சில்லென புது மழைத்துளி!

7

சுபிக்ஷா, கிளம்பிக் கொண்டிருந்தாள் சென்னைக்கு.. வீரா சரியாக இவள் கிளம்பிவிடுவாள் என வந்துவிட்டான்.. “என்ன மாமா, அதுக்குள் கிளம்பிட்டீங்க, நாளைக்கு காலையில் போகலாமே.. என்ன ரெண்டுமணி நேரம்தானே.. நானே கொண்டு வந்து விட்டு வருவேனே.. எதுக்கு நைட் நேரத்தில்” என பரபரப்பாக கேட்டான்.

இதை கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதரன் லக்ஷ்மிகாந்த்னின் அண்ணனுக்கு கொஞ்சம் டென்ஷன் ஆனது “வீரா, நீ எங்க இங்க.. வீட்டில் வேலை இல்லையா” என்றார். ஸ்ரீதரன் வீராவின் உறவை ஆதரிப்பதில்லை. தன் தந்தைதான் எதோ பிதற்றிக் கொண்டிருக்கிறார் என தெரியும் அவனுக்கு.

இப்போது சுபியின் மாமனாரே “ஏன் டா.. அவனை ஏன் அதட்டுற.. வீரா, இந்த சாமானை எல்லாம் ஏற்றி விடு” என்றார்.

வீரா காரின் சாவி வாங்கிக் கொண்டு சென்று அழகாக ரிவாஸ்எடுத்து.. திருப்பி  வாசலில் நிறுத்தி சாமான்களை, தேங்காய்.. நெய்.. எண்ணெய்.. விசாகனுக்கு விளையாட்டு சாமான்கள்.. என ஸ்ரீதரும்.. வினுவும் வாங்கி வைத்திருந்த பொருட்களை எல்லாம் டிக்கியில் ஏற்றினான்.

இப்போது, சுபியின் மாமனார் பேரன் கையில் கத்தையாக பணத்தை திணித்தார். பேரனின் கன்னம் நெற்றி என முத்தமாக கொடுத்தார். 

அவரின் பெரியமகன் “அப்பா..” என அவரின் தோள் தொட சுதாரித்தவர் மருமகளிடம் “ஜாக்ரதையா இருங்க.. நல்லா சாப்பிடு ம்மா.. எதைபற்றியும் கவலை படாத.. எல்லாம் நாங்க பார்த்துப்போம்.. நீ இப்படியே தைரியமா இரு” என சொன்னவர் கண்களை துடைத்துக் கொண்டு பேரனுக்கு டாட்டா காட்டி விடை கொடுத்தார்.

பெரியவர்கள் எல்லோரும் சுபியியும்.. விசாகனையும் நினைத்து கவலைதான். நாங்கள் இருக்கிறோம் என இப்படி பலவழிகளில் சொல்லிக் கொண்டே இருந்தனர் இந்த இரண்டு வருடமாக.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!@!@!

இன்று, கருணாவின் ரெசார்ட்டில் ஒரு MLAவுடைய மருமகனின் பிறந்தநாள் விழா. அதனால், நான்காவது ப்ளோர் முழுவதும்.. அவர்களின் கட்சி ஆட்கள்.. நண்பர்கள்.. குடும்பத்தார் என அந்த ஹோட்டல்.. அந்த இடமே  கலவரமாகிக் கொண்டிருந்தது.

கருணா நேற்றிலிருந்து இங்கேதான் இருக்கிறான். அமைதியாக அவன் தன் அலுவகல அறையில் இருந்தான். எல்லாம் சரியாகவேதான் சென்றுக் கொண்டிருந்தது.

சாரதா, அண்ணனை அழைத்தாள்.. கருணாவிற்கு தங்கையின் அழைப்பை ஏற்பது என்பது பெரும் பிரச்சனை எப்போதும். எதுவாக இருந்தாலும் பிரகாஷ்தான் அழைப்பான். தங்கை இந்த மூன்று மாதமாக துரத்திக் கொண்டிருக்கிறாள்.. தன் திருமணம் பற்றி. எனவே பேசுவதில்லை அதிகம்.

இன்று அழைத்தாள். எடுப்பதா வேண்டாமா என யோசனையில் இருக்கும் போதே.. பிரகாஷ் அழைத்தான் கருணாவிற்கு.

கருணா பிரகாஷின் அழைப்பினை ஏற்றான்.. பிரகாஷ் “கருணா, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.. பொறுமையா கேளு..” என சொல்ல சொல்ல.. சாரதா யாரிடமோ சத்தம் போடுவது.. கருணாவின் காதில் விழுந்தது.

கருணா “என்னாச்சு பிரபா” என்றான்.

பிரகாஷ் “காலையில், செந்தூரன் கூப்பிட்டிருந்தான்.. இப்பவும் அவனிடம்தான் பேசிட்டு இருக்கா..  உன் தங்கை.” என்றான்.

கருணா அழுத்தமான குரலில் “எதுக்கு அவன்கிட்ட பேசுறா இவ..” என்றான் நிதானத்தோடு. எதோ பிரச்சனை என உள்வாங்கிக் கொண்டான்.

பிரகாஷ் “அவன்..” என சொல்லி நொடி நேரம் அமைதியாக இருந்து.. பின் “அவங்களுக்கு.. குருவை பார்க்கணுமாம். அவ, அதான் அந்த லாவண்யா பார்க்கனும்ன்னு ஆசைப்படுறாளாம். செந்தூரன் கேட்க்கிறான்.” என்றான் நிதானமான குரலில்.

கருணாவிற்கு என்ன செய்ய வேண்டும் இதை எப்படி எடுக்க வேண்டும் என ஸ்தம்பித்த நிலை.

பிரகாஷ் நேரம் கொடுத்து “கருணா.. என்ன செய்யலாம்” என்றான்.

கருணா பேசவேயில்லை.

பிரகாஷ் “உன் தங்கை அழறா.. உனக்கிருக்கும் ஒரே பிடிப்பு குருதான் அவனையும் பிடிங்கிக் கொள்ள பார்க்கிறாள். என்ன திடீர் பாசம் அவளுக்கு, என சண்டை செந்தூரனோடு. செந்தூரன், ஒருமுறை பார்த்தால் போதும்.. என கெஞ்சுகிறான்.. சாரதா, நான் இதை அண்ணனிடமே சொல்ல மாட்டேன் என சத்தம் போடுகிறாள். ஆனால், இது உனக்கு தெரியனுமில்ல.. நீ என்ன சொல்ற” என்றான்.

கருணா “என்ன டா சொல்லணும்.. தெரியலையே” என்றான், நெற்றியில் தட்டிக் கொண்டு.

இப்போது சாரதா போனினை வாங்கி “நீ கல்யாணம் செய்துக்க.. ப்ளீஸ். எப்படி கேட்க்கிறாள் பார்.. கோர்ட்டில்.. இந்தனை நாட்களில்.. எங்குமே ஒருவார்த்தை கேட்கவில்லை.. குருவை பார்க்கணும் என. இப்போ.. எதோ அவன் குழந்தை வந்ததும்.. திடீர் பாசம் போல.. குருவை பார்க்கனும்ன்னு கேடக்கிறா.. நான் அனுப்ப மாட்டேன். ஈவினிங் கூப்பிடறேன்னு சொன்னான்.. நீ என்ன சொல்ற” என்றாள் முறையான ஏற்ற இரக்கமான குரலில்.

கருணா “சாரதா, நீ அமைதியா இரு..” என்றான்.

பிரகாஷ் போனினை இப்போது மனையாளிடமிருந்து வாங்கிக் கொண்டான், சற்று தள்ளி வந்தான் “இது, நாம யோசிச்சி முடிவெடுக்கணும் கருணா, குரு சின்ன பையன்.. நம் கூடதான் பிள்ளை இருக்கனும் என கோர்ட் சொன்னாலும்.. அம்மா கேட்க்கும் போது.. கூட்டி போய் காட்டனும் என்பதும் இருக்கே. சாரதா கோவமாக பேசி.. அது ஏதாவது கேஸ் ஆகிட போதுன்னு நான் செந்தூரன்கிட்ட இப்போ பேச விடலை. பாதியில் நான் பேசி.. வைத்திட்டேன்.” என விவரம் சொன்னான்.

கருணாவிற்கு யோசனைதான் அதிகமாகியது. குரு.. என்ன சொல்வான்.. என்ன நினைப்பான்.. அம்மாவை பார்க்க வேண்டும் என எண்ணுவானோ எனதான்  யோசனை சென்றது.

பிரகாஷ் “என்ன கருணா..” என்றான்.

கருணா “தெரியலையே பிரபா. யோசிக்கலாம், உடனே எல்லாம் ஏதும் சொல்ல வேண்டாம்.. நாலுநாள்.. சும்மா சமாளி.. அவங்க என்ன செய்யறாங்க பார்க்கலாம்” என்றான்.

கருணாவிற்கு முன்பெல்லாம் இதே அசால்ட்டு அலட்சியம்தான். இப்போது உள்ளே பயமிருந்தாலும்.. உடனே முடிவெடுக்க வேண்டியில்லை. அத்தோடு, மகன்.. ‘அவன் என்னை விட்டு போயிடுவானோ.. என்னை வேண்டாம் என்றிடுவானோ’ என இறுகியிருந்த மனது கொஞ்சம் உருக தொடங்கியது.

கருணாவிற்கு நாளை மதியம் வரை.. வேலை சரியாக இருந்தது.

தன் வேலைகளை முடித்துக் கொண்டு.. வீடு வந்தான். அன்னை இன்னமும் பள்ளியிலிருந்து வந்திருக்கவில்லை. 

கருணாவை பார்த்த, தந்தை “வாப்பா.. ரத்தினாகிட்ட காபி வேணும்ன்னா சொல்லிடு..” என்றார்.

கருணா சாய்ந்து அமர்ந்தான் ஏதும் சொல்லாமல்.

ரத்தினம் அங்கே வேலை செய்பவர்.

ரத்தனா அக்கா பெரியவரின் சத்தம் கேட்டுக் கொண்டே வந்தவர் “தம்பி காபி தரவா” என்றார் எதிரே வந்து நின்று. எப்போதும் இந்த நேரத்திற்கு வரமாட்டான் கருணா. வந்து விசாரித்தார்.

கருணா “இருங்க, பிரெஷ்ஷாகி வரேன்.. பத்து நிமிஷம் கழிச்சி.. ஒரு இஞ்சி டீ போடுங்க” என்றவன் அறைக்கு  சென்றான்.

கருணா போன் பேசி.. குளித்து என ஒருமணி நேரம் சென்றுதான் ஹாலுக்கு வந்தான். ரத்தனா அக்கா, சூடாக சுண்டலும்.. டீ யும் கொண்டு வந்து வைத்தார். கருணா “தேங்க்ஸ் க்கா” என எடுத்துக் கொண்டான்.

மீண்டும் போன், தன் அறைக்கு மேலே சென்றுவிட்டான்.

மாலை இருட்ட தொடங்கியதும்.. அன்னை வந்து சேர்ந்தார். கணவர் ‘கருணா வந்திருக்கான்’ எனவும் எப்போது வந்தான் என்ன ஏதும் என கேட்டுக் கொண்டவர்.. ப்ரெஷ்ஷாகி மகனை போனில் அழைத்து கீழே வர சொன்னார்.

அருணாகிரி, தன் மனைவியின் நிலை பார்த்துவிட்டு, இன்று சீக்கிரமாக வாக்கிங் சென்றுவிட்டார்.

கருணா வரவும்.. சாரதா.. செந்தூரன் அழைத்தது பற்றி பேசினார். தீரவில்லை.. விசாலாட்சி ‘பேரனை அவள் கண்ணில் காட்டமாட்டேன். நீ சொல்லிடு எந்த கோர்ட்டுக்கு போனாலும் நாம பார்த்துக்கலாம். சீக்கிரம் உனக்கு கல்யாணம். 

இந்தமுறை.. எப்படி பார்க்கனும்னு சொல்லிடு.. போனதரம் நாங்க பார்த்ததுதான் சரியா இல்லை.. இந்தமுறை நீ கொஞ்சம் பாரு. 

என்ன வயசு உனக்கு.. அப்படி என்ன சந்நியாசி வாழ்க்கை உனக்கு. 

அப்படியே இருந்தாலும் நீ வாழு.. என் பேரனுக்கு அம்மா வேண்டும்.. கண்டவள் எல்லாம் வந்து சொந்தம் கொண்டாட கூடாது. போனவள் அப்படியே போயிட வேண்டியது தானே.. இதென்ன விட்டகுறை மாதிரி.. அக்கறை” என பேசி தீர்த்தவர்.. தங்களின் அறைக்கு சென்று கதவினை சாற்றிக் கொண்டார். மனது தாங்கவில்லை, எத்தனையை தாங்குவார். குழந்தை அன்னையை பார்த்தால் உருகாமல் இருப்பானா.. என பயம் அவருக்கு.

கருணா மறுத்து இந்தமுறை ஒருவார்த்தை பேசவில்லை. ‘தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும்’ என்ற எண்ணம்.. நேற்றே வந்துவிட்டது அவனுக்கு. அதை இப்போது எல்லோரும் சொல்ல.. ஸ்த்திரம் கொண்டது அந்த  எண்ணம்.

ரத்தனா அக்கா இட்லி சாம்பார் செய்துவிட்டு.. கிளம்பிவிட்டார். அருணகிரி வாக்கிங் முடித்து வந்தவர்.. யாருமில்லாததை கண்டு.. தங்கள் அறைகதவினை தட்டினார்.. அவரின் மனையாள்.. கதவினை திறந்தார். கணவன் “சாப்பிட வா..” என்றார்.

அவரின் மனையாள் “நீங்க சாப்பிடுங்க, எனக்கு வேண்டாம்” என்றார். அருணகிரி இரண்டு நிமிடம் நின்றார்.. விசாலாட்சி “என்ன.. நீங்க போட்டு சாப்பிடமாட்டிங்களா” என்றார் அதட்டலாக.