சட்டென எழுந்து அமர்ந்தாள் “குளிச்சிட்டு வா… சாத்வி” என அங்கிருந்து வெளியேறினார் மஹா…
‘என்ன நினைப்பாங்க அம்மா’ என சிறிது நேரத்தில் கிளம்பி கீழே வந்தாள்…
சத்ரியின் எதிரில் வந்து அமர்ந்து. சத்ரி பருகிக் கொண்டிருந்த டீயை பிடுங்கி தன் போக்கில் மொபைலை நோண்டிக் கொண்டே பருக தொடங்கினாள். சத்ரியோ “ம்மா.. இன்னொரு டீ வேணும்” என சிரித்தபடியே கேட்டான்.
அவளின் அருகில் வந்த மஹா “சாத்வி” அவளை தொட திரும்பி ‘ என்ன ‘ என்பது போல் பார்த்தாள்.
மாடிப்படியின் அருகே கண்களை காட்டி “அங்கே வா” என கண் ஜாடையில் அழைக்க..
”நீ சொல்றதை கேட்கிற ஆளா நான்” என்ற ரீதியில் மீண்டும் மொபைலை பார்க்க ஆரம்பிக்க..
இதையெல்லாம் பார்த்த சத்ரி “என்னன்னு தான் கேளேன் சாத்வி” என கூர்மையாய் அவளை பார்க்க… அவனை முறைத்தபடியே, டீயை அப்படியே வைத்துவிட்டு எழுந்து தாயுடன் சென்றாள். “நேற்று தான் கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியா நடந்துக்கிற” என மஹா கேட்க
“எங்க மானத்தை வாங்காம இங்கிருந்து போக மாட்ட போலவே” என சங்கரனும் கேட்க…
மார்பின் குறுக்காய் கை கட்டி “இப்போ உங்க மானம் போற அளவுக்கு நான் என்ன செஞ்சேன் ”
“ மாப்பிள்ளை எந்திரிக்கிறதுக்கு முன்னாடி நீ எழுந்துக்க வேணாமா? லேட்டா எழுந்து வந்ததும் இல்லாமல், மாப்பிள்ளையோட டீயை பிடுங்கிட்டு போனை வேற நோண்டிட்டு இருக்க” என மஹா கேட்க..
“இப்படியெல்லாம் நடந்துட்டு இருந்தேன்னா.. எங்களை பத்தி என்ன நினைப்பாங்க” என சங்கரனும் பாய…
“நல்லா வளர்க்கலைன்னு நினைப்பாங்க..” என இருவருக்கும் பொதுவாய் சாத்வி பதில் சொல்ல
அத்தனையையும் அருகில் இருந்து கேட்ட கிருத்தி…
“ஏய், அப்பாகிட்ட பேசற மாதிரியா பேசுற.. மரியாதை வேணாம்” என வர…
“அப்பா வா? யார் இவரா? இவர் என்னை வளர்த்தாரா?” என முகத்தை கிருத்தி புறம் திருப்ப
“ பின்ன நீயா வளர்ந்தியோ..” என கிருத்தி பேச…
“யார் சொன்னாலும், சொல்லலைன்னாலும் அது தான் உண்மை.. “ என நக்கலாய் பேச
அவர்களின் பேச்சு சத்தம் கேட்டு சத்ரி, விநாயகசுந்தரம், வெங்க்கட், சிவஹாமி என அனைவரும் அங்கே கூட…
“சாத்வி, ஒழுங்கா பேசு அம்மா அப்பாட்ட பேசற ஏதோ எதிரிகிட்ட பேசற மாதிரி இருக்கு உன் நடவடிக்கை..”
“சாத்வி” என சத்ரியின் குரல் அழுத்தமாய் வர. அதுவரை வாயாடிக் கொண்டிருந்தவள் அமைதியாய் ஆனாலும், இதற்கெல்லாம் பயப்படுவேனா என நின்றிருந்தாள்.
“அப்பா அம்மா என்ன பண்ணினாங்கன்னு, அவங்க மேல இவ்வளவு வெறுப்பு” தன் கேள்விகளுக்கு இவளாவது பதில் சொல்வாளா என அவள் வாயை கிளற.. ஆனால் அது தன் மீது திரும்பும் என அறியாது போனாள்.
“சின்ன வயசில் நீ செய்த தப்புக்கு நான் தண்டனை அனுபவிக்கிறேன் இப்போ வரை.. இதுவரை நான் தொலைச்ச என் சந்தோசத்தை உன்னால் திருப்பி தர முடியுமா?”
“இல்லை , என் மேல் பாசம், நம்பிக்கை வச்ச என்னோட அம்மா அப்பாவை திருப்பி தர முடியுமா?”
“நீ தப்பே செஞ்சிருந்தாலும் உனக்கு எல்லாரும் சப்போர்ட்டா இருக்காங்க ஆனா நான்.. எந்த தப்பும் செய்யாமலேயே, அம்மா அப்பா, சத்ரின்னு எல்லாம் இருந்தும் அனாதை தான்”
“நிம்மதியா.. ஒரு வேளை சாப்பாடு என்னை சாப்பிட விட்டுரூப்பாங்களா?”
“ படிக்க விட்டுரூப்பாங்களா”?
“இல்லை சுதந்திரமா கொஞ்சம் நேரமாவது என்னை வெளிய விட்டுரூபாங்களா” என தன் மனதில் உள்ளதை கொட்ட… அதிர்ந்து நின்றாள் கிருத்தி.
“இதுக்கே , அதிர்ச்சியானால் எப்படி? இன்னும் நிறைய இருக்கு” என சங்கரை பார்க்க..அவளின் வார்த்தைகளை தாங்காத சங்கரன்.
“சும்மா நீ செஞ்சதுக்கெல்லாம் அவளை காரணம் சொல்லாத.. அப்படிலாம் கண்டிசன் போட போய் தான் ஒழுங்கா வளர்ந்த… இல்லைனா…. உன் பின்னாடி சுத்தினவனோட போய் இருப்ப” சங்கரன் பேச
“தப்பா போக இருந்த என்னை சரியான வழிக்கு திருப்பி விட்டது நீங்க இல்லை..“ என தன் பார்வையை சத்ரியின் புறம் திருப்பி.. “சத்ரி தான், சத்ரி இல்லைன்னா” என மீதியை சொல்லாமல் விட்டு..
“உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்காதே” என சங்கரிடமும் திமிராய் நின்றிருந்தாள்..
“ சாவி… , நீ பேசினது போதும்… போ ” என அவளறையை கை காட்டி சத்ரி அவளை அனுப்ப….
“நான் போக மாட்டேன்” என சொல்லி நிற்க… சத்ரி அவளை முறைத்து நின்றிருந்தான்.
‘இதை இப்போ கண்டிப்பா சொல்லியே ஆகனுமா….’ என சத்ரி பார்த்திருக்க..
‘ஆகனும்’ என அழுத்தமான பார்வையை சாத்வியும் நிலைக்க விட.. அது புரிந்த சத்ரி வேகமாய் அவளருகில் வந்து “தருண் விசயம் வெளியே வந்தது” என வார்த்தையில் அனலை கூட்ட..
அதற்குள் சங்கரன் “சரி எப்படியோ , நல்ல வழிக்கு திரும்பி, இப்போ நல்ல நிலையில் தானே இருக்க.. இன்னும் எங்களை குறை சொல்லனுமா.. கிருத்தியை அழ வைக்கனுமா”
“ ம் அதுவும் சரி தான்..… இப்போ நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன்… சந்தோசமா இருக்கிறேன் , ஆனா தொலைஞ்சு போன என் சின்ன வயசு ஏக்கங்கள் எதிர்பார்ப்பு எல்லாத்தையும் சிதைச்சுட்டீங்களே.. அதை எல்லாம் உங்களால திருப்பி தர முடியுமா..?” என சிலிர்த்து நின்றிருந்தாள்…
“சாத்வி , விடுமா.. அப்பா அம்மா தானே..” என சிவஹாமியும் ஊடே வர…
“நான் சராசரி பொண்ணு இல்லை அத்தை என்ன செஞ்சாலும் எங்க அப்பா தானே, என்னோட அம்மா தானேன்னு பொறுத்து போகிற ஆளும் நானில்லை..” என ஒரு முடிவுடன் நின்றிருந்தவளை அடக்கும் வழியறியாது திகைத்து நின்றிருந்தனர் அனைவரும்..
சாத்வியின் கோபம் ஞாயமானது தான் என்றாலும் வெளியில் இருந்து பார்க்கும் போது ‘பஜாரி’ என எண்ண வைக்கும் செயல் தான்.
“பொறுத்துப் போறதினால் என்னும் ஆகாது. விட்டு கொடுத்து தான் போயேன்” என மஹாவும் கூற…
“அப்பா செஞ்சது எவ்ளோ பெரிய தப்புன்னு இன்னும் அவருக்கு புரியலைன்னா.. உங்களுக்கும் புரியலைல… ” என மஹாவை சாடியவள்.
“இப்போ கூட இவ செஞ்ச தப்பை வாய் விட்டு சொல்ல மனசு வரலை… ஆனா எத்தனை தடவை நான் செய்யாததுக்கு என்னை அழ வச்சிருப்பீங்க… ” என மேலும் பேச..
“இப்போ இவ்வளவு பேசற நீ… அன்னைக்கு என்கிட்ட சண்டை போட்டிருக்கனும்.. இப்போ வேலை எல்லாம் கிடைச்சு செட்டில் ஆனா அப்பறம் தானே எங்களை விட்டு தனியா வந்திருக்க…. ரோசம் இருக்கறவ என் காசுல சாப்பிட்டிருக்க கூடாது, என் வீட்டில் தங்கி இருக்க கூடாது..” என
“இப்படி எந்த ஒரு அப்பாவும் தம்பட்டம் அடிச்சிட்டு இருக்க மாட்டாங்க.. பர்ஸ்ட் செமஸ்டர் பீஸ் மட்டும் தான் நீங்க கட்டினீங்க.. மீதி யார் கட்டினா?“ என சங்கரை கேட்க….
பேந்த பேந்த விழித்தார்… சங்கரன். “ஷிவா மாமா தான் கட்டினாங்க.. செமஸ்டர் ஆரம்பிச்ச ஒரு வார்த்துக்குள்ள எனக்கு பீஸ் கட்டிடுவாங்க..நானா தேடிப்போய் பீஸ் கேட்கிற மாதிரி ஒரு நாளும் நடந்ததில்லை”
‘ஷிவா’ என்ற பெயர் அங்கிருந்த அனைவருக்கும் அதிர்வை ஏற்படுத்த…. சத்ரியும் சாத்வியும் மட்டும் அனைவரின் அதிர்ச்சியை பார்த்தபடி நின்றிருந்தனர்.
சத்ரி அருகில் வந்த விநாயகசுந்தரம் “சாத்வியை கூட்டிட்டு போடா… சங்கரன் முகமே கூம்பி போச்சு” என நண்பனுக்காய் வருத்தபட
“எவ்வளவு கஷ்ட பட்டிருப்பா.. வெளியே கொட்டின அப்பறமாவது நிம்மதியாய் இருக்கட்டும்” என சாத்விக்காய் பேச
“ வெங்க்கட்டையும், க்ருத்திகாவையும் எதுவும் சொல்ல கூடாது கேட்க கூடாதுன்னு கண்டிசன் போட்ட.. இப்போ சாத்வியை விட்டு பேச வைக்கிற” என சிவஹாமி குழப்பதுடன் கேட்க…
“அந்த கண்டிசன் உங்களுக்கு தான், சாத்விக்கு இல்லை. எல்லோரையும் விட அதிகமாக பாதிக்கப்பட்டது சாத்வி தான்மா“ என நிதானமாக சொல்ல வாயடைத்துப் போயினர்.
ஆனால் விநாயகசுந்தரம் விடாமல் “டேய் போடா… சாத்வியை கூட்டிட்டு போடா… ” என அவனை முன்னால் தள்ள..
இதற்கு மேலும் பேச விட்டால் எல்லோருக்கும் கஷ்டம் தான் என அவளருகில் வந்து “அப்பா அம்மான்னு பார்க்க வேண்டாம்… வயசில் பெரியவங்க அதையாவது பார்க்கலாம் இல்லையா… உன்னை கஷ்டபடுத்தினாங்கன்னு இப்படி தான் எல்லோர் முன்னாடியும் அசிங்கப்படுத்துவியா.. வயசுக்கு மரியாதை குடு சாத்வி.. உன்னை நான் இப்படி வளர்க்கலை… ” என சத்ரி உண்மையாகவே கவலை பட….
“எப்போ பார்த்தாலும், உன் கவலை எல்லாம் இவங்க மேல தானே.. என்னை பத்தி யோசிக்கவே மாட்டியா… . உனக்கு தெரிஞ்சுது பாதி தான் சத்ரி. மீதி இன்னும் நிறைய இருக்கு. அவ்வளவு ஏன் இந்த கல்யாணத்தை எடுத்துக்கோ… ரமேஷ் தான் மாப்பிள்ளைன்னு காட்டிட்டு, உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருக்காங்க.. யாராவது ஒருத்தர் இதை பத்தி பேசினாங்களா.. இல்லை என்கிட்ட தான் சொல்லி இருப்பாங்களா.. நீயா இருக்கப்போய் என் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து தள்ளி இருந்தே… இதே இது வேறவனா இருந்திருந்தா.. தள்ளி இருந்திருப்பானா என் மனசு காயமானதை விட, என்” என சொல்லி முடிப்பதற்குள் அவள் வாயை பொத்தியிருந்தான் சத்ரி.. அவளை தீ பார்வை பார்த்தவன் அலேக்காக தூக்கி கொண்டு தங்கள் அறைக்கு சென்றான்.