சத்யேந்திரன், பூஜிதாவின் உறவில் முன்னேற்றம் வந்தபிறகு, ஆதீஸ்வரனுக்கு இப்போதெல்லாம் தம்பியைக் குறித்த கவலைகள் பெருமளவு குறைந்திருந்தது.
ஆதியாக இனி சரிவராது போல என்று விலகிய ஒரு விஷயம் தான் சத்யா, பூஜிதாவின் திருமணம்! இப்பொழுது அது கைக்கூடும் வாய்ப்பு கண்ணெதிரில் மீண்டும் தோன்றினால், அதுவும் அந்த பந்தம்… எதிலேயோ மூழ்கவிருந்த தன் தம்பியை மீட்டெடுக்கும் மந்திரக்கோலாய் அமைந்தால்! அதன் நிம்மதியை, ஆசுவாசத்தை சொல்லவும் வேண்டுமோ?
அதனை ஊர்ஜிதம் செய்யும் விதமாக சத்யாவுக்கு கவுன்சிலிங் தரும் மருத்துவரே அழைத்து, அவனிடம் முன்பு இருந்ததற்குப் பெருமளவு முன்னேற்றம் வந்திருக்கிறது என்று ஆதியிடம் சொல்லியிருந்தார்.
ஆதியின் அச்சத்தை விலக்க இதைவிட வேறென்ன வேண்டும்?
அதிலும் இளையவனுக்கு சமீபமாகத் தோன்றிய வாழ்வை வெறுத்த விரக்தி நிலையில், அவனை எப்படி மீட்டெடுக்க என புரியாமல் தவித்துப் போயிருந்த ஆதிக்கு அவரின் சொற்கள் மிகவும் ஆறுதலைத் தந்திருந்தது. மனதளவில் நிறைவாக உணர்ந்தான்!
ஆனால், அந்த ஆறுதலும், நிம்மதியும் முழுதாக நீடிக்க அவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை! காரணம் மருத்துவர் சத்யாவிற்கான சிகிச்சை இத்துடன் போதும் என்றும் சொல்லவில்லை. உங்கள் தம்பியின் ஆழ்மன பயம், அதை ஏன் இத்தனை நாட்கள் அப்படியே விட்டு விட்டீர்கள் என்று ஆதியிடம் கேள்வி எழுப்பினார்.
ஆதியின் மனம் தம்பியின் இந்த நிலைக்குக் காரணமான நிகழ்வை மீட்டிப் பார்க்க, அவன் முகம் உணர்ச்சிகளைத் துடைத்து, பாறை போல இறுகிப் போனது.
என்னதான் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தாலும், தங்களின் இந்த நிலைக்குக் காரணம் என்று அவன் மனதில் பதிந்து போயிருந்த தாராவின் தந்தை ஏழுமலையின் மீது கோபம் கிளர்வதை அவனால் தடுக்க முடியவில்லை.
அவர் தான் நடந்த தவறுக்காக தண்டனை அனுபவிக்கிறார். ஊரார் அவர் மீது தான் பழியை போட்டனர். ஆக, அவன் மனதிலும் அவர் பிம்பம் தான் குற்றவாளி என பதிந்திருந்தது! தாராவின் பேச்சிலிருந்து நூற்றில் ஒரு பங்கு வாய்ப்பாக அவர் தவறு செய்தவராக இல்லாமல் இருந்தால் என்றளவில் யோசிக்க முடிந்த அவனுக்கு, அவராக இருக்காது என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லையே!
குரலை செருமியவன், “எங்க அப்பா, அம்மாவோட மரணம் அவனை ரொம்பவும் பாதிச்சிடுச்சு டாக்டர்” என்றான் உணர்வில்லாத குரலில்.
“உங்களுக்கும் அதே பாதிப்பு இருந்திருக்கணும் இல்ல…” அழுத்தம் திருத்தமாகக் கேள்வி வந்தது மருத்துவரிடமிருந்து.
ஓரிரு நொடிகள் பதில் சொல்ல முடியவில்லை ஆதியால். எதையோ யோசித்தவன், “அப்ப அவன் ரொம்ப சின்ன பையன் டாக்டர். அதை புரிஞ்சுக்கிற பக்குவமோ வயசோ அவனுக்கு இல்லை” என்று மட்டும் சொன்னான்.
“அதெல்லாம் கடந்து வர வயசும் பக்குவமும் எப்பவோ வந்துடுச்சு சார்” என்று அதே அழுத்தத்தோடு அந்த மனநல மருத்துவர் சொன்னபோது ஆதிக்கு அவர் சொல்வதும் சரி தானே என்றிருந்தது. என்றோ நடந்த நிகழ்வின் தாக்கம் ஏன் இத்தனை ஆண்டுகள் அவன் மனதில் பதிந்திருக்க வேண்டும்?
“காரணம் எனக்கு சரியா புரியலை டாக்டர். அவனை இயல்பா மாத்த என்னாலான எல்லாத்தையும் முயற்சி செஞ்சுட்டே தான் இருக்கேன். எங்களுக்கு இத்தனை வசதி இருந்தும், நானும் சென்னையிலேயே இருந்தும் அவனை ஹாஸ்டலில் விட்டது கூட அதுக்காகத்தான்”
“நீங்க இவ்வளவு முயற்சி எடுத்தும் அவர்கிட்ட ரொம்ப சின்ன அளவுல தான் முன்னேற்றம் இருக்குன்னு உங்களுக்கு இன்னும் புரியலையா சார்? அப்ப அவரோட பாதிப்பு ரொம்ப அதிகமா தானே இருக்கும்?” மருத்துவர் வெகு நிதானமாகக் கேள்வி எழுப்பினார்.
ஆதியின் யோசனையோடான மௌனத்தைத் தொடர்ந்து மருத்துவரே, “இதுல உங்க எண்ணத்துக்கும் கணிப்புக்கும் அப்பாற்பட்டு இன்னும் வேற ஏதோ இருக்கு சார். இப்ப ட்ரீட்மெண்டுக்கு அவரோட ஒத்துழைப்பு முழுமையா இருக்கு. இந்த சமயத்துல நான் இன்னும் கொஞ்சம் கவுன்சிலிங் கொடுத்தா அவரோட ஆழ்மன ரகசியங்களைக் கண்டுபிடிக்க இலகுவா இருக்கும்ன்னு தோணுது. நான் அதை தெரிஞ்சுக்கிட்டு என்ன, ஏதுன்னு உங்ககிட்ட பேசறேன்” என்று மருத்துவர் சொன்னதிலிருந்தே ஆதிக்கு பலத்த யோசனை தான்!
ஆனால், அதிகமான வேலைப் பளுவால் அவனால் அதைப்பற்றி தொடர்ந்து பெரிதாக யோசிக்க முடியாது போயிற்று! மருத்துவரும் அதன்பிறகு அழைக்காததால், சரி சிகிச்சையில் ஏதாவது முக்கியமான விஷயம் தெரிய வந்தால் அவரே அழைப்பார் தானே என்று எண்ணி அத்துடன் அந்த விஷயத்தை விட்டுவிட்டான்.
*** வீரராகவன் ஆத்திரத்தின் உச்சியில் இருந்தார்.
இப்படி இளைய மகள் சத்யேந்திரனை நேசிப்பாள் என்றெல்லாம் அவர் ஒரு நாளும் எண்ணியதில்லை. அவள் பள்ளிப்பருவத்திலேயே காதலில் விழுந்து விட்டதாலும், அதற்கு விரைவிலேயே மூடு விழா நடந்துவிட்டதாலும் அவளது ஒருதலை காதல் விவகாரம் இவர் அறிய நேராமலே போய் விட்டது.
அப்படி அறிந்திருக்க, அப்பொழுதே மகளை விலாசி தள்ளியிருப்பார். இந்த காதல் விவகாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய முயற்சித்திருப்பார்.
ஆதீஸ்வரனை மருமகனாக ஏற்றுக்கொள்ளும் முடிவில் தான் வீரா இருந்தார். அதற்கு ஆதாரம் தான் அவனை அரசியலில் ஈடுபட வைத்தது. தனக்கு பின் அவனை முன்னிலைப்படுத்த விரும்பினார். அவன் மூலம் நிறைய சாதிக்கத் திட்டமிட்டிருந்தார். அவனை தன் மூத்த மகள் இந்துஜாவிற்கு மணமுடித்து தன் மருமகனாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.
அவருடைய திட்டம் அனைத்தும் தவிடு பொடியானது. ஏதோ ஒரு பெண்ணை சந்தர்ப்பவசத்தால் மணந்து கொண்டான். சரி போய்த் தொலைக்கிறது நம் பெண்ணே கலெக்டர் இனி இவன் தான் மருமகன் ஆக வேண்டும் என்று என்ன இருக்கிறது என்று அதனைப் பெரிதுபடுத்தாமல் ஒதுக்கி வைத்தால், மகள் விவகாரத்தில் ஒரு சின்ன துரும்பைக் கூட அவன் அசைக்கவில்லை.
கலெக்டர் பதவியில் மூத்த மகள் இந்துஜா இந்த வயதிலேயே அமர்ந்து விட்டாளே என்று பெருமைப்பட்டு முடியும் முன் அவளின் அவசரத்தனத்தால் அனைத்தையும் இழந்து நின்று விட்டாள். சரி ஆதி மூலம் எதையாவது செய்து நிலைமையை சரிகட்டலாம் என்று பார்த்தால், நீதி, நேர்மை என்று கதையளந்து விட்டு அம்போ என அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டான்.
ஏற்கனவே அந்த கோபத்தில் வீரா இருக்க, இப்பொழுது இப்படியொரு செய்தி வந்து அவரை மேலும் கொதிப்படையச் செய்துவிட்டது.
ஆதீஸ்வரனை மருமகனாக ஏற்கத் தயாராக இருந்த வீராவால், எக்காரணம் கொண்டும் சத்யேந்திரனை மருமகனாக ஏற்றுக்கொள்ள முடியாது!
‘அவன் எனக்கு மருமகனா?’ ஆத்திரத்தில் கனன்று கொண்டிருந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்தையும் அறிவையும் இழந்து கொண்டிருந்தார்.
கட்டுப்பட மறுக்கும் ஆத்திரம் என்னென்ன பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அனுபவப்பூர்வமாக அறிந்தவர் என்றபோதிலும், மீண்டும் அதே தவறை தான் செய்ய துணிந்து விட்டார். காலம் எல்லா நேரமும் இவருக்கு சாதகமாகவே அமையுமா என்ன?
*** ஆதியைப் பொறுத்தவரை வேலையிலும் இப்பொழுது அவனுடைய நேரடி பங்கு என்று எதுவும் இல்லை!
ஆதி ஏன் அப்படி நினைத்தானோ தன் தலையீடு துளியும் இல்லாமல் ப்ளட் டொனேஷன் கேம்ப்பை நடத்த சொல்லியிருந்தவன், அதை ஏற்பாடு செய்பவர்களுக்குச் சிறு சிறு தடங்கல்கள் வந்தபோதும் அதன் வேலைகளில் நேரடியாக இவன் பங்குபெறவில்லை.
நாட்கள் கொஞ்சம் முன்னே பின்னே எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை! யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் இந்த கேம்ப் நடந்து முடிய வேண்டும் என்று நினைத்தான். இப்பொழுது தவறை கண்டுபிடிப்பதோடு, அவ்வாறு எதையும் கண்டுபிடித்தால் குற்றவாளிகளையும் கண்டுபிடித்ததாக வேண்டுமே! அங்கு கோட்டை விட்டுவிடக் கூடாதல்லவா! அதில் அவன் எந்தவித சமரசமும் செய்வதாக இல்லை என்பதால் தான் அவன் தலையீடு இல்லாமல் வேலை நடக்கிறது.
இந்த சூழலில் தான் அவனுக்கு சத்யாவிற்கு சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவரிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.
மிகவும் முக்கியமான விஷயம் நேரில் தான் பேச வேண்டும் என்று உறுதியாகச் சொல்லி விட்டார் அவர். கூடிய சீக்கிரம் பேசினால் நல்லது என்றும் சொல்லவும், ‘இப்பொழுதுதான் இங்கே வேலை ஒரு நிலையில் செல்கிறது. இந்த நேரத்தில் மீண்டும் சென்னைக்கா?’ என்று ஆதி தடுமாறினான்.
சரி இங்கு கேம்ப் நடந்து, பிளட் சேம்பிள் கலெக்ட் செய்து, அதைப் பரிசோதனைக்கு உட்படுத்தி என வேலைகள் அடுத்தடுத்து இருக்கிறது. இதில் இவன் இங்கேயே நின்று செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்று யோசித்து தென்னரசுவிடம் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு ஆதீஸ்வரன் சென்னைக்கு புறப்பட்டிருந்தான்.
அங்கு சென்று மருத்துவரை சந்தித்தவனுக்கு அவர் சொன்ன தகவல்களில், அதற்கு அவர் சான்றாகக் காட்டிய ஆதாரங்களில் உலகமே ஸ்தம்பித்த நிலை தான்!
நிஜத்தை அவனால் ஏற்கவே முடியவில்லை. தலை பாறையைச் சுமப்பது போல கனத்தது. அதைத் தாங்கி பிடித்துக் கொண்டவன் மனதில் சூறாவளியின் சீற்றம்.
மனம் தன் பெற்றோருக்கு நடந்த கொடுமையைத் தாங்கமாட்டாமல் கதறித் துடித்தது. இப்படியொரு நம்பிக்கை துரோகத்தை அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லையே!
எதிர்பாராத விஷயங்கள் அதிர்ச்சியைத் தரும் என்றால், இப்பொழுது அவனுக்குத் தெரியவந்த விவரங்களால் அதிர்ச்சி மட்டுமில்லை, கட்டுப்படுத்த முடியாத ஆத்திரம், கோபம், சீற்றம்!
நெஞ்சின் பாரம் அவனை எரிமலையாய் கொந்தளிக்க வைத்தது. அவனது ரத்தம் சூடேறி மூச்சுக்காற்றிலும் அனல் தெறித்தது. கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து உடைக்கும் அளவு எல்லையற்ற ஆத்திரம்! இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று பரிதவித்தவனுக்கு சில நொடிகள் என்ன செய்வது என்று கூட புரியவில்லை.
“சார் ரிலாக்ஸ் பிளீஸ்…” மருத்துவர் அவன் அருந்துவதற்கு நீரை எடுத்து அவனருகே வைத்தார்.
எதுவும் பேசவில்லை அவன். வேகவேகமாக நீரை எடுத்துப் பருகினான். அது அவன் உடையிலும் சிதறியது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அமர்ந்திருந்தவனின் சிவந்த விழிகளும், இறுகிய தாடையும், விரைத்த தேகமும் ‘என்னை நெருங்காதே!’ என்று கட்டளையிட்டது போல இருந்தது.
இந்த தண்ணீரில் அணையும் நெருப்பா அவனுள் எரிந்து கொண்டிருப்பது? எவ்வளவு பெரிய ஏமாற்றம்! வாழ்வில் எத்தனை மோசமான அடி!
“சார் நீங்க எமோஷனலி என்ன முடிவெடுத்தாலும் ஏற்கனவே நடந்த எதையும் மாத்த முடியாது. இப்ப நீங்க நிதானமா தான் இருந்தாகணும். என்ன செய்யலாம்ன்னு நிதானமா யோசிங்க” என்று மருத்துவர் சொல்லும் சொற்கள் காதில் விழுந்தாலும், கருத்தில் நிலையாகப் பதிய மறுத்தது.
மனநல மருத்துவருக்கு இதுபோன்ற நிலைகளையெல்லாம் கையாண்டு பழக்கம் இருக்கிறதே! ஆக, பேசிப்பேசி அவனை அந்த இறுகிய நிலையிலிருந்து மாற்றப் பார்த்தார்.
அத்தனை இலகுவாக இருக்கவில்லை அவருக்கு! ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்தார். “அடுத்து என்ன செய்யறதுன்னு யோசிங்க. நடந்த எதையும் உங்களால மாத்த முடியாது” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
ஓரளவு தெளிந்து நிலைபெறும் முன்பே, அவனுக்கு அவன் தம்பியைக் கண்காணிக்கும் இடத்திலிருந்து ஓர் அழைப்பு!
யோசனையோடே அழைப்பை ஏற்றவனிடம், “சார்! தம்பியை இன்னைக்கு காலையிலிருந்து காணோம். எங்களால அவரை ரீச் செய்ய முடியலை. இப்ப அவர் எங்கே இருக்காருன்னு கண்டுபிடிக்க முடியலை” என்று பதறியபடி கூறினான் ஒருவன்.
“என்ன உளறுறீங்க? இதை சொல்ல எதுக்கு அத்தனை பேரு?” என்று கோபமாக சொன்னபடி வேகமாக இருக்கையிலிருந்து எழுந்தான். அவன் எழுந்த வேகத்தில் அந்த நாற்காலி பெரிதாகச் சத்தமிட்டு நகர்ந்து கொண்டது.
“எப்பவும் போல பூஜிதா அம்மா கூட தான் கிளம்பினாரு. நம்ம வீரராகவன் சார் சென்னை வந்திருக்காங்க. அவர் இருக்கிற இடத்துக்கு தான் போனாங்க சார். ஆனா, இப்ப ரெண்டு பேரோடு போனையும் ரீச் பண்ண முடியலை” என்று பெரும் பதற்றத்துடன் அவன் சொல்ல,
“அவர்கிட்ட கேட்டீங்களா?”
“சத்யா சாரோட பிரண்ட்ஸ் வெச்சு கேட்டோம் சார், ‘சத்யா அப்பவே போயிட்டானே’ அப்படின்னு சொல்லியிருக்காரு. அவர் சொன்ன மாதிரி சத்யா சாரோட வண்டி வெளிய போச்சு தான், ஆனா வழக்கத்தை விட வேகமா போச்சு. எப்பவும் சத்யா சார் அவ்வளவு வேகமா வண்டியை ஓட்டிட்டு போறவர் இல்லை. அவருக்கு நடந்த ஆக்சிடெண்ட்க்கு அப்பறம் அவர் வண்டி ஓட்டறதுல நிதானம் வந்துடுச்சு. இன்னைக்கு அந்த நிதானம் இல்லை. அதுவே எங்களுக்கு சந்தேகத்தைத் தான் தந்தது. ஆனாலும் நாங்க அவரோட வண்டியை வேகமா பாலோ பண்ணி போனோம். அப்பவும் அவர் வண்டியை மிஸ் பண்ணிட்டோம்.
ஒருவழியா தேடி அலைஞ்சு பார்த்தா வண்டி மட்டும் ஒரு இடத்துல இருக்கு, ஆனா அங்கே அவரை காணோம். அது கொஞ்சம் ஆள் நடமாட்டம் இல்லாத இடம். சிசிடிவி எதுவும் இல்லை. எப்படி விசாரிக்கண்ணு தெரியாம வேற என்ன வழியில தேடன்னு அலைஞ்சிட்டு இருக்கோம். அப்ப இருந்தே சத்யா சாரோடது, பூஜிதா மேடமோட போன் எல்லாம் ரீச் ஆகவே மாட்டீங்குது. இதுதான் எங்களுக்கு சந்தேகமா இருக்கு சார். அதுதான் உங்ககிட்ட சொல்லிடலாம்ன்னு கூப்பிட்டேன்” மூச்சு விடாமல் சொல்லி முடிக்க, ஆதிக்கு இருக்கும் பிரச்சினைகள் போதாமல் இது வேறா என்றிருந்தது.
“ரெண்டு பேர் போனும் கடைசியா எங்க ஆக்டிவா இருந்ததுன்னு பார்த்தீங்களா?” என்று ஆதி நெற்றியை நீவியபடி கேட்டதும்,
“ஆமாம் சார் அதை தான் செக் பண்ணிட்டு இருக்கோம். கூடவே கார்ல யாரோட பிங்கர் பிரிண்ட்ஸ் இருக்குன்னு பார்க்கலாம்ன்னு இருக்கோம். எங்களுக்கு தெரிஞ்சு சத்யா சார் காரை ஓட்டிட்டு வர வாய்ப்பு இல்லை. அவர் இவ்வளவு ரேஸா டிரைவ் பண்ணறதை நிறுத்திட்டாரு. ஆனா, வீரராகவன் சாரை எப்படி சந்தேகப்படறதுன்னும் தெரியலை சார்” என்று தங்கள் திட்டங்களைச் சொல்லிவிட்டு, தங்கள் குழப்பத்தையும் கேட்க,
ஆதி பல்லைக் கடித்தான். ஆனால், அவசரப்பட்டு வார்த்தையை விடவில்லை. “ஏன்? அவர் மேல என்ன சந்தேகம்?” என்றான் சாதாரணக் குரலிலேயே!
“இல்லை சார். சத்யா சார் அவரை பார்க்கத்தான் போனாங்க. ஆனா அவரோட கார் மட்டும் வெளிய வந்திருக்கு. அதுல சத்யா வந்தாருன்னு உறுதியா எதுவும் சொல்ல முடியலை. இப்ப பூஜிதா மேடமை கூட காண்டாக்ட் பண்ண முடியலை” என்று குழப்பமாக சொன்னவன், “ஏன் சார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிருப்பாரோ? அவருக்கு அவரோட பொண்ணு காதலிக்கிறதுல இஷ்டம் இல்லையோ?” என்ற கோணத்தில் சந்தேகத்தை எழுப்ப,
உள்ளதை உள்ளபடியா சொல்ல முடியும்? அவர்களாக எதையாவது கணித்தால், விளக்கமோ மறுப்போ சொல்லாமல் ஒப்புக்கொள்வது தான் அந்த நேரத்தில் புத்திசாலித்தனமாகப் பட்டது.
“என்னால அப்படி யோசிக்கக்கூட முடியலை. ஆனா, சத்யாவை கண்டுபிடிக்க இப்படி எல்லா ஆங்கிள்லயும் யோசிக்கணும் இல்லை. உங்களுக்கு சந்தேகப்படற எல்லா விதத்துலேயும் இன்வெஸ்டிகேட் ஸ்டார்ட் செய்யுங்க. ஆனா, எனக்கு இன்னைக்கு ஈவினிங்குள்ள என் தம்பி வந்தாகணும். இல்லை உங்களையெல்லாம் என்ன செய்வேன்னே தெரியாது? எனக்கு தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் ஒருத்தர் இருக்காரு அவர்கிட்டயும் சொல்லிடறேன். சொதப்பாம, எத்தனை ஆட்களை வேணும்ன்னாலும் வேலைக்கு எடுத்துட்டு இமீடியேட்டா தம்பியை கண்டுபிடிங்க…” என்று கட்டளையிட, அந்த அமைதியான குரலில் அடங்கியிருக்கும் ஆக்ரோஷத்தைப் புரிந்து கொண்டவனும், “கண்டிப்பா சார். சீக்கிரம் தகவல் சொல்லிடறோம்…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
தம்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று ஆதியின் நெஞ்சம் பதறியது. இப்பொழுது காரியம் தானே பெரியது! மற்றதைப் பற்றி யோசிக்கும் நிலையில் அவன் இல்லையே! அதிலும் தனக்கு உண்மை தெரிந்து விட்டதாகக் காட்டிக்கொள்ளக் கூடாது அது இன்னும் ஆபத்தைத் தான் கொடுக்கும் என்பதில் அமைதியாக இருக்க முடிவு செய்தான். எப்படியாவது சத்யாவை மீட்டுவிட வேண்டும் என்று பதற்றம் அவனிடம்!
சற்று நேரத்தில் அவனுக்கு நம்பகமானவர்களிடம் எல்லாம் தகவல் பறந்தது. எல்லாரும் சத்யாவைத் தேடி அலைந்தார்கள்! இன்ஸ்பெக்டர் விவேக் உட்பட!
விவேக்கிற்கு ஆதி மீது ஒருவகை அபிமானம் என்றால், தோற்றத்தில் தன் தந்தையை நினைவு படுத்தும் சத்யேந்திரன் என்றால் பெரும் பிரமிப்பு. அவனுக்கு ஆபத்து என்றதும் இவனுக்கும் பதைபதைக்கத் தொடங்கிவிட்டது.
வீரராகவன் தங்கியிருந்த ஹோட்டலில் உள்ளே நுழைந்த சத்யாவும், பூஜிதாவும் என்ன ஆனார்கள், எந்த வழியில் மாயமானார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.
ஆனால், ஒருவழியாக அலைந்து திரிந்து விவேக் நூல் பிடித்து விட்டான். அந்த ஹோட்டலிலேயே இருப்பார்கள், அங்கேயே அவர்களை அடைத்து வைத்திருக்கக் கூடும் என்றெல்லாம் ஒரு பக்கம் இன்வெஸ்டிகேஷன் போய்க் கொண்டிருக்க, அந்த ஹோட்டலில் இருக்கும் மற்றொரு எக்ஸிட் வழியாகப் போன கார்களை ஆராயத் தொடங்கியிருந்தான் விவேக்.
ஒருவழியாக சந்தேகத்தை ஏற்படுத்திய இரண்டு கார்களை கண்டுபிடித்தவன், அதன் எண்களைத் தந்து தன் டிபார்ட்மெண்ட் உதவியுடன் சிசிடிவியில் டிரெஸ் செய்ய சொல்லி விட்டான். ஒரு கார் ஈசிஆரில் இருக்கும் ஒரு கெஸ்ட் ஹவுசிற்கு போயிருக்க, என்னவோ அங்கு பூஜிதாவை அனுப்பியிருப்பார்கள் என்ற சந்தேகம்!
பூஜிதாவை அங்கு வைத்திருக்கக்கூடும் என்ற அனுமானம் கிடைத்ததும் அந்த தகவலை உடனடியாக ஆதியிடம் சொன்னவன், “நீங்க நம்பகமான ஆட்களோட போயி அங்கே பூஜிதாவோ இல்லை உங்க தம்பியோ இருந்தா மீட்டுடுங்க. அவங்க மூலம் வேற எதுவும் தகவல் கிடைச்சா உடனே எனக்கு சொல்லுங்க, நான் உங்க தம்பி சத்யாவை தான் தேடிட்டு இருக்கேன். வேற எதுவும் தகவல் தெரிஞ்சா உடனே உங்களுக்கு கூப்பிடறேன்” என்று சொல்லி வைத்தான்.
ஆனால், இத்தனை உதவி செய்த விவேக், நல்ல முறையில் ஆதியிடம் பேசியது அதுவே கடைசி முறையாக இருந்தது. இனி இந்த போராட்டத்தில் அவன் தன் உயிரையே பணயம் வைக்கப் போகிறான் என்று ஆதிக்கு மட்டுமல்ல, விவேக்கிற்குமே அப்பொழுது தெரிந்திருக்க நியாயமில்லை!
விதி இவர்களின் ஆட்டத்தை எங்கே தொடங்கி, எங்கே முடித்து வைக்கவிருக்கிறது என்று தொடர்ந்து பார்க்கலாம்.