அத்தியாயம்-26

ராஜு “என்ன ஹாசி அமைதியா இருந்தா என்னா அர்த்தம். எதாவது சொல்லுடா”

ரஞ்சன் அடுத்த வாய் தோசையை விண்டு வாயில் வைத்தவாறே “அவ அமைதியா இருக்கும்போதே தெரியலையாப்பா. அவளுக்கு இதுல…..”

ஹாசி, “எனக்கு சம்மதம்ப்பா” என்க, ரஞ்சன் வாயில் இருந்த தோசை நழுவி தட்டில் விழுந்தது. தங்கையையே அதிர்ச்சியாக பார்த்தவன் கண்கள் இரண்டும் வெளியில் தெரித்துவிடும் போல் விரிந்திருந்தது.

அண்ணனின் முகத்தை பார்த்த ஹாசி பெருமூச்சுவிட, அவனோ தங்கையையே ஆழ்ந்து பார்த்தான்.

ரேவதி “ரொம்ப சந்தோஷம் ஹாசி. ஏங்க உடனே கிருஷ்ணன் அண்ணாக்கு போன்பண்ணி இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்லுங்க”.

ரஞ்சன், “ஆனா….. ஹாசி……”

ஹாசி, “நாம அப்புறம் பேசலாம் அண்ணா. அப்பா விருப்பம் என்னவோ அதுதான் என் விருப்பமும்” என்றவள் எழுந்து சென்றுவிட,

ராஜ்ஜோ மனைவியிடம் கண் காட்டியவாறு “நம்ம விருப்பமாம் ரேவா…” என்று கிண்டல் குரலில் சொல்ல, ரேவதியும் மகளை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தார்.

ஹாசி அவர்கள் சம்பாஷனை எதையும் கவனிக்காமல் தனக்குள் மூழ்கி போய் இருந்தாள்.

ரேவதி, “என்ன சொன்னா என்னங்க. இந்த விஷயத்தை உடனே நான் போய் பத்துகிட்ட சொல்றேன். எதிர்பார்த்துட்டே இருப்பா” என்றவாறு எழுந்து செல்ல,

கராஜும் சந்தோஷமாக கிருஷ்ணனுக்கு போன் போட துவங்கினார். ரஞ்சன் அவர்கள் கவனிக்காதவாறு எழுந்து தங்கை பின்னாடியே சென்றான்.

ஹாசி மொட்டை மாடியில் நின்று நிலவை வெறித்து கொண்டிருக்க, அவள் பின்னோடு வந்த ரஞ்சன் “ஹாசி……” என்க,

“ம்ம்ம்……” என்றவள் பார்வை என்னவோ நிலவிலேயே நிலைத்து இருந்தது.

“என்ன கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்ட” என்று கேட்க, அவளிடம் இருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.

“என்னடா. எதாவது பிராப்ளமா. ஏன் இந்த திடீர் முடிவு”

“ஹர்ஷா ஆபிஸ் வந்திருந்தாண்ணா”

“ஆபிஸ்க்கா……” என்று யோசனையாக தங்கையை பார்த்தவன். அவளே சொல்லட்டும் என்று பார்த்திருக்க,

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டான்” என்று சொல்ல,

ரஞ்சனோ குழப்பமாக பார்த்து “ஏன் அப்படி கேட்டான். அவன் லவ் பண்ணுன பொண்ணு என்ன ஆனா?”

“ப்ரேக் அப் ஆகிடுச்சாம்”

“வாட்…” என்று அதிர்ந்து போய் கத்தியவன் முகம் கோபத்தில் சிவக்க,

“ஆமாம்….” என்றவள் ஆபிசில் ஹர்ஷா கூறிய அனைத்தையும் சொல்லி முடிக்க, ஆணவன் முகம் உக்கிரமாக மாறியது.

“அவன் என்ன நினைச்சுட்டு இருக்கான். என் தங்கச்சி அவனுக்கு ஆப்ஷனா…. அவ இல்லைன்னா இவன்னு போறதுக்கு. அதுமட்டும் இல்லாம ஒரு வருஷ கல்யாணம் அதுக்கப்புறம் உன் நிலைமை என்னன்னு அந்த மெண்டல் யோசிச்சானா…

என் தங்கச்சி பத்தியும் அவ பியூச்சர் பத்தியும் யோசிக்க அவன் யாரு. உனக்கு ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்ய, அம்மா, அப்பா இருக்காங்க. அதுக்கும் மேல உன் அண்ணன் நான் இருக்கேன். என்ன தைரியத்துல அவன் இப்படி எல்லாம் பேசி இருக்கான்.

அவனை என்று கோபமாக போனை எடுத்தவன் அது ஸ்வீட்ச் ஆப் ஆகி இருப்பதை பார்த்து கடுப்பாகி “ச்ச…. இதுவும் சதி பண்ணுது. சார்ஜ் இல்ல போல” என்று சுவற்றில் கையை ஓங்கி அடிக்க,

ஹாசி ஓடிவந்து அவன் கையை பிடித்து “அண்ணா என்ன பண்ற. உனக்கு எதுக்கு இவ்ளோ கோபம் வருது. கொஞ்சம் அமைதியா நான் சொல்றதை கேளு”.

“என்ன கேட்கணும். எதுக்கு கேட்கணும். போன்லதானே தப்பிச்சான். நான் நேர்லயே போய் அவனை பேசிக்கறேன்” என்று மாடி படி நோக்கி சென்றவன் ஒரு நிமிடம் நின்று,

“ஹாசி ஒரு வருஷத்துக்கு அப்புறம் என் தங்கச்சி வீட்டுக்கு வந்துட்டா. அவன் தங்கச்சிக்கூட நான் மட்டும் எப்படி வாழுவேன்னு அவன் நினைக்கறான்” என்று அழுத்தமான குரலில் கேட்க,

அதை கேட்ட பெண்ணவளோ திகைத்துதான் போனாள். உடனே கோபமாக “அண்ணா…… என்ன பேசற. என் வாழ்க்கைக்குள்ள எதுக்கு இப்போ மித்ராவ கொண்டு வர, நான் இதைப்பத்தி ஏற்கனவே உன்கிட்ட பேசியிருக்கேன்.

இருந்தாலும் இன்னொரு டைம் சொல்றேன். என் வாழ்க்கையை எப்படி அமைக்கணும்னு எனக்கு தெரியும். சும்மா தங்கச்சி…. தகர அச்சின்னு உன் வாழ்க்கையை கெடுத்துக்காத. முதல்ல இங்க வா” என்று அவன் கையை பிடித்து இழுத்து சென்றவள் முதலில் நின்ற இடத்திலேயே நிற்க வைக்க,

அவனோ கோபமாக “என்ன ஹாசி எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா உன்னை பத்தி நான் யோசிக்க கூடாதா. கவலைப்பட கூடாதா. அந்த பன்னாடை நாயி என் தங்கச்சிய பிளாக் மெயில் பண்ணியிருக்கான்.”

ஹாசி, “வாட்….. பிளாக்மெயிலா,….” என்று வாயை பிளந்த தங்கை வாயை மூடியவன் “என்ன என்கிட்டயே மறைக்க பாக்குறியா. அவன் பேசுனதோட சாராம்சம் இதுதான். அதைக்கூட புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு உன் அண்ணன் ஒன்னும் மாக்கான் இல்லை”

“ஏன் ரஞ்சா நான் பிளாக் மெயிலுக்கு பயப்படற ஆள்னு நீ நினைக்கறியா” என்றவள் கேட்டவுடன், அவன் புருவம் சுருங்கியது.

“நான் அவ்ளோ பயந்த பொண்ணுன்னா நீ நினைச்சுட்டு இருக்க” என்று கேட்டவள் குரலில் இருந்த எகத்தாளத்தை கண்டு கொண்டவன், கண்கள் மின்ன “அப்போ….. ஏன் ஹாசி. உன்கூட படிச்ச பொண்ண எவனோ தப்பா போட்டோ எடுத்து மிரட்டும்போது போல்டா நின்னு அவனை அடி புரட்டி எடுத்து காப்பாத்திட்டு. இப்போ நீ எதுக்கு?”

“எனக்கும் தெரியலண்ணா……” என்றவள் குரலில் இருந்த தடுமாற்றத்தை கவனித்த ரஞ்சன் “என்ன ஹாசி…” என்று அவள் தலையை கோதியாவாறு கேட்க,

உடனே அண்ணனை அணைத்து கொண்டவள் கண்ணீருடன் பேச துவங்கினாள்.“எனக்கு அவன் மேல கழுத்தளவுக்கு கோபம் இருக்குண்ணா. என்னைவிட்டுட்டு நீ எப்படிடா இன்னொருத்தி பின்னாடி போகலாம்ன்னு அவன் முடியை ஆஞ்சி விடணும்னுதான் தோணுது.

எனக்காக காத்திருக்க முடியாத? நீயும் வேண்டாம். உன் குடும்பமும் வேண்டாம்னு சொல்லிட்டு போக எனக்கு நிமிஷம் போதும் ஆ….. ஆ…. ஆனா…. என்னால முடியலண்ணா.

எனக்கு விவரம் தெரிஞ்சத்தில இருந்து பார்த்து பார்த்து ஆசை ஆசையா வளர்த்த காதலை என்னால அப்படியே போன்னு விட முடியல. எப்படியாவது அவன் வாழ்க்கைக்குள்ள நான் இருக்க மாட்டனான்னு ஒரு எண்ணம்.

எதுக்கு இப்படி கேவலமா நினைக்கறன்னு என்னை நானே திட்டிக்கிட்டேன். ஆனா மனசு….. அது கேட்க மாட்டாடிக்குது. அதான் ஒரு சான்ஸ் கிடைச்ச உடனே யூஸ் பண்ணிக்க நினைச்சேன். ஒரு வருஷம்னாலும் அவன் பொண்டாட்டி நான்தான்”

“லூசு…. லூசு….. கொஞ்சமாவது யோசி. காதல் கண்ண மறைக்குதுன்னு சொல்றது இதைதான் போல, ஒரு வருஷம் போதும்னு சொல்றியே அதுக்கப்புறம் உன் நிலைமை….” என்ற அண்ணனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் அப்படி ஒரு தீஷன்யம்.

கண்ணீரை துடைத்தவள் “ஒரு வருஷத்துக்கு அப்புறம் பிரிஞ்சா பார்த்துக்கலாம்”

“என்ன அவன் பின்னாடியே அன்பே…. அத்தான்னு சொல்லி அலைய போறியா? அவன்தான் லவ் பெயிலியர்ல இருக்கானே. கண்டிப்பா உன்னை திரும்பி கூட பார்க்கமாட்டான். தேவையில்லாம உன் எனர்ஜி வேஸ்ட் பண்ணாம, இந்த கல்யாணம் வேண்டாம்னு போய் அப்பாகிட்ட சொல்லு,

“முடியாதுண்ணா……”

“ஹாசி……” என்று பல்லை கடித்தவன் பின் “சரி நானே போய் அப்பாட்ட பேசறேன். எனக்கு உன்னோட வாழ்க்கை ரொம்ப முக்கியம். அந்த பன்னாட பயலுக்கு சேவகம் செஞ்சு அவனை நீ இம்ப்ரெஸ் பண்ணி…… அப்புறம் சேர்ந்து வாழ்ந்து…. ம்கூம் இது எல்லாம் சரிப்பட்டு வராது. அப்படி எல்லாம் நீ அவன்கூட இருக்கணும்னு அவசியம் இல்லை.

நீ எங்க வீட்டு இளவரசி…” என்றவனை தடுத்து நிறுத்தியவள்,

“ஹேய் என்னடா அண்ணா ஓவர் டையலாக் பேசுற. நான் அவனுக்கு சேவகம் செஞ்சுதான் இம்ப்ரெஸ் பண்ண போறேன்னு நான் எப்போ சொன்னேன்”.

“அதெல்லாம் நாங்க எத்தனை கதைல படிச்சுருக்கோம்”

“டேய் அண்ணா அவங்க எல்லாம் மேனுபேக்ஷரிங்கே அப்படி அமைதியா இருக்கவங்கடா. ஆனா….. நான் அப்படியா?

அதுமட்டும் இல்லாம ரீல் வேற ரியல் வேற. அவனை எப்படி கதற விட போறேன் பாரு. கண்டிப்பா எங்க வாழ்க்கை நல்லாதான் இருக்கும். என்ன அவன் ஒரு லூசு அடிக்கடி தட்டி தட்டி சரி பண்ணனும். அதை நான் பார்த்துக்கறேன்.

நீ போய் அண்ணிக்கூட நல்லா கடலை போடு. தேவையில்லாம எங்களை யோசிச்சுட்டு உன் வாழ்க்கையை விடாத” என்றவள் சொல்ல,

தங்கை மீது நம்பிக்கை இருந்தாலும் “ஹாசி ஏனோ எனக்கு சரியாவே படல. ஆனா…. நீ பிடிவாதமா இருக்கவும்தான் நான் அமைதியா இருக்கேன். ஆனா உனக்கு அவன்கூட இருக்க முடியலைன்னா கண்டிப்பா இந்த அண்ணாக்கிட்ட வரணும் ஓகேவா. யோசிக்கவே கூடாது” என்க,

அவளும் முகத்தில் விரிந்த சிரிப்புடன் “கண்டிப்பாண்ணா….” என்று குறும்பாக கண்ணடித்து சொல்ல, ரஞ்சனும் மகிழ்வுடன் அங்கிருந்து கிளம்பினான்.
அண்ணன் சென்றவுடன் தீவிர யோசனையில் இருந்த ஹாசி சில பல முடிவுகளை எடுத்துவிட்டு உறங்க சென்றாள்.

அங்கு ஹர்ஷா ஹாசியை வீட்டில் விட்டுவிட்டு வந்தவன் இலக்கில்லாமல் வண்டியை செலுத்தி கொண்டு இருந்தான். கடைசியாக ஏதோ எண்ணத்தில் வண்டியை நிறுத்தியவன் இருக்கும் இடத்தை சுற்றி பார்க்க,

அது ஒரு கோவில். எந்த கோவிலில் ஹாசி நெற்றியில் பொட்டு வைத்தானோ அதே கோவில். அதை நினைத்து பார்த்தவன் அன்னைக்கு எதேர்ச்சியா தெரியாம ஹாசி நெத்தில பொட்டு வச்சேன்

கடைசில அதுவே நிஜம் ஆகிடுச்சு. சாரி ஹாசி உன்னை யூஸ் பண்றேன்னு மட்டும் என்னை தப்பா நினைச்சுக்காத, என்னை நீ புரிஞ்சுப்பன்னுதான் இந்த முடிவை எடுத்தேன்.

என்னால உன்னை பிரண்டா மட்டும்தான் பார்க்க முடியுது. அதுக்கு மேல யோசிக்க முடியல. என்னால உன் வாழ்க்கை வீணா போக கூடாதுன்னுதான் ஒரு வருஷத்துக்கு அப்புறம் நாம பிரிஞ்சிடலாம்னு சொன்னேன்.

உன்னோட நல்ல வாழ்க்கைக்காகதான். இதுல என்னோட சுயநலமும் இருக்குதான் ஆனா……’என்று பெருமூச்சுடன் தலையை கோதியவன் ‘கண்டிப்பா என்னை புரிஞ்சுப்ப ஹாசி. நாம நல்ல பிரண்டா எப்போவும் இருப்போம்’ என்று தனக்குள் சொல்லி கொண்டு வண்டியை வீட்டை நோக்கி செலுத்தினான்.

வீட்டில் அவனுக்காகவே காத்திருந்தனர் அனைவரும்.

பாட்டி, “ஏம்மா மித்ரா. உன் அண்ணன் வந்து சொல்றேன்னு சொன்னானே. கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிடுவானோ….” என்று பேத்தி காதில் முணு முணுக்க,

அவளும் அண்ணன் என்ன சொல்ல போகிறானோ என்ற கவலையில் இருந்தவள் “தெரியல பாட்டி”என்றாள்.

“அவன் கல்யாணத்துக்கு சம்மதிக்கலன்னா என்ன பண்றது. எதுக்கும் ஹாஸ்பிடல உன் அம்மாக்காரிக்கு இப்போவே அட்மிசன் போட்டு வச்சிடு. எதுவும் ஒண்ணுன்னா உடனே சேர்க்க சரியா இருக்கும்.

அப்படியே அவளை அட்மிட் பண்றதுதான் பண்ற அதிகம் பேசாம இருக்க எதாவது மருந்து இருந்தா அதை குளுக்கோஸ்ல கலந்து போட்டுவிட சொல்லு.

நானும் என் மவனும் கொஞ்சம் நிம்மதியா இருப்போம். உனக்கு புண்ணியமா போகும். அதுமட்டும் இல்ல. வேணும்னா சொல்லு நான் ஒரு நல்ல சித்திய உனக்கு கொண்டு……” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அங்கு வந்து சேர்ந்தார் பத்மா.

“ஏன்டி மித்து உங்க அப்பாக்கு பிரஷர் மாத்திரை, சுகர் மாத்திரை எல்லாம் எடுத்து குடுத்தியா?” என்று மாமியாரை பார்த்து கொண்டே நக்கல் குரலில் கேட்க,

அவரோ”ம்கூம்….” என்று தோள் பட்டையில் முக வாயை இடித்து கொண்டு “மித்து அவளை கட்டிக்கிட்டதுலதான் என் மகன் பேஷண்ட் ஆனான்னு சொல்லு.

என் மகனா இருக்க வரை நல்ல ஆரோக்கியமாதான் இருந்தான். உன் ஆத்தா என்ன சமச்சி போட்டாளோ ஊர்ல இல்லாத நோய் எல்லாம் என் மகனுக்கு வந்துருக்கு”.

“ம்கூம்……ஆமா அவங்க பையனுக்கு இப்போதான் இளமை ஊஞ்சல் ஆடுது. சின்ன வயசுல வராத நோய் எல்லாம் வருது. அம்பது வயசுக்கு மேல ஆன கிழவனை வச்சுக்கிட்டு கிழவிக்கு குசும்ப பாரு. பொண்ணு பார்க்க போகுதாம் பொண்ணு.

நல்லா பாருங்க எனக்கென்ன வந்தது. பாக்கறதுதான் பாக்குறீங்க. நல்ல டாக்டரா இல்ல நர்சா பாருங்க அப்போதான் உங்க புள்ளைக்கு மருந்து எடுத்து குடுக்க சரியா இருக்கும். பொண்ணு பாக்கறாங்களாம் பொண்ணு…..

என் புள்ள கல்யாணத்தைபத்தி பேசலாம்னு பார்த்தா காலம் போன காலத்துல அவங்க மகனுக்கு பொண்ணு பார்க்க போறாங்கலாம். எல்லாம் இந்த மனுஷன சொல்லணும். எங்க அவரு” என்று கண்களை சூழல விட்டவர் “ஏங்க…. ஒழுங்கா வெளிய வந்துடுங்க. உங்க அம்மா பேசுனது எல்லாம் கேட்டுட்டு இருந்தீங்கன்னு எனக்கு தெரியும். இப்போ வெளிய வர போறீங்களா இல்லையா……” என்று கத்த,

அவரோ ‘கடவுளே இவங்க ரெண்டு பேர் சண்டைல என் தலையதான் போட்டு உருட்டுறாங்க. இப்போ என்னன்னு தெரியலையே…. இந்த கத்து கத்தறா…’ என்றாவாறே வெளியில் வந்தவள் “என்ன பத்து? இப்போ என்ன ஆச்சு?” என்று கோபமாக கேட்க,

அவரை சந்தேகமாக பார்த்த பத்மா ‘ஹையோ….. இந்த மனுஷன் கோபமா இருக்கறதபாத்தா உண்மையாவே இவங்க ஆத்தா பேசுனதை கேட்ருக்க மாட்டாரு போலயே. இப்போ என்ன சொல்லி இந்த மனுஷன சமாளிக்கறது’ என்று விழித்தவர் அப்படியே நின்றிருக்க,

“என்ன ஆச்சு பத்து? எதுக்கு கத்திட்டு இருந்த? இப்போ எதுக்கு அமைதியா இருக்க? என்னன்னு சொல்லு” என்றவரை பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் மண்டையை சொரிந்தவர் ‘ஐயோ அவசரத்துக்கு ஒன்னும் வர மாட்டிக்குதே’ என்று நின்றிருக்க,

பாட்டியும், பேத்தியும் பத்மா படும் அவஸ்தையை கண்டு தங்களுக்குள் சிரித்து கொண்டனர்.

அதே நேரம் சோர்ந்து போய் உள்ளே வந்தான் ஹர்ஷா.

மகன் வந்தவுடன் நிம்மதி மூச்சுவிட்டவர், மகனை கண் காட்ட, அவரும் புரிந்து கொண்டவர் அவன் முகத்தை பார்க்க, அது வழக்கத்துக்கு மாறாக மிகவும் சோர்ந்து போய் , அவனது தோற்றமே ஓய்ந்து போய் இருந்தது.

மகனது கோலத்தில் திட்டுகிட்டவர் “என்ன ஆச்சு ஹர்ஷா? ஏன் முகமெல்லாம் வாடி போய் இருக்கு?” என்றவர் கேட்க, அப்போதுதான் அவனை கவனித்த மற்ற மூவரும் கூட அவன் அருகில் வந்து பதிலுக்காக காத்திருக்க,

அவனோ ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவன் தன் தலையை கோதியாவாறு “ஒன்னும் இல்லப்பா. இன்னைக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி அதான். அப்புறம்……எ…. எ…. எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்.

பேச வேண்டியதை பேசிடுங்க. எனக்கு ரொம்ப டயார்டா இருக்கு. நான் போய் கொஞ்ச நேரம் படுக்கறேன். ம்மா…. எனக்கு காபி கொண்டு வாங்க” என்றவன் வேறு எதுவும் பேசாமல் மாடியேறிவிட, செல்லும் மகனையே யோசனையாக பார்த்து கொண்டிருந்தனர் இருவரும்.

பாட்டி, “பத்து பையன் முகமே சரியில்ல. முதல்ல அவன்கிட்ட போய் என்னன்னு கேளு” என்ற மாமியாரிடம் அவர் “ஆமா அத்த இது வரைக்கும் இவ்ளோ சோகமா நான் அவனை பார்த்ததே இல்ல. நீங்களும் வாங்க.

ரெண்டு பேரும் போலாம். நீங்க இருந்தா எதாவது சொல்லி பேச வைப்பீங்க” என்று எதிரும் புதிருமாக இருந்த இருவரும் ஒன்று சேர்ந்து கொண்டனர்.

மித்ரா அண்ணனையே புரியாமல் பார்த்தவள் தாய் கிச்சனிற்குள் செல்வதை பார்த்துவிட்டு அண்ணனின் அறைக்குள் சென்றாள்.

அடுத்து என்ன நிச்சய வேலை….. கல்யாண வேலை இதுதான். அடுத்தடுத்த எபியில் சந்திக்கலாம்.