காவியத் தலைவன் – 20

தான்பாபுவைப் பற்றி விசாரிப்பதற்கு இனி என்ன இருக்கிறது? எங்கோ கண்கணாத இடத்தில் அவர்களுக்கென்று ஒரு வாழ்வை வாழ்ந்து வருபவர்களை ஒரு பிடியளவு தொந்தரவு செய்யவும் ஆதீஸ்வரனுக்கு மனம் இல்லை.

நீண்ட நாட்கள் கழித்துக் கிடைத்த ஒற்றை துப்பும் உபயோகமின்றி பறிபோனது! வழக்கமாக நடப்பது தான் என்றாலும் மீண்டும் ஒரு பெரிய ஏமாற்றம்!

இதுபோல அலைந்து திரிந்து எதையாவது கண்டுபிடிப்பதும், அந்த வழி அடைபடுவதும் அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. பல தோல்விகளைத் தொடர்ந்து தான் அவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கென்று துவளக் கூட நேரம் இல்லாமல் எதைத் தேடுகிறோம் என்று தெரியாமலேயே எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆதீஸ்வரன் கிளம்பி நேராக திரிபுராவிற்கு தான் வந்தான். பீகார் சென்றவர்களையும் சிலரை இங்கேயே நேரடியாக வர சொல்லியவன், சிலரைத் திரிபுராவிற்கு அடுத்த மாநிலமான வெஸ்ட் பெங்கால் சென்று ஏதேனும் விவரங்கள் கிடைக்கிறதா என்று அலச சொன்னான்.

இங்கு வந்த பிறகு மீண்டும் மூன்று நாட்கள் வீண் அலைச்சலில் தான் விரயமானது. ஒரு சின்ன துணுக்கு கூட உபயோகமாகக் கிடைக்கவில்லை.

முன்பு இருந்த வழக்கமான நடைமுறையில் ஒரு மாற்றமாக நேரம் இருக்கும்போது ஒரு நாளுக்கு ஒருமுறையேனும் மனையாளிடம் பேசி விடுகிறான். சாதாரண உறவு என்கையில் இத்தனை அலைச்சலில் அவசியமில்லை தான்! இவர்கள் இருவருக்கும் தான் சாதாரணமே அசாதாரணமாயிற்றே!

மூன்று நாட்கள் கழிந்த நிலையில், இரவு உறங்குவதற்கு முன்பு அன்று நோட்டம்விட்ட பகுதிகளில் ஏதாவது வித்தியாசமாக தெரிந்ததா என தன் கைவிரல் மோதிரத்தை உருட்டிக்கொண்டே யோசித்தபடி படுத்திருந்தான் ஆதீஸ்வரன். அப்படி எதுவும் சந்தேகத்திற்கிடமாக அமைந்தது போலத் தெரியவில்லை.

ஆதியின் யோசனையைத் தடை செய்யும் விதமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்ஸ்பெக்டர் விவேக்கிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.

என்னவோ ஓர் இனம் புரியாத இதம் நொடியில் தொற்றிக்கொள்ள, “சொல்லு விவேக் எப்படி இருக்க? ஜாப் எல்லாம் எப்படி போகுது?” என்றான் அழைப்பை ஏற்றவுடன். அத்தனை நேரமிருந்த யோசனை, மூட் அவுட் எல்லாம் சென்ற இடம் தெரியவில்லை.

“நான் நல்லா இருக்கேன் ண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்ற விவேக்கின் குரலில் சந்தோசம் நிறைந்திருந்தது.

“குட். குட். என்ன விஷயம்? ரொம்ப ஜாலியா இருக்க போலயே?” குரலின் மாற்றம் புரிந்து ஆதி விசாரித்தான்.

“யூ.பி.எஸ்.ஸி., எக்ஸ்சாம்ல பிரிலிம்ஸ், மெயின்ஸ் ரெண்டும் கிளியர் பண்ணியாச்சுண்ணா. நெக்ஸ்ட் வீக் இன்டெர்வியூ கொடுக்கணும்” என்று மகிழ்ச்சியோடு விவேக் சொல்ல, ஆதிக்கு பெரும் ஆச்சரியம். ‘உன் கனவைக் கைவிட்டு விடாதே!’ என்று சொல்லி வந்தான் தான், அதற்குள் இந்தளவிற்கான முன்னேற்றம் அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

விவேக் தான் ஆரம்பத்திலிருந்து யூ.பி.எஸ்.ஸி., தேர்வுக்குத் தன்னை தயார்ப் படுத்திக்கொண்டு வந்தவனாயிற்றே! என்ன இந்த ரிசல்ட்டை அவனுமே எதிர்பார்த்திருக்கவில்லை.

“வாவ் கிரேட் விவேக். அப்ப ஒரு ஐ.பி. எஸ்., ஆபிசர் கிட்ட பேசிட்டு இருக்கேனா நான்?” உரிமையோடு வம்பிழுத்தான்.

“ஹாஹா முதல்ல இன்டெர்வியூ நல்லா பண்ணறேன். அப்பறம் ரிசல்ட்டும் நல்லமாதிரி வரட்டும்ண்ணா. அதுவரை பக்கு பக்குன்னு தான் இருக்கு” என்று விவேக் உண்மையை சொன்னான். அவனுக்குமே முதல் அட்டம்ப்ட்டில் ரெண்டு லெவல் கிளியர் செய்தது பெரிய விஷயமாகத்தான் இருந்தது. இப்போதைக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இன்டெர்வியூ கொடுக்கத் தயாராக இருந்தான்.

“எதுக்கு பயம்? அதெல்லாம் நல்லா பண்ணிடுவ…” என்று ஆதி சொன்னபோது விவேக் சிரித்து மட்டும் கொண்டான்.

அதைத்தொடர்ந்து அவர்களின் பேச்சு விவேக் சமீபத்தில் விசாரித்து முடித்த கேஸ் ஒன்றைப்பற்றி சென்றது. அந்த கேஸ் பற்றி மேலோட்டமாக சொன்னவன், எந்த வழியில் எல்லாம் முயற்சி செய்தோம் என்றும் சேர்த்துச் சொன்னான்.

“ம்ம்ம்…”, “சரி…” என்று அத்தனை நேரமும் இளையவன் செய்ததை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆதீஸ்வரன், கொஞ்ச நேரத்தில் என்ன நினைத்தானோ சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்திருந்தான். அவன் கைகள் வேகமாக டேபிள் லேம்ப்பை ஒளிர விட்டிருந்தது.

அழைப்பின் மறுபறம் தான் செய்ததை, விசாரித்ததை எல்லாம் விவேக் விளக்கிக் கொண்டிருக்க, இங்கோ ஆதி அரைகுறை கவனத்தை அவன் பேச்சில் வைத்தபடி அருகிலிருந்த நோட்பேட் ஒன்றை வேகமாக எடுத்து, ஏ எல் என்ற ஆங்கில எழுத்துக்கள் எழுதி டாட் டாட் டாட் என வைத்தவன், ஒரு ஏரோவை கீழ் நோக்கி வரைந்து அது முடியும் இடத்தில் டீ பீ என்கிற ஆங்கில எழுத்துக்களை எழுதியிருந்தான். இப்பொழுது அந்த ஏரோ மார்க் பக்கத்திலேயே இன்னொரு ஏரோ மார்க்கை மேல்நோக்கி வரைந்தவன் அதன் அருகினில் ஒரு கேள்விக்குறியையும் போட்டு வைத்தான்.

விவேக் அதற்குள் முழுவதும் சொல்லி முடித்திருக்க, “வெரி குட். எல்லா ஏஸ்பெக்ட் லயும் யோசிச்சு திறமையா சால்வ் பண்ணியிருக்க. கீப் இட் அப்” என்று ஆதி சொல்ல, சின்னவனுக்கு அவன் பாராட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முன்பு நேர்மையாக இருக்க முயற்சி செய்தாலும் அச்சம் காரணமாக சில தயக்கங்கள் இருந்திருக்க, இப்பொழுது ஆதியின் நட்பு இருப்பதில் அவனுக்கு எந்த தடைகளும் இல்லை. ஏன் அவனுக்கு தொல்லை தரும் ஏட்டு ராஜனை கூட ஆதி என்றோ விவேக்கிற்காகப் பணி மாற்றம் செய்திருந்தான்.

விவேக் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் அழைப்பைத் துண்டித்திருந்தான். தன் சாதனைகளை அவனுக்கு ஆதியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் அவ்வளவு தான்! ஆனால், தெரிந்தோ தெரியாமலோ அதில் ஆதிக்கு மிகவும் உபயோகமாக ஒரு குறிப்பைத் தந்து விட்டிருந்தான்.

ஆதீஸ்வரனின் விழிகள் யோசனையுடன் தன் கையிலிருந்த நோட்பேட்டில் படிந்தது. அவன் ஏ எல் என்று குறிப்பிட்டது அலக்கியாவை, டீ பீ என்பது தான்பாபுவை.

விவேக்கிடம் பேசும்போது எல்லா கோணங்களிலும் அவன் யோசித்து விசாரணையை முன்னெடுத்துக் கொண்டு போனதை அவன் சொன்னதும், ஆதிக்கு லேசாக ஒரு பொறி தட்டியது. நாம் தான்பாபு விஷயத்தில் அப்படி யோசிக்காமல் போனோமோ என சட்டென்று தோன்றிற்று!

தாரா சொன்னதன்படி யாரோ இருவர் அலக்கியாவை சீரழித்து இந்த நோயை அவளுக்குத் தந்துவிட்டிருக்கலாம். அதன்மூலம் தான்பாபுவும் நோய் வாய்ப்பட்டான்.

இது அவர்கள் மூவரின் ஊகம் மட்டும் தான்! அதுதான் உண்மை என்பதற்கு எந்த சான்றும் இல்லை. அப்படியிருக்க ஆதீஸ்வரன் ஏன் அதனை அப்படியே முழுதாக நம்பினான்? அவர்களின் ஊகம் சரியாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?

ஏன் தான்பாபுவிடமிருந்து அந்த நோய் அலக்கியாவிற்கு வந்திருக்கக் கூடாது? அந்த கோணத்தில் அவர்கள் தான் யோசிக்கவில்லை என்றால், ஏன் நாமும் யோசிக்க மறந்தோம்?

கண்மூடி சில நொடிகள் யோசித்தான். அதற்கான வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ ஆனால், இந்த கோணத்திலும் ஒருமுறை விசாரிக்க வேண்டும் என்று தெளிவாக முடிவெடுத்த பின்னரே உறக்கத்தை துணைக்கழைத்தான்.

மறுநாள் எழுந்ததும், முதல் வேலையாக தான்பாபுவின் தகவல்களைத் தான் எடுத்துப் பார்த்தான். சொந்த தொழில் செய்து கொண்டிருந்த அவன் மிக சமீபத்தில் தான் எம்.பி.ஏ., வை திரிபுராவில் ஒரு பிரபலமான யுனிவர்சிட்டியில் முடித்திருக்கிறான்.

அவன் சந்தேக வட்டத்தில் இதுபோல நிறைய கல்லூரிகள், பள்ளிகள், யுனிவர்சிட்டிகள் நிறைந்திருக்கிறது.

தன் ஆட்களை அழைத்து, ப்ளட் டொனேஷன் கேம்ப் ஒன்றை அந்த யுனிவர்சிட்டி வளாகத்தில் ஏற்பாடு செய்ய சொன்னான். “இதில் நாம் சம்பந்தப்பட்டது துளியும் வெளியில் தெரியக் கூடாது. புது ஆட்கள், புது டீமை கொண்டு ரொம்பவும் சாதாரணமாகத் தெரிவது போல இந்த கேம்ப்பை நடத்தி முடிங்க. முடிந்தவரை நிறைய மாணவர்களின் ரத்த மாதிரிகளையாவது எடுத்து விடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னவன், என்ன நினைத்தானோ இதில் தன் தலையீடு இருப்பதை காட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தான்.

இன்று வரையிலும் அவன் இங்கு இருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. ஏதேனும் தவறு நடந்து, ஆதி இங்கிருக்கிறான் என்பதில் சுதாரித்து விட்டார்கள் என்றால் என்பதால் வெகு கவனமாகத்தான் இருந்து வருகிறான்.

இப்பொழுது ஏனோ மிகவும் பதற்றமாக இருந்தது. ஆய்வின் முடிவு அவன் தலையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டின் தலையிலும் இடியையே இறக்கும் என்று அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

நாட்டின் மிகப்பெரிய குற்றத்தை நோக்கி இந்தியாவின் லா அண்ட் ஜஸ்டிஸ் மினிஸ்டரான ஆதீஸ்வரனின் பயணம் மெளனமாக பெரும் யுத்தம் ஒன்றை நிகழ்த்த, இந்தியாவின் பெரும் குற்றத்தின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கத் தொடங்கிற்று!