அத்தியாயம் – 14

சிவாவைப் பார்த்ததும், பைரவிக்கு ஒரு இனிய படபடப்பு. அவன் தானா.. அவனே தானா என்று கண்களை லேசாய் தேய்த்துப் பார்க்க, அவள் அப்படி பார்த்த விதத்தில், அவனுக்கு புன்னகை பூக்க, அதே புன்னகையோடு தான் அவனைப் பார்த்துக்கொண்டே அமர்ந்து இருந்தாள்.

கடந்து செல்வானா, இல்லை பக்கம் வருவானா?!

நொடியில் மனது பட்டிமன்றம் நடத்த, கடந்து மட்டும் செல்லட்டும் காலை  உடைத்து உக்கார வைக்கிறேன் என்று அதே மனதே பதில் சொல்ல, அவளது புன்னகை மேலும் விரிய,

“சிரிப்பெல்லாம் பயங்கரமா இருக்கே…” என்றபடி வந்து பக்கம் தான் அமர்ந்தான்.

அன்று போல் இடைவெளி விட்டு அல்ல, சற்றே நெருக்க பாவனை.

“இல்ல நீங்க க்ராஸ் பண்ணி போனா, எந்த காலை தட்டிவிடுறதுன்னு உடைக்கிறதுன்னு யோசிச்சேன்…” என்று அவளும் உள்ளதை சொல்ல,

‘அடிப்பாவி…’ என்று பார்த்தான்.

“நிஜமா…” என்று பாவனையோடு சொன்னவள்,

“என்ன சார் வீடு கட்ட, கடல் மண் எடுத்துட்டு போலாம்னு வந்தீங்களா?” என்று கேலி பேசினாள்.

உள்ளம் அப்படியொரு உல்லாசத்தை உணர்ந்தது அவளுக்கு.

“ம்ம் கடல் மண்ணுல யாராவது வீடு கட்டுவாங்களா?!” என்று பதில் கேள்வி அவன் கேட்க,

“பின்ன எதுவும் பொக்கிஷம் அள்ளிட்டு போகலாம்னு வந்தீங்களோ…” என்றாள் அவளும் பதிலுக்கு.

“ஆமா பொக்கிஷம் தான். ஒரு மகாராணி எனக்காக இங்க வந்திருக்காங்கன்னு பட்சி வந்து சொல்லுச்சு..” என,

“ஓஹோ.. யாரது? எங்க இருக்காங்க..” என்று அங்கே இங்கே என்று பார்வையை திருப்பி பைரவி பார்க்க,

சிவாவோ “அவங்க பேரு பைரவி..” என, பட்டென்று திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

இருவருக்கும் நேர்கொண்ட பார்வை தான்.

காதல் கொண்ட பார்வை.

மேலும் மேலும் காதல் கொள்ள வைக்கும் பார்வை.

சிவா சளைக்காது பார்த்து வைக்க, ஒரு அளவிற்கு மேலே, பைரவியால் அதனை தாங்க இயலவில்லை. தலையை தாழ்த்திக்கொள்ள,

“என்ன திடீர்னு…” என்று இருவருமே ஒருபோல் ஆரம்பிக்க, அடுத்த நொடி இருவருக்கும் ஒன்றாகவே புன்னகை மலர, இங்கே வரும் வரைக்கும் இருந்த மன குழப்பம், சோர்வு எல்லாம் எங்கேயோ காணாமல் போய்விட்டது.

“உங்களோட ஒருநாள் இப்படி வந்து உக்காந்து பேசணும்னு நினைச்சேன்..” என்று அவளே ஆரம்பிக்க,

“ஒருநாள் பேசினா போதுமா உனக்கு?” என்று அவன் தொடர,

“போதாது தான். ஆனா உங்க  மனசுல என்ன இருக்குன்னு எனக்கெப்படி தெரியும்…” என்று பீடிகை போட்டாள்.

“ஓ..! அப்போ உனக்குத் தெரியாது?” என்று கேட்க,

“ம்ம்ஹூம்…” என்று தலையை இட வலமாய் ஆட்ட,                         

“சரிப்பா, அப்போ நான் கிளம்புறேன். என்ன பேசி என்ன ஆகப் போகுது…” என்று வேண்டுமென்றே அவன் எழப் பார்க்க,

“ஏய்.. ஏய்…” என்று அவன் கரம் பற்றி இழுத்தவள் “போனீங்க காலை உடைச்சிடுவேன்..” என்று மிரட்ட,

“ஐயோ இந்த பொண்ணு என்னை கை பிடிச்சு இழுக்குது…” என்று வம்பு செய்தான் சிவா.

இவர்களை கடந்து சென்ற ஓரிருவர், திரும்பிப் பார்க்க “அச்சோ.. சாமி..” என்று அவன் கரம் விட்டவள், வேகமாய் முகத்தை மூடிக்கொள்ள,

“அது.. அந்த பயம் இருக்கணும்…” என்று போலியாய் மிரட்டினான்.

இப்படியே பேச்சும், வம்பும், சிரிப்புமாய் அடுத்த பத்து நிமிடம் கழிய, நான் உன்னை விரும்புகிறேன் என்று இருவருமே வாய் விட்டு சொல்லவில்லை. ஆனாலும் மற்றவரால் அதனை உணர முடிய, மற்றவர்களுக்கு உணர்த்த முடிவதாய் இருக்க, பைரவியோ தனக்கென்று ஒரு ஜீவன் கிடைத்ததில் பெரும் ஆசுவாசம் அடைந்து போனாள்.

பின் என்ன நினைத்தாளோ “சிவா…” என்றாள் ஒருவித ஆழ்ந்த குரலில்.

“ம்ம்…” என்றவன் அவளை நோக்க,

“நான் ஒரு விசயம் முடிவு பண்ணா, அதுல உறுதியா தீவிரமா இருப்பேன். என்ன ஆனாலும், எது நடந்தாலும் அதுல இருந்து பின்வாங்க மாட்டேன். எல்லாத்தையும் தாண்டி, இது நம்ம வாழ்க்கை. கண்டிப்பா சில பல போராட்டங்கள் நம்ம சந்திக்கனும்னு எனக்குத் தெரியும். ஆனா எந்த சூழ்நிலைலயும் என்னை நீங்க விட்டுக் கொடுத்திடக் கூடாது. சரியா ?” என்று கேட்க,

அவளின் ஒவ்வொரு வார்த்தையையும் தீவிரமாய் கிரகித்துக் கொண்டு இருந்தான் சிவா.

“அதே போலத்தான் நானும். எந்த காரணத்திற்காகவும், யாருக்காகவும், உங்களை விட்டு நான் விலகி நிக்க மாட்டேன். இது ப்ராமிஸ்…” என்று அவன் கரம் பற்றி அவள் சத்தியம் செய்ய, சிவா திடுக்கிட்டுப் பார்த்தான்.

“என்னடா முதல் நாளே இவ இப்படி பேசுறாளேன்னு பாக்குறீங்களா?” என, சிவா பதில் சொல்லாமல் இருக்க,

“காரணம் என் அம்மா.. அவங்க இருந்திருக்கணும் இப்போ. இருந்திருந்தா ஒருவேளை நம்ம மீட் பண்ணிருப்போமான்னு கூட தெரியலை…” என்று சொல்லி லேசாய் ஒரு விரக்தி புன்னகை சிந்தியவள்,

“என் அப்பான்னு சொன்ன அவருக்கும், எங்க அம்மாக்கும் கல்யாணம் ஆகல. ஆனாலும் ரெண்டு பேரும் ஒண்ணா தான் வாழ்ந்தாங்க. இது ரெண்டு குடும்பத்துக்கும் தெரியும். டெல்லில அவங்க பெரிய ஆளுங்க. அவருக்குன்னு குடும்பமும் இருக்கு. எங்கம்மாவ விரும்பினதுக்கு அப்புறமும் கூட அவர் வீட்டு ஆளுங்க பேச்சை மீற முடியாம அவருக்குன்னு ஒரு வாழ்க்கை, குடும்பம்னு அங்கே இருக்க, எங்கம்மாவையும் விலகிப் போக அவர் விடல. அம்மாவும் அவ்வளோ      விரும்பிருக்காங்க. அவரும் கூட.

இதெல்லாம் சரி தப்புன்னு நான் ஆராய முயற்சிக்கவே இல்லை. ஆனா நான் பிறந்ததுக்கு அப்புறம் ரெண்டு பேருக்கும் நடுவில சின்ன சின்ன விரிசல்கள் வந்தது. எல்லாருக்கும் தெரியுமே, என்னையும் கல்யாணம் பண்ணிக்கோங்க, உங்க குடும்பத்துல ரெண்டு கல்யாணம் எல்லாம் சகஜம்தானே அப்படின்னு அம்மா கொஞ்சம் போர்ஸ் பண்ணிருப்பாங்க போல.

ஆனா அவர் கடைசி வரைக்கும் பிடி கொடுக்கவே இல்லை. அப்போ அவர், அரசியல்ல வேற வளர்ச்சிக்கு வந்துட்டு இருந்த சமயம். அம்மாக்கு அப்போ எதிர்பாராத விதமா ஒரு பெரிய பிரச்சனை இங்க. அப்போ அவரோட ஹெல்ப் கேட்டிருக்காங்க. தக்க நேரத்துல கூட நிக்க வேண்டிய அவரே, தள்ளிப் போயிட்டார். அம்மாவை விட்டுட்டு, என்னை விட்டுட்டு, உங்க பிரச்சனை நீங்க பாருங்கன்னு போயிட்டார். அதுக்கப்புறம் அம்மா அவரோட தொடர்புல இல்லவே இல்லை…” என,

இத்தனை சொல்லும் போது, பைரவியின் முகம் காட்டிய ஒவ்வொரு பாவனையும் அத்தனை வலியை, அவமானத்தை சொல்லாமல் சொல்ல,

சிவாவிற்கு ‘ஐயோ…’ என்று ஆனது.

“இதெல்லாம் என் அம்மாவோட வாழ்க்கை தான். என்னை அவங்க இதுகுள்ள கொண்டு வரவே இல்லை. ஹாஸ்டல் ஹாஸ்டல் ஹாஸ்டல் தான். ரொம்ப இக்கட்டான சூழ்நிலைல கூட, என்னை அவங்களோட இருக்க விடல அம்மா. அவங்க வாழ்கையோட நிழல் கூட என் மேல படக்கூடாதுன்னு ரொம்பவே கண்டிப்பா இருப்பாங்க..” எனும்போது அவளுக்கு குரல் உடைந்து, அழுகை வரத் தொடங்க,

“ஹேய்… பைரவி… என்னம்மா இது?!” என்று ஆதுரமாய் சிவா கேட்க,

“இல்ல.. இதெல்லாம் நான் இதுவரைக்கும் யார்கிட்டயும் ஒப்பனா பேசினது இல்லை. என்னவோ தெரியலை.. உங்க கிட்ட எல்லாமே என்னை மீறி நடக்குது…” என்றவள்,

“நான் ஒன்னு சொல்வேன்…” என்றாள், அழுந்த முகத்தைத் துடைந்து அவன் முகத்தை நேராய் பார்த்து.

அவனும் அதுபோலவே பார்த்தவன் “என்ன சொல்லணும் சொல்லு…” என்று கண்கள் மூடித் திறந்து பேச,

“என்னோட பேரன்ட்ஸ் பத்தி, என் பிரண்ட்ஸ் அவங்க பேமிலிக்கு மட்டும் தான் தெரியும். எனக்கு இப்பவும் ஆசைதான் எங்கம்மா இவங்கதான்னு சொல்லணும்னு. ஆனா எனக்கே எனக்கான அடையாளம் நான் உருவாக்கிட்டு அப்புறமா சொல்லனும்னு ஒரு ஆசை…” என,

“இவ்வளோதானா?!” என்றான் சிவா வெகு இயல்பாய்.

அவள் பேசுவது எல்லாம் அவனுக்கும் மனதினில் நிறைய தாக்கத்தை கொடுத்தது தான். இருந்தும் அவளுக்காகவே இயல்பாய் இருப்பது போல் காட்டிக்கொள்ள,

“என்ன இப்படி சொல்றீங்க?!” என்றாள் பாவமாய்.

“வேற என்ன சொல்லணும் பைரவி?!” என்றவன், அவள் முன்னே தன கரத்தினை நீட்ட, நீட்டிய அவன் கரம் பார்த்தவள், யோசனையாய் அவன் முகம் பார்த்து, பின் மெதுவாய் அவன் கரம் மீது தன் கரம் வைக்க, அடுத்த நொடி அவள் கரத்தினை அழுந்த பற்றிக்கொண்டான்.

“நான் ஒன்னே ஒன்னு சொல்றேன்… நீ என்மேல வைச்சிருக்க இந்த நம்பிக்கை என்னிக்கும் வீண் போகாது.. போதுமா?!” என,

“ம்ம்…” என்று புன்னகைத்தவள்,

“ஒரு சான்ஸ் ஒன்னு வந்திருக்கு. இன்னும் ரிக்கார்டிங் டேட் உறுதியாகல. பெரிய மியூசிக் டைரக்டர்..” என்று விபரங்கள் சொன்னவள்,

“அட்லீஸ் சினிமால ஒரு பாட்டாவது பாடிடனும். அடுத்து தான் நான் இன்னோரடா பொண்ணுன்னு சொல்லணும்…” என்றும் பேச, அவள் மனதளவில் அவளின் அம்மாவிற்கு நிறைய ஏங்குகிறாள் என்பது சிவாவிற்கு நன்கு புரிந்தது.

“ஒரு பாட்டு என்ன?! தினமும் ஒரு பாட்டு கூட உனக்கு பாட சான்ஸ் வரும்…” என்று மெச்சுதலாய் சொன்னவன்,

“என்ன ரெண்டு நாளா எந்த வீடியோவும் போடாம இருக்க?” என,

“ஹேய்! நீங்க அதெல்லாம் பாலோ பண்றீங்களா?!” என்றாள் ஆச்சர்யமாய்.

“ஹா ஹா…” என்று கொஞ்சம் சத்தமாய் சிரித்தவன் “ராத்திரி தூங்குறப்போ என்ன வேலை.. உன்னை பார்க்காம நான் தூங்கி நாள் ஆச்சு…” என, பைரவியோ கண்களை விரித்துப் பார்க்க,

“நிஜமா…” என்றான்.

“எ.. எப்போதிருந்து..?!” என்று கேட்டவளுக்கு என்னவோ ஒரு இனிய படபடப்பு.

“அது தெரியலை.. ஆனா உன்னைப் பார்த்ததுமே என்னவோ ஒன்னு எனக்குள்ள நடந்துச்சு…” என்று சொல்லி, தன் நெஞ்சை லேசாய் தேய்த்துக்கொள்ள, பைரவி அவனையே காதல் நிரம்பி பார்க்க,

“இப்படியெல்லாம் பார்க்காத சரியா..?” என்று அவள் மூக்கினை பிடித்து லேசாய் ஆட்டினான் சிவா.

இருவருக்குமே, என்னவோ பல வருடங்களாய் காதலிப்பது போல இருந்தது இப்போது. பேச்சுக்கள் மிக இயல்பாய் வர, தொடுகைகளும் அப்படியே இலகுவாய் வர, அடுத்து நேரம் போனதே தெரியவில்லை.

கடற்கரையில், கூட்டம் குறையத் தொடங்க, சிவா சுற்றிமுற்றி பார்த்தவன் “கிளம்பலாம்…” என்று சொல்ல, உதடு பிதுக்கி பைரவி அவனை பாவமாய் பார்த்து வைத்தாள். 

“சொன்னா கேட்கணும் பைரவி…” என்றவனின் குரலில் இருந்த கண்டிப்பு, அவளுக்கு மழுக்கென்று மீண்டும் கண்களில் நீரை கட்டிவிட்டது.

கிளம்பவேண்டும் என்று சொன்னதால் அழுகிறாளோ என்று சிவா பதறிப் பார்க்க, அவளோ எழுந்து நின்றவள் “எங்கம்மா இப்படித்தான் சொல்வாங்க…” என்றாள் முயன்று வரவழைத்த புன்னகையோடு.

“எதையாவது நினைச்சிட்டே இருக்காம, ரிலாக்ஸா போய் சாப்பிட்டு  தூங்கு…”  என,

“நம்ம சேர்ந்து போய் சாப்பிடலாமா?” என்றாள் ஆவலாய்.

முதல்முறையாய் கேட்கிறாள் முடியாது என்று அவனால் சொல்ல முடியுமா என்ன?!

ஆனால் பைரவி எப்படியான உணவகங்களில் உண்பாள் என்பது அவனுக்கு புரியாமல் இருக்குமா என்ன?! நேரம் வேறு கடந்துவிட்டது. அதனால் லேசாய் யோசிப்பது போல் இருக்க

“என்னாச்சு?!” என்றாள் கேள்வியாய்.

“இல்ல எந்த ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறதுன்னு நினைச்சேன். டைம் வேற ஆகுது இல்லையா..?” என,

அவன் தயக்கம் புரிந்து “ஹோட்டலுக்கு ஏன் போகணும்? எங்க வீட்டுக்கு வாங்க. செல்விம்மா சமையல் தான். நம்பி சாப்பிடலாம்…” என்று அவனை வீட்டிற்கு அழையாமல் அழைக்க,

“ம்ம்ஹூம்…” என்றான் மறுப்பாய் வேகமாய்.

“ஏன் என்னாச்சு?!” என்று அவள் திரும்பக் கேட்க,

“அனாவசியமா நான் அங்க வரக் கூடாது பைரவி…” என்றவனின் குரலில் இருந்த அழுத்தம் உணர்ந்தவள்,

“என் பிரண்ட்ஸ் எல்லாம் வர்றாங்க தானே…” என்றாள்.

“நான் உன் பிரண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கேனா?!” என்று அவன் திரும்பக் கேட்க,

“ம்ம்ம்ம்ம்ம்…” என்று இழுத்து அவள் நிற்க,

“வந்தா உன்னை தனியா விட்டுட்டு வர எனக்கு நிஜமா மனசு வராது. நீ, நீயா ஹாஸ்பிட்டல் போய் அட்மிட் ஆனது நினைச்சே இப்போ வரைக்கும் எனக்கு மனசு குடையுது…” என்றவனின் கண்களில் தெரிந்த உணர்வு, அவளை மேலும் அவன்பால் காதல்கொள்ள வைக்க,

“இப்போதைக்கு செல்வியக்காக்கும்  எதுவும் தெரியவேணாம்…” என்றான் உறுதியாய்.

“சரி…” என்று அவன் உடனே ஒப்புக்கொள்ள,

“ஆச்சர்யமா இருக்கு…” என்றான் பட்டென்று.

“எது?!” என்று பைரவி புருவம் சுருக்கி கேட்க,

“ஹ்ம்ம்.. இப்படி நான் சொல்றதுக்கு எல்லாம் சரின்னு நீ நல்ல பிள்ளையாட்டம் சொல்றது. எப்பவுமே சண்டைக்கு வர்ற மாதிரி தானே இருப்ப…” என,

“ம்ம்ச். அது அப்படித்தான்.. இனிமேலும் சண்டை எல்லாம் போடாம இருப்பேன்னு எல்லாம் என்னால உறுதியா சொல்ல முடியாது…” என்று அவளும் சொல்ல,

“நானும் தான்.. கோவமே உன்மேல படமாட்டேன்.. இப்படியே பேசிட்டு இருப்பேன்னு எல்லாம் சொல்ல முடியாது…” என்று சொல்ல, இருவருமே பேசியபடியே விடைகொடுத்து தங்களின் வாகனத்தில், அவரவர் இருப்பிடம் செல்ல,

சிவா ஷெட்டிற்கு வந்ததுமே, அடுத்த சில நொடிகளில் அவளுக்கு அழைத்து “வீட்டுக்குள்ள போயிட்டியா?” என்று கேட்க,

“ம்ம் வந்துட்டேன்…” என்றவளுக்கு, என்னவோ சொல்லவே முடியாத அளவு சந்தோசம் உணர முடிந்தது.