காவியத் தலைவன் – 17-1
இரவில் உறக்கம் வராமல் ஆதீஸ்வரன் ஒருபுறம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான் என்றால், தாராகேஸ்வரியின் நிலையும் கிட்டத்தட்ட அதுவே தான்!
அவனது சமாதான வார்த்தைகளா இல்லை அவனது மனநிலையைப் பகிர்ந்து கொண்டதாலா தெரியவில்லை தாராவிற்கு அவன் மீதிருந்த கோபம் வெகுவாக மட்டுப்பட்டிருந்தது. அதன்பிறகு கடந்த மூன்று நாட்களுமே கொஞ்சம் அவனோடு நல்லவிதமாகத்தான் நடந்து கொள்கிறாள்.
நேற்று தான் இவளின் கையிலிருந்த கட்டையும் முழுமையாக அகற்றி இருந்தார்கள். அதிக எடை எல்லாம் தூக்கக்கூடாது என்ற பரிந்துரையுடன் கணவனோடு வீடு வந்து சேர்ந்திருந்தாள்.
காய்ச்சல் சரியாகி பல நாட்கள் கடந்திருந்தது. கையிலிருந்த கட்டையும் அகற்றி விட்டார்கள். இப்பொழுது தான் ஒரு வழியாக தன் வேலைக்குத் திரும்ப ஆதிக்கு மனம் வந்தது போல! நாளை காலையில் செல்ல வேண்டும் என்று தாராவிடம் சொல்லியிருந்தான். அதைத் தொடர்ந்து தான் இந்த உருண்டல் பிரண்டல் எல்லாம்.
சற்று நேரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி திரும்பியிருக்க, “இன்னும் தூக்கம் வரலையா?” என ஆதி கேட்டான். அவன் குரலிலிருந்த ஏதோவொரு உணர்வு அவளை வெகுவாக தாக்கியது. பதில் சொல்ல முடியாதபடி தொண்டையில் எதுவோ அடைத்துக்கொள்ள இல்லை என்பதாய் தலையை மட்டும் அசைத்தாள்.
லேசாகக் குரலை செருமியவன், சிறு யோசனையின் பின் தனது வலக்கரத்தை நீட்டி தன் தோள் வளைவைப் பார்வையால் சுட்டிக் காட்டினான்.
தாராவிற்கு மனதின் தடதடப்பு தொண்டை வரை எதிரொலித்தது. எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டாள். ஏனோ அவளுக்கு முழுமையாக மூச்செடுக்கவே முடியவில்லை. அவளின் அரண்ட முகத்தையும் மிரண்ட விழிகளையும் ஆதி சிறிது நேரம் சுவாரஸ்யமாகப் பார்த்திருந்தான்.
அவன் பார்வையில் அவளுக்கு அத்தனை சங்கோஜமாக இருந்தது. தான் இணக்கமாக ஒரு பதிலை சொல்லும் முன்பு எதுவும் செய்ய மாட்டான் என்கிற நம்பிக்கை இருந்தபோதிலும், அவனது அருகாமையை ஏற்க முடியாமல் கூச்சம் தடை செய்தது.
சற்று நேரம் அவள் வருவதற்கான துளி முயற்சியும் எடுக்காததைக் கண்டு பெருமூச்சுடன் கையை மீண்டும் சுருட்டிக் கொண்டவன், திரும்பி மல்லாக்க படுத்து விட்டான். அவனது இடது கரம் உயர்ந்து நெற்றியில் வளைவாக படர்ந்திருந்தது. மனைவியின் செய்கையில் பெருத்த ஏமாற்றம் அவனுக்கு.
இத்தனை நாட்களும் கணவனாய் பல ஏமாற்றங்களை மனைவிக்குப் பரிசளித்த மகா பிரபு இவன் என வசதியாய் மறந்து விட்டானோ என்னவோ?
கடற்கரை மணலை மட்டும் வைத்து சிறு வீடு கட்டி விளையாடும் சிறுவனின் நிலை போல ஆகிவிட்டது அவனது நிலை! சின்னஞ்சிறு ஆசைகளையும், ஆழ்மன நம்பிக்கைகளையும் அடித்தளமாக வைத்து திருமணத்தை முடித்துக் கொண்டவனுக்கு அந்த திருமணம் நிலைக்குமா என்னும் அச்சம் இப்போதெல்லாம்! அந்தளவு அவனே அந்த உறவை அங்கீகரிக்க எந்த முயற்சியும் செய்யாமல் அவளை வாட்டி வதைத்து வைத்திருக்கிறான். இந்த கால பெண்கள் எத்தனை எதிர்பார்ப்புகளை வைத்திருப்பார்கள்! காதல், நம்பிக்கை, மரியாதை என அவர்களுக்கிருக்கும் அடிப்படை எதிர்பார்ப்புகளை எல்லாம் இம்மி கூட பூர்த்தி செய்யாமல் வலம் வரும் தன்னை அவள் எங்கனம் ஏற்பாள் என உள்ளம் அலைபாய்ந்தது.
தாரா தான் கூச்சத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஆதி இப்படி உடனே திரும்பி விடுவான் என எதிர்பார்க்கவில்லை. கோபித்துக் கொண்டானோ என்கிற தவிப்புடன் சட்டென்று அவனருகே வந்துவிட்டாள்.
அவள் புறம் திரும்பாமலேயே, “கூச்சமா இருந்தா வேண்டாம்” என்றான் ஆதீஸ்வரன் ஒட்டாத்தன்மையுடன்.
’என்னிடம் கூச்சம் எதற்கு உனக்கு?’ என ஆதியின் உள்ளம் அவளிடம் சுணக்கம் கொண்டது. கூச்சங்களைத் தகர்த்தெறியுமளவு நெருக்கங்கள் அவர்களிடையே இதுவரையிலும் இருந்ததில்லையே!
இதென்ன தான் கோபம் வருமோ என்கிற அங்கலாய்ப்புடன், “ஆசையும் சேர உண்டெங்கில்?” என்று சொன்ன தாராவின் குரல் கிசுகிசுப்பாய் அவன் செவியில் விழ, கண்கள் வியப்பில் விரிய தலையை வேகமாக திரும்பி அவளை குறுகுறுவென பார்த்தான்.
“அ… அது… அது… உங்கட பக்கத்தில் உறங்கான்னு” எங்கே அவன் வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டானோ என அவள் பதறியபடி பதில் சொன்னாள். அவனுக்கு அவளின் பதற்றத்தில் சிரிப்பு தான் வந்தது.
அவளின் விழிகளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன், “உன்னை எனக்கு பிடிக்கும்ன்னு தெரியும். ஆனா இவ்வளவு தூரம் பிடிக்க வைப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னவோ செய்யற நீ?” என்று சொல்லியவனின் பார்வை இம்மியும் அவளை விட்டு விலகவில்லை. அவளின் விழிகளுள் மொத்தமாகத் தொலைந்து விடலாம் போல இருந்தது.
கணவன் முதன்முதலில் தன் பிடித்தத்தை சொல்கிறான். அவளுக்கு நா உலரும் போல இருந்தது. என்ன பதில் சொல்வது என்று கூட புரியாமல் எச்சில் கூட விழுங்க மறந்தவளாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் அசையாத பார்வை வேறு ஏதோவொரு மாய உலகத்திற்குள் அவளை கடத்தி செல்வதைப் போல இருந்தது.
ஆதி மெல்ல நகர்ந்து அவளின் நெற்றியை முட்டினான். பெண்ணவளின் விழிகள் அகல விரிந்தன. அவளின் மூக்கோடு அவனது மூக்கு மிக மிக மெதுவாக உரசியது. அவன் மூச்சுக்காற்றின் வெப்பம் அவளை என்னவோ செய்ய சுகமயக்கத்தில் பெண்ணவளின் விழிகள் தாமாக மூடிக்கொண்டன. இதழ்களில் அவளையும் மீறி நடுக்கம்.
அவனைப் பித்தம் கொள்ளச்செய்ய பெண்ணவளின் இதழ்களின் துடிப்பு ஒன்றே போதுமாக இருந்தது. தன் காட்டுப்பாடுகள் தகர்ந்தெரிந்து விடுமோ என்று பயம் கொள்ள வைத்தாள் இந்த அழகான இராட்சசி!
ஆதி அனலென வெளியேறும் மூச்சுக்காற்றுடன் லேசாக இதழ்களை அசைத்து, “படுத்தறடி…” என அவளை விழுங்குபவன் போல பார்த்து வைத்தவன், அவளை விட்டு விலக முயன்றும் மனம் வர மறுத்து இன்னும் லேசாக நெருங்க… தாராவிற்குள்ளும் என்ன உந்துதலோ தெரியவில்லை அவளையும் மீறி லேசாக மோவாயை உயர்த்தி தந்து விட்டிருந்தாள்.
அவளின் துளி சம்மதம் அவனின் தயக்கத்தை மொத்தமாக உடைத்து தூள் தூளாக்கி விட, அவளின் இதழ் மீது தன் இதழை வேகமாகப் படர விட்டிருந்தான்.
அவளுள் ஒருவித நடுக்கம். இதமான படபடப்பு. ஆனாலும் விலக நினைக்கவில்லை. அவனிடம் தன்னை முழுதாக ஒப்புக்கொடுத்து விட்டு அவனை ஒன்றி படுத்திருந்தாள். நேரம் செல்ல செல்ல அவளின் இடது கரம் தன்னையறியாமல் அவனது தோளில் படர்ந்திருந்தது.
முத்தத்தை தாண்டி மேற்கொண்டு முன்னேறும் திடம் ஆதிக்கு இருக்கவில்லை. அவர்கள் வாழ்வின் அடிப்படை இன்னும் தாரா புரட்டாத பக்கங்களாகத்தானே இருக்கிறது. பெண்ணவள் அதை அறிந்து அவனை எந்தவித மனசுணக்கமுமின்றி ஏற்றுக்கொண்ட பிறகு தான் மற்றவை எல்லாம் என்கிற கட்டுப்பாட்டினை தன் உணர்வுகள் தன்னை ஆளும் நிலையிலும் பெரும்பாடுபட்டு கடைப்பிடித்தான்.
தீரா தாகம் தணிய ஒரு துளி நீரைப் பருகிக் கொண்டிருக்கிறான். பாவம் அதனால் தாகம் இன்னும் இன்னும் அவனை புரட்டிப் போடப்போகிறது என்பது புரியவில்லை போலும்.
முத்தத்தை தாண்டி வேறெதுவும் இல்லை என்கிற கட்டுப்பாட்டின் காரணமோ என்னவோ அந்த இதழொற்றலை முடிக்கும் எண்ணம் இல்லாதவன் போல அவளை திணறடித்துக் கொண்டிருந்தான்.
அவஸ்தை தாங்காமல் அவனது தோளைப் பற்றியிருந்தவளின் கரம் சற்று நேரத்தில் அவனின் பின்னந்தலை முடியில் அலைந்தது.
பொல்லாத உணர்வுகள் அவனுள் ராட்சச அலைகளென ஆர்ப்பரிக்க, அவளின் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்து, “ஐ லவ் யூ டி” என்றான் தாகம் தீராத ஏக்கமான குரலில், மனதிற்குள் ஐ லவ் யூ டியை தொடர்ந்து கரகாட்டக்காரி என்று சொல்லியிருந்தான்.
தாராவினால் இன்னும் தன்னிலைக்கு வர முடியவில்லை. அவனது மீசையின் ரோமங்களும், தடித்த இதழ்களும் அவளை விட்டு விலகிய பிறகும் கன்னத்தைக் குறுகுறுக்க வைத்து இம்சித்தது. இதழ்களின் நிலையை சொல்லவே வேண்டாம். அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் புதிய சுவை அவளுள் என்னென்னவோ மாற்றங்களை உருவாக்கி அவளைத் திணறடித்துக் கொண்டிருந்தது. மூச்சுக்காற்று சீரற்று வேகவேகமாக வந்து கொண்டிருக்க, விழிகளைத் திறக்காமல் மூச்சு வாங்கியபடி படுத்திருந்தாள்.
இன்னுமொரு முத்தம் தந்துவிடு என ஆர்ப்பரித்து அவனை தூண்டுகிறது மனம். தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தடுமாறியவனைக் காப்பாற்றும் பொருட்டோ என்னவோ கலைத்தது அவனது கைப்பேசி அழைப்பு.
(சின்ன எபி தான், சீக்கிரம் அடுத்த பார்ட் தந்துடறேன். Happy Reading)