“ஆனால் அந்த பொய் உனக்கு சாதாகமா மட்டும் தான் வருமா” என வழிகளை அவனுடன் கலக்க விட்டு திருப்பியவள்…
“உன் மேல் எந்தளவுக்கு பைத்தியமா இருக்கேன்னு உனக்கு இன்னும் புரியலை சத்ரி” என முதல் முறையாய் தன் காதலை அவனுக்கு உணர்த்த முற்பட அதை புரிந்து கொள்ளாத சத்ரியோ..
“பைத்தியமா..!” என இளக்காரமாய் பார்த்தவன்.. “இப்போ இப்படி வாய் பேசுறியே.. ரமேஷூக்கு வேற பொண்ணோட மேரேஜ் ஆயிடுச்சு.. அதனால் நான் உனக்கு கிடைச்சேன்..”
“ஒரு வேளை ரமேஷ் விசயத்தில் எதும் ப்ராப்ளம் ஆகாமல் இருந்திருந்தால்..” என கிண்டலாய் நிறுத்த…
“வெரி சிம்பிள்.. ரமேஷையே கல்யாணம் பண்ணியிருப்பேன்” என அசராமல் கூற… சத்ரிக்கு ஹார்ட் அட்டாக்கே வரும் போல் இருந்தது.. இந்த முறை இளக்காரமாய் பார்ப்பது அவள் முறையானது..
அவள் பார்வையும் , இலகுவாய் வந்த பதிலும் சத்ரிக்கு அளவில்லாமல் பிபியை ஏற்றி விட்டிருக்க…
“இவ்ளோ…. நேரம் லவ்வு லவ்வுன்னு பினாத்திக்கிட்டு இருந்த உன் லவ்வுக்கு இவ்வளவு தான் ஆயுசா… ” என சிலிர்த்தெழுந்த கோபத்துடனே கேட்க…
“உனக்கான லவ் எப்பவுமே அழியவே அழியாது சத்ரி..அதை இப்போவும் சொல்வேன்..ஒரு வேளை நீ ரமேஷோட தான் என் கல்யாணம்ன்னு முடிவு பண்ணியிருந்தா.. கண்டிப்பா அவனை தான் பண்ணியிருப்பேன்…. நீ என்ன சொன்னாலும், நான் கேட்பேன்… அந்தளவு உன் மேல் காதல் இருக்கு உன்னோட முடிவு, எந்த விசயத்திலையும், எந்த நேரத்திலையும், எந்த இடத்திலேயும் நான் ஏத்துப்பேன்” என விழிகள் பளபளக்க கூற..
சத்ரியின் கண்கள் வெகு கூர்மையாய் அவளில் பதிந்து மீள.. இதயம் ஒரு முறை தாளம் தப்பி மீண்டும் துடிக்க.. வாயில் இருந்து வார்த்தைகள் வர வில்லை.. வரவிடவில்லை சாத்வியின் பதில்..
அவனின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்த சாத்வி..
“ரொம்ப ஓவரா பேசுறேன்ல” என நிறுத்தி.. “சரி சிம்பிளான ஆன்சர்.. எத்தனை காதல் கல்யாணத்தில் முடியுது.. நானும் அந்த ரகம்ன்னு.. உன்னை மனசிலேயும்…. ரமேஷை“ என சொல்லி முடிக்கும் முன் தன் மடியில், தன் முகத்தை பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தவளின் வாயை இறுக அடைத்தான் தன் முரட்டுக் கைகளால்.
அவன் கைகளை பிரித்து.. அவன் பிரதிபலித்த உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு
“ஓவரா… பீல் பண்ணாதா” என இன்னும் அவன் மடியில் வாகாய் படுத்துக் கொண்டு.. “என்னோட கெஸ்ஸிங் கரேக்டா இருந்தா…. நீ ஏதோ பிளான் பண்ணி தான்… இந்த கல்யாணத்தை நடத்தி இருக்கனும்.. ஏதோ பிராடு வேலை பார்த்திருக்க” என அவனை அறிந்தவளாய் அசால்ட்டாய் அவன் காலை வார
சத்ரிக்கு , அதிர்ச்சி தான்… ஆனாலும் அதிர்ச்சியை மீறிய பெருமை அதிகமாய் தலை தூக்க ஆழமாய் அவளை பார்த்தபடி இருந்தான்..
அவளின் மீதான காதலை நிமிடத்திற்க்கு நிமிடம் ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தாள்.. சாத்வி… தன்னை அறியாமலேயே….தன் பேச்சினாலேயே…
சிறு சிறு விஷயங்களில் சரியாய் கனிப்பவள். இதையும் கணித்திருக்கிறாள் என நினைத்த சத்ரிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தடுமாறிய உணர்வுகள் மொத்தமாய் தடுமாற
அவளின் இடையில் கை கொடுத்து முரட்டுத்தனத்தை மொத்தமாய் அவள் இடையில் காட்ட அவன் மடியில் இருந்தவள் திமிறக்கூட முடியவில்லை.. அவனின் செயலில் தடுமாறி அவன் வயிற்றினுள் புதைந்தவள் நெளிந்து கொண்டே
“சத்ரி… இது என்ன புதுசா..” என தடுமாறிக் கேட்க…
“உன் கவலை எல்லாத்தையும் நீ மறக்கனும்” என இடையில் இன்னும் அழுத்தத்தை கொடுத்து..தூக்கி தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு கூற
“கவலையை மறக்க எனக்கு ஸ்ரீ ராம ஜெயம் இருக்கு..”
“அது மட்டும் போதுமா? நான் வேண்டாமா ” என தேடல் நிறைந்த குரலில் கேட்க…
“கவலையை மறக்க, ஸ்ரீ ராம ஜெயம் இருந்தாலும் , அதுக்கு பின்னாடியும் நீ தான் இருக்கே சத்ரி” என கண்களில் கூர்மையுடன் கூற
“இனி இதெல்லாம் வேண்டாம் உனக்கு.. இப்போ தான் உன் கவலை தீர்க்க காயங்களை போக்க.. நான் இருக்கேனே” என பார்வைகள் அவளை கூறு போட
அந்த பார்வையை திடமாய் தாங்கி நின்ற சாத்வியோ… சிறிதாய் விரிந்த புன்னகையோடு.
“என்னோட காதலை இன்னும் நீ உணரலை சத்ரி.. உணர்ந்திருந்தால்… இப்படி பேசிட்டு இருக்க மாட்டே.” என விரக்தியாய் சொல்ல…
அவளின் குரல் மாறுபாட்டில்.. தானாகவே அவன் கைகள் தளர..அமைதியாய் அவன் மடியில் இருந்து எழுந்து கீழே சென்றாள்.
சத்ரிக்கோ.. சாத்வியை புரிந்து கொள்ளவே முடியாமல் தலையை பிடித்தபடியே அமர்ந்திருந்தான்.
சாத்வி அமைதியாய் கீழே வர, அனைவரும் இவர்களுக்காகவே காத்திருக்க, கேள்வியாய் பார்த்தவளிடம் “குலதெய்வம் கோவிலுக்கு போகனும்மா” என சொல்லவும்… மீண்டும் தங்கள் அறையினுள் சென்று சத்ரியையும் அழைத்துக் கொண்டு கீழே வந்தாள்.
எல்லோரும் மகிழ்ச்சியாய் கிளம்பிக் கொண்டிருக்க.. “ஹேய்… என்னாச்சு” என எதையோ தொலைத்தபடி இருந்த கிருத்தியின் அருகில் அமர்ந்தான் வெங்க்கட்.
“நமக்கு கல்யாணம் ஆன போது… எனக்குள்ள நீயும் உனக்குள்ள நானும்ன்னு.. உலகத்தையே மறந்து போய் இருந்தோம். ஆனால் சத்ரி சாத்வி இரண்டு பேருமே.. சாதாரணமா கூட அவங்க வாழ்க்கையை ஆரம்பிக்கலையேன்னு தான் கவலையா இருக்கு” முதலிரவு முடிந்திருக்கும் என நினைத்த க்ருத்திகாவிற்கு வெங்க்கட் எல்லாவற்றையும் கூறிய பின்… அதை அவளால் ஜீரணிக்ககூட முடியவில்லை அதன் பொருட்டே கவலை கொள்ள..
அதை எளிதாய் புறம் தள்ளிய வெங்க்கட்..
“சத்ரியை பத்தி தெரியாமல் பேசிட்டு இருக்க.. அவன் அப்படியெல்லாம் சாத்வியை விட்டு விட மாட்டான். பய அப்பவே சாவி சாவி ன்னு சாவி கொடுத்த பொம்மை மாதிரி சுத்திட்டு இருப்பான். இப்போ அவன் கையிலேயே அவளை தூக்கி கொடுத்தால்.. அதை நான் சொல்லவும் வேணுமா ” என சிரிக்க…
பழைய சத்ரி சாத்வி நினைவிற்கு வந்தாலும்.. “இரண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தால் அதுவே போதும் வெங்க்கட்.. அவங்களை கலை இழந்த முகத்தோட பார்க்கும் போதெல்லாம் குத்துது வெங்க்கட் அதை விட வலிக்குது… ” என கவலை கொள்ள.
தனக்கும் அப்படி தான் இருக்கிறது என வாய் விட்டு சொல்லவில்லை வெங்க்கட்.. அவ்வளவு தான்… மற்றபடி…அதே கவலை அவனுள்ளும் இருக்க.. “ இரண்டு பேரும் சந்தோஷமா…. வாழ்க்கையை ஆரம்பிக்கனும்..” என மனதினுள் வேண்டிக் கொண்டான்…
வேன் ஒன்று ஏற்பாடு செய்திருக்க… நெருங்கிய சொந்தமாய் சிலருடன் கிளம்பியது அந்த பயணம்…
மூன்று மணி நேர பயணம் இரண்டிரண்டு பேர்களாய் அமர சீத்வியும் சத்ரியும் அருகருகே அமர அவர்களை கண்காணித்தபடியே சங்கரன் அவர்களுக்கு நேர் எதிரில் அமர
‘சாவியை இந்த பாடு படுத்திட்டு இங்கே என்னையா லுக் வேண்டி கிடக்கு’ என அவரை ஓரக்கண்ணால் பார்த்தவன்… திரும்பி அமர்ந்து கொண்டான்.
சாத்வியின் பாரம் அனைத்தும் இவனுள் ஏறியிருக்க.. அமைதியாகவே வந்தான்..
கிராமத்திற்கே உரிய மண் வாசனையுடன் தார் சாலைகளின்றி மரங்களின் குழுமையுடன், மிதமான ஆற்றின் நீரோட்டத்தையும் உள்ளடக்கிய அவர்களின் குலதெய்வம் கோவிலுக்கு வந்திருந்தனர்..
பொங்கல் இனிதே வைத்து முடிக்க..
“கருவறையில் இருக்கும் குல தெய்வத்திற்கும், கோவிலை சுற்றியுள்ள மற்ற தெய்வங்குக்கும் இரண்டு பேரும் படையல் வச்சிட்டு வாங்க…” என சத்ரியையும் சாத்வியையும், குருக்கள் அனுப்ப…
“நீங்களும் கூட போங்க” என வெங்க்கட்டையும் க்ருத்திகாவையும் சிவஹாமி அனுப்ப… அவர்களுடன் தானாய் இணைந்து கொண்டாள் திவ்யா…
இரண்டாக வெட்டப்பட்ட இலைகளை திவ்யா.. சாமியின் சிலை முன்பு வைக்க…. க்ருத்திகா அதில் பொங்கல் வைக்க… வெங்க்கட் பொரி கலவையை வைக்க சத்ரி அதில் இரண்டு இரண்டு வாழைப்பழங்களாய் வைத்தபடி வர… சாத்வி சுண்டல் பயறு வகைகளை படைத்தபடி வந்தாள்.
இதில் இருக்கிற ஒற்றுமை என்னைக்கும் நிலைக்க வேண்டும்… இந்த ஒற்றை வேண்டுதல் மட்டுமே அங்கிருந்த பெரியவர்களின் மனதில் தோன்றியது.
இனியாவது சத்ரி ,சாத்வி இரண்டு பேரும் சந்தோஷமா வாழனும்.. அங்கிருந்த மற்றவர்களின் மனமார வேண்டுதல் இதுவாகத் தான் இருந்தது.. ஆனால் புதுமனத் தம்பதிகளோ… கண் மூடி யபடி அமைதியாய் இருந்தனர்… தெய்வத்திடம் என்ன கேட்டு முறையிடுவது எனத் தெரியாமல்..
இஷ்டமில்லை என்றாலும் “மற்றவர்களை காயப்படுத்தி அதில் தான் சந்தோஷம் காண வேண்டுமா” என்ற எண்ணமே அதிகரிக்க…
சிரித்து பேசா விடினும் முகம் சுருக்காமல் பதில் பேச தொடங்கினாள்…. சாத்வியிடம் ஒரிரு வார்த்தைகளுடன் தேவைக்கு பேசுவதோடு சரி…. அதை மீறி எதுவும் செய்ய முடியவில்லை சத்ரியால்…
கோவிலில் இருந்து வீட்டிற்கு வர இரவானது. காலையில் எப்போதும் எழும் நேரத்திற்கு எழுந்தாள்… புத்துணர்வாய் வந்தாள் மஹா சிவஹாமி, க்ருத்திகா என அனைவரும் சமையலறையில் இருக்க வந்து எட்டி பார்த்து பின் அமைதியாய் திரும்ப… சத்ரியும் அங்கே வர சரியாய் இருக்க… அவனை பார்த்து மீண்டும் சமையலறையினுள் நுழைந்தாள்….
“வ, சாத்வி.. ஏம்மா, அங்கையே நின்னுட்ட வா க்ருத்திகா டீ சூடு பண்ணுமா ” என சிவஹாமி கூற…
“இல்லை அத்தை நான் சூடு பண்ணிக்கிறேன்“ என அமைதியாய் கூற
மூவரும் அவளுக்கு வழிவிட அவளுக்கும் சத்ரிக்கும் எடுத்து வந்தாள்….
ஹாலில் இருந்த அவனுக்கு டீ கொடுத்து.. சுவாதீனமாய் அவன் அருகில் அமர்ந்து டீயை பருக தொடங்கினாள். நேற்று முன் தினம் தான் திருமணம் ஆனதென நம்ப கூட முடியவில்லை சத்ரிக்கு… வருட வருடமாய் வாழ்ந்த கணவன் மனைவியின் இயல்பு அவளிடம் இருந்தது… எந்த ஒரு தயக்கமும் இல்லை. சத்ரியும் இயல்பாய் அவளுருகில் அமர்ந்து பருகினாள் பின் அவனது கப்பையும் சேர்த்து எடுத்துக் கொண்டு… செல்ல.
கைகளை சோபாவின் மீது போட்டு சாய்ந்து அமர்ந்து, போகும் அவளையே பார்த்திருந்தான் சத்ரி மனதினை அடைக்கும் உணர்வோடு.