சுபி, கருணாவை பார்த்துவிட்டு மீண்டும் நொந்துக் கொண்டாள்.. இவன்கிட்ட வேற விளக்கம் சொல்லணும்.. என்ன நினைச்சிகிட்டானோ.. எப்படி பார்ப்பது கரனை.. என எண்ணி அவஸ்த்தையாக அமர்ந்திருந்தாள் பெண். 

கருணாவும் இவளை பார்த்துவிட்டான்.. அவனுக்கும் உள்ளே இருந்தது ‘என்னை எப்படி நினைச்சிட்டா.. ப்லோட் பண்றவன் மாதிரியா தெரியுது என்ன பார்த்தால்’ என ஒரு வருத்தம், அதான் அவளிடம் பேசவேயில்லை, அதன்பிறகு. 

இப்போது சுபியை இங்கே பார்க்கவும், தனியே வந்திருப்பதை பார்க்கவும்.. சட்டென பார்க்காமல் போக அவனுக்கு வரவில்லை.. தன்னோடு வந்தவர்களை இருக்க சொல்லிவிட்டு சுபியின் எதிரே வந்து நின்றான்.

அமர்ந்திருந்த சுபியின் எதிரே எதிர்பாராதவன் போல வந்து நின்றான் கருணா. நின்றிருந்த கருணாவை பார்க்க.. நிதானமாக விரிந்து உயர்ந்தது.. அவளின் குடைஇமைகள். குடைவிலகியதும் கண்ணின் கருவிழிகளில் லேசான நீர் படலம். இமைக்க மறந்த அவளின் விழிகளில் கருணாவின் முழு பிம்பம். கருணாவிற்கும்.. விரிந்து ஆழ்ந்து.. நீர் படலத்தோடு தன்னை  நோக்கும் கண்களில்.. என்ன சோகமென  தெரியாமல் மௌனியானான்.

அவள் பேசவில்லை எனவும்  கருணா, புருவம் உயர்த்தி “என்ன தனியாவாக வந்த சுபி” என்றான்.

சுபிக்கு இந்த வார்த்தை.. இன்னமும் பாரமேற்றியது போலாக.. “ஏன், வரக்கூடாதா” என்றாள்.

கருணா இலகுவாகி “இல்ல, தெரியாமல் கேட்டேன்.. ஆர்டர் செய்துட்டியா” என்றான்.

சுபி தலையாட்டினாள்.. அடுத்து என்ன பேசுவதென தெரியவில்லை இருவருக்கும்.. கருணா “சரி, நான் கிளம்புகிறேன்.. நீ பாரு” என சொல்ல சொல்ல..

சுபிக்ஷாவிற்கு, மனதில் ஓடிக் கொண்டிருந்த விஷயத்திற்கு விளக்கம் சொல்லிடலாம் என தோன்ற.. சுபி “கரண் ஒருநிமிஷம், அக்கா சொன்னால்.. எல்லா ஏற்பாடும் நீங்கதான் செய்தீங்கன்னு. தேங்க்ஸ் கரண். அம்மா ப்பா.. அங்க கிளம்பிட்டாங்க, தெரியுமில்ல.. அக்கா சொல்லியிருப்பா” என விடையும் தானே சொல்லிக் கொண்டு எப்படி சாரி சொல்லுவது என யோசித்துக் கொண்டிருந்தாள்.

கருணா அமர்ந்தான் “அக்காகிட்ட பேசினேன், அவ சொன்னால், உன் அப்பாவும் வந்து சொன்னார். தேங்க்ஸ் நிறைய சொல்லிட்டீங்க, நீயும் சொல்லனுமா.. போதும்.” என்றான் விரிந்த புன்னகையோடு.  

சுபி அந்த புன்னகையில் ஈர்க்கப்பாட்டாள் “எனக்குதான் ஒரே ஹெசிடேட்டா இருந்தது.. உங்களை, நீங்க கூப்பிடும் போது.. உங்களை கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேனோன்னு..” என்றாள், தயங்கிய குரல் என்றாலும்.. அவனின் இலகு பாவனையில், தன்னை புரிய வைத்திட வேண்டும் என எண்ணம் வந்துவிட்டது சுபிக்கு.

கருணாவின் புன்னகை.. நின்றது அவனுக்கு வருத்தம் தானே.. ஆனால், அதை எப்படி சொல்லுவது என தெரியாமல்.. “க்கும்.. ஒரு அர்ஜென்ட் வொர்க், அதனால் வந்தேன். நாம் அப்புறம் பேசலாமா? நான் கூப்பிடவா.. ம்.. கூப்பிடவா..” என்றான் அவளின் கண்களை பார்த்து.

சுபிக்கு கண்களின் நீர்படலம்.. நீர்திரையாக மாறியது சட்டென.. இவன் மனதில் வைத்திருக்கிறான்.. என தோன்றிவிட்டது. என்னமோ ‘நான் அப்படியில்லை.. எனக்கான ஒரு அனிச்சையான பயத்தில் அப்படி பேசிவிட்டேன்’ என உள்ளே கதறியது மனம்.. ஏனென்றே தெரியாமல். “ம்..” என்றாள் இயல்பாக்கிக் கொண்ட முகத்தோடு.. காட்டன் புடவையில் அமர்ந்த்தளாக ஒரு பதில் சொல்லிவிட்டாள்.

பார்க்கவே கருணாவிற்கு என்னடா இது என இருந்தது.. கருணா “பை..” என்றான் வசீகரமாக. விடைபெற்று கிளம்பினான். ஆனால், அவளின் கண்கள் அவனுள் பதிந்து போனது.

சுபி, ஒரு பெருமூச்சுவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்  பொறுமையாக அமர்ந்து காபி பருகிவிட்டு தன் சிந்தனைகளை கொஞ்சம் அமைதியாக்கிவிட்டு கிளம்பினாள். 

அந்த வார இறுதியில் குரு, வீடு வந்துவிட.. விசாகன் இன்னமும் வந்திருக்கவில்லை போல அவர்கள் சென்டரிலிருந்து. குரு ஓய்ந்து போனான்.. எப்போதும் வாசலிலேயே பார்ப்பவனை இந்தமுறையும் பார்க்க முடியவில்லை என சலித்து போனது குருவிற்கு. இன்று அவனின் தந்தைதான் அழைத்துக் கொண்டு வந்தான். கீழே இறங்கிய மகனின் சலித்த முகம் பார்த்து கருணா “என்ன குரு” என்றான்.

மகன் “இப்பவும் விசாகன் இல்லைப்பா.. அவங்க அம்மா விளையாட அனுப்பமாட்டேங்கறாங்க.. அவனை கிளினிக்கில் வைச்சிக்கிறாங்க ப்பா.. எனக்கு எனக்கு.. பிடிக்கலை” என்றான்.

கருணாவிற்கு, சுபியின் தெளிவில்லா முகம் இப்போதுதான் ஞாபகம் வந்தது.. வேலைபளு காரணமாக அழைக்க மறந்திருந்தான். இப்போது மகன் பேசவும்.. “சரி, நாம போய் உன் பிரெண்டை பார்க்கலாமா” என்றான், குதூகலமாக.

குரு “ம்.. முடியுமா” என்றான்.

தந்தை “முடியாமல் என்ன” என சொல்லி.. போனில் சுபிக்கு அழைத்தான்.

சுபி அழைப்பு முடிந்து ஒரு ரெண்டுநிமிடம் சென்று தானே அழைத்தாள்.. “ஹலோ கரண்” என்றாள்.

கருணா.. குருவிடம் ‘பேசு’ என சைகை செய்தான் தந்தை. குரு “ஹலோ ஆன்ட்டி, நான் குரு, நானும் அப்பாவும் உங்க கிளினிங் வந்துட்டு இருக்கோம்.. அப்பாக்கு வழி தெரியலை.. மேப் சென் பண்ணுங்க ஆன்ட்டி.” என்றான்.

சுபிக்கு எதற்கு என தெரியணுமே “என்னாச்சு குரு, உடம்பு சரியில்லையா” என்றாள்.

குரு “இல்ல ஆன்ட்டி, விசாவை பார்க்க வரோம். நானும் அவனும் விளையாடவே இல்ல.. ரொம்ப நாளாச்சு.. ப்ளீஸ் ஆன்ட்டி” என கெஞ்சியது குழந்தை.

சுபி புன்னகையோடு “ஹோ.. சாரி டா, அவனை தனியா விடமுடியாதுல்ல.. சரி வாங்க.. உங்க டாட்கிட்ட கொடு.. நான் ரூட் சொல்லிடுறேன்.. அவருக்கு தெரியும்.. மேப் எல்லாம் வேண்டாம்” என்றாள்.

கரண் “சொல்லு சுபி” என்றான். பெண்ணவள் வழி சொன்னாள்.. தூரமெல்லாம் இல்லை.. அவனுக்கு தெரிந்த இடம்தான்.

மேலே அவளின் இடம். குரு கார் நின்றதும் மேலே வந்துவிட்டான். விசாகனும் குருவும் சேர்ந்து கத்தினர்.. “ஹேய்..” என முதலில். பின் இருவரும் யாரையும் கண்டுக் கொள்ளாமல்.. எதோ பேசிக் கொண்டே.. விசாகன் ஹோம் வொர்க் செய்துக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றுவிட்டனர்.

கருணா வந்தான்.. உள்ளே ஒரு அறையில் முதிய பெண்மணி இருவர் பயிற்ச்சியில் இருந்தனர். சுபி, தன் அறையிலிருந்து எழுந்து வெளியே வந்தாள்.. “வாங்க கரண்” என சொல்லி தன்னறைக்கு கூட்டி சென்றாள்.

கருணா “ப்பா.. பிசியோதானே, எதோ காபிஷாப் மாதிரி இருக்கு..” என கிண்டல் செய்தான்.

சுபி “அப்படியா தேங்க்ஸ். டீ குடிக்கிறீங்களா” என கேட்டு பிளாஸ்கில் இருந்து இரண்டுகப் டீ ஊற்றினாள். அவனுக்கு ஒன்று கொடுத்துவிட்டு, தான் ஒன்று எடுத்துக் கொண்டாள்.

கருணா “அன்று பேச முடியலை..” என தொடங்கினான்.

சுபி “அஹ.. அது.. அது பரவாயில்ல. “ என சொல்லி அமைதியாகினாள்.

கரண்தான் முதலில் விளக்கம் சொன்னான் “அது.. எனக்கு உன்னை தெரியும் என்பதால்.. ஒரு.. எப்படி சொல்றது.. ம்.. உரிமையில் அந்த நேரத்தில் கூப்பிட்டுட்டேன். அப்புறம்தான் யோசிச்சேன். நீ பேசினதில் ஒன்னும் தப்பில்லை. உன்னைபற்றி சங்கீதா சிலவிஷயம் சொன்னாளா.. அதெல்லாம் கேட்டதும்.. நீ இப்படிதான் இருப்பேன்னு புரிந்தது.” என சொல்லி நிறுத்தினான்.

சுபி தயக்கத்தோடு “அக்கா சொன்னாளா.. என்ன சொன்னா” என்றாள்.

கருணா “பெருசா ஒண்ணுமில்ல.. உன் வாழ்க்கை சீக்கிரமே ஆரம்பித்து சீக்கிரமே முடிந்தது என வருத்தப்பட்டாள். எல்லாத்துக்கும் பயப்படறா.. என்றாள் அவ்வளவுதான்” என சொல்லியவன் “உன் ஆபீஸ் சூப்பரா இருக்கு” என பேச்சினை மாற்றினான்.

சுபி “ஆபீஸ் இல்ல இது.. பிசியோ சென்டர்.” என்றாள். ஒருவர் வந்து சுபியை அழைக்க.. சுபி “இருங்க, வந்திடுறேன்” என சொல்லி வெளியே வந்தாள்.

முதியவரோடு சற்று பேசி அவருக்கு தேவையான டிப்ஸ் கொடுத்தாள். பின், வேலை செய்பவர்கள் கிளம்ப தொடங்கினர். இப்போது இறுதியாக ஒருவர் பூட்டிக் கொண்டு செல்லுவார். அந்த பணியாளார் காத்திருக்க.. 

சுபி உள்ளே வர.. கருணா பிள்ளைகளோடு தயாராக நின்றான்.. “நாங்க முன்னாள் போறோம்” என்றான்.

விசாகன் “ம்மா.. குரு ரூமில் இருக்கேன்.. நீ வாம்மா” என்றான்.

கருணா புன்னகைத்து கீழே இறங்கினான்.

சுபி, மகனிடம் “சமர்த்தா இரு.. நான் சீக்கிரம் வந்திடுறேன்” என சொல்லி அனுப்பி வைத்தாள்.