அத்தியாயம் – 11

எப்படியோ வீடு வந்தாகிவிட்டது. மாலை ஏழு மணிக்கு மேல் தான் அனுப்பினர்.

சிவா தான் கார் ஓட்டிக்கொண்டு வந்தான். மதியம் வரைக்கும் அங்கே மருத்துவமனையில் இருந்தவன், பைரவி முகத்தில் ஓரளவு தெளிவு கண்டபின் தான் கிளம்பினான். செல்வியை உடன் இருக்கும்படி சொல்லிவிட்டு வந்தவனுக்கு இன்னமும் அவளது யோசனை தான்.

‘அவளே போய் ஆஸ்பத்திரியில சேர்ந்திருக்கா. எப்படியிருக்கும் அவளுக்கு?!’ என்று இதையே போட்டு மனதில் உருட்டிக்கொண்டு இருக்க,

“மாப்ள…” என்று வந்தான் மணி.

“சொல்றா…”

“பைரவிக்கு இப்போ எப்படி இருக்கு?”

“பரவாயில்லைடா.. அவளே போயி சேர்ந்திருக்கா.. எப்படிருந்திருக்கும்..” என்று மீண்டும் அங்கலாய்க்க,

“ஏன் அவளோட சுத்துவானே ஒருதான் அவனெங்க?!” என்றான் மணியும்.

“அவன் எங்க தொலைஞ்சு போனானோ..” என்ற சிவா “ச்சே…” என்று தானாய் எரிச்சலுற,

சிண்டு வந்தவன் “நானும் அந்தக்காவ பாக்கணும்…” என,

“வீட்டுக்கு நைட் வரவும் போய் பார்..” என்றான் சிவா.

அடுத்து அவனுக்கு வேலை எதுவுமே ஓடவில்லை. மணிக்கு நண்பனின் முகம் பார்த்து என்ன தோன்றியதோ “சரி நீ கிளம்பு மாப்ள நான் பார்த்துக்கிறேன்..” என,

சிவா செட்டில் இருந்து கிளம்பும் நேரம், அவர்கள் தெருவில் இருக்கும் மாரியம்மன் கோவில் தலைவர் வந்தார்.

“வா மாமா… என்ன இந்த நேரத்துல…” என்று சிவா பேச,

“அப்போவே வந்தேன் மாப்ள.. நீ இல்லை..” என்றவர்,

“கோவில் திருவிழா செய்யணும். வழக்கம் போல உன்னோட ஒத்துழைப்பு வேணும்..” என,

“அதுக்கென்ன மாமா தாராளமா செஞ்சிடலாம்..” என்றான் லேசாய் தோன்றிய உற்சாகத்தோடு.

“நீர் மோர், போஸ்டர், பாட்டு கச்சேரி.. இதெல்லாம் உன் பொறுப்பு..”

“எனக்கு சொல்லனுமா.. செஞ்சிடுவோம் விடு மாமா..”

“அப்புறம்…” என்று லேசாய் தலையை அவர் சொரிய,

“இன்னா மாமே…” என்றான் அவர் தோளில் தட்டி.

“அது.. அந்த பாட்டுக்கார பொண்ணு இருக்குல்ல…” என,

“ஆமா..” என்று அவரை உற்றுப் பார்க்க,

“இந்தவாட்டி அந்த பொண்ண பாட வைக்க முடியுமா? இல்ல நேரா போயி கேட்கலாம்னு எல்லாம் சொன்னாங்க.. நான்தான்.. நம்ம சிவாக்கிட்ட சொல்லி பேசிக்குவோம்னு சொல்லிட்டேன்..” என,

“அப்படியா?!” என்றான் யோசனையாய்.

“ஆமா.. உனக்கும் அதுக்கும் நல்ல தோஸ்தாமே…”

“ம்ம்ம்…”

“நீ பேசி பாரேன்.. நம்ம எறியால தானே அந்த பொண்ணும் இருக்கு.. பாடினா என்னவாம்?!” என,

“பிரச்சனை இல்லைதான். ஆனா பசங்க பாட்டு கச்சேரி அப்போ என்னென்ன அட்டகாசம் செய்வாங்கன்னு தெரியுமே.. அந்த பொண்ணு நம்ம நினைக்கிற மாதிரி இல்லை.. கலீஜா எதுவும் நடக்காம பார்த்துக்கணும்..”

“சரி சரி…”

“நான் முடிவா எல்லாம் சொல்லல.. பைரவிக்கிட்ட கேட்டுட்டுத்தான் சொல்ல முடியும். அது சரின்னு சொன்னா மட்டும் தான். இல்லைன்னா யாரும் அங்க போய் நிக்கக் கூடாது..” என்று கொஞ்சம் கண்டிப்பாகவே பேச,

“நீ எப்படி சொல்றியோ அப்படி பண்ணிக்கலாம்…” என்றார், பல் எல்லாம் காட்டி.

அவர் செல்லவும், மீண்டும் செட்டின் வாசலில் அமர்ந்தவன், செல்விக்கு அழைப்பு விடுத்து ‘இப்போ எப்படிருக்கு?’ என்று விசாரிக்க,

“தூங்குது இன்னும்.. டாக்டர் வந்து ஆறு மணிக்கு மேல போயிக்கலாம்னு சொல்லிட்டாரு கண்ணு…” என,

“சரி நான் வர்றேன்.. வரவும் கிளம்பலாம்..” என்றுவிட்டான்.

சொன்னது போலவே சரியாய் ஐந்தரைக்கு போல் அங்கே செல்ல, மூவரும் கிளம்புகையில் ஆறு மணிக்கு மேலானது.  பைரவி அவளின் ஏடிஎம் கார்டினை எடுத்து நீட்டினாள் சிவாவிடம்.

அவனோ என்னவென்று பார்க்க “கைல அவ்வளோ கேஷ் இல்லை. எடுக்கணும்..” என,

“உள்ள வை…” என்றவன் ரிசப்ஷன் சென்றுவிட,

“நீ சும்மா இரு பாப்பா…” என்றார் செல்வியும்.

“அக்கா இங்க  காஸ்ட்லி..” எனும்போதே,

“இப்போ என்ன வீட்ல போய் எடுத்து கொடுத்துக்கோ…” என்றார்.

“நீங்களும் அவருக்கு ஏத்தமாதிரியே பண்றீங்க…” எனும்போதே சிவா மீண்டும் வந்துவிட்டான்.

வரும்போதே பணம் எடுத்துத்தான் வந்திருந்தான். இவர்களை விட்டுவிட்டு காலையில் கிளம்புகையில் எத்தனை பணம் கட்ட வேண்டும் என்று கேட்டுவிட்டுத்தான் சென்றும் இருந்தான். அதனால் அதனைக் காட்டிலும் கூடவே எடுத்தும் வந்திருக்க, அவனுக்குத் தெரியும், எப்படியும் பைரவி இப்படித்தான் செய்வாள் என்று.

பைரவி எதுவோ சொல்ல வர, “நீ எதுவும் பேசாத பாப்பா.. ஏதாவது திட்டிட போறான்…” என்று செல்வி அவளை வாய் மூட வைத்துவிட, வரும்போதே வழியில்,   மாதுளம் பழம் நிறைய வாங்கினான்.

செல்வி “நானே சொல்லனும்னு நினைச்சேன் கண்ணு…” என,

“மூணு நாள் நீ கடை போடலன்னா ஒன்னும் ஆகாது. பைரவி கூட வூட்லயே இரு.. என்ன வேணுமோ சொல்லு, வாங்கின்னு வந்து தர்றேன்.. உப்பு காரமெல்லாம் பக்குவமா பார்த்து பண்ணு…” என்று சொல்லிக்கொண்டே காரினை ஓட்ட,

சிவாவின் இந்த கரிசனம், பைரவிக்கு ரகசியமாய் சில கண்ணீர் துளிகளை வரச் செய்ய, மற்றவர் அறியாமல் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

கண்களை இறுக மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்துகொண்டாள்.

மற்றவர்க்கு பார்க்க சோர்வாய் இருப்பது போல் தெரிய, வீடு வந்து சேரும்போதோ, மணி, சிண்டு, செல்வியின் மகள் என்று எல்லாம் அங்கே பைரவியின் வீட்டின் முன்னே தான் காத்திருக்க, பைரவிக்கே ஒருமாதிரி சங்கோஜமாய் போனது.

“இன்னாக்கா நீ.. இப்படியா போய் படுப்ப.. பாரு.. முகமே வத்திப்போச்சு…” என்று சிண்டு பேச,

மணியோ “பார்த்து இருக்கனும்ல…” என,

செல்வியின் மகளோ “ம்மா வூடு, அக்கா ரூமு எல்லாம் சுத்தம் பண்ணிட்டேன்..” என்று பேச, அனைத்தையும் ஒரு அமைதியோடு கடந்து வீட்டினுள் வந்தாள் பைரவி.

‘சிவாவிற்கு பணம் கொடுத்துவிட வேணும்..’ இதுவே அவளுக்குள் ஓட, அவளது யோசனையை கண்டவனுக்கு நன்கு புரிந்தது.

“பணம் ரெண்டு நாள் கழிச்சு வாங்கிக்கிறேன்…” என்று தானாகவே சொன்னவன்,

“க்கா பார்த்துக்கோ…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

அவ்வளவு தான்.

பைரவிக்கு என்னவோ ஏமாற்றமாய் போனது. ஒருமாதிரி அழுகையும் வருவது போலிருக்க, கண்களை இறுக மூடி சாய்ந்து கொண்டாள். சிவா ஒருமுறை பைரவியை திரும்பிப் பார்த்துவிட்டே போனான்.

செல்வியோ, என்ன வந்ததும் உடனே போகிறான் என்பது போல் பார்க்க,

சிண்டுவோ “கோவில் திருவிழா வருது.. இனி அண்ணே ரொம்ப பிசி…” என்று பேச,

“ஆரம்பிச்சுட்டானுகளாடா…” என்று பேச்சை சுவாரஸ்யமாய் ஆரம்பித்தார் செல்வி.

பைரவி அங்கிருந்த சோபாவில் சாய்ந்துகொள்ள, செல்வி, அவரின் மகள், மணி, சிண்டு என்று நால்வரும் கோவில் திருவிழா பற்றி பேசிக்கொண்டு இருக்க,

“இந்த வாட்டி தீ செட்டி எடுக்கணும்…” என்று செல்வி சொல்ல,

சிண்டுவோ “ஆமா நீ எடுக்கிறதுக்கு, நாங்கெல்லாம் உன்கூட சுத்தணும்…” என்று கிண்டல் பேச, பைரவி வெகு நேரம் அமர்ந்திருந்தவள், 

“செல்விம்மா எனக்கு பசிக்குது…” என்றாள் மெதுவாய்.

“இதோ எல்லாமே ரெடிதான் பாப்பா…” என்றவர் அவளுக்கு இரு இட்லியும், காரமில்லாமல் செய்த பாசிபயறு சாம்பாரும் ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொண்டு வந்து வைக்க, அப்போதுதான் சுற்றிலும் பார்த்தாள்.

யாரையும் காணோம்.

“அவனுங்கெல்லாம் அப்போவே போயிட்டானுங்க.. நீ கண்ணசந்து தூங்கிட்ட..” என ,

“ம்ம்..” என்று தலையை ஆட்டியவள்,

“நீங்களும் தேனும் சாப்பிடவேண்டியது தானே..” என்றாள்.

“இருக்கட்டும் பாப்பா.. வூட்ல போட்டது போட்டபடி இருக்கு.. ஒரு எட்டு போய் பார்த்து ஒதுங்க வச்சிட்டு வந்தா, சாப்புட்டு படுத்துப்பேன்.. தேனு, இங்கன உங்கூட இருக்கட்டும்… நான் சீக்கிரமே வந்துடுறேன்…” என,

“சரிக்கா…” என்றாள்.

“இல்ல நீ சாப்பிடு.. அப்புறம் தான் போவேன்..” என்று நின்றார்.

எளிமையான மனிதர்கள் தான். ஆனாலும் பாசமாய் இருக்கிறார்கள் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. நல்ல பசி. அதனால் கொஞ்சம் வேகமாகவே உண்ண,

“மொல்ல மொல்ல பாப்பா…” என்றார் செல்வி.

“சரியான பசி…” என்றவள், உண்டு முடிக்கவும், மகளுக்கும் ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தவர்

“அக்காவ பாத்துக்க.. நான் போயிட்டும் வந்துடுறேன்.. தூங்கிடாத..”   என்று சொல்ல,

“சரிம்மா…” என்று தலையை ஆட்டினாள் தேன்மொழி.

பைரவி சிறிது நேரம் அமர்ந்திருந்தவளுக்கு, அப்படியே இருக்கவும் முடியவில்லை.

“தேனு.. நான் ரூம்ல படுக்கிறேன்.. நீ டிவி பாக்குறியா?” என்று கேட்க,

“இல்லக்கா வேணாம்.. எழுத இருக்கு.. எழுதிட்டு இருக்கேன்..” என்றவள், அவளை அறை வரைக்கும் வந்து விட்டுவிட்டே வர,

‘இந்த சின்ன பெண் கவனிக்கும் நிலைக்கு வந்துவிட்டேன்…’ என்று நொந்துகொண்டாள் பைரவி.

படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை. காலையில் இருந்து வாந்தி. இப்போது நல்லதொரு பசி வேறு. அதிலும் வேகவேகமாய் உண்டது வேறு என்னவோ போல் இருக்க, மீண்டும் எழுந்து சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.

ஒருமாதிரி நெஞ்சை அடைப்பது போலிருந்தது. பின் வயிறு பிசைவது போலவும் இருக்க,

‘இதென்னடா…’ என்று முகத்தை சுறுக்கினாள். 

பயமாகவும் இருந்தது. மீண்டும் முடியாது போனால், அனைவரையும் சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டுமே என்று இருந்தது.

இத்தனை நாள் தெரியாத வலி, இப்போது மிக மிக வன்மையாய் வலித்தது.

‘ம்மா இன்னும் கொஞ்ச நாள் நீங்க இருந்திருக்கக் கூடாதா…’ என்று நினைத்தாள்.

அவளையும் மீறி கண்கள் கசிய, ‘நோ நோ அழக் கூடாது…’ என்று தன்னை தானே மீண்டும் திடம் செய்தவள், 

எழுந்து நடந்தால், சரியாகிவிடும் என்று எண்ணி, நடக்கலாம் என்று இறங்க, அவளுக்கு முடியவே இல்லை. ஒருமாதிரி வயிறு பிசைந்து கொண்டு வர, சரியாய் அதே நேரம் சிவா வந்தான் அங்கே.

“செல்விக்கா…” என்று குரல் கொடுத்துக்கொண்டே வர,

“அம்மா வூட்டுக்கு போயிருக்கு மாமா… இப்போ வந்திடும்…” என்று தேன்மொழி பதில் சொல்ல,

“இப்ப இன்னாத்துக்கு போச்சு? பைரவி எங்க?” என்றான்.

“அக்கா உள்ள படுத்திருக்கு மாமா…” எனும்போதே,

பைரவி “தேனு…” என்று பதற்றமாய் அழைக்க, சிவாவும் சரி, தேன்மொழியும் சரி, வேகமாய் அங்கே விரைய, பைரவியோ, வாயை கையால் மூடிக்கொண்டு, வேகமாய் குளியல் அறை நோக்கி ஓடினாள்.

குமட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு. தேன்மொழி பயந்துபோய் நின்றுவிட, சிவா தான் “என்னாச்சு பைரவி…” என்று அவனும் அவளின் பின்னே செல்ல, அப்படியொரு வாந்தி.

சிவா அவளின் தலையை பற்றிக்கொண்டான்.

“பார்த்து பார்த்து…” என்று அவன் ஆதரவாய் சொல்ல, உள்ளே சென்ற மூன்று இட்லியும் முழுதாய் வெளி வந்த பின்னர் தான், அவளுக்கு வாந்தி நிற்க, அதற்குள் உடல் முழுதும் அவளுக்கு வியர்த்து விட்டது.

நிற்கவும் முடியாமல் போக, சிவா ஆதரவாய் அவளின் தோளைப் பற்றிக்கொள்ள,

“ஒருமாதிரி இருக்கு…” என்று திக்கி திணறி பைரவி சொல்ல,

“ஹாஸ்பிடல் போலாமா..?” என்றான்.

“இல்ல வேணாம்..” என்று வேகமாய் மறுத்தவளை, எப்படியோ தாங்கி, தன் மீதே சாய்த்து, அழைத்து வந்து கட்டிலில் சாய்ந்து படுக்க வைக்க, அவளைப் பார்க்கவே தோய்ந்து போய் தெரிந்தாள். பைரவிக்கோ அவனது அருகாமை வேறு படபடவென நெஞ்சை அடிக்கச் செய்ய, இறுக கண்களை மூடிக்கொண்டாள்.

சிவாவிற்கு அவளின் இந்த தோற்றம், மனதைப் போட்டு பிசைய, இன்னமுமே கூட பிடித்திருந்த அவளின் கரத்தினை, அவன் விடவே இல்லை.

“பைரவி…” என்று சிவாவின் இதழ்கள் மெதுவாய் முணுமுணுக்க,

“ம்ம்ம்…” என்றுமட்டுமே அவளால் சொல்ல முடிய,

“மாமா நான் போய் அம்மாவ கூட்டின்னு வர்றேன்…” என்று தேன்மொழி சொல்லிக்கொண்டே வேகமாய் ஓட, அங்கே இப்போது இவர்கள் இருவரும் மட்டுமே.

“என்ன பண்ணுது பைரவி… ஹாஸ்பிட்டல் போலாம்..” என்று அவன் திரும்பச் சொல்ல,

“வேணாம்…” என்றாள் குரல் நடுங்க..

“சொன்னா கேளு.. இங்க பார் எப்படி வேர்த்திருக்கு அப்படின்னு…” என்றவனின் குரலில் நிஜமாகவே ஒருவித பதற்றம், பரிதவிப்பு எல்லாம் தெரிய, பைரவி மெதுவாய் இமைகள் திறந்துப் பார்த்தாள்.

அவளுக்கு இப்போது உடலை விட மனது தான் என்னவோ செய்துகொண்டு இருந்தது. சிவாவின் கரத்தினை இன்னும் இன்னும் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் போல் இருக்க, கலங்கி இருந்த அவளின் கண்களைப் பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ,

“என்னம்மா?!” என்றான் பரிவாய்.

ஒன்றுமில்லை என்பதாய் தலையை அசைத்தவளுக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்பதே தெரியவில்லை. அவளின் அமைதி சிவாவை பாடாய் படுத்த,

“சொல்லு பைரவி என்ன செய்யுது. ரொம்ப முடியலன்னா, திரும்ப ஹாஸ்பிட்டல் போயிடலாம்…” என,

“ம்ம்ஹூம்…” என்று தலையை மறுப்பாய் ஆட்டினாள்.

“நீ சொன்னா கேட்க மாட்ட…” என்று கட்டில் விட்டு எழப் போனவனை, தன் பலம் கொண்டமட்டும் இழுத்து பிடித்து மீண்டும் அமர வைத்தாள்.

“ப்ளீஸ். போகாதீங்க.. இப்படியே இருங்க…” என்றவள், அவனின் கையை மேலும் கெட்டியாய் பிடித்துக்கொண்டு, அப்படியே சாய்ந்து அமைந்து இமைகளை மூடிக்கொண்டாள்.

என்ன செய்கிறாள் இவள் என்று அவனும்,

என்ன செய்கிறாய் நீ என்று அவளின் மனதும், ஒன்று போலவே கேள்வி கேட்க,

பைரவிக்கும் தெரியவில்லை, தான் என்ன செய்துகொண்டு இருக்கிறோம்  என்று. ஆனாலும் இந்த நொடி, அவளுக்கு சிவாவின் ஆதரவும், அருகாமையும் வேண்டும் போல் இருக்க, அவள் மனது செல்லும் வழி அறிந்து, அதை தடுக்கவும் முடியாத, தன்னிலை புரிந்து, அவளையும் மீறி ஒரு கேவல் பிறக்க,

“ஹேய்.. பையும்மா… என்னடா.. ஏன்னா பண்ணுது..?” என்று அவளின் அருகே இன்னும் சிவா நகர்ந்து அமர்ந்து கேட்க,

“ப்ளீஸ்..” என்று இதழ்களை அசைத்தவளுக்கு மேலும் என்ன பேச என தெரியவில்லை.

அவனுக்குப் புரிந்தது.. மிக நன்றாய் புரிந்தது.. அவளுக்கு இப்போது உடல் என்னவோ செய்யவில்லை. மனது சரியில்லை. யாராவது தனக்கு ஆதரவாய், ஆறுதலாய் இருந்திட வேண்டும் என்று  பைரவியின் மனம், ஒரு பற்றுகோளுக்கு தேடுகிறது என்று நன்றாய் விளங்க, அந்த இடத்தில் அவள் தன்னை பிடித்து வைத்திருப்பது தான் அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. 

ஏற்கனவே தடுமாற்றம் கண்ட மனது தானே அவனது.

இப்போது, தடுமாறி தடுமாறி, அழுத்தமாய் அவள் பக்கம் சாய்ந்தே போனது.

“பைரவி…” இத்தனை மென்மையாய் அவள் பெயரை யாரேனும் உச்சரித்து இருக்க முடியுமா என்றால் நிச்சயம் இல்லை.

இத்தனை மிருதுவாய், அவன் யாரையும் கரம் பற்றி, அவர்களை அலைதிருக்கிறானா என்றால் அதுவும் இல்லை.

அவனது அந்த மென் அழைப்பு அவளை என்ன செய்ததுவோ தெரியவில்லை.

“எ.. எனக்கு எனக்கு ரொம்ப அழுகையா வருது.. அழனும் போல இருக்கு…” என்றாள் சிறு குழந்தை போல்.

“எதுக்காக அழனும் நீ…? உனக்கென்ன குறை..” என்றான் ஆதுரமாய்.

“தெரியலை.. ஆனா எப்படியோ இருக்கு..” என்றவளுக்கு விசும்பல் கூடியது.

“ஷ்.. பைரவி…” என்றவன், அவளை தன் மீதே சாய்த்துக்கொள்ள, அவ்வளவு தான், பற்றுவதற்கு எந்த பிடிப்பும் சிக்காமல், காற்று வீசும் போக்கில் ஆடிக்கொண்டு இருந்த கொடி போல் இருந்தவளுக்கு, இப்போது சாய்ந்துகொள்ளவும், பற்றிக்கொள்ளவும் ஒரு இடம் கிடைக்கவும், அப்படியே அழுது தீர்த்துவிட்டாள்.

ஏன் அழுகிறாள்.. எதற்கு அழுகிறாள் என்றெல்லாம் அவன் சிந்திக்கவில்லை. அந்த நொடி அவளுக்கு தன்மீது சாய்ந்து அழ வேண்டும் போலிருக்கிறது. அழட்டும்  என்று விட்டுவிட்டான்.

அவள் கன்னம் பற்றி நான் நெஞ்சில் சாய்த்து இருந்தவனும் கூட, அவள் தலை மீது தன் கன்னம் சாய்த்து கண்கள் மூடி அமர்ந்து இருந்தான்.