அத்தியாயம் – 13

இதோ முப்பது நாட்கள்  சிறகடித்துப் பறந்துவிட்டது. சிவாவின் மெக்கானிக் ஷெட்டின் மீது கட்டிடம் கட்டவும் ஆரம்பமாகி இருந்தது. அன்று தாமஸ் உடன் கடைக்கு வந்தவள், அவனைப் பற்றிச் சொல்லி வாய்ப்பு கேட்க, ஜானினது தம்பி என்றதுமே

“இவன் அண்ணனுக்குத் தெரியுமா?” என்றுதான் கேட்டான் சிவா முதலில்.

“தெரியாம என்ன? அவன் விஷயம் வேற, இவனது வேற. முடியுமா முடியாதா?” என்று கொஞ்சம் கறாராய்த்தான் பேசினாள் பைரவி.

‘என்னடா இது…’ என்று மணியும் சிண்டுவும் பார்க்க,

“முடியுமான்னு  இவன்தான் சொல்லணும்…” என்று சிவா, தாமஸ் பார்த்து சொல்ல,

தாமஸ் ஒருமுறை இடத்தை சுற்றிப் பார்த்தவன் “ண்ணா சூப்பரா பண்ணிடலாம் ண்ணா. சைட்ல இருக்க இடம் வேணாம். இந்தபக்கம் காயலான் கடை இருக்குல, ஒரு அஞ்சடி சேர்த்து போடுவோம். என்ன செல்வியக்கா இடமும் சேர்ந்து வந்தா, நல்லா பெருசாவே மேல கட்டலாம்…” என,

சிவாவின் யோசனை கண்டு “செல்விம்மா கிட்ட நான் பேசுறேன்…” என்றாள் பைரவி.

செல்விக்கு அலைபேசியில் அழைத்தவள், தாமஸ் சொன்னதைச் சொல்ல, சிறிது நேரத்தில் செல்வி ஷெட்டிற்கு வந்துவிட்டார். 

 “சிவா நீ கட்டிடம் கட்டு. கீழ ஒரு கடை போல கட்டிவிடு. நீ என்ன வாடகை சொல்றியோ  நான்  வாடகை கொடுக்கிறேன்…” என்று செல்வி சொல்ல,

பைரவியும் கூட “ஆமா எத்தன நாளைக்குத்தான் செல்விம்மா ரோட்ல  கடை போடுவாங்க. சின்னதா ஒரு ஹோட்டல் மாதிரின்னா நல்லாருக்கும் தானே…” என, அதற்குமேல் அவன் எங்கே மறுப்பு சொல்லப் போகிறான்.

“என்ன தாமஸ் ஓகே தானே..” என்று சிவாவிற்கு பதில் பைரவியே பேச,

“அவர் ஒண்ணுமே சொல்லலையே…” என்றான் சிவாவைப் பார்த்து.

“சரின்னு சொல்லுங்களேன்…” என்று பைரவி பேச, சிவாவின் தலை தன்னப்போல் ஆட,

“இன்னிக்கு நல்ல நாள் தான். வரும்போதே பார்த்துட்டு வந்தேன். நேரம் கூட நல்லா இருக்கு. அட்வான்ஸ் போல ஏதாவது கொடுத்து முடிவு பண்ணிக்கோங்க…” என்று அடுத்து பைரவி சொல்ல,

‘இதென்னடா இவ போற வேகத்த பார்த்தா, இன்னிக்கே வீடு கட்டி குடி வந்துடுவா போல…’ என்று எண்ணியது சிவாவின் நெஞ்சம் தான்.

இப்படியொரு நினைப்பு வரவுமே, இதழில் தானாய் ஒரு புன்னகை வர, “பணம் எடுத்துட்டு வர்றேன்…” என்று அவன் கிளம்ப,

“இல்லல்ல நான் உங்களுக்கு கொடுக்கவேண்டியது இருக்கே. அதை கொண்டு வந்திருக்கேன். இப்போ அதைவேணா கொடுத்துடலாம்..” என்றாள் அவன் மறுக்க முடியாமல் போவதுபோல்.

இப்படி அனைவரின் முன்னரும் சொன்னால், எப்படி மறுப்பது. அவனுக்கு பணம் கொடுத்தாகிவிட்டது போலவும் ஆனது. தாமஸிற்கு முன்பணம் கொடுத்தது போலவும் ஆகியது.

சிவா அவளை உற்றுப் பார்க்க, பர்சில் இருந்து பணம் எடுத்தவள், ஒருமுறை கண்கள் மூடி, இறைவனை வேண்டிவிட்டு,  சிவாவிடம் கொடுக்க, அதனை வாங்கியவன், எண்ணிக்கூட பார்க்கவில்லை, அப்படியே தாமஸ் கரத்தில், சாமி படத்தின் முன்னே நின்று கொடுக்க,  தாமஸ் சந்தோசமாய் வாங்கியவன்,

“தேங்க்ஸ் ண்ணா, தேங்க்ஸ் பையுக்கா…” என்றவன், நான்கைந்து  ப்ளான் தயார் செய்துகொண்டு வருகிறேன் என்று சொல்லிச் செல்ல, அதுபோலவே மறுநாள்  வந்தும் விட, பைரவியின் வீட்டினில் அமர்ந்து தான் பேச்சு வார்த்தைகள் எல்லாமே.

ஜரூராய் வேலையும் கூட ஆரம்பம் ஆகிவிட்டது.

அதேபோல் அவர்கள் பகுதியின் கோவில் திருவிழாவும் சிறப்பாய் நடந்து முடிந்திருந்தது.

பைரவியின் பாட்டுக் கச்சேரி தான். அவளது  குழுவை  தான் அழைத்து  வந்திருந்தாள். வேறு ஆட்கள் வேண்டாம் என்று சொல்லி, எதற்கும் பணமும் அவள் வாங்கவில்லை.

போதாத குறைக்கு, கோவில் திருவிழாவிற்கு என, ஒரு கணிசமான தொகையை அன்னதானம் செய்யவென்று கொடுக்க, அவ்வளவுதான் எரியாவாசிகளின் அபிமானி ஆகிப்போனாள் அவள்.

அவள் அம்மா சொன்னதுதான்.

‘அங்க இருக்கவங்களுக்கு உன்னால முடிஞ்ச எல்லா உதவியும் செய்…’ என்பது.

அதன் காரணாம் தெரியாது. ஆராய முற்படவில்லை. ஆனால் அதன் முதற்படியாய் அன்னதானத்திற்கு என்று ஐம்பதனாயிரம் கொடுக்க, அங்கே அனைவருக்குமே அதிர்ச்சியும், ஆச்சர்யமும்.

சிவாவே இதனை எதிர்பார்க்கவில்லை தான்.

கண்கள் விரிய அவளைப் பார்க்க “நல்லதுக்குத்தானே தர்றோம். தப்பில்லை. எப்படியும் வருசா வருஷம் அன்னதானம் ஏதாவது ஒரு கோவில்ல கொடுக்கிறது வழக்கம் தான். அம்மாக்கு இந்த பழக்கம் இருந்தது. நான் இப்போ செய்றேன்…” என, அதற்குமேல் அவனால் என்ன சொல்ல முடியும்.

இருந்தும் திருவிழா முடியும் வரைக்கும் சிவாவிற்குத்தான் பக்பக் என்று இருந்தது. அதிலும் பைரவியின் பாட்டுக் கச்சேரி நடந்த தினம், எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்று பார்த்து பார்த்து, ஆட்கள் ஏற்பாடு செய்து, யாரும் குடித்துவிட்டு வந்து கலாட்டாவோ, இல்லை வேறுவிதமான ரகலையிலோ ஈடுபடக் கூடாது என்று எண்ணி எல்லாம் ஏற்பாடு செய்திருக்க,  ஜானிற்கு இதெல்லாம் துளியும் இஷ்டமில்லை என்றாலும்,

பைரவி மனது நோகக் கூடாது என்று, அவளோடு உறுதுணையாய் அனைத்திற்கும் நின்றான். சிவாவோடு கூட இரண்டொரு வார்த்தை பேச, முதலில் முறுக்கி நின்றவன், பின் அவனுமே அவ்வப்போது ஜானோடு பேச, ஒருமாதிரி இலகுவான நிலை தான் அங்கே.

ஆனால் என்ன, இன்னமும் இருவருக்கும் மனம்விட்டு பேச சந்தர்ப்பம் அமையவில்லை. 

சிவாவிற்கும் வேலைகள் சரியாய் இருக்க, சொல்லப்போனால், அவனுக்கு நேரம் போதவில்லை. வீட்டிற்குக் கூட செல்வதில்லை.

பைரவி சொல்லித்தான் தாமஸ் வந்து கட்டிடம் கட்டுகிறான் என்பது ரஞ்சிதமிற்குத் தெரியாது. ஆனால் திருவிழா நேரத்தில், மகன் அவளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் கண்டு ஏற்கனவே நெருடிக்கொண்டு இருந்தது, இப்போது இன்னமும் உறுத்தத் துவங்க, சிவாவிடம் பேச எண்ணினார்.

எங்கே மகன் கை விட்டு போய்விடுவானோ என்று.

மகனின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கும் அம்மா இல்லை அவர். ஆனால் மகன் எப்போதும் எங்களோடு இருந்திட வேண்டும் என்று நினைக்கும் அம்மா.

நேரடியாய் இதனைப் பேசி, ஒருவேளை சிவா “ஆமாம் அப்படித்தான்…” என்று சொல்லிவிட்டால், அதை ஏற்கும் தைரியம் இல்லை. என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போதுதான்,

சிவாவே அலைபேசியில் அழைத்து “ம்மா, மணி வருவான். பீரோல பணம் வச்சிருக்கேன். கொடுத்து விடு..” என, மணி வீட்டிற்கு வந்தது தான் சாக்கு,

“உக்காருடா…” என்று அமர வைத்து டீ எல்லாம் கொடுக்க, மணியோ ஆச்சர்யமாய் பார்த்தான்.

“இன்னாடா பாக்குற..” என்றவர் “அப்புறம் வேலை எல்லாம் எப்படி நடக்குது…” என்று பேச்சை ஆரம்பிக்க,

“ஸோக்கா நடக்குதுக்கா. யாரு ஏற்பாடு நம்ம பைரவி அனுப்பின ஆள் ஆச்சே…” என்று வாயை விட்டுவிட, கண்களை இடுக்கிப் பார்த்தார் ரஞ்சிதம்.

“எஞ்சினியர் பையன் தங்கமான ஆளு. சரியா வேலை நடக்குது. இப்படியே போச்சுன்னா நாலு மாசத்துல பாரு எப்படி கட்டிடம் முடிஞ்சு நிக்கும்னு…” என்று பேச,

“எங்கிருந்துடா பிடிச்சீங்க?” என்றார் தாமஸ் பற்றி கேட்டு.

“பைரவியோட தோஸ்து அந்த ஜான் இருக்கான்ல, அன்னிக்கு மேடைல கூட எல்லாம் ரெடி பண்ணிட்டு இருந்தான்ல. அவன் தம்பி..” என,

“ஓ..!” என்றவர்க்கு ‘இத்தனை நடந்து இருக்கிறது. மகன் என்னிடம் ஒருவார்த்தை கூட சொல்லவில்லை…’ என்று உள்ளம் குமுற, மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

எப்படியும் இன்று சிவா வீடு வருவான் என்று தெரியும். சொக்கனை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டிய நாள் இன்று.

வரட்டும் ஒரு பிடி பிடித்து கேட்க வேண்டும் என்று எண்ணினார்.

மணி அந்தப்பக்கம் எழுந்து செல்லவும், வீட்டினுள் வந்த ஷாலினி “ம்மோவ்… என்னென்னவோ கதை நடக்குது…” என,

“என்னடி..?” என்றார் கடுப்பாய்.

“உன் மவன், நமக்கு சொல்லாம கல்யாணமே பண்ணிடுவான் போல…” என்றதுமே,

“அடி செருப்பால… என்ன பேசுற?” என்று எகிறினார்.

“ம்ம் வர்ற வழியில, சரி வீட்டு வேலை எப்படி நடக்குதுன்னு பாப்போமேன்னு போனேன். அங்க அந்த பாட்டுக்காரியும்  இருந்தா. யப்பா என்ன பேச்சு? என்ன சிரிப்பு? உன் மகன் பார்வை எல்லாம் அவ மேலத்தான். ஆளும் அவளும்.. ப்பா.. சரியான ஸ்டைலு…” என்று எரிச்சலாய் ஷாலினி  சொல்ல,

“ஏய் என்ன வாய் நீளுது, சிவா பத்தி உனக்குத் தெரியாதா? அந்த எஞ்சினியர் பையன், அந்த பொண்ணோட தோஸ்து தம்பியாம். அவதான் சொல்லி ஏற்பாடு பண்ணிருக்கா. இல்லைன்னா இப்போ வேலையே நடந்திருக்காது…” என்று வெளியே விட்டுக்கொடுக்காமல் பேச,

“ஆமாமா.. இதேது என்னை என்னென்ன சொல்லுவ நீ. அப்படி நிக்காத, இப்படி பேசாத, வெளிய போகாத அப்படின்னு.. இவன் எல்லார் முன்னாடியும் சிரிச்சு சிரிச்சு பேசுறான். அவளோ பக்கத்துல பக்கத்துல போய் நிக்கிறா…” என்று பேச,

“வாய மூடு டி. உன் வயசுக்கு ஏத்தமாதிரி பேசு..” என்றவர் எழுந்து சென்றுவிட்டார்.

பைரவி வேறு வேலையாக வெளியே சென்று வந்தவள், வரும் வழியில், தாமஸ் வெளியே நிற்கவும் தான் தன் காரை நிறுத்தி என்னவென்று பேச, அப்போதுதான் அவன் உள்ளே அழைத்தான்.

“வாக்கா வந்து பாரு…” என்று.

சிவா ஷெட்டின் உள்ளிருக்க, அவனும் வந்துவிட, அப்போதுதான் ஷாலினியும் வந்தது. பைரவி சிரித்து சிரித்து பேசியது என்னவோ தாமஸ் மற்றும் சிண்டுவுடன், சிவா அவளருகே நின்றுதான் இருந்தான். பார்வை மட்டும் தான் பைரவி மீது.

ஏற்கனவே ரஞ்சிதமிற்கு தலையில் ஏறி அமர்ந்து இருந்தது இந்த விஷயம். இப்போது ஷாலினி வேறு இப்படி சொல்லவும் கேட்கவா வேண்டும்.

அவர் எண்ணியது போல, கால் டாக்சி புக் செய்து, சிவா வீட்டிற்கு வந்து சொக்கனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று கிளம்ப, ரஞ்சிதமும் உடன் கிளம்பினார்.

எப்போதுமே அவரும் வருவதால், அவனுக்கு பெரிதாய் வித்தியாசம் தெரியவில்லை. காரில் ஏறி அமரவும்,

“வூடு கட்டி முடிக்கவும், உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்…” என, சிவா ஓரளவு இதனை எதிர்பார்த்தான்.

ஷாலினி பற்றி அறியாதவனா அவன்?

“ஆஸ்பத்திரிக்கு போறப்போவா இதெல்லாம் பேசணும்…” என்று சிவா கடிய, ரஞ்சிதத்திற்கு அமைதியாய் இருக்கவே முடியவில்லை.

இருந்தும் சூழல் கருதி மௌனம் காக்க, திரும்ப இவர்கள் வீடு வந்து சேர மாலையாகி போனது.

வீட்டிற்கு வந்ததுமே, சிவா ஒருமுறை குளியல் போட்டுவிட்டு, ஷெட்டிற்குக் கிளம்ப “சிவா…” என்றார் ரஞ்சிதம்.

“ம்ம்…” என்றவன் எதையோ எடுத்து வைத்துக்கொண்டு இருக்க,

“அந்த இஞ்சினியரு யாரு?” என,

“தெரிஞ்சிட்டே கேட்டா என்ன சொல்றது?” என்றவனோ,

“மணி சொன்னான்…” என, ரஞ்சிதம் மகனை முறைத்தார்.

“ஏன்டா ஒரு பாட்டுக்காரியால நம்ம கெட்டது போதாதுன்னு, இப்போ இன்னொரு பாட்டுக்காரி சாவகாசமா? ஏன்டா நீ இப்படி இருக்க? ” என்று ரஞ்சிதம் பேச,

“ம்மா…” என்று அதட்டினான் மகன்.

“நீ எப்படிவேணா சத்தம் போடு. இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன். உங்கப்பா இன்னிக்கு இந்த நிலைமைக்கு இருக்கார்னா அது யார்னால. இந்நேரம் நம்ம எப்படி வாழ்ந்திருக்க வேண்டிய ஆளுங்க. ஆனா எவளோ ஒரு பாட்டுக்காரி வந்து விளம்பரம் பண்றா, பேசுறா அப்படின்னு நம்பி எல்லாத்தையும் கொண்டு போய், அவ கை காட்டுன கம்பனில போட்டாரு. என்னாச்சு.. எல்லாம் போச்சு.. இதோ படுத்த படுக்கையா விழுந்தாச்சு.

நமக்கு மட்டுமா இப்படி ஆச்சு.. நம்ம ஏரியாக்காரங்க எத்தினி பேருக்கு நட்டம் ஆச்சு.

இப்போ நீ, எவளோ ஒருத்தி புதுசா பாடிட்டு வந்திருக்கா, அவளோட சுத்திட்டு இருக்க.  இங்கபாரு இதெல்லாம் அலங்கார விளக்குத்தான். நமக்கு சாமி கும்பிட உதவாது. என் மனசுக்கு எதுவுமே சரியா படல..” எனும் போதே,

“எனக்கு பைரவிய பிடிச்சிருக்கும்மா. அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு.. ஆனா நாங்க இன்னும் பேசிக்கவே இல்லை இதை..” என்று சிவா பட்டென்று போட்டு உடைக்க, ரஞ்சிதம் மட்டுமில்லை, அங்கே சாய்ந்து அமர்ந்து இருந்த சொக்கனும் மகனை அதிர்ந்து பார்க்க, ஷாலினியோ அண்ணனை கிண்டலாய் பார்த்தாள்.

“டேய் என்னடா சொல்ற?!” என்று ரஞ்சிதம் குரலை உயர்த்த,

“இங்க பாருங்க, அந்த பொண்ணு நல்ல பொண்ணு. வேற எதுவும் ஆராய வேண்டியது இல்லை. சொல்லபோனா அவளுக்குன்னு யாருமே இல்லைம்மா. எப்படித்தான் அவ தினமும் நாளை கடத்துறாளோ. என் வாழ்க்கைல அவ இருந்தா நான் மட்டுமில்லை நம்ம எல்லாருமே நல்லாருப்போம்னு தோணுது…” என,

“முடியவே முடியாது…” என்றார் ரஞ்சிதம்.

சிவாவும் இப்படியொரு சூழல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்னும் பைரவியோடு பேசி ஒரு தெளிவிற்கு வராத நிலையில், வீட்டினில் இப்படி உறுதியாய் பேசியது அதிகப்படி தான். ஆனாலும் இனியும் மௌனமாய் இருந்தால், சரிவராது என்று தான் சொல்லிவிட்டான்.

ஆனால் பைரவி விசயத்தை அம்மா இப்படியொரு சங்கதியோடு முடிச்சு போடுவார் என்று அவன் யோசிக்கவில்லை.

“இதுமட்டும் தான் என்னோட முடிவு..” என்றவன் ஷாலினியிடம் “இந்த நக்கல் கேலி கிண்டல் பார்வை எல்லாம் வேற எங்கயாவது வச்சுக்கோ…” என்றுவிட்டு போக,

ரஞ்சிதமோ “எல்லாம் இந்த செலுவியாள வந்தது. வேலைக்கு போனோமா வந்தோமான்னு இல்லாம, என் மகனை இழுத்துவிட்டு. இருக்கு அவளுக்கு…” என்று சொல்லியபடி வீட்டு வாசல் வர,

வாசல் தாண்டிச்  சென்றவன், திரும்பி  “மா.. இன்னும் நாங்க பேசிக்கவே இல்லைன்னு தான் சொன்னேன். நீ வெளிய போய் யார் கிட்டயாவது வம்பு வளர்த்து வந்தன்னு வை. எனக்குத் தெரியாது, தாலி கட்டி கூட்டிட்டு வந்திடுவேன்…” என்று நிதானமாகவே சொல்ல, ரஞ்சிதம் அதிர்ந்து பார்த்தார்.

சொன்னவன், நடந்து சென்றுவிட, ரஞ்சிதத்திற்கு இதயம் தாறுமாறாய் அடித்தது.

சிவாவிற்கோ ‘என்னடா இது, மாடாய் உழைத்துத் தேய்கிறேன். என் விருப்பம் என்று எதுவுமே இல்லையா. அது இவர்களுக்கு முக்கியமே இல்லையா…’ என்று தோன்ற, அவனையும் மீறி மனதினில் ஒரு விரக்தி. 

ஷெட்டிற்கு வந்தவன், அப்படியே அமர, மனதிற்குள் ஒருமாதிரி இறுக்கமாய் இருந்தது.

அப்பாவின் வைத்திய செலவு, குடும்ப செலவு, தங்கையின் எதிர்காலம், இதுபோக இப்போது மேலே வீடு கட்டுவது. இதற்கு முன்னர் இருந்த கடன்களை அடைக்க ஒரு ஓட்டம் அவனுக்கு. அடுத்து கிடைத்த வேலைக்கு எல்லாம் சென்று, அவனின் படிப்பு, ஷாலினியின் படிப்பு, இப்போது இருவருக்குமான திருமண சேமிப்பு என்று வாழ்க்கை ஒரு சுழல் போலவே அமைந்து போனது. ஓரளவு பணம் சேர்த்து வைத்திருந்தாலும், இத்தனையும் ஒருவன் தலையில் எனும்போது, அவனும் தான் என்ன செய்வான்.

தோள் சாய ஓர் ஆதரவு வேண்டும் தானே.

அவனது வயதில் இருப்பவர்கள் எல்லாம் இந்நேரம் இரு பிள்ளைகள் பெற்று இருக்க, அவனோ மனதில் தோன்றிய நேசத்தைக் கூட சொல்ல முடியாத ஓர் சூழலில் தான் இருந்தான்.

பணம், பணம், பணமென்று அதன் பின்னேயே ஓடி, வாழ்வில் அந்ததந்த வயதில் அனுபவிக்க வேண்டிய சிறு சிறு சந்தோசங்களை எல்லாம் அதிலேயே தொலைத்துவிட்டான்.

இதோ பைரவி இங்கே வந்தபிறகு தான், அவனுக்கென்று சில மென்மையான உணர்வுகளே மனதினில் பூக்கத் தொடங்கியது. அதிலும் பைரவிக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்று புரிகையில், அவனுக்கு ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கும் உணர்வுதான்.

தேவதை தான் அவள்.

இந்த பகுதியில் வந்து வாழவேண்டும் என்ற அவசியமே இல்லை. ஆனால் இதுநாள் வரைக்கும் அவள் ஒருமுறை கூட முகம் சுழித்ததே இல்லை.

இப்போதோ, ரஞ்சிதம் பேசியது எல்லாம் ஒருமாதிரி மனதிற்கு கசந்த உணர்வைக் கொடுக்க, ஷெட்டிலும் அமர்ந்து இருக்க முடியவில்லை. மணி வந்து “இன்னிக்கு ஆன செலவு கணக்கு…” என்று ஒரு பேப்பரை நீட்ட,

“ம்ம்ச் போடா…” என்றவன் தன் பைக்கை உதைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் வழக்கம் போல கடற்கரைக்கு. 

பைரவிக்குமே அங்கே வீட்டினில் இருப்புக்கொள்ளவில்லை. ஜான் சொல்லியிருந்த அந்த ரிக்கார்டிங் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. மிகப் பெரிய இசையமைப்பாளர். இந்த வாய்ப்பு மட்டும் கிடைத்துவிட்டால், அவளுக்கென்று திரைத்துறையில் ஒரு அடையாளம் கிட்டிவிடும்.

ஜான் சொன்னதில் இருந்து ஒருவித எதிர்பார்ப்பு ஓடிக்கொண்டே இருந்தது தான் மனதினில். கிட்டிய வாய்ப்பு தட்டிப் போய்விடுமோ என்று பயமாய் வேறு இருந்தது. எத்தனை முறை, இப்படி நிகழ்ந்து இருக்கிறது.

அதெல்லாம் தாண்டி சிவா மீதான விருப்பம் வேறு.

காதல், தன்னைத்தவிர வேறெதுவும் சிந்திக்க விடாதே.

குறுக்கும் நெடுக்கும் வீட்டினிலே நடந்தவள், அங்கேயே இருக்க முடியாமல், அவளும் தன்னுடைய காரினை எடுத்துக் கொண்டு பீச் கிளம்பிட, அன்று சென்று அமர்ந்த இடத்தினில் தான் சென்று அமர்ந்துகொள்ள, சிவாவிற்கும் அதே நினைப்புத்தான்.

பைரவியோடு தான் இங்கே வர முடியவில்லை, அவள் அமர்ந்திருந்த இடத்தினிலாவது சென்று அமர்ந்து கொள்ளலாம் என்று எண்ணி அங்கே நடைபோட, நடையிட்டவன், அப்படியே ஒருநொடி நின்றுவிட்டான்.

அவன் எண்ணி வந்தவளே, அங்கே அமர்ந்திருக்க, கடல் அலையை விட, அலை அலையாய் துள்ளி எழுந்தது.