அத்தியாயம் -7(2)
“அதெப்படி தாத்தா நான் கூப்பிட்டா உடனே வந்திடுவாங்களா அந்த பொண்ணு?” சலிப்பாக கேட்டான்.
“முறையா கல்யாணம் பண்ணி இங்க முழு உரிமையும் உள்ளவளா அழைச்சிட்டு வா. அவ மூலமா இந்த வம்சம் தழைக்கும்”
“விளையாடுறீங்களா? மேரேஜ் என்ன சின்ன விஷயமா? எதுவும் தெரியாம யாரோ ஒரு பொண்ணை எப்படி கல்யாணம் செய்வேன்? இது என் லைஃப் விஷயம் தாத்தா” என அவர் சொன்னதற்கு மறுப்புதான் தெரிவித்தான்.
“நீ கல்யாணம் செஞ்சுக்கலைனா அந்த பொண்ணு வழியா நம்ம வம்சம் எப்படி விருத்தியாகும் சர்வா?” என தாத்தா கேட்டதற்கு விழித்தான்.
“அதுக்காக நான் யாரையோ கல்யாணம்…” தயங்கினான்.
“உன் ஒருத்தன் வாழ்க்கைய பார்க்குறியே, இனி வரப் போற எல்லா வாரிசுகளுக்காகவும் யோசி” அமைதியாக சொன்னார்.
அதெப்படி முன்ன பின்ன தெரியாத யாரையோ தன் வாழ்க்கை துணையாக ஏற்பது என தனக்குள் முரண்டு பிடித்தவன், “அதெல்லாம் சரியா வராது தாத்தா” என சொல்லி சென்று விட்டான்.
ஆனால் அதற்கு பின் தாத்தா சொன்ன விஷயங்கள் மட்டும்தான் அவனது மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
பிரதீப்பை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தனர். வீட்டிற்கே வந்து பாடம் படிப்பிக்க ஆள் ஏற்பாடு செய்து கொண்டனர்.
பிரதீப்பின் தம்பி நான்காம் வகுப்பு படிக்கிறான், அவன் நன்றாகத்தான் இருக்கிறான். ஆனால் விளையாடும் போது தவறி கீழே விழுந்தால் கூட அவனுக்கு என்னவானதோ என பதறிப் போனான் சர்வா.
நம்பியின் இரண்டாவது மகன் குடும்பத்தோடு பெங்களூருவில் வசிக்கிறான். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தைப்பேறு இல்லை. அவர்களாக தள்ளிப் போட்டிருப்பது தெரியாமல் அதற்கும் அந்த சாபம்தான் காரணமோ என கற்பனை செய்து கொண்டான்.
தன் அண்ணனோ தம்பியோ வெளியூர் பயணங்கள் சென்றால் ஆயிரம் முறை பத்திரம் சொன்னான். நடு இரவில் அம்மா நன்றாக இருக்கிறாரா என அவரது அறைக்கு வந்து பார்த்து செல்கிறான்.
அவர்களுடன்தான் மனநலம் பாதிக்க பட்ட அவனது சித்தப்பா இருக்கிறார். அவரை காணும் போதெல்லாம் இந்தக் குடும்பத்தில் இனி யாராவது இப்படி பிறந்து விட்டால்? என்ற கேள்வி அவனை அச்சுறுத்தியது.
எதிலேயும் கவனம் வைக்க முடியாமல் சரியான உறக்கமில்லாமல் தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்பதை எண்ணி எண்ணியே நிம்மதியை இழந்தான்.
எதுவும் செய்யாமல் இருப்பதற்கு பதிலாக எதையாவது செய்து பார்க்கலாமே என தீர்மானித்தான். தான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதால் தன் குடும்பத்துக்கு வழி பிறக்கும் என்றால் செய்து கொள்கிறேன் என்ற முடிவுக்கு வந்தான்.
சதானந்தம் தாத்தாவின் முன் போய் நின்று அவனுடைய சம்மதத்தை சொன்னான்.
“நல்லது, இனி நல்லதே நடக்கட்டும்” என்றார் தாத்தா.
“அவங்க வம்சாவழில நிறைய பொண்ணுங்க இருப்பாங்க, யாரைன்னு பார்த்து கல்யாணம் செய்றது தாத்தா?” எனக் கேட்டான்.
“சாமுண்டீஸ்வரி உன்னை வழி நடத்துவா, அந்த பொண்ணை உனக்கு கண்ணுல காட்டுவா” என தாத்தா சொல்ல சரியென்றான்.
“நல்லா கேட்டுக்க, அந்த பொண்ணை துன்புறுத்தாம அதோட சம்மதத்தோடு இங்க அழைச்சிட்டு வரணும். நீயும் ஒரு தப்பை செய்திடாம கவனமா இரு” என்றார்.
‘நான் கேட்ட உடனே என்னை கல்யாணம் பண்ணிக்க எல்லா பொண்ணுங்களும் ரெடியா இருக்குமா? என்னவோ பண்ணி அழைச்சிட்டு வர்றேன், தப்பு செஞ்சாலும் சரி செய்திடுவேன்’ என மனதில் நினைத்துக்கொண்டே தாத்தாவிடம் தலையாட்டிக் கொண்டான்.
செண்பகவள்ளியின் பூர்வகுடிகள் குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இருப்பதை தெரிந்து கொண்டான். குன்னூரில் நாகா ரெட்டி இருப்பதால் தன் காரியத்தை சாதித்துக் கொள்ள அங்கு சென்றால் தனக்கு வசதியாக இருக்கும் என்பதால் குன்னூரில் யார் இருக்கிறார்கள் என பார்த்தான்.
முதலில் மித்ரா பற்றிய விவரம்தான் அவனுக்கு தெரிய வந்தது. அதிகம் குழப்பிக் கொள்ளாமல் அவளையே தன் மனைவியாக்கிக் கொள்வது என முடிவு செய்தான்.
அவனுடைய அப்பாவை பெற்ற தாத்தா அறிவானந்தத்தை சந்தித்தான். முன்னாள் அமைச்சராக இருந்தவர் இப்போது அரசியலில் இருந்து முற்றிலும் விலகி விட்டார்.
அந்தக் குடும்பத்துக்கு நிறைய தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுக்கு இன்னும் இவரே சேர்மனாக நீடிக்கிறார். பல வருடங்களாக அவருக்கு பணி செய்த காரியதரிசி இன்னும் அவருடனே இருக்கிறார்.
அவரது அண்ணன் சொல்வதில் அவருக்கும் பெரிதாக நம்பிக்கை இருந்தது இல்லை. இப்போது பேரனும் அதையே சொல்ல யோசித்தார். பேசி பேசியே தன் வழிக்கு கொண்டு வந்து விட்டான் சர்வா.
தன் காரியதரிசியை அழைத்து சர்வாவுக்கு வேண்டியது செய்து கொடுக்கும் படி கூறினார். சர்வா கேட்டுக் கொண்டதன் படி நாகாவை இவனுக்கு உதவும் படி செய்து கொடுத்தார் காரியதரிசி.
தொழிலில் தனது பொறுப்புகளை கவனிக்க நம்பகமான ஆட்களை நியமித்தான். ஏதோ கோர்ஸ் படிக்க ராஜஸ்தான் செல்வதாக வீட்டினருக்கு சொல்லி விட்டு குன்னூருக்கு புறப்பட்டு விட்டான். திட்டமிட்டு மித்ராவை தன்னை காதலிக்க வைத்தான்.
திருமணத்தின் போது கூட, ‘ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்கிறேன், ஆனால் சத்தியமாக திருமணத்திற்கு பின் என் மனைவியை ஏமாற்ற மாட்டேன்’ என தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான்.
சர்வாவும் அறிவுடைநம்பியும் காலை உணவுக்காக அமர்ந்தனர். அவனால் சரியாக சாப்பிட முடியவில்லை. மித்ரா என்ன முடிவு செய்வாள் என்பதிலேயே உழன்று கொண்டிருந்தான்.
“இப்ப தவிச்சு என்னடா பிரயோஜனம்? முன்யோசனை இல்லாத அவசரக்காரன்டா நீ, என்னால முடிஞ்ச அளவுக்கு பேசுறேன் நான், நல்லதே நினை. இப்போ சாப்பிடு” என அவனை அதட்டி சாப்பிட வைத்தார் நம்பி.
ராஜனின் நெருங்கிய உறவுகள் கைப்பேசி அழைப்பு மூலம் அவரது நலனை விசாரித்துக் கொண்டனர். தங்களின் முடிவுப்படி திருமணம் நடக்க வேண்டும் என்பதையும் அழுத்தி சொன்னார்கள்.
இந்திரஜித் அவனது வீட்டுக்கு சென்று விட்டான். மிருதுளாவுக்கும் சஞ்சய்க்கும் கூட பழைய கதையை சொல்லியிருந்தனர். இருவருமே குழம்பிப் போன மன நிலையில் இருந்தனர்.
காலை பத்து மணி போல சர்வாவும் நம்பியும் மித்ராவின் வீட்டுக்கு வருகை தந்தனர். கதவை திறந்து விட்ட சஞ்சய் அப்பாவிடம் சொல்ல உள்ளே ஓடிச் சென்றான். உள்ளே நுழைய முயன்ற சர்வாவின் கையை பிடித்துக் கொண்டார் நம்பி.
“என்ன அவசரம்? அவங்க கூப்பிட்டதும் போலாம்” என்றார்.
அருகிலுள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியிருந்த மித்ரா அவர்களை பார்த்து விட்டு திகைத்து நின்றாள்.
வாயில் அருகில் அவர்கள் நின்றதால் உள்ளே செல்லாமல் வீட்டின் பக்கவாட்டு பகுதிக்கு சென்றாள் மித்ரா. பெரியப்பாவிடம் பார்வையால் சொல்லி விட்டு அவளைத் தொடர்ந்து சென்றான் சர்வா.
பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் சென்று விடலாம் என நினைத்துக் கொண்டே நடந்தவளின் கையை பற்றினான். உருவிக் கொண்டவள், “ஏன் வந்தீங்க? இன்னும் என்ன பொய் சொல்லி ஏமாத்த வந்திருக்கீங்க?” என கோவமாக கேட்டாள்.
அதற்குள் ராஜன் நம்பியை உள்ளே வர சொல்லி அழைக்க, “சர்வா…” என தன் தம்பி மகனையும் கூப்பிட்டார் நம்பி.
“உன்னை என் மனைவியாக்கிக்க வேற வழி தெரியாம பொய் சொன்னேன், நம்ம கல்யாணம் பொய் இல்லை, என் கடைசி மூச்சு வரை உன்னை நல்லா பார்த்துக்கணும்னு எனக்கு நானே சத்தியம் பண்ணிக்கிட்டுதான் உன் கழுத்துல தாலி கட்டினேன். உள்ள கூப்பிடுறாங்க நீயும் வா, நான் எக்ஸ்பிளைன் பண்றேன்” என சொல்லி அவளின் கையை பிடித்து அவளையும் அழைத்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றான்.
அவனிடமிருந்து விடுவிக்க முடியாத படி அவனது பிடி இறுக்கமாக இருக்க வேறு வழியின்றி அவனுக்கு உடன்பட்டு நடந்தாள்.
கைப்பிடித்துக் கொண்டு வரும் இருவரையும் மற்றவர்கள் வெவேறு யோசனைகளோடு பார்த்திருந்தனர்.
ஹாலுக்கு வந்த பின் சர்வாவின் பிடி தளர, தன்னை விடுவித்துக் கொண்ட மித்ரா அப்பாவின் அருகில் போய் நின்று கொண்டாள்.
சர்வா மட்டும் தனித்து வந்திருந்தால் கோவத்தில் அவனை என்னவும் செய்திருப்பார் ராஜன். நம்பி யாரென தெரிந்ததால் அவருக்குண்டான மரியாதையை குறைவில்லாமல் கொடுத்தவர் சஞ்சயையும் அமைதியாகவே இருக்க சொன்னார்.
“எங்க வீட்டு பையனை மன்னிக்கணும்” கையெடுத்து கும்பிட்ட படிதான் ஆரம்பித்தார் நம்பி.
மன்னிப்பதால் என்ன நடக்கும்? என் மகளின் வாழ்க்கை கிள்ளு கீரையாக போயிற்றா? எது வேண்டுமென்றாலும் செய்து விட்டு மன்னிப்பு கேட்டு விட்டால் சரியாகி விடுமா என குமுறி விட்டார் ராஜன்.
தன் பெண்ணை மட்டுமில்லாமல் தன்னையும் ஏமாற்றி விட்டான் இந்த பாவி என சர்வாவை குற்றம் சுமத்தி பேசினார். இன்னும் நிறைய திட்டினார்.
இங்கு அழைத்து வரும்போதே நிதானத்தை கை விடக்கூடாது என சர்வாவிடம் அறிவுறுத்தியிருந்தார் நம்பி. அவரின் வார்த்தைக்கு மதிப்பளித்து ராஜனின் திட்டுக்களை ஏற்றுக் கொண்டு நின்றான் சர்வா.