இருவரும் உணவகத்திற்கு வந்தனர். சுபியின் முகம் தெளியவில்லை.
கரண் “என்ன ஆர்டர் பண்ண.. பிரியாணி” என்றான்.
சுபிக்ஷா “ரசம் சாதம்” என்றாள், ஏதோவொரு நினைவில்.
கரண் “என்ன.. ரசமா” என்றான்.
சுபிக்ஷா இயல்பாக “இல்ல, தயிர் சாதம்..” என்றாள்.. புன்னகையோடு. சுபிக்கு கொஞ்சம் இலகுவானது இந்த சூழல். அதிலும் கரண், அக்காவிடம் பேசுகிறேன் என்ற வார்த்தை திருப்தியாகவே இருந்தது. வீரா பற்றி கரணுக்கு தெரியாதும், ஆனாலும் அப்படி கரண் சொல்லியது சந்தோஷம் பெண்ணுக்கு. என்னமோ இந்த நான்கு சந்திப்புகள் ஒரு நம்பிக்கையை கொடுத்திருந்தது.. தன் தரப்பின் ஞாயத்தை கரண் கேட்ப்பான்.. தனக்கு சாதகமாக பேசுவான் என, அதெல்லாம் வேண்டாம்தான். ஆனால், கருணா சொன்னால்.. அக்கா கேட்பாள் என ஒரு நம்பிக்கை சுபிக்கு.
கரண் ஆர்டர் எடுக்க வந்தவரிடம் சாலட்டும், அவளுக்கு தயிர்சாதமும் சொன்னான்.
சுபி புன்னகையோடு தன் நினைவுகளை பகிர தொடங்கினாள் “அதயேன் கேட்க்கிறீங்க, ஒருமுறை நானும் லக்ஷ்மியும் சென்னை வந்திருந்தோம். அப்போ, நான் திண்டிவனத்தில் இருந்தேன்னில்ல.. அப்போது. அவர் பர்த்டே ட்ரீட்.. சூப்பர்ராக அரெஞ்மென்ட் செய்திருந்தார்.. எனக்கு கிப்ட் சின்னதாக, டின்னெர்.. என. லக்ஷ்மி பெரிய ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்திருந்தார்.. நானும், சப்ரைஸ் ஆகி என்ஜாய் செய்துட்டு இருந்தேன். எல்லாம் நல்லாத்தான் போச்சு.. உனக்கு என்ன வேண்டும் ஆர்டர் என்றார்.. நான் ஸ்னக்ஸ் புல்லாக சாப்பிட்டுவிட்டேன்.. எனக்கு ரசம் சாதம் வேணுமன்னு சொன்னேன்.. லக்ஷ்மி முகம் அப்படியே மாறி போச்சு.. ஆர்டர் எடுக்க வந்தவங்களும் சிரிச்சிட்டாங்க. எனக்கு கோவம், அதென்ன ஒரு ரசசாதம் கொடுக்கமாட்டீங்களான்னு. லக்ஷ்மி எவ்வளவோ கெஞ்சினார்.. வேறு எதாவது சொல்லு சுபின்னு. இல்லையே, உங்க பர்த்டே அன்று கேட்டிருக்கேன்.. எனக்கு வேண்டும்ன்னு சொல்லிட்டேன். மனுஷன், எங்கோ பேசி.. கெஞ்சி.. எப்படியோ ரசம்சாதம் பிஷ் ப்ரையோட வந்தார்..“ என சொல்லி கண்ணில் நீர் வர சிரித்தாள் சுபி.
கருணாவும் சிரித்தான்.. ஆனால், அதில் ஜீவனில்லை.. சுபி சிரித்து முடித்து.. “சாரி கரண்.. உன்னை போர் அடிச்சிட்டேன். சிலது மறக்க முடியலை. க்கும்” என கண்களை துடைத்துக் கொண்டாள்.
கருணா “என்ன சிரிக்கும் போது கண்ணு கலங்குது.. அழுதியா” என்றான்.
சுபி “அஹ.. அது அப்படிதான்.. நான் ரொம்ப சிரிச்சா கண்ணீர் வருது.. அதைவிடு, நீ சொல்லு.. உன்னை பற்றி எதுவுமே தெரியாது எனக்கு.. அதாவது நீ சொல்லி தெரியாது, மற்றபடி சாரதா சொல்லியிருக்கா.. சாரி. நா.. நான் லிமிட் தாண்டுகிறேனோ.. என்னாச்சு எனக்குன்னு தெரியலை..” என சொல்லி.. தன் ஆமை மோதிரத்தை மேலும் கீழும் இடம்மாற்றிக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
கருணா நிமிடங்கள் அமைதியாக இருந்தான்.. அவளின் செய்கையை கவனித்துக் கொண்டே.. பின் “அதெல்லாம் ஒண்ணுமில்ல.. ஊரே பேசுகிறது. நீ பரவாயில்ல நேரடியாக கேட்க்கிற.” என சாய்ந்து சேரில் அமர்ந்தவன் “வேண்டாமே.. என்கிட்டே குரு மட்டும்தான் மெம்மரி.. வேற இல்லை..” என்றான் புன்னகையோடு.
சுபிக்கு என்னமோ போலானது என்ன சொல்லுவதென தெரியாமல் தலையசைத்து கேட்டுக் கொண்டாள்.
உணவு வந்தது,
சுபி “என்ன இது ப்ருட்ஸ்.. இதுதான் ஆர்டர் செய்தீங்களா” என்றாள்.
கருணா “ம்.. நான் சாப்பிட்டுதான் வந்தேன்.. நீ சாப்பிடு” என்றான்.
சுபிக்கு இதுவும் என்னமோ போலிருந்தது.. “ஏன் கரண், இதுதான் லாஸ்ட், என்கிட்டே பொய் சொல்லாதீங்க” என்றாள்.
கரண் “பெரிய பொய் உன் பையன் கஷ்ட்டபடுறா மாதிரியும் நீயும் இனி அழாத” என்றான்.
சுபி “குழந்தைங்கள் மறந்துடுவாங்க.. அத்தோட.. அவனும் தெரிந்துக் கொள்ளட்டும்.. இப்படிதான் வீடு, அக்கா.. பாட்டி எல்லாம் இருப்பாங்கன்னு, எனக்கு மறைக்க தெரியாது. காட்டிக்கொள்ளாமல் இருப்பேன் அவ்வளவுதான்.” என்றாள்.
கரண் புன்னகையோடு “ப்பா.. சுபி நார்மல் ஆகிட்டா.. கொஞ்சநேரத்துக்கு முன்னாடி வரை என்னென்னமோ பேசினியா கொஞ்சம் பயந்துட்டேன்.. இப்போ ஓகே” என்றான்.
சுபி “ஐயோ சாரி கரண் ஓவரா பேசிட்டனோ, என்கிட்ட இருந்து கொஞ்சம் தூரமாகவே இருங்க.. பிரெண்ட்டாகிட்டா இப்படிதான், கொஞ்சம் படுத்தி எடுத்துடுவேன்.” என்றாள் உண்டுக் கொண்டே.
பின் அவளே “எனக்கே தெரியுது நான் நிறைய பேசுவேன்னு, அது டிஸ்டர்ப்டா இருக்கும் போது மட்டும். நாளைக்கு கிளினிக் போனால்.. அங்கே இருப்பா ஸ்வர்ணா.. அவள் என் பிரென்ட்.. பேசி பேசி அவளை ஒருவழியாக்கிடுவேன்.. அப்போ நானும் சரியாகிடுவேன்.” என்றாள்.
கருணா “ஓ.. இல்ல, நான் அப்படி சொல்லலை. அதனால் என்ன பேசு.. பரவாயில்ல, என்கூட பேசத்தான் ஆளில்லை” என்றான், டேபிளை பார்த்துக் கொண்டு. அவளை நேரே பார்க்கவில்லை.. ஒரு அழுத்தத்தில் உளருகிறாள் என எண்ணினான். ஆனால், அது கேட்க்கும் போது உயிர்ப்பாக இருக்கிறது. அவள் கணவன்முகம் எப்படி இருக்கும்.. இவளின் பேச்சினை கேட்க்கும் போது.. என எண்ணிக் கொண்டான்.
இருவரும் உண்டு முடித்து வெளியே வந்தனர். சுபியை வீடு சேர்ந்தான்.. “நீ கூப்பிடு ஏதாவதுன்னா, நான் உனக்கும் பிரெண்டுதான்..” என்றான் புன்னகையோடு.
சுபி உணர்ந்த குரலில் “தேங்க்ஸ்” என்றாள்.
கிளம்பினான் கருணா. இது எந்தவகை சந்திப்பென பெயரில்லை.. பெயரில்தான் பிரச்சனையே தொடங்குகிறது போல.
கருணாவிற்கு யோசனைத்தான். நான் ஏன் அவளை அழைத்து செல்ல வேண்டும் என.. எனக்கு அவள்மேல் ஆசையோ என யோசனை.. அந்த வாரம் முழுவதும். தன்னைத்தானே செக் செய்துக் கொண்டான். அவளுக்கு தானாக அழைக்கவில்லை. அவளும் தன்னை அழைக்கவில்லை.
கருணாவிற்கு சமாதானம் ஆனது மனது. ஆமாம்.. மற்றவர்கள் செய்யும் தவறை நாமும் செய்திட கூடாதென்பதில் உறுதியாகினான் கருணா. அப்படி ஒன்றும் இல்லை.. பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்றோ.. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றோ.. எந்த எண்ணமும் எழவில்லை. என்னை போல ஒரு ஜீவன்.. அதாவது துணையில்லாமல் இருக்கிறாள்.. பெற்றோரும் ஊரில்லில்லை அதனால், கொஞ்சம் அவளை பார்த்துக் கொள்கிறேன் என எண்ணி தெளிவுக் கொண்டான்.
ஆனால், அதுதான் தவறு என மனதில் ஓரத்தில் சின்ன உறுத்தல் எழுந்தது கருணாவிற்கு அவ்வபோது.
கருணா அமைதியாகிவிட்டான். பார்க்கவில்லை.. அவளை பற்றி எண்ணுவது கூட பாவமென அமைதியாகினான் கருணா.
வேறு பெண் பார்க்கணும் என தங்கையிடம் சொல்லிவிட்டான்.. ‘தயவு செய்து நீங்களே பார்த்துவிடுங்க.. இந்தமுறை என்னை அனுப்பாதே எனக்கு அதெல்லாம் ஒத்துவரவில்லை’ என கடின குரலில் சொல்லிவிட்டான் கருணா.
குரு வார இறுதியில் வரும்போது, அருணகிரி, நேராக சுபியின் கிளினிக் சென்று குருவின் விளையாட்டு தோழனான விசாகனை அழைத்து கொண்டு.. வந்தார். இரு பிள்ளைகளையும் இரவு உணவிற்கு என எப்போதாவது வெளியே கூட்டி போனார். பிள்ளைகள் உறவில் எந்த மாற்றமும் இல்லாமல் நகர்ந்தது.
சுபியின் மாமனார் ஊருக்கு சென்று அழைக்கவேயில்லை. சுபி, வினுவிடம் பேசும் போதெல்லாம் மானாரின் கோவம் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தாள் வினு. அதனால், சுபி தானே தன் மாமனாருக்கு அழைத்து பேசினாள்.
முதலில் கோவமாக பேசினாலும்.. சுபியின் மேல் கருணையுள்ளவர் அதனால், சமாதானமாகிவிட்டார் எளிதில்.. “நீங்க வந்து ரெண்டுநாள் இருங்க மாமா” என்றாள்.
அவரோ “நீ கிளம்பி போய்டுவ நான்தான் தனியா என்னம்மா செய்வது, அதனால், அடுத்தவாரம் லக்ஷ்மி திதி, நீயும் அவனும் வந்து நாலுநாள் இருக்கணும் சொல்லிட்டேன். பேரனை பார்க்கணும் போலிருக்கு” என்றார்.
மறுத்து பேசவில்லை சுபி.
இன்று, சொன்னது போலவே.. எல்லா ஏற்பாடுகளும், கிளினிக்கில் செய்துவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தாள். விசாகன் பள்ளியில் இருந்து அப்படியே கிளம்பிவிடலாம் என ஏற்பாடு. இல்லையேல்.. இருட்டிவிடும் இந்த டிராபிக் தாண்டுவதற்குள்.. என எண்ணிக் கொண்டே எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
மொத்தம் நான்கு நாட்கள்.. வேலைநாட்கள் இரண்டு.. அடுத்தா இரண்டுநாட்கள் விடுமுறை தினம். அதனால், கருணாவிடம் பேசிடலாம் என எண்ணி.. இந்தமுறை, விசாகனை அழைக்க வரவேண்டாம் என சொல்ல எண்ணி அழைத்தாள். மாலை மூன்று மணிக்கு மேல்.
கருணா ரிசார்ட்டில்தான் இருந்தான். சுபியின் அழைப்பினை பார்த்ததும் கண்கள் ஒளிரத்தான் செய்தது. ஆனாலும், அந்த அழைப்பினை ஏற்கவில்லை.
பத்துநிமிடம் போராட்டம் அவனுள்.. நான்தானே பிரென்ட்ன்னு சொன்னேன்.. இப்போது உன் மனசில்தான் திடீர்ன்னு கள்ளம்.. ஒழுங்கா பேசு.. என அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டு இருபது நிமிடம் சென்று அழைத்தான்.. சுபிக்கு.
சுபி “சாரி கரண் வேலையாக இருந்தீங்களோ..” என்றாள்.
கரண் “இல்ல இல்ல… சொல்லு சுபி” என்றான்.
சுபியும் தானும் மகனும் இந்தவாரம் ஊருக்கு செல்வது பற்றி சொன்னாள்.
கரணுக்கு பேச்சுகள் இயல்பாகவே வந்தது “என் பையன் பிரென்ட்’டினை மிஸ் பண்ண போறான்.. என்கிட்டே எங்காவது கூட்டிட்டு போன்னு சொல்ல போறான்.. எப்போ ரிட்டன்..” என்றான்.
சுபி “சண்டே ஈவினிங்தான்.” என்றாள்.
கரண் “ஏதாவது டிரைவர் ஏற்பாடு செய்யவா..” என்றான்.
சுபி “இல்ல இல்ல.. நான்தான் எப்போதும் போவேன், நான் பார்த்துக்கிறேன். சரி கரண், பை..” என்றாள்.
கரண் “சரி, சேர்ந்துவிட்டு மெசேஜ் செய்திடு எனக்கு” என்றான். இருவரும் இந்த வார்த்தையை சொல்லும் போதும்.. கேட்க்கும் போதும்.. இனிமையாக பாதுகாப்பாகவே இருந்தது. எதையும் காட்டிக் கொள்ளவில்லை சுபி “ம்.. பைய்” என சொல்லி வைத்துவிட்டாள்.
சுபி, மகனோடு காரில் திண்டிவனம் வந்து சேர்ந்தாள். வினு, மாமனார் பிள்ளைகள் என எல்லோரும் வாசலிலேயே காத்திருந்து சுபியை எதிர்கொண்டனர்.
பசங்கள் மூவரும் ஆட்டம்தான்.
சுபி மறக்காமல் கரணுக்கு செய்தி அனுப்பிவிட்டாள்.
கடகடவென இரண்டு நாட்கள் கடந்தது.. சனிகிழமை லக்ஷ்மிகாந்தனின் திவசம்.. குழந்தை விசாகன் அருகில் இருந்தான்.. அவனின் தாத்தாதான் எல்லாம் செய்தார்.
அன்று முழுவதும் லக்ஷ்மியின் வாசம் வீசுவதாக இருந்தது.. சுபிக்கு. அழுகை எல்லாம் தாண்டி.. ‘எங்கிருந்தாவது வந்திடமாட்டானா..’ இந்த படத்தில் எல்லாம் வருவது போல.. என அவனை இழந்ததை ஏற்க முடியாமல் ஒருமனம் அலைபாயவே செய்ததது பெண்ணுக்கு. அது வலி இல்லை.. அழுத்தம்.. நின்று சுழலும்.. பெரிய அழுத்தம். எல்லா நாட்களையும் கடந்தாலும்.. இந்த நாள்.. அவளின் நினைவில் வந்து கொண்டே இருக்கும்.
ஞாயிற்று கிழமை பொறுமையாக மதியத்திற்கு மேல் கிளம்பினர் சென்னைக்கு. இந்தமுறை வீராவை கண்ணில் பார்க்கவில்லை. வினு சொல்லியிருந்தால் “ஸ்ரீதான் அவங்க அப்பாவை மிரட்டி வைத்திருக்கிறார். வீரா.. நீங்க வந்து போகும் வரை இங்கே வரக்கூடாதென. வீராவிடமும் வேறு வேலை பார்த்துக்க.. ஏதாவது உதவி வேண்டும்ன்னா கேளுன்னு சொல்லி அப்படியே வைச்சிருக்கு. மாமா இன்னும் வீராகிட்ட ஏதும் பேசலை போல.. நீ குழப்பிக்காத. எல்லாம் சரியாகிடும்” என்றாள் ஆறுதலாக.
சுபி கிளம்பும் போது ஸ்ரீக்கு நன்றி சொல்லி கிளம்பினாள்.
மறக்காமல் வீடு வந்ததும் மாலையில் கரணுக்கு செய்தி அனுப்பினாள். சற்று நேரத்தில் குரு வந்து நின்றான் “விசா.. வாடா சைக்கிள் பண்ணலாம்” என.
சுபிக்கு புன்னகைதான்.
நாட்கள் இயல்பான வேகத்தோடு சென்றது.
ஒருநாள் சுபிக்கு உடல்நிலை சரியில்லை.. மதியத்திற்கு மேல்.. இருப்பவர்களை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, வீடு வந்து உறங்க தொடங்கினாள்.
விசாகன் இன்று ஸ்கூல் பஸ்ஸில் வீடு வந்து இறங்கினான். மகனுக்கு எதோ திண்பதற்கு எடுத்து கொடுத்துவிட்டு.. மீண்டும் உறங்க சென்றுவிட்டாள்.
விசாகன் வந்து குளித்து.. எதோ டிவியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டே டவல் கட்டி கொண்டு.. எதையோ வைத்து விளையாடிக் கொண்டு.. உண்டுக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் ஒரு அலறல் சத்தம் கேட்டு சுபிக்ஷா அடித்துபிடித்து வந்து பார்க்க.. ஹாலில் மகன்.. எதோ ப்ளக்பாயிண்ட்டில் எதையோ வைத்திருக்கிறான் போல.. தூக்கி அடித்திருக்கிறது.. கையிலிருந்த கத்தி.. லேசாக விரலில் கீறியிருக்க.. மகன் தூரமாக விழுந்து கிடந்தான். பேச்சுமூச்சில்லை.. சுபிக்கு ஒன்றும் புரியவில்லை.. மகனின் அருகே செல்லவே பயம்.. மகனை தொட்டு பார்க்க.. என்னென்னமோ யோசனைகள்.. மூச்சே வரவில்லை.
வெளியே ஓடிவந்து.. யாராவது இருக்கிறார்களா என பார்த்தால் யாருமில்லை. என்ன செய்வதென போனெடுத்து.. விசாலாட்சி ஆன்ட்டிக்கு அழைத்தாள்.. “ஆன்ட்டி அங்கிள்.. அங்கிள் இந்தால் அனுப்புங்க.. விசாகன் விழுந்துட்டான்.. பயமா இருக்கு” என பிதற்றினால் பயத்தில்.
விசாலாட்சி ஆன்ட்டியும், எந்த கேள்வியும் கேட்க்காமல் அவளை அமைதியாகும் படி சொல்லிவிட்டு.. அழைப்பினை துண்டித்தார்.
விசாலாட்சி உடனே கணவனுக்கு அழைத்து விவரம் சொல்ல.. அருணகிரி காபி குடித்துக் கொண்டிருந்தார். இப்படி சொல்லவும்.. உடனே விசாகன் வீடு சென்றார் ஓட்டமும் நடையுமாக.
வீட்டில் வேலை செய்யும் ரத்தினம் அக்கா.. கருணாவிற்கு காபி கொடுத்துவிட்டு.. இந்த செய்தியை சொல்லிவிட்டு வந்தார்.
கருணா கார் சாவி எடுத்துக் கொண்டு கிளம்ப.. விசாகனை தோளில் தூக்கிக் கொண்டு தன் தந்தை வருவதை பார்த்தான்.. பின்னால் சுபி வந்தாள்.
கருணா கார் வாசலில் நிற்க.. “என்னாச்சு ப்பா..” என கேட்டு விசாகனை வாங்கி காரின் பின்சீட்டில் கிடத்தினான் “ஏறு சுபி.. அப்பா ஏறுங்க” என்றவன் காரெடுத்தான்.
மருத்துவமனை சென்றனர்.. “நல்ல ஷாக். அதிர்ச்சியில் மயக்கம்..” என சொல்லி ட்ரிப்ஸ் போட்டனர்.. ஆனால், இன்னமும் கண்திறக்கவிலை விசாகன். சுபிக்கு மெடிக்கல் டெர்ம்ஸ் எல்லாம் ஓரளவு புரிகிறது.. இன்னும் நேரமாகும் பையன் விழிக்க என.. ஆனால், அன்னைக்கு புரியவில்லை.
இரவு சங்கீதா அழைத்தால் சுபிக்கு. சுபிக்கு அந்த அழைப்பினை ஏற்கவே பயம். கருணாதான் அதை ஏற்று.. “சங்கீதா, உன் அப்பாகிட்ட கொடு” என சொல்லி அவரிடம் விவரம் சொன்னான்.
எல்லோரும் பதறிதான் போகினர்.
கருணா அருணகிரி இருவரும் சுபியின் கூடவே இருந்தனர்.. கருணா, மருத்துவமனை போர்மாலிட்டீஸ் எல்லாம் செய்தான். அவளின் அருகே நெருங்கவில்லை. ஆனால், எல்லாம் பார்த்துக் கொண்டான்.
இரவு உணவு நேரம் நெருங்க.. தந்தையை வீடு அனுப்பி வைத்தான்.. “நான் விசாகன் விழிக்கட்டும் ப்பா.. வந்திடுறேன்” என்றான். அதுவும் சரிதானே.
விசாகன் பதினோரு மணிக்கு மேல்தான் கண் விழித்தான்.
சுபி அதன்பின்தான் மகனை பார்த்து அழுகை.. கதறிவிட்டாள். கருணா முதலில் ஏதும் சொல்லவில்லை. ஆனால், நர்ஸ் அதட்டி சென்றார்சிறுவன் பயந்திடுவான் என.
அப்போதும் சுபி, நிமிடங்கள் அமைதியாக அழுகையை அடக்கி இருந்தவள்.. சற்று நேரத்தில் மீண்டும் மகனை வருடி வருடி அழ தொடங்கினாள்.
இந்தமுறை கருணா அதட்டினான் “என்ன சுபி செய்கிறாய் நீ.. அவனே பயந்திருப்பான்.. நீயும் இப்படி அழுதால்.. கிளம்பு வீட்டுக்கு, நான் பார்த்துக்கிறேன் விசாகனை” என்றான்.
அதை கேட்டு, விசாகன் அழுதான் இப்போது.. “அங்கிள்.. அம்மா” என.
கருணா “அப்போ, உன் அம்மாவை அழ வேண்டாம்ன்னு சொல்லு” என்றான், மிரட்டலாக.
விசாகன் அன்னையிடம் அப்படியே சொன்னான்.
கடினமான காட்சிகள்.. ஆனால், தள்ளி இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு நர்ஸுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. தேவையான இடத்தில் பேசுவதும்.. காவல் நிற்பதும்தானே நட்பு.. அது இப்போது அழகாக நடந்தது.
இருவருக்கும் உணவு வாங்கி வந்தான் கருணா.. அவர்களை உண்ண வைத்துவிட்டுத்தான் கிளம்பினான் வீட்டிற்கு.
கார்த்திக், அழைத்து சுபியின் மாமனார் வீட்டில் சொல்ல.. இரவில் அவர்கள் வந்து சேர்ந்தனர். கருணா கிளம்பவும் அவர்கள் வரவும் சரியாக இருந்தது.
அவர்களை பார்த்ததும்.. மீண்டும் சுபிக்கு அடக்கி வைத்திருந்த அழுகை.. ஏதேதோ நினைவுகள் வருமே.. அவளும் பாவம் என்னதான் செய்வாள்.. அழுதாள்.
எல்லோரும் சொல்லினர்.. பையன் பயப்படுவான் என.. வாய்மூடி அழுதாள்.. என்னமோ தாங்கவே முடியவில்லை. விசாகன் “ம்மா, அங்கிள்கிட்ட சொல்லிடுவேன்.. அழுதால் நீ போ..” என கருணா போல மிரட்டினான்.
அதன்பின்தான் அமைதியானாள் பெண். லேசாக புன்னகை மகன் நார்மலாக பேசியது.. அன்னை மகனை மடி சாய்த்துக் கொண்டாள்.. உறங்கினான்.