி அரக்கத்தனத்துடன் சிரித்தான். இருவருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
ஒருவரை ஒருவர் பரிதவிப்புடன் பார்த்தபடி நின்றிருக்க, இருவரையும் அப்பொழுதே அங்கிருந்து கடத்திக் கொண்டு போய் வேலையை முடிக்கச் சொல்லி வீரராகவன் தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டிருந்தான்.
நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்டு, “மாமா… அப்பா ரொம்ப மோசமானவரு மாமா. அவரை சும்மாவே விட்டுடாதீங்க…” என பூஜிதா அழுகையோடு கூறியவள், துக்கம் தாங்காமல் நெஞ்சில் கை வைத்து அழுத்திக் கொண்டாள். அவளால் நடந்த எதையும் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த ஒரு நாள் அவள் வாழ்வில் வராமல் போயிருக்கக் கூடாதா…
அப்படி பிரமானந்தம், கௌசல்யா வாழ்வில் என்னதான் நடந்தது, வீரராகவன் அவர்களை என்ன செய்தான் என்பதையும், சத்யா விவேக் நிலையையும் இனி வரும் பதிவுகளில் காண்போம்.