இருள் வனத்தில் விண்மீன் விதை -3
அத்தியாயம் -3(1)
நாகா ரெட்டியுடனான சந்திப்பிற்கு பின் அங்கிருந்து புறப்பட்ட சர்வா நேராக சௌந்திரராஜனை சந்திக்கத்தான் சென்றான்.
பணி நீக்கம் செய்யப் பட்டு விட்டானோ, அதன் பின்னணியில் நான் இருப்பது தெரிந்து சண்டையிட வந்திருக்கிறானோ என்ற நினைவோடே சர்வா அறைக்கு வர அனுமதி தந்தார் ராஜன்.
அமைதியான முகமும் நிதானமான நடையுமாக வந்த சர்வா, அவர் அமரும் படி சொன்ன பிறகே இருக்கையில் அமர்ந்தான். முதல் சந்திப்பை விட இப்போது இவனிடம் அதிகமான பவ்யம் தென்படுவதாக உணர்ந்தார்.
“மித்ரா என்கிட்ட பேசி நாலு நாளாகுது. ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்கிறா” என ஆரம்பித்தான்.
“எதுக்கு வந்திருக்கீங்கன்னு நேரா விஷயத்தை சொல்லுங்க” கடுப்படித்தார் ராஜன்.
“உங்க பொண்ணை கல்யாணம் செய்துக்க நான் என்ன செய்யணும்?”
“மூனு தலைமுறையா இந்த மலைப் பகுதில இருக்கோம். எங்களுக்குன்னு தனிப் பேர் இருக்கு. யார் வம்பு தும்புக்கும் நாங்க போறதில்லை, எங்க குடும்பத்துல வெளியாட்களை அனுமதிக்கிறதும் இல்லை. என்ன செஞ்சாலும் நீங்க எங்கள்ல ஒருத்தனா மாற முடியாது. டைம் வேஸ்ட் பண்ணாம கிளம்புங்க” விளக்கம் போல் சொல்லி, இறுதி வரியை எரிச்சலாக சொன்னார்.
“மித்ரா உங்க குடும்ப பொண்ணு, நான் அவளை கல்யாணம் செய்துகிட்டா உங்க குடும்பத்துல நானும் ஒரு ஆளு”
“இல்லை, என் பொண்ணு என் குடும்பத்திலிருந்து பிரிஞ்சு உன் குடும்பமா மாறிடுவா. அதுக்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்” அழுத்தம் திருத்தமாக சொன்னார் ராஜன்.
தன் படிப்பு, திறமை, எதிர்காலத்தில் இன்னும் நல்ல நிலைமைக்கு செல்லக் கூடிய வாய்ப்பு என தன் தகுதிகளை பொறுமையாக பட்டியலிட்டான் சர்வா. அவனது பேச்சில் சற்றே அவர் ஈரக்கப் பட்டாலும் ‘முடியாது, மாட்டேன்’ எனும் முடிவில் மட்டும் தெளிவாகவே இருந்தார்.
மித்ராவுக்கு தன்னை எத்தனை பிடிக்கும், தானும் அவளை எந்தளவு விரும்புகிறேன் என்பதை மிகைப் படுத்தப் பட்ட அலங்கார வார்த்தைகள் கோர்த்து பேசிப் பார்த்தான். அவர் இம்மியும் அசைந்து கொடுப்பதாக இல்லை.
விரைவில் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன் என சொல்லி எழுந்து கொண்டான்.
“நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு சொல்வாங்க” இகழ்ச்சியாக சொன்னார் சௌந்திரராஜன்.
இப்படி சொன்னவர் மித்ராவின் அப்பாவாக இல்லாமல் போயிருந்தாலோ, வேறு சூழலாக இருந்தாலோ நடந்திருப்பது வேறாக இருக்கக் கூடும். அவனுக்கு காரியம் ஆக வேண்டுமே, ஆகவே பதில் பேசாமல் தாடை இறுகிப் போக அங்கிருந்து வெளியேறினான்.
இன்று நடந்தவற்றை மித்ராவிடம் சொல்ல அவளுக்கு அழைத்தான். பிடிவாதக்காரி அவனுடன் பேச மறுத்தாள். அவளுடைய அப்பா தன்னை இந்த ஊரிலிருந்து வெளியேற்ற செய்த செயலையும் தான் அத்தனை பொறுமையாக பேசியும் தன்னை அவமதித்து வெளியே அனுப்பி விட்டதையும் வாய்ஸ் நோட்டாக அனுப்பி வைத்தான்.
அவனிடம்தான் பேசவில்லையே தவிர அப்பாவிடம் சென்று சண்டை போட்டாள். பொறுத்து பொறுத்து பார்த்தவர் சற்று அதிகமாகவே கடிந்து கொண்டார். அழுத முகமாக அறைக்குள் சுருண்டவளை ஜெயந்தி அவர் பங்குக்கு பேசினார்.
அம்மாவை அதட்டி வெளியில் அனுப்பிய மிருதுளா, “நடக்கிறது எதுவும் சரியா படல மித்து, நம்ம அப்பாம்மாவை கஷ்ட படுத்திலாம் நல்ல வாழ்க்கை வாழ்ந்திட முடியாதுடி. இன்னிக்கு கிளம்புறேன் நான், விவரமான பொண்ணு நீ, ஒழுங்கா இரு” என அறிவுரை சொன்னாள்.
கண்களை துடைத்துக் கொண்ட மித்ரா தன் அக்காவை முறைக்க, “எல்லாரும் உன் நல்லதுக்குதான் சொல்றோம்” என சொல்லி சென்றாள்.
மேலும் ஒரு மாதம் அவளுடைய போராட்டம் நீடித்தது. இந்த குறுகிய காலம் ஆண்டாண்டு கால கொடுமை என்பது போல அவளை அச்சுறுத்திக் கொண்டிருக்க, சர்வாவுடன் பேசாதது வேறு மனதை கடும் வேதனை கொள்ள செய்தது.
நாட்கள் நகர்ந்தன, எதுவும் வேலைக்கு ஆவது போல தெரியவில்லை. சர்வாவிடம் இதற்கு மேல் பொறுமையும் இல்லை. அவனுக்கு தேவையானது அவளுடைய பெற்றோரின் சம்மதமல்ல, அவளுடனான திருமணம் மட்டுமே. என்ன செய்யவும் தயாராக இருந்தான். மித்ரா அவன் மீது வைத்த அன்பை பகடையாக்கினான்.
தான் அவளுக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளை நிறுத்தி விட்டான். கோவத்தினால் இப்படி செய்கிறான் என நினைத்துக் கொண்டாள். இரண்டு நாட்களில் அவன் ஊரிலேயே இல்லை என்பதை அவளது கவனத்தில் பதியுமாறு செய்தான்.
திகில் கவ்விப் பிடிக்க அவனது இருப்பிடத்திற்கு நேரில் சென்றாள். வீடு பூட்டியிருந்தது. எஸ்டேட்டில் விசாரிக்கும் போது யாருக்கும் ஏதும் தெரியவில்லை என்றார்கள்.
எதேச்சையாக அங்கு வருவது போல வந்தார் நாகா.
“நீதான் என் மேனேஜர் விரும்புற பொண்ணா? எங்க போனார் என்ன ஆனார்னு எதுவும் தெரியலை. உன் அப்பாதான் ஏதோ செய்திருக்கணும், ஒழுங்கா என் மேனேஜரை விட சொல்லு, இல்லைனா போலீஸ்ல சொல்லிடுவேன்” என்றார்.
முதலில் அவளுக்கு எதுவுமே புரியவில்லை, மெல்ல மெல்லதான் சர்வாவை காணவில்லை என அறிவிற்கு உரைத்தது. நாகா பேசியதில் அவளுக்குமே தன் தந்தையின் மீது சந்தேகம் வர உடனே அவரிடம் சென்றாள்.
கண்ணீரோடு “சர்வாவை விட்ருங்க ப்பா அவரை எதுவும் செய்திடாதீங்க ப்பா” என்ற மகளை கண்டு பதறி விட்டார் சௌந்திரராஜன்.
மகளை அமர வைத்து என்னவென விசாரிக்கவும் அழுது கொண்டே விஷயத்தை சொன்னாள்.
“என்ன காணா போயிட்டாரா? என்னம்மா நீ, என்னை சந்தேக படறியா? அவ்ளோ மோசமானவனா உன் அப்பா?” என அவர் கேட்கவும் குழம்பிப் போனாள்.
“எங்க போனார்னு தெரியலையே ப்பா, அவருக்கு யாருமே இல்லை. நான் பேசலைன்னு எம்மேல கோவப்பட்டுட்டு எங்கேயும் போயிட்டாரா?” என்றாள்.
மகள் அரற்றுவதை காண சகிக்காதவர், “கண்டுபிடிச்சிடலாம் கவலை படாதம்மா” என ஆறுதல் சொன்னார்.
நாகா அவரது உதவியாளர்களோடு அங்கு வந்தார். சௌந்திரராஜன்தான் சர்வாவை ஏதோ செய்து விட்டதாக குற்றம் சுமத்தினார். தான் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்ன ராஜன் தானுமே தேடுவதாக சொன்னார்.
“எனக்கு நம்பிக்கை இல்லை, என் டவுட் உண்மைன்னு ஊர்ஜிதம் ஆனா உங்களை சும்மா விட மாட்டேன்” என சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார் நாகா.
அன்று முழுதும் சர்வாவை தேடும் வேலையில்தான் இருந்தார் ராஜன். மகளுக்காக மட்டுமின்றி அவருக்குமே தான் இதில் எக்கு தப்பாக சிக்கிக் கொள்வோமோ என்ற பயமிருந்தது.
தாங்கள் செல்லும் இடங்களுக்கு சென்று தேடப் போவதாக சொன்ன மகளை அதற்கு அனுமதிக்காமல் வீட்டிலேயே இருக்க சொன்னார். அப்பா சென்ற பிறகு அவருக்கு தெரியாமல் அம்மாவிடம் மட்டும் சொல்லி விட்டு வெளியில் சென்றாள்.
அவனோடு சென்ற எல்லா இடங்களுக்கும் சென்று பார்த்தாள், மீண்டுமொரு முறை அவனது வீட்டுக்கு சென்றாள். இப்படி அவனிடம் பேசாமல் இருந்திருக்க கூடாது என தன்னையே கடிந்து கொண்டாள்.
மாலையானதும் வீட்டுக்கு வரச் சொல்லி கண்டிப்போடு சொல்லி விட்டார் வைஜெயந்தி. இதற்கு மேல் வேறெங்கு செல்வது என அவளுக்கும் தெரியவில்லை. வீடு வந்தவள் ஒன்றும் சாப்பிடாமல் அழுது கரைந்து கொண்டிருந்தாள்.
மகளை பார்த்து பார்த்து கவலை கொண்ட வைஜெயந்தி, “அந்த தம்பி கிடைச்சிட்டாரா? ஏதாவது விவரம் தெரிஞ்சுதா?” என அரை மணி நேரத்துக்கு ஒரு முறை கணவருக்கு அழைத்து கேட்டுக் கொண்டே இருந்தார்.
இரவில் தாமதமாக வீடு திரும்பிய ராஜனின் வெளுத்துப் போன முகம் சாதகமாக ஏதும் தெரியவில்லை என்பதை உணர்த்தியது. சாப்பிட மறுத்த மகளை வற்புறுத்தி பால் அருந்தச் செய்து படுக்க வைத்தார் வைஜெயந்தி.
அடுத்த நாள் காலையில்தான் சர்வா மருத்துமனையில் இருக்கிறான் எனும் செய்தி மித்ராவின் செவியை வந்தடைந்தது.
காலை காபி பருகிக் கொண்டே தினசரி படித்துக் கொண்டிருந்த சௌந்திரராஜன் அழுகையும் பதற்றமுமாக வந்து நின்ற மகளை பார்த்து விட்டு திகைப்போடு எழுந்து நின்றார்.
“அவர் மயங்கிப் போய் கார் ஷெட்ல கிடந்தாராம், இப்போ ஹாஸ்பிடல்ல இருக்காராம்” இதையே திக்கலும் திணறலுமாக சொன்னவள் அடுத்து வார்த்தை இன்றி தேம்பிக் கொண்டிருந்தாள்.
இந்தக் கோலத்தில் மகளை கண்டவருக்கு நெஞ்சம் அடைப்பது போலிருந்தது. உள்ளிருந்து ஓடி வந்த வைஜெயந்தியும் என்ன விஷயமென கணவரிடம் கேட்டறிந்து கொண்டு, “என்னடி என்னாச்சாம், பயப்படற மாதிரி ஏதுமா?” என மகளிடம் கேட்டார்.
பதில் சொல்லாத மித்ராவின் அழுகை கூடிப் போனது. அவளின் பெற்றோர் பயந்து போய் விட்டனர். கல்லூரியில் விடுப்பு என்பதால் வீடு வந்திருந்த அவளின் தம்பி சஞ்சய்தான் அக்காவை சமாதானம் செய்து சர்வாவின் தற்போதைய நிலை பற்றி விசாரித்தான். மிருதுளா மூலமாக சர்வா பற்றி ஏற்கனவே அறிந்திருந்தான் அவன்.
“தெரியலடா, அன்கான்சியஸா இருந்தாராம், எஸ்டேட் ஆள் யாரோ பார்த்து ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போனதா சொல்றாங்க, பக்கத்து வீட்ல உள்ளவங்ககிட்ட என் நம்பர் கொடுத்திருந்தேன், அவங்கதான் இதெல்லாம் சொன்னது, இப்போ ஜி ஹெச்லதான் இருக்காராம்” என்றாள்.
கார் எடுப்பதற்காக சஞ்சய் விரைய தயக்கம் காட்டினார் ராஜன். நாகாவிடம் சொல்லி விட்டால் அவர் போய் பார்த்துக் கொள்வார் என்றார்.
“எப்படி அழறா அக்கா, இப்போ போய் என்னப்பா? வாங்க” சஞ்சய் அதட்டல் போட அடுத்த ஐந்து நிமிடங்களில் மற்ற மூவரும் காருக்குள் இருந்தனர்.
அவர்கள் மருத்துவமனை வந்து சேரும் போது சர்வா நினைவோடே இருந்தான்.
சில நாட்களாக அவனது முகத்தை நேரில் கண்டிருக்கவில்லை மித்ரா. கூடுதலாக மன அழுத்தம் வேறு.
படுக்கையில் அமர்ந்துதான் இருந்தான். அவனை கண்டதும் தன்னை மறந்து ஓடிச் சென்று அவனது தோளை அணைத்த வண்ணம் தேம்பினாள். அவள் தன்னிலை பெற்று விலக முழுதாக ஒரு நிமிடமானது.
ராஜன் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு ஒரு ஓரமாக நின்றிருக்க வைஜெயந்தி, “எப்படி இருக்கீங்க தம்பி?” என விசாரித்தார்.
“நல்லா இருக்கேன் அத்தை” என்றான்.
அவனது அத்தை என்ற விளிப்பில் கணவரை ஓரக்கண்ணால் சங்கடமாக பார்த்த ஜெயந்தி சர்வாவை பார்த்து சிரித்து வைத்தார்.
மித்ராவிடம், “அழாத மித்ரா, எனக்கு தெரியும் நான் நல்லா இருக்கேன். உன் கூட வாழாம அவ்ளோ சீக்கிரம்லாம் போயிட மாட்டேன்” என்றான்.
காரை நிறுத்தி விட்டு அப்போதுதான் வந்த சஞ்சய் அவனிடம் தயக்கமில்லாமல் பேசினான்.
“ஏங்க நம்ம மித்துக்கு இந்த தம்பி நல்ல பொருத்தம்தான் என்ன?” என சின்ன குரலில் கேட்ட மனைவியை முறைத்த ராஜன் வேறெதுவும் சொல்லவில்லை.
மகனிடம் தாங்கள் கிளம்புவதாக சொன்னார்.
“எப்படிப்பா போவீங்க, சீஃப் டாக்டர் ரவுண்ட்ஸ் வர்றப்போ என்ன ஏதுன்னு கேட்டுட்டுதான் கிளம்பனும், எப்படியும் ரெண்டு மணி நேரம் மேல ஆகும்ப்பா நாங்க வர” என்றான் சஞ்சய்.