லாவண்யாவின் பெற்றோர் வந்தனர் சென்னைக்கு. அருணகிரி, வரசொல்லி இருந்தார்.. ம்.. பொறுப்பு இவர்கள்தானே. அதனால் அவமானமோ அசிங்கமோ தாங்கள்தானே எல்லாம் சொல்ல வேண்டும் அதனால் வர சொல்லி இருந்தனர்.
அவர்களும் என்னமோ ஏதோவென பதறிதான் வந்தனர்.
சாரதாவும் பிரகாஷூம் வந்தனர்.
அருணகிரி “நீங்கள் எங்களை மன்னிச்சிடுங்க.. ஏதாவது பேசிடாதீங்க, நாங்க ரொம்ப நொந்திருக்கோம்” என தொடங்கியவர்.. ஏதேதோ தொட்டு தொட்டு விஷயத்தை பொறுமையாக சொல்லினார்.
பெற்றோர் எப்படி நம்புவர்? நம்பவில்லை.
அருணகிரி அதற்குமேல் விளக்கம் சொல்லவில்லை. லாவண்யாவின் தந்தை நிறைய பேசினார்.. சொல்ல போனால் வசை பாடினார்.. ‘நீங்கதான் எதோ செஞ்சிட்டீங்க.. போலீசுக்கு போவேன்’ என்றார்.
அப்படியும் நடந்தது. லாவண்யாவின் பெற்றோர் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தனர்.
போலீஸ் கருணாவை விசாரிக்க கூட்டி போக வீடு வந்தனர். தெரு முழுக்க வேடிக்கைதான் பார்த்தது. அருணகிரி, போலீசிடம் பேசி.. மகனோடு வருவதாக சொல்லி அனுப்பினார். கொடுமையான நாட்கள்தான்.
கருணா, வக்கீல் ஏற்பாடு செய்திருந்தான். நிறைய விசாரணை. கருணா வாய் திறந்து அந்த செந்தூரன் பெயரை சொல்லவேயில்லை. செந்தூரானின் தந்தை வந்து.. மகன் அழைத்தது பற்றி போலீசில் சொல்லினார்.
லாவண்யாவின் பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை.. மனது அப்போதே பாரமாக தொடங்கியது.
நான்கு நாளுக்கு பிறகு.. அந்த இருவரும் வந்தனர். அதுவரை, ஸ்டேஷன் பொறுப்பில்தான் இருந்தான் கருணா. அங்கிருந்த போலீசாரின் துணையோடு வீடு சென்று வந்தான். அரஸ்ட் என இல்லை. விசாரணை என இருந்தான். பிரகாஷ்க்கு, ஆட்களை தெரியும், ஆனால், கருணா.. ஏதும் செய்ய வேண்டாம் என்றுவிட்டான்.
கருணாவிற்கு, வக்கீல் பெயில் வாங்கலாம் என்றால்.. இந்த கேஸ்.. தொடராது, என அங்கிருந்த போலீஸ் ஆட்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். தேவையில்லாமல் எதற்கு லாவண்யாவின் பெற்றோரை கோர்ட் வரை அலையவைப்பது என யோசனை. பதிலுக்கு பதில் செய்ய அவர்கள் என்ன எதிரியா.. நமக்கு உள்ள அதே வேதனைதானே அவர்களுக்கும்.. என அருணகிரிக்கு புரிய அமைதியாக இருந்தார்.
செந்தூரன் லாவண்யா இருவரும் ஸ்டேஷன் வந்தனர். கருணாவிற்கு எந்த உணர்வும் இல்லையோ.. அப்படியே அமர்ந்திருந்தான் ஜடமென. வாழ்க்கை சில நிகழ்வுகளை நமக்கு காட்ட கூடாது.. அதை நாம் பார்க்க கூடாது.. ஆனால், கருணாவின் கண்கள்.. மூளை.. மனது.. எல்லாம் நடக்கும் எல்லாம் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்தது. ஒன்றுமே இல்லாதவன் போல அமர்ந்திருந்தான். ம்.. மனைவி போனால்.. சகலமும் போனதுதானே. அதான் மானம்.. மரியாதை.. சோறு.. தூக்கம்.. உணர்வு.. எல்லாம் போனது.
லாவண்யா, சொந்த விருப்பின் பெயரில் செந்தூரனோடு சென்றதாக எழுதி கொடுத்தாள். யார் என்ன பேசுவது! செந்தூரன்.. இப்போதுதான் லேசாக தலை நிமிர்ந்து நின்றான். சேர்ந்தவனை உத்தமனாக்கி.. கொண்டவனை துரோகியாக்கினாள் பெண்.
கணவன் கருணா ‘விரும்பினால் கேஸ் கொடுக்கலாம் லாவண்யா பெயரில்’ என்றனர்.
கருணா மறுத்துவிட்டான். ‘போனவற்றை..’ எதையும் சட்டத்தால் கொண்டு வந்திட முடியாதுதானே.
கருணா, அங்கே வக்கீலை வைத்து விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்தான். எங்கு வர சொன்னாலும் இதற்காக வருகிறேன் என உத்தரவாதம் கொடுத்தான். இப்போது இந்த அவமானம் இவனின் பொறுமையை சோதித்தா.. இல்லை, அன்பை அழம் பார்த்ததா.. தெரியவில்லை.. செந்தூரன் பின்னால் நின்றிருந்தவளை ஒருமுறை ஏறிட்டு பார்த்தான், கருணா. நன்றாக இருந்தாள்.. தான் முதல்முறை பார்த்தது போல.. கண்கள் மட்டும் தன்னை ஏறிடவில்லை.. அன்று போல. கழுத்தில் தான் அணிவித்த செயின் இல்லை.. மஞ்சள் சரடு.. மங்களமாக மின்னியது.
செந்தூரன் இப்போது, அந்த தாலிசெயினை எடுத்து.. கருணாவின் முன் வைத்தான்.
இப்போது கருணாவோடு நின்றிருந்த பிரகாஷ்.. செந்தூரனின் சட்டையை பிடித்து நெரித்தான் “நல்லா இருந்துடுவியா டா.. நீ. நல்லா இருப்பியா.. ம்.. நண்பன் நண்பன்னு நம்பினான்.. நல்லா செய்துட்ட டா” என சொல்லி சட்டையை விட்டு.. அவனை ஓங்கி ஒரு அரை வைத்தான்.
செந்தூரனின் நண்பனும்.. லாவண்யாவும் “ஐயோ” என்றனர்.
செந்தூரன் “மன்னிச்சிடு கருணா..” என்றான்.
மீண்டும் அரை விழுந்தது.. பிராகஷ் மூலமாக. செந்தூரன் “எவ்வளோ வேணுமானாலும் அடி.. உன் கோவம் தீர்ந்தால் போதும் பிரகாஷ்” என்றான்.
கருணா, அந்த தாலிசெயினை எடுத்துக் கொண்டு.. கிளம்பினான்.
“வழியேதும் தெரியாது..
விழிரெண்டும் கிடையாதே..
என் கண்ணே நீ சென்றால்..
இருளாக மாறாதோ..
இருளாக மாறாதோ..”
லாவண்யாவின் பெற்றோர் அங்கேயே கருணாவின் காலில் கிட்டதட்ட விழுந்தனர் எனலாம்.. கம்ப்ளைன்ட்டினை வாபஸ் வாங்கினர், மன்னிப்பு கேட்டனர்.
கருணா, வீடு வந்தான். மனமெல்லாம் பாரம். அவள் நினைவு என்பதை தாண்டி.. ஒரு அவமானம். எதோ ஒன்றை அவனிடமிருந்து யாரோ பிடுங்கிக் கொண்ட உணர்வு. நிமிர்ந்து நடக்கவே கூசுகிறது. யாராவது பார்த்திடுவாரோ.. ஏதாவது கேட்டிடுவாரோ என எண்ணம். எதோ பதிலில்லா நிலை.. கோவம் கொள்ள தகுதியில்லையோ என எண்ணம். எங்கே தவறவிட்டேன்.. என யோசிக்க கூடாது என எண்ணினாலும்.. அவன் செய்தது தவறுகள் எல்லாம் அவனுக்கு ஒன்றன்பின் ஒன்றாக நினைவில் வந்துக் கொண்டே இருந்தது.
கருணாவின் எல்லா பயங்களும் அர்த்தமானதாகவே இருந்தது. அக்கம் பக்கம்.. தெருவில்.. தெரிந்தவர்கள்.. சொந்தம்.. நண்பர்கள்.. என எல்லோரையும் கருணாவின் பெற்றோர்தான் சமாளித்தனர் பேசி பேசி. பேரனை வீட்டில் வைத்துக் கொள்ள முடியவில்லை.. பார்ப்பவர்கள் எல்லாம் பாவம் பாவம் என்றனர்.. அத்தோடு கருணா, என்னமோ மகனை தூக்கவே தயங்கினான்.. அவனின் அருகில் செல்ல பயந்தான்.. அவன் அழுகைக்கு சமாதானம் சொல்ல வேண்டியவன்.. மகன் அழுதாலே.. எதையாவது தூக்கி போட்டு உடைத்தான்.. குழந்தையின் அழுகை அவனை எதோ செய்தது. மகனின் அருகாமைக்கு பயந்து ரிசார்ட்டில் இருக்க தொடங்கினான்.
மனதில் ஒரு வெறுமையின் சாயல்.. இதென்ன சாபம் எனக்கு மட்டும் என.. கருணா நொந்துக் கொள்ளாத நாளே இல்லை எனலாம். கருணாவை எல்லாம் துரத்துகிறது. ஓடி ஒழிய இடமில்லை.. தனியே தோற்று நின்றான். தேற்றுகிறேன் என வரும் உறவுகள்.. எங்கு போனாலும் அவனை துரத்துகிறது. யாரை பார்த்தாலும்.. என்ன பேசினாலும் அதில் கண்டிப்பாக ‘ஐயோ பாவம்.. உனக்கு இப்படி ஆகியிருக்க வேண்டாம்..’ என்றோ ‘அஹ.. பிரச்சனை இல்லாமலா.. ஏதாவது இருக்கும்.. படுத்து கிடந்தானே ஒரு வருஷம்.. அதான்’ என்றோ பேச்சுகள்.
அவன் சரணடைந்த இடம்.. தன் ரிசார்ட் பார். அங்கே அவனை கண்டுகொள்வார் யாருமில்லை.. கேள்வி கேட்ப்பாரும் யாருமில்லை.
நாட்கணக்கில் வீடு வருவதில்லை கருணா. மகன் மேல் உயிராக இருந்தவன் மகனை பார்க்கவே அஞ்சினான்.. நிறைய பதட்டம்.. ‘அம்மா எங்கே என அவன் கேட்டிடுவானோ’ என பதட்டம். மேலும், மகன் முகத்தில் எப்படி விழிப்பது என அவனுக்குள் கேள்வி.. என்ன வாழ்ந்தாய் என அவனுக்குள்ளேயே கேள்வி. ஆக, கண்மண் தெரியாத போதை அவனை ஆக்கிரமித்தது.
அருணகிரி மகனை அதட்டினார் மிரட்டினார் ஏன் அடித்து கூட வீடு கூட்டி வந்தார். ஆனால், மகன் நிற்கவில்லை.. வீட்டில்.
வருவோர் போவோர் எல்லாம் பேரன் மேல் இறக்கம் காட்டுக்கிறேன் என.. லாவண்யா பற்றி பேச பேச.. யாரேயேனும் பார்த்தாலே அழ தொடங்கினான் குரு. வேலையாட்களை வைத்து பார்க்க முடியவில்லை.. குரு ஏங்கி போனான் தாய்தந்தை பாசத்திற்கு, அதை தாத்தா பாட்டியால் பார்க்க முடியாமல் குழந்தையை போர்டிங் ஸ்கூலில் சேர்த்தனர், மனதை கல்லாக்கிக் கொண்டு. பக்கத்தில் சென்னையில் உள்ள பள்ளிதான்.
அப்போதாவது மகன் பிள்ளையை தேடுவான என பார்க்க.. கருணா வீட்டு பக்கம் வராமலே போனான். வீடு வீடாகவே இல்லை.
சாரதா, கருணாவின் தங்கையின் தலை பிரசவம் மட்டுமே தாய் வீட்டில், இரண்டாவது குழந்தைக்கு தாய் வீட்டின் கவனிப்பு கிடைக்கவில்லை. விசாலாட்சி ஓய்ந்து போயிருந்தார்.. எதோ வேலைக்கு சென்றார்.. வாரம் தவறாமல் வெள்ளி மாலையில் பேரனை கூட்டி வந்திடுவார்கள்.. மகன் பேசுவதேயில்லை.. இப்படி நிறைய குழப்பம்.. அடுத்த இரண்டு வருடமும். அதனால், மகளை கவனிக்க முடியவில்லை. சாரதாவின் மாமியார் உடன், சென்னையில் சாரதா இருந்த இடத்திலேயே தான் சென்று பார்த்துக் கொண்டார் மகளை. ம்.. தடுமாறினார்.. மகன் பற்றிய கவலை.. எதையும் வெளிப்படையாக பேச முடியவில்லை.. மகனை பார்த்தே நாட்கள் ஆகிறது.. என நிறைய கவலைகள். சொல்லியழ ஆளில்லாமல் அருணகிரியும் விசாட்சியும் மருகி நின்றனர்.
கருணாவிற்கு, இரண்டு வருடம் அவன் வாழ்ந்த கண்மண் தெரியாத வாழ்க்கையின் விளைவாக.. ஒருநாள் அட்டாக் ஏற்பட்டு.. மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
மருத்துவர்கள், அவனின் உடல்நிலையை பரிசோதித்து.. பெற்றோரை கடிந்துக் கொண்டார். முறையான பராமரிப்பில்லையானால்.. கருணாவின் வாழ்க்கை அவ்வளவுதான் என்றனர். மையிட் அட்டாக்.. ஆனால், இது ஒரு அலாரம் போல உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் என.. அவனுக்கு டைடிஷியனை அறிமுகம் செய்தனர்.
கருணாவிற்கு முதல் நிபந்தனையே ட்ரிங்க்ஸ் எடுக்க கூடாது என்பதுதான். அதை தொடர்ந்து உணவு முறை மாற்றம். உறக்கம்.. அதுதான் அவனுக்கு அகப்படாமல் இப்போதுவரை ஆட்டம்காட்டும் விஷயம். தன் அறையில் அவன் உறங்கி வெகுநாட்கள் ஆகிறது. உறக்கமே வருவதில்லை.. மேலே தங்களின் அறைக்கு செல்லாமல் கீழேயே நடந்துக் கொண்டிருப்பான், கருணா.
பெற்றோர், அதை பார்த்துவிட்டு, அந்த அறையை பூட்டிவிட்டனர். வேறு அறையில் அவனின் பொருட்கள் எல்லாம் சேர்த்தனர். ஆனாலும், கருணா இன்னமும் மீளவில்லை.. மொட்ட மாடியில் அந்த விண்மீன்களை எண்ணிக் கொண்டே நீண்ட நேரம் அமர்ந்திருப்பான் பைத்தியகாரன் போல.. எந்த போதையும் இல்லையே உறக்கமும் வரவில்லை.
ஒருமுறை.. ஓங்கி ஓங்கி சுற்றில் கையால் அடித்ததில்.. அந்த பைத்தியகாரனுக்கு மணிக்கட்டோடு கூடிய கையில் அடி.. திரும்பவும் மருத்துவமனை.. மருந்து, அதன் தாக்கம்.. என வலிகளை தேடி தேடி எடுத்துக் கொள்ளுகிறான். அந்த இரண்டு மூன்று நாட்களாவது உறங்கலாம் என.
அருணகிரி, பணி ஒய்வு பெற்றிருக்க.. ரிசார்ட்டுக்கு செல்ல தொடங்கினார். கருணா இந்த ஒன்பது மாதங்களாக வீட்டில் இருந்து வேலை பார்க்கிறான். அன்னையின் மிரட்டலில் இங்கே இருக்கிறானோ எனகூட தோன்றும். ஆனாலும், காலம் கொஞ்சம் மாறியிருக்கிறதே.
இப்போது அவ்வளவாக அவனிடம் யாரும் மனையாள் பற்றி பேசுவதில்லை. ம்.. வார விடுமுறையில் வரும் மகன் கூட அம்மா என கேட்பதில்லை.. தந்தையின் அருகில் கூட வருவதில்லை. வளர்ந்து விட்டான்.. ஏழு வயதில் குழந்தை வளர்ந்துவிட்டான். தானே டேபிளில் அமர்ந்து உணவுகளை தனக்கு தானே பரிமாறிக் கொண்டு உண்டுவிட்டு.. ப்ளேட்டினை கழுவி வைக்கும் அளவிற்கு குரு வளர்ந்து விட்டான்.
கோர்ட்டில் முறையாக விவாகரத்து கிடைத்துவிட்டது. லாவண்யா மகனை கேட்கவேயில்லை.. ஜீவனாம்சமும் கேட்கவில்லை. கருணாவோடு மகன் இருந்துக் கொண்டான். விடுமுறைக்கு லாவண்யாவின் வீட்டில் வந்து கூட்டி போவர்.. கொண்டு வந்து விடுவர். காலம் யார் கைக்கும் அகப்படாத காற்றாகியது.
இன்று..
குரு, வார விடுமுறை என்பதால் வீடு வந்திருந்தான். இரவு ஏழுமணி.. அவன் எப்போதடா வருவான் என.. அவனின் நண்பன்.. தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான்.
தாத்தாவோடு காரில் வந்த குரு, கார் நின்றதும்.. இறங்கி நேராக அவனின் சைக்கிள் வரும் பாதையை பார்த்து நின்றான்.
அந்த குட்டி நண்பனும்.. சைக்கிளை திருப்பிக் கொண்டு வரும் போதே நண்பனை பார்த்துவிட்டவன் “குரு..” என கத்திக் கொண்டே வந்தான் பறந்து.
குரு ஓடினான்.. நண்பன் விசாகனும் சைக்கிளை நிறுத்துவிட்டு “ஏன் டா.. லேட்.. போடா.. நான் மட்டும் தனியாவே ஓட்டிட்டு இருந்தேன்” என்றான் புகார் சொல்லும் குரலில்.
குரு “இரு நான் என்னோட பெரிய சைக்கிள் எடுத்துட்டு வரேன்” என கிடுகிடுவென ஓடினான்.. விசாகன் சைக்கிள் பிடல் செய்ய.. அந்த பத்தடி தூரத்தை இருவரும் பேசிக் கொண்டே கடந்தனர்.
குரு தன் வீட்டின் பெரிய கேட்டில் நுழைந்து, தன் சைக்கிளை எடுக்க.. அவனின் பாட்டி வந்து “வா, குரு.. விசாகா வா.. உள்ள வா.. ஜூஸ் குடிச்சிட்டு போய் விளையாடுங்க” என்றார் தன்மையாக.
விசாகன் குருவை பார்த்தான்.. குரு விசாகனை பார்த்தான் “பசிக்குதா.. வா” என சைக்கிளை விட்டுவிட்டு இருவரும் உள்ளே சென்றனர்.
குரு “டேய்.. அதான் டா.. நானும் சொன்னேன்.. ஏதும் சாப்பிடலைதானே.. உனக்கு பசிக்குதுன்னு” என்றான்.
விசாகன் “இல்ல டா.. எனக்கு பசிக்கலை” என்றான்.
இப்போது பாட்டி சுதாரித்து “விசா சும்மா குரு தனியா சாப்பிட மாட்டான்.. வா நீயும் வந்து கொஞ்சமா சாப்பிடு.. குரு வா.. சாப்பிட்டு பேசுங்க” என்றார்.
குட்டி குட்டியாக இரு பெரிய மனிதர்கள்.. அந்த டேபிளில் அமர்ந்து.. “டேய், நேற்று.. சைக்கிள் ஓட்டும் போது.. அந்த ரித்விக் அண்ணா, வண்டியோட என் முன்னாடி வந்து பயமுறுத்திட்டாங்க.. நான் ஸ்லிப்பாகி விழுந்துட்டேன்..” என்றான் விசாகம்.
குரு “டேய்.. அந்த அண்ணாக்கு தெரியும் டா.. நீ ஏன் பயப்பட்ற.. அதெல்லாம் உன்னை சும்மா ஸ்கர்ட் ஆக்க செய்வாங்க டா..” என்றான்.
விசா “ச்சு.. நாம, இன்னிக்கு அந்த அண்ணாவ ஸ்கர்ட் ஆக்குறோம்” என்றான்.
குரு “ஓகே.. டன்” என பேசிக் கொண்டே உண்டனர்.
இருவரும் விளையாட வெளியே வந்தனர்.. சைக்கிள் ரைடர்ஸ் இருவருமே.. அஹ.. அப்படிதான். தங்களுக்குள் யாரையும் சேர்க்கமாட்டார்கள்.. தங்களுக்குள் போட்டி, சண்டை.. சமாதானம் எல்லாம். யாரையும் சேர்க்கமாட்டார்கள். இருவரும் சேர்ந்து மற்றவர்களோடு.. சண்டை போடுவார்கள். இருவரும் இந்த வீக்எண்டு நாட்களை எதிர்பார்ப்பார்கள். அதற்காகவே இருவரும் காத்திருப்பர்.