தான்பாபுவின் கரத்திலிருந்து கேமரா கீழே விழுந்து சிதறிய வேகமே சொன்னது அதில் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் என்று! அவனுடைய நண்பர்கள் அலக்கியாவை தாறுமாறாகத் திட்டத் தொடங்கியிருக்க, கோபத்துடனும் எரிச்சலுடனும் அவளின் புறம் திரும்பியவன், நின்றிருந்தது அவள் என்றதும் தன் வேகத்திற்கு உடனடியாக தடையிட்டு நிதானித்திருந்தான்.
ஒரு கூட்டமே அவளை திட்டத் தொடங்கியிருக்க, தவறு முழுக்க தன் பேரில் என்றபோது சமாளிப்பாக என்ன சொல்வது என்று கூட அலக்கியாவிற்கு தெரியவில்லை. அவளின் சிறு கவனக்குறைவால் அவர்களின் விலையுயர்ந்த பொருள் அல்லவா சேதமாகி விட்டது. அதோடு இன்னும் எத்தனை புகைப்படங்களை இவ்விடத்தில் எடுக்க நினைத்திருந்தார்களோ அது அவளால் தானே கெட்டுப் போயிற்று என்ற குற்றவுணர்வு வேறு சூழ்ந்து கொண்டதில் அவளால் பதிலுக்குப் பதில் பேசவும் முடியவில்லை.
கைகளைப் பிசைந்தபடி செய்வதறியாது அவள் நின்றிருந்த தோற்றமே அவளின் நிலையை எடுத்துரைக்க, அவளை எதுவுமே சொல்லாமல் தன் நண்பர்களிடம் திரும்பி, “விடுங்கடா. முதல்ல கேமராவுக்கு என்னாச்சுன்னு பாருங்க” என்று தான்பாபு சொல்ல, அவன் நண்பர்கள் அவனை வாயைப் பிளந்து பார்த்தார்கள்.
அவர்கள் அவனிடம் ஏதோ சொல்லவர, அவன் அவர்களைப் பேசவே விடவில்லை.
அலக்கியாவிற்கு தான்பாபு ஒரு வார்த்தைக்கூட கேட்காததில் ஒரு மாதிரியாகிப் போனது. அதோடு இவளைத் துளியும் கண்டுகொள்ளாமல் அவர்கள் கேமராவை ஆராய்ந்தபடி அப்படியே நகர வேறு செய்ய அவளுக்கு பெரும் குற்றவுணர்வாகிப் போனது. தவறு முழுக்க அவள் பேரில், அதை சீர்செய்யும் கடமையும் அவளுக்கு இருக்கிறது தானே!
தாராவுக்கும் ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு பெரிய சேதாரம் செய்திருக்கிறோம் இதென்ன இந்த பையன் ஒன்றுமே கேட்காமல் போகிறானே என குழம்பிப் போனாள்.
தாரா புரியாமல் நின்றிருக்க, அலக்கியவோ வேகமாகச் சென்று அவனை வழிமறித்து நின்றாள்.
‘அவங்களே திட்டாம விட்டுட்டு போனாலும் இவ வாலன்டியரா போயி திட்டு வாங்குவா போலவே’ என தாராவிற்கு பதற்றமாக இருந்தது. தோழிக்குத் துணைக்கு நிற்பதற்காக இவளும் வேகமாகச் சென்று அவளின் கையை கோர்த்து நின்று கொண்டாள். அவள் ஒன்றும் தனியாள் இல்லை நானும் அவளுடன் இருக்கிறேன் என சொல்லாமல் சொன்ன அவள் ஒன்றும் பெரிய பலசாலி இல்லை என்பது நினைவில் வரவில்லையோ என்னவோ!
தான்பாபுவிற்கு அலக்கியா வழிமறித்ததிலேயே எரிச்சல் வந்துவிட்டது. ‘ஒதுங்கிப் போனால் அதென்ன பின்னாடியே வருவது? என் நண்பர்களை எவ்வளவு நேரம் என்னால் சமாளிக்க முடியும் என புரிய வேண்டாம்’ என்ற கடுப்புடன் நிற்கும்போது இன்னொரு பெண்ணும் வந்து அவளுக்குப் பாதுகாப்புக்கு நின்றதும் சிரிப்பு வந்து விட்டது.
‘இவ பிரண்டு ஊரையே வாயால அடக்கிடுவா. அவளுக்கு இவ பாதுகாப்பா? நண்டும் சிண்டுமா இருக்கிற இதுங்க அலும்பு தாங்க முடியலையே’ என அவர்கள் இருவரையும் அளவிட்டான்.
இவன் நின்று விட்டது புரிந்து திரும்பிப் பார்த்த நண்பர்களிடம், நீங்க போங்க நான் வந்துடறேன் என்பதாக சைகை செய்துவிட்டு, அலக்கியாவை பார்த்து, “வாட்” என்றான் கடுப்புடன்.
அவன் அவர்களைக் கேலியாக அளவிட்ட விதமும் அலக்கியாவிற்கு பிடிக்கவில்லை. இப்படி அதட்டி கேள்வி கேட்பதும் அவளுக்குப் பிடிக்கவில்லை. தவறு தன் பேரில் என்பதால் குற்றவுணர்வில் அடக்கி வாசித்தாள்.
“கேமராவை சரிசெய்ய ஆகும் பணத்தை நானே அனுப்பிடறேன்” என்று சொல்லி அவனின் கைப்பேசி எண்ணைக் கேட்டு நின்றாள். இப்போதே கூட ஒரு குறிப்பிட்ட பணத்தைக் கொடுக்க தயார் என்று தன் கையிலிருந்த பணத்தை எடுத்தும் நீட்டினாள்.
அன்று இவன் நீச்சல் குளத்தில் விழுந்தபோது அத்தனை பேச்சு பேசியவள் இப்பொழுது தயங்கித் தடுமாறி குற்றவுணர்வுடன் நிற்பது அவனுக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. இப்படி தயங்கி நிற்கும் நிலையைக் காட்டிலும், அவளது கம்பீரமும் ஆளுமையுமான தோற்றம் தனி அழகு என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவன்,
அவளிடம் மறுப்பாகத் தலையசைத்து, “அதெல்லாம் எதுவும் வேண்டாம். நானே பார்த்துக்கிறேன்” என்று நாசூக்காக மறுத்து விட்டு நகரப்போனவனை மீண்டும் வம்படியாக நிறுத்தி, அவனுடைய கைப்பேசி எண்ணை வாங்கிக் கொண்டு தன்னுடையதையும் அவனிடம் தந்துவிட்டுத் தான் வந்திருந்தாள்.
தாரகேஸ்வரி அவளை அதிசயமாகப் பார்த்து வைத்தாள். “ஹே இருக்கிற பணத்தைக் கொடுத்து விடறதை விட்டுட்டு எதுக்குடி நம்பர் எல்லாம்?” என அதிருப்தியாகக் கேட்டவளிடம்,
“ம்ப்ச் பிசாசு தப்பா எல்லாம் பேசாதடி. அவன் நம்பர் தர மாட்டேன்னு தானே சொன்னான். நான் தானே கட்டாயப்படுத்தி வாங்கியிருக்கேன். கண்டிப்பா அவன் மிஸ்யூஸ் எல்லாம் பண்ண மாட்டான்” என்று அலக்கியா மிகவும் நம்பிக்கையாக சொல்ல, தாராவிற்கு முதல் சந்திப்பிலேயே இப்படி நம்புகிறாளே என அதிசயமாக இருந்தது.
“அதெப்படி சொல்லற நீ? அவன் யாரு எப்படின்னு நமக்கு எப்படி தெரியும்”
“நான் என்ன வேணும்ன்னா கொடுத்தேன். நம்ம இன்னைக்கான செலவுக்கு மட்டும் தான் காசு எடுத்துட்டு வந்திருக்கோம், அந்த கேமராவை சரி பண்ண இதை எப்படி கொடுக்க? அதுக்காகத்தான் பணத்தை அனுப்பிவிட அவன்கிட்ட நம்பரை வாங்கினேன். அதோட டெல்லி ஹோட்டல்ல ஸ்விம்மிங் பூலில் ஒரு பையன் விழுந்தான், நான் அவனை காப்பாத்தினேன்னு சொன்னேனே அவன் தான் இவன்” என்று அலக்கியா சொன்னதும்,
“அடிப்பாவி அன்னைக்கு அப்படி திட்டிட்டு இருந்த” என விழி விரித்தாள் தாரா.
“அப்ப கோபம் வந்துச்சு திட்டினேன். இன்னைக்கு தப்பு என் பேருலங்கிறப்ப இவனும் பதிலுக்குக் கோபப்பட்டு திட்டியிருந்தா எனக்கு கில்ட்டா பீல் ஆகியே இருக்காதுடி… ஆனா பாரு ஒரு வார்த்தை அதைப்பத்தி கேட்காம அமைதியா ஒதுங்கி போறான். எனக்கு அதுல தான் கொஞ்சம் கில்ட் ஆயிடுச்சு. அதோட தப்பு முழுக்க முழுக்க என் பேரில் தானே அந்த கேமராவை சரி செய்ய ஆகும் காசை கொடுத்தா தான் எனக்கு திருப்தி” என அலக்கியா என்ன சமாதானம் சொன்னபோதும் தாராவிற்கு அதில் உடன்பாடில்லை.
அவளின் மனநிலை புரிகிறது தான்! ஆனால், எங்கே இதனால் சிக்கல் வந்துவிடுமோ என்று அஞ்சினாள். இப்படி முன்பின் தெரியாத ஒருவனுக்கு கைப்பேசி எண்ணை கொடுத்திருக்கிறாளே என்கிற தவிப்பும் பிடித்தமின்மையும் அவளிடம் அதிகமாகவே இருந்தது. இதனால் எதுவும் பிரச்சினை வந்து விடக்கூடாது என்று மட்டும் தான் யோசித்தாள்.
ஆனால், தாரா எண்ணி பயந்தது போல எந்தவித பிரச்சினையும் வரவில்லை. அலக்கியாவின் ஆழமான நம்பிக்கை ஏன் வந்தது என்றே தாராவுக்கு அன்றுவரை புரியாத புதிராக இருந்தது என்றால், அந்த நம்பிக்கையை உடையாமல் காப்பாற்றிய அந்த பெயர் தெரியாத மனிதனின் மீதும் நன்மதிப்பு உருவாகியது.
அடுத்தடுத்து வந்த நாட்களிலும் தான்பாபு அலக்கியாவை தொடர்பு கொள்ளவே இல்லை. அலக்கியாவோ பணத்தைத் திருப்பி தர வேண்டும் என்கிற உறுதியோடு இருக்க, அதற்கான வாய்ப்பு வரமாலேயே இருந்தது.
தான்பாபு கேமராவை சரி செய்திருந்தாலும் அதற்காக ஆன செலவு குறித்து இவளிடம் ஒன்றும் சொல்லவில்லை. சில நாட்கள் அவன் சொல்லுவான் என காத்திருந்தவள் அப்படி ஒன்றும் நடக்காததால் தானே அழைத்து அவனிடம் விவரம் கேட்க, இன்னும் சரி செய்யவில்லை என்று சொல்லி சமாளித்திருந்தான். முதல்முறை அவன் சொன்னதை நம்பி அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
மீண்டும் நீண்ட காத்திருப்பு! ஒரு அழைப்பும் அவனிடமிருந்து வருவதாய் காணோம். மீண்டும் அவளாகவே அழைத்துக் கேட்க, அதே பதிலைத்தான் திரும்பவும் சொன்னான்.
இந்தமுறை அவன் சொல்வது பொய் என அவளுக்குப் புரிந்து விட்டது. அழைப்பைத் துண்டித்த கையோடு இவளே கொஞ்ச பணத்தை அவனுடைய கைப்பேசி எண்ணுக்கு ஜிபே செய்து விட்டாள். போட்ட வேகத்தில் பணம் திரும்பி வந்தது.
தாராவிடம் அவனின் செய்கையைக் குறித்துப் புலம்பியவள், கோபமான ஸ்மைலியை அவனுக்கு வாட்ஸ் ஆப்பில் தட்டி விட்டாள். அலட்சியமாகச் செல்லும் ஆண் ஸ்மைலி ஒன்று பதிலுக்கு வந்து சேர்ந்தது. அப்படித் தொடங்கிய அவர்களின் நட்பு எந்த புள்ளியில் காதலாக மாறியிருந்தது என்று இருவருமே அறிந்திருக்கவில்லை.
அழகாக முகிழ்ந்த காதலுக்கு மிகவும் இக்கட்டான சூழல்கள் அடுத்தடுத்து வந்து சேர்ந்தது.
அந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இறுதி வரையிலும் சேர்ந்திருப்போம் என்ற முடிவை துணிந்து எடுத்து விட்டவர்களைத் தாரா கண்களில் பொங்கும் நீருடன் பார்த்த நாள் இன்னும் அவளது நினைவில் இருக்கிறது.
வெவ்வேறு சமூகம், வெவ்வேறு மாநிலம் என பல வேற்றுமைகள் அவர்களைப் பிரிக்க நினைக்க, இரு குடும்பங்களையும் எதிர்த்து மிகப்பெரிய பிரச்சினையோடு தலைமறைவாகி வாழ்ந்து வருகிறார்கள்.
ஏற்கனவே உயிரை உருக்கும் நோய்க்கு அவர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களைப் பிரித்து, நேசம் ஒன்றை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு வாழும் அவர்களை அழித்து, அவர்களது வாழ்வில் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச சந்தோசத்தையும் குழி தோண்டி புதைத்தாக வேண்டுமா என தாராவிற்கு ஆவேசமாக வந்தது.
((Part 2 சீக்கிரம் தந்துடறேன். Thank you all for you support))