‘பாபு ப்ரோ’ என தாரகேஸ்வரி குறிப்பிட்ட விதமும், அவள் சிந்தும் கண்ணீர் துளியும் உரைக்கிறதே தான்பாபு மீது அவள் கொண்டுள்ள பாசத்தையும் அபிமானத்தையும்.
தாரகேஸ்வரி இந்த அளவிற்குப் பாசம் வைக்கத் தயாராக இருக்கிறாள் என்றால் அவன் நிச்சயம் கெட்டவனாக இருக்க வாய்ப்பில்லை என்று ஆதீஸ்வரன் நம்பினான்.
இந்த தீராத நோயால் தான்பாபு அவதிப்படுகிறான் என்பது வருத்தத்தக்க விஷயம் தான்! ஆனால், இதே நோயோடு தன் காதலியுடன் ஊரை விட்டு சென்றிருக்கிறான் என்பவனை எந்த கணக்கில் சேர்ப்பது என்பது ஆதிக்கு புரியவில்லை.
கண்ணீர் துளிகளில் தன் பாரத்தைக் குறைக்க முயற்சிப்பவளின் தோற்றத்தைப் பார்க்கவே மிகவும் பரிதாபகரமாக இருந்தது. அவளை லேசாக அணைத்து, முதுகை வருடிக் கொடுத்து என ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்தான்.
“உன்னால எதுவும் மாத்த முடியாது அப்படிங்கறப்ப அழுது என்ன பிரயோஜனம் தாரா?” அமைதியாகக் கேள்வி கேட்டவனின் நெஞ்சில் இன்னும் அழுந்த புதைந்து கண்ணீரை கொட்டி தீர்க்கலானாள். இயலாமையில் கண்ணீர் விடுவதைத் தவிர அவளால் வேறு என்ன செய்ய முடியும்?
சிறிது நேரம் அமைதி காத்தவன் அவள் மீள்வதாக இல்லை என்பது புரிந்து, “இந்த நிலையில அவன் காதலியோட ஊரை விட்டுப் போய் இருக்கான். இது சரியா?” என்று ஆதி சற்று அதிருப்தியுடன் கேட்க, அவன் மார்பிலிருந்து விலுக்கென நிமிர்ந்தாள் அவனின் மனையாள்.
அவள் கண்களில் அத்தனை வலி, வேதனை! எத்தனை நாட்கள் கடந்தாலும் அவளின் துக்கம் தீராது என்பது போல அவள் வாழ்வில் அனுபவித்த கொடூர வேதனைகளில் அதுவும் ஒன்று!
தன் கண் முன்னேயே நாம் அதிகம் பாசம் வைத்துள்ள நபர் ஒருவர் மெல்ல மெல்ல இறப்பைத் தழுவுகிறார். அதை கையாலகாத்தனத்துடன் நாம் வேடிக்கை பார்க்க வேண்டும். வாழ்வில் இதைவிட நரக வேதனை, கொடுமையான தண்டனை வேறு என்ன இருக்க முடியும்?
பூமுகம் மொத்தமாகக் கசங்க, “அலக்கியாவுக்கும் அதே நோய் இருக்கு” என்றாள் கண்ணீரை இன்னும் அதிகமாகப் பொழிந்தபடி.
அவர்கள் யாரென்றே ஆதிக்குத் தெரியாது. அப்படியிருக்க அவனுக்கே ‘ஐயோ!’ என்று பதறியது.
தாரா வயதுடைய ஆணும் பெண்ணும் கண்களிலேயே தங்கள் வலியை மறைத்து, அழகாக புன்னகைத்து நிற்பது போல ஒரு காட்சி அவன் மனக்கண்ணில் தோன்றவும், அவனது இதயம் விண்டு வலித்தது. ‘எவ்வளவு பெரிய கொடுமை?’ என அவர்களுக்காக வருந்தினான்.
இந்த இரக்கமும் கருணையும் மீட்டெடுக்க முடியாத தூரத்தில் இருப்பவர்களாயிற்றே அவர்கள்!
‘இந்த அலக்கியா யார்? அவள்தான் அவனுடைய காதலியா? அவர்களுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்?’ ஆதிக்கு தாராவின் அரைகுறையான பேச்சில் குழப்பம் மட்டுமே மிஞ்சியது. தன் இரு கரங்களையும் கொண்டு அவள் கண்ணீரை அழுத்தித் துடைத்து விட்டவன், “நீ ரொம்ப எமோஷனலா இருக்க, முதல்ல தண்ணியை குடி” என்று எடுத்து நீட்டினான்.
தாராவிற்கும் அந்நேரம் அது தேவையாக இருந்தது. வாங்கி பருகிக்கொண்டாள்.
ஆதி அவளை சென்று முகத்தைக் கழுவி வர சொன்னான். அவளாலும் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. நெஞ்சே வெடிக்கும் போன்ற வேதனையைத் தாள மாட்டாமல் அமைதியாக சென்று முகம் கழுவி வந்தாள். இன்னும் கண்ணீர் மட்டுப்பட மறுத்தது. துவாலையில் முகத்தைத் துடைத்து விட்டு வந்து அமர்ந்தவளின் முகத்தில் முகாமிட்டிருந்த முடிக்கற்றைகளை ஆதி காதோரமாக ஒதுக்கி விட்டான். அழுதழுது சோர்ந்து போயிருந்தது அவள் முகம்.
“நீ அழுதுட்டே இருந்தா என்னால எதுவும் தெரிஞ்சுக்க முடியாது. எதுவும் உதவி செய்ய வாய்ப்பு இருந்தா கூட அதை செய்ய முடியாம போகலாம். நீ என்ன நடந்ததுன்னு தெளிவா சொன்னேனா மட்டும் தான் என்னால இந்த விஷயத்துல அவங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்ன்னு பார்க்க முடியும்” அவளுக்கு புரியும் விதமாக எடுத்து சொல்ல, தாராவிற்கும் அவனிடம் எல்லாம் சொல்லி விடலாம் என்று தோன்றியது போல! எத்தனை நாட்கள் உள்ளேயே புதைத்து வைத்து அவளும் மருகுவாள்?
உதிர்ந்த இலைகள் அந்த நேரத்தில் எந்த சத்தத்தையும் எழுப்புவதில்லை. அதை மிதித்தாலும் நசுக்கினாலும் மௌனத்தை மட்டுமே தொடர்ந்து கடைப்பிடிக்கும். ஆனால், அதே இலைகள் நாட்கள் செல்ல செல்ல காய்ந்து சருகாகும். இப்போது முன்போல அதனால் அமைதி காக்க முடியாது. தொட்டவுடன் சிணுங்கத் தொடங்கிவிடும்.
தாராவின் பச்சை ரணமும் அமைதியாக தன் துக்கத்தை தன் மனதிற்குள்ளேயே அனுசரித்துக் கொண்டது. காயம் காயத்தொடங்க, அதன் வேதனையை வெளியில் கொட்டத் தோன்றுகிறது போல! அதுவும் அவளின் வேதனையைப் பகிருமளவு ஓர் உறவு அருகினில் இருக்கையில்.
விரக்தியான புன்னகையுடன், “அவங்களுக்கு உதவி செய்யும் நிலைமையில அவங்க இல்ல. அவங்களை இனி யாராலையும் காப்பாத்தவும் முடியாது” என்று சொன்னபோது மீண்டும் கண்ணீர் பொங்கியது. ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டபடி இந்த முறை அழுத விழிகளை அவளே வேகமாகத் துடைத்துக் கொண்டாள்.
மனபாரத்துடன், “எனக்கு இப்ப இருக்க ஒரே கவலை அவங்க இறுதி நாட்களையாச்சும் சந்தோஷமா கழிக்கணும்ன்னு தான்! அதையும் அவங்க பெத்தவங்க குடும்ப கௌரவத்துக்காக அவங்களை பிரிச்சு பலி கொடுத்துடுவாங்களோன்னு யோசிச்சு தான் பயமா இருக்கு” என்றவள்,
“உங்களுக்கு அலக்கியா யாரு, தான்பாபு யாருன்னு முதல்ல இருந்து சொன்னா தானே புரியும். தலையும் இல்லாம வாலும் இல்லாம ஏதேதோ உளறறேன் இல்ல…” என்று தன் பாட்டிற்குப் புலம்பியவளுக்கு சிறு ஆசுவாசம் தேவைப்பட்டது போல! மீண்டும் கொஞ்சம் நீரைப் பருகிவிட்டுத் தொடர்ந்தாள்.
தீரவே தீராத துக்கம் நெஞ்சில் பெரும் பாரமாய் இருக்கையில் வேதனையும் அதிகமாகத்தானே இருக்கும்.
அழுது சோர்ந்த குரலில், “அலக்கியா என்னோட பெஸ்ட் பிரண்ட். அவ சொந்த ஊரு ஆந்திரா பக்கம். நாங்க ரெண்டு பேரும் பாட்னா எய்ம்ஸ்’ல தான் ஒன்னா படிச்சோம். நானும் அவளும் ஒரு முறை டெல்லியில் மெடிக்கல் ரிலேட்டடா ஒரு கான்ஃபரன்ஸ் அட்டெண்ட் பண்ண போயிருந்தப்ப தான் அவ தான்பாபுவை சந்திச்சா, அங்கே தான் அவங்க நட்பு தொடங்கிச்சு” என்று தொடங்கியவளுக்கு மீண்டும் துக்கம் தொண்டையை அடைத்தது.
ஆதீஸ்வரன் அவளையே பார்த்தபடி இருந்தான். அவளின் மனதில் அழுத்திக் கொண்டிருப்பதை எல்லாம் கொட்டி விடட்டும் என்று நினைத்தான்.
துக்கத்தை தண்ணீரிலேயே தொண்டையிலிருந்து விழுங்கி விடுபவள் போல மீண்டும் மீண்டும் நீரெடுத்துப் பருகினாள். அவளைப் பார்க்கவே அத்தனை பாவமாக இருந்தது. ஆறுதலோ, அனுதாபமோ அவளுக்குத் தேவைப்படாது. அவளின் துயர் தீர்க்க தன்னாலானதை செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
ஆனால், தீரா நோயில் விழுந்தவர்களை எங்கனம் அவனால் மீட்க முடியும்?
“எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. ஒருமுறை சின்னதா வாக் போகணும்ன்னு ஹாஸ்டல்ல இருந்து வெளிய போயிருந்தா. எனக்கு அப்ப உடம்பு சரியில்லைன்னு அவகூட என்னால போக முடியலை. அவ பாபு ப்ரோ கூட போன் பேசிட்டே போயிருந்ததால கொஞ்சம் கேம்பஸ் விட்டு தள்ளி போயிட்டதை அவ கவனிக்கலை போல. அப்ப ஹாஸ்பிடல் வந்திருந்த யாரோ ரெண்டு பேரு அவளை கவனிச்சு… அவளை… அவளை…” என்றவள் மேற்கொண்டு சொல்ல முடியாமல் இதழ் கடித்து மௌனமாகக் கண்ணீர் விட்டாள்.
எத்தனை பெரிய அநியாயம்? பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிக் கொண்டே தான் இருக்குமா? ஆதீஸ்வரனின் ரத்தம் கொதித்தது. இதுபோன்று தவறு செய்பவர்களுக்கெல்லாம் மிகவும் மோசமான தண்டனையைத் தர வேண்டும். மிருகங்களை விடக் கேவலமானவர்கள் இவர்கள் என்று சினந்தவன்,
“ஐம் சாரி…” என்று மனைவியிடம் சொன்னான். “எந்த பெண்ணுக்கும் இந்த மாதிரி அநியாயம் நடக்கக்கூடாது. அப்பறம் என்னாச்சு? அவங்களை பத்தி கம்பளைண்ட் கொடுத்தீங்களா? அவங்களை கண்டுபிடிச்சாங்களா?” ஆவேசமும் வேகமுமாக கேட்டவனிடம் இல்லை என்று தலையசைத்தவள்,
“அலக்கியா ரொம்ப தைரியமான பொண்ணு தான். அவ கம்ப்ளைண்ட் கொடுக்கவும் செஞ்சா… ஆனா போலீஸ் அதை குறிச்சு பெருசா விசாரிச்ச மாதிரி தெரியலை. இவளை தான் கேள்வி மேல கேள்வி கேட்டாங்களே தவிர, அவங்க யாரையுமே கண்டுபிடிக்கலை. அவ வலிக்கும், வேதனைக்கும், அவ அனுபவிச்ச துன்பத்துக்கும் இப்பவரை நியாயம் கிடைக்கலை” என்று முகம் வாட சொன்னாள்.
“ஆனா பாபு ப்ரோ அவளுக்கு ரொம்ப துணையாவும் பக்கபலமாவும் இருந்தாரு. அதுவரை மனசுக்குள்ள காதல் இருந்தும், இதெல்லாம் சரியா வராதுன்னு நினைச்சு ரெண்டு பேரும் சொல்லிக்கிட்டதே இல்லை. ஆனா அந்த சம்பவத்துக்கு பிறகு, அவ இல்லாம நான் இல்லைன்னு பாபு ப்ரோக்கு தோணிடுச்சு போல… ஒருகட்டத்துல அவகிட்ட நேரடியா சொல்லிட்டாங்க.
ஆனா அலக்கியா அவ்வளவு சீக்கிரம் சம்மதிக்கலை. அவளுக்கு ஏற்கனவே அனுபவிச்ச நரக வேதனையைத் தாண்டி வேற எதுவும் யோசிக்க முடியலை. இதுல போலீஸ்காரங்க விசாரிக்கிறேங்கிற பேருல அவகிட்ட ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாங்க. போங்கடா நீங்களும் உங்க சட்டமும்ன்னு அவளே வெறுத்து போயி கேஸை வாபஸ் வாங்கிட்டா. ஒவ்வொரு இடத்துலயும் அவளுக்கு துணையா இருந்தது பாபு ப்ரோ தான்! எங்கேயும் அவளை தனியா விடலை. தன் வேலையை எல்லாம் விட்டுட்டு அவளே கதின்னு கிடந்தாரு. அலக்கியா என்ன சொல்லியும் விலகி போகலை.
நாளாக நாளாக அலக்கியாவாலா அவரை தனக்கு எதிரே வெச்சுட்டே காதலை மறைக்க முடியலை. காதல் வந்ததும், வீட்டுல பிரிச்சுடுவாங்களோன்னு பயமும் நாளுக்கு நாள் அதிகமாச்சு. அப்பதான் அலக்கியா படிப்பு முடிய கொஞ்ச மாசம் இருக்கும்போது ரெண்டுபேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் செஞ்சுக்கிட்டாங்க.
மனசு நிறைய காதல், கல்யாணம்ங்கிற உரிமை இது எல்லாமே சேர்ந்து அவங்களோட கட்டுப்பாடுகளை தகர்த்துடுச்சு. பாபு ப்ரோ பாட்னா வருவாரு, இல்லையா அந்த அண்ணா பிசினஸ் ட்ரிப் போறப்ப இவங்க ரெண்டு பேரும் வேற சிட்டியில மீட் பண்ணிப்பாங்க. எல்லாமே நல்லா போயிட்டு இருந்த மாதிரி தான் இருந்தது திடீர்ன்னு அலக்கியாவுக்கு உடம்பு சரியில்லாம போகத் தொடங்கும் வரை!” என்றவளுக்கு அந்த நாட்களின் நினைவில் இன்றும் நெஞ்சம் அடைத்தது.
“ரொம்ப கஷ்டமா இருந்தா இன்னொரு நாள் பேசிக்கலாம் விடு தாரா” என ஆதீஸ்வரன் கூறினான். ஆனால், அவள் மொத்தத்தையும் கொட்டிவிட வேண்டும் என்று நினைத்தாள் போல!
“இல்லை பரவாயில்லை எல்லாம் சொல்லிடறேன்” என்று அழுகையை அடக்கி சொன்னவள் மீண்டும் தொடர்ந்தாள்.
“நிறைய நாள் காய்ச்சல், சோர்வு, வெயிட் ஒரு பக்கம் குறைஞ்சிட்டே வந்துச்சு. வைரல் பீவர் இல்லைன்னு பிளட் டெஸ்ட் வரவும் சிம்ப்டம்ப்ஸ் எல்லாம் பார்த்து பயந்து நான் தான் ஹெட்ச்.ஐ.வி., டெஸ்ட் எடுத்து பார்த்தேன். தலையில மொத்தமா இடி விழுந்தது அன்னைக்கு தான்! அவளுக்கு அந்த டெஸ்ட் பாசிட்டிவ். எங்களுக்கு அவளுக்கு நடந்த ரேப் தான் நினைவுக்கு வந்துச்சு. எதுவுமே தப்பு செய்யாத அவ, தன்னோட மொத்த வாழ்க்கையையும் இழந்து நின்னா. அதுவும் அவ மூலமா பாபு ப்ரோவுக்கு பரவிடுச்சேன்னு குற்றவுணர்வு அவளை கொன்னுச்சு. அந்த நாட்களில் எல்லாம் கிட்டத்தட்ட பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிட்டா” என்றவள் கண்ணை மூடி அந்த நாளின் நினைவுகள் தனக்குள் உலா போக, மௌனமாகக் கண்ணீர் விடுத்தாள்.
“தாரா… ரிலாக்ஸ்…” அதைத்தவிர எதுவும் சொல்ல முடியவில்லை அவனால்! ஆயிரம் ஆறுதல் வார்த்தைகளாலும் தீராத துக்கம் கொண்டவளை எங்கனம் தேற்ற முடியும்? இந்த உலகம் எத்தனை விசித்திரமானது. எங்கோ யாரோ செய்யும் தவறுக்கு வேறு யாரோ பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். என்ன சொல்ல இந்த நிலையை?
மீண்டும் தன்னை தேற்றியபடி தொடர்ந்தாள். “பாபு ப்ரோ கிட்ட அவ பேசறதையே நிறுத்திட்டா. அவர் எவ்வளவு கூப்பிட்டும் பிரயோஜனம் இல்லை. அந்தளவுக்கு அவ மனசெல்லாம் ரணம். செத்து போயிடறேன்னு புலம்புவா. மரணம் தூரத்துல இருக்கிறவங்க தற்கொலை பண்ணிக்கிட்டாவே ‘ஏன் இவங்களால வாழ முடியாதா? எதுக்கு இப்படி ஒரு முடிவை எடுப்பங்களோன்னு’ அலுத்துக்கிற பொண்ணு, தன் தைரியம் எல்லாம் வடிஞ்சு தற்கொலை பண்ணிக்கிறேன்னு சொல்லறான்னா அவ எவ்வளவு மன கஷ்டத்துல இருந்திருப்பா. அவ கனவு, வாழ்க்கை, காதல் எல்லாம் ஒரே நாளில் சிதைஞ்சு போச்சு. அவளை காதலிச்ச ஒரே காரணத்துக்காக அவளோட காதலனோட வாழ்க்கையும் அதே நிலைமையில கொண்டு வந்து நிறுத்திட்டோமேன்னு குற்றவுணர்வு வேற அவளை தினம் தினம் கொண்ணுட்டு இருந்துச்சு.
அவளை பார்த்துக்கிறதே எனக்கு பெரிய சவாலா இருந்தது. அவளை எப்படி மீட்டெடுக்கன்னு எனக்கு புரியலை. அப்பறம் பாபு ப்ரோவுக்கும் டெஸ்ட் எடுக்கணுமேன்னு அவரை நான் தான் எதுவும் சொல்லாம வர சொன்னேன். அவர் வந்த பிறகு தான் நிலைமையை விளக்கினேன். அவருக்கும் பயங்கர அதிர்ச்சி. அவரோட டெஸ்ட்டும் எதிர்பார்த்த மாதிரியே பாசிட்டிவ். அவருக்கு அலக்கியாவை பார்க்கணும் போல இருந்துச்சு. ஆனா அவரை சந்திக்க அவ தயாரா இல்லை. ‘இப்ப என்ன இது உயிர்க்கொல்லி நோய் தான்! ஆனா நம்ம உயிர் இன்னும் போகலை’ அப்படின்னு என் போனை ஸ்பீக்கரில் போட சொல்லி அவகிட்ட கத்தினாரு. அழுது கரைஞ்சாலே தவிர ஒரு வார்த்தை அவர்கிட்ட பேசலை. ‘சரி இதே ஏதோ ஒரு வகையில இந்த நோய் எனக்கு வந்திருந்து, அது என் மூலம் உனக்கு பரவியிருந்தா கூட நீ இப்படித்தான் இருப்பியா?’ அப்படின்னு அவர் கேட்கவும் தான், ‘ஏன் அப்படியெல்லாம் பேசறீங்கன்னு’ அழுதுட்டே கேட்டா.
‘நம்ம ரெண்டு பேருக்கும் இதுதான் கிடைச்சிருக்கு. இதுனால நம்ம வாழ்க்கை தேங்கிடாது. நம்ம இந்த நோயோட நம்ம மிச்ச வாழ்க்கையை வாழ்வோம். சாகும்வரை நம்ம சந்தோசத்தை இந்த நோயுக்கு பயந்து இழந்து என்ன பிரயோஜனம்?’ அபப்டின்னு அவர் கேட்கவும், அதுக்குமேல அவரை விட்டு விலகியிருக்க அவளால முடியலை. பேசி பேசியே அவளை சமாளிச்சுட்டாரு.
அப்பறம் அந்த நோயோடவே அவ காலேஜ் வர தொடங்கினா. எங்க படிப்பு முடிஞ்சது. அவ அவளோட ஊருக்கு போகாம, பாபு ப்ரோ கூட போயிட்டா. அவங்க ரெண்டு பேரும் எங்கேயோ போறாங்கன்னு மட்டும் தான் எனக்கு தெரியும். எங்கன்னு கூட எனக்கு தெரியாது. ஏன்னா அவளை காணோம்ன்னா அவளோட பேமிலி என்னை தான் ட்ரெஸ் செய்வாங்க. அவங்க ஒரு பக்கம் ஊரை விட்டு போக, நான் எங்க சொந்த ஊருக்கு போகாம கனிகா, சத்யாவோட உதவியால இங்கே வந்துட்டேன். இங்கே இருந்து அலக்கியா குடும்பத்து கண்ணுல படாம யூ.எஸ்., போயிடலாம்ன்னு இருந்தேன். மீதி தான் உங்களுக்கே தெரியுமே” என்றவள் சோர்ந்து குறுகி கட்டிலில் சரிந்தாள்.
அவளின் கண்கள் கண்ணீரை நிறுத்துவேனா என்றது. அவளுடைய தலையை மட்டும் ஆதரவாக வருடிக் கொடுத்தான்.
“அவ்வளவு பெரிய வியாதி வந்தும், உன்னால தான் எனக்கு வந்துச்சுங்கிற பழியை தூக்கி போடாம, வா ஒன்னா வாழ்வோம். சாவையும் ஒன்னாவே துணிஞ்சு எதிர்கொள்வோம்ன்னு சொன்ன தான்பாபு ப்ரோ மாதிரி ஒருத்தரை எங்கேயும் பார்க்க முடியாது. ஆனா, அந்தளவுக்கு உன்னதமான அவரால இந்த உலகத்துல வாழ முடியாது. தன்னோட ஆயுசை நோயுக்கு தாரைவாத்து கொடுத்துட்டு, வலி, வேதனையோடு மீதி வாழ்க்கையை வாழணும்…” என்று துக்கத்துடன் சொன்னாள்.
“அவங்க எங்கே போனாங்கன்னு உனக்கு தெரியாது தானே! அப்பறமும் ஏன் ஒழிஞ்சு மறைஞ்சு வாழற. நம்ம கல்யாணத்தை பிரஸ்’க்கு சொல்ல வேண்டாம்ன்னு சொன்னது கூட இதுக்காகத்தானா?”
“இப்ப அவங்களுக்கு அலக்கியா காணோம்ன்னு மட்டும் தான் தெரியும். ஒருவேளை என்னை பிடிச்சு, ரொம்ப மோசமா விசாரிச்சு ஏதோ ஒரு வகையில தான்பாபு அண்ணா விஷயத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டாங்கன்னா அது ரொம்ப பெரிய பிரச்சினையாயிடும். தன் குடும்பத்து மேல இருக்க கோபத்துல அவ ஊரை விட்டு போனதா இருக்கிற வரை அவங்க அவளை தீவிரமா தேடி அலைய மாட்டாங்க. இந்த மாதிரி காதல் விவகாரம்ன்னு தெரிஞ்சா அவங்க எந்த எல்லைக்கும் போவாங்க.
தான்பாபு ப்ரோ வீட்டுலேயும் அதே மாதிரி தான். அது புரிஞ்சு தான் அவங்க ரெண்டு பேரும் வேணும்ன்னே அவங்க வீட்டுல கொஞ்ச கொஞ்சமா சண்டை போட்டுட்டே இருந்தாங்க. இப்ப அவங்க குடும்பம் அவங்க ரெண்டு போரையும் கோச்சுக்கிட்டு ஊரை விட்டு போயிட்டதா தான் நினைச்சுட்டு இருக்கு. அது அப்படியே இருக்கட்டும்” என்றவளுக்கு அத்தனை மனபாரம், வேதனை! கண்ணீரை மீண்டும் துணைக்கழைத்துக் கொண்டு சோர்ந்த விழிகளை மூடிக் கொண்டாள்.
அவளின் வேதனையை கையாலாகாத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஆதீஸ்வரனின் மனதிலும் பெரும் பாரம்.
((இவங்களை இந்த நிலையில நிறுத்த எனக்கும் ஆசையில்லை மக்களே! மனம் முழுக்க பாரத்தோட தான் இந்த எபியை எழுதினேன். ஆனா இந்த கட்டத்தை நோக்கி தான் கதை பயணிக்கும். அதுனால என்னால இதை தவிர்க்க முடியலை. இதுக்கான மூல காரணம் அது தொடர்பான உண்மை சம்பவம், அடுத்தடுத்த பகுதிகளில் வந்துடும்))