அத்தியாயம் – 17

காதல் இத்தனை அழகானதா என்று இருந்தது சிவாவிற்கும் பைரவிக்கும். அவரவர் வேலைகளில் மூழ்கினாலும் கூட, கிடைக்கும் நேரத்தில் எல்லாம் இருவரும் பேசிக்கொள்ளவோ, இல்லை பார்த்துக்கொள்ளவோ தவறுவது இல்லை.

அதிலும் பைரவி சொல்லவே வேண்டாம். வீட்டினில் இருக்கிறாள் என்றால், கால் மணி நேரத்திற்கு ஒருமுறை சிவாவிற்கு அழைப்பாள்.

‘என்ன செய்றீங்க?’ என்று அடிக்கொரு முறை கேட்டுக்கொண்டே இருப்பாள்.

பல நேரங்களில் அவனுக்கு சந்தோசமாய் இருக்கும். சில நேரங்களில் லேசாய் எரிச்சல் வரும்.

‘வேலையா இருக்கேன் பைரவி…’ என்று அவன் அழுத்தம் கொடுத்து சொல்லும் விதத்திலேயே “ஓ! சாரி சாரி…“ என்று வைத்துவிடுவாள்.

ஆனால் திரும்ப, சிவாவிடம் இருந்து அழைப்பு வரும்வரைக்கும் அவளாய் அழைத்து தொல்லையும் செய்வது இல்லை.

ஓரளவு இருவருக்கும் ஒருவித புரிதல் உருவாக, இதோ நாளை காலை பைரவி ரிக்கார்டிங் செல்லவேண்டும். ஜான் தானே வந்து அழைத்துச் செல்வதாய் சொல்ல,

“வேணாம் ஜான். நீ அங்கேயே இரு.. நான் சிவா கூட வந்திடுறேன்…” என்றுவிட்டாள் பைரவி.

ஜான் ஓரளவு யூகித்து இருந்தான் பைரவியின் மன மாற்றத்தை. என்னவோ அவனுக்கு சிவாவையும் அவளையும் ஒன்றாய் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவளது தரம் எங்கே, அவன் எங்கே என்று தான் நினைத்தான்.

ஆனாலும் இப்போது ஏதாவது பேசி, அது பைரவியின் மன நிலையை பாதித்து ஏதேனும் நடந்தால் என்ன செய்வது என்று யோசித்தவன் ‘எதுன்னாலும் உறுதியா தெரியட்டும், பிரண்ட்ஸ் கூட பேசிட்டு பேசிக்கலாம்…’ என்று இருக்க,  பைரவி இப்போது சிவாவுடன் வருகிறேன் என்று சொல்லவும் அவனுக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது.    

“ஓகே…” என்றுமட்டும் சொல்லி வைத்துவிட, பைரவிக்கு புரியாதா என்ன?

மீண்டும் நண்பனுக்கு அழைத்தவள் “நீ அலைஞ்சுட்டு இருக்கணும்.. அதனால சொன்னேன்.. எப்போ பார் நீ என்னை பிக்கப் ட்ராப் பண்ணிட்டே இருப்பியா…” என்று கேட்க, அவள் கேட்பதும் நியாயம் தானே.

ஆனாலும் ஜான் பதிலே சொல்லவில்லை. அமைதியாய் இருக்க “ப்ராக்டிகலா யோசி ஜான்…” என்றவளும் வைத்துவிட்டு, அடுத்து அப்படியே சிவாவிற்கு அழைத்து

“நாளைக்கு ரிக்கார்டிங் நீங்க தான் என்னை கூட்டிட்டு போகணும்…“ என்று சொல்ல,

“சந்தோசம்… ஆனா உன்னோட பாடிகார்ட் எங்க?” என்றான் கிண்டலாய் ஜானை குறிப்பிட்டு.

“ம்ம்ச் பார்த்தீங்களா?! நான் உங்களோட போகணும்னு கேட்டா…” என்று பைரவி இழுக்க,

“நான் மாட்டேன்னு சொன்னேனா? இருந்தும் எப்போவும் ஜானோட தானே போவ அதான் கேட்டேன்…” என்று சிவாவும் சொல்ல,

“அவன் அங்க ரிக்கார்டிங் தியேட்டர்ல இருப்பான்…” என்றாள் பைரவி.

“சரிங்க மேடம்… உங்களை வந்து பிக்கப் பண்ணிக்கனுமா இல்லை நீங்களே வந்து என்னை பார்த்துட்டு, அப்படியே…“ என்று சிவா கொஞ்சலாய் இழுக்க,

“ம்ம் வர்றேன்.. என்னோட கார் எடுத்துட்டு வர்றேன்…” என்றவளுக்கு அப்படியொரு புன்னகை.

அது என்னவோ சிவா கொஞ்சம் கொஞ்சலாய் பேசினாலே போதும், பைரவிக்கு அப்படியொரு உற்சாகம் வந்துவிடுகிறது. முகத்தினில் ஆயிரம் என்ன இலட்சோப லட்ச வாட்ஸ் தான்.

மேலும் சில நிமிடங்கள் சிவாவிடம் பேசிவிட்டு வைத்தவள், பின் தன் சந்தோஷிக்கும், மாலதிக்கும் அழைத்து பேசிவிட்டு வைக்க, செல்வி அவளையே தான் பார்த்து நின்று இருந்தார்.

“என்ன செல்விம்மா அப்படி என்னை பாக்குறீங்க..?” என்று பைரவி கேட்க,

“அது.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு மிந்தி நம்ம சிவாவோடவா பாப்பா பேசிக்கின்னு இருந்த..?” என்று செல்வி கேட்க, பைரவிக்கு பக்கென்று இருந்தது.

செல்வி இருப்பதினை மறந்து, அவள் பாட்டில் சிவா சிவா என்று ஹாலில் அமர்ந்து சத்தமாகவே அவனோடு பேசிக்கொண்டு இருக்க, அது செல்வியின் செவியில் விழாமல் போகுமா என்ன?

ஏற்கனவே மனதினில் செல்விக்கு சிறியதாய் ஒரு சந்தேகம் இருந்தது தான். இப்போது பைரவி பேசவும் அது ஊர்ஜிதமாகிவிட, நேரடியாகவே கேட்டுவிட்டார்.

“அ.. அது.. அது செல்விம்மா…” என்று பைரவி கைகளை பிசைந்து, பேச்சு வராமல் இழுக்க, செல்வி அவளை கூர்ந்து பார்த்தவர்

“ரெண்டு பேரும் நல்ல விவரமான ஆளுங்க தான். நான் சொல்லனும்னு இல்லை. ஆனா எல்லாமே யோசிச்சு முடிவு பண்ணுங்க. எனக்கும் நீயும் சரி அவனும் சரி வேற வேற இல்லை. ரெண்டையும் என் புள்ளைங்க மாதிரி தான் பாக்குறேன்…” என்று செல்வி பேச, வேகமாய் சென்று அவரின் கைகளை பிடித்துக்கொண்டாள் பைரவி.

“செல்விம்மா.. நா.. நான் தப்பா எல்லாம்…” என்று எதுவோ சொல்ல வர,

“லவ்வு பண்றது தப்பு இல்ல பாப்பா.. ஆனா அது நல்லபடியா நடந்து கல்யாணத்துல முடியனும்.. அதுக்கு மேலயும் உங்க லவ்வு ஜாஸ்தி தான் ஆகனும். உன்னோட பழகக்க வழக்கம், சிவாவோட இயல்பு எல்லாமே வேற. அது தான் எனக்கு உறுத்தலா இருக்கு..” என, பைரவி அமைதியாய் நின்று இருந்தாள்.

“எது எப்படியா இருந்தாலும், நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தா எனக்கு அது போதும். அவனும் சின்னதுல இருந்தே கஷ்டத்தை மட்டும் தான் பார்த்தான். ஹ்ம்ம்  உனக்கும் சிவாவுக்கும் நல்ல ஜோடி பொருத்தம் பாப்பா..” என்று லேசாய் அவள் கன்னம் தடவி சொன்னவர்,

“இருந்தாலும் சொல்றேன்.. எதுன்னாலும் யோசிச்சு முடிவு பண்ணுங்க…” என்று சொல்ல,

“தேங்க்ஸ் செல்விம்மா…” என்று அவரை கட்டிக்கொண்டாள்.

‘ம்ம் இது மட்டும் சிவா அம்மாக்கு தெரிஞ்சது.. முதல் வெட்டு எனக்குத்தான்…’ என்று செல்வியின் உள்ளம் நினைக்காமல் இல்லை.

இங்கே செல்விக்கு இந்த விஷயம் தெரிந்தது போல, அங்கே மணிக்கும் சிவா மீது சந்தேகமாய் இருந்தது.

நடை, உடை, பாவனை, பேச்சு என்று எல்லாவற்றிலும் சிவாவிடம் மாற்றங்கள் காண, மணிக்கு ஒன்றுமே புரியவில்லை. கட்டிட வேலைகளை பார்க்க அவ்வப்போது பைரவி இங்கே வருவது உண்டு. அப்படி அவள் வருவது முன்னமே சிவாவிற்கு தெரியுமோ என்னவோ, வேலையாய் இருந்தாலும் கூட, வேகமாய் தன்னை சீர்படுத்தி, உடை மாற்றிக்கொள்வான்.

அவன் அப்படி உடை மாற்றுகிறான் என்றால், அடுத்து சில நிமிடங்களில் பைரவி வருகிறாள் என்று அர்த்தம் என்று மணி கண்டுபிடித்துவிட ‘அஹான்..! அப்படியா போகுது கதை…’ என்று எண்ணியவன், செல்வி அவரின் வீடு செல்லும் நேரத்தில் வந்து அவரின் முன்னே நிற்க

“இன்னாடா இப்படி வந்து நிக்கிற?” என்றார் செல்வி.

“யக்கோவ்.. உண்மைய சொல்லு.. என்ன நடக்குது?” என்றான்.

“என்ன என்ன நடக்குது?!” என்றார் செல்வி விளங்காமல்.

“ம்ம் அந்த பொண்ணு பைரவிக்கும், நம்ம சிவாவுக்கும் நடுவுல  இன்னா ஓடுது.. எனக்கு ஒன்னும் சரியா படல…” என்று பேச, செல்விக்கு இவன் தெரிந்து கேட்கிறானா, இல்லை தெரிந்துகொள்ள கேட்கிறானா என்று தெரியவில்லை.

ஏனெனில் பைரவியிடமே “சிவாவா சொல்லாம நான் ஒன்னும் கேட்கமாட்டேன்.. வெளிய தெரிஞ்ச மாதிரியும் காட்டிக்கமாட்டேன்…” என்றுவிட்டார்.

ஆனால் இப்போது மணி வந்து கேட்கவும் “என்னத்த போட்டு உளர்ற.. வழிய விடுடா…” என்று செல்வி நகரப் போக,

“அ..! இந்த ஜகா வாங்குற வேலையெல்லாம் என்னாண்ட வேணாம். உண்மைய சொல்லு…” என்று மீண்டும் கேட்க,

“உனக்கு இப்போ இன்னாடா வேணும்…” என்றார் செல்வி.

“அது.. சிவாவும் பைரவியும் லவ்வு பண்றாங்க போலக்கா…” என்று மணி சொல்ல,

“என்னாது?!” என்று நெஞ்சில் கை வைத்து, முகத்தில் அதிர்ச்சியை காட்டி நின்றவர் “என்னடா சொல்ற?” என்று பதறிக் கேட்க, அவர் போட்ட நடிப்பை நிஜமென்று நம்பிய மணி

“அப்போ உனக்கு ஒண்ணுமே தெரியாதாக்கா..?” என்றான் பாவமாய்.

செல்வியோ “ம்ம்ஹூம்…” என்று அவனை விட பாவமாய் சொல்ல,

“எனக்கு இன்னும் உறுதியா தெரியலைக்கா.. ஆனா அவங்க பேசிக்கிறது பாத்துக்கிறது எல்லாம் அப்படித்தான் இருக்கு…” என,

“ஆத்தி.. இதுமட்டும் சிவா அம்மாக்கு தெரிஞ்சது…” என்று செல்வி மீண்டும் சொல்ல,

“என்னாகும் முதல்ல வந்து உன் முடியை பிடிச்சுத்தான் சண்டை போடும்…” என்று சொல்லி வாய் மூட வில்லை,

“ஏய் செலுவி…” என்று ரஞ்சிதம் சத்தப்போட்டபடி அங்கே வந்துகொண்டு இருந்தார்.

‘அய்யய்யோ…’ என்று மணியும், செல்வியும் ஒருசேர சொல்ல,

“என்ன டி.. என்ன நடக்குது?” என்று கோபமாய் தான் வந்து நின்றார் ரஞ்சிதம்.

“யக்கா.. என்னக்கா? வா வூட்டுக்குள்ள…” என்று பேசியபடியே செல்வி வேகமாய் தன் வீட்டினை திறக்க,

“நா ஒன்னும் உன் வூட்ல விருந்தாட வரல…” என்றார் ரஞ்சிதம்.

“யக்கா எதுன்னாலும் மெல்ல பேசு…” என்று அடக்கிய செல்வி “உள்ள வா க்கா…” என்று சொல்ல, முகத்தை உம்மென்று வைத்தபடியே உள்ளே வந்த ரஞ்சிதம்

“நீ இன்னாத்துக்குடா இந்நேரம் இவளோட பேசின்னுருக்க?” என்று மணியையும் கடிய,

“இந்தாண்ட வந்தேக்கா… அப்படியே செல்வியக்காவோட பேசிக்கின்னு நின்னுட்டேன்…” என்று மணி கையை பிசைய,

“அதுவும் நல்லதுதான்.. ஆமா அந்த பாட்டுக்காரி எதுக்கு அடிக்கடி அங்க ஷெட்டுக்கு வர்றா?” என்றார் ரஞ்சிதம்.

செல்வி, மணி இருவருக்குமே நெஞ்சம் திடுக்கென்று அடித்துக்கொள்ள “எ.. என்னக்கா சொல்ற?” என்றார் செல்வி.

“ஏய்.. அப்படியே சப்புன்னு வச்சிடுவேன்.. நேத்துகூட வந்துட்டு போயிருக்கா? என்ன நடக்குது? அவன்ட்ட கேட்டா என்னென்னவோ சொல்றான்.. எனக்கொண்ணும் சரியா படல.. ஆனா ஏதாவது ஒன்னு ஆச்சின்னு வை…” என்று ரஞ்சிதம் விரல் நீட்டி மிரட்ட,

“யக்கோவ் என்னாக்கா நீயி…” என்று சொன்ன செல்வி “முதல்ல இந்த தண்ணிய குடி…” என்று ரஞ்சிதம் கையினில் ஒரு செம்பு நீரை குடித்தவர், அவர் காலுக்கு கீழேயே அமர்ந்து

“நம்ம சிவா மேல உனக்கு சந்தேகமா?” என்று கேட்க, என்னவோ ஒரு நொடி ரஞ்சித்தின் கோபம் மட்டுப்பட

“சந்தேகமில்லை. அவனே சொல்றானே அந்த பாட்டுக்காரியை எனக்கு பிடிச்சிருக்குன்னு…” என்றார் அங்கலாய்ப்பாய்.

மணியும், செல்வியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள “என்ன? என்னவோ ரெண்டு பேருக்கும் ஒண்ணுமே தெரியாதது போல பாக்குறீங்க?” என்றார் ரஞ்சிதம்.

“நிஜமா தெரியாதுக்கா…” என்ற மணி “சிவா ஒரு முடிவு பண்ணா அது சரியாத்தானே இருக்கும்…” என்று சொல்ல,

“என்னது? சரியா இருக்குமா? என்ன ஆனாலும் நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன். போதும் ஒரு பாட்டுக்காரின்னால என் குடும்பம் கெட்டது போதும்..” என்ற ரஞ்சிதம்

“இந்தாடி செலுவி அவக்கிட்ட சொல்லி வை.. ஏதாவது மாய்மாலும் செஞ்சு என் மவனை கை குள்ள போட பார்த்தா…” என்று பேசும்போதே

“யக்கா.. யோசிச்சு பேசு…” என்றார் செல்வி கொஞ்சம் அதட்டும் தொனியில்.

ரஞ்சிதம் பேச்சை நிறுத்திவிட்டு பார்க்க “அந்த பொண்ணு இன்னாத்துக்கு நம்ம சிவாவ கை குள்ள போட நினைக்கனும். அவளுக்கு குடும்பம் இல்லாம இருக்கலாம். ஆனா ஆளுங்களும், அந்தஸ்தும் நிறைய இருக்கு..” என்று செல்வி சொல்ல,

“ஏய் என்ன டி அப்போ என் மகன் எதுல குறை?” என்றார் ரஞ்சிதம்.

“எதுலயும் குறை இல்லை. ஆனா யோசி.. அந்த பொண்ணுக்கு மனசுன்னு ஒன்னு இருக்கும்ல. என்னவோ நம்ம சிவாவை பிடிச்சு இருக்கலாம். ஒன்னு தெரியுமா அந்த புள்ளைய கட்டிக்க எத்தன பெரிய இடத்துல எல்லாம் பேசுறாங்கன்னு…” என்று தினேஷ் விபரங்கள், அதோடு சேர்த்து தன் சொந்த கற்பனை எல்லாம் கலந்து செல்வி எடுத்து பேச, ரஞ்சிதம் முகத்தினில் ஒன்றும் காட்டாமல் பார்க்க,

“ஆமாக்கா… மாசமான வாடகை பணமே லட்சக் கணக்குல வருது. அதுபோக, பண்ணை, தோட்டம் அது இதுன்னு வேற நிறைய இருக்காம்.  நம்ம சிவாவும் தான் சின்னதுல இருந்து கஷ்டப்பட்டுட்டான்.. நீ அவனுக்கு நல்ல இடத்துல தான் பொண்ணு பாப்ப. ஆனா இப்படி சொத்துபத்தோட, அந்தஸ்தோட பார்க்க முடியுமா?

அவனும் தான் நல்லா வாழ்ந்துட்டு போகட்டுமேக்கா. இன்னிக்கு இந்த புள்ளைய நீ சரின்னு ஏத்துக்கிட்டா, நாளைக்கு இதே வாய்ப்பா எடுத்து  உன் மவள நல்ல பெரிய இடத்துல கூட குடுக்கலாம்…” என்று செல்வி பேச பேச, ரஞ்சிதம் முகம் மாறியது.

கோபத்தில் இருந்து யோசனைக்குப் போக, செல்வி அவரின் முக மாற்றத்தை எல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.

மணியோ இருவரின் முகத்தையும் மாற்றி மாற்றிப் பார்க்க “ஆமாக்கா நீயே யோசி.. அந்த புள்ளைகிட்ட எல்லாமே இருக்கு.. ஆனா குடும்பனு சொல்ல யாருமில்லை. நம்ம சிவா இன்னிக்கு வரைக்கும் வாழ்க்கைல நிம்மதியைப் பார்க்கல.. மனசுக்கு பிடிச்சா கட்டிட்டு போகட்டுமே. அவனும் கொஞ்சம் வசதியா வாழுவான்ல…” என,

“என்ன டி.. அது இதுன்னு பேசி என் மனச மாத்த பாக்குறியா?” என்றார் ரஞ்சிதம்.

“நான் நிஜத்தை, எனக்கு தெரிஞ்ச நல்லதை சொன்னேன் க்கா. அவ்வளோதான்.. சிவா உன்னோட மகன். அவன் பிடிவாதம் எப்படி இருக்கும்னு உனக்கே தெரியும். சந்தோசமா இருந்தா எத்தினி பாசமா இருப்பான்னும் உனக்குத் தெரியும். யோசனை பண்ணி முடிவு பண்ணிக்கோ…” என்று பேச்சினை செல்வி முடித்துவிட,

“ம்ம்.. எல்லாம் சேர்ந்து என்னவோ நாடகம் போடுறீங்க…” என்று முனங்கியபடி தான் ரஞ்சிதம் எழுந்து போனார்.

ஆனால் அவர் மனதில் செல்வியின் வார்த்தைகள் ஆழமாய் பதிந்து போனது. ரஞ்சிதம் அந்தபக்கம் செல்லவும் மணியோ “யக்கோவ் சும்மா சொல்லக் கூடாது.. அசத்திட்ட நீ…” என்று சொல்ல,

“பின்ன இந்தம்மா போய் ரகளை பண்ணும்…” என்று அலுத்துக்கொண்டார் செல்வி.