அத்தியாயம்-03

பகுதி-3

மலரும் சூரிய காந்தியும் தோட்டத்திற்கு சென்றதும் போர் போட்ட இடத்தை பார்த்துக் கொண்டிருக்க , அங்கே சிவசக்திபாலன் தன் நண்பர்களுடன் வந்தான். 

“ஏ மச்சி நில்றா நில்றா. இது மத்தியானம் பஸ் ஸ்டாண்டில் பார்த்த புள்ள டா. . இவ இங்க என்ன பண்றா . அட நம்ம சன்ஃப்ளவரு. . இவ வீட்டுக்கு தான் வந்திருக்கணும். . இப்ப பாரு நம்ம பர்ஃபார்மன்ஸ. சாயங்கால வேளையிலும் அந்தி வான சூரியனை போல ஜிவு ஜிவுனு இருக்காளே. ” என்றவாறே .,”ஏ சன்ஃப்ளவரு பொழுது போன நேரத்தில் நீ இங்கே என்ன பண்ற?? யாரது கூட ஒரு தொடுப்பு உன் கூட படிக்கிற புள்ளையா. ?? “கேட்டவனுக்கு நக்கல் பதிலொன்று கிடைத்தது. 

“ஹேன்ன். ஏ ஊட்டு கரும்ப எல்லாம் ஏதோ நாலு கருங்கொரங்கு ஆட்டையப் போடுறதா சொன்னாவ அதேன் கருங்கொரங்கு வாலை பூராம் ஒட்ட நறுக்க வந்தேன். கருங்கொரங்கு வாலை என் ஒராளால நறுக்க முடியுமா அதேன் என் அக்காவையும் கூட கூட்டிட்டு வந்தேன். ” இழுத்து பேசி பதிலுரைத்தாள். 

“நீ எல்லாம் நக்கலடிக்கிற அளவுக்கு நான் இருக்கேன் பாரு. சரி உங்க அக்காவா. . இது வரைக்கும் நான் பார்த்தது இல்லையே . ஆமா உங்க அக்கா பேசாதா. ஏன் மா அட இந்தா புள்ள.. நீ எந்த ஊரு. .? ” என்றிட பனிமலரோ மருதாணி மலரின் வாசம் பிடித்து கொண்டிருந்தவள் அவனை திரும்பி பார்த்து முறைத்தாள். 

“யம்மாடி முறைக்கிற முறையில பஸ்பமாக்கிடுவ போல . உன் பேரை சொல்லலாம் ல ?”என்றான். 

“சூரியா வா போகலாம்” என்று இழுத்து சென்று விட்டாள். 

“முறைக்கும் போது கூட அழகா தான்யா இருக்கா. .!!” சிலாகித்த சிவாவை வீரமலை இதெல்லாம் ஒரு பொழப்பா!!” என்பது போல பார்த்தான். 

“என்னடா என்னை சைட் அடிக்கிற. வா வா. மாங்காயை பறிச்சுக்கிட்டு வீட்டுக்கு போவோம் “என முன்னே நடந்தவனை பின் தொடர்ந்தனர் அவனது நண்பர்கள். 

வீட்டிற்கு செல்லும் போதே பனிமலர் சூரியாவை கடுப்படித்தாள்.

“அவிங்க எல்லாம் என்ன ஆளுங்கனு பேச்சு வளர்க்குற. ஆளும் மூஞ்சியும் பார்க்கிற பார்வையே சரியில்லை. மனசுக்குள்ள பெரிய ஆணழகன்னு நெனப்பு. சீன் போட்டுக்கிட்டு “என வசைபாடிய மலரை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தாள் சூரியா. 

“அக்கா விடு. அவரு கருப்பசாமி மாமாவோட பையன் சிவசக்தி. நல்லா படிச்சிருக்கு.. வேலை கிடைக்காம இப்படி சுத்திட்டு அலையிது. நல்ல பையன் தான். என்ன முறைப்பொண்ணுகளை கண்டா இப்படி விளையாட்டுக்கு வம்பு பண்ணும் இதை எல்லாம் பெருசா எடுத்துக்காத. ” என்றாள் சூர்யா. 

“என்ன நல்ல பையனோ. போ. போற வாரவகளை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கிறதா நல்ல பிள்ளைக்கு அழகு. சரி வா நேரமாயிட்டு நான் போய் பாட்டனை ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுறேன். ” என்று தன் ஆச்சியை அழைக்க அவரோ பேருந்தில் வந்த அசதியில் உறங்கி கொண்டிருந்தார்.

“பெரியம்மா நான் பாட்டனை போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுறேன். “என்றதும்.,” ஏ பொருவே சாப்புட்டு போ. . நாட்டுக்கோழி சூடா சாப்பிட்டா தான் நல்லா இருக்கும்” என்று தட்டை எடுத்து வைத்தார். 

நல்லண்ணையில் வைத்த நாட்டுக்கோழி குழம்பு வீடே மணமணத்தது . கோழி ரசமும், கெட்டியாக வறுத்து வைத்திருந்த பிச்சு போட்ட கோழிக்கறியும், ஒரு ஓரமாக இடம் பிடித்து இருக்க நெல்லரிசி சாதம் வாழை இலையில் நடுவே இடம் பிடித்து தன் ஆவியை போக்கி கொண்டிருந்தது. முதலில் சிறிது குழம்பு ஊற்றி சாப்பிட்டவளை “ஏ பாப்பா நல்லா சாப்பிடு. இதென்ன கொறிச்சிட்டு இருக்கவ. . ” என மரகதம் குழம்பை ஊற்றப் போக .,”இல்ல பெரியம்மா. . நான் கோழிரசம் ஊத்திக்கிறேன்” என்றதும் அவருக்கு கண் கலங்கி போனது. 

“உன் அம்மா கூட இந்த கோழிரசம் தான் கேட்பா. குழம்பை விரும்பவே மாட்டா. கோழிரசமும் அந்த வறுவலும் போதும் அவளுக்கு. . ” என்று சொல்ல மலர் வேதனையாக சோற்றை பிசைந்து கொண்டிருந்தாள். 

“ஏம்மா அக்கா சாப்பிடுற நேரம் ஏதாவது சொல்லிக்கிட்டு. பேசாம இரு.. அக்கா ஆறிப் போயிடும் நீ சாப்பிடு. ” என்று சூரியகாந்தி சொல்ல மலர் சடுதியில் சாப்பிட்டு எழுந்தாள்.  

தனது பாட்டாவை காண செல்ல அங்கே அவளது சித்தி வேலைக்கார பெண்மணியிடம் கஞ்சியை கொடுத்து” இதை குடு. ” என்றதும் மலர் அதை வாங்கி கொண்டு உள்ளே நுழைந்தாள். 

“பாட்டா கஞ்சி குடிக்கலாமா. ??”

“ஆயா வந்துட்டியா. பெரியாயி வீட்ல சாப்டியா மா. !! எப்படி இருக்கா அந்த பொருவு. ?? பார்த்தே மாசக் கணக்கு ஆச்சு. அவ வந்தா இதுக வம்பிழுத்து விடுதுகனு வர்றதே இல்ல. . ” என்றார் கவலையாக.  

“சரி விடு பாட்டா. நான் தான் வந்துட்டேன் இல்ல அப்புறம் என்ன இனிமே எல்லாம் சரியா போயிடும் “என்று கஞ்சியை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்திட அவரும் குடித்தார்.  

“சரி பாட்டா நான் பெரியம்மா வீட்டுக்கு போயிட்டு வரேன் நீங்க தூங்குங்க.. “என கிளம்பியவளை எதிர் கொண்டாள் வடிவரசி. 

பனிமலரை மேலும் கீழும் பார்த்து விட்டு .,”மம்மி நூடுல்ஸ் ரெடியா??” என கேட்டபடியே உள்ளே சென்று விட்டாள்.  

பனிமலரும் அவளை கண்டு கொள்ளாமல் வெளியேற .,”என்ன மம்மி யார் யாரோ வந்து போறாங்க. !!”என்றதும் பனிமலர் புன்னகைத்து விட்டு சென்றாள். 

இங்கே சூரியாவின் வீட்டில் அனைவரும் படுக்கையை விரித்திட பனிமலர் சூரியாவின் அருகில் படுத்து கொண்டாள்.  

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சிவசக்திபாலன் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து கொண்டு இருக்க அவனின் தந்தை திட்டி கொண்டிருந்தார். 

“எப்ப பார்த்தாலும் ஊருக்கார பயலுவ கூட எங்கேயாவது பொறுக்கிட்டு திரிய வேண்டியது. வூட்ல ஒரு வேலை செய்யுறியா. . மேற்கி காட்டுல பருத்தி போடனும் டிராக்டர் காரன் உழுவ வாரான் பார்த்துக்கடா னு சொன்னதுக்கு காட்டு பக்கம் வந்தியாடா நீயி அவன் ஏனோ தானோன்னு உழுது போட்டு போயிட்டான். “கத்தியவரின் குரல் காற்றில் கரைந்து போனது.  

சிவா உண்ட மயக்கத்தில் வெளியே கிடந்த கயிற்று கட்டிலில் இழுத்து போர்த்தி படுத்து விட்டான்.  

“இதெல்லாம் என்னிக்கு உருப்பட போவுதோ. ஏதோ மூத்தவன் வெளிநாட்டுல இருந்து பணம் அனுப்புறது ஒத்தாசையா இருக்கு இல்லாட்டி பொழப்புதனத்துக்கு காட்டை தான் விக்கணும். . இந்த தடவையும் தண்ணி சுமாரா தான் காவேரில தெறந்து விடுவாங்க போலிருக்கு. ” என்று மனைவியிடம் பேசியபடி இரவு சாப்பாட்டை முடித்தார் கருப்பசாமி. 

“நமக்கு என்ன ஆத்து பாசானமா. . வானம் பார்த்த பூமி தானே . மழை பேஞ்சா தான் உண்டு. . “என்றவரிடம் “அட இவ என்ன டா இவ சுத்த கூறு கெட்டவளா இருக்கா. அடியே ஆத்துல தண்ணி வந்தா தான் மேகம் திரளும். மேகம் தெரண்டா தான் காத்தடிச்சு மழை வரும். ஆத்துல தண்ணீயே வராமல் எங்கிருந்து நீர் ஆவியா போயி மேகமா மாறுறது. எதுவும் நடக்காது. இதுக்கு தான் நாலு எழுத்து படிக்கணும் . . னு சொல்றது. போ போய் வெளக்கமத்திட்டு திண்ணையில பாயை விரி வெக்கை தாங்கலை. . இதுல கொதிக்க கொதிக்க சோத்தை போட்டுட்ட. ” சலித்து கொண்டார் கருப்பசாமி. 

“ஆமா ஆமா இவரு ஜில்லா கலெக்டருக்கு படிச்சுட்டாரு நாங்க தான் படிக்காத தற்குறியா கெடந்துட்டோமாக்கும். இந்த படிக்காதவ தான் வேணும் னு என் வூட்டு வாசல்ல தவங் கெடந்தது மறந்து போச்சோ. .” பதிலுக்கு கிண்டல் செய்த சித்திரைசெல்வியை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு பாயில் படுத்தார்.  

செல்வியோ திருநீறை எடுத்து கொண்டு மகனிடம் சென்றவர்.,” ஏய்யா ரோட்டுல படுத்து கெடக்க. . சாமத்துல எழுந்துக்குவ இந்த துன்னூரை பூசு” என பூசி விட்டார். 

இரவு பதினோரு மணிக்கு மேல் சிவாவின் ஃபோன் அலறியது.. துபாயில் இருந்து சிவாவின் அண்ணன் தனஞ்செயன் அழைத்திருந்தான் .

“ம்மா உன் பீத்த புள்ள ச்சீ உன் மூத்த புள்ள அழைக்குது பேசு. .” ஃபோனை ஸ்பீக்கரில் போட்டு கொடுத்தவன் மீண்டும் இழுத்து போர்த்தி தூங்கி விட்டான். 

“எய்யா தனா எப்படியா இருக்க.. எப்போயா வருவ. சாப்டியா !! “என வழக்கமான சம்பாஷணைகள் தொடர்ந்தபடி இருக்க கருப்பசாமியும் பெரிய மகனிடம் பேச வந்து விட்டார். 

மணி மூன்றை தொட்டிருந்தது அவர்கள் எல்லோரும் பேசி முடிக்கும் போது. தனஞ்செயன் திருவிழாவிற்கு வந்து விடுவதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்தான். 

அந்த நேரமே ஆரம்பித்து விட்டார் சித்திரைசெல்வி.

“இந்த திருவிழா முடிஞ்சதுமே மாசி கடைசிக்கு கல்யாணத்தை முடிச்சிடனும் சொல்லிட்டேன் வெரசா ஜோசியரை பார்த்து விட்டு பொண்ணு தேடுங்க.. உள்ளூர் பொண்ணே போதும். வெளியே தேட வேண்டாம். ” என்றார். 

“சரிடி நம்ம பயலுக்கு பொண்ணா இல்ல. நம்ப சங்கரன் மகளுக இருக்காங்க பொன்னுசாமி மச்சானுக்கு ஒரு பொண்ணு இருக்கு ஏதாவது ஒண்ணை பேசி முடிக்கலாம் . எனக்கு மனசுக்கு நம்ம வேதவல்லி மக பெரியவனுக்கு பொருத்தமா இருக்கும்னு படுது. . நம்ம சிவாவுக்கு வடிவரசியை பேசி முடிக்கலாம் சங்கரன் மச்சான் கிட்ட பேசுறேன் பேசிட்டு மொறப்படி பொண்ணு கேட்போம்” என்று படுத்து விட்டார்.

சட்டென எழுந்த சிவாவோ “இதோப்பாரு ப்பா நீ அண்ணனுக்கு யாரை பேசி முடிப்பியோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா என் கல்யாண விஷயத்தில் தலையிடாத. பொண்ணு பார்க்காறாராம் பொண்ணு வடிவரசி வாய்க்கரிசி னு. அவ வாய்க்கு நான் எல்லாம் என்ன ஆவேன் னு தெரியலை. நல்ல ஆள் கிட்ட நம்மலை கோர்த்து விடுற போப்பா” என்று கண் மூடி படுத்திருந்தவன் மனதில் பளிச்சென்று சிரித்த முகத்துடன் வந்து நின்றாள் பனிமலர். 

போர்வையை விலக்கி விட்டு வானத்தை பார்த்தவன் முகத்தில் புன்னகை கீற்று தெரிந்தது., “என்ன கனவுல இவ வர்றா . ..சிரிக்கும்போது சும்மா நச்சுனு இருக்காளே ம்ம்ம் என்னா அழகுடா சாமி . . நாளைக்கு மொதோ வேலை அவளை பத்தி விசாரிக்கிறது தான்” என மனதில் நினைத்து கொண்டு பனிமலரின் முகத்தை விழிகளால் வருடி உறங்கிப் போனான். 

அவனுக்கு இருந்த வேலையில் மலரை பற்றி விசாரிப்பதை மறந்திருந்தான்.. 

இரண்டு நாட்கள் கழித்து தூத்துக்குடியில் இருந்து அழைப்பு வந்தது மலருக்கு .

இங்கே பனிமலருக்கு காலையிலேயே பழனியம்மாளிடம் இருந்து அழைப்பு வந்தது.  

பொன்னுசாமியின் கைபேசிக்கு அழைத்திருந்தார் பழனியம்மாள். 

“மலரு உன் பள்ளிகூடத்துல இருந்து ஃபோன்

போட்டாங்க. ஏதோ முக்கியமான விஷயமா பள்ளிகூடத்துக்கு வரணுமாம் நீ காலையில கெளம்பி இங்கன வந்திடு. 

மத்யானம் மூணு மணிக்கு மீட்டிங் னு சொன்னாக. வர்றியா??”

என்றதும் .,”சரிக்கா நான் வரேன்” என்று இணைப்பை துண்டித்து விட்டாள். 

“ஆச்சி ஸ்கூல் ல மீட்டிங் னு வர சொல்லி

இருக்காங்க நான் ஊருக்கு போயிட்டு வந்திடுறேன் சரியா நீ இங்கேயே இரு. ” என்க செண்பகமோ.,” உன் பாட்டன் தான் நல்லா இருக்காரே நாம ஊருக்கு கிளம்பலாம் டி 

எனக்கென்னவோ ஊருக்கு போனா தேவலாம் னு

தோணுதுடி” என்றார் ஆச்சி. 

“உனக்கு தூத்துக்குடி உப்புகாத்து

படலைனா தூக்கம் வராது வா “

என்றவள் தன் தாத்தாவை பார்த்து விட்டு தனது

ஆச்சியுடன்  

கிளம்பி விட்டாள்.

சிவா இரண்டு நாட்களாக பனிமலரை பற்றி

தெரிந்து கொள்ள ஆவல்பட அவனால் முடியவில்லை.இன்றும் அவள் தூத்துக்குடி சென்றதுதெரியாமல் ஊர் சுற்றி கொண்டிருந்தான். 

தூத்துக்குடி கிளம்பி போய் விட்டாள்.

பள்ளியில் மீட்டிங் முடித்து விட்டு வந்தவளை இடை மறித்தான் ஆறடியில்

ஒருவன். கண் சிவந்து போய் அவளை விழுங்குவது போல பார்த்தவனை அருவெறுப்புடன் பார்த்து விட்டு ஒதுங்க அவளின் கையை பிடித்து இழுத்து .,”ஏம்ல எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா??”

“உன் மேல கொள்ளை பிரியம் எனக்கு கலியாணம் னு ஒண்ணு நடந்தா அது ஒங்கூட தான் புரியுதா !!” என்றான் நாக்குழற 

கையை சட்டென்று விடுவித்தவள் ., அவனை

ஓங்கி அறைந்து விட்டாள்.

” இந்த

போக்கிரிதனத்தை எல்லாம் வேற எவ கிட்டயாவது வச்சுக்க. எங்கிட்ட

ஒரண்டை இழுத்த கெண்டைக்காலு நரம்பை நறுக்கிபுடுவேன். போல

அந்தாண்ட குடிகார பயலே” திட்டி விட்டு சென்றாள் பனிமலர். 

அவள் போகும் வழியை வெறித்து பார்த்தவன்.,” நீ எனக்கு தான் டி சண்டிராணி. ”

என்றவன் அன்றிரவே அவள் வீட்டின் பின்புறம் புகுந்திருந்தான்.

. .. தொடரும்