வெகு வருடங்களாய் இளைய மகனின் அயராத உழைப்பு, எதிர்பார்க்க முடியாத அளவு முன்னேற்றம், வயதிற்கு மீறிய முதிர்ச்சி என அனைத்திலும் அவனை கண்டு விநாயகசுந்தரம்,சிவஹாமிக்கு அளவற்ற பெருமை தான்., சத்ரி எதை செய்தாலும் நன்மைக்கே என்ற எண்ணத்தை அவர்களிடையே விதைத்திருந்தான்.
அவன் சொல்லியபடி இன்று வரையும் சாத்வி, சத்ரின் துன்பங்கள் வெங்க்கட் தம்பதியினரின் காதில் விழாத வண்ணம் பார்த்துக் கொண்டனர்.
“வெங்க்கட், அத்தை மாமா நம்பளை எப்படி ஏத்துக்கிட்டாங்க..”
“ அதான் எனக்கும் தெரியலை கிருத்தி.. இந்தளவு பாசமா இருப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா, நம்ப காதலை வீட்டில் சொல்லி ப்ராப்பரா நடத்தி இருக்கலாம்” என வெங்க்கட்டும் குறைபட
“ கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ..” என க்ருத்திகாவும் கேட்க….
“ம்ஹூம்…. ரொம்ப..” குற்ற மனப்பான்மை அப்படியே வெளிப்பட்டது…
“ இருந்தாலும் , எங்கப்பாவை சமாளிச்சிருக்க முடியாது” என சங்கரின் குணம் அறிந்தவளாய் இவள் கூற
“உங்கப்பா ஒருத்தருக்காக பயந்து, பாரு இத்தனை வருசம் இந்த பாசமெல்லாத்தையும் விட்டுட்டு அனாதை மாதிரி தனியா இருந்திருக்கோம்… ” என வருந்த…
“ரொம்ப சுயநலமா இருந்துட்டோம் வெங்க்கட்” என கிருத்தியும் வருந்த….
“இப்போ வருந்தி என்ன பிரயோஜனம்” என வெங்க்கட் சென்றிவிட….
க்ருத்திகாவிற்கு நன்றாகவே தெரிந்தது பாசத்தின் அருமை… அதுவும் இப்பொழுது தன்னை ஒரு மகளாகவே நடத்தும் சிவஹாமியும்,.. “அம்மா, மருமகளே…. காபி கொண்டா தாயி” என வார்த்தையிலேயே நெகிழ வைக்கும் விநாயகமும்.. திவ்யாவிடம் தோழனுக்கு தோழனாய் மல்லுக்கட்டி நிற்கும் சத்ரியும்.. என மூவரிடமும் கிடைக்கும் அளவில்லா பாசத்தை நினைத்து மருகி தான் போனாள் கிருத்தி.
வெங்க்கட் வருந்துவதற்கு தானும் ஒரு காரணம் “தன் தந்தையிடம் விடாப்படியாய் நின்று கேட்டிருக்க வேண்டும், மறுக்கும் பட்சத்தில் வேறு வழியை தேடியிருக்க வேண்டும்.. எதையும் யோசிக்காமல் வீம்பாய் முடிவெடுத்த முட்டாள் தனத்தை நினைத்து வருந்தினாள்..”
வெங்க்கட் சொல்வது போல் ‘ இனி வருந்தி பயனில்லை’ என தனக்குள்ளே சொல்லிக் கொண்டவள்…
தன்மூலமாய் வீட்டில் இருக்கும் விநாயகசுந்தரம், சிவஹாமி, சத்ரி என யாருக்கும் எந்த ஒரு தொந்தரவும் தன்னால் வரக்கூடாது என முடிவு செய்திருக்க…
ஆனால் அதற்கு அவசியமே இல்லை என்பது போல் மற்றவர்கள் நடந்து கொள்ள… விரக்தி புன்னகை தான் வந்தது… அதை வெங்க்கட்டிடமும் கூற…
“மன்னிப்பே பெரிய தண்டனை தான் கிருத்தி” என வெங்க்கட் கூற…. கிருத்தியும் உணர்ந்தாள்.
குற்ற உணர்ச்சி நாளுக்கு தாள் அதிகரிக்க….அதை உடைக்கும் பொருட்டு… ஒரு நாள் தந்தையிடம் சென்று வெங்க்கட் கேட்டு விட்டான்…
“எங்க மேல கோபமே வரலையாப்பா.. அடிச்சிருந்தா கூட இவ்வளவு வலிச்சிருக்காதுப்பா.. மன்னிப்பு.. அவ்ளோ வலிக்குதுப்பா “
அவன் வருத்தம் புரிந்தவரோ “பெத்த புள்ளையோட நடவடிக்கையை கூட கவனிக்காமல் இருந்தது என்னோட தப்பு.. தோளுக்கு மேல் வளர்ந்த புள்ளையை தோழன்னு சொல்வாங்க.. அப்படி ஒரு நாளும் உன்கிட்ட நான் நடந்த மாதிரி எனக்கு நியாபகம் இல்லை… வெங்க்கட்.. சங்கரும் க்ருத்திகாவிற்கு ஷிவாவை பேசுறதுக்கு முன்னாடி.. க்ருத்திகாகிட்ட ஒரு வார்த்தை கேட்டு செஞ்சிருக்கலாம். இல்லை மஹாவாவது கேட்டு தெரிஞ்சிருக்கனும்.. தப்பு உங்க பக்கமா, இல்லை தப்பான முடிவு எடுக்க வச்ச எங்க பக்கமான்னு ஆராய்ச்சி செய்றதை விட்டுட்டு.. இனியாவது மருமகளை நல்லபடியா பார்த்துக்க.. நீ மட்டும் தான் வேணும்ன்னு உன்னை நம்பி வந்தவ“ என க்ருத்திகாவின் கலையிழந்த முகத்தை நினைவு கூர்ந்து விநாயகசுந்தரம் கூற
வெங்க்கட் தந்தையை நினைத்து பெருமிதம் கொண்டான்.. இப்படிபட்ட தந்தையை புரிந்து கொள்ளாமல் போனதை எண்ணி.. இனி தன்னால் ஆன மட்டும் நிம்மதியை கொடுக்க வேண்டும் என எண்ணி கொண்டான்.
அன்றிலிருந்து அமைதியாய் சென்றது அவர்களின் வாழ்க்கை..
இத்தகைய நேரத்தில் தான் சாத்வியை தேடி அவளது பெற்றோர்கள் வந்ததும், ஹோட்டலில் சாத்வியை சந்தத்ததும் அதன் பின் நடந்த திருமணமும்.
பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்த சாத்விக்கு தூக்கம் கூட எட்டா தூரம் போக…. சத்ரியின் அணைப்பில் கிடந்தாள் உணர்வுகள் அற்று.
அணைத்த நொடி இவன் உறங்கி இருக்க, இவளோ வெகு நேரம் சென்று தான் உறங்கினாள்.
காலையில் முதலில் கண்விழித்த சத்ரி ,சாத்வியை பார்க்க புன்னகை தானாகவே ஒட்டிக் கொண்டது.. சில நொடிகள் அவள் முகத்தையும் அவள் தன் மேல் இருந்த நிலையையும் பார்த்தவன் சாத்வியை ஆசை ஆசையாய் இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
சிறு வயது சாத்வி தான் நினைவில் தோன்றியது அவன் மேல் கைகளை கோர்த்து, நெஞ்சில் தலை வைத்து லேசாக பிளந்த இதழ்களுடன் அப்படியே பால்ய வயதிற்கே அழைத்துச் சென்றிருந்தாள்..
சிறு வயதிலும் தன்னை அணைத்துக் கொண்டு, இதே போல் இறுக்கி கொண்டு உறங்கும் சாத்வி கண் முன் வர “நீ மாறவே இல்லைடி” என சந்தோஷ குமிழிட்டது அவன் மனம் “ஆனா, எச்சில் வடிப்பதை நிப்பாட்டிட்ட போல..” என லேசாக விரிந்திருந்த இதழ்களை பூவிலும் மென்மையாய் வருடியது சத்ரியின் விரல்கள்… அந்த வருடலில் விரிந்திருந்த அவளிதழ்கள் தாமாகவே மூடிக் கொள்ள…. வருடிய விரல்களை அவளிதழ்களில் அழுத்தமாய் வைத்து பின் தன் இதழ்களில் வைத்து முத்தமிட.. உடலில் ஏதோ ஓர் ரசாயன மாற்றம், அதனுள் மூழ்கும் முன்னே நிதர்சனம் உரைக்க..
நேத்து நீ செஞ்சு வச்சிருக்குற வேலைக்கு ‘நேத்தே, உன்னை பின்னி எடுத்திருப்பா சத்ரி, எப்படியோ எஸ் ஆகிட்ட மறுபடியும் அவள்கிட்ட சிக்குறதுக்குள்ளே ஓடிடு, அதுவும் இப்போ நீ செய்றதையெல்லாம் இவள் பார்த்தாள்.. செத்தடா நீ..’ என அவன் மனசாட்சி கூற… மெதுவாய் அவளை விலக்கி எழுந்தவன் ரெப்ரஷ் செய்து வெளியே வந்தான்..
சிவஹாமி சமையலறையில் இருப்பதை பார்த்து…
“மா… டீ….” என சத்தம் கொடுத்துவிட்டு டிவியை ஆன் செய்து சோபாவில் அமர்ந்தான்… அவன் சத்தத்தில் வெளியே வந்த சிவஹாமி “டேய், குளிச்சிட்டு வரணும்னு தெரியாத அளவு சின்ன பையனாடா நீ..” என நேற்று அணிந்திருந்த பட்டு வேஷ்டி, பனியனுடனும் அமர்ந்திருந்த அவனை பார்த்து நிஜமாகவே எரிந்து விழுந்தார் சிவஹாமி.
அதன் அர்த்ததம் புரியாமல் குனிந்து தன்னை பார்க்க
‘இப்படியாடா… சாத்விக்கு பயப்படுவ..’ என அவன் குரல் எக்கோவாய் கேட்க.. அதற்குள் மனசாட்சி.. “சபாஷ் இப்போ தாண்டா நீ ஒரு நல்ல புருஷன்… பொண்டாட்டிக்கு பயப்பட ஆரம்பிச்சுட்டியே..” என கைதட்டி சிரிக்க.. அதை வெளியில் காட்டதவனாய்.
“நான் என்னைக்கும்மா.. டீ குடிக்க முன்னாடி குளிச்சிருக்கேன்.. போய் டீ எடுத்துட்டு வாங்க” என டிவியில் கவனம் வைத்தவனாய் சுவாதீனமாய் சொல்ல
“நான் சொல்ல வருவது புரியுதா இல்லையா” என சிவஹாமி பல்லை கடிக்க.. ‘இதுக்கு மேல் எப்படி சமாளிக்க ’ என நினைத்தவன்.
“ஒன்னுமே நடக்கலையே…அப்பறம் ஏன்மா குளிக்க சொல்ற” என தலை குனிந்தபடி சொல்ல
“ஒன்னுமே நடக்கலையா..!” என வாயை பிளந்தவர்.. பின்…
“அதுக்குன்னு இப்படி வெளிப்படையா காட்டனுமா.. சாத்வியோட அம்மா அப்பாக்கு நீயே காட்டிக் கொடுத்துடாத! கஷ்டபட போறாங்க” என சிவஹாமி இரட்டை அர்த்தத்தில் கூறிவிட்டு சிரித்தபடியே செல்ல….சிவஹாமி சென்ற அடுத்த நொடி
“மகனே… ஒன்னுமே நடக்கலைன்னு உன் வாய் தான் சொல்லுது.. ஆனா“ என சத்ரியின் பனியனை பார்த்து சிரித்தபடி செல்ல
குனிந்து பார்த்வனின் கண்களுக்கு ஒன்றும் புலப்படாமல் போகவே , குழப்பத்துடன் தந்தையை பார்க்க..அவர் அவனை இழுத்து கண்ணாடி முன் நிறுத்திவிட்டு ஒரு மார்க்கமாய் சிரித்து செல்ல
“இவர் ஏன் இப்படி அஷ்ட கோனலா சிரிக்கிறாரு” என கண்ணாடியை பார்க்க கழுத்தோர பனியன் முழுவதும் சாத்வியின் குங்குமம் ஆங்காங்கே அப்படியே அப்பியிருக்க பத்தாததற்கு ஸ்டிக்கர் பொட்டு வேறு கழுத்தில் ஒட்டியிருக்க “அஅச்சச்சோ..” என சத்ரியின் வாய் தானகவே முனுமுனுக்க..
இடது கையினால் தன் நெற்றில் அடித்துக் கொண்டு விறு விறுவென சாத்வியின் அறைக்குள் சென்றான்.. “கடவுளே, என் பொண்டாட்டி இன்னும் எழுந்திருக்க கூடாது..” என வேண்டியபடி இவன் செல்ல
“டேய்… எது எதுக்கு கடவுளை கூப்படனும்னு வெவஸ்தை இல்லை“ என வெங்க்கட்டும் அவனை மேலருந்து கீழ் வரை பார்த்து வாய் விட்டு சிரித்து கிண்டல் செய்ய..
“நான் தான் நேத்து பனியனே போடலையே..” என குனிந்தபடி வெங்க்கட்டும் சட்டையை பார்க்க..
“கல்யாணமாகி பத்து வருசம் ஆனாவனெல்லாம் பர்ஸ்நைட் மாதிரி செலிப்பரேட் பண்றானே ச்சே… ” என கதவை அறைந்து சாத்த
சத்ரி தன் வாயை கிளறியதை அப்போது உணர்ந்த வெங்க்கட், இந்த முறை அவன் நெற்றியில் அறைந்தபடி செல்ல.. கீழே இருந்த சிவஹாமிக்கு இதையெல்லாம் பார்த்து சிரிப்பு பீறிட்டு கிளம்ப.. அதை அடக்க பெரும்பாடு பட்டு போனார்..
‘ ஏய், எல்லாம் உன்னால தாண்டி.. அம்மாவும் அப்பாவும் தான் சேர்ந்து நக்கல் பண்றாங்கன்னா.. இதில் வெங்க்கட் வேற எரியிற நெருப்புல எண்ணையை ஊத்திட்டு போறான் வெண்ணை” என சாத்வி எழும் முன், குளித்து வந்தான். அப்போழுதும் அவள் உறக்கம் கலைந்த பாடில்லை.. ’அம்மையாருக்கு எம்பூட்டு தூக்கம்..’ என கீழே செல்ல…. அதற்காகவே காத்திருந்தாரப்போல் அவளறையில் நுழைந்தார் மஹா..
“சாத்வி, எழுந்திரு விடிஞ்சிருச்சு” என எழுப்ப…. அசைவே இல்லை… நான்கைந்து முறை அழைத்தபின்பே அசைந்தாள்..