சிவாவிற்கும் சரி, பைரவிக்கும் சரி அன்றைய தினமென்று இல்லை, அடுத்து வந்த தினங்களிலும் கூட, இரவு உறக்கம் என்பது காணமல் போய்விட்டது. இருவருக்கும் மனம் விட்டு பேசும் நேரம் என்றால் அது இரவு நேரம் மட்டுமே. புதிய காதலர்களுக்கான அத்தனை சாராம்சங்களும் இவர்களுக்கும் உண்டு.
பகல் எல்லாம் இருவருக்குமே வேலைகள் சரியாய் இருக்க, பொதுவாய் பைரவிக்கு எந்நேரம் வெளியே கிளம்புவாள் என்பது அவளே சொல்ல முடியாது.
ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருந்தால் செல்வாள், இல்லையெனில் வீட்டினில் இருந்தபடியே ரீல்ஸ் எடுத்து பதிவிடும் வேளைகளில் இறங்கிவிடுவாள். ஆவணி மாதம் என்பதால், நிறைய திருமண நிகழ்ச்சிகள் இருந்தது.
அனைத்துமே பெரிய இடங்களாய் இருக்க, பொதுவாய் அவளின் இசை நட்புக்களோடு தான் எங்கேயும் செல்வது. வழக்கமாய் ஒருங்கிணைப்பது ஜானினது வேலை என்பதால், பைரவி எங்கு சென்றாலும் அவளுடைய அந்த குழுவில் ஜான் இருக்க, அவளுக்கு சிவாவோடு தனியே சந்திக்கும் வாய்ப்புகள் கம்மியாகவே இருந்தது.
வீட்டிற்கு அழைத்தாலும், அவன் வருவதில்லை. அவனது ஷெட்டிற்கு பைரவி காரணமின்றி போய்வரவும் முடியாது. முன்னராவது செல்ல முடிந்தது. இப்போது என்னவோ அவளுக்குமே ஒரு தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.
அடுத்தவர் முன்னே, இயல்பாய் அவனோடு பேசுவது கூட அவளுக்கு கடினமாய் இருக்க, அன்றைய தினம் கூட அப்படித்தான், மாலை நேரத்தில் ஒரு பிரபல திரைத்துறை நடிகர் வீட்டு விசேசத்தில் பாட்டு நிகழ்ச்சி இருக்க, அங்கே சென்றிருந்தாள் பைரவி.
கிளம்பும் போதே ஜான் “பையு எப்படியும் அடுத்த வாரம் ரிக்கார்டிங் இருக்கும். ட்ராக் பாட ரெண்டு நாள்ல வர சொல்லிடுவாங்க. ரெடியா இரு. அந்த மியூசிக் டைரக்டரும் இன்னிக்கு வருவார்…” என்று சொல்லியிருக்க, பைரவிக்கு எப்படியேனும் அந்த பாடல் வாய்ப்பு தனக்கு கிடைத்திட வேண்டும் என்று இருந்தது.
பின்னே அவளுக்கான அடையாளம் சின்னத்திரை வழியாய் கிடைத்துவிட்டது. ஆனால் பின்னணி பாடகி என்ற அங்கீகாரம் பெரியதிரை வழியாய் தானே வரவேண்டும்.
‘அம்மா… என்னை ப்ளஸ் பண்ணுங்க…’ என்று மானசீகமாய் வேண்டினாள்.
பொதுவாய் எங்கே கிளம்பினாலும், சிவாவிடம் சொல்லிவிட்டே செல்வாள். அவனுமே கூட, அவளிடம் இருந்து வெகு நேரம் அழைப்பு வரவில்லையெனில், அவனே அழைப்பு விடுத்தது பார்ப்பான்.
“பிசியா இருக்கியா?” என்று எடுத்ததுமே அவன் கேட்கும் போதேல்லாம்,
“உங்க கால் வந்தா, எத்தனை பிசின்னாலும் இந்த பைரவி உங்களோட பேசுவா…“ என்று பைரவி காதல் வார்த்தைகள் பேச,
“ஓ! அப்படியா?! சரி ஒருநாள் நீ ஸ்டேஜ்ல இருக்கும்போதோ, இல்லை ரிக்கார்டிங்க்ல இருக்கும்போதோ நான் கால் பண்றேன். அப்போ என்ன செய்றன்னு பார்ப்போம்..” என்று இவனும் வம்பிழுப்பான்.
இன்றைய தினமும், அப்படித்தான் வெகு நேரமாகியும் பைரவி அவனுக்கு அழைக்கவில்லை. அவன் அழைத்துப் பார்த்தும் எடுக்கவில்லை. எப்போதுமே உடனே இல்லையெனிலும் அடுத்து அழைப்பை ஏற்றுவிடுவாள். இல்லையோ அவளே சிறிது நேரத்தில் மீண்டும் அழைத்து பேசிவிடுவாள்.
ஆனால் இன்றோ நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டு இருந்தது. இப்போதெல்லாம் இரவு உறங்க, சிவா வீடு செல்வது இல்லை. இங்கேயே தங்கிக்கொள்கிறான். என்னவோ தெரியவில்லை, இங்கே கட்டிட வேலைகள் ஆரம்பித்ததில் இருந்து, வீட்டில் அம்மாவின் பேச்சுக்கள் சரியில்லை.
இவனும் சொல்லிவிட்டான் தானே பைரவியை எனக்கு பிடித்திருக்கிறது என்று. எப்படியும் நிச்சயமாய் ஏதேனும் பிரச்சனைகள் வரும் என்று தெரியும்.
தான் அங்கே சென்றால், தானே பேசி பெரிது படுத்திவிடுவோம் என்று எண்ணியே வீடு செல்லாமல் இருக்க,
சிண்டுவோ “ண்ணா.. இன்னாத்துக்கு நீ இங்கனயே தூங்கின்னு இருக்க?” என்று கேட்க,
“என் கடை நான் தூங்குறேன்.. போடா…” என்று அவனை தள்ளிப் போகச் சொன்னவன், அலைபேசியில் நேரத்தினை பார்க்க, இரவு மணி ஒன்று.
‘இன்னுமா இவ வீட்டுக்கு வரல? இந்த செல்வியக்கா வேற, ஒருவார்த்தை என்ன ஏதுன்னு சொல்லுதா…’ என்று கடிந்துகொண்டு இருந்தவன், மீண்டும் பைரவிக்கு அழைக்க, அந்தோ பரிதாபம் அப்போதும் அழைப்பு ஏற்கப்படவில்லை.
இதற்குமேல் சிவாவிற்கு பொறுமை என்று எதுவும் இருக்குமா என்ன?
நேராய் பைரவி வீட்டிற்கு நடந்துவிட, அங்கேயோ காம்பவுண்டினுள் பைரவியின் காரும், வெளியே மூன்று புதிய கார்களும் நின்று இருக்க, வீட்டினுள்ளே வெளிச்சமாகவே இருந்தது.
‘வந்துட்டாளா?!’ என்று பல்லைக் கடித்தவன், வெளியே நின்றே அவளுக்கு அழைப்பு விடுக்க, இம்முறையும் அழைப்பினை பைரவி ஏற்கவில்லை.
‘பைரவி…’ என்று அவளது பெயரை கடித்துத் துப்பாத குறையாய் உச்சரித்தவன், அடுத்து செல்விக்கு அழைக்க, அவரும் உடனேயே ஏற்காமல், சில நொடிகள் கழித்தே அழைப்பை ஏற்று
“பைரவி கண்ணு… இங்கன தான் இருக்கு. அதோட பிரண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க…” என்று சொல்ல,
“இந்த நேரத்துலையா?” என்றான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சிவா எல்லாம் வந்தாங்க.. நாளைக்கு கோவா போறாங்களாம்.. திடீர்னு எதோ பார்ட்டியாம்.. அதுக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டு இருக்காங்க…” என்று செல்வி தகவலை சொல்ல,
சிவாவிற்கு ஏற்கனவே கோபம் கொழுந்து விட்டு எரிந்துகொண்டு இருந்தது. அதில் இந்த செய்தி எரியும் நெருப்பில் நெய் விட்டது போல் இருக்க,
“ஓ!” என்றவன் “பைரவிக்கிட்ட போன் குடு…” என்றான்.
“இன்னாத்துக்கு சிவா? இந்நேரத்துல.. அதுவே வேலையா இருக்கு…” என்று செல்வி பதில் பேச,
“ம்ம்ச்…” என்று அங்கிருந்த கார் மீது ஓங்கி குத்தியவன் “குடுன்னு சொன்னா குடு…” என, செல்வி நெற்றி சுருக்கி யோசனையாய் அவரின் அலைபேசியை பார்த்தவன், பின் மெல்ல எழுந்து போய் பைரவியிடம்
மெதுவாய் “சிவா…” என்று சொல்லிக் கொடுக்க, பைரவி நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தவள், சிவாவின் பெயரைக் கேட்டதுமே, இன்னமும் புன்னகை விரிந்து
“ஹலோ…” என்று சொல்ல,
“உன் வீட்டு வாசல்ல நிக்கிறேன்…” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“வா.. வாசல்ல… அங்க ஏன் நிக்கிறீங்க.. உ.. உள்ள வாங்க…” என்றவள், பேசிக்கொண்டே எழுந்து வெளியே வர, அவளுக்கு பின்னே ஜானும் வந்தான்.
“ஜான் நீ இரு…” என்றவள், கதவை அடைத்துவிட்டு வெளியே செல்ல, நல்லவேளை இப்போது வந்திருக்கும் நட்புக்கள் எல்லாம் இவளது இசைத்துறை நட்புக்கள். அவர்கள் யாருக்கும் சிவா பற்றி தெரியாது.
இன்று இவர்கள் செய்த இன்னிசை நிகழ்ச்சியால் பெரிதும் ஈர்க்கப்பட்ட, ஒரு சினிமா பிரபலம், நாளை தான் கோவாவில் கொடுக்கப்போகும் ஒரு சினிமா பார்ட்டிக்கு இவர்களை அந்த இடத்திலேயே புக் செய்துவிட, கிடைத்த வாய்ப்பை ஏன் விடுவானே என்று தான் எல்லோரும் நேரம் காலம் பார்க்காது, பாடல்கள் தேர்வில் இருந்தனர்.
நாளை விடிந்தால் விமானம். நாளை மாலை நிகழ்ச்சிகள். அது முடிந்ததும் அப்படியே மீண்டும் விமானம் ஏறி இங்கே சென்னை பயணம்.
பைரவிக்கு மனதினுள் இத்தனை ஓடிக்கொண்டு இருக்க, இதில் தன் அலைபேசியை எங்கே வைத்தோம் என்பதனை கூட மறந்துபோனாள்.
இப்போது சிவா வந்து நிற்கவும் தான் ‘அச்சோ ரொம்ப நேரம் கால் பண்ணவே இல்லையே…’ என்று எண்ணியபடி தான் வெளியில் வந்தவள் “உள்ள வாங்க…” என்றாள் அப்போதும் இன்முகமாய்.
“போ.. போன்… அது…” என்று திகைத்தவள் ‘உள்ள…’ என்று கை காட்ட,
“அப்படியா? சரி வச்சுக்கோ.. பத்திரமா வச்சுக்கோ…” என்றவன், அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகரப் போக “நில்லுங்க…” என்றாள் வேகமாய் அவன் கை பிடித்து.
பிடித்த கையைப் பார்த்தவன், வேகமாய் ஒரு உதறு உதறிவிட்டு “நீ போய் உன் வேலையை பாரு…” என்று சொல்லிவிட்டுச் செல்ல,
“சிவா ப்ளீஸ்… பங்க்சன் முடிய ரொம்ப நேரம் ஆகிருச்சு.. நாங்களே எதிர்பார்க்காத ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. கோவால ஒரு மியுசிக் ப்ரோக்ராம் புக் ஆகிருக்கு…” என்று அவள் வேகமாய் அவனை சமாதானம் செய்யும் நோக்கோடு சொல்ல,
“அதுக்கு.. அதுக்கு.. ஒரு போன் பண்ணித் தொலைஞ்சிட்டு என்னவும் பண்றதுக்கு என்ன டி உனக்கு?” என்று சிவா கோபத்தில் கத்த, பைரவிக்கு உள்ளே நடுங்கிவிட்டது.
அவனை கை நீட்டி அடித்தவள் தான் அவள்.
ஆனால் இதோ, இந்த நிமிஷம் அவளது அந்த தைரியத்தை, காதல் காணமல் போகச் செய்துவிட்டது.
திகைத்துப் பார்த்த விழிகளில், பட்டென்று கண்ணீர் பூக்க “எத்தனை போன் பண்ணிருக்கேன்னு போய் பாரு.. ஒரு.. ஒரு நிமிஷம் ஆகுமா போன் பண்ணி பேச.. இதோ இப்படி இந்த நேரத்துல என்னை வந்து இப்படி நிக்க வச்சிருக்க நீ…” என்று அவன் பேச,
“சா.. சாரி…” என்றாள் இதழ்கள் நடுங்க.
அவளது கலங்கிய முகத்தை உறுத்துப் பார்த்தவன் “நீயும் உன் சாரியும்…” என்று முனங்கிவிட்டு நகர,
“ப்ளீஸ் சிவா…” என்றாள் திரும்ப அவனை நிறுத்தி.
“போயிடு பேசாம…” என்று கண்களை இறுக மூடிச் சொன்னவன், அவளது கையை தட்டிவிட, அது அவளுக்கு பொறுக்குமா என்ன?
“நான்… நான் மறந்துட்டேன்…” என்றாள் பாவமாய் முகம் வைத்து.
நிஜமாகவே அவளுக்கு அங்கே மிகவும் டென்சனாய் தான் இருந்தது. எதிர்பாராத சூழல்கள் அமையும் தானே. அதிலும் திடீரென்று இப்படியொரு நிகழ்ச்சி ஏற்பாடாகிவிட அதற்கான உடனடி ஏற்பாடுகள் எல்லாம் செய்யவேண்டும்.
முதலில் என்னென்ன பாடல்கள் யார் யார் பாடுவது என்று ஒருமுறையேனும் ஒத்திகை பார்க்கவேண்டும் இல்லையா?
அதற்காகவே அனைவரும் பைரவியின் வீட்டினில் கூடிவிட, பைரவிக்கு இதற்கெல்லாம் நடுவில் சிவாவிற்கு அழைக்கவேண்டும் என்று தோன்றவில்லை. ஒருமுறை நினைத்தாள் தான். ஆனால் சரியாய் அதேநேரம் அவளிடம் ஜான் எதையோ பேச, அது அப்படியே நின்றுபோனது.
கிளம்புவதற்கு முன்னே சிவாவிடம் சொல்லிவிட்டு கிளம்பவேண்டும் என்று என்னிக்கொண்டவள், அவன் இந்த நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான் என்றே நினைத்தாள்.
இப்படி சிவந்த விழிகளோடு, வாசல் வந்து நிற்பான் என்றா நினைத்தாள்.
ஆனால், காதல் நாம் நினைத்தே பார்க்காத அனைத்தையும் நமக்கு நிகழ்த்தும் தானே.
அவளோ மனதில் தோன்றியதை அப்படியே பேச “என்னது மறந்துட்டியா?!” என்றான் திகைத்து.
‘என்னை மறந்தாளா? இல்லை எனக்கு பேசவேண்டும் என்பதை மறந்தாளா?’ என்று அவன் மனது அம்பாய் பாய்ந்து கேள்வி கேட்க, அவனது திகைத்த முகத்தைப் பார்த்தவள்,
“இ.. இல்ல.. அது.. நான்…” என்று என்ன சொல்வதென்று தெரியாமல் அவளும் திணற,
‘போதும்…’ என்பதுபோல் சைகை செய்தவன் “நாளைக்கு நீ கோவா போகக் கூடாது…” என்று விரல் நீட்டி சொன்னவன், அப்படியே திரும்பி நடந்துவிட,
“சிவா?!” என்று அதிர்ந்து பார்த்தாள்.
“மறந்துட்டன்னு சொல்ற நீ..?” என்று அதட்டிக் கேட்டபடி திரும்பியவன், அவள் திகைத்து திணறி நிற்பது கண்டு “போகக் கூடாது…” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
சிவாவிற்குத் தெரியும் தான். பைரவியின் வாழ்வுமுறை, அவளது பழக்க வழக்கங்கள். அவள் பணி நிமித்தமான சூழல்கள். அவளது நேரங்கள் என்று எல்லாமே அவன் அறிவான். இப்போதும் கூட அவளை தடுக்க வேண்டும் என்று அவன் துளியும் எண்ணவில்லை.
‘மறந்துவிட்டேன்…’ என்று அவள் சொன்னது அவனை வெகுவாய் சீண்டி காயம் செய்துவிட்டது.
அதன் காட்டம் தாங்காமல் தான் அவளிடம் இப்படிச் சொல்லிச் செல்ல, பைரவி அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.
வெளியில் சென்றவள் இன்னும் வரவில்லை. அதுவும் இந்த நேரத்தில் யார் வந்து அழைத்து வெளியில் சென்றாள் என்று ஜான் மனதில்லாமல் வெளி வந்து பார்க்க, பைரவி திகைத்து நிற்பது மட்டுமே அவன் கண்களில் பட ‘என்னாச்சு இவளுக்கு?’ என்று அருகில் வந்தவன்
“பையு…” என்று அழைக்க,
கன்னங்களில் வழிந்த நீரோடு, பைரவி சோர்வாய் அப்படியே நிற்க “ஹேய்.. என்ன பண்ற நீ..? யார் வந்தா? என்னாச்சு?” என்று ஜான் அடுத்தடுத்து கேள்வியாய் கேட்க,
“ஜா.. ஜான்…” என்று வேகமாய் அவன் பக்கம் திரும்பியவள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க,
“என்ன பைரவி? யார் பேசினா? எதுக்கு நீ வெளிய வந்த? அழுதிருக்க.. என்னாச்சு.. யார் வந்தாங்க? யா.. யாரும் உன்கிட்ட பிராப்ளம் பண்றாங்களா?” எனும்போதே, செல்வியும் வந்துவிட்டார் அங்கே.
“என்னாச்சு கண்ணு.. சிவா பேசி முடிச்சிட்டானா? ஆமா இன்னாத்துக்கு இந்நேரத்துல போன் போட்டான். நீ எதுக்கு இப்போ வெளிய வந்த?” என்று செல்வியும் அடுக்கடுக்காய் கேள்வி கேட்க,
“என்னது சிவா கால் பண்ணானா?” என்றான் ஜான் புரியாமல்.
“ஆமா சிவா தம்பி தான் போன் பண்ணி பைரவிக்கிட்ட குடுக்க சொல்லுச்சு…” என,
“வாட் இஸ் திஸ் பைரவி?!” என்றான் ஜான் கோபமாய்.
இப்படி அவரவர் பங்கிற்கு அவளிடம் கோபத்தை காட்டினால், அவளும் தான் என்ன செய்வாள். செல்வியும், ஜானும் இருவருமே பைரவியை கேள்வியாய் பார்க்க,
“அ.. அது.. என்னவோ கேட்கனும்னு போன் பண்ணிருப்பாங்க போல. நான் கால் அட்டென்ட் செய்யலை.. அதான் செல்விம்மாக்கு கூப்பிட்டு பேசினாங்க…” என,
“அதுக்கு இந்நேரத்துலையா?” என்று இருவருமே ஒன்றுபோல் கேட்க,
“போன் போட்டு போட்டு பார்த்து எடுக்கலைன்னதும்.. என்னவோன்னு நினைச்சுத்தான்…” என்றாள் இழுத்து.
“ஹ்ம்ம் இந்த சிவா இப்படித்தான். கொஞ்சம் பழகிட்டா கூட உசுரையே கொடுப்பான். பாரேன் அதான் மனசு கேட்காம எனக்கு கூப்பிட்டு பேசிருக்கான். அன்னிக்கு நீயா ஆசுபத்திரிக்கு போனது தெரிஞ்சு எத்தினி கவலை தெரியுமா அவனுக்கு…” என்று செல்வி பேசியபடியே உள்ளே சென்றுவிட, ஜான் இதனை எல்லாம் நம்புவானா என்ன?
அதிலும் பைரவியை சிறுவயது முதல் காண்பவன் ஆகிற்றே. அவள் முகத்தினில் என்னவோ ஒரு வலியை அவன் காண “எ.. என்ன ஜான்..?!” என்றாள்.
“என்னவோ பண்ற நீ…” என்றவன் “அப்போ சிவா தான் வந்துட்டு போனானா?” என, ஆம் என்று அவளது தலை ஆட,
“ஏன் உள்ள வந்து பேசவேண்டியது தானே…” என்றான் கண்டிப்புடன்.
“இல்லை உள்ள அவங்கெல்லாம் இருக்கவும்…” என்று இழுக்க
“ம்ம்ச்.. ஸ்டாப் இட் பைரவி… இதெல்லாம் நல்லதுக்கு இல்லை…” என்று கடிந்து “ஆமா நீ ஏன் எப்படியோ இருக்க? ஏன் அழுத?” என்று கேட்க,
“எ.. எனக்கு என்னவோ பண்ணுது ஜான்…” என்றாள் வேகமாய்.
“எ.. என்ன பண்ணுது?” என்று ஜான் பதறிக் கேட்க,
“தெரியலை.. வயிறு என்னவோ செய்யுது.. அங்க சாப்பிட்டது சேரல போல.. வலிக்கிற மாதிரி இருக்கு.. அதான் என்னால முடியலை…” என்று அவள் பேச,
“ஹேய்.. வா முதல்ல ஹாஸ்பிட்டல் போலாம்…” என்றான் ஜான்.
“இல்ல வேணாம்…” என்றவள் “முதல்ல உள்ள வா போலாம்…” என்று அவனை அழைத்துக்கொண்டு வீட்டினுள்ளே சென்றாள்.