அத்தியாயம் -8(2)

“என் ஷூ போட்டுக்கோ மித்ரா” என்றவனின் பக்கம் திரும்பவில்லை அவள்.

“என் பைக் எடுத்திட்டு வர்றேன், அதுல கொண்டு போய் உன்னை வீட்ல விடுறேன்” என அவன் சொன்னதை கவனியாதது போலவே நின்றாள்.

அருகில்தானே செல்கிறோம் என கைப்பேசியும் எடுத்து வரவில்லை அவள். ஏதாவது வாகனம் வருகிறதா என பார்த்து நின்றாள். ஒன்றும் வராமல் போக தன்னை தயார் படுத்திக் கொண்டு அந்த சகதியிலேயே நடக்க முடிவு செய்து தரையிலிருந்து அவள் காலை எடுக்க, அவளை அப்படியே தூக்கியிருந்தான் சர்வா.

முதலில் திகைத்தவள் பின்னர் அவனிடமிருந்து திமிறினாள்.

“அர்ச்சனை கூடை கீழ விழுந்திட போகுது, பத்திரமா கொண்டு போய் வீட்ல விட்ருவேன், அமைதியா இரு” என்றான். அதிக ஆள் நடமாட்டம் இல்லையென்றாலும் ஓரிருவர் வந்து போய் கொண்டிருந்த இடம்தான் அது.

“முதல்ல இறக்கி விடுங்க, ரோட்ல போய் என்ன செய்றீங்க, எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க” என கடிந்து கொண்டாள்.

“என் ஷூ போட்டுக்கிறேன்னு சொல்லு, விடுறேன். இல்லைனா உன் அப்பா வீட்டு வாசப் படியிலதான் இறக்கி விடுவேன்” என்றான்.

“பெரிய காதல் மன்னர்னு நினைப்பா?” எரிந்து விழுந்தாள்.

“நான் மன்னனா! உனக்கு சேவகன்னு வேணா சொல்லிக்கலாம்” என வசீகர புன்னகையோடு சொன்னான்.

“ஷூ போட்டுக்கிறேன் விடுங்க என்னை” என அவள் சொல்லவும் துப்புரவான இடத்தில் அவளை இறக்கி விட்டு தன் ஷூக்களை கழட்டி தந்தான்.

அளவில் பெரிதாக இருந்தாலும் போட்டுக் கொண்டாள். ஷூ லேஸ் கட்டுவதற்காக அரச்சனை கூடையை எங்கே வைக்கலாம் என அவள் பார்த்துக் கொண்டிருக்க, சாக்ஸ் அணிந்த பாதங்களோடு நின்றிருந்தவன் குனிந்து அவனே அவளுக்கு லேஸ் கட்டி விட்டான்.

அவன் எழுந்ததும் இதற்கெல்லாம் மனமிறங்கி விடுவேன் என கனவிலும் நினைக்காதே என்பது போல அவனை பார்த்தவள் வீட்டை நோக்கி நடந்தாள். ஆனால் அவளின் கால்களின் அளவுக்கு பொருத்தமில்லாத ஷூக்களோடு வேகமாக நடக்க முடியவில்லை.

அவள் விழுந்து விடாமலிருக்க அவளின் கையை பற்றிக் கொண்டவன், “எப்பவும் போல உதறி விடாத, நீதான் மண்ணுல விழுந்து வாருவ. சேத்துல கால் படவே அருவருப்பான நீ இதுல படுத்து உருள ஆசை பட மாட்டேன்னு நினைக்கிறேன்” என்றான்.

வேறு வழியில்லாமல் அவன் உதவியோடு அவனோடே சேர்ந்து நடந்தாள்.

“உன் வீட்ல ஒருத்தர் ஆபத்துல மாட்டிட்டி இருக்கும் போது அவங்கள காப்பாத்த ஏதாவது செய்யணும்னா செய்யாம இருப்பியா மித்ரா?” எனக் கேட்டவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அவனே பேச்சை தொடர்ந்தான்.

“பழகின இத்தனை நாள்ல எப்பவாவது உன்கிட்ட வரம்பு மீறி நடந்திருப்பேனா? எம்மேல எவ்ளோ அன்பு வச்சிருந்த, அது கொடுத்த தைரியம்தான் மித்ரா என்னோட நிலைமையை நீ புரிஞ்சுப்பேங்கிற நம்பிக்கையை கொடுத்தது. நீயும் இப்போ என் குடும்பத்து ஆள்தான், நீ வந்தாதான் அங்க எல்லாம் சரியாகும். சாமிகிட்ட வரம் கேட்கிற மாதிரி கேட்கிறேன், என்னோட வா மித்ரா” என்றான்.

எங்கே இவனது பேச்சில் கரைந்து இவனோடு செல்ல ஒத்துக் கொள்வோமோ என்ற பயத்தில் அவனை பாராமல் இன்னும் வீடு வரவில்லையா என ஆயாசமாக தனக்கு முன்னால் பார்த்தாள்.

வேண்டுமென்றே இப்போதுதான் நடை பழகும் குழந்தையை அழைத்து செல்வது போன்றே மெதுவாகவே அவளை நடத்தி சென்றவன், “நீ வராம போயி நானும் என் குடும்பமும் எக்கேடோ கெட்டு ஒழிஞ்சாலும் உனக்கு கவலையில்லையா மித்ரா?” எனக் கேட்டான்.

“உங்களோடது மூடநம்பிக்கை, அதுக்காக தேவையில்லாம என்னை கில்ட்டா ஃபீல் பண்ண வைக்க வேணாம்” என்றாள்.

“இப்போ கோயிலுக்கு போயிட்டு வர்றியே அதுவும் மூடநம்பிக்கையா?” எனக் கேட்டான்.

“கடவுள் பக்தியும் நீங்க சொல்றதும் ஒண்ணு இல்லை”

“எப்படி ஒண்ணு இல்லாம போகும்? நல்லவங்க வேண்டிகிட்டா அதை கடவுள் நடத்தி கொடுப்பார்னு நம்புறதானே? உங்க குலத்து செண்பகம் அம்மா கேட்டுகிட்டத சாமிதான் நடத்தி வச்சிட்டு இருக்கு. எங்க குல தெய்வம் உங்க கடவுளா மாறிப் போயிடுச்சு. நீ வந்தாதான் தெய்வம் எங்களுக்கு மனமிறங்கும் மித்ரா, மனசு வை மித்ரா”

“நீங்க எனக்கு செஞ்சது மட்டும் நியாயம்னு நினைப்பா?”

“நீயும் வேண்டிக்கோ, உன்னை ஏமாத்தின இந்த சர்வா நாசமா போகட்டும்னு சாபம் விடு, ஆனா எனக்கு மட்டும் கொடு அந்த சாபத்தை. எந்த தப்பும் செய்யாதவங்களுக்கு இல்லை” என்றான்.

என்ன சொல்லி விட்டான், என்ன சாபமிட்டாளாம் இவள்? இப்போது கூட தந்தைக்காக வேண்டிக் கொண்டாளே தவிர இவனை பற்றி குறையாக கூட கடவுளிடம் ஏதும் சொல்லவில்லை. அவன் மீது கோவமும் வெறுப்பும் மண்டிக் கிடந்தாலும் அழிந்து போக சொல்லுமளவுக்கெல்லாம் எப்போதும் துணிய மாட்டாள்.

“எதுக்கு மித்ரா சாபமெல்லாம்? என் கூட வா, அங்க சரியானதுக்கப்புறம் என்னை கொல்றதுன்னா கூட உன் கையால கொல்லு, உன்னை எதிர்க்கவே மாட்டேன்”

“உளறாம ஊர் போய் சேருங்க. கடவுளை மிஞ்சின சக்தி எதுவும் இல்லை, உங்க வீட்ல எல்லாரும் நல்லாருக்கணும்னு வேண்டிக்கோங்க, நான் வந்துதான் அங்க நல்லது நடக்கும்னு நீங்க நினைக்கிறது முட்டாள்தனத்தோட உச்சமாதான் படுது எனக்கு. நாம சந்திச்சது, பழகினது, இந்த கல்யாணம் எல்லாத்தையுமே மறந்திடுறேன். இந்த ஊரை விட்டுட்டுலாம் என்னால வர முடியாது, போங்க… இனியாவது நேர்வழில நடங்க” என்றாள்.

“என்ன மித்ரா, என்னை கெட்டவன் கேடு கெட்டவன்னே முடிவு பண்ணிட்டியா? நல்லவன்தான் மித்ரா நான். நேர் வழில உன்னை கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பில்லாமதான் பொய் சொல்லிட்டேன். என்னை நீ மன்னிக்க என்ன செய்யணும் நான்?” எனக் கேட்டான்.

“உங்களுக்கு உங்க காரியம் ஆகணும், மத்தபடி என் மேல துளி கூட காதல் இல்லை, எதிர்பார்க்காத ஒண்ணு நடந்ததுல இனி உங்க மேல எனக்கும் நம்பிக்கை வரப் போறது இல்லை. எப்படி உங்க மனைவியா உங்க கூட வர முடியும் நான்? என் வாழ்க்கை என்னாகும்? உங்க மூட நம்பிக்கைக்காக என் வாழ்க்கைய பலி கொடுத்துக்க நான் ரெடியா இல்லை” என உறுதி பட அவள் சொல்லும் நேரம் அவளின் வீடும் வந்து விட்டது.

“உன்னை பத்தி நான் கணிச்சது தப்புன்னு தெரிய படுத்திட்ட மித்ரா” என்றான்.

அவனை பார்த்தவள் அவனது கண்களில் தெரிந்த கெஞ்சலில் தடுமாறி பார்வையை கீழிறக்கிக் கொண்டாள்.

“நீயும் என்னை பத்தி தெரிஞ்சு வச்சிருக்கிறது ரொம்ப ரொம்ப கம்மியாதான் இருக்கணும். குடும்பம் தொழில்னு எல்லாத்தையும் விட்டுட்டு எட்டு மாசமா இங்க டேரா போட்டது வெறுங்கையோட திரும்பி போக இல்லை. இந்தளவுக்கு இறங்கி வந்தவன் நீ என் கூட வரணும்னா இன்னும் கூட எது வேணும்னாலும் செய்வேன்” என்றான்.

“நீங்களும் தேனப்பன் வம்சம்தான்னு எனக்கு நிரூபிக்க பார்க்குறீங்களா?” ஏளனத்தோடு கேட்டாள்.

மறுப்பாக தலையாட்டியவன், “உன்னை கஷ்ட படுத்தினாதான் அது தப்பு, ஆனா…” என்றவன் அடுத்து ஏதும் சொல்லாமல் வில்லங்கமாக சிரித்தான்.

“என்ன… பணமும் பதவியும் படைச்ச குடும்பத்தை சேர்ந்தவர் என்னை சேர்ந்தவங்கள கஷ்ட படுத்தி அதை வச்சு என்னை பிளாக் மெயில் செய்ய திட்டம் தீட்டுறாரோ? அது மட்டும் புண்ணியக் கணக்குல சேரும்னு நினைப்பா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

“உன்னை சேர்த்தவனைத்தான் கஷ்ட படுத்த பிளான் பண்ணியிருக்கேன். அவனோட கஷ்டத்தை எந்தளவுக்கு நீ தாங்குறேன்னு பார்க்கிறேன்” என அலட்சியமாக சொன்னான்.

அவளுடைய தம்பி, அக்காவின் கணவன், அக்காவின் மகன் என அவளை சேர்ந்தவர்கள் அனைவரும் அவளின் கண் முன்னால் வந்து மறைந்தார்கள். பயத்தின் ரேகைகள் அவளின் முகத்தில்.

அவளது மனவோட்டம் புரிந்தவன் போல, “ஓ ஓ… ஹோல்ட் ஆன் மித்ரா! நானும் உன்னை சேர்ந்தவன்தானே? எனக்கு என்ன ஆனாலும் உன்னால தாங்கிக்க முடியுமா? ஹ்ம்ம்… சொல்லு” எனக் கேட்டான்.

அவள் குழப்பமாக பார்த்தாள்.

“நான் இங்க வந்து உன்கிட்ட பேசிட்டு இருக்கிறத இப்பவே உன் சொந்தக்காரங்களுக்கு தெரியும் படி செய்றேன். குலம் காக்கும் வீர தீரர்கள் உடனே இங்க வருவாங்க. வந்து என்னை என்ன செய்வாங்களோ…” தோள்களை குலுக்கியவன் அவனது கைப்பேசியை எடுத்தான்.

வெடுக் என அவனது கைப்பேசியை பறித்துக் கொண்டவள் அவனை எரிச்சலும் கோவமுமாக பார்த்தாள்.

“என்ன மித்ரா, ஏன் பயப்படற? என்னை என் கூட பழகினதை நமக்கு நடந்த கல்யாணத்தை மறக்க போறவளுக்கு நான் யாரோதானே? எனக்கு என்ன ஆனா உனக்கென்ன? நான் இங்கேருந்து போனா உன்னோடதான், இல்லைனா கடைசி வரை போராடிப் பார்க்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன். உயிரை பணயம் வைக்கவும் ரெடி” என்றான்.

ராஜனும் ஜெயந்தியும் வெளியில் வந்தனர். மகளின் தோளை பற்றிக் கொண்ட ராஜனிடம் சர்வா சொல்வதை சொன்னாள்.

“போக சொல்லுங்க ப்பா இவரை” என அப்பாவை விட்டு சொல்ல சொன்னாள்.

“என்னங்க இதெல்லாம்?” கண்டனமாக கேட்டார் ராஜன்.

“மித்ரா இல்லாம இங்கேருந்து அசைய மாட்டேங்க நான்” என்றான்.

“நாங்க இது பத்தி பேசிட்டுதான் இருக்கோம் தம்பி, நல்ல முடிவா எடுத்திட்டு சொல்றோம். இப்ப எதுவும் பிரச்சனை வராம இருக்க நீங்க இங்கேருந்து கிளம்பணும்” எனக் கேட்டுக் கொண்டார் ஜெயந்தி.

“உங்களை நம்பலாமா அத்தை?” எனக் கேட்டான்.

“பார்த்தீங்களா ப்பா, இவர் நம்மள நம்பலாமான்னு கேட்கிறதை, சிரிப்பு வரலைப்பா உங்களுக்கு?” என்றாள் மித்ரா.

“சும்மா இருடி!” என அதட்டினார் ஜெயந்தி.

“பேசட்டும் அத்தை, என்னை ஹர்ட் பண்ண பண்ணத்தான் அவ மனக் கோவம் குறையும் அதனால அவளை தடுக்காதீங்க. நீங்க சொல்லுங்க, மித்ராவை அனுப்பி வைப்பீங்களா என்னோட?” என ஜெயந்தியிடம் கேட்டான் சர்வா.

“எனக்கு சம்மதம்தான், இவ அப்பாதான் தேனப்பன் வம்சாவழி குடும்பத்துல போய் எப்படி இவ நல்லா வாழ்வான்னு கொஞ்சம் தயங்குறார்” என்றார் ஜெயந்தி.

வேகமாக தன் காலுறையை கழட்டி போட்டான். பக்கவாட்டில் இருந்த தண்ணீர் குழாயை திறந்து விட்டு தன் கை கால்களை சுத்தம் செய்து கொண்டவன் விரைவாக வீட்டுக்குள் சென்றான்.

விழித்த மூவரும் அவனது பின்னாலேயே சென்றனர். அந்த வீட்டு பூஜையறை வாயிலில் அவன் நிற்க, அவர்களும் அங்கு வந்தனர். மிருதுளாவும் சஞ்சயும் கூட அவனை கண்டு விட்டு என்ன என குழம்பி அங்கு வந்தனர்.

“மித்ராவுக்கு ஏதும் ஆபத்து வந்திடுமோன்னுதானே பயப்படுறீங்க? எப்பவோ என் முன்னோர் தப்பு பண்ணிட்டாங்க, அதுக்காக இதோ…” என்றவன் அவர்களின் பூஜையறையில் விக்கிரஹமாக இருந்த சாமுண்டீஸ்வரி தேவியை சுட்டிக் காண்பித்தான்.

“எங்க குல தெய்வம் உங்களோடவே வந்திட்டாங்க. எங்க தெய்வத்தை சாட்சியா வச்சு சொல்றேன்… மித்ரா என்னோட சரி பாதி, அவளுக்கு என்ன இன்னல் வரவும் விட மாட்டேன், அவளுக்கு ஆபத்துன்னா என் உயிரை கொடுத்தும் கூட காப்பாத்த தயங்க மாட்டேன், அவளுக்கு எப்பவும் உண்மையா இருப்பேன்” என்றவன் மித்ராவின் வலது கையை பிடித்து “இப்போ நான் சொன்ன அத்தனையும் சத்தியம்!” அவளின் உள்ளங்கையில் அடித்து சத்தியம் செய்தான்.