புதிய உதயம் -25

அத்தியாயம் -25(1)

ஜெய்யும் ஸ்ரீயும் வீடு வந்த போது மற்றவர்கள் உறங்கியிருந்தனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு இங்கு வருபவளுக்கு எந்த மாதிரியான சூழலில் இங்கிருந்து சென்றோம் என்பது நினைவு வந்தது.

கதவை பூட்டி விட்டு திரும்பியவன், “என்ன ஏதோ ஆகாத இடத்துக்கு வந்திட்டது போல நிக்கிற, நட ரூம் போலாம்” என்றான்.

“எங்க இருக்க, பாட்டி ரூம்க்கு போகவா?” என அவள் நக்கலாக கேட்கவுமே கோவத்தில் அவனது முகம் சிவந்து போனது.

“சென்னைலிருந்து வந்தப்பவே இங்க அழைச்சிட்டு வர எத்தனை நாழி ஆகியிருக்கும் எனக்கு? ஏன் அங்க கொண்டு போய் விட்டேன், நீ மனசார இங்க வரணும்னுதான், இப்படி ஏதாவது பேசினா நான் எப்ப என்ன ரியாக்ட் பண்ணுவேன்னு தெரியாது, திரும்பவும் நீ கோச்சுக்கிட்டு போனா உன்னை தேடிட்டு வர மாட்டேன், சரிதான் குடும்ப வாழ்க்கைக்கும் நமக்கும் செட் ஆகாதுங்கிற என் டவுட்டை உறுதி பண்ணிட்டு போயிடுவேன்” என்றான்.

அவனது பேச்சில் கோவமுற்றாலும் கடைசியாக அவன் பேசியதில் ஆர்வம் கிளை விட, “எங்க போவீங்க?” எனக் கேட்டாள்.

அதில் கடுப்பானவன், “ஹஹான்… கைலாசாவுக்கு” என்றான்.

பக் என சிரித்து விட்டவள், “அங்க போனாலும் ஜாலியா இருக்க மாட்டீங்க, யார் மண்டையாவது அடிச்சு பொளக்கத்தான் நீங்க லாயக்கு, வேணும்னா அகோரி ஆகிடுங்க” என்றாள்.

இருவருக்குமே அந்த கற்பனை வந்தது போலும். சூடு குறைந்து சிரிப்பை ஏந்திக் கொண்டன அவர்களின் உதடுகள்.

ஜெய் அவளின் கையை பிடித்துக்கொண்டு நடக்க, மறுக்க தோன்றாமல் அவனோடு நடந்தாள்.

ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது அறை. கேட்கவும் செய்தாள்.

“மாறலையா? உனக்கு அப்படித்தான் தெரியும், நல்லா பாரு” என்றான்.

கண்களை நன்றாக திறந்து வைத்துக்கொண்டு நோட்டம் விட்டவள், “அப்படியேதான் இருக்கு” என்றாள்.

“நீ இருந்தா ஒண்ணும் ரூம் இப்படி நீட்டா இருக்காது. எல்லாம் கலைச்சு போட்டு வச்சிருப்ப, உன் சுடிதார் துப்பட்டா ஏதாவது அதோ அந்த சோஃபால கிடக்கும், தலைல வச்சு காஞ்சு போன பூவை டஸ்ட் பின்ல போடாம ட்ரெஸிங் டேபிள்ல அப்படியே போட்டு வச்சிருப்ப, நான்தான் தூக்கி போடணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கும் அந்த காஞ்ச பூ. எந்த ட்ரெஸ் போடுறதுன்னு குழப்பத்துல ரெண்டு மூணு வெளில எடுத்து வச்சிட்டு ஒண்ணு போட்டுட்டு மத்தத உள்ள வைக்காமலே கீழே ஓடிடுவ, பாத்ரூம் உள்ள கிடக்க அழுக்கு துணி, எரிஞ்சிட்டிருக்க லைட் , ஆஃப் பண்ணாத கெய்சர்…”

“போதும்!” அதட்டலாக சொன்னாள்.

“இல்லைனு சொல்றியா?”

“காலேஜ் போற அவசரத்துல ஏதோ ஒண்ணு ரெண்டு நாள் எதையாவது மிஸ் பண்ணிருப்பேன். சரியான ஒழுங்கீனம்னு என்னை சொல்ற ரேஞ்சுக்கு பேசாதீங்க”

“ஏதாவது ஒண்ணையாவது நான் செய்யணும்ங்கிறதுக்காக மிஸ் பண்ணுவதானே? அதுதான் இந்த நாலு சுவத்துக்குள்ள வாழ்க்கை நடக்கிறதுக்கான அறிகுறி, அப்படி எதுவுமே இல்லாம… வெறுமையா இருந்துச்சு ரூம்” என்றான்.

“ரெண்டு வருஷமா பழைய படமா பார்த்ததோட எஃபெக்ட்டா இது? சத்தியமா முடியலை!” என அவள் சொல்லிக் கொண்டிருக்க, இயல்பாக அவளின் முன்னிலையில் ஆடை மாற்ற ஆரம்பித்தான்.

கூச்சம் கொண்டவளாக அவள் திரும்பி நின்று கொண்டாள்.

“ரெண்டு வருஷத்துல பழசு எதையும் மறக்காம பாயிண்ட் புடிச்சி பேசினவ அதுக்கு முன்ன நடந்தது எல்லாத்தையும் மறந்து போயிட்டா” கிண்டலாக சொல்லிக் கொண்டே ஆடை மாற்றி முடித்திருந்தவன் அவளுடைய இரவு ஆடை ஒன்றை எடுத்து அவளின் மேல் தூக்கி போட்டான்.

உச்சு கொட்டி அவள் சலிக்க, “நான் எதையும் மறக்கல, உன்னை போல ஜெர்க் ஆக மாட்டேன்” என்றான்.

அவனை பார்த்து பழிப்பு காட்டியவள் ஓய்வறை சென்று விடவும் அவளுக்கு நடந்த விபத்து பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்களில் வெளி வந்தவள் அமைதியாக படுத்து விட்டாள்.

 “என்னை பக்கத்துல அலோ பண்ற ஐடியால இருக்கியா, இல்லை வெளில போகணுமா நான்?” எனக் கேட்டான்.

“நான் தூங்கிட்டேன்” என்றாள். “அப்ப சரி” என சொல்லிக் கொண்டே அவளருகில் படுத்து விட்டான்.

குடித்து விட்டு காரோட்டிய அந்த டிரைவரிடம் இப்போது லைசென்ஸ் கிடையாது, இனி எப்போதுமே கார் ஓட்ட முடியாத படிக்கு செய்து விட்டான். இந்த மருத்துவ பணியாளன் பற்றி இப்போதுதானே தெரிய வந்திருக்கிறது, அவனை அப்படியே விடுவதா, ஏதாவது செய்ய வேண்டும் அவனை… உள்ளுக்குள் கறுவிக் கொண்டிருந்தான்.

அவன் பக்கமாக படுத்தவள், “யாரோட நோக்கமும் எனக்கோ பாப்பாக்கோ எதுவும் ஆகணுங்கிறது இல்லை. எனக்கு நடக்கணும்னு இருந்திருக்கு நடந்திடுச்சு. நமக்கு நடக்கிற எல்லாத்துக்கும் பின்னால மறைமுகமா அவங்கள அறியாமலே யாராவது காரணமா இருப்பாங்கதான், எல்லாரையும் பழி வாங்குறதுன்னு புறப்பட்டா வாழவே முடியாது. அந்த ஆள தேடிப் போக மாட்டேன்னு பிராமிஸ் பண்ணுங்க” என்றாள்.

அவன் முகத்தை திருப்பிக் கொண்டான். ‘என்னை மீறி அப்படி என்ன செய்கிறான் என பார்க்கிறேன்’ என நினைத்தவளாக கண் அயர்ந்தாள்.

காலையில் எசகு பிசகாக அவளை கட்டிக் கொண்டு படுத்திருந்தவனை தட்டி எழுப்பி விட்டாள். விழித்தவன் நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக்கொண்டு தள்ளி படுத்தான்.

“நைட் என்னை அசைய விடாம போட்டு அமுக்கியிருக்கீங்க. பாருங்க கழுத்துல வலி” என்றாள்.

“எங்க காட்டு பார்க்கிறேன்” என சொல்லிக் கொண்டே அவளின் கழுத்தை தொடப் போனான்.

அவனது கையை தட்டி விட்டவள் தானே கழுத்தை தடவி விட்டுக் கொண்டாள்.

“ஆனா நான் கழுத்தை பிடிக்கலையே ஸ்ரீ” என்றவனை கண்களால் சுட்டாள்.

“சுடுதண்ணில குளிச்சா சரியா போவும். அதுக்கு போய் அனத்திக்கிட்டு” என்றவன் சோம்பலாக புரண்டு படுத்தான்.

தன் கழுத்தில் படிந்திருந்த அவனது தாடி முடியை எடுத்தவள், “ஒழுங்கு மரியாதையா ஷேவ் பண்ணுங்க. ஃபங்ஷன் வர்றவங்கலாம் யாருடா இந்த வனவாசின்னு பார்க்க போறாங்க” என்றாள்.

“ம்ம்…” என்றான்.

“வேலை நிறைய கெடக்கு, இப்படி படுத்து கிடந்தா எப்படி? எந்திரிங்க!” அதட்டினாள்.

“எவனையோ பாதுகாக்கத்தான என்கூட வந்திருக்க, அப்ப பொண்டாட்டிக்கு மட்டும் உள்ள உரிமைலாம் கைல எடுக்காத” என்றான்.

“என்ன?”

“எனக்கு ஆர்டர் போடற உரிமை என் பொண்டாட்டிகுதான் இருக்கு. வேண்டா வெறுப்பா என் கூட இருக்க உனக்கு இல்லை”

“ரொம்ப நல்லது, என்னமோ செய்ங்க” என்றவள் எழுந்து குளியலறை சென்று விட்டாள்.

இன்னும் ஸ்ரீ வந்தது வீட்டினருக்கு தெரியாது. ஸ்ரீ குளித்து தயாராகிய பிறகும் படுத்தே இருந்தான். அவள் கல்லூரி செல்லும் சமயங்களில் இப்படித்தான் அவள் தயாராவதை உணர்ந்த வண்ணம் வெறுமனே படுத்திருப்பான். சத்தம் செய்யாமல் கிளம்ப வேண்டும் என அவள் நினைத்தாலும் ஜெய்யின் காதுக்கு அவளின் சின்ன அசைவு எழுப்பும் ஒலி கூட புலனாகும்.

அவளின் விடுமுறையை பார்த்து பார்த்துதான் அவளுடன் படுக்கையில் ஒன்றாக இருப்பது, ஆகவே கல்லூரி நாட்களில் அவளை ரசிப்பதோடு சரி. கண்களை மூடிக் கொண்டே அவளை ரசித்த தருணங்கள் நினைவு வந்தது, அதே தருணம் இப்போது மீண்டு விட்டது போல உணர்ந்தான்.

ஏசியை அணைத்து மின் விசிறி போட்டு விட்டு வெளியேறி விட்டாள். அதன் பின் பொறுமையாகத்தான் எழுந்து தயாராக ஆரம்பித்தான் ஜெய்.

பாட்டியின் வெந்நிற கூந்தலை கொண்டை போடுகிறேன் என வம்பு செய்து கொண்டிருந்தான் ஜனா.

“அட விடுடா, இருக்கறதே நாலு முடி அதையும் பிச்சு போட்றாத” என சொல்லிக் கொண்டிருந்தார் பாட்டி.

“பொய் பேசாத ராஜாம்பா, நானூறு முடியாவது இருக்கும். எப்ப பாரு ஒரே கொண்டை போட்டுக்கிட்டு. சைனாக்காரி கொண்டை போட்டு விடுறேன் இரு” என்ற ஜனா, உச்சியில் கொண்டை போட்டு விட்டான்.

பின் பாட்டியோடு செல்ஃபி எடுக்க போனவன் இரண்டு விரல்களை வி போல வைத்து வாயை குவிக்கும் படி சொன்னான். பாட்டியும் அப்படியே செய்ய போட்டோ எடுத்தவன், “ராஜாம்பா அழகின்னா நீதான் போ” என கொஞ்சினான்.

“ஆமாம் திருஷ்டி பொட்டு வச்சி விடு ஜனா” என்ற ஸ்ரீயின் குரலில் இருவருமே அதிர்ந்து போய் திரும்பினார்கள்.

பாட்டி ஆ என பார்க்க, “அண்ணி! அப்ப அண்ணன் உங்க கால்ல விழுந்திட்ட அதிசயம் நடந்திடுச்சா?” என வியப்பாக கேட்டான்.

ஜனாவின் முதுகில் அடித்த பாட்டி, “அவன் எப்பவும் இவ கால்லதான் டா விழுந்து கெடந்தான். கல்லு மண்ணு ஜல்லிக்கப்பி பத்தி படிச்சவளுக்கு அதெல்லாம் புரிஞ்சாதானே?” என்றார்.

“நீ சொன்னா சரியாதான் இருக்கும் அப்பயி. என்ன இருந்தாலும் எங்கண்ணன் காதல்ல மன்னன்” என்றான் ஜனா.

“போதும் உங்கண்ணன் புராணம். நீ சொல்ற ஸ்டேட்மெண்ட்ட நான் சொல்லணும். வா உனக்கு ஃபேஸ் பேக் போட்டு விடுறேன், நாளைக்கு பள பளன்னு இருப்ப” என்றாள் ஸ்ரீ.

“அதெல்லாம் கருப்பா இருக்க உங்க ஆளுக்குத்தான் தேவை, சுண்டுனா இரத்தம் வர்ற தேகம் நமக்கு. இப்படி இருக்கும் போதே உங்க தங்கச்சி என் மூஞ்சியவே பார்க்கிறா, ஓவர் அழகாயிட்டா அவ கண்ணு என் மூஞ்சுல வந்து ஒட்டிக்கும், ச்சே ஜனாவுக்கு ஏத்த அழகில்லையேப்பா இந்த பொண்ணுன்னு வந்தவங்களும் மஹதிய குறைச்சு சொல்லிடுவாங்க. இந்த அசமந்தத்த… ச்சீ… அசம்பாவிதத்த தடுக்கணும்னா எனக்கு ஆர்ட்டிஃபிஸியலா எதுவும் வேணாம் அண்ணி” என்றான்.

“எதுக்கு என் புருஷனை வாரி விடுற, கருப்பு அவரோட உழைப்போட நிறம்” என்றாள் ஸ்ரீ.

“அப்ப நாங்க மட்டும் சும்மா உட்கார்ந்து கெடக்கோமா? ஓனரம்மா வந்ததும் வராததுமா ஓவரா போறீங்க. அதுவும் குத்தி குத்தி பேசுறீங்க” பொய்யாக கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

ஊக்கு ஒன்றை நீட்டிய பாட்டி, லேசாக அவனது தோளில் குத்தினார். அவன் அலற, “ரெண்டு வருஷம் கழிச்சு வந்தவளை இப்படி பேசியே திரும்ப போவ வச்சிடாத. வாய கொஞ்சம்…” கையை வாயில் வைத்து காட்டினார் பாட்டி.

“நல்லாருக்கு பாட்டி உங்க ஜப்பான் கொண்டை” என பாட்டியிடம் சொன்னாள் ஸ்ரீ.

“அவன் சைனாங்கிறான் நீ ஜப்பான்ங்கிற, என்னவோ போ. முதல்ல சாமி ரூம் போய் விளக்க ஏத்து” என பாட்டி சொல்லவும் மறுக்காமல் பூஜையறை சென்றாள் ஸ்ரீ.

“சாமி கும்பிட்டுட்டு உன் கையால இனிப்பு ஏதாவது செய். நீயே செய், உன் மாமியாகிட்ட பக்குவம் கேட்றாத, இனிப்பே போடாம மண்ணு மாதிரி செய்ய சொல்லுவா” ஸ்ரீயை கண்டு விட்டதில் பாட்டிக்கும் ஜனாவுக்கும் அத்தனை உற்சாகமாக இருந்தது.

பேச்சுக் குரல் கேட்டு வந்த துளசி மருமகளை பூஜை அறையில் கண்டதும் கண்ணீரே விட்டு விட்டார். ஜனா போய் அம்மாவை தோளோடு அணைத்துக் கொண்டான். அவன் மேல் சாய்ந்து கொண்டவர், “எப்படா வந்தா?” எனக் கேட்டார்.

“அதெல்லாம் நைட்டே அண்ணா அழைச்சிட்டு வந்திட்டார் போல. அழுது அவங்கள எம்பாரஸ் பண்ணாம நார்மலா இரும்மா” என்றான் ஜனா. துளசியும் சுதாரித்துக் கொண்டார்.

சுரேகா வந்தாள். ஸ்ரீயை கண்டதும் புன்னகை செய்தாள், நலம் விசாரித்தாள். அமெரிக்கா சென்ற பிறகுதான் சுரேகாவின் முழுக் கதையும் ஸ்ரீக்கு தெரிய வந்தது, இப்போது அவளுக்கு பதில் சொல்லி ஓரிரு வார்த்தைகள் நல்ல விதமாகவே பேசினாள் ஸ்ரீ.

காலை உணவின் போதுதான் கீழே வந்தான் ஜெய். சுரேகா அலுவலகம் சென்று விட்டாள். ஜனாவும் அரை நாள் வேலையிருக்கிறது என சொல்லி புறப்பட்டு விட்டான்.

வீட்டில் உள்ள வேலைகளை பார்த்துக் கொண்ட ஸ்ரீ இடையிடையே அம்மாவுக்கும் தங்கைக்கும் அழைத்து அங்கேயும் பேசிக் கொண்டாள். தன்னிடம் சொல்லாமல் சென்று விட்டாய் என செல்ல சண்டை போட்டாள் மஹதி.

 கைப்பேசியை வாங்கிய பாட்டி, “இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் உன் அக்காவோட இங்கதான் இருக்க போற, எப்படியோ வந்தாளேன்னு நாங்களே இப்போதான் நிம்மதி ஆனோம், நீ மூக்கால அழுவாதடி” என செல்லமாகவும் உரிமையாகவும் அதட்டினார்.

ஜெய்யின் சித்தப்பா வந்தார். ஸ்ரீயை கண்டு விட்டு அவருமே மகிழ்ந்தார். ஜெய் அவரையும் அழைத்துக் கொண்டு வெளி வேலைகளை பார்க்க சென்றான்.