விவேக்கின் கணிப்பு எல்லாம் சரிதான்! சந்தேகம் கொண்ட இரண்டு வாகனங்களையும் தன் டிபார்ட்மெண்ட்டின் உதவியுடன் விரைவாக ட்ரேஸ் செய்திருந்தான்.
ஒன்றுக்கு இரண்டு பேரின் போனுமே ஸ்விட்ச் ஆஃப். அதோடு அவர்கள் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்கிற தகவல் யாருக்கும் தெரியவில்லை என்ற போதே வீரராகவன் தான் விவேக்கின் சந்தேக வட்டத்திற்குள் இருந்தது.
தான் சந்தேகப்பட்ட இரண்டு வாகனங்களையும் ட்ரேஸ் செய்ததில், ஒரு வாகனம் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றுக்குள் நுழைவதை வைத்து, தன் சொந்த மகளை வேண்டுமானால் அங்கு அழைத்து சென்றிருக்கூடும் என்று அனுமானித்துத் தான் விவேக் ஆதீஸ்வரனை அங்கே போகச் சொல்லி அனுப்பியிருந்தான்.
ஆனால் இன்னொரு வாகனத்தில் அவன் அனுமானித்தபடி சத்யேந்திரன் இருக்கவில்லை. அது ஹோட்டல் வளாகத்தைச் சேர்ந்த ஒரு வாகனம் தான் போல! அந்த தேடுதல் வீணாகவும் ஏன் முதலில் சென்ற காரிலேயே இருவரையும் கடத்தி சென்றிருக்கக் கூடாது என்று சந்தேகம் வந்தது.
ஒருவேளை இருவரையும் ஒரே இடத்தில் தான் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்றால் ஆதீஸ்வரன் தன் ஆட்களோடு சென்று அவர்களைப் மீட்டுக் கொள்வார் என்று எண்ணினான்.
மாறாக இடையிலேயோ அல்லது அங்கு சென்ற பிறகோ யாரேனும் ஒருவரை இடம் மாற்றியிருந்தால் என்ன செய்வது என்று யோசித்தவன், மீண்டும் தனக்குத் தெரிந்த காவலர்களை வைத்து அந்த வாகனம் இடையில் எங்கேனும் சதேகப்படும்படி வெகுநேரம் நின்றதா என்ற கோணத்திலும், அந்த கெஸ்ட் ஹவுஸ் போன பிறகு அந்த வாகனமோ அல்லது வேறு வாகனமோ அங்கிருந்து வெளியேறியதா என்றும் விசாரிக்க அவன் நல்ல நேரமோ என்னவோ அவனுக்குரிய தகவல்கள் விரைவிலேயே வந்து சேர்ந்தது.
ஒரு வாகனம் மட்டும் அந்த கெஸ்ட் ஹவுஸிலிருந்து வெளியேறியதாகத் தகவல் கிடைத்திருக்க அந்த வாகனம் எங்கு சென்றது என்று இப்பொழுது கண்காணிக்க சொன்னான்.
அவர்கள் டிரேஸ் செய்து சொல்லச் சொல்ல, இவனும் தனக்கு நம்பகமான காவலர்கள் சிலரைத் தன்னை தொடர சொல்லிவிட்டு அங்கு புறப்பட்டுச் சென்றிருந்தான். இடையில் ஆதீஸ்வரன் அழைக்க, செல்லும் வேகத்தில் அழைப்பை ஏற்கவில்லை அவன்.
ஊரைத்தள்ளி ஆள் அரவமற்ற இடம்! கட்டி முடிக்காமல் வைத்திருந்த பழைய சிதிலமடைந்த கட்டிடம்! அதன் வெளியே தான் அவன் தேடி வந்த வாகனம் நின்றிருந்தது.
விவேக்கிற்கு உள்ளே செல்வதற்கே பெரும் யோசனையாக இருந்தது. தன் ஆட்கள் வந்துவிடட்டும் என தாமதிக்கும் நேரம் சத்யேந்திரனுக்கு ஏதேனும் நடந்து விட்டால் என்ற எண்ணமே அவனது நெஞ்சை நடுங்க வைக்க போதுமானதாக இருந்தது.
தாமதிக்க மனமில்லை! உள்ளே செல்ல அவனின் அன்னை, தங்கையின் முகம் நினைவில் வந்து தடை செய்தது. அவர்களுக்கென்று இவனை விட்டால் யாருமில்லை. இவனுக்கு ஒன்று என்றால் அவர்களின் நிலை என்னவாகும் என்கிற தடுமாற்றம் வந்தது.
ஒரு நொடி விழி மூடினான். மூடிய இமைகளுக்குள் அவர்களின் தோற்றம்! அவர்களை எண்ணி ஒரு துளி கண்ணீர் இடது கண்ணிலிருந்து வேகமாக வழிந்தோடியது. எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான். தனக்குத் தெய்வமாகிவிட்ட தன் தந்தை துணையிருப்பார் என்ற நம்பிக்கையோடு கண்களைத் திறந்தான்.
கண்ணைத் துடைத்துவிட்டு, வண்டியிலிருந்து இறங்கினான். என்ன நினைத்தானோ தனது லைவ் லொகேஷனை ஆதீஸ்வரனுக்கும் அனுப்பிவிட்டு, தைரியமாக முன்னோக்கிச் சென்றான்.
*** தன் ஆட்களோடு தேடி அலைந்து கொண்டிருந்த ஆதீஸ்வரன், விவேக் சொன்ன இடத்திற்கு விரைந்து சென்றிருந்தான்.
அந்த பங்களாவின் தோற்றத்திற்கும் அதில் காவலுக்காகக் காத்திருந்த ஆட்களின் கூட்டத்திற்கும் துளியும் சம்பந்தம் இருப்பது போலத் தெரியவில்லை! அங்கிருந்த அதிகப்படியான காவலே சந்தேகத்தை வலுப்படுத்தியது.
அதிரடியாக உள்ளே நுழைவது எளிது! இரு பக்கமும் பெருமளவு உயிர் சேதம் நேரலாம். அதில் ஆதீஸ்வரனுக்கு எப்பொழுதுமே உடன்பாடில்லை.
நாட்டின் சட்டம், ஒழுங்கை பேணி காக்கும் பொறுப்பான பதவியில் இருப்பதாலோ என்னவோ உயிர் சேதங்கள் எனும்போது பெருமளவு யோசிப்பான். அதோடு வெளியில் அடிதடி சண்டை நடக்கும் சமயத்தில் உள்ளே இருப்பவர்கள் உஷாராகி விடவும் வாய்ப்புகள் அதிகம் தானே! பிறகு போராட்டம் இன்னும் அதிகமாகலாம். இல்லை அவர்கள் அதற்குள் வேறு எங்கேனும் தப்பி ஓடி விடலாம்.
எல்லாவற்றையும் யோசித்து தன் ஆட்களிடம் என்ன செய்யவேண்டுமென்று கட்டளைகளையிட, அவர்களும் அதற்கேற்ப செயல்பட்டார்கள். வீட்டிற்கு வெளியே காவலுக்கு நிற்கும் ரௌடிகள் எல்லாம் ஆதியின் ஆட்களால் சத்தமின்றி சாய்ந்தனர். சாய்ந்தவர்களை கை, கால்கள் மற்றும் வாயைக் கட்டி ஓரமாகப் போடுவதை இருவர் பார்த்துக் கொள்ள, ஆதியின் ஆள் பலத்தால் சிறிது நேரத்தில் அவ்விடம் சுத்தமாகியிருந்தது.
அதன்பிறகு அதிரடி தான்! வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைத் தும்சம் செய்து தேடியதில் அவர்களுக்கு பூஜிதா மட்டும் தான் கிடைத்தாள். சத்யேந்திரனை காணாமல் ஆதி பரிதவிக்க, “மாமா… பிளீஸ் சத்யாவை காப்பாத்துங்க…” என்கிற கதறலோடு அவனருகே ஓடி வந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள் பூஜிதா.
நலுங்கி வாடிய தோற்றம்! அழுதழுது முகமெல்லாம் சோர்ந்து, கண்ணிமைகள் வீங்கியிருந்தது. முகத்தில் அதீத பயமும் பதற்றமும். பார்க்கவே ரொம்பவும் பாவமாக இருந்தாள். அவளின் வெளிறிய முகம் ஆதியின் நம்பிக்கையையும் வெகுவாக சிதைத்தது.
நெஞ்சை பயம் கவ்வ, “என்ன நடந்ததுன்னு சொல்லு பூஜிதா? இதுக்கெல்லாம் யார் காரணம்?” என்று பரபரப்புடன் கேட்டான். பதில் அவனுக்குத் தெரிந்தே தான் இருந்தது. இருந்தும் ஏனோ உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்தான் போல!
மனம் படபடக்க அவளின் பதிலுக்காகக் காத்திருக்க, “அப்பா தான் மாமா. அவருக்குள்ள இவ்வளவு வன்மம் இருக்கும்ன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை” என்று உதடுகள் நடுங்க பூஜிதா அழுதாள். “அவர் ஏன் மாமா இவ்வளவு பெரிய துரோகியா இருக்காரு. எனக்கு அவர் செஞ்சது எல்லாம் அவர் வாயாலேயே கேட்க கேட்க நெஞ்சே வெடிக்கும் போல இருக்கு மாமா. நான் ஏன் இப்படியொரு மிருகத்துக்கு மகளா பிறந்தேன். எனக்கு என்னை நினைச்சாலே அருவருப்பா இருக்கு மாமா” என்று வேதனை தாங்கமாட்டாமல் தலையை அடித்துக்கொண்டு அழுதாள்.
ஆதீஸ்வரனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அவன் அறிந்த வீரராகவனின் பக்கங்கள் மிகவும் மோசமானவை தான்! அதில் அவரை கொல்லும் அளவிற்கு ஆத்திரத்தில் இருக்கிறான். ஆனால், அதையெல்லாம் எப்படி பூஜிதா அறிந்து கொண்டாள்?
“என்ன சொல்லற பூஜிதா? என்ன செஞ்சாரு உங்க அப்பா? கொஞ்சம் தெளிவா சொல்லு. சத்யா எங்கே இருக்கான் இப்ப?” அவளிடமிருந்து உரிய பதிலைப் பெற முடியாத தவிப்போடு ஆதி கேட்க,
“மாமா… இங்கே தான் *** இந்த இடத்துக்கு தான் அவரை கூட்டிட்டு போறதா பேசிட்டாங்க. நம்ம கிளம்பலாம். சீக்கிரம். பிளீஸ் அவரை… அவரை… எப்படியாச்சும் காப்பாத்திடுங்க…” என மீண்டும் அழுதாள்.
ஊர் பெயர் சொல்லியிருக்கிறாளே அந்த மட்டும் பரவாயில்லை என்று எண்ணியவன், அந்த தகவலைச் சொல்வதற்காக விவேக்கிற்கு உடனடியாக அழைதான். அவன் அழைப்பை ஏற்காததால் யோசனையோடே அவனுக்குத் துணைக்கு நிற்க வைத்திருந்த ஆளுக்கு அழைத்தான்.
“விவேக் சார் இந்த ரோட்டுல போயிட்டு இருக்காரு. நாங்க அவரை பாலோ பண்ணிட்டு இருக்கோம்” என்றான் மறுமுனையில் பேசியவன். அவன் சொன்ன வழி பூஜிதா குறிப்பிட்ட இடத்தை நோக்கியதாக இருந்தது.
விவேக்கும் சத்யா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டான் போல என்று எண்ணியபடியே, பூஜிதா மற்றும் தன் ஆட்களுடன் அந்த இடத்திற்குச் செல்ல தங்கள் வாகனத்தில் ஏறினான்.
மிரண்டு போயிருந்த பூஜிதாவிடம் என்ன நடந்தது என பதட்டப்படாமல் சொல்லும்படி ஆதி கேட்டான். வீரராகவனின் திட்டம் என்ன என்று தெரிந்தாக வேண்டுமே! அது வேறு அவனை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.
அவளுக்குத் தேம்பல் தான் வந்தது. பேசவே சிரமப்பட்டாள். எதிர்பாராத அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போயிருந்தாள். அதோடு சத்யாவிற்க்கு என்ன ஆகுமோ என்ற அச்சம் வேறு அவளுக்கு!
தண்ணீரை எடுத்து அவளுக்கு குடிக்கக் கொடுத்தான் ஆதி. வாங்கி வேகமாகப் பருகியவளிடம், “நீ தரும் இன்பர்மேஷன் இப்ப ரொம்ப உதவியா இருக்கும் பூஜிதா” என்றான் கரகரத்த குரலில்.
ஏற்கனவே பெற்றோரை ஈவு இரக்கமின்றி கொன்ற வீரராகவனிடம் சத்யேந்திரனும் மாட்டியிருக்க அவனது கதி என்னாகுமோ என்று உடன்பிறந்தவனின் அடிவயிறு கலங்கியது. காதலைப் பிரிக்க நினைத்திருந்தால் பரவாயில்லை, உயிரைக் காவு வாங்க நினைத்திருந்தால்? ஆதியின் நெஞ்சுக்குள் பெரும் பிரளயம் ஒன்று நடந்து கொண்டிருந்தது, மிகவும் தைரியம் வாய்ந்த அவனே குடும்பம் என்னும் கூட்டுக்கு முன்பு கோழையாக நின்றிருந்தான்.
பூஜிதா தேம்பியபடியே, “இன்னைக்கு காலையில அப்பா போன் பண்ணி என்னை சத்யா கூட அவர் தங்கியிருக்க ஹோட்டலுக்கு வர சொன்னாரு மாமா. சரி எங்க விஷயம் தெரிஞ்சிடுச்சு போல எப்படியும் ஒத்துப்பாங்க. அக்கா கல்யாணம் வரைக்கும் அதிகமா ஊர் சுத்தி பேரை கெடுத்துக்காம இருக்க சொல்லுவாங்கன்னு நினைச்சு தான் நான் சத்யாவோட அங்கே போனேன் மாமா” என்றவள், வெளிறிய முகத்துடன், “ஆனா அங்கே… அங்கே…” என அழுதபடியே பெரும் கேவலுடன் நடந்ததைச் சொல்லத் தொடங்கினாள்.
வீரராகவனுக்கு சத்யாவை மகளுடன் ஜோடியாகப் பார்த்ததும் அப்படியொரு ஆத்திரம்! அவன் அறைக்குள் வந்ததுமே அவனிடம் பாய்ந்து வந்து, அவனது சட்டையை கொத்தாக பற்றியபடி, “நீயெல்லாம் குப்பையிலே இருக்க வேண்டியவன்டா. உன்னை கோபுரத்துக்கு மாத்தி விட்டதே நான் தான்! ஆனா குப்பை உனக்கு என் பொண்ணு கேட்குதாடா நாயே!” என்று மோசமா பேசியபடி சத்யாவை திடீரென்று அடிக்க ஆரம்பித்திருந்தார்.