அத்தியாயம் – 16

பைரவி கோவா செல்லவில்லை. ஆனால் அதே நேரம் சிவாவோடும் பேசவில்லை அவள். நிஜமாகவே அவளுக்கு உடம்பிற்குத்தான் என்னவோ என்று ஜானும், அவளது மற்ற தோழமைகளும் நம்பிவிட, ஏற்கனவே மருத்துவமனைக்குச் சென்றுவந்தவள் தானே, அதனால் செல்வியும் நம்பிவிட்டார்.

ஆனால் பைரவிக்குத்தானே தெரியும். அவள் போகாமல் நின்றதன் காரணம். என்னவோ சிவாவிடம் தான் உன்னை அழைத்துப் பேச மறந்துபோனேன் என்று சொன்னது அவளுக்கே அபத்தமாய் தான் இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் என்ன சொல்வதென்பதும் அவளுக்குத் தெரியவில்லை.

அழைக்கவேண்டும் என்று எண்ணினாள். ஆனால் ஆனால் அடுத்து மறந்துபோனாள். அது நிஜம். அதை அப்படியே சொள்ளியும்விட்டாள். அவன் தன்னை மிகவும் தேடியிருக்கிறான். அதனால் தான் நேரம் கூட பார்க்காது வாசல் வந்து நின்றுவிட்டான் என்று உணர, அப்போது தான் சொன்ன வார்த்தைகள் அவனை எத்தனை வருத்தியிருக்கும் என்று புரிந்து, சிவாவின் வார்த்தைகளை மீற அவளுக்கு மனதில்லை.

அவனது கோபம் கண்டு, மனதும் உடலும் நொடியில் சோர்ந்துவிட ஜானோ “நீ ட்ரிப் வரவேண்டாம் பையு…” என்று அவனே சொல்லிவிட்டான்.

பைரவி பதிலேதும் சொல்லாமல், மௌனமாய் பார்க்க “நிஜமா அங்க வந்து சாப்பிட்டு ஏதாவது ஆச்சுன்னா, அடுத்து உனக்கு ரிக்கார்டிங் இருக்கு. அது ரொம்ப முக்கியம். நீ முதல்ல உன்னோட ஹெல்த் பாரு. சந்தோஷிய வர சொல்றேன்…” என்று சொல்லி, விடியல் வேளையில் அனைவரையும் அழைத்துக்கொண்டு விமானம் ஏறிவிட்டான்.

செல்வி கூட “ஏன் கண்ணு.. அன்னிக்கு போல எதுவும் செய்யுதா?” என்று திரும்ப திரும்ப கேட்க,

“இல்ல செல்விம்மா.. ஒண்ணுமில்ல.. கொஞ்சம் தூங்குறேன்…” என்றாள் சோம்பலாய்.

அவளுக்கு என்னவோ தனிமை தேவைப்பட்டது.

சட்டென்று ஒரு உறவிற்குள் வந்துவிட்டாள் தான். காதல் தோன்றியதை அப்படியே ஏற்றுக்கொண்டாள். ஆனால் காதலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று யாரும் சொல்லிக்கொடுக்க முடியாதே.

சிவாவோ, அவனது வாழ்வு முறையில், அவனது அனுபவத்தில் நிறையவே வாழ்வு சார்ந்த கல்வி அவனுக்குண்டு. ஆனால் பைரவிக்கு அப்படியில்லை. விடுதி வாழ்க்கை. கையில் பணத்திற்கு பஞ்சமில்லை. அம்மாவோடு இருக்கும் நேரத்தில், அவள் கேட்காதது கூட கிடைக்கும்.

ஒருவேளை அம்மாவோடு இருந்து வளர்ந்திருந்தால், இன்னும் நல்லது கெட்டது எல்லாம் புரிந்திருக்குமோ என்னவோ?!

அறைக்குள் வந்தவள், கட்டிலில் பொத்தென்று அமர்ந்து, இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டாள். என்னவோ அவளுக்கு நெஞ்சை அடைப்பது போலிருந்தது.

சிவா தன்னை போகக் கூடாது என்று சொன்னதற்கு கோபம் வந்திருக்க வேண்டும். அது வரவில்லை. மாறாய் அப்படியே அவனோடும் பேசாமல் அமைதியாய் இருந்துவிட, அலைபேசியையும் ஆப் செய்து வைதுவிட்டால்.

சிவாவிற்கோ இங்கே இருப்பே கொள்ளவில்லை.

‘லூசு.. லூசு… லூசுடா நீ.. என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்க. அவதான் என்னவோ டென்சன்ல அப்படி சொல்லிட்டா அப்படின்னா உடனே போகக் கூடாதுன்னு சொல்லி கண்ட்ரோல் பண்ணுவியா நீ..? அறிவிருக்கா உனக்கு…’ என்று தன்னை தானே கடிந்துகொண்டு இருந்தான்.

ஷெட்டில் இருக்கும் வேலையும் ஓடவில்லை. சரி கட்டிட வேலையாவது போய் நின்று பார்க்கலாம் என்றால் அதிலும் மனம் லயிக்கவில்லை.

சிண்டுகோ “ண்ணா இன்னாச்சு?” என்று இரண்டொருமுறை கேட்க,

“இந்த மணி எங்கடா போனான்…” என்றான் காந்தலாய்.

‘மணியா?!’ என்று சிண்டு முகத்தை சுளித்துப் பார்க்க

“இன்னாடா நீ பேஜார் பண்ணிட்டு இருக்க.. போ அந்தாண்ட…” என்று சிவா அவனை திட்ட,

“அது சரி.. மணியண்ணே இப்போதானே போன் போட்டு சொல்லிச்சு.. நாளைக்கு தான் வரும்னு.. அடுத்து எங்க போனான்னு என்னிய கேட்டா..” என்று சிண்டு சிடுசிடுத்தபடி நகர,

‘ஓ..!’ என்று சொன்னவன் “ச்சே…” என்று கடுப்படித்து, அன்றைய தினத்தில் நூறாவது முறையாய் அலைபேசியை வெறுமெனே எடுத்துப் பார்த்தான்.

அதில் பைரவியிடம் இருந்து எதுவுமே வந்திருக்கவில்லை.

தான் அப்படி பேசிவிட்டு வந்தது தப்பென்று தெரியும். இருந்தும் என்னவோ, அவளே அழைத்துப் பேசட்டும் என்று இருக்க, நிச்சயம் அவள் போகாமல் இருப்பாள் என்றெல்லாம் அவன் எண்ணவே இல்லை.

ஜான் எப்படியும் அழைத்துப் போவான் என்று எண்ணியிருக்க, செல்வி அப்போது அங்கே வந்தவர் “இன்னா சிவா வாசல்ல நின்னு பயங்கர யோசனை?” என்று கேட்க,

“ம்ம் ஒண்ணுமில்ல…” என்றான் பார்வையை எங்கோ வைத்து.

“ம்ம் சரி.. இந்தாண்ட இளநிக்காரன் வந்தா பைரவி வூட்டுக்கு அனுப்பு…” என்று செல்வி சொல்ல,

“இன்னாத்துக்கு..?” என்றான் சிவா நெற்றியை சுறுக்கி.

“அந்த பொண்ணுக்கு மறுபடி முடியலை போல. பாவம் ஊருக்கும் போகல.. ரூமே கதின்னு கிடக்கு. இன்னும் ஒன்னும் சாப்பிடக் கூட இல்லை. யாருமில்லாம கஷ்டப்படுது…” என்று செல்வி புலம்பியபடி செல்ல,

‘அச்சோ…’ என்று பதறியது சிவாவின் உள்ளம்.

‘ஊருக்கும் போகல.. உடம்புக்கும் முடியலை.. எனக்கு சொன்னா என்னவாம் இவளுக்கு…’ என்று கடிந்தவன்

“யே.. யக்கா.. செல்வியக்கா.. இங்க வா…” என்று போகும் செல்வியை அழைத்து நிறுத்த,

“என்ன சிவா?” என்று வந்தார் மீண்டும்.

“டேய் சிண்டு இங்க வா…” என்றவன் “செல்விக்காவ கூட்டிட்டு முன்னாடி ரோடுல பழக் கடைல போய் என்னென்ன வேணுமோ வாங்கின்னு வா…” என்று பணத்தை எடுத்து நீட்டியவன்,

“போக்கா.. அங்கயே இளநிக்காரன் இருப்பான்…” என, செல்வி அவனை வித்தியாசமாய் பார்த்தார்.

“என்னக்கா?! பாத்துன்னு இருக்க.. பைரவிக்கு நான் பணம் வேற குடுக்கணும்.. வந்து குடுக்கலாம்னு நினைச்சேன்..” என,

“அப்போ ஒன்னு பண்ணு.. நீ போ.. நான் வர்ற வரைக்கும் இரு…” என்று செல்வி வேகமாய் சொல்ல, இதைத்தானே எதிர்பார்த்தான் அவனும்.

“ம்ம் சீக்கிரம் வந்து சேருங்க…” என்றுவிட்டு, இன்னொரு வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான் சிவா.

அவனுக்கு மனது ஒரு நிலையில் இல்லை. தான் அப்படி பேசியிருக்கக் கூடாது என்பது ஒருபுறம் இருந்தாலும், காலையில் இருந்து அவளே அழைக்கட்டும் என்று பிடிவாதமாய் இருந்தது தவறோ என்று எண்ணிக்கொண்டே அவள் வீடு நோக்கி போக, செல்வி வெறுமெனே தான் கதவினை லேசாய் சாற்றிவிட்டு வந்திருக்க, பைரவி வந்து ஹால் சோபாவில் தான் சாய்ந்து படுத்திருந்தாள்.

திடீரென்று வாழ்வு மீது ஒரு பிடிப்பே இல்லாதது போல இருக்க, எதற்காக இது அனைத்தும் என்ற பெரிய கேள்வி வேறு அவள் முன்னே புதிதாய் வந்து நின்றது.

திறமை, படிப்பு, அழகு, வசதி என்று எல்லாம் இருக்கிறது அவளுக்கு. ஆனால் மனதில் இருக்கும் இந்த வெறுமையோ அவளை ஆட்டிப்படைக்க “ம்ம்ச்…” என்று ஒரு சலிப்போடு கண்கள் மூடியிருந்தவளை கண்டவனுக்கு உள்ளம் பிசைந்தது.

‘என்னடா சிவா இப்படி பண்ணிட்ட நீ..?’ என்று எண்ணியவன், மெதுவாய் சோபாவின் கீழ் அமர,  யாரோ வந்தமரும் அரவம் கண்டு பைரவி கண் திறக்க, அவளுக்கு வெகு அருகில் கீழே சிவா அமர்ந்திருப்பது கண்டு, வேகமாய் எழுந்தமர்ந்தாள்.

எழுந்தமார்ந்தவள் எதுவும் பேசாமல், அவனைப் பார்க்க, சிவாவோ முந்தைய நாள் கோபமெல்லாம் மறந்து “முடியலைன்னா எனக்கு கால் பண்ண என்ன பைரவி?” என்றான் ஆதுரமாய்.

அப்போதும் அவள் பேசவில்லை. அவனை வெறுமெனே பார்த்து இருக்க  “என்னாச்சு உனக்கு? மறுபடி வயிறு வலிக்குதா?” என, அதற்கும் பதில் சொல்லாமல் அவள் அமைதியாய் பார்க்க,

“ஏ பைரவி.. உன்னத்தான் கேக்குறேன்…” என்றான் கொஞ்சம் அதட்டலாய்.

பைரவியோ நிறுத்தி நிதானமாய் “உ.. உங்க கோபம் போயிடுச்சா?” என்று மெல்ல கேட்க,

“எ.. என்ன?” என்றான் சிவா இப்போது திணறி.

“உங்க கோபம் போயிடுச்சா சிவா?” என்று இப்போது மீண்டும் பைரவி கேட்க, அவள் முகத்தையே ஆழ்ந்துப் பார்த்தவன், வேகமாய் தன் தலையில் தட்டிக்கொண்டான்.

‘முட்டாள்.. முட்டாள்…’ என்று முணுமுணுத்து

“லூசா டி நீ.. நான்.. நான் என்னவோ சொன்னா அதுக்கு இப்படிதான் வந்து படுத்துப்பியா? நான் அப்படிதான் ஊருக்கு போவேன்னு என்கூட சண்டை போட மாட்டியா?” என்று கேட்க, பைரவி விழி விரித்துப் பார்க்க,

“என்ன பாக்குற நீ? நா.. நான் நேத்து என்னவோ கோபத்துல போகாதன்னு சொல்லிட்டு போயிட்டேன்.. அதுக்காக நீ இப்படியே இருந்துப்பியா? இந்த சான்ஸ் உனக்கு அடுத்து கிடைக்குமா? இப்போ பாரு உடம்பும் முடியலை..” என்று வருந்தியவன், வேகமாய் அவளது கரத்தினை எடுத்து இறுகப் பற்றிக்கொண்டவன்

“ஏன் பைரவி..?” என்று அவள் விழிகளைப் பார்த்து கெஞ்சுவது போல் பேச,

“எ.. எனக்குத் தெரியலை…” என்றாள் பாவம் போல.

“என்ன தெரியலை?!”

“இல்ல.. எனக்கு.. எப்படி நடந்துக்கணும்னு தெரியவே இல்லை.. ஹாஸ்டல்ல வளர்ந்துட்டேன்.. இதுவரைக்கும் எனக்கு உறவுகள் கூட பழகி பழக்கமில்லை.. என் பிரண்ட்ஸ் பேரன்ட்ஸ் எல்லாமே என்னை ஸ்பெசலா தான் ட்ரீட் பண்ணுவாங்க. இப்போ வரைக்கும் கூட. ஆனா.. எனக்கு நிஜமா ஒரு குடும்பத்துல.. நமக்கு நெருக்கமானவங்கக் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியலை.

நீங்க அப்படி சொல்லவுமே, எனக்கு எதுவுமே யோசிக்க முடியலை. அப்படியே போய் படுத்துட்டேன். நான் மறந்துட்டேன்னு சொன்னதும் தப்புதானே.. ஆனா எனக்கு பொய்யாவும் எதுவும் பேச வரல…” என்று அவள் மனதில் இருப்பதினை எடுத்துச் சொல்ல,

“ஷ்..! இப்போ ஏன் இப்படி டென்சன் ஆகுற நீ…” என்றான், மெதுவாய் சோபாவில் அவளருகே அமர்ந்து.

“டென்சன் ஆகல.. ஆனா எனக்கு சொல்லத் தெரியலை நிஜமா..” என்றாள்.

“ம்ம் நா.. நானும் நீ போனே எடுக்கலைன்னு கொபமாகிட்டேன்…” என்றவன் “டாக்டர் கிட்ட எதுவும் போகனுமா ?” என,

“வேணாம்…” என்றாள் வேகமாய்.

“முடியலைன்னா போயிட்டு வரலாம் பைரவி…” என,

“ம்ம்ஹூம்…” என்றவள் “நா… இப்.. இப்படி உங்க கை பிடிச்சு.. உங்க தோள் மேல சாஞ்சுக்கவா?” என்றவள் அவன் கண்களை மட்டுமே பார்த்து.

சிவாவிற்கு நொடியில் உள்ளம் பாகாய் உருகிப் போனது.

“இது உனக்கு மட்டுமான இடம்.. என்னை கேட்கனும்னு எல்லாம் இல்லை…” என்றவன், மேலும் அவளை நெருங்கி அமர, பைரவி சொன்னதுபோலவே, அவன் கரத்தினை இறுகப் பற்றிக்கொண்டு, அவன் தோள்மீது சாய்ந்துகொண்டாள்.

இருவருக்கும் பேச்சே இல்லை அடுத்து. பைரவி அப்படியே சாய்ந்திருக்க, சிவாவிற்கு அவளது நிலை நன்கு புரிந்தது. முதலில் வீடு கட்டி முடிக்கவும், வீட்டினில் பேசி, எத்தனை சீக்கிரத்தில் பைரவியை தன்னோடு, அழைத்துக்கொண்டு செல்லவேண்டுமோ அதனை செய்திட வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

நேரம் கடந்து செல்ல செல்ல, சிவா யோசித்தவன் சிந்துவிற்கு அழைத்து “என்னடா பண்றீங்க?” என்று கேட்க,

“ண்ணா இந்த செல்வியக்காவ கடைக்கு இட்டாந்தது ரொம்ப தப்புண்ணா. நானே பார்த்து வாங்கின்னு வந்திருப்பேன்…” என்றான்.

“ஏன் டா?”

“பின்ன… இன்னும் பழம் வாங்கல..” என,

“சரி சரி.. பார்த்து வாங்கின்னு வாங்க…” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு, பக்கவாட்டில் பைரவியைப் பார்க்க, அவளோ அவன் தோள் மீது சாய்ந்தவள் அப்படியே உறங்கியும் போனாள்.

‘என்ன தூங்கிட்டா…’ என்று பார்த்தவன் “பைரவி…” என்று மெதுவாய் அழைக்க, அவளிடம் பதிலே இல்லை..

‘நைட்டெல்லாம் தூங்கல போல…’ என்று எண்ணிக்கொண்டே, மெதுவாய் அவளை தன்னருகே இருந்து விடுவித்து, சோபாவிலேயே படுக்கச் செய்தவன், அவள் கால்களை எடுத்து தன் மடிமீது வைத்துக்கொண்டான்.

என்னவோ அவனுக்குமே, இப்படியே அவள் கால்களை தாங்கியபடி சாய்ந்து உறங்கிடலாம் என்பது போல் மனது ஆசைகொள்ள, ஆனால் அதற்கான நேரமா இது?!

எப்போது வேண்டுமானாலும் செல்வியும் சிந்துவும் வரலாம் இல்லையா. இருந்தும் அவனுக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை விடுவேனா என்று அவனது மனது சண்டித்தனம் செய்து, பைரவியை ரசிக்கச் செய்ய, அவன் மடி மீதிருந்த அவளது வெண் பாதங்களைப் பார்த்தவனுக்கு மெதுவாய் அதனை வருடிப் பார்க்கும் ஆசை பிறக்க, ஆசைப்பட்டதை செய்துப் பார்த்தது சிவாவின் கை விரல்கள்.

பைரவியோ அந்த நல்லுறக்கதிலும், கால் கூசி லேசாய் சுறுக்க ‘ஷ்..! ஷ்..!’ என்று லேசாய் பதறி தானே சொல்லிக்கொண்டவன் “தூங்கு.. தூங்கு…” என்று மென்மையாய் அவளது கரம் மீது தன் கரம் வைத்து அழுத்த, பைரவியின் இதழ்களோ அழகாய் வளைந்து புன்னகை சிந்தி, கண்கள் மெல்ல திறந்துப் பார்த்தாள்.

“ஏய்..! நீ தூங்கலையா?!” என்று சிவா கேட்க,

“அதெப்படி தூக்கம் வரும்…” என்றவள், நேராய் அவனைப் பார்த்து கேட்க,

“நீ தூங்கிட்டு தானே இருந்த…” என்றான் வேகமாய்.

“ம்ம் நான் இப்படி உங்கமேல சாஞ்சு தூங்கிட்டா நீங்க என்ன செய்வீங்கன்னு தோணிச்சு. அதான்…” என்றாள் தயக்கமாய் இழுத்து, அவனை ஒரு அட்டப் பார்வை பார்த்து.

“அதுசரி…” என்று சொல்லிக்கொண்டவன் “பிராடு…” என்று செல்லமாய் அவளை கடிய,

“ம்ம்… இந்த கால் தொடுற சீன் எல்லாம் நிறைய படத்துல வந்திடுச்சு தெரியுமா?” என்றாள், இன்னும் அவன் மீது கால் வைத்தபடி.

“நிஜத்துல இருக்கிறதை தான், படத்துல எடுக்கிறாங்க…” என்ற சிவா, மீண்டும் அவள் பாதங்களை வருடி, மெதுவாய் பிடித்துவிட, இமைகள் மூடி அதன் சுகத்தை ரசித்தவள்,

“போதும்…” என்றாள் கொஞ்சமே நெளிந்து.

“ஏன்?!” என்றவனுக்குமே உடலும் மனதும் ஏதோ செய்ய,

“போதும்னா விடுங்களேன்…” என்றவள், கால்களை எடுத்துவிட்டு, தானும் எழுந்து அமர்ந்துவிட,

“நிஜமா தூங்கின மாதிரியே இருந்தது…” என்றான், மெதுவாய் அவளது கேசத்தினை ஒதுக்கி.

“ம்ம்.. தூக்கம் தான் வருது.. ஆனா எனக்கு இப்போ மனசுக்கு எவ்வளோ நல்லமாதிரி இருக்குத் தெரியுமா?” என்றாள் கண்களில் காதலை காட்டி.

“ம்ம் ஆனா எனக்கு குற்ற உணர்வா இருக்கு…” என்று சிவா சொல்ல,

“ஏன்? என்னாச்சு?” என்றாள் வேகமாய்.

“பின்ன நீ இந்நேரம் கோவால இருந்திருக்கணும். நான் என்னவோ கோவத்துல பேசி…” என்று சிவா ஆரம்பிக்க, அவனது வாய் மீது விரல் வைத்தவள்,

“நாளைக்கு ட்ராக் பாட வரச் சொல்லி இருக்காங்க.. கன்பார்ம் ஆச்சுன்னா, அடுத்த வாரம் ரிக்கார்டிங்.. என்னோட கனவு நனவாகப் போற நாள் அது.. இந்த பார்ட்டி, பங்க்சன்ஸ் எல்லாம் எப்போன்னாலும் நடக்கும்.. சோ இதுல உங்க தப்பு எதுவுமில்ல. எனக்கே முதல்ல அப்படியொண்ணும் இன்ரஸ்ட் இல்ல. அவாய்ட் பண்ணவும் முடியாதேன்னு பார்த்துட்டு இருந்தேன்…” என்று அவனை சமாதானம் செய்யும் விதமாய் பேச,

அவள் பேசுவதையே பார்த்துக்கொண்டு இருந்தவன், எழுந்து நின்று அவளது தலையை இரு கைகளாலும் பற்றி, லேசாய் ஆட்டி “ஆனாலும் நீ எப்படி அப்படி சொல்லலாம்னு என்னோட சண்டையாவது போட்டிருக்கலாம் டி பைரவி…” என்று சங்கடமாகவே பேச, அமர்ந்தபடியே அவனைப் பார்த்தவள், மெதுவாய் அவன் கரம் விளக்கி, அவன் வயிற்றோட்டு கை போட்டு, அணைப்பது போல் செய்தவள், அவன் வயிற்றின் மீதே முகம் புதைத்துக்கொண்டாள்.

அவளின் செய்கையை பார்க்கையில் சிவாவிற்கு தான் சிறுவயதில் அவன் அம்மாவிடம் இப்படித்தான் செய்வது போல் இருக்க, அவனையும் மீறி அவனது கரம் பைரவியின் தலையை வருட “போயிருந்தா, இந்த மொமன்ட்ஸ் எல்லாம் நமக்கு கிடைச்சிருக்காது…” என்றாள் மெல்ல முணுமுணுத்து.