பகுதி 22….

“உன்கிட்ட பேசனும்” என வந்த சாத்வியை கண்டு கொள்ளாமல், அடுத்து இருந்த அறையில் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டான்..

இரண்டு நாட்களில் மனம் இவ்வளவு தூரம் அமைதியில்லாமல் அலைந்து கொண்டிருந்தது..

திருமணமான இரவு ஆரம்பித்த சாத்வியின் கோபங்கள் வெடித்த விதம்.. ஒவ்வொரு நாளும் புயலாய் ஆக்கிரமித்தாலும் பரவாயில்லை….ஆனால் ஒவ்வொரு நாளும் அதன் வேகம் அதிகரித்து…  சூறாவளியாய் சுழன்றடித்து…. எழ முடியாத அளவு தாக்கம் கொடுப்பதை தான் அவனால் தாங்க முடியவில்லை..

தன் காதில் விழுந்த வார்த்தைகளுக்கே இவ்வளவு சக்தி என்றால்?  அனுபவித்தவளுக்கு! மீண்டும் மீண்டும் அதிலேயே உழன்று கொண்டிருந்தது…  சத்ரியின் மனம்…  எப்படி அவளை வெளிகொணர என தெரியாமல்

எல்லவற்றிற்கும் மேல் உச்சியில் நின்று பேயாட்டம் போட்ட…. சாத்வியின் இன்னொரு செயல்..  டைரியை நிறைத்திருந்த தன் பெயர்கள்…

தன் பெயரை மந்திரமாய் எண்ணி அதில் கவலைகளை தொலைக்கும் அளவு..அவளில் உறைந்திருக்கிறேனா.. என சத்ரியின் மனமே உறைந்து போனது..

இப்படி ஒவ்வொன்றும் ஆட்டிப்படைத்த வண்ணம் இருக்க…

அந்நேரம் வெங்க்கட் சத்ரியை தேடி வந்தான்.

“சத்ரி” என அமைதியாய் வெறித்த வண்ணம் இருந்தவனை தன் பெறம் திருப்பினான்….

அவனை பார்த்தவன் ஒட்டாத தன்மையுடன் அவனுக்கு வழி விட்டு அமர்ந்தான்…

“என்னடா…  பேச தான் மாட்றன்னு நினைச்சா முகம் கூட பார்க்க மாட்றடா?  ஏன் என்ன காரணம்..சமாளிக்காமல் உண்மையை சொல்லு” தற்போதைய ஒதுக்கத்தை அறிந்தவனாய் அவன் அருகில் அமர்ந்தான்…  வெங்க்கட்..

“காரணமா..! ஒவ்வொருத்தரும் காரணம் தான்…  ஆனால் யாராலையும் ஒன்றும் செய்ய முடியாது” என அலுப்பாய் பேச

அது ஒன்றே போதுமானதாய் இருந்தது வெங்க்கட்டிற்கு..

“எங்களால தான் பிரச்சனைன்னு தெரியுது… ஐ… மீன் என்னாலையும் க்ருத்திகாவினாலையும் தான்…  ஐம் ரைட்..” என நிறுத்த வெங்க்கட்டின் கண்களை கூர்மையாய் துளைத்தது சத்ரியின் விழிகள்.. “ஆம்” என்று..

அதை புரிந்த அவனும் விரக்கதியாய் சிரித்து.

 “மன்னிப்பை மட்டும் தான் எங்களால கேட்க முடியும்…. உங்களோட இறந்த காலத்தையோ….இல்லை இழந்த இளமை வாழ்க்கையையோ… நிச்சயமா திருப்பிக் கொடுக்க முடியாது…. நடந்த எதையும் மாத்தவும் முடியாது…  பட்ட காயங்களையும் ஆத்த  எங்களால ஆற்றமுடியாது..”

“செய்றதையும் செஞ்சிட்டு அட்வைஸ் பண்றேன்னு நினைக்காத.. என்னால முடிஞ்சது இது தான்… ”

“ஆனா சாத்வியை உன்னால் மட்டும் தான் சந்தோஷமா வச்சிக்க முடியும்…  அது புரியாமல் கல்யாணத்திற்கு பிறகும்…. எதையோ பறி கொடுத்த மாதிரி இரண்டு பேரும் இருக்கிறதை பார்க்க முடியலை சத்ரி…  ரொம்ப உறுத்தலா இருக்கு “

“என்னால கிருத்தியை விட முடியாது, என்னை தவிர வேற யாரையும் ஏத்துக்க முடியாமல் தான் இரண்டு பேரும் அப்படி ஒரு முடிக்கு வந்தோம்… துணிஞ்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோமே தவிர…  உறுத்தல் இருக்க தான் செஞ்சது..”

“எல்லோருக்குமே நீ எப்பவுமே ஸ்பெஷல் தான் சத்ரி..  அது.. அது..அந்த கோபம் தான் தலை தூக்கிடுச்சுடா… ”

“சாதாரண மகனா அப்பவுடைய சொத்தில் பங்கு எடுத்துக்கிட்டேன்… உன்கு வீடும் நிலமும் இருக்குன்னு தான் நான் பணமும் நகையும் எடுத்துட்டு போனது.. அசிங்கமா தான் இருந்தது…  ஆனா…. சம்பாத்தியம் எதுவுமே இல்லையேடா…  அதை வச்சு தான் வேலையே வாங்கினேன்…  பெரிய ஜாப்ன்னு சொல்லி…  ஸ்டார்டிங்கிலேயே உக்கார வச்சுட்டானுங்க…  எல்லாமே அதில் போட்டுட்டு.. அடுத்த சம்பளம் வர வரை.. டீ… ப்ளாட் பாரம் இட்லி தான்டா ஓடுச்சு“ என அவன் கண்களை பார்த்து கூறியவன்..

“அவளோட ப்ரீயட் டைம்ல கூட, அவளுக்கு தேவையானதை கூட என்னால வாங்கி கொடுக்க முடியல” என நிறுத்தி

 “ரொம்ப கஷ்ட பட்டுட்டாடா” என நிறுத்த…  அதிர்ச்சியாய் அவனை பார்த்தான் சத்ரி

“ஆசையாய் கல்யாணம் பண்ணுனாலும் இரண்டு மூனு மாதம் கழிச்ணு தான்” என அவன் முகம் பார்க்க முடியாது எழுந்து கொண்டான் வெங்க்கட்…

“இந்த நிலையில்… நான் அந்த பணத்தை கூட எடுத்துக்காமல் போய் இருந்தால்..அது  கூட இல்லாமல் க்ருத்திகாவை அழைச்சிட்டு போய் இருந்தால்“ என யோசித்தவன் “ நினைக்க கூட முடியலைடா..”

“அப்பா அம்மாகிட்ட ஒதுங்கி இருந்த எனக்கு.. அந்த பாசத்தை கிருத்தி கொடுத்தப்போ… எனக்கு அவ தாண்டா பெரிசா தெரிஞ்சா”

“பணமும் நகையும் அவ தான் எடுத்துட்டு வரேன்னு சொன்னா…  நான் தான்…  எங்க வீட்டில் தான் பொண்ணு இல்லையே…  சத்ரி ஒருத்தன் தானே…  நீ எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தா…  சாத்விக்கு எப்படி நல்ல வாழ்க்கை அமையும்ன்னு சொல்லி அவளை எதுவும் எடுத்துட்டு வர விடலைடா…  ஆண்பளை எப்படியும் சமாளிப்பன்னு ஒரு தைரியம் தான்.”

“ஆனா…. படிப்பையே விடற அளவு கஷ்டத்தை இழுத்து விட்டு இருக்கன்னு நினைக்கிறப்போ.. எனக்கே அசிங்கமா இருந்ததுடா”

“இன்னும் முழுசா…. என்ன நடந்ததுன்னு தெரியலை.. ஆனா….இன்னமும் ஏதோ இருக்கு..யாரும் சொல்ல மாட்றாங்கடா…  இதை விட பெரிய தண்டனையை எங்களுக்கு நீங்க கொடுக்க முடியாது.. ‘தப்பு செஞ்சதுக்காக ஊரை விட்டு ஒதுக்கி வைப்பாங்களே… ’ அது மாதிரி இருக்குடா” என கல்ங்கிய கண்களை மறைத்து….

“மன்னிச்சிடுடா” என சொல்லி மன்னிப்பை யாசித்து வெளியேற…

அதுவரை வேடிக்கை பார்த்திருந்த சாத்வியும் அவசரமாய் நகர்ந்தாள்.

வெங்க்கட் நிலையில் இருந்து பார்க்கும் போது…. அவன் செய்துதும் சரி என தான் பட்டது… சத்ரிக்கு..

வெங்க்கட்டையும் க்ருத்திகாவையும் சங்கரன் ஏற்றுக் கொண்டிருந்தால்  யாருக்கும் எந்த ஒரு கஷ்டமும் வந்திருக்காது மூல காரணம் சங்கரன் மட்டுமே…

அடக்கப்பட வேண்டிய இடத்தில் சிதற விட்ட கோபம்… தான் விதிக்கு வழி விட்டு  ஒரு ஆட்டம் காட்டி சென்றுவிட்டது…

அடுத்த என்ன செய்ய வேண்டும் என்ற நிதானம் இல்லாமல்  கடமை மறந்த பாசம் என சங்கரன் மீது தான் அளவு கடந்த கோபம் கொண்டாலும் உறவுகளுக்கு மத்தியில் அவ்வளவு எளிதில் அவனால்…  பேசிவிட முடியவில்லை

உறவுகளுக்கு இடையில் நீ தான் காரணம் என  முழுதாய் பழியை ஒருவர் மீது சுமத்த முடியாது…  அப்படி சுமத்தி விட்டு…  மற்றவர்களையும் ஏன் துன்பத்தில் விட வேண்டும்…  இது தான் சத்ரிக்கும் தோன்றியது..

இது தான் நிஜ வாழ்க்கை….

இது தான் நிதர்சனம்… இதில் நடந்த ஒரே நல்ல காரியம்…

சங்கரின் கோபம்…  உளியாய் உருவம் கொண்டு…. சாத்வியையும் சத்ரியையும் வலிக்க வலிக்க அடித்தாலும்….அதில் குறை காணாத சிற்பமாய் ஜொலிக்க தான் செய்தனர்…. அது மட்டும் நன்மையாய் முடிய…

வலிக்க அடித்த காயங்களுக்கு அவர்களே மருந்து என அறியும் நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது…

சாத்வியின் மீதான தாபமும் கோபமும் சரி சமமாய் கொழுந்து விட்டு எறிந்தாலும்.. அதை அணைக்கும் வழியறிமால் சத்ரி இருக்க…. ஒவ்வொரு நாளும் அதற்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தாள் சாத்வி்.

அதற்கு இன்றே நல்ல நாளாய் குறித்துக் கொண்டாள் சாத்வி…

“உன்கிட்ட பேசனும்னு சொன்னேன்… நீ பாட்டுக்கு இங்கே வந்து உக்கார்ந்திருக்க..” என வெங்க்கட் வெளியேறியதும் சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தாள் சாத்வி..

குழப்பங்களை ஒதுக்கி… ”சொல்லு….என்ன ” என எழுந்து அவளருகில் வந்தான் சத்ரி..

“ வெளியில் எங்கையாவது போய்ட்டு வரலாமா… ?” என கேட்க….

“ பேசனும்னு சொன்ன?” என கேட்க…

“அது அப்போ…  இப்போ…. வெளிய போகனும்னு தோணுது” என இதழ் பிரியாமல் சிரிக்க….

“ஓ… போலாமே….” என கூறி, அப்படியே சிவஹாமியிடமும் சொன்னான்.

“கோவிலுக்கு போய்ட்டு அப்பறமா…  வேற எங்கையாவது போய்ட்டு வாங்க….” சிவஹாமி குரல் கொடுக்க….

அழகாய் புடவையில் தயாராய் வந்தாள்  கோபமும் நீயே தாபமும் நீயே…. என இரண்டுக்கும் ஆணிவேராய் நின்றிருந்தவளை ரசனையாய் பார்த்தபடி அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

காரை எடுக்கப்போனவனின் கைகளை தடுத்தது சாத்வியின் கரம்…

“சத்ரி, என்னை அதில் கூட்டிட்டு போயேன்..” என ஷெட்டில் நிறுத்தியிருந்த பைக்கை காட்ட

பைக்கையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன்..

“இது ஸ்போர்ட்ஸ் பைக்…. பின் சீட் பார்த்தியா….டபுள் சைட் கால் போட்டா தான் என்னால பைக் ஓட்ட முடியும்சேரி வேற கட்டயிருக்க.. .சேரியில் எப்படி” என அவளை பார்க்க

குனிந்து தன்னை பார்த்தவள் “சேரியா…  பைக்கா” என சத்ரியை பார்த்து…  தனக்குத் தானே கேட்டுக் கொண்டு… .

“ வெயிட் பண்ணு சத்ரி.. இதோ வரேன்” என

விறு விறுவென தங்கள் அறையினுள் சென்று சேரியை கலைத்து..   டீசர்ட் , ஜீன்ஸ் சகிதம் கிளம்பி வந்தாள்.