அத்தியாயம் -3(2)
கோவம் துளிர்த்தாலும் அடக்கிக் கொண்டவர், “நீ இரு, நாங்க எப்படியோ போயிக்கிறோம்” என்றார்.
கணவரிடம் ஏதோ பேச நினைத்து தயங்கி தயங்கி பார்த்தார் ஜெயந்தி. மனைவியின் மனதில் உள்ளதை ஏற்கனவே அறிந்து கொண்டதால் பேச அனுமதிக்காமல் வெளியேறினார். ஜெயந்தியும் கணவரின் பின்னால் வேகமாக நடந்து சென்றார்.
“ரெண்டு நாளா வெறும் தண்ணி மட்டும்தான் குடிச்சேன், சாப்பாடு கிடையாது. அதான் மயக்கத்துக்கு காரணம்னா கேட்காம இன்னும் ஏதோ டெஸ்ட் பண்ணனும்னு இழுக்கிறார் டாக்டர்” கிண்டலாக சொன்னான் சர்வா.
“ஏன் ஸார், அக்கா பேசணும்னு உண்ணாவிரத போராட்டமா?” எனக் கேட்டான் சஞ்சய்.
“உன் அக்காவை பேச வைக்கணும்னா நான் நேர்ல வந்தா போதும். இது விரதம்” என்றான் சர்வா.
“ஓ… அக்கா பேச கடவுள்கிட்ட ரெகமெண்டேஷனா?”
“இல்லை, மீசை முளைச்சிட்டா பெரியாள்னு நினைச்சு தோரணை பண்ற ஒரு வாலுத்தம்பி இருக்கான் என் ஆளுக்கு. அவனுக்கு என்னை பிடிக்கணும்னு வேண்டுதல்” என்றான் சர்வா.
“எந்த காட்க்கு வேண்டுதல் வச்சீங்க? ரொம்ப பவர்ஃபுல் காட், உங்க வேண்டுதல் பலிச்சாச்சு. அப்புறம் ஷெட்ல ஏன் விழுந்தீங்க? மிஸ்ட்ல ஷெட்டை கோயில்னு நினைச்சு அங்கபிரஸ்தனம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களோ?” எனக் கேட்டு அழகாக சிரித்தான் சஞ்சய்.
“சும்மா இருடா” என அதட்டினாள் மித்ரா.
“பேசட்டும் மித்ரா, ஃபைனலி ஒரு ஆளாவது உன் சைட்லேருந்து என்னை அக்செப்ட் பண்ணியாச்சே” என்றான் சர்வா.
திருமணம் நடந்தேற சாதகமான நிலை இல்லை, மித்ராவும் பேசவில்லை, ஆகவே விரக்தி அடைந்திருந்தவன் யாரிடமும் சொல்லாமல் இலக்கில்லாமல் கிளம்பி சென்றிருக்கிறான்.
அவனது கைப்பேசி பழுதாகி விட்டதாம். பொள்ளாச்சியில் இருக்கும் கோயிலுக்கு சென்றிருந்தானாம், அங்கே மன அமைதி கிடைக்க இரண்டு நாட்களும் அங்கேயே தங்கி விட்டானாம்.
“இன்னிக்கு எர்லி மார்னிங் குன்னூர் வந்திட்டேன், ஷெட்ல பைக் விட்டுட்டு இறங்கும் போதே கிறக்கமா இருந்தது. கண் முழிச்சி பார்த்தா இங்க இருக்கேன்” என உண்மை போலவே சொன்னான்.
அவன் உபயோகிக்க எஸ்டேட்டில் ஜீப் கொடுத்திருந்தனர், டிரைவரும் உண்டு. ஜீப் சர்வீஸ்க்கு விடப் பட்டிருந்தது. முதல் நாளே ஜீப்பை எடுத்திருந்த டிரைவர் தன் வீட்டில் நிறுத்தி வைத்திருந்தான். காலையில் மேனேஜர் வீட்டில் விட்டு விட சென்றவன் மயங்கியிருந்த சர்வாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறான்.
இதுவும் சர்வா சொன்ன கதைதான். எங்கேயும் எந்த சந்தேகமும் மித்ராவுக்கு ஏற்படவில்லை.
தன் அக்கா மீது இத்தனை அன்பு கொண்டவரா என சஞ்சயும் வியப்பாக பார்த்திருந்தான்.
“நல்ல வேளையா டிரைவர் அங்க வந்து சேர்ந்தான், இல்லின்னா என் நிலைமை?” என சர்வா கேட்க, மித்ராவின் நெஞ்சில் பயப்பந்து உருண்டது.
பின் அவனே அவளின் பயத்தை போக்கும் படி ஏதோ பேசினான்.
சஞ்சய்க்கு சர்வாவை மிகவும் பிடித்து விட்டது. வெளிப்படையாக சொல்லவும் செய்தான். தம்பியின் பேச்சு செய்கை மூலமாக சற்று முன்னரே மித்ராவுக்கு தெரிந்தாலும் இப்போது அவனது வாய்மொழியாக கேட்டதில் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
பயப்பட ஒன்றுமில்லை, நினைவில்லாமல் இருந்த காரணத்தால் இன்னும் ஒரு நாள் பார்த்து விட்டு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றார் மருத்துவர். அதுவரை தான் துணைக்கு இருக்க போவதாக சொல்லி விட்டாள் மித்ரா.
நாகா நேரில் வந்து பார்த்தார், வேறு மருத்துவமனை செல்லலாம் என்றதற்கு, “நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆக போறேன், இங்கேயே ஓகேதான் ஸார், உங்க அன்புக்கு தேங்க்ஸ் ஸார்” பணிவாக சொன்னான் சர்வா.
என்ன உதவியாக இருந்தாலும் எனக்கு உடனே அழைத்து சொல் என்ற நாகா மித்ராவை பார்த்து, “பாரும்மா தனியா இருந்து எவ்ளோ கஷ்டம், ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆனா யாரால என்ன செய்ய முடியும். தனியா இருக்கிறது எப்பவுமே ஆபத்துதான். அதனால சீக்கிரம் கல்யாணம் முடிச்சு கூடவே இருந்து பார்த்துக்க. நல்ல முடிவா எடும்மா” என அறிவுரை சொல்வது போல சொல்லி சென்றார்.
விரைவாக தங்களின் திருமணத்தை நடத்திக் கொள்வேன் என தனக்குள் உறுதி பூண்டாள் மித்ரா.
இடுங்கிய விழிகளோடு மித்ராவை பார்த்திருந்த சர்வா அவளது மனவோட்டத்தை கணித்து விட்டு மெல்ல சிரித்து உடனே முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டான்.
தனியாக வீடு வந்த சஞ்சய் அக்கா மருத்துவமனையிலேயே தங்கி விட்டதாக சொன்னான். மித்ராவின் பெற்றோர் சங்கடமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“யாருமில்லாம தனியா எப்படி இருப்பார், இந்த நேரம் அக்கா கூட இருந்துதானே ஆகணும்?” என்றான் சஞ்சய். மணமாகாத பெண் அவனுக்கு துணைக்கிருப்பதா? என அவர்களுக்கு மன சஞ்சலம் இருந்த போதிலும் சரியென விட்டனர்.
ஆனால் இரவில் அவளை தன்னோடு தங்க அனுமதிக்காமல் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டான் சர்வா. எஸ்டேட் பணியாள் ஒருவன்தான் அவனுடன் தங்கினான்.
“நல்ல தம்பிதான், அவரே நம்ம பொண்ண அனுப்பி வச்சிட்டாரே!” சிலாகித்த மனைவியை யோசனையோடு பார்த்தார் ராஜன்.
“முடிஞ்ச அளவு சீக்கிரமா சர்வாவை நான் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன் ப்பா” மகளின் இந்த அறிவிப்பு ‘உங்களின் சம்மதத்தை இனியும் எதிர் நோக்க போவதில்லை’ என சொல்வது போலவே ராஜனுக்கு பட்டது.
“என்னடி பேச்சு இது? எல்லா நல்லது கெட்டதும் எங்களுக்கு தெரியும், கூடி வரும் போது தாழிய உடைக்காத, உள்ள போ” என மகளை அதட்டி உள்ளே அனுப்பி வைத்தார் வைஜெயந்தி.
இன்னும் மௌனமாக நின்றிருந்த கணவரிடம், “நம்ம பொண்ணு நல்லா இருக்கணும்ங்க, அவ மனசை கொன்னுட்டு என்ன செஞ்சாலும் அவகிட்ட நிம்மதியும் சந்தோசமும் எப்படி நிலைக்கும்?” எனக் கேட்டார்.
“எனக்கும் அதே யோசனைதான்” என்றார் ராஜன். இருவரும் அர்த்தமாக பார்த்துக் கொண்டனர்.
அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்யப் பட்ட சர்வாவை அவனது வீட்டில் விட்டு விட்டு மித்ராவும் சஞ்சயும் அவர்களின் வீடு வந்த போது மிருதுளாவின் கணவன், மாமனார், ராஜனின் அண்ணன், ஒன்று விட்ட பங்காளிகள் என சில சொந்தங்கள் குழுமியிருந்தனர்.
திகைப்போடே அனைவரையும் வாங்க என தனித்தனியாக வரவேற்றாள் மித்ரா.
சொல்லி வைத்தார் போல எல்லோருடைய பார்வையும் மித்ராவையே மொய்த்தது. குழப்பமடைந்தவள் தன் தம்பியை பார்த்தாள்.
“உன் விஷயத்தை டிஸ்கஸ் பண்ணத்தான் இருக்கும் க்கா, நீ போ, நான் என்னன்னு உளவு பார்க்கிறேன்” என ரகசிய குரலில் அக்காவிடம் சொல்லி அவளை உள்ளே அனுப்பி வைத்தான் சஞ்சய்.
அறைக்கு வந்து குளித்து வேறு உடை மாற்றிக் கொண்டவளுக்கு வெளியில் என்ன பேசுகிறார்கள் என தெரியாமல் தலை வெடிப்பது போலிருந்தது. அவளது மனநிலையை கருத்தில் கொண்ட ஒரே ஜீவனான சஞ்சய் வந்தான்.
“உனக்கு சர்வா ஸாரையே மேரேஜ் பண்ணி வைக்கிறது பத்தி ஆலோசனை நடந்திட்டு இருக்குக்கா” உற்சாகமாக சொன்னவனின் கூற்றை நம்ப இயலாமல் பார்த்தாள் மித்ரா.
“நிஜமாதான் க்கா, நீ கஷ்ட படுறதை அப்பாவால பார்க்க முடியலையாம், சர்வா ஸாரை அம்மாக்கு ரொம்ப பிடிச்சு போயிடுச்சாம். நம்ம சொந்தத்துல யாரும் செய்யாத ஒன்னை உனக்காக செய்ய தயார் ஆகிட்டார் அப்பா!” அவனது பேச்சில் குதூகலம் அப்பட்டமாக தெரிந்தது.
அதீத ஆனந்தத்தில் பேச்சு வராமல் அவள் நிற்க, “எல்லாரையும் சரி கட்டத்தான் இந்த அவசர ஆலோசனை கூட்டம். இன்னும் பெரிய மாமா, சின்ன மாமா, அவங்க மருமகனுங்க குடும்பம்னு இருக்கு. இங்கேயே சில பேர் ஆக்ரோஷமா இருக்காங்க. ஆனாலும் அக்கா அப்பா ஸ்டராங்கா இருக்கார், கவலையே படாத, மத்த டீடெயில்ஸும் கலெக்ட் பண்ணிட்டு வந்து அப்டேட் பண்றேன்” என சொல்லி சிட்டு பறப்பது போல சென்று விட்டான்.
உடனடியாக சர்வாவுக்கு அழைத்து விவரத்தை சொன்னாள் மித்ரா.
அவளை போலவே அவனும் முதலில் நம்பவில்லை. மித்ராவிடம்தான் மாற்றத்தை எதிர்பார்த்தான், இப்படி அவளது பெற்றோரே மாறிப் போனதில் நிஜமாகவே அதிர்ந்துதான் போனான். மீண்டும் அவள் விவரத்தை சொல்ல அவனும் தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினான்.
“உன் அப்பா தனியா சமாளிக்கிறாரா மித்ரா, நான் வரவா இப்போ?” எனக் கேட்டான்.
“இல்லையில்ல, அப்பாவே பேசட்டும் சர்வா. எனக்கு தெரியும் என் அப்பா எனக்காக விட்டுத் தருவார்னு” பெருமையாக சொன்னாள்.
“நானும்தான் மித்ரா”
“அப்படியா அதை நீங்க சொல்லக்கூடாது, நான் சொல்லணும்”
“ஒரு நாள் சொல்வ”
“பார்ப்போம், பார்ப்போம்”
இப்படியாக அவர்களின் பேச்சு நீண்டது.
வந்திருந்தவர்களில் யாருக்கும் இதில் உடன்பாடு இல்லை. யார் என்ன என தெரியாத எவனுக்கோ நம் வீட்டுப் பெண்ணை எப்படி கொடுப்பது எனதான் கருதினார்கள். முன்னரே பேசி வைத்துக் கொள்ளவில்லை என்ற போதிலும் வைஜெயந்தியின் ஒன்று விட்ட அண்ணனின் மகனுக்குத்தான் மித்ராவை திருமணம் செய்து வைப்பார்கள் என்றே அனைவரும் கருதியிருந்தனர்.
சர்வா வரவில்லை என்றால் ராஜனே அப்படித்தான் தன் மகளுக்கு திருமணம் பேசியிருக்க கூடும். நல்ல வேளையாக வாய் மொழியாக கூட அப்படி ஒரு உறுதியை அவர் தந்திருக்கவில்லை. இல்லையென்றால் பெரிய பிரச்சனை ஆகியிருக்கக் கூடும்.
நாகா ரெட்டிக்கு பழக்கப் பட்ட தனது உறவினர் மூலமாக சர்வானந்த் பற்றி விசாரிக்க சொல்லியிருந்தார் ராஜன்.
ராஜனின் உறவினர் தன்னை தொடர்பு கொள்ள முயலும் போதே சர்வாவிடம் சொல்லி விட்டார் நாகா.
“பேசுங்க, கேட்கிறதுக்கு என்ன பதில் சொல்லணும்னு தீர்மானமா தெரிஞ்சா சொல்லுங்க, இல்லைனா…”
“நான் சமாளிச்சுடுறேன் ஸார்” என்ற நாகா, அடுத்து அந்த உறவினரின் அழைப்பை ஏற்றார்.
சர்வா பற்றிய விவரங்களை கேட்டவருக்கு அவன் முன்னர் சொல்லிக் கொடுத்திருந்த படி, யாருமில்லாதவன், அஸாமில் உள்ள என் நண்பரிடம் ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்தவன், குறையென எதுவுமில்லை, உங்கள் பெண்ணை நம்பிக் கொடுக்கலாம் என நன்னடத்தை சான்றிதழ் வழங்கினார் நாகா.
அதை அப்படியே ராஜனிடம் அவரது உறவினர் ஒப்பிக்க, அதன் பின்னர்தான் தன் சொந்தங்களை அழைத்து வைத்து இந்த பேச்சு வார்த்தை நடத்துகிறார் ராஜன்.
தங்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும் ராஜனின் முடிவுக்கு இசைந்தனர் அனைவரும். மித்ராவின் மாமாக்களிடமும் பேசிய பின்னர் நாள் குறிக்கலாம் என முடிவு செய்தார் ராஜன்.
மற்றவர்களை விட வைஜெயந்தியின் அண்ணன்கள் அதிகமாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்தான், ஆனால் ராஜன் விடாப்பிடியாக பேசி அவர்களின் சம்மதத்தையும் பெற்று விட்டார்.
வளர்பிறையில் திருமணத்திற்கு முகூர்த்தம் பார்த்தாகி விட்டது.
யாருக்கோ அழைத்த சர்வா இங்கிருந்து மித்ராவுடன் கிளம்ப போகும் நாள் சமீபித்து விட்டதை மகிழ்ச்சியாக அறிவித்தான்.