புதிய உதயம் -26

அத்தியாயம் -26(1)

நிச்சயம் முடிந்த பிறகு அடுத்தடுத்த நாட்கள் பெரிதான வித்தியாசம் இன்றி கழிந்தன. ஜெய் பணியிடம் சென்று நேராக வீடு திரும்புகிறானா வேறு பிரச்சனைகளை இழுத்துக் கொள்ளவில்லையே என்பதை மட்டும் கண்காணித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ.

எங்கேயும் நேரில் செல்லாமலே தான் நினைத்ததை செய்து கொள்வேன் என்று இருந்தான் ஜெய். ஆமாம் அந்த மருத்துவ பணியாளனின் இருப்பிடத்தை அறிந்து கொண்டான், அவன் இப்போது திருச்சியில் இல்லை, பணி மாற்றம் பெற்று வேறெங்கோ சென்று விட்டான். எங்கே இருக்கிறான் என்ற விவரம் ஜெய்க்கு அப்போதுதான் தெரிய வர, அடுத்த அரை மணி நேரத்தில் கணவனை தேடிக் கொண்டு வந்து விட்டாள் ஸ்ரீ.

“நான் அவ்ளோ சொல்லியும் கேட்காம என்ன செய்ய காத்திருக்கீங்க?” கோவமாக ஸ்ரீ கேட்கவும் அரை நொடி யோசனைக்கு பின் அவளுக்கு தெரிந்து விட்டதை புரிந்து கொண்டான்.

சசியை அழைத்தவன் அவனது கைப்பேசியை கேட்டான். தராதவன் பயத்தோடு ஸ்ரீயை பார்த்தான்.

“ராஸ்கல்! சம்பளத்தை என்கிட்ட வாங்கிட்டு இவளுக்கு வேலை செய்றியா நீ? துரோகம் செய்றியாடா எனக்கு?” சசியிடம் கோவப்பட்டான் ஜெய்.

சசியை அங்கிருந்து அனுப்பி வைத்த ஸ்ரீ, “உங்க நல்லதுக்குத்தான் நான் கேட்டதுக்கு ஒத்துக்கிட்டு எனக்கு தகவல் சொன்னார். கோவப்படனும்னா என்கிட்டதான் கோவ படணும், அவரை எதுவும் சொல்லக்கூடாது, சொல்லிட்டேன்!” என்றாள்.

“நீ வீட்டுக்கு போ” என்றவனை அங்கே விடாமல் அவனையும் கையோடு அழைத்து சென்று விட்டாள்.

ஜெய்யின் கைப்பேசியை தன் வசப் படுத்திக் கொண்டவள் அவனுக்கு அழைப்பு வரும் போது யாரென பார்த்து விட்டே அவனிடம் கொடுத்தாள்.

“ஒரு நாள் செய்வ ரெண்டு நாள் செய்வ, எல்லா நேரமும் என் கூடவே இருந்து இப்படி கட்டுப்படுத்த முடியுமா என்னை? நீ செய்றது உனக்கே சிரிப்பா வரலை?” எனக் கேட்டான் ஜெய்.

“நான் சொல்றத கேட்கவே மாட்டீங்களா நீங்க?” கெஞ்சலாக கேட்டாள்.

அவன் பதில் தராமல் போக, “நாம யாருக்கு என்ன செஞ்சோம்னு தெரியலை, நமக்கு அவ்ளோ பெரிய இழப்பு நடந்திடுச்சு. தெரிஞ்சே யாரையும் கஷ்ட படுத்தக் கூடாது, வேணாம்ங்க” என்றாள்.

“அந்த ஃபோனை நீயே வச்சுக்க, யார் கால் வந்தாலும் கட் பண்ணிடு, அப்பயி பார்த்திட்டு வர்றேன்” அவளை தவிர்த்து விட்டு அறையிலிருந்து வெளியேறி விட்டான்.

அடுத்த நாள் அலுவலகம் சென்றதும் சசியை அழைத்தான். அவன் சைட் சென்று விட்டதாக சொல்லி இவனது கண்ணில் படாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான்.

அன்றைய மாலைதான் சைலேஷ் கொடுக்கும் பார்ட்டி நடக்க இருந்தது. ஸ்ரீக்கு நினைவு படுத்தியிருந்தான். போக விருப்பம் இல்லையென்றாலும் சைலேஷின் மனைவி மிகவும் வருந்தி அழைத்ததாலும் ‘வா’ என ஜெய் குழைவாக அழைத்ததை மறுக்க முடியாததாலும் செல்ல முடிவு செய்திருந்தாள்.

தன் நிறுவனத்தின் முக்கிய ஊழியர்களையும் சைலேஷ் கேட்டுக் கொண்டதற்காக வர சொல்லியிருந்தான் ஜெய். ஆகவே சசி மற்றும் சிலர் வந்திருந்தனர்.

பார்ட்டி ஆரம்பித்த சற்று நேரத்துக்கெல்லாம் ஸ்ரீக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. ஜெய்யை சில முக்கியஸ்தர்கள் பிடித்து வைத்திருந்தனர்.

தனியாக நின்ற ஸ்ரீயிடம் சசி வந்து பேசிக் கொண்டிருந்தான். இடையில் இவள் பேசா விட்டாலும் அவள் கேட்டுக் கொண்டதற்காக ஸ்பை வேலை பார்த்த காரணத்தால் அவளும் அவனை தவிர்க்காமல் பேசினாள்.

“கொலை வெறியோட என்னை தேடிட்டு இருக்கார் ஸார், நீங்கதான் காப்பாத்தி விடணும்” என்றான் சசி.

“நாலு நாள் அவர் கண்ணுல படாதீங்க, அப்புறம் அவர் கோவம் குறைஞ்சிடும்” என்றாள் ஸ்ரீ.

“ஏது அவர் கோவம் குறையுமா? செவனேன்னு நாலு வாரம் அவரை ஆஃபீஸ் அனுப்பாம பார்த்துக்கோங்க மேடம்”

“நீங்க சொன்னதா சொல்லி கேட்டு பார்க்கிறேன்” என ஸ்ரீ சொல்ல, முதலில் விழித்து பின் சிரித்தான் சசி.

அவர்களிடம் வந்த ஜெய், சசியை முறைப்பாக பார்த்துக் கொண்டே தள்ளிப் போக சொல்லி கண்களால் மிரட்டினான். அவனும் பயந்து சென்று விட்டான்.

“இது பேரு பொஸஸிவ்னு மட்டும் சொல்லிடாதீங்க. சரியான…” வார்த்தை வராமல் என்ன சொல்லலாம் என யோசித்தாள்.

“நீ என்கிட்ட வேலை பார்த்த காலத்திலேயே வழியோ வழின்னு வழிவான் உன்கிட்ட இவன். எனக்கு காண்டாகுது, இப்போ கூட நீ சொன்னதை செஞ்சான்தானே, அவன் சரியான முரட்டு வழிசல் பார்ட்டி ஸ்ரீ”

அவள் கண்டனமாக பார்க்க, “என்ன இப்போ, எனக்கு பிடிக்காதத செய்யாம இருந்தா குறைஞ்சு போவியா?” என்றான்.

அவள் சமாதானம் ஆகாமல் இருக்க, “இரு உனக்கு புரிய வைக்கிறேன்” என்றவன் சுற்றிலும் பார்த்து விட்டு ஒரு பெண்ணை நோக்கி சென்றான்.

சைலேஷ் மனைவியின் தோழி அவள். ஜெய்யை நன்கறிந்தவள், கூடுதல் கல கலப்பு பேர்வழி. ஜெய் சென்றதுமே அவனிடம் வாயடிக்க ஆரம்பித்தாள். வேண்டுமென்றே ஜெய்யும் சிரித்து சிரித்து பேசினான்.

அரை மணி நேரம் மனைவியின் மண்டையை சூடாக்கிய பிறகு அவளிடம் சென்று “இப்ப புரியுதா?” எனக் கேட்டான்.

“நான் சாதாரணமா பேசினதும் நீங்க கடலை வறுத்ததும் ஒண்ணு இல்லை. உங்களை…” என்றவள் கோவம் கொண்டு தள்ளி போய் நின்றாள். அவளிடம் வந்தவனை தவிர்த்துக் கொண்டே சென்றாள்.

“என்ன ஸார்… மேடமும் நீங்களும் ஓடிப் புடிச்சி விளையாடுறீங்களா ஸார்?” உள்ளே சென்ற மதுவின் காரணமாக பயம் விட்டுப் போய் கேட்டான் சசி.

அவனது கையில் ஏதோ நீல நிற குளிர் பானம் இருந்தது.

“காய விடுறாடா அவ” என்ற ஜெய், சசி எதிர் பாராத நேரத்தில் குளிர் பானமென தான் நினைத்துக் கொண்டிருந்த மது பானத்தை அருந்தி விட்டான்.

சசிக்கு ஏறியிருந்த போதை இறங்கி விட்டது. “என்னடா அது, ஒரு மாதிரி இருக்கு. வயித்த கலக்கிடாதே?” கேட்டுக் கொண்டே சென்ற ஜெய்யை பீதியோடு பார்த்திருந்தான்.

 ஸ்ரீயை தேடிச் சென்ற ஜெய் அவளின் கையை பிடித்துக் கொண்டான்.

“சும்மா சும்மா அலைய விடாதடி என்னை” என ஜெய் சொன்ன விதத்திலேயே அவனின் நிலை சரியில்லை என்பதை புரிந்து கொண்டவள் அதிர்ச்சியாக பார்த்தாள்.

ஓடி வந்த சசி ஸ்ரீயிடம் “ஸார் கூல் ட்ரிங்ஸ்னு நினைச்சி ஹாட் ட்ரிங்ஸ் சாப்பிட்டுட்டார்” என்ற விஷயத்தை சொன்னான்.

சசியை கோவமாக பார்த்தவள், “இவரை அழைச்சிட்டு போறேன், இங்க சைலேஷ் ஸார் கேட்டா ஏதாவது சொல்லி சமாளிங்க” என சொல்லி ஜெய்யை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

ஜெய்யை காரில் ஏற்றி விட்டாள். வெளிநாட்டில் கார் ஓட்ட கற்றிருந்தது கை கொடுத்தது.

“ஏய் காரெல்லாம் ஓட்டுற, சொல்லவே இல்லை. புதுசு புதுசா இன்னும் என்னென்ன கத்து வச்சிருக்க ஸ்ரீ” அவளின் முகவாயை கொஞ்சிக் கொண்டு கேட்டான்.

“அமைதியா வாங்க” அவள் கடிந்தாலும் அவன் கேட்பதாக இல்லை. லொட லொடத்துக் கொண்டே வந்தான்.

வீட்டினர் யாருக்கும் தெரியாமல் அவனை அறையில் கொண்டு வந்து சேர்த்தவள் அவனை படுக்கையில் தள்ளி விட்டாள்.

“ரெண்டரை வருஷமாச்சுல்லடி செல்லம், வா வா ஜெய் வெயிட்டிங்…” இரு கைகளையும் நீட்டி அவளை அழைத்தான்.

“செய்றது எல்லாம் மொள்ளமாரித்தனம், இவரு கூப்பிட்டதும் போய் கட்டிக்கணும், வாய தொறக்காம படுங்க” என்றாள்.

“அர்த்தம் தெரியாம திட்டாத” என்றவனுக்கு மாற்றுடை கொடுத்தவள் அவள் மாற்றிக் கொள்ள ஓய்வறை சென்றாள்.

“எவ்ளோ நாளைக்கு ஸ்ரீ உள்ள போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணுவ, என்ன… எதை மறைக்கணும் என்கிட்டருந்து? நடு முதுவுல இருக்க மச்சத்தையா தொடைல இருக்க தழும்பையா… இல்லை…”

“ஷட் அப்!” பற்களை கடித்துக் கொண்டு அதட்டினாள்.

“ஷட் அப் ஷட் அப்…” தன் வாயில் கை வைத்து பொத்திக் கொண்டவன், சில நொடிகள் சென்று கையை எடுத்து விட்டான்.

“நீ ஏன் ரெண்டா தெரியற ஸ்ரீ, ஒண்ணு நீ இன்னொன்னு யாரு? உன் மனசாட்சியா? சிவாஜிக்கும் ஜெமினிக்கும் இப்படித்தான் அவங்க ரூபத்திலேயே மனசாட்சி வரும். வில்லன் நம்பியாருக்கு கூட மனசாட்சி இருக்கும். பாயிண்ட் பாயிண்ட்டா கேள்வி கேக்கும், தப்பு செய்ய விடாம கையை புடிச்சிக்கும். ஏய் என் பொண்டாட்டி மனசாட்சியே… நீ அவ கூடத்தான் இருந்தியா இவ்ளோ நாளும்? நல்ல புத்தி சொல்ல மாட்ட அவளுக்கு… உன்னை உன்னை…” ஸ்ரீயின் மேலே போய் விழுந்தான்.

அவனை தாங்கிப் பிடித்தவள், “உளறாம படுங்க” என சொல்லி படுக்கையில் விட, அவன் அவளையும் பிடித்து இழுத்துக் கொண்டான்.

அவனது அணைப்பில் நெளிந்தவள், “விடுங்க” என்றாள்.

“நீ அவ மனசாட்சிதானே, விட மாட்டேன் உன்னை. நீ போயிட்டா ராட்சசி விட்டுட்டு போயிடுவா என்னை. இரு நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு” என்றான்.

“ஹையோ…” சின்னதாக அலறியவள், “சொல்லித் தொலைங்க” என்றாள்.

“ஏய் அவளை மாதிரி பேசாத, அவ மனசாட்சி மாதிரி பேசு” என மிரட்டினான்.

“சொல்லுங்க ஸார்” பொய்யான பவ்யத்தோடு சொன்னாள்.

“ஹஹான் இப்போதான் நீ குட் மனசாட்சி. புருஷனை வுட்டு போனாளே அவ, அம்மா தாயே அப்படிலாம் போவ கூடாதுன்னு எடுத்து சொன்னியா நீ? சொல்லு ஏன் சொல்லலை நீ? சொல்லு சொல்லு” எனக் கேட்டான்.

“என்னை ஃபிரீயா விடுங்க ஸார், வலிக்குது” என்றாள்.

“ச்சீ! நீ அவ இல்லை, அவ மனசாட்சி. உன்னை போய் கட்டி பிடிச்சிருக்கேன்! அவ மனசாட்சியாவே இருந்தாலும் அவளை தவிர எவளையும் தொட மாட்டேன். தள்ளிப் போ தள்ளி போ” அவளை பட்டென தள்ளி விட்டான்.

நல்ல வேளையாக படுக்கையிலிருந்து விழுந்து விடவில்லை அவள்.

“ஏங்க கொல்றீங்க, ஒரு வாய் குடிக்கும் போதே என்ன கருமம் அதுன்னு கண்டு பிடிக்க தெரியாத அளவுக்கு அப்பாவியா நீங்க?” கோவமாக கேட்டாள்.

“ஏய் நீ என் பொண்டாட்டி, எங்கடி உன் மனசாட்சி? அது கூடத்தான் பேச்சு எனக்கு” என்றான்.

“அது உங்கள பாத்து பயந்து ஓடிப் போச்சு” என்றவள் ஏதேதோ சொல்லி அவனை உறங்க வைத்தாள், அதற்குள் அவளுக்கு நாக்கு தள்ளி விட்டது.

தண்ணீர் குடித்து வந்து “அப்பாடா” என அவளும் படுத்துக் கொண்டாள்.

“ஏன் டி என்னை விட்டுட்டு போன, நான்தான் கோவம் குறைஞ்சி வந்திருப்பேன்ல, சரி போன, ரெண்டு வருஷம்… இல்லை ரெண்டு வருஷம் நாலு மாசமாவா அங்கேயே இருப்ப? என்னை விட்டுட்டு இருக்க முடிஞ்சதுல்ல உன்னால? கல்நெஞ்சக்காரி! எல்லாத்துக்கும் காரணம் அந்தாளுதான் அவர்தான் மிஸ்டர் ஜம்புலிங்கம்… கைல மாட்டுற அன்னிக்கு அந்தாள பேசிக்கிறேன்” மீண்டும் எழுந்து பேசத் தொடங்கி விட்டான்.

“போதைலன்னாலும் அவரை இப்படி பேசுவீங்களா? அவர் எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கார் உங்களுக்கு?” எனக் கேட்டாள்.