அத்தியாயம் -9(2)
மித்ரா ஏதும் சொல்லாமல் சாப்பிட மட்டும் செய்தாள். நல்ல பசியாக இருந்தும் அவளால் அதிகம் சாப்பிட முடியவில்லை.
“சாப்பாடு பிடிக்கலையா?” எனக் கேட்டான்.
“எதுவுமே பிடிக்கல” கடுப்பாக சொன்னாள்.
மித்ரா இப்படியே எரிச்சல் பட்டுக் கொண்டே இருந்தால் தன்னால் அமைதியாகவே இருக்க முடியுமா என்ற யோசனையோடு அவளுக்கு பால் கொண்டு வரச் செய்தான். அதனை அருந்தியவள், “அடுத்து என்னன்னு ஆர்டர் போட்டா செஞ்சிட்டு படுக்க போவேன்” என்றாள்.
“எம்மேலதான் தப்பு மித்ரா, உன் கோவத்தை என்கிட்ட மட்டும் காட்டு. யாரும் காட்டிக்கலைன்னாலும் எல்லாருமே மன வருத்தத்துலதான் இருக்காங்க, உன்னைகெஞ்சி கேட்டுக்கிறேன்… யாரையும் ஹர்ட் பண்ணிடாத” என்றான்.
“ஆமாம், உங்களை எல்லாம் வேதனை படுத்துறதுதான் என் வாழ்நாள் குறிக்கோள் லட்சியம்னு முடிவு பண்ணி என் வீட்ல அடம் பிடிச்சு குன்னூர்லேருந்து சென்னைக்கு ஓடோடி வந்திருக்கேன்” கடுப்பாக சொன்னாள்.
இவளோடு இப்போதைக்கு அதிகம் வார்த்தையாடமால் இருப்பதே நல்லது என எண்ணிக் கொண்டவன் வேகமாக சாப்பிட்டு முடித்தான்.
ருக்மணி காஞ்சனாவை அழைத்துக் கொண்டு வந்தார். ஏன் இப்படி செய்தாய் என மகனிடம் கோபித்துக் கொண்டார் காஞ்சனா. சர்வா தன் பெரியம்மாவை பார்க்க அவர்தான் தன் ஓரகத்தியை சமாதானம் செய்தார்.
மித்ராவை பூஜையறையில் விளக்கு மட்டும் ஏற்ற வைத்தனர். சாமுண்டீஸ்வரி தேவியின் திருஉருவப் படம் பெரிதாக இருந்தது. மித்ரா பூஜித்த தேவியின் விக்கிரஹத்தை அவளிடமே கொடுத்திருந்தார் ஜெயந்தி. அதை இந்த வீட்டு பூஜையறையில் வைக்கலாமா என தயக்கத்தோடு இரண்டு மாமியர்களுக்கும் பொதுவாக கேட்டாள்.
அவர்களுக்கு அவளின் குல பழக்கம் எல்லாம் தெரியாத காரணத்தால் என்ன ஏதேன்று விசாரித்து தெரிந்து கொண்டனர்.
“இனிமே இதுதான்மா உன் வீடு, உனக்கு விருப்ப பட்டத செய்யலாம். இப்பவே போய் எடுத்திட்டு வாம்மா, நான் பெரியவரை வரவைக்கிறேன்” என்றார் ருக்மணி.
அந்த பெரிய வீட்டில் தனியாக மீண்டும் தங்களின் அறைக்கு செல்ல ஒரு மாதிரியாக இருக்க, சர்வாவை ஓரப் பார்வை பார்த்து விட்டு நடந்தாள். அவனும் அவளை பின்பற்றி நடக்க, “நீ தேறிடுவ டா” என ருக்மணி சொல்வது அவர்களின் காதில் விழுந்து தேய்ந்தது.
அறைக்கு வந்தவள் தன் பெட்டியில் மஞ்சள் துணி கொண்டு சுற்றி வைக்க பட்டிருந்த விக்கிரஹத்தை கையில் எடுத்தாள்.
“இப்படி விக்கிரஹம் எடுத்திட்டு வர்றேன்னு என்கிட்ட சொல்லவே இல்லை மித்ரா நீ” என்றான்.
“நீங்க யாரு என்னன்னு சொல்லாம கல்யாணம் வரை பண்ணிக்கிட்டீங்க, அதை கம்பேர் பண்ணும் போது நானொன்னும் அவ்ளோ பெரிய தப்பு செய்திடலன்னு நினைக்கிறேன்” என குத்தலாக சொன்னாள்.
முன் நெற்றியை தடவி விட்டுக் கொண்டவன், “கீழ போலாமா?” எனக் கேட்டான்.
ஒன்றும் சொல்லாமல் அவனுக்கு முன் நடந்தாள். ஒரு பெரு மூச்சுடன் அவளை தொடர்ந்தான்.
அவர்கள் கீழே வரும் போது சதானந்தம், அறிவானந்தம் என இரண்டு பெரியவர்களும் அங்கிருந்தனர். இருவருக்கும் உருவ ஒற்றுமை இருந்தது. வயோதிகத்தின் சாயல் தெரிந்தாலும் இருவருமே திடமாக இருந்தனர்.
“வாம்மா தாயி!” என்றார் சதானந்தம். அவரது தம்பியும் வீட்டின் புது மருமகளை வா என அழைத்தார்.
ஜடா முடியும் நீளமான வெண் தாடியுமாக இடுங்கிய கண்களோடு இருந்த பெரியவரை பார்த்ததும் மித்ராவுக்கு பயமாக இருந்தது. அனிச்சையாக அருகிலிருந்த கணவனின் கையை பிடித்துக்கொண்டாள்.
“உலக கணக்க முடிச்சிட்டு இறைவனோட பாதங்களை சரணடையற நாளை எதிர் நோக்கியிருக்க சாமான்யன்மா இந்தக் கிழவன். போயும் போயும் என்னைப் பார்த்து பயப்படாதம்மா” என்றார் சதானந்தன்.
“இவர்தான் பெரிய தாத்தா மித்ரா, என்ன பயம்? தைரியமா இரு” மனைவியின் காதில் சின்ன குரலில் சொன்னான் சர்வா.
மித்ராவின் கையிலிருந்த விக்கிரஹத்தை பார்த்த சதானந்தம், “மனசு வச்சு திரும்பி வந்திட்டாளா இங்க?” என ஆனந்த பெருக்கோடு கேட்டார்.
“இது என்னோடது, நீங்க நினைச்சிட்டிருக்க விக்ரஹம் குன்னூர் கோயில்ல இருக்கு” என்றாள் மித்ரா.
சிறிதாக புன்னகைத்த பெரியவர், “எல்லாமே அவ அம்சம்தானேம்மா? நீயா இங்க வந்தேன்னு நினைக்கிறியா? இதெல்லாம் ஏற்கனவே இந்த தாயால தீர்மானிக்க பட்டது” என்றார்.
“எது என்னை ஏமாத்த சொல்லி சாமி உங்ககிட்ட சொல்லி அனுப்பி வச்சுதாமா?” சர்வாவிடம் மெல்லிய குரலில் கேட்டாள்.
“ஷ் மித்ரா, ப்ளீஸ்…” கெஞ்சினான் சர்வா.
சதானந்தம் கேட்டுக் கொண்டதன் படி விக்கிரஹத்தை பூஜையறையில் வைத்தாள் மித்ரா.
சிறிதாக பூஜை செய்த சதானந்தம் பெரியவர் அந்த தேவியின் விக்கிரஹத்தை பார்த்து கை கூப்பி கண்ணீர் விட்டு அழுதார். கண்களை மூடி நின்று தொழுது கொண்டிருந்தனர் மற்ற பெரியவர்கள்.
“கண்ண தொறந்து அம்மாவோட கருணை முகத்தை பாருங்க. பட்ட துன்பங்களை இந்த தலைமுறையோட போக்க வந்திட்டேன்னு அருள் கொடுக்கிற தாயை கண்ணார பாருங்க” என்றார் சதானந்தம்.
அவர் சொன்ன படியே மற்றவர்கள் செய்ய, பெருங்குரலெடுத்து துதி பாட ஆரம்பித்து விட்டார். பக்தி மிகுதியில் கை கால்களை தூக்கியும் ஆடினார்.
தீபத்தின் ஒளியில் தேவியின் முகம் பிரகாசிக்க மலர் குவியலின் நடுவிலிருந்த அந்த சிறு விக்கிரஹத்தை பார்த்திருந்தவர்களுக்கு உடல் சிலிர்த்து பின் அடங்கியது.
பெரியவரின் உடல்மொழி, பேச்சு, பாடல் இதெல்லாம் மித்ராவுக்கு வித்தியாசமாக தெரிந்தது. கலக்கமாக கணவனை பார்த்தாள்.
தேவியை வணங்கிக் கொண்டிருந்தவன், “என்ன மித்ரா, சாமிய கும்பிடும்மா” என்றான்.
ருக்மணி அவசரமாக எங்கோ சென்றார். சில நிமிடங்களில் பிரகல்யாவும் அவளது மகன் பிரதீப்பும் அவரோடு சேர்ந்து வந்தனர்.
“சர்வாப்பா…” என அழைத்த பிரதீப்பை ஆரத் தழுவி அன்பை பரிமாறி பின் பூஜையறைக்கு அழைத்து வந்தான் சர்வா.
சின்னவனுக்கு திருநீறு இட்டு விட்ட சதானந்தம், “பாரு உன்னை காக்க வந்திட்டா உன் சின்னம்மா” என சொல்லி மித்ராவை காட்டினார்.
“சித்திதானே?” எனக் கேட்ட பிரதீப், “ஹாய் சித்தி எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டான்.
இவனுக்குத்தான் உடல் நலமில்லையோ என கணித்து அவன்பால் இரக்கம் கொண்ட மித்ரா, தன் நலம் சொல்லி அவனிடமும் விசாரித்தாள்.
அறிவானத்தத்தின் கடைசி மகன் மெய்யப்பனை அழைத்து வந்தான் வேலையாள் ஒருவன்.
“ருக்குமா…” என அழைத்துக் கொண்டே தன் அண்ணியிடம் வந்து நின்றார் மெய்யப்பன்.
“வா வா… எங்க சாமி கும்பிடு” அவரது கைகளை எடுத்து வணங்க வைத்தார் ருக்மணி. அவரது வார்த்தைக்கு பணிந்து அவர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டார் மெய்யப்பன்.
பிரதீபப்பை கொஞ்சிய மெய்யப்பன் பூஜை செய்யும் போது உபயோகிக்கும் சின்ன மணியை கையில் எடுத்து ஒலி எழுப்பி சிரித்தார். அவரது செயல்களை குழந்தையின் செய்கையாக நினைத்து பார்த்திருந்தனர் மற்றவர்கள். மித்ராவுக்கு அவரை காணவும் பயமாகத்தான் இருந்தது.
பார்த்து பழக்கமில்லாத மித்ராவை கண்ட மெய்யப்பன் திடீரென கையில் இருந்த மணியை அவளை நோக்கி விட்டெறிந்து விட்டார். அவரின் செயலை கணித்து விட்ட சர்வா சட்டென மித்ராவை விலக்கி விட அந்த மணி அவனது நெற்றியில் பட்டு கீழே விழுந்தது.
சர்வாவின் நெற்றியில் இரத்தத்தை கண்ட மித்ரா மிரண்டு போயிருந்தாள். மெய்யப்பன் சர்வாவை நோக்கி வரவும் ஏதோ செய்யப் போகிறார் என்ற பயத்தில் வீறிட்டு அலறிய மித்ரா மயக்கமடைந்து சர்வாவின் மீதே சரிந்து விட்டாள்.
மித்ரா கண் விழித்த போது அறையில் படுத்திருந்தாள். அவளருகில் நெற்றியில் ஒட்டப் பட்ட பிளாஸ்திரியோடு அமர்ந்திருந்தான் சர்வா.
நடந்தவற்றை மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டே எழுந்தாள் மித்ரா.
“இப்போ எப்படி இருக்கு மித்ரா? சூடா எதுவும் குடிக்கிறியா?” எனக் கேட்டான் சர்வா.
“என்னை குன்னூர்ல கொண்டு போய் விட்ருங்க, என்னால இங்க இருக்க முடியாது, ரொம்ப பயமா இருக்கு” என்றாள்.
அவளை ஆயாசமாக பார்த்தவன், “உன் அப்பாக்கு பேசுன்னு உன்கிட்ட சொன்னேன்தானே, பேசலையா நீ?” எனக் கேட்டான்.
“கோவத்துல பேசல. ஆனா இப்போ பேசுறேன், அப்பாவை வர சொல்லி அவர் கூடவே போயிடுறேன், என்னால இங்க இருக்க முடியாது” சிறு குழந்தை போல உதடுகள் பிதுக்கி சொன்னவள் தனது கைப்பேசி எங்கே என சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“அமைதியா இரு மித்ரா, நீ பயப்பட எதுவுமில்லை இங்க, நான் சொல்றதை கேட்டுட்டு அப்புறம் உன் அப்பாகிட்ட பேசுவியாம்” என சமாதானமாக சொன்னான் சர்வா.
அவன் சொல்வதை கேட்க தயாராக இல்லாதவள் எழுந்து நின்று கைப்பேசி எங்கே என ஆராய்ந்து தள்ளியிருந்த மேசையின் மீது அது இருக்கவும் எடுப்பதற்காக ஓடினாள்.
அவளுக்கு முன் அவளது கைப்பேசியை கைப்பற்றிக் கொண்டவன், “ரிலாக்ஸ் மித்ரா, நான் சொல்றதை கேளு” என்றான்.
“என்ன கேட்கணும் நான்? ஒழுங்கா ஃபோனை கொடுங்க, இல்லைனா… இல்லைனா…” சுற்றிலும் பார்த்தவள் பால்கனி பக்கம் கையை காட்டி, “அங்கேருந்து கீழ குதிச்சிடுவேன்” என மிரட்டினாள்.
கைப்பேசியை படுக்கையில் தூக்கிப் போட்டவன் அவளை நெருங்கி வந்து தன்னோடு அவளை அணைத்துக் கொண்டான்.
“உனக்கு வேற பொண்ணே கிடைக்கலியா? என்னை ஏன் இங்க கொண்டு வந்த? நான் என்ன பாவம் பண்ணினேன்? நீ சித்ரவதை பண்ண நான்தான் கிடைச்சேனா உனக்கு?” என தேம்பி அழுது கொண்டே கேட்டாள்.
“ரெஸ்ட்லெஸா இருக்க நீ, வா கொஞ்ச நேரம் தூங்கு, அப்புறம் நான் சொல்றதை கேளு, அப்பவும் உனக்கு இங்க இருக்க வேணாம், குன்னூர் போகணும்னா நானே கொண்டு போய் விடுறேன்” என்றான்.
அவனை விட்டு விலகியவள், “பொய் பொய்யா பேசுற உங்களை எப்படி நம்புறது?” என சீற்றமாக கேட்டாள்.
“நம்பிதான் ஆகணும் மித்ரா, உனக்கு வேற ஆப்ஷன் இல்லை” பொறுமையிழந்து கத்தி விட்டவன் உடனே தணிந்து அவளின் கையை பற்றிக் கொள்ள போனான்.
பின்னால் நகர்ந்தவள், அவனை வெறிக்க பார்த்தாள்.
“ஸாரி ஸாரி ஸாரி…” என சொல்லிக் கொண்டே அவளை சமீபித்து விட்டவன், “சரியான தூக்கம் இல்லாமதான் இப்படி நடந்துக்கிற, நானும் டயர்டாதான் இருக்கேன் மித்ரா, அதான் கத்திட்டேன், ஸாரி. அடுத்த வார்த்தை பேசாம வந்து படு” என சொல்லி அவளை வற்புறுத்தி படுக்கவும் வைத்து விட்டான்.
கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தவள் தற்போது பேதலித்து விட்டதை போலதான் இருந்தாள். கண்களை மூடினாலே சதானந்தம் தாத்தா கண்களை உருட்டிக் கொண்டு ஆடுவதும் மெய்யப்பன் அவளை ஆவேசமாக அடிக்க வருவதுமே காட்சிகளாக தோன்றி அவளை பாடு படுத்தியது.
“கண்ண மூட முடியலை, பயமா இருக்குங்க” என பாவமாக சொன்னாள்.
அவனும் அவளருகில் படுத்துக் கொண்டு அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.
அவனது அருகாமை பிடிக்கா விட்டாலும் இந்த நேரம் ஏதோ ஒரு அரவணைப்பு அவளுக்கு தேவையாக இருக்க, விலகாமல் அவனை ஒட்டியே படுத்திருந்தாள்.
அவளது தலையை தன் மார்பில் வைத்து அழுத்திக் கொண்டவன், “தூங்கு மித்ரா” என சொல்லவும், “ம்ம்… நைட்டே குன்னூர்ல விடணும் என்னை” என கண்டிப்போடு சொல்லி விட்டே கண்களை மூடினாள்.
சர்வாவின் நெற்றிக் காயம் வலி கொடுக்க, மித்ராவின் பிடிவாதத்தில் மனமும் குமுறிக் கொண்டிருக்க உறங்கிப் போயிருந்தவளை தள்ளி படுக்க வைத்து விட்டு எழப் போனான்.
அவளிடம் அசைவு தெரியவும் உடனே மீண்டும் பழைய படியே அவளை அவனுக்கு நெருக்கமாக கிடத்திக் கொண்டான்.
மகள் அழைக்காமல் போகவும் சர்வாவுக்கு அழைத்து ஏன் மித்ரா இன்னும் பேசவில்லை என விசாரித்திருந்தார் ராஜன். அந்த நேரம் மித்ரா மயக்கத்தில் இருந்தாள்.
சோர்வின் காரணமாக உறங்கி விட்டாள் என்றவனை அவர் நம்பாமல் போக காணொளி அழைப்பில் மித்ராவை அவருக்கு காட்டினான்.
“இப்படி பகல்ல தூங்குறவ இல்லை எம்பொண்ணு, முகம் கூட என்னவோ போலிருக்கு. அவ எழுந்ததும் உடனே எனக்கு கால் பண்ண சொல்லுங்க” என சொல்லி விட்டுத்தான் அழைப்பை துண்டித்திருந்தார் ராஜன்.
ஒரு மணி நேரமாகியும் அழைப்பு வராமல் போனதால் மகளுக்கு அழைத்தார் ராஜன். முன்னரே கைப்பேசிகளின் சத்தத்தை வெகுவாக குறைத்து வைத்திருந்தான் சர்வா. ஆகவே மித்ராவுக்கு தொந்தரவாக இல்லை, ஆனால் சர்வாவின் காதில் அழைப்போசை கேட்டது.
மித்ராவின் அப்பாவாகத்தான் இருக்க கூடும் என எண்ணிக் கொண்டே அவன் எழ முனைய, அவனை இறுக பற்றிக் கொண்டே உறங்கிக் கொண்டிருந்தவள் அவனை விட்டால்தானே?
அவளது கைப்பேசி அமைதியடையவும் அடுத்து அவனது கைப்பேசி சத்தம் போட்டது, ராஜனேதான்.
கண்களை மூடிக் கொண்டவன் மனதிலேயே பலமாக அலறிக் கொண்டான்.