இருள் வனத்தில் விண்மீன் விதை -11
அத்தியாயம் -11(1)
நீச்சல் குளத்தில் குதித்திருந்த மித்ரா உள்ளேயே இருந்தாள். சர்வா அவளை நீரிலிருந்து மேலே எழுப்பி விட, மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தண்ணீர் வழிந்தது. பலமாக இரும வேறு செய்தாள். அவளை தரைக்கு ஏற்ற அவன் முயல அவளோ மீண்டும் நீரில் அமிழ்ந்து விட முயன்றாள்.
ஆனால் சர்வாவின் பலத்தின் முன்னால் அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவளை தூக்கிக் கொண்டு படிகளில் ஏற அவள் ஒத்துழைப்பு கொடுக்காததால் இருவரும் சேர்ந்து நீரில் விழும் அபாயம் இருந்தது.
“ஏய் ஒழுங்கா வா” அதட்டினான் சர்வா.
அவனை விட்டு கீழிறங்க என்ன செய்வதென தெரியாமல் அவனது நெஞ்சில் நகங்களால் கீறினாள். அவன் பொறுத்துக் கொள்ள, என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் அழுத்தமாக கீறி காயம் ஏற்படுத்தினாள்.
வலி பொறுக்க முடியாமல், “ச்சீ பொண்ணாடி நீ?” என கத்தினான்.
“நான் எப்படி பொண்ணா தெரிவேன்? உன் குடும்பத்துக்காக பலி கொடுக்க நீ தேர்ந்தெடுத்த ஆடுதான் நான். என்னை விட்டுட்டு போ… உன் கண்ணுக்கு பொண்ணா தெரியறவகிட்ட போ” என அவளும் கத்திக் கொண்டிருக்க அவளை அங்கிருந்த சாய்வு இருக்கையில் படுக்க வைத்தான்.
அவளின் கண் மூக்கெல்லாம் எரிய, உடலும் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தது. உடை மாற்ற என இருந்த அறைக்கு சென்றவன் அங்கிருந்த துவாலை எடுத்து வந்து அவளுக்கு போர்த்தி விட்டான்.
தலையிலிருந்து ஈரம் சொட்ட சொட்ட பற்கள் அடித்துக் கொள்ள கண்களை மூடி மூடி திறந்தாள் மித்ரா. அவளை அப்படியே தூக்கிக் கொண்டவன் யாரும் பார்த்து விடக்கூடாது என்ற வேண்டுதலோடே அறைக்கு சென்றான்.
அனைவருமே அவரவர் அறைகளில் முடங்கியிருக்க வெற்றிகரமாக அறையை வந்தடைந்தான்.
ஏற்கனவே நிறைய நேரம் தண்ணீரில் குளித்திருந்தவள் இப்போதைய இந்த ஈரத்தால் உடம்புக்கு ஏதும் வந்து விடுமோ என பயந்தவன், “ஃபர்ஸ்ட் ட்ரெஸ் மாத்து மித்ரா” என சொல்லிக் கொண்டே அவளை சோஃபாவில் அமர வைத்தான்.
“போ என்கிட்டேருந்து” என குரல் நடுங்க சொன்னவள் கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு சுருண்டு படுத்தாள்.
“ஜன்னி வந்திடும் மித்ரா” என அதட்டினான்.
“உன் தில்லுமுல்லு தெரிஞ்சு போனதிலேயே பாதி செத்திட்டேன், என்ன வேணா ஆகட்டும்” என்றவள் ஆடை மாற்ற மறுத்து விட்டாள்.
சர்வாவுக்கு கோவம் தலைக்கேறியது. அவளை சுற்றியிருந்த துவாலையை பிடுங்கி வீசி எறிந்தான்.
நீரில் அதிக நேரம் இருந்ததால் சிவந்து போயிருந்த விழிகளை திறந்து அவனை துச்சமாக பார்த்தவள், “கோவம் வருதா? வா வந்து கொன்னுடு என்னை” என சொல்லி மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.
அவனே அவளுக்கு ஆடை மாற்றி விடக்கூடும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டாள். அவளின் பலஹீனமான மறுப்புகளை எல்லாம் எளிதாக முறியடித்தவன் அதி விரைவாக அவளின் ஈர ஆடையை களைந்து உடலின் ஈரத்தை துடைத்து விட்டு வேறு ஆடையை போட்டு விட்டுத்தான் விலகினான்.
நடுக்கம் சற்றே குறைந்திருந்தாலும் இன்னும் முழுதாக சரியாகி இருக்காதவள் விக்கித்த பார்வையோடு சோஃபாவில் சாய்ந்திருந்தாள். வேறொரு துவாலை கொண்டு அவளின் தலை ஈரத்தை துவட்டி விட்டவன் ஹேர் டிரையர் எடுத்து வர, அவளோ அழ ஆரம்பித்திருந்தாள்.
உச்ச பட்ச எரிச்சலில் இருந்தவன் அவளை விடுத்து அவனுடைய ஈர ஆடையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தான். அவளின் அழுகை நின்ற பாடாக இல்லை. ஒரு வார்த்தை கூட பேசாமல் அவளின் முடியை உலர்த்தத் தொடங்கினான்.
அவனை தள்ளி விட முனைந்தாள். அவளின் கைகள் இரண்டையும் சேர்த்து கெட்டியாக பிடித்துக் கொண்டவன், “நீ நினைக்கிற மாதிரி சாது கிடையாது நான், வேணும்ங்கிற அளவுக்கு என் பொறுமையை டெஸ்ட் பண்ணிட்ட, அலும்பு பண்ணாம ஒழுங்கா இருந்தா உனக்கு நல்லது, இல்லைனா…” என சொல்லி நிறுத்தினான்.
“இல்லைனா… இல்லைனா என்ன பண்ணுவ? யூ யூ…” என்றவள் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்திருந்தாள்.
ஆத்திர மிகுதியில் ஹேர் டிரையரை தூக்கி எறிந்தவன் அவளை அடிக்க கை ஓங்கியிருந்தான்.
திடுக்கிட்டுப் போனவள் அடுத்த நொடியே, “அடிக்க வேற செய்வியா நீ? உனக்காக வேறொருத்தி இருக்கான்னு சொல்லிட்டு என்னை ஏன் அவமானம் பண்ணின? எதுக்கு என்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணின?” எனக் கோவமாக கேட்டாள். அழுகை நின்று தேம்பலாக மாறியிருந்தது.
“இப்போ இந்த செகண்ட் உன்னை தவிர எவளும் இல்லை என் லைஃப்ல, இனிமேலும் இருக்க மாட்டா. கண்டதை நினைச்சுகிட்டு பேய் மாதிரி அலறாம போ, போய் படு” என்றான்.
அவள் அங்கிருந்து எழவே இல்லை. சோஃபாவிலேயே முழங்கால்களை மடித்து முகத்தை புதைத்துக் கொண்டாள்.
ஈரத்தின் விளைவாக அவனது நெற்றியிலிருந்த பிளாஸ்டர் பிரிந்து போயிருந்தது. அவனாகவே சுத்தம் செய்து வேறு பிளாஸ்டர் போட்டுக் கொண்டு அவளை பார்க்க அவள் அப்படியேதான் இருந்தாள். முதுகின் அசைவிலிருந்து அழுவது மட்டும் தெரிந்தது.
அந்த சோஃபாவிலேயே அவளை விட்டுத் தள்ளி அமர்ந்தவன், “காலேஜ் ஃபைனல் இயர் பண்ணும் போதுதான் அவளை தெரியும், அவ பேரு லிசி” என்றான்.
சட்டென தனது காதுகளை பொத்திக் கொண்டாள். அவளை நெருங்கி அணைத்துக் கொண்டவன், “சரி அவளை பத்தி சொல்லலை, இப்படி அழாத ப்ளீஸ்” என்றான்.
அவனை விட்டு விலக முயன்றாள். விடாதவன், “நான் ட்ரெஸ் மாத்தி விட்டதுக்காக என்னென்ன பேசிட்ட? உன் உள் மனசுக்கு தெரியும் இந்த விஷயத்துல நான் எப்படின்னு, என்னை நோகடிக்கிறேன்னு உன் தரத்தை குறைச்சுக்கிற மித்ரா, இது இல்லை நீ” என்றான்.
“விடு என்னை” என அழுது கொண்டே சொன்னாள்.
“எனக்கான பொண்ணு நீதான்னு முடிவு பண்ணித்தான் தாலி கட்டினேன்…” என சொல்லிக் கொண்டிருந்தவன் திடீரென அவளை விலக்கினான்.
அவளும் அழுகையை நிறுத்தி விட்டு என்னவென பார்த்தாள். ஆடை மாற்றி விட்ட போதே அவளது கழுத்து வெறுமையாகத்தான் இருந்தது. அப்போது அவனது கவனத்தில் பதியாதது இப்போது தாலி பற்றி பேசவும்தான் நினைவுக்கு வந்தது.
“உன் தாலி எங்க?” என அவன் கேட்கவும் தன் கழுத்தை தடவி ஆராய்ந்து விட்டு அவனை அதிர்வோடு பார்த்தாள்.
கண்களை மூடிய படி தளர்வாக சாய்ந்து கொண்டான்.
இவனையே கழட்டிக் கொள்ள சொன்னவள்தான், இவனோடு வர மாட்டேன் என அடம் பிடித்தவள்தான், இவனை கணவனாக ஏற்றுக் கொள்ளவே இல்லை என வீம்பாக பேசியவள்தான். இதோ இப்போது மனம் பதறுகிறது.
நீச்சல் குளத்தில்தான் தவறிப் போயிருக்கும் என கணித்தவள் வேகமாக எழுந்து வெளியேறப் போனாள்.
“ஏ ஏய் எங்க போற?” எனக் கேட்டுக் கொண்டே அவளிடம் சென்றவன் அவளை எங்கும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினான்.
“ஸ்விம்மிங் பூல்லதான் மிஸ் ஆகியிருக்கும்” என்றாள்.
“இருக்கலாம், திரும்ப தண்ணிக்குள்ள இறங்க போறியா? காலைல பார்த்துக்கலாம்” என்றான்.
“இல்லையில்லை இப்பவே தேடலாம், அங்கதான் இருக்கணும்” என்றவளிடம் பரிதவிப்பு அப்பட்டமாக தெரிந்தது.
“அதுக்கு இருக்க மதிப்பு அதை கட்டின எனக்கு இல்லை, ஹ்ம்ம்?”
“அது இருக்கிறதாலதான் உங்களுக்கே மதிப்பு” என்றவள் அவனது கையை உதறி விட்டு அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.
ஓய்ந்து போயிருந்த அவனும் வேறு வழியின்றி அவளை தொடர்ந்து சென்றான். லிஃப்ட்டில் அவள் ஏறுவதற்கு முன் தனியே செல்ல பயந்து திரும்பிப் பார்த்தாள். அவளை ஏமாற்றாமல் அவனும் வந்து கொண்டிருந்தான்.
மாடிக்கு வந்ததும் நீருக்குள் பாயப் போனவளை தடுத்தவன், “என்னை போட்டு படுத்தாத மித்ரா. பகல் எல்லாம் தூங்கி செம எனர்ஜியோட இருக்க போல நீ, என் பேட்டரி எப்பவோ ரெட் அலர்ட் கொடுத்திடுச்சு” என சலிப்பாக சொன்னான்.
“தாலிய தேடணும்ல” என்றாள்.
நீச்சல் குளத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தும் நீண்ட கைப்பிடி கொண்ட ஃபில்டரை எடுத்து வந்து குளத்தின் ஓரமாக அதை உபயோகித்து தாலியை தேடினான். சர்வாவுக்கு அன்று சோதனையான நாள் என்று ஊர்ஜிதப் பட்டு போனது, தாலி சிக்கவில்லை.
வேறு வழியின்றி அவனே நீச்சல் குளத்தில்இறங்கினான். கால் மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின் அவனது கையில் சிக்கியது தாலிக் கயிறு.
ஈரம் சொட்ட சொட்ட கையில் தாலியோடு நின்றிருந்தவன் மித்ராவை அழுத்தமாக பார்த்தான். அதை பெற்றுக் கொள்வதற்காக தயக்கத்தோடு கை நீட்டினாள்.
“என்ன வார்த்தை சொல்லி திட்டின என்னை? அந்த **** கட்டின தாலி அவசியம் வேணுமா உனக்கு?” எனக் கேட்டவனை பார்த்து திரு திரு என விழித்தாள்.
“ஆமாம் வேணும்னு உறுதியா சொல்லலைல நீ, அப்போ இது என்கிட்டேயே இருக்கட்டும்” என்றவன் தன் டி ஷர்ட்டின் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.
“கொடுங்க” என மெல்லிய குரலில் கேட்டாள்.
“ஏன் மித்ரா என்ன இதுக்கு உனக்கு இது தேவை? நான் ஏத்துக்கிற மாதிரி ஏதாவது ஒரு காரணம் சொல்லு, தர்றேன்” கோவமாக சொன்னான்.
அவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை, இவன் கேட்கவும் அவளுக்கும் அது அவளிடம் இருக்க வேண்டிய அத்தியாவசியத்தை பற்றிய கேள்வி எழுந்தது.
அவளை முன்னால் போக சொல்லி அவன் கை காட்ட அவளும் அவன் சொல் படியே கேட்டாள். அமைதியாக அறையை வந்தடைந்தனர். தாலியை கப்போர்டில் பத்திரப் படுத்தி வைத்தான். அவளுக்கு மனமே சரியில்லை, அவளின் கைகள் தானாக வெறும் கழுத்தை தடவிப் பார்த்துக் கொண்டன.
சோர்வோடு சோர்வாக ஆடை மாற்றிக் கொண்டவன் மீண்டும் பிரிந்திருந்த ஈர பிளாஸ்டரை நன்றாக பிய்த்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டான்.
காயத்தை அப்படியே விட்டவன் தலை துவட்டிக் கொள்ள, “உங்களுக்கு எதுவும் ஆகிடாதே?” எனக் கேட்டாள்.
“இந்தக் காயத்தால என்ன ஆக போகுது?”
“அதில்ல, என் கழுத்துல தாலி இல்லாம…” வாக்கியத்தை நிறைவு செய்யாமல் விட்டாள்.
அவ்வளவு அக்கறையா என்பது போல பார்த்தவனிடம், “காரணம் கேட்டீங்களே, அதான்… உங்களுக்கு எதுவும் ஆகிடாம இருக்க அதை என்கிட்ட கொடுத்திடுங்க” என்றாள்.
“தாலிக்குள்ளதான் என் உயிர் இருக்குன்னா நம்ம கல்யாணத்துக்கு முன்னால எதுல இருந்துச்சாம்? அப்படியே என் உயிர் காப்பாத்தறதுக்காக அது உனக்கு வேணும்னா தர மாட்டேன். எனக்காக ஒண்ணும் அதை நீ போட்டுக்க தேவையில்லை” என்றான்.
“இனிமே என்ன பண்றதா இருக்கீங்க? உங்க தேவை ஆனதும் என்னை அனுப்பிட்டு அந்த…” என்றவள் சிறு இடைவெளி விட்டு, “உங்களுக்கு பிடிச்சவளை அழைச்சிட்டு வர போறீங்களா?” எனக் கேட்டாள்.
அவன் முறைக்க, “நான் சொல்லியும் தாலியை கழட்டிக்கலைதானே நீங்க, இப்போ நானே கேட்டும் கொடுக்க மாட்டேங்குறீங்க, எனக்கு சந்தேகமா இருக்கு. என்ன உங்க அடுத்த திட்டம்?” எனக் கேட்டாள்.
“முதல்ல நீ என்ன நினைப்புல இருக்கேன்னு சொல்லு. உன் அப்பாம்மா அனுப்பி வச்சிட்டாங்கன்னுதானே வந்திருக்க? இங்கேருந்து போயிடணும்னு வேற நினைக்கிற. நீ போயிட்டா என்னவா வேணா இருக்கலாம் என் பிளான், அதை பத்தி உனக்கென்ன?”
“அப்ப கன்ஃபார்மா அவளை அழைச்சிட்டு வர போறீங்க? நீயெல்லாம் மனுஷனா? என் வாழ்க்கையை இப்படி சீரழிச்சிட்டியே… நீ…” என சொல்லிக் கொண்டிருந்தவளின் வாயை கையால் அடைத்தான்.
“எதுவும் அனர்த்தமா சொல்லி தொலைச்சிடாத. எனக்கு தெரியும் உனக்கு நான் பண்ணினது அநியாயம்தான், சரி பண்ணிக்குவேங்கிற நம்பிக்கையிலதான் துணிஞ்சு அப்படி செஞ்சேன். அவசர பட்டு நீ ஏதாவது சொல்லி அது பலிச்சிட போகுது”
அவனது கையை விலக்கி விட்டவள், “இப்பவும் உங்களுக்கு ஏதும் ஆகிட கூடாதுன்னுதான் கவலை” என்றாள்.
“என் புள்ளைங்களுக்கு என் பேரப் பசங்களுக்கு ஏதும் ஆகிட கூடாதுங்கிற கவலை”
“எது தாலிய கப்போர்ட்ல ஒளிச்சு வச்சுக்கிட்டு ‘என் புள்ளைங்க என் பேரப் பசங்க’ அப்படினு சொல்றீங்க… என்ன… உங்களுக்கும் உங்களுக்கு பிடிச்சவளுக்கும் பொறக்க…” மீண்டும் அவளின் வாயை மூடி பேச விடாமல் செய்தான்.